Thursday, November 24, 2016

திருச்சிற்றம்பலம்
ஶ்ரீ மெய்கண்ட தேசிகன் திருவடி வாழ்க

துறைசையாதீன வித்துவான்
சித்தாந்த பண்டிதபூஷணம்
சிவ ஶ்ரீ. . ஈசுரமூர்த்திப்பிள்ளை
அவர்கள் இயற்றிய
சிவபரத்துவ நிச்சயம்

உரை விளக்கம்
வித்துவான். . இரத்நவேலன், சங்கரன்கோவில்

 [சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
விநாயகர் வணக்கம்.
       மன்னுசிவன் மெய்ப்புகழை வந்தமட்டில் யான்பாடத்
       கென்னுடைய பேராசை யீர்த்ததெனையன்னதனால்
       அந்திமுக வுன்பாதநா னஞ்சவித்துச் சில்பாடத்
       கொத்துரைப்பே னெற்கருணீ கூட்டு.

      (பொழிப்புரை):-     நிலைபெற்ற சிவபிரானது பொருள் நிறைந்து கீர்த்தியை எனக்குப் பாடத்தெரிந்த வரையில் பாடுவதற்கு என்னுடைய பெரிய ஆசை என்னை இழுத்தது. அதனால், விநாயகக் கடவுளே! தேவரீர் திருவடிகளை அடியேன் வணங்கிச் சில பாடல்திரட்டு இயற்றுவேன். தேவரீர் அடியேனுக்கு அருள் கூட்டுவீராக.
      இந்நூல் இனிது முடிதற்பொருட்டுச் செய்யப்படும் விநாயக வணக்கம் இந்நேரிசை வெண்பா.
      ஆசிரிய வணக்கம்.
       விளங்கொளி வெள்ளி மலைமிசை யுமைதன்
              னிடமுற வீற்றிருந் துயிர்க்குக்
       களங்கம் தொழித்துப் பரகதி யருளுங்
              கண்ணுதற் பரமனே பரமென்
       றுளங்கொள நாயேற் கொளிருநான் மறையி
              னுறுதியை யுணர்த்தி வாழ்வளித்த
       வளங்கெழு நெல்லைச் சிதம்பர ராம
              லிங்கரின் மலரடி சரணே.

(பொழிப்புரை):- ‘ஶ்ரீகயிலையில் ஶ்ரீஉமாதேவியாரொடு எழுந்தருளி உயிர்க்கூட்டத்திற்கு சகசமாக உள்ள ஆணவமலக் குற்றத்தை நீக்கித் திருவடியின்பமாகிய வீடூபேற்றை நல்கும் ஶ்ரீசிவபிரானே பரம்பொருள்என்று கூறி அடியேனது உள்ளங்கொள்ளுமாறு ருக், யஜுர், ஸாம, அதர்வணம் என்னும் நான்கு வேதங்கள் கூறும் சத்தியார்த்தத்தை உணர்த்தி வாழ்வளித்த வளம்நிறைந்த திருநெல்வேலிச் சிதம்பர ராமலிங்க பிள்ளையவர்கள் மலர்போன்ற பாதங்களே அடியேனது அடைக்கலத் தானமாம்.
இந்நூலை ஆக்கியோர் தமக்குச் சைவசித்தாந்தங் கற்பித்த ஆசிரியரை இச்செய்யுளால் வணங்குகிறார். சிவஶ்ரீ வி. சிதம்பர ராமலிங்க பிள்ளையவர்கள் இரண்டு வியாழ வட்டங்கள் நெல்லை .தி.தா-ஹிந்து கலாசாலையில் தமிழாசிரியராய்ப் பணியாற்றிய பின்னர் துறைசையாதீன வித்துவானாய்த் தமது பரிபூரண காலம் வரை சிவப்பணி செய்தார்கள். சுருதி சூக்தி மாலை போன்ற பல நூல்களைப் பதிப்பித்த இவர்கள் தமிழ், வடமொழி, ஆங்கிலம் ஆகிய மும்மொழியிலும் வல்லுநர்.
நூல்
வியட்டியாகிய அகர உகர மகரம் முறையே பிரம விஷ்ணு ருத்திரர்க்கு இருப்பிடம். அம்மூன்றின் சமட்டியாகிய பிரணவம் சிவபிரானுக்கு இருப்பிடம்.
       இரணிய கருப்ப னவ்வில் இலக்குமி கணவ னுவ்வி
       லுரமிகு சூல மேந்தும் உருத்திரன் மவ்வி லாவர்
       பரசிவ பிரான்சம் வர்த்த காக்கினி பயில்பே ராகப்
       பிரணவ சமட்டி யென்னும் பீடமீ திருப்ப ன்றே.                       (1)

