உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
சுத்தாத்துவித சித்தாந்த சைவம்
சித்தாந்த போதகாசிரியர் த. சி. ச. இராமச்சங்கு
பாண்டியன், B. A.,
20, தந்தி ஆபீஸ் சாலை, தூத்துக்குடி - 628001
[சிவஞான பூஜா மலர் – துந்துபி ஆண்டு
- (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S.
வேங்கடேச
சர்மா, மேலமாம்பலம்,
சென்னை – 600 033]
திருச்சிற்ற்பலம்
ஈறாய்முத லொன்றாயிரு
பெண்ணாண்குண மூன்றாய்
மாறாமறை நான்காய்வரு
பூதம்மவை யைந்தாய்
ஆறார்சுவை யேழோசையோ
டெட்டுத்திசை தானாய்
வேறாயுடனானானிடம்
வீழிம்மிழ லையே.
திருச்சிற்றம்பலம்
-
திருஞானசம்பந்தர் 1-ம் திருமுறை
உலக
வாழ்வில் மக்களின் குறிக்கோள்கள் பல்வேறு வகையாகக் காண்க கிடக்கின்றன எனினும் நம் முன்னோர்கள்
வீடுபேறடைதலையே தலையாய குறிக்கோள் என வகுத்தனர். அக்குறிக்கோளை அடையச் செலுத்தும் நெறியே
சமயம் எனப்படும்.
எனினும்
மக்களின் உணரும் ஆற்றல்கள் வெவ்வேறு வகையாய் விளங்கும். இவ்வகை ஆற்றல்களின் ஏற்றத்
தாழ்வுகளுக்கேற்பச் சமயங்களும் பலவாயின. எனவே உண்மைச் சமயம் ஏது என்னும் ஐயமேற்படுவது
இயல்பே. எல்லாக் கோட்பாடுகளையும் தன்னுள் அடக்கிச் சாதனம் பயன் இவைகளால் மேம்பட்டு
விளங்குவது யாதோ அஃதுண்மைச் சமயமாகும். எனவே அதுபற்றி ஆய்தலும் துணிதலும் வேண்டப்படுவதே.
அவ்வாறு ஆய்ந்து துணிந்தோர் மேற்கொண்டது சுத்தாத்துவித சித்தாந்த சைவமாகும்.
சைமாவது
சிவசம்பந்தமுடையது என்று பொருள்படும். சிவ என்னுஞ் சொல்லடியாகப் பிறந்த தத்தித பதம்,
பெயரடியிற் பிறந்த பெயர் தத்திதமாகும்.
சிவ
என்னுஞ் சொல்லில் சிகாரமானது கிடத்தல் என்னும் பொருள்படும்.
அதுவே சீ என நின்று மெலிவித்தல் கூருவித்தல் என்னும் பொருள்படும். வகரம் வ்லியையும்
இடத்தையும் குறிக்கும். அன்றியும் சிவம் என்னுஞ் சொல் மங்கலம் என்னும் பொருள் தரும்.
மேலும் எழுத்து நிலைமாற்றத்தால் வசி என்னும் பதம் காந்தி என்னும் பொருள் தரும். எனவே
அச்சொல் கீழ்க்கண்ட பொருள்களை உடைத்தாயிருக்கும். அவையாவன: -
1) சாதுக்கள் மனம் தமபாற் கிடத்தற்கு இடமாவர்,
2) மாசங்கார காலத்து உலகமெல்லாந் தம்பாற் ஒடுங்க
இடமாவர்,
3) சாதுக்கள் மனத்திலே தங்கி இருப்பவர்,
4) பாச சத்தியை மெலிவித்துச் சிற்சத்தியை கூருவிப்பவர்,
5) பரமானந்த ரூபியாய் நிர்விகாரியாய் இருப்பவர்,
6) சுகத்தோடு கூடியவர்,
7) சுகத்தை கொடுப்பவர்,
8) காந்தியை உடையவர்,
9) அநாதியை முற்றறிவு முற்றுத் தொழிலாகிய சிவத்துவமுடையவர்,
10) சிவத்துவம் என்னும் அதிசுத்தமுடையவர் என்பனவாம்.
அச்சொல்
அவ்வாறு பொருள்படுதலால், சிவபெருமான், தியாதா, பரப்பிரம்மம், பரமன், முன்னோன், தாணு,
நம்பன், தேவன், மாதேவன், நித்தன், தற்பரன், நந்தி, நிராலம்பன், ஞானமூர்த்தி, நாராயணன்,
அச்சுதன், இறையோன், சங்கரன், பராபரன், அரன், பிஞ்ஞான், நக்கன், நிராமயன், உக்கிரன்,
பீமன், பசுபதி, சதாசிவன், ஏகன், நிருமலன், அமலன், பிரான், அநந்தன், ஆதி, சுயம்பு, சம்பு,
திரியம்பகன், பர்க்கன், சாமி, ஈசானன், மகேச்சுரன், காலகாலன், உருத்திரன், பகவன், எண்குணன்,
வரதன், வாமதேவன், சோமசுந்தரன், வேதியன், மறைமுதலிம் விரூபாக்கன் முதலான அளவிலாத் திருப்பெயர்களைக்
கொண்டருளினன்.
