Saturday, January 30, 2016

சிவமயம்

ஷேக்ஸ்பியரும் சைவ சித்தாந்தமும்

சேக்கிழார் அடிப்பொடி T. N. ராமச்சந்திரன், B. Com., B. L.,
அட்வொகேட், தஞ்சாவூர்

[சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)

பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
         
        சைவ சித்தாந்தம் வல்ல சகமுணர் சான்றோராகும்
       மெய்வளர் சுவீடன் பாதர்க்கும் மேதகு ஹாய்சிங்டன்னும்
       பொய்தபு புலமை போப்பும் போற்றுகெளதி ஷோமாரசும்
       மையறு மோக்ஷமூலர் மாக்நிகோல் பார்னெட் மார்ஷல்

       என்றசர் ஜானும் என்ற குட்விலும் மில்டனாரும்
       ஒன்றிய சகப்பிரி யன்னும் ஓங்குமேல் நாட்டாரோடு
       நன்றறி புலமை சான்ற நம்பியாம் நல்லசாமி
       துன்றிய ரமண சாஸ்திரியும் துதி எனது ஏற்பாராக.

      சொற்களின் மர்மங்களை உணர்ந்த மஹான்கள் உதிர்க்கின்ற சொற்கள் வஜ்ர சரீரம் உடையன. இவற்றை சாதாரண வ்யாக்யாங்கள் ஊடுருவ மாட்டா. இவற்றின் பொருளை அனுபூதிமான்கள் மட்டுமே உணர்வர். அங்ஙனம் அனுபூதிமான்களால் உணர்ந்து இவை உரைக்கப்பட்டாலும், உரைக்கபட்டனவற்றையும் உணர்வதற்கு அனுபூதி தேவைப்படும். அனுபூதி இன்றி, அறிவுத் திறம் மட்டுமே கொண்டு அச்சொற்கள்மீது படை எடுத்தல் பயன் பயவாத வெற்றுச் செயலாகி ஒழியும். பெற்ற அறிவே இடையூறாக மூண்டு குறுக்குச் சுவராகப் படர்ந்துவிடும்.
      
   கற்றபின் அதற்குத் தக நிற்றலே நெறியாகும். இதைத் தான் மகாகவி பாரதியார் யான் கற்ற கல்வி எல்லாம் பலிக்கச் செய்தான் என்ற வாசகத்தில் சூசிப்பிக்கின்றார். பலித்த நிலையில் கற்பனவும் இனி அமையும்.
      ஆணவமலம் சிவணிய ஆன்ம நிலையை, பொற்காசுப் புலவர் இப்படி வருணிக்கின்றார்.
         
         ……. செய்கை ஒன்றறியேன்
       சிறுமை மடமை சினம் பொய் காமம்
      விலங்குகள் வாழும் வேட்டைக் களமாய்
       வெறியாட்டயரும் வேதனையல்லால்
       உலைத்திடும் நெஞ்சத்து ஒலி சிறிதேனும்
       ஒட்டுவதுண்டோ உற்றதிங் கிருளே!

      இவ்விருளை அருள்தான் கடிய முடியும். அருளைப் பெற்றால்தான் செற்றில் என் செஞ்சாந்து அணியில் என் என்று பேச முடியும். இச்சமநிலை பெற்றார் அரியதில் அரியர். அவ்வரியாரே வழிபத் தக்கவர். ஆகவே ஷேக்ஸ்பியர் கூறுகிறார்.
                A man that fortune;s buffets and rewards
            Hath ta’en with equal thanks; blest are those
            Whose blood and judgment are so well commingled
            That they are not a pipe for Fortune;s finger
            To sound what stop she please. Give me that man
            That is not passion’s slave, and I will wear him
            In my heart’s core ay, in my heart of hearts.

      வீதி தந்த தாக்குதல்கள், மற்றவ்விதியே தந்த வெகுமதிகள் (buffets and rewards of Fortune) அனைத்துமே சரிநிகர் சமானமான உள்ளமொடு (hath taken with equal thanks)  கொள்ளுங்கள் இருக்குமிடம் யாதோ?

            வேட்டபடி வீதி ஊதும் குழலாக மாறாமல் உணர்வும் அறிவும் கலந்த அத்துவிதக் கலவையாய் (whose blood and judgement are so well commingled), திகழுமவன் இருக்கும் இடம் யாதோ ராக வீராகங்களுக்குக் கொத்தடிமையாகாமல் (not passion’s slave) ஒளிரும் ஒரு புருடன் இருக்குமிடம் யாதோ?

      அன்னானைக் காட்டிதி. (show me that man) என் இதயம் அவன் சிங்காதனமாம் என் உள்ளார்ந்த ஆனந்தப் பொந்திடை வைத்தவனைப்பேணுவன். I will wear him in my heart’s core, ay, in my heart of hearts.
      குலக்குமரா! காடுறையப் போ என்று தசரதன் தன் தனயனிடம் சொன்னான்.