      (அரும் பதவுரை)   இரணிய கருப்பன்பிரமன்; இரணிய கருப்பனும் இலக்குமி கணவனும் உருத்திரனும் என உம்மை விரித்து ஆவரென்பதற்குப் பன்மை வினைமுதல் காண்க. ஆவர்இருப்பர்; தோன்றுவரெனினுமாம். பமில் பேர் ஆகதனக்கு வழங்கப்படும் பெயராகக் கொண்டு; பிரணவ சமட்டிசமஷ்டிப் பிரணவம்; பீடமிதுஆசனத்தில்.
(பொழிப்புரை):- இரணியகருப்பன் என்னும் பிரமதேவன் அகரத்திலும் இலக்குமி கணவனாகிய திருமால் உகரத்திலும், வலிமைமிக்க சூலப்படை ஏந்திய உருத்திரமூர்த்தி மகரத்திலும் இருப்பர். சிவபிரான்சம்வர்த்தகாக்கினிஎன்பதைத் தமக்கு வழங்கப்படும் பெயராகக் கொண்டு சமஷ்டிப் பிரணவமாகிய ஆசனத்தில் எழுந்தருளியிருப்பர்.
      ‘அகார:….ப்ரஹ்மா…….உகார: ……விஷ்ணு ……….மகார: ……..ருத்ரா…..ஓங்கார:……..ஸம்வர்தகோக்நிஎன்ற அதர்வசிகோபநிஷத்தும், ‘பூர்வா மாத்ரா…..ப்ரஹ்மா…..த்விதீயா….. விஷ்ணு:….த்ருதீய …..ருத்ரா……சதுர்த்யா….. ஸம்வர்தகோக்நி….’ என்ற நரஸிம்ஹ பூர்வதாபிநியுபநிஷத்தும், ‘அகாரேஸம்ஸ்திதோ ப்ரஹ்மா உகாரே விஷ்ணுராஸ்தித: மகாரே ஸம்ஸதிதோ ருத்ராஸ் ததோஸ்யாந்த: பராத்பர:’ என்ற பிரஹ்ம வித்யோபநிஷத்தும், ‘அகாரம் ப்ரஹ்மாணம்….உகாரம் விஷ்ணும் …… மகாரம் ருத்ரம் …..ஓங்காரம் ஸர்வேச்வரம்என்ற நரஸிம்ஹோத்தரதாபிநி யுபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்களாம். ஸமவ்ர்த்தாக்கினி பதமும் ஸர்வேச்வர பதமும் பரியாயங்களாய் வந்திருத்தல் காண்க. அவ்வீசுவரபதம் சிவபிரானுக்கே யுரியது.
      அகர உகர மகரங்களாலாகியது ஓம், அகர உகர மகரங்கள் வியஷ்டிப்ரணவம், ஓம் சமஷ்டிப்ரணவமாம், அகர உகர மகரம் முறையே பிரம விஷ்ணு ருத்திரர்க்கு இருப்பிடம் அம்மூன்றின் சமஷ்டியாகிய பிரணவம் சிவபிரானுக்கு இருப்பிடமாம் என்பன இச்செய்யுளால் பெறப்பட்டன. இனிவரும் செய்யுள்கள் பெரும்பாலும் முதல் நான்காம் சீர்கள் விளச்சீரும் எஞ்சியன மாச்சீருமாய் அமைந்த அறுசீர் விருத்தங்கள்.
பிரணவத்தின் அர்த்த மாத்திரையிற் சிவலோக மிருக்குமென்பதால் அவ்வர்த்த மாத்ரா தெய்வம் சிவ பிரானே யென்பது.