எனவே
சிவனென்னுந் திருப்பெயரே மேற்கூறியவாறு பொருள்பட்டு அத்தலைவனின் உரு, குணம், குறிம்
செயல் முதலானவைகளைக் கருதுமாறு விசிட்டமாய் நிற்றலின் மற்றைச் சொற்கள் போலாகாது தன்னை
நினைத்தல் கேட்டல் செய்தவழி உண்மையை விளக்கிச் சிவசாயுச்சியத்திற்குங் கொண்டு செல்ல
வல்லதாய்ப் பதியைக் குறித்து நிற்கும் திருப்பெயருமாயிற்று.
இதுகாறுங்
கூறியவாற்றால் மேலே கூறப்பெற்ற தன்மைகளோடு கூடிய பரம்பொருளோடு சம்பந்தம் உடையது சைவம்
எனப்படும். அவ்வாறான சம்பந்தமுடையோரே சைவர் எனப்படுவர். ஆயின் சிவ பரம்பொருள் ஒளபச்சிலேடிக்
(எள்ளினுள்
நெய் போன்ற வியாபகமாய்) நிற்றலின்
சிவசம்பந்தம் எஞ்ஞான்றும் உள்ளதேயாம். எனவே எல்லோருக்கும் பொதுவாய் நிற்பதன்றிச் சைவர்
என ஒரு சாராருக்கு உரிமை உடையதாதல் செல்லாதாய் முடியமே என ஐயம் எழலாம்.
ஆன்மாக்கள்
சிற்றறிவும் சிறுதொழிலும் உடையன. சார்ந்த்தன் வண்ணமாம் இயல்பின. சகச மலத்தோடு அநாதியே
கூடி அறியாமையின் அழுந்தி நிற்பன். எனவே இறைவன் கலந்து நிற்பினும் அதனை உணரும் ஆற்றலை
இழந்தன. பிறவிக் குருடன் ஆதித்தன் சந்நிதியின் நிற்பினும் ஆதித்தனை அறிய இயலாத் தன்மையன்
ஆவன். அது போல ஆன்மாக்கள் அச்சம்பந்தத்தை அறிய இயலாவாயின. எனவே பொது என்பது பொருந்தாது.
அச்சம்பந்தத்தை அநுபவமாக உணர்வோரே அச்சம்பந்தத்திற்கு உரியராவர். அச்சம்பந்தத்தை உணர்ந்து
சிவஞானத்தை அடைய வழிகோலுவதாகிய கிரியை தீக்கை எனப்படும். மலத்தைக் கெடுத்து ஞானத்தைக்
கொடுப்பது என்பதே தீக்கை என்னும் சொற்பொருளாகும். ஆகலின் அவ்வாறு தீக்கை பெற்று அச்சம்பந்தத்தை
அநுபூதியாக உணரத்தலைப்படுவோரே சைவர் எனப்படுவர் என்பதே பொருந்துமாறு விளங்கும். எனவே
சிவ பரம்பொருளோடு அச்சமந்தத்தை அடையுமாறு செய்வதே சைவம் எனப்படும் என்பது தெளிவாகும்.
ஆயினும்
சைவம் என்ற பெயருடைய சமயங்கள் பலவாகும். அவற்றின் கோட்பாடுகளும் வெவ்வேறாகும். எனவே
அவற்றினின்றும் வேறுபடுத்துவது சித்தாந்தம் என்னும் அடையாகும். சித்தாந்தம் என்பது
சித்தம் + அந்தம் என்ற இரு சொற்களின் கூட்டமாகும். முடிந்த முடிவு என்பது அதன் பொருளாகும்.
காரணப் பெயராகலின் எல்லாக் கொள்கைகட்டும் பொதுவாய் நிற்கும் தன்மைத்து. ஆயினும் அதுசிவபெருமானால்
அருளப்பெற்ற காமிக முதலிய இருபத்தெட்டு ஆகனகளுக்கும் பிரசித்தமான உரிமை உடையதாகும்.
அஃதெவ்வாறெனில் பங்கஜம் என்ற சொல் காரண இடுகுறியாய்த் தாமரையைக் குறிப்பது போலாகும்.
பங்கஜம் என்பது சேற்றில் தோன்றுவது என்னும் பொருள்பட்டுக் காரணப் பெயராய்ச் சேற்றில்
தோன்றுகின்ற எல்லாப் பொருளுக்கும் பொதுமையாய் நிற்கவேண்டும். ஆயின் அச்சொல் சேற்றில்
தோன்றுகின்ற எல்லாப் பொருள்களையும் குறிக்காது தாமரையையே குறித்து நிற்கும். காரணப்
பெயராயினும் இடுகுறிப் பெயர் போன்று தாமரையையே குறித்து நிற்றலின் காரண இடுகுறியாகும்.
அதுபோலச் சித்தாந்தம் என்பதும் பற்பல சமயங்களின் முடிவுகளைக் குறிக்கக்கூடியதாயினும்
காரண இடுகுறியாய் முடிந்த முடிபாகிய சிவாகமங்களையே குறித்து நிற்கும்.
அங்ஙனமாயின்
மற்றைச் சைவரும் ஆகமங்களையே பிரமாணமாகக் கொண்டவராகலின் ஒரு சாரரே தமக்குறிமை கொள்ளல்
சாலுமோ என்னும் ஐயம் எழும். அஃதுண்மையாயினும் அவருள் ஒரு சாரார் ஆகமத்துள் விதித்தவைகட்கு
மாறுபாடானவைகளைப் போதிக்கும் பாசுபதம் முதலிய நூல்களைச் சிறப்பு பிரமாணமாகக் கொள்கின்றனர்.
