தத்துவங்களும் தாத்துவிகங்களும்
T. C. S. இராமச்சங்கு பாண்டியன், B. A.
தூத்துக்குடி
[சிவஞான பூஜா மலர் – குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
தத்துவம் என்பது உண்மையைக் குறிக்கும் (Truth, Reality). அது பற்றியே திருவள்ளுவரும் தத்துவ ஞானம் என்பதை மெய்யுணர்வு எனப் பெயர்த்தார். தத்துவங்களை உள்ளவாறு உணர்ந்தன்றித் தத்துவ ரூபம்,
தத்துவ தரிசனம், தத்துவ சுத்தி என்பன நிகழா.
ஒவ்வொரு சமயத்தாரும் தத்தங் கொள்கைக் கேற்பத் தத்துவங்களைக் கொண்டுள்ளனர். உலகாயதர் பிருதிவி அப்பு தேயு வாயு என்னும் நான்கு தத்துவங்களையே உடன் பட்டுள்ளனர். புத்தர் முதலியோர் புத்தி தத்துவம் வரை உடன்பட்டுள்ளனர். சாங்கியர் முதலியோர் 24 தத்துவங்களை உடன்பட்டுள்ளனர். பல சமயத்தார்க்கு 24 தத்துவங்கள் உடன்பாடு என்பது பற்றியே பரிமேலழகர் “சுவையொளி யூறோசை”
என்னுங் குறளுரையில், “சாங்கிய நூலுளோதிய வாற்றானாராய்தல்”
என்று கூறினார்.
சித்தாந்த சைவத்துள் பிரபஞ்சத்திற்கு முதற் காரணமாய் நித்தமாய்ச் சடமாய் முதல்வனுக்குப் பரிக்கிரக சத்தியாய் முதல்வனின் வியாப்பியமாய், மெய்ப்பொருளாய் அருவாய் உள்ளது மாயை எனப்படும்.
மா என்பது ஒடுங்குதல், யா என்பது வருதல். ஆகலின் எல்லாக் காரியங்களுந் தன்பால் வந்து ஒடுங்குதற்கும் தன்னினின்றுந் தோன்றுதற்குங் காரணமாய் நின்றது மாயை எனப்படும். ஆகலான் ஒன்றற்கொன்று நுண்ணிதிற் செல்லுஞ் சூக்கும்கட்கு முடிவிடமாய் நின்ற சூக்குமப் பொருள் யாது அதனை மாயை என்றலே பொருந்தும்.
இம்மாயை சுத்தமாயை அசுத்தமாயை என இருவகைப்படும். சுத்தமாயையானது மாமாயை, குடிலை, குண்டலி, விந்து என்றுங் கூறப்படும். அசுத்தி மாயையானது அதோ மாயை, மாயை, மோகினி என்றுங் கூறப்படும். சுத்தப் பிரபஞ்சத்திற்கு காரணம் சுத்த மாயை. அசுத்தி பிரபஞ்சத்திற்குக் காரணம் அசுத்தி மாயை. துன்பத்தோடு விரவுதலின்றி இன்ப மாத்திரையே பயத்தற்கேதுவாயது சுத்தம். ஏனையது அசுத்தம். மாயை ஒன்றே குன்றிமணி முதலியன போல மலகன்மங்களோடு விரவாத பாகம் சுத்தமென்றும் அவற்றோடு விரவிய பாகம் அசுத்தம் என்றும் கூறப்படும்.
மேலும் அசுத்தமாயை சுத்தாசுத்தம், அசுத்தம் என இருவகைப்படும். கீழுள்ள தத்துவங்களை நோக்கச் சுத்த மாயும் மேலுள்ள சுத்த தத்துவங்களை நோக்க அசுத்தமாயும் முடிதலின் சுத்தாசுத்தம் எனப்பட்டது. எனவே தத்துவங்கள் சுத்தம் மிச்சிரம் அசுத்தம் என மூவகைப்படும் என்பது பெறப்படும். மூன்றாவதாகக் கூறப்பட்ட அசுத்தம் பிரகிருதி என்றும் மான் என்றுங் கூறப்படும். :
இவற்றுள் சுத்தத்துள் ஐந்தும் மிச்சிரத்துள் ஏழும் அசுத்தத்துள் இருபத்து நான்கும் ஆகத்தத்துவங்கள் முப்பத்தாறாம். ஐந்தாவன சிவம், சக்தி, சதாசிவம், ஈச்சுரம், சுத்த வித்தை என்பன. பிருகச்சாபால உபநிடதத்துள், “சிவம் சக்திஞ்ச சாதாக்யமீசம் வித்யாக்யமேவச”
(4-19)
என இவை குறிப்பிடப் பெற்றுள்ளன. ஏழாவன அசுத்தமாயை, காலம், நியதி, கலை, வித்தை,
அராகம், புருடன் என்பன. சுவேதா சுவதரோப உபநிடதத்துள், “கால:
சுவபாவோ நியதிர்யதி ருச்சா பூதாநியோநி:
புருஷஇதி சிந்தியம்”
(1-2)
என இவை குறிப்பிடப் பெற்றுள்ளன.