அவ்வதி லிருக்கும் பூமி யந்தர மிருக்கு முவ்வில்
       மவ்வதி லிருக்குஞ் சொர்க்கம் வாக்கொடு மனமுஞ் செல்லா
       திவ்விய வுமைவாழ் பாகச் சிவபிரான் சோம லோக
       மெவ்வமி லருத்தந் தன்னி லிருக்குமென் றுரைக்கும் வேதம்.          (2)

      (அரும் பதவுரை)   அந்தரம்அந்தரிக்ஷம்; உமைவாழ்பா கச்சிவபிரான் என்றது சோமன் என்றதை விளக்கியபடி; சோமலோகம்சிவலோகம்; எவ்வம்கேடு; அருந்தந் தன்னில்அருத்த மாத்திரையில்
(பொழிப்புரை):- அகரம், உகரம், மகரமாகிய அக்ஷரங்களில் முறையே பூமி, அந்தரிக்ஷம் எனப்படும் அந்தரஉலகம், சொர்க்கம் என்பன இருக்கும். ஆனால் வாக்கும் மனமும் செல்லாத உமாநாயகனது உலகமாகிய சிவலோகம் கேடில்லாத பிரணவ அர்த்த மாத்திரத்தில் இருக்கும் என்று வேதம் சொல்லும்.
      ‘கேவல மகாரோகார மகாரார்த்த மாத்ர ஸஹிதம் ப்ரணவமூஹ்யஎன்ற ராம ரஹஸ்யோபநிஷத்தம், ‘அகாரோகார மகாரார்த மாத்ராத்மிகஎன்ற வராகோபநிஷத்தும்அர்த்த மாத்ரா ஸமாயுக்த: ப்ரண்வோ மோக்ஷதாயக:’, ப்ருதிவிஅகோரேஅந்தரிக்ஷம்...உகாரே….த்யெள:…..மகாரே…..பஞ்சதைவதம் ஓங்காரம்என்ற தியாநபிந்துபநிஷத்தும்ப்ருதிவ்யகார ….அந்தரிக்ஷம் உகார:….த்யெள: மகார:….ஸோமலோக ஓங்கார:’ என்ற நரஸிம்ஹபூர்வ உத்தரதாபிநியுப்நிஷத்துகளும் அதர்வசிகோபநிஷத்தும், ‘அரைமாத்திரையிலடங்கும்மடொஎன்ற தேவாரமும்மஹேசாநமவாங் மநஸகோசரம்என்ற சரபோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.
      பிரணவத்தின் அர்த்த மாத்திரையில் சிவலோகமிருக்குமென்பதால் அவ்வர்த்தமாத்ரா தெய்வம் சிவபிரானே என்பது இச்செய்யுளால் நிறுவப்பட்டது.
      பிரணவத்தைக் கொண்டு இவ்விருசெய்யுள்களால் பரத்துவ நிச்சயம் செய்த ஆசிரியர் தியானமுறை கொண்டு அடுத்துவரும் இரு செய்யுள்களால் பரத்துவ நிச்சயம் செய்கிறார்.
      
மற்றத் தேவர்கள் வைத்துத் தியானிக்குந் தானங்களுக் கெல்லாம் உயர்ந்தது துவாதசாந்த ஸ்தானம். அங்குவைத்துத் தியானிக்கப் படுபவர் சிவபிரானென்பது.