எனவே அவர்கள் சைவாகமங்களைப் பரமப் பிரமாணமாகக் கொள்ளார். மற்றையோர் ஆகமங்களைப் பிரமாணமாகக்
கொள்ளினும் தத்தங் கொள்கைக்கேற்பக் காணப்படும் பகுதிகள் மாத்திரைக்கே பிரமாணங் கொண்டு
நுண்மைப் பொருளுணர்த்தும் பகுதிகளைக் கைவிடுகின்றனர். எனவே அவர்கள் ஆகமங்களை முழுமையாகப்
பிரமாணம் எனக் கொண்டினர். அதுபற்றி வேறுபடுத்துவது வேண்டப்படுவதாயிற்று.
மற்றைச்
சமயங்களினும் உயர்நிலையைக் காட்டச் சுத்தாத்துவிதம் என்ற அடை கொடுக்கப்பட்டது. அன்றியும்
மேலே சிவசம்பந்தமுடையோரே சைவர் என்றவழிப் பெறப்பட்ட சம்பந்தம் யாதோ வென்னும் ஐயமறுத்தலையும்
உடனாய்க் கொண்டு விளங்கும்.
அத்துவிதம்
என்ற சொல்லானது ந+துவிதம் என்ற இரண்டு சொற்களின் கூட்டமாகும். துவிதம் என்பது இரண்டென்பதை
விதந்து சொல்வது என்பதாகும். ஆயின் நகாரத்திற்கு ஆறு பொருள்கள் உண்டு.
1. இன்மை:
(அபாவம்) எடுத்துக்காட்டு: அச்ருங்க: மனுஷ்யா: இதன் பொருள் கொம்பில்லாதவன் மனிதன் என்பதாகும்.
மனிதனுக்கு யாண்டும் கொம்பின்மையின் இன்மைப் பொருளாகும்.
2. அன்மை:
(தத்ஸாத்ருச்யம்) அஃதாவது ஒருபுடை ஒற்றுமையும் ஒருபுடை
வேற்றுமையும் உடையது. எட்டு அநச்வம், குதிரை போன்றதாகியும் குதிரையினின்றும் வேறுபாடுடையது
கோவேறு கழுதை. எனவே அன்மைப் பொருள் பற்றி வருவது.
3. வேறு:
(ததந்யத்வம்): எ-டு:
அநாகாச: பூ: –
இதன் பொருள் பூமி ஆகாயத்தினும் வேறு. ஒப்புமை இல்லாமையின் அன்மைப் பொருளினின்றும் வேறாகக்
கொள்ளப்பட்டது.
4. குறைவு:
(ததல்பதா) எ-டு:
அநுதரா கந்யா. இதன் பொருள் வயீறுசிறுத்த கன்னி என்பதாம். வயிற்றின் இன்மையைக் காட்டாது
சிறுத்திருப்பதைக் காட்டுவதால் குறைவாகும்.
5. பெருமையோ அதிகமோ இன்மை: (அப்ரசஸ்த்யம்) எ-டு:
அமரா: தேவா:
இதன் பொருள் தேவர் மரணமில்லாதவர் என்பதாகும். மனிதர் போன்று கடுந்துயரும் இடையிடையே
நேர்வதாகிய சாக்காடும் அதிகம் இல்லாதவராகலின் ஒப்புமைக்கண் இல்லாமை போலத் தோன்றும்.
6. மறுதலை:
(விரோத:) எ-டு அபுண்யம். இதன் பொருள் புண்ணியத்தின்
எதிர்மறையாகிய பாவம்.
மேலே
கண்ட ஆறு பொருள்களுள்ளும் முக்கியமானவை மூன்று அவையாவன இன்மை, அன்மை, மறுதலி என்பனவாம்.
இவற்றுள் இன்மைப் பொருள் பற்றி மாயாவாதி முதலியோர்
இரண்டின்மை என்று பொருள் கொள்வர். இரண்டின்மை ஒஉர் பொருளின் மாத்திரையினன்றி இரண்டு
முதலியவாய் எண்ணப்படும் பொருள்களின் இல்லாமையின் அத்துவிதம் என்னுஞ் சொற்குப் பொருள்
ஒன்றென்பதாகும் என்பர். ஒஉர் பொருளாயினும் குணகுணி என வேற்றுமை தோன்ற நிற்பிற் கேவலம் ஒன்றாதலின்மையின் அத்துவிதம் என்ற சொல்
உபசாரமாய் முடியும் எனவே அத்துவிதம் என்பது தன்னின்வேறாய் ஒரு பொருளுமின்றித் தானுங்
குணமுடைப் பொருளென விசேடிக்கப்படுதலின்றி நிருவிசேடமாய் நிற்கும் பரப்பிரமப் பொருள்
ஒன்று என்பர். எனவே அவர் கேவலாத்துவிதிகள் என வழங்கப்படுவர். கேவலம் என்பது மாத்திரைப்
(merely) பொருட்டு.
இராமாநுசர்
சிவாத்துவிதி சைவர் முதலியோரும் அவ்வாறே இன்மைப் பொருள்பற்றி ஒன்றெனப் பொருள் கொள்வர்.