இவற்றுள் ஐந்து தத்துவங்களும் சிவபெருமானால் சுத்த மாயையினின்றும் நேரடியாகச் சிருட்டிக்கப்படுகின்றன. எனவே நேரடி சிருட்டி என்று கூறப்படும். இவ்வைந்து தத்துவஙளும் ஒன்றற்கொன்று காரணமாகாது படங்குடிலானாற் போலச் சுத்த மாயையின் விருத்தியாகக் கொள்ளப்படும். தோற்றத்தில் முற்பாடு பிற்பாடு பற்றி ஒன்றினொன்று தோன்றியதாகவும் உபசாரமாகக் கூறப்படும்.
மற்ற தத்துவங்களெல்லாம் அனந்தர் சீகண்டருத்திரர் முதலியோரான் காரியப்படுதலின் பரம்பரை சிருட்டி எனப்படும். அசுத்தமாயை முதல் பிரகிருதி வரை அனந்தரால் காரியப்படுவன. குணம் முதல் பிருதிவி வரை சீகண்ட ருத்திரரால் காரியப்படுவன.
இம்முப்பத்தாறு தத்துவங்களுள் புருடன் அல்லாத மற்ற முப்பத்தைந்து தத்துவங்களும் சடமே. புருட தத்துவமாவது கலை முதலிய பஞ்ச கஞ்சுகத்துடன் கூடிப் பொதுமையாற் போக்த்திருத்துவம் எய்தி நின்ற ஆன்மாவே பிரகிருதிமாயைப் போக நுகர்ச்சியின் உன்முகத்திற்கு ஏதுவாகிய அவிச்சை முதலிய பஞ்சக்கிலேச மென்னும் பும்ஸ்துவ மலமுடையனாய் நிற்றல்.
பஞ்சக்கிலேசமாவன அவிச்சை ஆங்காரம், அவா, ஆசை,
கோபம் என்னும் ஐந்தாம். அவிச்சையாவது அநித்தத்தை நித்தமென்றும், அசுத்தத்தைச் சுத்தமென்றும், துன்பத்தை இன்பமென்றும் தானல்லாத பொருளைத் தானென்றும் திரியக்காணும் உணர்வு. ஆங்காரமாவது அவிச்சை பற்றி அவற்றையான் எனது என மதித்தல். அவாவாவது அதுபற்றி எனக்கிது வேண்டுமென்றல். ஆசையாவது அதுபற்றி அப்பொருட்கட் செல்லும் உணர்வு. கோபமாவது அதுபற்றி அதன் மறுதலைக்கட் செல்லும் உணர்வு. பஞ்சக்கிலேசமே பும்ஸ்துவமலம் என்று கூறப்படும். சகலரே அவிச்சை முதலியன உடையவர். எனவே ஏனைய விஞ்ஞானகலர், பிரளயாகலர் புருடதத்துவமெனப் பெயர் பெறுமாறில்லை.
ஆன்மா வியாபகமாயினும் புருட தத்துவமெனப் பெயர் பெறுவதற்கு ஏதுவாகிய போத்திருத்துவ நீங்குதல் மூலப் பகுதியின் சுத்திப்பின்னாதல் பற்றி மூலப் பகுதிக்கும் அராக தத்துவத்துக்கும் இடையே வைத்தெண்ணுதலும், புருடனாதற்கு ஏதுவாய் விசேடத்து நிற்கும் தத்துவங்கள் சடமாதல் பற்றி அடுத்ததன் தன்மையாய் நிற்கும் புருட தத்துவத்தையும் சடமென்று உபசரித்துக் கூறுதலும் பொருந்தும். இவ்வாறு உண்மையாற் சித்தும் உபசாரத்தாற் சடமுமாம் என்பது பற்றியே “சித்தசித்தான்மா வொன்று”
(சித்தியார் சூ2:
செய்.69) என்று அருணந்தி சிவாசாரிய சுவாமிகள் கூறினார்கள்.
மாயா காரியங்கள் சொற்பிரபஞ்சம் பொருட்பிரபஞ்சம் என இருவகைப்படும். சொற்பிரபஞ்சம் வன்னம் பதம் மந்திரம் என மூவகைப்படும். பொருட் பிரபஞ்சம் புவனம் தத்துவம் கலை என மூவகைப்படும். இவை ஆறும் ஒவ்வொன்றாக்கடந்து சென்று பேரின்பத்தை அடையும் வழியாய் அமைதலின் அத்துவா எனப்பட்டன. வன்னம் பதத்துள்ளும் பதம் மந்திரத்துள்ளும் அடங்கும். புவனம் தத்துவத்துள்ளும் தத்துவம் கலையுள்ளும் அடங்கும்.
தத்துவங்களைச் சிவதத்துவம் முதல் பிருதிவி ஈறாகக் கூறுவது தோற்ற முறை. பிருதிவி முதல் சிவம் ஈறாகக் கூறுவது ஒடுக்க முறை. இவற்றைத் தோற்ற முறையிற்காணலாம்.