ஈரிரு முகவ னாபி யிடத்தரி யிதயந் தன்னி
       லோரிரு புருவ மையத் துருத்திரன் துவாத சாந்தச்
       சீரிய தான மீது சிவபிரா னிவர்க டம்மை
       நேரிய யோகி யென்று நிறுத்துவன் தியானத் தாலே.                   (3)

(அரும் பதவுரை)   ஈர்இரு; முகவன்பிரமன்; நாபிகொப்பூழ்; ஓர்சிறந்த; மையத்துநடுவில்; என்றும்எப்போதும்; நிறுத்துவன்வைத்து ஏத்துவான்.
(பொழிப்புரை):- வேதாகமப் பயிற்சியும், அநுபவமுடைய தேசிகனிடத்து உபதேசமும் பெற்ற நேரிய யோகி பிரம்மதேவனை நாபியிலும், விஷ்ணுமூர்த்தியை இதயத்திலும், உருத்திரமூர்த்தியைச் சிறந்த புருவ நடுவிலும், ஶ்ரீ சிவபிரானை சிறப்பான இடமாகிய துவாதசாந்தத்திலும் தியானத்தாலே வைத்து வணங்குவன்.
த்வாதசாந்தபதம் ஸ்தாநமிதிஎன்ற தக்‌ஷிணாமூர்த்தி உபநிஷத்தும், ‘சீர்ஷோபரி த்வாதசாங்குல மீக்ஷிதுரம் ருதத்வம் பவதிஎன்ற அத்வய தாரகோபநிஷத்தும், ‘ப்ரஹமரந்த்ரே மஹாஸ்தாநே வர்ததே ஸததம்சிவா | சித்சக்தி:’ என்ற யோகசிகோபநிஷத்தும், ‘ப்ரஹ்மானம் நாபெள …. விஷ்ணும் ஹ்ருதயே ….ருத்ரம் ப்ரூமத்யே …..சர்வேச்வரம் த்வாதசாந்தேஎன்ற நரஸிம்ஹோத்தரதாபிநிபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.
மற்ற தேவர்களை வைத்துத் தியானிக்கும் தானங்களுக்கெல்லாம் உயர்ந்தது துவாதசாந்த ஸ்தானம். அங்கு வைத்துத் தியானிக்கப்படுபவர் சிவபிரான் என்பது இச்செய்யுளால் பெறப்பட்டது.
இன்னொரு வகைத் தியான முறையில் உச்சஸ்தானமா மிருப்பது நெற்றி. அதில் வைத்துத் தியானிக்கப் படுவருஞ் சிவபிரானென்பது.

அயுனெனு மவனை நெஞ்சி லரிதனைக் கண்டந் தன்னி
       லுயவினை யுயிட்கட் கோட்டு முருத்திர தேவை நாவிற்
       செயமெலா மன்பர்க் காக்குஞ் சிவபிரான் றன்னை நெற்றி
       நயமிகு மிடத்தி னாட்டி நாளுநற் றியானஞ் செய்யே.                   (4)

      (அரும் பதவுரை)   உயவினைதுன்பத்தை; நயம்நன்மை; நாளும்தினந்தோறும்.
(பொழிப்புரை): - ‘பிரம்மதேவனை நெஞ்சிலும், விஷ்ணுமூர்த்தியைக் கண்டத்திலும், உயிர்களுக்குத் துன்பத்தை ஓட்டும் உருத்திரமூர்த்தியை நாவிலும், தம்மை வழிபடும் அன்பர்களுக்கு வெற்றித்திருவை உண்டாக்கும் ஶ்ரீ சிவபிரானை நன்மைமிகும் புருவநடுவாம் நெற்றி இடத்திலும் பொருந்தச் செய்து நாள்தோறும் தியானம் செய்கஎன்பது வேதம் இடும் கட்டளையாகும்.
      ‘பிரஹ்மனோ ஹ்ருதய ஸ்தாநம் கண்டே விஷ்ணு: ஸமாச்ரித: தாலுமத்யே ஸ்திதோ ருத்ரோ லலாடஸ்தோ மஹேச்வர:’ என்ற பிரமவித்யோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.
      இன்னொரு வகைத் தியான முறையில் உச்சஸ்தானமாயிருப்பது நெற்றி அதில் வைத்துத் தியானிக்கப் படுபவருஞ் சிவபிரானே என்பது இச்செய்யுளால் பெறப்பட்டது தியான ஸ்தானபேதம் அதிகாரிபேதம் பற்றிக் கூறப்பட்டமையால் முரணாதென்பதை உணமையறிவார் கண்டு கொள்க.
      அடுத்து வரும் இரு செய்யுட்களால் வர்ணபேதத்துள் வைத்துப் பரத்துவ நிச்சயம் செய்கிறார்.
      