ஆயினும் பரப்பிரம்மப் பொருளுக்குச் சத்தி சங்கற்பம் முதலிய குணங்கள் உபநிடதங்களிற்
கூறப்பட்டு உள்ளன. அக்குணங்களைச் செயற்கை எனக் கூறுதல் பொருந்தாது. செயற்கை என்பது
வேற்றுப்பொருள்களின் சம்பந்தத்தால் வருமாகலின் ஒன்றென்பதோடு முரணும். அன்றியும் பசுபாசங்கள்
உண்டென்பதும் உபநிடதங்களிற் கூறப்படுகின்றன. எனவே அவற்றோடு முரணிக் கேவலாத்துவிதமெனக்
கோடல் பொருந்தாது. எனவே தன்னோடியைபுடைய பசு பாசங்களாலும் தன் குணங்களாகிய சத்தி சங்கற்ப
முதலியவற்றானும் விசேடிக்கப்பட்டு விசிட்டமாய் நின்ற பரப்பிரம்மம் இரண்டில்லை ஒன்றென்பதே
அத்துவிதம் என்ற சொற்குப் பொருள் என்பர். இவ்வாறு அவர் விசிட்டாத்துவிதங் கோடலின் விசிட்டாத்துவிதிகள்
என வழங்கப்படுவர்.
பேத
வாதிகள் மறுதலைப் பொருள் பற்றி இரண்டன் மறுதலையாகிய ஒன்றெனப் பொருள் கொள்வர். அங்ஙனங்
கொள்ளவே அவ்வொன்றன் மறுதலையாகிய இரண்டாவதும் உண்டென்ற்ற்கு இழுக்கின்மையின் அத்துவிதமென்பதும்
துவிதமென்னும் பொருளைப் பயக்கும் என்பர்.
எனவே
இவர்களெல்லோடும் அத்துவித மென்ற சொற்குப் பொருள் ஒன்றென்பதேயாம் எனக் கொண்டு தத்தம்
மதங்களோடு முரணாமைப் பொருட்டுக் கேவலமென்றும் விசிட்டமென்றும் மறுதலை யென்றும் அடை
கூட்டி இடர்ப்பட்டுப் பொருள் கொள்வர். அவருள் மாயாவாதிகள் கூறும் கேவலமும் பேதவாதிகள்
கூறும் மறுதலையும் சுருதிகளோடு முரணுகின்றன. ஏனையோர் கூறும் விசிட்டமென்பது பொருத்துமாயினும்
அத்துவிதமென்ற சொல்லுக்குப் பொருள் ஒன்றெனக் கோடல் பொருந்தாது. ஒன்றென்பது பொருளாயின்
ஒன்றெனவே விளங்கக் கூறலமையும். எனவே அத்துவிதம் எனவும் உய்த்துணரவைக்கும் பொருட்டுக்
கூறப்பட்டது என்பது பொருந்தாது.
அன்றியும்
“ஏகமேவாத்விதீயம்” என்னுமிடத்து ஒரே பொருளுள்ள இரு சொற்களையும்
சேர்த்துக் கூறுல் வெற்றெனத் தொடுத்தலாய் முடியும். கூறியது கூறலுமாம்.
மேலும்
மாயாவாதிகள் கூறுமாறு பொருள் ஒன்றேயாயின், அகப்பொருள் தன்னைத்தானே ஒரு பொருளெனக் கருதுதல்
மிகை என்னும் குற்றமாகும்.
அன்றியும்
ஏகமென்று சுட்டுவதுண்மையின், அவ்வாறு சுட்டிக் கூறும் பொருளும் அவ்வாறு சுட்டப்படும்
பொருளும் என இரண்டு பொருள் பெறப்படுதலின் ஒன்றே எனச் சாதித்தல் பொருந்தாது.
இன்னும்
எண்ணுப் பெயர்மேல் வந்த நகாரம் அன்மைப் பொருள் மாத்திரையே உணர்த்திப் பொதுமையின் நிற்கும்.
ஏனசிச் சொற்களின்மேல் வந்த நகாரம் இன்மை மறுதலைப் பொருள்களையும் உணர்த்தி நிற்றல் போல
எண்ணுப் பெயர்மேல் வந்த நகாரம் இன்மை மறுதலைப் பொருள்களையும் உணர்த்தி நிற்றல் வழக்கில்
இல்லை.
எடுத்துக்
காட்டாக ஏகம் என்ற சொல் நகாரத்தோடு கூடி அநேகம் என நிற்கும். அநேகம் என்ற சொல் ஏகத்தின்
இன்மையையோ மறுதலையையோ குறிக்காது. எனவே அது ஏகமல்லாததாய் ஏகத்தைத் தன்பாற் கொண்டிருக்கும்
பல என்னும் பொருள்பட நிற்கும், ஒற்றுமை ஏகத்தைத்தன்பாற் கொண்டிருத்தல். வேற்றுமை பலவாயிருத்தல்.
எண்ணுப் பெயர்மேல் வந்த நகாரம் இன்மை மறுதலை முதலிய பொருண்மேல் நிற்றற்கு உதாரணம் இல்லை.
அத்துவிதம் என்ற சொல்லையே கொள்வாம் என்றால் அது தன்னைப் பற்றுதல் என்னுங் குற்றமாகும்.
எனவே எண்ணுப் பெயர்மேல் வந்த நகாரம் அன்மைப் பொருள் மாத்திரையே உணர்த்திப் பொதுமையின்
நிற்கும் என்பது பெறப்படும்.