I. சுத்தமாயை:
1. சிவதத்துவம்: ஞான சக்தியான் பொதுமையான் காரியப்படுத்தப்பட்ட சுத்தமாயையின் முதலாம் விருத்தி. ஞான மாத்திரையாய் நின்ற சிவனால் அதிட்டிக்கப்படுவது. சூக்குமைவாக்கிற்கு இடம். இலயம், நிட்களம், சக்திமான், நாதம் என்றும் பெயர் பெறும் ஞானசக்திக்கும், சூக்குமை ரூபமாக நிற்குஞ் சிவாகமத்திற்கும், முத்தராய்ச் சூக்குமலயவாசனை மாத்திரமுடைய ஆன்மாக்களுக்கும் ஆண்டுள்ள புவனபோகங்களுக்கும் இடமாம்.
2. சித்திதத்துவம்: கிரியா சக்தியான் பொதுமையான் காரியப்படுத்தல்பட்ட சுத்தமாயையின் இரண்டாம் விருத்தி. சக்தி என்றோதப்படும் சிவனால் அதிட்டிக்கப்படுவது. பைசந்தி வாக்கிற்கு இடம். தூலலயம், தூலநிட்களம், விந்து என்றும் பெயர் பெறும். கிரியா சத்திக்கும், பைசந்தி ரூபமாய் நின்ற சிவாகமங்கட்கும், தூல லய வாசனை மாத்திரமுடைய முத்தர்க்கும் ஆண்டுள்ள புவன போகங்கட்கும் இடம்.
3. சதாசிவதத்துவம்: ஞானசக்தி கிரியாசக்திகளான் சிறப்பு வகையால் காரியப்படுத்தப்பட்ட சுத்த மாயையின் மூன்றாம் விருத்தி. சதாசிவமெனப்பட்ட சிவனால் அதிட்டிக்கப்படுவது. மத்திமைவாக்கிற்கு இடம். உத்தியுத்தம், போகம் சகளநிட்களம் எனறும் பெயர் பெறும். சதாசிவமூர்த்திக்கும் மத்திமைவாக்கு ரூபமாய் நின்ற சிவாகமத்திற்கும், அவை இருபத்தெட்டாகப் பாகுபடுதற்குக் காரணமான பிரணவர் முதலியோர்க்கும் அணுசதாசிவர் முதலியோர்க்கும் அவர் நநுகரண புவன போகங்கட்கும் இடமாம்.
4. ஈசுர தத்துவம்:
கிரியா சக்தியை மிக்கச்செலுத்திச் சூக்குமமாய்க் காரியப்படுத்தப்பட்ட சுத்த மாயையின் நாலாம் விருத்தி. ஈசுரனாய் நின்ற சிவனால் அதிட்டிக்கப்படுவது. சூக்கும வைகரிக்கு இடம், சூக்கும அதிகாரம், சூக்குமப் பிரவிருத்தி, சூக்கும சகளம் என்றும் பெயர் பெறும். ஈசுவரனுக்கும் சூக்குமவைகரி ரூபமாய் நின்ற சிவாகமங்கட்கும் அசுத்தி மாயையைக் காரியப்படுத்தும் அநந்த தேவர் முதலிய வித்தியேசுரர் எண்மருக்கும், அப்பதம் பெற்ற உருத்திரர்கட்டும் அவர் தநுகரண புவன போகங்கட்கும் இடம்.
5. சுத்த வித்தியா தத்துவம்: ஞானசத்தியை மிக்குச் செலுத்தித் தூலமாய்க் காரியப்படுத்தப்பட்ட சுத்த மாயையின் ஐந்தம் விருத்தி. வித்தைக்கேதுவாகிய ஈசுரனாய் நின்ற சிவனால் அதிட்டிக்கப்படுவது. தூலவைகரிக்கு இடம். தூல ஈசுரம், தூல அதிகாரம், தூலப்பிரவிருத்தி, தூல சகளம் என்றும் பெயர் பெறும். ஈசுரனுக்கும், தூலவைகரி ரூபமாய் நின்ற சிவாமங்கட்கும், ஏழு கோடி மந்திரங்கட்கும், நந்தி முதலிய கணங்கட்கும், வாமை முதலிய ஒன்பது சத்திகட்கும், முத்தி பெற்று மலவாசனை மாத்திரமுடையராய்க் கீழுள்ள உருத்திரன் மால் அயன் இந்திரன் முதலியோரைத் தொழிற் படுத்துவோராகிய உருத்திரன் மால் அயன் இந்திரன் முதலியோர்க்கும் அவர் தநுகரணாதிகட்கும் இடம்.
II. மிச்சிர மாயை:
6. அசுத்தி மாயா தத்துவம்: வினையிற்கட்டுண்ட ஆன்மாக்களைப் பொது வகையான் மயக்குவது. மோகினி என்றும் பெயர் பெறும்.
7. கால தத்துவம்:
போக நுகர்ச்சிக்கட் சென்ற ஆன்மாக்கட்குக் கணம் இலவசம் துடி முதலியவற்றாற் பலவகைப் பட்டுப் போகத்தை வரையறைப் படுத்துவது.
8. நியதி தத்துவம்:
அவரவரான் ஈட்டப்படும் வினையின் பயனை அவரவரே நுகருமாறு அரசாணை போல் நியமித்து நிறுத்துவது.