ஒவ்வொரு தேவரும் ஒவ்வொரு வண்ணராயிருக்கச் சிவபிரான் மாத்திரம் சர்வ வர்ணங்களையுந் தம்பாற் கொண்டவரென்பது.

மஞ்சளி னிறவ னாகி மாமறைக் கிழவன் வாழ்வான்
       அஞ்சன வண்ண னாவா னரவமீ துறங்குந் தேவன்
       விஞ்சிய வெள்ளைத் தேவாய் விளங்குவ னரனால் வேதச்
       செஞ்சொலு முரையு மான சிவபிரான் சருவ வண்ணன்.               (5)

      (அரும் பதவுரை)   நிறவன்நிறத்தையுடையவன்; மாமறைக்கிழவன்பிரமன்; அஞ்சனம்மை; அரவமீதுஉறங்கும் தேவன்விஷ்ணு; விஞ்சியமிகுந்த; அரன்உருத்திரன்; உரைபொருள்.
(பொழிப்புரை):- மாமறைக் கிழவனாம் பிரம்மதேவன் மஞ்சள் நிறத்தையுடையவனாகி வாழ்வான்; ஆதிசேடன் மீது உறங்கும் அரிமைநிறமாகிய கரியவனாகி வாழ்வான்; மிகுந்த வெள்ளை நிறத்தவனாய் விளங்கி உருத்துரமூர்த்தி வாழ்வான். ஆனால், வேதத்தின் சொல்லும் பொருளுமாய சிவபிரான் சர்வ வண்ணங்களும் உடையவன்.
      பீதா ….ப்ரஹ்மதைவத்யா …..கிருஷ்ணா விஷ்ணு தைவத்யா ….சுக்லாருத்ரா தைவத்யா …. ஸர்வ வர்ணா புருஷதைவத்யாஎன்ற அதர்வசிகோபநிஷத்தும், ‘மற்றுமற்றும் பல்பல வண்ணத்தராய்என்ற தேவாரமும், ‘ருத்ரோர்த்தஅக்ஷர: உமாஎன்ற ருத்ரஹ்ருதயோபநிஷத்தும், ‘ஸர்வநாதமய: சிவ:’ என்ற தேஜோபிந்துபநிஷத்தும், ‘ஸர்வாக்ஷரமய:’ என்ற நாரதபரிவ்ராஜகோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். புருஷபதம் சிவபிரானுக்கே உரிய பெயர்.
      ஒவ்வொரு தேவரும் ஒவ்வொரு வண்ணராயிருக்கச் சிவபிரான் மாத்திரம் சர்வ வர்ணங்களையும் தம்பாற் கொண்டவரென்பது இச்செய்யுளால் பெறப்பட்டது.
தம்பாற் சர்வ வர்ணங்களையுங் கொண்டதுபோல் ஒருவர்ணத்தையுங் கொள்ளாமல் பைடிகம்போல விளங்குபவரும் சிவபிரானே யென்பது.

மருமலி மலரோன் செய்யன் மங்குலி னிறவன் மாலோன்
       உருமலி கபில வண்ண முருத்திர மூர்த்திக் குண்டால்
       கருமலி யுயிர்கட் கெல்லாங் களைகணாய்த் தானோர் போதுஞ்
       செருமல முறாத செல்வச் சிவபிரான் படிக வண்ணன்.                 (6)