எனவே
அத்துவிதம் என்ற சொல் இரண்டன்று என வேற்றுமைப் படாமையைக் குறித்து நிற்கும். வேற்றுமைப்படாமையாவது
இது சிவப்பகுதி இஃது ஆன்மப் பகுதி எனப் பிரித்தறிய வாராத நிலை. எனவே ஒற்றிற்று நிற்றல்
பெறப்படும். தன்மையால் இரண்டாதல் வேற்றுமை. கலப்பால் ஒன்றாதல் ஒற்றுமை, “பிறிவரு மத்துவிதம்” என்பர் உமாபதி சிவாசாரிய சுவாமிகள்.
இதனால் இரு பொருள்களும் கலப்பால் ஒன்றாயும் தன்மையால் வேறாயும் உயிர்க்குயிராய்ச் செலுத்தலின்
உடனாதலும் பெறப்படும். இவ்வாறு அத்துவிதம் என்ற சொல் அன்மைப் பொருள் பற்றி மூன்றற்கும்
பொதுமையாய் நிற்கும்.
அதுபற்றித்
“தத்துவமசி” முதலிய மகா வாக்கியங்களைக் கேட்டவழி
அதுவென்பது ஒரு பொருள் நீ என்பது ஒரு பொருளாகலின், ஒரு பொருள் மற்றொரு பொருளாமாறு யாங்ஙனம்
என்னும் ஐயம் நீக்குதற்கு எழுந்ததாகக் கொள்ளப்படௌம். எனவே அது இதுவாதற்கு ஏதுவாய் அவ்விரண்டிற்குமுளதாகிய
சம்பந்த விசேடம் உணர்த்துதலே அத்துவிதம் என்னுஞ் சொல்லாற் பெறப்படும்.
இவ்வத்துவிதம்
ஏனையோர் கூறும் அத்துவிதம் போலக் கேவலமென்றாதல் விசிட்டமென்றாதல் மறுதலையென்றாதல் யாதானுமொன்றால்
விசேடிக்கப்பட்டு நின்று பொருள் உணர்த்தாது சுத்தமாய் நின்றே பொருளுணர்த்துதலிற் சுத்தாத்துவிதம் என வழங்கப்படும். ஈண்டுச் சுத்தமென்றது
யாதானுமொன்றான் விசேடிக்கப்படாது நிற்றலை. அது விசிட்ட சத்தை, சுத்த சத்தை என்னும்
வாய்ப்பாட்டானும் அறியப்படும். ஏனையோர் கூறும் அத்துவிதம் கேவல முதலியவற்றான் விசேடிக்கப்படாத
வழி அவர் கூறும் பொருள் தருதற்கு ஏலாமையின் அவையெல்லாஞ் சுத்தாத்துவிதமாகாமையும் அறியப்படும்.
அங்ஙனமாயின்
அத்துவிதமென்ற சொல்லாற் பெறப்படுஞ் சம்பந்தம் ஐக்கியமோ தாதான்மியமோ சமவாயமோசையோகமோ
சொரூபமோ என்னுங் கடா நிகழும்.
ஆற்று
நீரும் கடல் நீரும் தம்மிற் சேர்ந்தாற் போலவும், குடாகாயமும் மகாகாயமும் தம்மிற் சேர்ந்
ஈற் போலவும் ஐக்கியமெனின் அங்ஙனஞ் சேர்ந்த வழி ஒரு பொருளேயாகலின் ஒன்றெனவே அமையும்
அத்துவிதமென உய்த்துணர வைத்தல் வேண்டா.
குணகுணிகட்குத்
தம்மின் உளதாகிய சம்பந்தம் போலும் தாதான்மியம் எனின், ஆன்மா முதல்வனைப் போலக் குணிப்பொருளாய்
நிற்பதன்றி முதல்வனுக்குக் குணமாகாமையின் அவ்வாறு இயைதல் கூடாது. தாதான்மியத்தின் வேறாய்ச்
சமவாயம் என்பது ஒன்றின்மையின் அதுவும் பொருந்தாது.
விரலும்
விரலும் சேர்ந்து நின்றாற் போலச் சையோகமெனின், அவ்வியாப்பிய விருத்தியாகிய சையோகம்
வியாபகப் பொருள்களுக்குக் கூடாது.
யாதானுமோர்
இயைபு பற்றிக் கூறுப்படுஞ் சொரூபமெனின், அது மகாவாக்கியப் பொருளை வலியுறுத்துதற்கெழுந்த
அத்துவிதமென்னுஞ் சொற்குப் பொருளாக முடியது. அன்றியும் சொரூப சம்பந்த மாத்திரையான்
சிவாநந்தத்தை அநுபவித்தலும் இயலாது. இவற்றின் வேறாய் இன்னதென்றறிய வாராத அநிர்வசனமெனின்
அங்ஙனங் கூறுதல் வழுவாய் முடியும்.
ஆயின்
ஒரு பொருளே அவயவ அவயவிகளாயாதல் குணகுணிகளாயாதல் வேற்றுமைப்பட்டு இரண்டாய் நிற்றற் கேதுவாகிய
சம்பந்தமும், இருபொருளே ஒற்றுமைப்பட்டு ஒன்றாய் நிற்றற்கு ஏதுவாகிய சம்பந்தமுமெனத்
தாதான்மிய சம்பந்தம் இருவகைப்படும். அவற்றுள் முன்னையது தாதான்மியமென்றும், பின்னையது
அத்துவிதமென்றும் வழங்கப்படும். எனவே அத்துவிதமென்ற சொல்லியல்பு மேற்கூறியவாற்றான்
வேறு பொருள் தருமாறின்றி அன்மைப் பொருள் பற்றி இரண்டன்றென வேற்றுமைப் படாமையை விளக்கி
நிற்றல் தெற்றென உணரப்படும்.