9. கலை: மூல மலத்தின் மறைப்புண்டு சூனியம் போற்கிடந்த ஆன்மாக்கட்குப் போக நுகர்ச்சியின் பொருட்டு மலசத்தியிற் சிறிதே நீக்கிக் கிரியா சத்தியை விளக்குவது. காலம் நியதி கலை என்னும் மூன்றும் அசுத்தி மாயா தத்துவத்தினின்றும் முறையே தோன்றுவன.
10. வித்தை: கலையினின்றுந்தோன்றுவது. ஆன்மாக்களின் ஞான சத்தியை விளக்கி அதனால் அதிட்டிக்கபட்டுப் புறத்தின்கண் விடயமாகிய குட முதலியவற்றைச் சவிகற்பக்காட்சியான் நிச்சயிக்கும் புத்தி தத்துவமாகிய அகத்தின்கண் விடயத்தையறியும் தன்வேதனைக் காட்சிக்கும் புத்தி தத்துவத்தோடு கூடாமையாற் புறப்பொருளை விகற்பமின்றியறிவதாகிய நிருவிகற்பக் காட்சியறிவிற்கும் மனம் புத்தி அகங்காரங்களின் தொழிற்பாடாகிய சங்கற்பம் நிச்சயம் அபிமானம் என்பவற்றை அறியும் அறிவிற்குங் கருவியாய் நிற்பது.
11. அராகம்: வித்தையினின்றுந் தோன்றுவது, ஆன்மாக்களின் இச்சா சத்தியை விளக்கிப் புத்தி குணங்களின் அவைராக்கியமெனப்படும் அராக நிகழ்ச்சிக்கு ஏதுவாய் நிற்பது.
12. புருடன்: காலம் முதல் அராகம் ஈறாக ஐந்தையும் பொருந்திப் போகத்துக்கு உன்முகப்பட்டு நிற்கும் ஆன்மா.
III. பிரகிருதி மாயை:
13. மூலப்பகுதி: கலையினின்றுந் தோன்றுவது. இது பிரகிருதி, பிரதானம், மான், அவ்வியத்தம் என்றும் பெயர் பெறும். இது அவிச்சை முதலிய பஞ்சக்கிலேச விளைவிற்குக் காரணம். முக்குணங்களும் விளங்குதலின்றித் தம்முட் சமமாய் நின்ற நிலை. இதனின்றும் குணதத்துவம் தோன்றும். மூலப்பகுதியின் விருத்தியாகிய முக்குணங்களும் தம்முட் சமமாய் நின்ற அவத்தையே குணதத்துவமாகும். குணதத்துவம் மற்றத் தத்த்வங்கள் போலப் பரிணாமமன்மையான் மூலப் பகுதியோடு ஒன்றாக கூறப்படும். இவ்வாறு அவ்வியத்தமாய் நின்ற மூலப்பகுதி வியத்தமாதற் பொருட்டு அசுத்தமாயா தத்துவத்திலுள்ள சீகண்டருத்திராற் செயற்படுவது.
14. புத்தி: குண தத்துவத்தினின்றும் தோற்றுவிக்கப்படுவது. சாத்துவிகத்தான் மிக்கும் ஏனையிரண்டு குணங்களான் குறைத்தும் பரிணமித்த நிலை. வித்தையிற் பொதுமையான் விளங்கிய ஞான சத்தியை விடயந்தோறுஞ் சிறப்பு வகையான் விளக்கிப் பெயர் முதலியவற்றான் நிச்சயிப்பிக்கும் கருவியாம். அங்ஙனம் நிச்சயித்த பின்னர் அவ்வவ்விடய வடிவிற்றாய்ப் பரிணமித்துத் தோன்றும் ஞானமாய் நிற்கும். அதனால் ஆன்மாவிற்குப் புலனாயடுத்த போக்கியமாகும். எனவே புருடனாற் செய்யப்படும் இருவினைப் பயனாகிய புண்ணியபாவங்கட்குச் சிறப்புவகையாற் பற்றுக்கோடாகும்.
15. ஆங்காரம்: புத்தியினின்றும் இராசதம் மிக்கும் ஏனையிரண்டுகுணமுங் குறைந்து தோன்றுவது. இதன் தொழில் இஃதின்னதென யான் நிச்சயிப்பேன் என ஒருப்பட்டெழுதல். புத்தியின் தொழிற்பாடாகிய துணிவு விடயத்தின் கண்ணதாய்ப் பொருள்தோறும் வேறு வேறாய் இஃதென்னும் வடிவிற்றாய் நிற்பது. ஆங்காரத்தில் தொழிற்பாடு புருடன் கண்ணதாய் யானென்னும் வடிவிற்றாய் நிற்பது. எனவே இரண்டிற்கும் வேற்றுமை உணரப்படும்.
இவ்வாங்காரம் தைசதவாங்காரம், வைகரியாங்காரம், பூதாதியாங்காரம் என்றும் மூவகைப்படும். சாத்துவிகம் மிக்கு ஏனையிரண்டுங்குறைந்த கூறு தைசதம் என்றும் இராமிக்கு ஏனையிரண்டுங்குறைந்த கூறு தைசதம் என்றும் இராசதம் மிக்கு ஏனையிரண்டுங்குறைந்த கூறு வைகாரிகம் என்றும் தாமதம் மிக்கு ஏனையிரண்டுங் குறைந்த கூறு பூதாதிகம் என்றும் கூறப்படும். இவற்றுள் தைசதவாங்காரத்தினின்றும் மனமும் ஞானேந்திரியம் ஐந்தும் தோன்றும். வைகரியினின்றும் கன்மேந்திரியம் ஐந்தும் தோன்றும்.