      (அரும் பதவுரை)   மருமலி மலரோன்பிரமன்; மங்குல்இருள்; உருமலிஅழகு நிறைந்து; கருமலிகருப்பவாசங்களை அளவு கடந்து அடைகிற; களைகண் ஆதரவு; செருமலம்போர் செய்கிற மும்மலம்; படிகம்பளிங்கு, இச்செய்யுளில் மற்றொரு வகை வர்ண வரிசை யுண்மை காண்க.
(பொழிப்புரை):- தாமரை மலர் வாழ் பிரம்மன் சிவப்பு நிறத்தினன்; திருமால் இருள்புரை மேனியன். உருத்திரமூர்த்தி அழகு நிறைந்து கபிலவர்ணன். ஆனால், கருப்ப வாசங்களை அளவு கடந்து அடைகின்ற உயிர்க்கூட்டங்களுக்கு ஆதரவானவனும், தான் மட்டும் மும்மலத் தொடக்கிலாத செல்வனுமாகிய சிவபிரான் பளிங்கு நிறத்தினன்.
      “பிரஹ்ம தேவத்யா ரக்தா வர்ணேந …. விஷ்ணு தேவத்யா கிருஷ்ணா வர்ணேநஈசாந தேவத்யா கபிலா வர்ணேநஸர்வ தேவத்யாவ்யக்திபூதா ஸ்வம்விசரதி சுத்தஸ்படிக ஸந்நிபா வர்ணேநஎன்ற அதர்வசிரோபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம்.
      தம்பால் சர்வவர்ணங்களையும் கொண்டது போல் ஒரு வர்ணத்தையுங் கொள்ளாமல் ஸ்படிகம் போல விளங்கபவரும் சிவபிரானேயென்பது இச்செய்யுளால் பெறப்பட்டது.
ஸர்வ லோகாதீதமாய்ப் பாழத்திஸ்தானமாய் விளங்குவது சிவலோக மென்பது.

இந்திர னுலகின் மேலே யிருந்திடும் பிரம லோகம்
       செந்திரு கணவ னாடத் திசைமுக னுலகின் மேலாம்
       உந்தொளி யுலகஞ் சேரு முருத்திரம் கதன்மே லந்நாட்
       டந்தம தாகு முத்தி யருள்சிவ பிராற்கு நாடே.                          (7)

(அரும் பதவுரை)   செந்திரு கணவன்விஷ்ணு; உந்து ஒளிவீசுகின்ற ஒளியையுடைய; அந்தமதுமுடிவில்; ஆகும்இருக்கும்; சிவபிராற்கு நாடுசிவலோகம். முத்தி அருள் என்பது சிவபிரானுக்கு அடை. முத்தியருள் சிவபிராற்கு நாடு அந்நாட்டந்தமது ஆகும் என்க.
(பொழிப்புரை):- இந்திரன் உலகுக்கு மேலேயுள்ளது பிரமலோகம். மகாவிஷ்ணு மூர்த்தியின் உலகு பிரம்மலோகத்தின் மேலுள்ளது. பிரகாசம் மிக்க உருத்திரர் உலகம் விஷ்ணு உலகத்தின் மேலுள்ளது. முத்தியை அருள் சிவபிரானற்குரியது அவ்வுலகங்கள் யாவற்றிற்கும் முடிவுல் உள்ளது. அதுவே சிவலோகம்.
ஷஷ்ட்யா மிந்த்ரஸ்ய ஸாயுஜ்யம் ஸப்தம்யாம் வைஷ்ணவம் பதம் அஷ்டம்யாம் வ்ரஜதே ருத்ரம் …… த்வாதச்யாம் ப்ரஹ்ம சாச்வதம்சிவம்…’ என்ற நாதபிந்தூபநிஷத்து இச்செய்யுட்குப் பிரமாணம். பிரமனுலகம் ஏழிலடங்குவதையும் விஷ்ணு பதத்தின் கீழிருப்பதையும் யூகித்தறிக. ஏனைய உலகங்களின் வரிசையையும் அவ்வுபநிஷத்தில் காணலாம்.
ஸர்வ லோகாதீதமாய்ப் பரமுத்தி ஸ்தானமாய் விளங்குவது சிவலோகமென்பது இச்செய்யுளால் பெறப்பட்டது.
மற்ற மூன்றவத்தைகளுக்கு அதீதமாய துரியத்துக்குத் தெய்வம் சிவபிரானென்பது.