இங்ஙனங்
கொள்ளாக்கால் முதல்வன் படைப்பு முதலிய ஐந்தொழில் செய்தல் தன் பொருட்டோ பிறர் பொருட்டோ
வீணோ என்னும் ஐயத்தை நீக்க இயலாதாய் முடியும்.
தன்பொருட்டெனின்
வரம்பில் இன்பமுடைய முதல்வனுக்கு இச்செய்கையான் வரக்கடவதோர் பயனில்லை. எனவே பயனற்ற
செயலாய் முடியும்.
உயிர்கள்
பொருட்டெனின் உயிர்களும் அவனும் அபேதமோ பேதமோ பேதாபேதமோ என்னும் வினா எழும். பொன்னும்
பணியும் போல் அபேதமாயின் அது தன் பொருட்டாய் முடியும். ஆகவே பயனற்ற செயலாய் முடியும்.
இருளும் வெளியும் போல் பேதமாயின் அவ்வுயிர்களின் பொருட்டு ஐந்தொழில் செய்தற்கு ஒருவாற்றானும்
இயைபில்லை. சம்பந்தமில்லாத ஒரு காரியத்தை மேற் கொண்டதாய் முடியும் சொல்லும் பொருளும்
போற்பேதாபேதமெனின் அபேதமும் பேதமுமாம் என்றன் சமணர் கூறும் அநேகாந்த வாதமாய் முடியும்.
பேதமும் அபேதமும் மறுதலையாகலின் நீரும் நெருப்பும் போல ஒருங்கே கூடா. சொல்லும் பொருளும்
வேறேயாயிலும் சொல்வந்தெழலும் பொருள் தோன்றுதல் பற்றி அபேதமென்பார் மதத்தை ஒருவாற்றான்
உடம்படினும் பேதா பேதம் என்னுந் துணையேயன்றி ஒரு பொருட்டு இரண்டு தன்மை கோடல் பொருந்தாமையின்
போலியாய் முடியும். இங்ஙனமாகலின் பிறர் பொருட்டென்பது கூடாது.
இனி
அவ்வாறன்றி வீணெனின் பித்தர் செய்யுந் தொழிலோடொக்கும். பித்தரன்றி அறிவான் முதிர்ந்த
அரையர் முதலியோரும் வேட்டையாடுதல் சூதாடுதல் உயிர்த்தல் இமைத்தல் ஆவித்தல் தும்முதல்
முதலிய வீண் தொழில் செய்யக் காண்டலின் முதல்வனும் அவ்வாறு கொன்னே செய்தல் அமையும் என்பார்
சிலர்.
அங்ஙனம்
கூறின் வேட்டையாடுதல் புலி முதலிய விலங்குகள் மிக்கு நாடு நலியாமைப் பொருட்டாதல், தனக்கு
மடிமை வாராமை முதலியவற்றின் பொருட்டாதல் உணவின் பொருட்டாதல், பொருளீட்டற் பொருட்டாதல்
யாதானுமொரு பயன் குறித்தே செய்யப்படுகின்றது. சூதாடுதல் வஞ்சனையாற் பகைவரை வெல்லுதற்கு
உபாயமறிதற் பொருட்டாதல் பணையம் பேசிப் பொருளீட்டற் பொருட்டாதல் யாதானுமொரு பயன் கருதிச்
செய்யப்படுகின்றது. உயிர்த்தல் உயிர் நிலையின் பொருட்டாகும். இமைத்தல் விழியைப் பாதுகாத்தற்
பொருட்டாகும். ஆவித்தல் தும்முதல் தங்குறிப்பினறிக் காரணத்தான் நிகழும். இளஞ்சிறார்
செய்யுஞ் சிறுதேருருட்டல் சிற்றி விழைத்தல் முதலிய விளையாடற்றொழிலும் போர்முகத்தில்
தேர் நடாத்துதல் அட்டிற்றொழில் வன்மை முதலியன சோபான முறையிற் பயிலுதற் பொருட்டு இருமுதுகுரவர்
முதலியோராற் செலுத்தப்பட்டு நிகழ்தலின் அவை அப்பெரும் பயனுடையவாய் அவ்விளமைப் பருவ
மாத்திரையின் மகிழ்ச்சி மீதூர்தலாகிய அற்பப் பயனும் உடையன. எனவே அவையெல்லாம் வீண்தொழிலன்மையின்
வீண் தொழிலெல்லாம் பித்தர் முதலியோர் செய்யும் தொழிலேயாய் அமையும்.
இங்ஙனமாகலின்
ஐந்தொழில் செய்வோன் முதல்வன் என்றல் இலக்கண வழுவாம் என்று ஆசங்கை நிகழ்ந்தவழி அதனை
நீக்கிப் பொருளால் வேறாயினும் கலப்பினால் அவையேயாம் இயல்புடைமையின் தன்னோடு சம்பந்தமுடைய
உயிர்களின் பொருட்டே முதல்வன் ஐந்தொழில் செய்வன் என ஐயமறுத்தலின் அச்சம்பந்தப் பொருளின்
உயர்ச்சியும் பொருத்தமும் நன்குணரப்படும்.
சிவபெருமானைப்
புகழ்ந்து பாடுங்கால் திருஞான சம்பந்தப் பெருமானும் ‘ஈறாய்’ எனத் தொடங்கும் செய்யுளில்
இவ்வாறு கலப்பால் அவையேயாயும் பொருளால் வேறாயும் அறிவிக்குங்கால் உடனாயும் நிற்றலையே
விதந்து பாடியருளினார்.