16. மனம்: சாத்துவிக ஆங்காரத்தினின்றுந் தோன்றி வாதனை பற்றி நிகழும் சங்கற்ப விகற்பமாகிய தொழிலை உடையது. புறவிந்திரியங்களான் அறிந்த விடயத்தை இடையே நின்று பற்றி வாங்கிப் புத்தியின் எதிர் விம்பமாய்த் தோன்றுமாறு கொண்டுய்க்கும் அகவிந்திரியம். மனத்தின் பின்னர்ச் சாத்துவிக ஆங்காரத்தினின்றும் முறையானே ஞானேந்திரியன்களான செவி (சுரோத்திரம்),
தோல் (துவக்கு)
கண் எனப்படும் நோக்கு (சட்சு)
நாக்கு (சிங்ஙவை),
மூக்கு (ஆக்கிராணம்)
என்பனவாகிய ஐந்தும் தோன்றும். செவி முதலிய இடங்களின் பெயர் ஆகுபெயரான் அவ்வவ் இடங்களை அதிபிடித்து நிற்கும் இந்திரியங்காயின. இந்திரியம், பொறி, வாயில் என்பன ஒரு பொருட்கிளவி. இவை ஐந்தும் ஆன்மாவின் ஞானசத்தியான் அதிட்டிக்கப்பட்டுப் பொருள்களை விசேடண விசேடிய இயல்பு பற்றி அறியுமாறின்றி நிருவிகற்பமாயறியுங்கருவியாகும்.
17. செவி: ஆகாயம் இடமாகச் சத்தம் அறிதல்.
18. தோல்: வாயு இடமாக பரிசமறிதல்.
19. கண்: தேயு இடமாக உருவமறிதல்.
20. நாக்கு: அப்பு இடமாக இரசமறிதல்.
21. மூக்கு: பிருதிவி இடமாகக் கந்தமறிதல்.
இராசத ஆங்காரத்தினின்றும் முறையே வாக்கு (வாய்)
கால் (பாதம்)
கை (பாணி)
மலசலவாயில் (பாயுகு),
குறி (உபத்தம்)
என்னும் ஐந்து கன்மேந்திரியங்களும் தோன்றும். ஆன்மாவின் கிரியா சக்தியால் அதிட்டிக்கப்பட்டுத் தொழிற்பாடு நிகழும். ஈண்டும் உறுப்பின் பெயர் ஆகுபெயரான அவ்வவற்றை அதிட்டித்து நிற்கும் இந்திரியங்கட்காயின.
22. வாய்: இதன் தொழில் பேசல் (வசனம்)
23. கால்: தொழில் புடைபெயர்ச்சி (கமனம்)
24. கை:
தொழில் இடுதலேற்றல் (தானம்)
25. பாயுரு: தொழில் வெளியேற்றல் (விசர்க்கம்)
26. உபத்தம்: தொழில் ஆனந்தம்.
ஞானேந்திரிய்ங்கள் ஆன்மாவின் ஞானாசத்தி மாத்திரையே விளக்கி நிற்பன. ஆகலின் கிரியாசத்தியை விளக்குதற்குக் கன்மேந்திரியம் ஐந்தும் வேண்டப்படும். ஞானசக்தியுங் கிரியாசக்தியும் இயற்கையால் தம்முன் வேறுபாடுடையனவல்ல. ஆயினுஞ் செயற்கையான் வேறுபாடுடைமையின் கருவிகளும் வேறு வேறு வேண்டப்பட்டன. ஆன்மாவின் ஞானாசத்தி ஒன்றாயினும் அறியப்படுஞ்சத்தம் முதலிய விடயங்கள் ஐவேறு வகைப்படுதல் பற்றி அறிகருவி ஐந்தாயினாற் போலக் கிரியாசக்தி ஒன்றாயினும் செய்யப்படும் தொழில் வசனம் கமனம் தானம் விசர்க்கம் ஆனந்தமென்று ஐவேறு வகைப்படுதல் பற்றித் தொழிற் கருவியும் ஐந்தாயின.
தாமத ஆங்காரத்தினின்றும் தன்மாத்திரைகளாகிய சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம் என்னும் ஐந்தும் தோன்றும், இவை ஐந்தும் ஞானேந்திரியம் கன்மேந்திரியம் என்னும் இருவகை இந்திரியங்கட்கும் முறையே இடமாகித் தேரூர்வானுக்குத் தேர் போல அவை அறிதலுஞ் செய்தலுமாகிய தத்தந் தொழிற் பாட்டினைச் செய்தற்கண் மதுகையை விளைத்து நிற்றன் மாத்திரைக்கே கருவியாய் நிற்பன். இவை ஐந்தும் ஆகாயம் முதலிய பெரும் பூதம் ஐந்திற்கும் முதற் காரணமாகும். எனவே தன் மாத்திரைகட்கும் பூதங்கட்குந் தம்முள் வேற்றுமை முளையும் மரமும் போலச் சூக்குமமாய் நிற்றலுந் தூலமாய் நிற்றலு மாத்திரையே யன்றிப் பிறிதில்லை.