மலரவ னனவில் வாழ்வன் மாலவன் கனவி லேய்வன்
       உலவறு சுழுத்தி சேர்வ னுருத்த்ர னெங்கு மென்றும்
       திலமுறு நெய்போ னிற்குஞ் சிவபிரான் றுரியந் தன்னில்
       நிலவுவ னிதனை வேத நெறியின ரறிவ ரன்றே.                        (8)

      (அரும் பதவுரை)   ஏய்வன்பொருந்துவான்; உலவு அறுகெடுத லற்ற; எங்கும்சித்தசித்துப் பிரபஞ்ச முழுவதிலும்; என்றும்எக்காலத்திலும்; திலம்எள்; நிலவுவன்விளங்குவான்.
(பொழிப்புரை): - நனவு (ஜாக்கிரம்), கனவு (ஸ்வப்பனம்) உறக்கம் (சுஷுப்தி) என்னும் மூன்றவத்தைகளை முறையே பிரம்மா, விஷ்ணு, உருத்திரர் பொருந்துவர். சித்து அசித்துப் பிரபஞ்ச முழுவதிலும், எக்காலத்திலும் எள்ளில் நிறைந்து நெய்போல் ஒளபச்சிலேடிக வியாபியாய் நிற்கும் சிவபிரான் மூன்றவத்தைகளுக்கும் அதீதமாய் துரியம் என்னும் அவத்தையில் விளங்குவான். இவ்வுண்மையினை வேத நூல்களை முறையாகக் கற்றவர்கள் அறிவர்.
      ‘ஜாகரிதே ப்ரஹ்மா ஸ்வப்நே விஷ்ணு; ஸுஷுப்தெளருத்ரஸ்துரீய மக்ஷரம்என்ற பிரமோபநிஷத்தும் பரப்மோபநிஷத்தும் …..’ என்ற பஞ்சப்பிரமோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள். அக்ஷரபதமும் ஈசாந பதமும் பரியாயங்கள்.
      மற்ற மூன்றவத்தைகளுக்கு அதீதமாய துரியத்துக்குத் தெய்வம் சிவபிரான் என்பது இச்செய்யுளால் பெறப்பட்டது.
வேதம் நாலாவது வஸ்துவைச் சிவநாமத்தாலேயே பிரஸ்தாபிக்குமென்பது.

நான்மறை சதுர்த்தந் தன்னை நலம்பெற வுரைக்கும் போது
       மானமல ருறைவோ னாதி வானவர் பெயர்க ளன்றிப்
       பான்மதி மிலைச்சுஞ் சென்னிப் பரமனுக் குரிய நாமந்
       தான்மிக வழங்க லாலே தற்புர னவனே யன்றோ.               (9)

      (அரும் பதவுரை)   சதுர்த்தந்தன்னைதிரி மூர்த்திகளுக்கும் மேலாகிய நாலாவது பொருளை; நலம் பெறதெளிவு உண்டாகும்படி; மால்விஷ்ணு; மலர் உறையோன்பிரமன்; பெயர்களன்றிபெயர்களைப் பிரஸ்தாபியாமல்; பால்மதி மிலைச்சுஞ் சென்னிப் பரமனுக்கு உரியசிவபிரானுக்குச் சொந்தமான; நாமம் தான் பெயர்களையே; வழங்கலால்பிரற்தாபித்தலால்; தற்பான்முழு முதற் கடவுள்.
(பொழிப்புரை): -    வேதநூல் திருமூர்த்திகளுக்கும் மேலாகிய நாலாவது பொருளை அறிவோர் உள்ளத்தில் தெளிவு உண்டாகும்படி சொல்லும்பொழுது பிரமன், விஷ்ணு முதலிய தேவர்களின் பெயரைப் பிரஸ்தாபியாமல் மூன்றாம் பிறையணிந்த ஶ்ரீ சிவபிரானுக்குச் சொந்தமான பெயர்களையே மிகுதியும் எடுத்துப் பிரஸ்தாபிப்பதால் முழுமுதற் கடவுள் அவனேயல்லவா?
      ‘சிவம்சதுர்த்தம்என்ற மாண்டூக்யோபநிஷத்தும், நரஸிம்ஹ பூர்வ உத்தரதாபிநியுபநிஷத்துக்களும், நாரத பரிவ்ராஜகோபநிஷத்தும், ராமோத்தரதாபிநியுபநிஷத்தும், ‘சதுர்த்தம்….சிவம்என்ற பஸ்ம ஜாபாலோபநிஷத்தும், இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.
      வேதம் நாலாவது வஸ்துவைச் சிவநாமத்தாலேயே பிரஸ்தாபிக்குமென்பதை இச்செய்யுள் நிறுவியது.
வணங்குகிறவர் திரிமூர்த்திகளும் வணங்கப் படுகிறவர் சிவபிரானுமாவாரென்பது.
      