இறுதலைச்
செய்யுங் கடவுளை ‘ஈறு’ என்றார். சங்காரக் கடவுளைக் குறித்து நிற்கும். முதல் என்றது
தோற்றத்தை. சிருட்டிக் கடவுளைக் குறித்து நிற்கும். ஒன்றென்றது ஈறு முதல் என்றமையின்
சங்காரம் சிருட்டி முதலியவற்றைச் செய்யும் கடவுள் ஒருவரோ பலரோ என்னும் ஐயமறுத்தற் பொருட்டு.
இரட்டுற மொழிதல் என்னும் உத்தியான் ஒப்பற்றவர் என்பதும் கொள்ளப்படும். ஒன்றாய் என்பதன்கணுள்ள
ஆய் என்பது முதல் என்பதனோடுங் கூடும். எனவே ஈறாய் முதலாய் ஒன்றாய் என நிற்கும். இம்மூன்றும்
வேறாய் என்பதைத் தடத்த நிலையில் வைத்து விளக்கப்பட்டன.
இரு
பெண் ஆண் என்றது “அவ்வப் பிறப்புக் கியைய வடிவங்களெல்லாம்
ஒத்துக் குறிகுணங்களான் ஒவ்வாது இருவேறு வகைப்பட்ட ஆணும் பெண்ணும்” எனப் பொருள்படும். “ஒத்தொவ்வா ஆணும் பெண்ணும்” (சூ: 1 – செய்: 69)
என்பார் அருணந்தி சிவாசாரிய சுவாமிகள் பெண் ஆண் என்பன சகல நிலையில் பசுக்களைக் குறித்து
நின்றன. பெண்ணை முதற்கண் வைத்தது வடமொழிமதம் பற்றி.
குண
மூன்றாய் என்றது ஆன்மாக்களால் (பசுக்களால்) உணரப்படும் பிரகிருதி மாயா காரியமாகிய
சத்துவம் இராசதம் தாமதம் என்னும் முக்குணங்களை. மறை நான்காய் என்றது முக்குணம் பற்றி
ஆன்மாக்களால் அறியப்படும் நான்கு வேதங்களை மாறா என்றது கருத்தா இறைவனாகலின் எஞ்ஞான்றும்
ஒரு தன்மைப்பட நிற்றலைக் குறித்தது. பூதம்மவை ஐந்தாய் என்றது பிருதிவி, அப்பு, தேயு,
வாயு, ஆகாயம் என்ற ஐம்பூதங்களை. பூதம்மவை என்றது விரிக்கும் வழிவிரித்தல். அவை என்றது
பகுதிப்பொருள் விகுதி. வருதலாவது தோற்ற முறைக்கண் தத்துவங்களுள் இறுதிக்கண் தோன்றுதலைக்
குறித்து நிற்பது. குணமூன்றாய் மறை நான்காய் பூதமைந்தாய் என்பவை ஏற்றபெற்றி பற்றி மூன்றுகுணமாய்
நான்கு மறையாய் ஐந்து பூதமாய் என மாற்றிப் பொருள் கொள்ளப்படும்.
ஆறார்
சுவை என்றது ஆறு என்னும் எண்ணோடு கூடுகின்ற இனிப்பு, கைப்பு, உவர்ப்பு, துவர்ப்பு,
கார்ப்பு, புளிப்பு என்னும் சுவைகளை. ஏழோசை என்றது ஏழாகிய குரல், துத்தம், கைக்கிளை,
உழை, இளி, விளரி, தாரம் என்னும் சுரங்களை. “ஏழிசையாய்” என்பார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். எட்டுத்
திசை என்றது கிழக்கு முதலிய எட்டுத் திசைகளை. திசை ஒன்றேயெனச் சாதிப்பாரை மறுத்தற்
பொருட்டு எட்டுத் திசை எனக் கூறினார் என்பதும் சாலும்.
தானாய்
என்பதன்கணுள்ள தான் என்பது சிவபெருமானைக் குறித்தது. தான் என்னும் ஒருமை சிவபெருமானையும்,
தாம் என்னும் பன்மை ஆன்மாக்களையுங் குறிக்குங் குறியீடாகக் கொள்வது சித்தாந்த மரபு.
“தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணர்வார்” என்பார் மெய்கண்டதேவ நாயனார். திருஞானசம்பந்தப்
பெருமானும், “அங்கயற்கண்ணி தன்னொடுமமர்ந்த ஆலவாய்” எனச் சிவபெருமானைக் குறித்தே அருளினார்.
ஏற்ற பெற்றி பற்றித்தான் என்பது பெண்ணான் முதலியவைகளோடு கூட்டிப் பொருள் கொள்ளப்படும்.
இரு பெண்ணான் முதல் எட்டுத் திசை இறுதியாகவுள்ள (அவையே) தானாய் நிற்றலை விளக்கும் பொருட்டுக்
காட்டப்பட்டன.
ஆன்மாக்களே
சத்தோடு கூடிச் சத்தாயும் அசத்தோடு கூடி அசத்தாயும் நின்றுணர்வன. ஆயினும் உணர்த்த உணரும்
சிற்றறிவின. எனவே ஈறாய் முதலாக எட்டுத் திசை இறுதியாகவுள்ள எல்லாப் பொருள்களையும் உணர்தற்கு
உடனின்று உணர்த்துவோன் இறைவனாகலின் உடனானான் என்றார். “காணுங் கண்ணுக்குக் காட்டுமுளம் போற்
– காணவுள்ளத்தைக் கண்டு காட்டலின்”
என்பார் மெய்கண்டதேவ நாயனார்.