27. சத்தம் – வல்லோசை மெல்லோசை முதலிய சிறப்பு வகை ஒசைகளை எல்லம் உள்ளடக்கிப் பொதுமையான் ஓசை மாத்திரையே நிற்பது.
28. பரிசம் – அவ்வோசையோடு கூடத்தட்பம் வெப்பம் முதலிய சிறப்புவகைப் பரிசங்களை எல்லாம் உள்ளடக்கிப் பொதுமையான் பரிசமாத்திரையாய்ச் சூக்குமமாய் நிற்பது.
29. உருடம் – அவ்விரண்டனோடுங்கூட வெண்மை செம்மை முதலிய சிறப்பு வகை உருவங்களை எல்லாம் உள்ளடக்கிய பொதுமையான் உருவ மாத்திரையாய்ச் சூக்குமமாய் நிற்பது.
30. இரதம் – அம்மூன்றினோடுங்கூடத் தித்திப்புபுளிப்பு முதலிய சிறப்புவகைச் சுவைகளை எல்லாம் உள்ளடக்கி பொதுமையான் இரத மாத்திரையாய்ச் சூக்குமமாய் நிற்பது.
31. கந்தம் – இந்நான்கனோடுங்கூட நறுநாற்றாந் தீ நாற்றம் என்னும் இரு பகுதிச் சிறப்புவகைக் கந்தங்களை எல்லாம் உள்ளடக்கிப் பொதுமையான் கந்த மாத்திரையாய்ச் சூக்குமமாய் நிற்பது.
இவற்றினின்றும் முறையே ஆகாயம் முதலிய பெரும் பூதங்கள் ஐந்தும் தோன்றும்.
32. ஆகாயம் – சத்த தன்மாத்திரையினின்றுந் தூலமாய்த் தோன்றிப் பலவேறு வகைப்பட்ட சத்தமுடைத்தாய்ப் பிராணிகள் போக்கு வரவு முதலிய தொழில் செய்தற்கு இடங்கொடுத்து நிற்கும். எல்லா நாடிகளிலும் ஆங்காரத்தின் விருத்திக்கு இடமாய் நிற்கும்.
33. வாயு – பரிச தன்மாத்திரையினின்றுந் தூலமாய்த் தோன்றிச் சத்தம் பரிசம் என்னும் இரண்டு குணமுடைத்தாய்ச் சலித்துத் திரட்டுதல் என்னுந் தொழிற்பாட்டதாய், உடம்பினுள்ளும் பிராணன் அபானன் முதலிய பத்துவகைப் பட்டு இயங்கி எழுதல் இருத்தல் முதலிய தொழிற்பாட்டிற்கு ஏதுவாய் எல்லா உயிர்கட்கும் உபகாரமாய் உள்ளது.
34. தேயு – உருவ தன்மாத்திரையினின்றுந் தூலமாய்த் தோன்றிச் சத்தம் பரிசம் உருவம் என்னும் மூன்று குணமுடையதாய்ப் பாகஞ்செய்தல் முதலிய தொழிற்பாட்டதாய் உலகத்திற் காருகபத்தீயம், ஆகவனீயம், தென்றிசையங்கி என்னும் வைதிகாங்கியும், இவற்றின் வேறாகிய சைவ அங்கியுமாய் நின்று வினைகட்டு உபகாரமாயும் அகத்தினுள் விந்து அங்கியுமாய் நின்று உண்டவற்றை எல்லாம் பாகஞ் செய்து உயிர்கட்குப் பெரிதும் உபகாரமாய் இங்ஙனம் பல வேறு வகைப்படும்.
35. அப்பு – இரத தன்மாத்திரையினின்றுந் தூலமாய்த் தோன்றிச் சத்தம் பரிசம் உருவம் இரதம் என்னும் நான்கு குணமுடைத்தாய் நெகிழ்வித்துப் பதஞ் செய்தலாகிய தொழிற்பாட்டதாய் உயிர்கள் எல்லந் தன்னாற் சீவித்தற் கேதுவாய் நிற்கும்.
36. பிருதிவி – கந்த தன்மாத்திரையினிறுந் தூலமாய்த் தோன்றிச் சத்தம் பரிசம் உருவம் இரதம் கந்தம் என்னும் ஐந்து குணமுடைத்தாய் உரத்துத் தரித்தலாகிய தொழிற்பாட்டதாய் நிற்கும்.
ஆகத் தத்துவங்கள் முப்பத்தாறாகும். தத்துவங்களில் தோன்றிய புறநிலைக் கருவிகளைத் தாத்துவிகம் என்பர். அவை வருமாறு.