சேவிய னாவ னென்று முபாசியன் றியேயன் என்றுந்
       தேவிக மறைக ளெல்லாஞ் சிவபிரான் றன்னைப் போற்றிச்
       சேவக ராவ ரென்று முபாசகர் தியாத மாரிங்
       காவரே யென்றுங் கூறி யகற்றிடு மூவர் தம்மை.                (10)

      (அரும் பதவுரை)   சேவியன்சேவிக்கப்படுகிறவன்; உபாசியன்உபாசிக்கப்படுகிறவன்; தியேயன்தியானிக்கப்படுகிறவன்; தேவிகதெய்வீக; சேவகர்சேவிக்கிறவர்; உபாசகர்உபாசிக்கிறவர்; தியாதாமார்தியானிக்கிறவர்; அகற்றிடும்ஒதுக்கும்; மூவர் தம்மைபிரம விஷ்ணு ருத்ரரை.
(பொழிப்புரை): -    சேவிக்கப்படுகிறவன் (சேவியன்), உபாசிக்கப்படுகின்றவன் (உபாசியன்) தியானிக்கப்படுகின்றவன் (தியேயன்) என்று சிவபிரானானரைத் தெய்வீக உபநிடதங்கள் போற்றிச் துதித்துச் சொல்லும். ஆனால் சேவிக்கிறவர் (சேவகர்), உபாசிக்கிறவர் (உபாசகர்), தியானிக்கிறவர் (தியாதாமார்) எனக்கூறிப் பிரம விஷ்ணு உருத்திரர்களை அவ்வுபநிடதங்கள் ஒதுக்கும். இதனாலும் சிவபிரான் உயர்ச்சி புலப்படும்.
      ‘ப்ரஹ்ம விஷ்ணுவாதிபி: ஸேவ்யம் …..ஈசாநம்என்ற பஞ்சப்ரஹ்மோபநிஷத்தும், சிவம் …. ஸர்வேச்வரம் ஸர்வ தேவைருபாஸ்யம்என்ற மஹோபநிஷத்தும், ‘ஸதாசிவம் ப்ரஹ்மாதி வந்திதம்என்ற நரஸிம்ஹ பூர்வதாபிரியுபநிஷத்தும், ‘ஸர்வ தேவைருபாஸ்யம்,’ ‘ஸர்வஸ்ய சரணம்என்ற சுவேதாசுவதரோபநிஷத்தும், ப்ரஹ்ம விஷ்ணு புரந்தராத் யமரவா ஸேவிதம்’ ‘மாமேவோபாஸிதவ்யம்’. ‘ஏகாமா சாஸ்யம்…..சிவன்என்ற பஸ்ம ஜாபாலோபநிஷத்தும், ‘சிவ ஏகோத்யேய:’ ‘த்யாயீதேசாநம்என்ற அதர்வசிகோபநிஷத்தும், ‘ஏகோ ருத்ரோ த்யேய:’, ‘சிவ ஏவ ஸதா த்யேய:’ என்ற சரபோபநிஷத்தும், ‘நாராயண பரோத்யாதாஎன்ற நாராயணோபநிஷத்தும், ‘த்யாதா ருத்ர:’ என்ற அதர்வசிகோபநிஷத்தும், ‘ராம ஏவ பரம் தப:’ என்ற ராம ரஹஸ்யோபநிஷத்தும் இச்செய்யுட்குப் பிரமாணங்கள்.

      வணங்குகிறவர் திருமூர்த்திகளும் வணங்கப்படுகிறவர் சிவபிரானுமாவா ரென்பதைத் தெரிவித்துப் பரத்துவ நிச்சயம் செய்து இச்செய்யுள்.