எனவே
அச்செய்யுளின் பொழிப்பாவது சங்காரக் கடவுளாயும் முதற்கடவுளாயும் ஒப்பற்ற பொருளாயும்
இவ்வாறு பொருளால் வேறாயும். இனி இரு வகைப்பட்ட பெண் ஆணாயும், மூன்று குணமாயும் நான்கு
வேதமாயும் ஐம்பூதமாயும் ஆறு சுவையாயும் ஏழிசையாயும் எட்டுத்திசையாயும் இவ்வாறு கலப்பால்
எல்லாப் பொருள்களும் தானாயும், இனி ஈறு முதல் எட்டுத் திசை இறுதியாகவுள்ள சத்து அசத்து
என்னும் பொருள்களை அறியுமிடத்து உடனின்று உணர்த்துமுகத்தான் உடனாயும் (இவ்வாறு
மூன்றற்கும் பொதுவாய்) விளங்கும்
சிவபெருமான் விரும்பி உறையும் திருத்தலம் திருவீழிமிழ்லை என்னும் பதியாகும் என்பதாம்.
இவ்வாறு
மூன்றற்கும் பொதுமையாய் நிற்றலைக் கூறிச் சிவபெருமானின் உயர்ச்சியைச் சிறப்பாக அருளியுள்ளார்.
ஒன்று முதல் எட்டிறுதி எண்களைப் புணர்த்திக் கூறினமையின் எண்ணலங்காரமாம்.
இனி
மூன்றற்கும் பொதுமையாய் நிற்றல் என்றமையானே அநேகாந்த வாதமாகுமோ என்னும் ஐயமறுக்கப்படும்.
அவ்வாறு ஏகாந்த வாதமாதலை மெய்கண்ட தேவ நாயனார் உவமை முகத்தான் வலியுறுத்தும் உதாரணமாவது
அரக்கொடு சேர்த்தி யணைத்தவக் கற்போ
லுருக்கி யுடங்கியைந்து
நின்று – பிரிப்பினறித்
தானே யுலகாந்
தமியே னுளம்புகுதல்
யானே யுலகென்ப
னின்று (சூ – 2. அதி – 2)
என்பதாகும்.
அரக்கை
உருக்கி அதனோடு சேர்த்து அணைத்த அக்கற் பொடி அவ்வரக்கினோடு ஒன்றாய் ஒருங்கியைந்து நீக்கமின்றி
நின்றாற்போல முதல்வன் உயிர்கலின் ஒருங்கு கூடி நின்று நீக்கமின்றி உடனாம் என்பது கருத்து.
அங்ஙனமாயின்
வாமதேவ முனிவன் யானே உலகமாயினேன் என்றதும் கண்ணன் யானே உலகமெல்லாம் என்றதும் முரணுமே
எனின் அற்றன்று. சோஹம் பாவனையான் வேற்றுமையின்றித் தோன்றுங்காரணத்தான் வாமதேவ முனிவன்
முதலாயினோர் யானே உலகமாயினேன் என்றனர். இவ்வொற்றுமை பற்றியன்றே அருச்சுனற்குக் கீதை
நூல் செவியறிவுறுத்திய கண்ணன் யானே உலகமெல்லாம் என்று கூறியதும். முதல்வனது விச்சுவரூபத்தைத்
தான் காட்டியதும், ஏனையவற்றைக் கைவிட்டு என்னையே வழிபடுக என்றதும் அதனை உறுதியாகக்
கொண்டேன் என்ற அருச்சுனன் அவன் கூறிய கருத்துணர்ந்து சாகும் வரை சிவபூசை செய்ததும்,
கண்ணன் மேலிட்டபோதுகள் முதல்வன் திருவடிமேற் கண்டதும் பொருந்துமாறு அறியப்படும். கண்ணன்
உபம்ன்னியு முனிவன்பாற் சிவதீக்கை பெற்றுத் தன்னையும் தலைவனையும் உணர்ந்தோனாதலிற் சிவோஹம்
பாவனை தலைப்பட்டோனாதல் பெறப்படும்.
இவ்வாறே
முத்திநிலைக்கண்ணும் மற்றைச் சமயத்தாரின் கொள்கைகளைத் தன்னுள் அடக்கி மற்றையோர் கொள்கைக்கு
மேம்பட்டிருத்தல் இதுகாறுங் கூறியதுபற்றி உணரப்படும்.
இவ்வாறு
அத்துவிதம் என்னும் சொற்பொருள் பற்றி மற்றைச் சமயத்தார் கூறுவனற்றைப் பூருவபக்கமாகத்
தன்னுளடக்கி நிற்றலும் அதுபற்றி அநேகாந்த வாதமாகாது ஏகாந்தவாதமாய் அமைந்து நிற்றலும்
நாட்டப்படும்.
இது
காறுங் கூறியவாற்றான் “சுத்தாத்துவித
சித்தாந்த சைவம்” என்பது “சுத்தாத்துவிதப் பொருளைக் கைக்கொண்ட சைவாகமத்தைப்
பின்பற்றிய சிவசம்பந்த முடைய (உண்மைச்) சமயம்” என்பதாகும்.
சிவம்.
No comments:
Post a Comment