(1) பிருதிவியின் கூறு:- மயிர்,
எலும்பு, தோல், நரம்பு, தசை (5)
(2) அப்புவின் கூறு:-
ஓடுநீர், உதிரம், சுக்கிலம், மூளை, மச்சை (5)
(3) தேயுவின் கூறு:- ஆகாரம், நித்திரை, பயம், மைதுனம், சோம்பு (5)
(4) வாயுவின் கூறு:- ஓடல், இருத்தல், கிடத்தல், நடத்தல், நிற்றல் (5)
(5) ஆகாயத்தின் கூறு:- காமம், குரோதம், லோபம், மோகம், மதம் (5)
(6) வாக்காதி கன்மேந்திரியங்களில் தோன்றும்:-
வசனம், கமனம், தானம் விசர்க்கம், ஆனந்தம் (5)
(7) வாயுவில் தோன்றுவதாகிய தசவாயுக்கள்:-
பிராணன், அபானன் உதானன், வியானன், சமானன், நாகன், கூர்மன், கிரிகரன் தேவதத்தன், தனஞ்செயன் (10)
(8) பிருதிவியல் தோன்றுவதாகிய தசநாடி:-
இடை, பிங்களை,
சுழுமுனை, காந்தாரி, அத்தி, சிங்குவை, அலம்புடை, புருடன், குகு, சங்கிணி (10)
(9) ஆசயம்:-
முத்திராசயம், மலாசயம், ஆமாசயம், பக்குவாசயம், கருப்பாசயம் (5)
(10) அசுத்தமான விரிபுவனங்களாகிய சத்த பரிசரூப ரச கந்தம் (5)
ஆகத்தாத்துவிகங்கள் 60
எனவே தத்துவ தாத்துவிகங்கள் 96
முன் சொல்லிய சத்தாதி தன்மாத்திரை தத்துவங்கள். பின்னர்க் கூறப்பட்டன விடயமாகின்ற புலன்கள். முக்குணம் அவ்வியத்தித்திலும் மூவகை ஆங்காரங்களும் ஆங்காரத்திலும் அடங்கி ஆன்ம தத்துவத்துள் அடங்கும். வாக்கு ஐந்தும் விந்துவில் அடங்கும். இவை பத்தும் புறநிலைக் கருவிகள் அல்ல.
இனிக்கோசம் (5),
ஏடணை (3),
வியாதி (3),
மண்டலம் (3),
ஆதாரம் (6),
கிலேசம் (5),
ஆக இருபத்தைந்தையுங் கூட்ட 121 என்றலும் ஆகும். இவை மேலும் விரியும்.
மேலே கூறப்பட்ட தத்துவங்கள் முப்பத்தாறும் கலையுள் அடங்கும். கலைகள் நிவர்த்தி, பிரதிட்டை, வித்தை, சரந்தி, சாந்தியாதீதை என ஐந்தாகும். நிவிர்த்தி கலையில் பிருதிவி என்ற ஒரு தத்துவம் மட்டுமே அடங்கும். பிரதிட்டா கலையில் ஏனைய இருபத்து மூன்று தத்துவங்கள் அடங்கும். வித்யா கலையில் புருடன் முதல் அசுத்தி மாயை இறுதியாகிய ஏழு தத்துவங்களும் அடங்கும். சாந்தி கலையில் சுத்த்வித்தை, ஈச்சுரம், சதாசிவம் என்னும் மூன்று தத்துவங்களும் அடங்கும்.
சாந்தியதீத கலையில் சத்தி, சிவம் என்ற இரு தத்துவங்களும் அடங்கும். தத்துவங்களுள் புவனங்கள் விளங்கனி வடிவாய் வயங்கும்.
இத்தத்துவங்களின் அளவு யோசனை என்ற கணக்கில் கூறப்படும். சாளரத்தில் தோன்றும் ஞாயிற்றின் கதிரின் அதிநுட்பமாய்த் தோன்றும் நுண்ணிய துகள் அணு எனப்படும்.
8 அணு - திரசரேணு
8 திரசரேணு - இலீக்கை
8 இலீக்கை - யூகை
8 யூகை - இயவை நெல்லு
8 இயவை நெல்லு - அங்குலம்
24 அங்குலம் - முழம்
4 முழம் - வில்லு
2 வில்லு - தண்டம்
8 (முழம்)
2000 தண்டம் - குரோசம்
4 குரோசம் - யோசனை 64,000 (முழம்)
மேற்கண்ட கணக்கில் ஒரு யோசனை என்பது 18. 2160 மைல்கள் அல்லது 29.09 கிலோ மீட்டர் ஆகும்.
பிருதிவி தத்துவம் நூறு கோடி யோசனை ஆழ அகல நீளங்கலையுடையது. அப்பு முதல் பிரகிருதி வரையுள்ள இருபத்துமூன்று தத்துவங்களுள் ஆங்காரம் என்பது தன் மாத்திரை ஐந்தும், இந்திரியம் பத்தும் மனம் ஒன்றும் ஆகத்தன் காரியமாகிய பதினாறினையும் அடக்கி நிற்கும். எனவே அவை அப்பு, வாயு, தேயு, ஆகாயம், ஆங்காரம், புத்தி, பிரகிருதி என ஏழுவகையாகப் பிரிக்கப்படும். இவை ஏழும் கீழ்க் கீழ்த் தத்துவங்களை நோக்கி மேல் மேல் தத்துவங்களின் அளவு பத்துப் பத்து மடங்கு அதிகமாகும். வித்தியா கலையிலுள்ள ஏழு தத்துவங்களும் கீழ்க் கீழ்க் தத்துவங்களை நோக்கி மேல் மேல் தத்துவங்கள் நூறு மடங்கு அதிகம். சாந்தி கலையிலிள்ள மூன்று தத்துவங்களும் கீழ்க்கீழ்த் தத்துவங்களை நோக்கி மேல் மேல் ஆயிரமடங்கு அதிகம். சாந்தியதீக கலையிலுள்ள இரண்டு தத்துவங்களும் கீழ்க்கீழ்த் தத்துவங்களை நோக்கி நூறாயிர மடங்கு அதிகம். எனவே அது பற்றிய எண் முறை பின்வருமாறு.
விபரம் எண்வரிசை பெயர்
1 * 10 2 பத்து
10 *
10 3 நூறு
நூறு * 10 4 ஆயிரம்
ஆயிரம் * 10 5 பத்தாயிரம்
பத்தாயிரம் * 10 6 நூறாயிரம்
(இலக்கணம்,
நியுதம்)
இலக்கம் * 10 7 பத்திலக்கம்
பத்திலக்கம் * 10 8 கோடி
கோடி * 10 9 அற்புதம்
அற்புதம் 10 10 பதுமம்
(நூறு கோடி)
பதுமம் * 10 11 கருவம்
கருவம் * 10 12 நிகருவம்
நிகருவம் * 10 13 பிருந்தம்
பிருந்தம் * 10 14 மாபதுமம்
மாபதுமம * 10 15 சங்கம்
சங்கம் * 10 16 மாசங்கம்
மாசங்கம் * 10 17 சமுத்திரம்
சமுத்திரம் * 10 18 மாசமுத்திரம்
மாசமுத்திரம் * 10 19 பரார்த்தம்
இத்தத்துவங்களின் சங்கார கால நியமமாவது பிரமப் பகலின் முடிவிலே நிவிர்த்திகலா சங்காரமும், பிரமம் ஆயுள் முடிவிலே நிவிர்த்திகலா சங்காரமும், பிரமம் ஆயுள் முடிவிலே பிரதிட்டா கலா சங்காரமும், உருத்திரனின் ஆயுள் முடிவிலே வித்தியா கலாசங்காரமும் நிகழும். கால அளவு பின்வருமாறு.
15
கண்ணிமைப் பொழுது காட்டை
30
காட்டை கலை
30
கலை முகூர்த்தம்
30
முகூர்த்தம் நாள்
15
நாள் பக்கம்
2
பக்கம் மாதம்
2
மாதம் இருது
3
இருது அயனம்
2
அயனம் வருடம்
(தேவர்க்கு ஒரு நாள்)
4,32,000
வருடம் கலியுகம்
8,64,000
வருடம் துவாபரயுகம்
12,96,000
வருடம் திரேதாயுகம்
17,28,000
வருடம் கிருத யுகம்
43,20,000
வருடம் மகாயுகம், 4 யுகம்,
(தேவயுகம்
12,000 தேவருடம்)
30,67,20,000
வருடம் 71
மகாயுகம்,
மனுவின் காலம், (மன்வந்தரம் 8,52,000 தேவ வருடம்) ஒரு இந்திரன் ஆயுள்
4,29,40,80,000
வருடம் 994
மகாயுகம்,
14
மனுக்கள், 14 இந்திரர்கள்
2,59,20,000
வருடம் 6
மகாயுகம்
(இரண்டு சந்திகள்)
4,32,00,00,000
வருடம் 1000
மகாயுகம்
1
கற்பம், பிரம்மாவின் பகல்
8,64,00,00,000
வருடம் 2
கற்பம், பிரமம் நாள்
360
பிரம்ம நாள் பிரமம் வருடம்
100
பிரம்ம வருடம் பிரமம் ஆயுள் – விண்டு பகல்
200
பிரம்ம வருடம் விண்டுவிற்கு ஒரு நாள்
360
விண்டு நாள் விண்டு வருடம்
100
விண்டு வருடம் விண்டு ஆயுள்,
உருத்திரன் பகல்
200
விண்டு வருடம் உருத்திர நாள்
360
உருத்திர நாள் உருத்திர வருடம்
பரார்த்த உருத்திர வருடம் உருத்துரன் ஆயுள்,
ஈசுரன் பகல்
2
பரார்த்த உருத்திர வருடம் ஈசுரன் நாள்
360
ஈசுர நாள் ஈசுர வருடம்
பரார்த்த ஈசுர வருடம் ஈசுரன் ஆயுள்
சதாசிவன் பகல்
2
பரார்த்த ஈசுர வருடம் சதாசிவ நாள்
இதற்கு மேல் கற்பனைக்கு எட்டாத காலம், தற்காலம். தற்காலம் புனருற்பவத்தில் சுவேதவராக கற்பத்தில் 7 வது மனுவாகிய வைவசுத மன்வந்தரத்தில் 28 வது மகாயுகத்தில் 4 வது பாதமாகிய கலியுகம் நடக்கின்றது.
சிவம்.
No comments:
Post a Comment