                தாதை அப்பரிச்ய் உரை செயத்
              தாமரைக் கண்ணன்
       காதல் உற்றிலன்; இகழ்ந்திலன்
              ‘கடன் இதுஎன்றுணர்ந்தும்
       ‘யாது கொற்றவன் ஏவியது
              அது செயல் அன்றோ
       நீதி எற்கு என நினைந்தும் அப்
              பணி தலை நின்றான்.
       பாதகங்கள் செய்திடினும் கொலை களவு கள்ளுப்      
              பயின்றிடினும் நெறியல்லா நெறிபயிற்சி வரினும்
       சாதிநெறி தப்பிடினும் தவறுகள் வந்திடினும்
              தனக்கென வோர் செயலற்றுத் தான் அதுவாய் நிற்கில்
       நாதன் இவன் உடல் உயிராய் உண்டுறங்கி நடந்து
              நானா போகங்களையுந் தானாகச் செய்து
       பேதமற நின்றிவனைத் தானாக்கி விடுவன்.
                                                       அந்த அம்மையப்பன்.

      இதுவே வேறின்மை காணப்பெறுதல் என்று விதந்து ஓதப்படும். அணுவாகிவிட்ட ஆன்மாவிற்கு, இவ்வேறின்மையை நல்குதற்கேமஹத்அருள் உள்ளம் கொண்டுள்ளது.
      
     இதற்காக,
                அவையே தானே யாய்இரு வினையில்
       போக்கு வரவு புரியஆணையின்
       நீக்கம் இன்றி நிற்கும் அன்றே.

      இங்ஙனம் ஆன்மாவோடு இறைவன் கொண்டுள்ள உறவை அத்துவிதம் என்ற சொல் கொண்டு, ஆன்றோர் துலக்குகின்றனர். முன்னம் யாம் மொழிந்தது போல இந்த அத்துவிதம் என்ற சொல்லும் வஜ்ர சரீரம் கொண்ட ஒரு சொல்லாம். இதன் பொருளை ஷேக்ஸ்பியர் தரும் வெளிச்சத்தில் காண முனைவோம்.
      
    “ என்பதும் துவைதம் என்பதும் சேர்ந்து அத்வைதம் என்று ஆகியிருக்கிறது.
      
   நஞ்ஞுக்கு, சாமியம்இன்மைபேதம்சிறுமைஇழிவுமறுதலை, என்னும் ஆறு பொருள்கள் உண்டு. இது சப்தகற்பதுருமம் நுவலும் செய்தி.
      
  சாமியம்சாதிருசியம் என்பன ஒரு பொருட்சொற்கள். இவற்றிற்குச் சரியான தமிழ்ச் சொல் அன்மை என்பதாகும்.
     
  மேலே கூறப்பட்ட ஆறு பொருள்களுக்குள்ளே நஞ்ஞுக்கு, ஏகான்மை வாதியரால் இன்மைப் பொருளும், மத்துவர்களால் பேதப் பொருளும், சிவாத்துவிதிகளாலும், சைவசித்தாந்திகளாலும் சாமியப் பொருளும் கொள்ளப்படுகின்றன. சாமியப் பொருளே அன்மைப் பொருளில் செல்வதாகும்.
                
     “நஞி வயுக்த மந்ய சதிருசாதி கரணே
       ததாஹ்யார்த்த கதி:
     
   என்னும் பாரிபாஷேந்துசேகர இலக்கணத்தால் இது உணரப்படுகின்றது என்பர் காசிவாசி செந்தில்நாதஐயர் அவர்கள். இந்த பரிபாஷையை விளக்க வந்த ஐயர் கூறுவதாவது
      
   “அநசுவத்தைக் கொணர்கஎன்று தேவதத்தனுக்கு யஞ்ஞதத்தன் ஆஞ்ஞாபிக்குங்கால், தேவதத்தன் (அநசுவம்)அதாவது குதிரை அல்லாதது மண்ணாங்கட்டியும் ஆகலாம் என்று கொண்டு, அம்மண்ணாங்கட்டியை எடுத்துக் கொடுப்பான் அல்லன், பின், குதிரை அல்லாததாயும்அதாவதுகுதிரையுடன் பேதப்பட்டதாயும், எனினும் குதிரை செய்யவல்ல பணி செய்ய வல்லதாயும், அந்தக் குதிரையின் தோற்ற முதலியன ஒருவாறு ஒப்பதாயும், அதாவது, அபேதமாயும் உள்ள கோவேறு கழுதையை கொணர்ந்து விடுவன் எனப் பொருள் கொள்ளப்படும்.

      இங்ஙனம் வேறாயும், வேறு அன்மையாயும் இருக்கும் அன்மைப் பொருளே சைவ சித்தாந்திகளால் அத்துவிதத்தில் உள்ள அசுரத்துக்குப் பொருளாகக் கொள்ளப்படுகின்றது. மேலே கூறப்பட்ட ஆறு பொருள்களில், முதற் கண் நிற்கும் பொருள் இதுவே. சாமியம் என்றும், சாதி ருசியம் என்றும், அன்மைப் பொருள் என்றும் பேசப்படும் இப்பொருளிலேயே இது விளக்கப் படுகின்றது. பதஞ்சலி மஹாபாஷ்யகாரும் அன்மைப் பொருளையே எடுத்து ஆண்டிருக்கின்றார் என்று கூறுகிறார் ஐயர். இந்த சாமியப் பொருளே முண்டக உபநிடதத்திலும் கொள்ளப்படுகின்றது என்றும் அவர் அறிவிக்கின்றார்.

      யஜுர் வேதமும், சுவேதாசுவதர உபநிடதமும், ஏகோ ருத்ரோ நதுவிதீயாய தஸ்து: (உருத்திர்    ஒருத்தரே; அவர் அத்துவிதீயராய் இருந்தார்) என்று பேசுகின்றன. மேலும், அத்துவிதம் என்ற சொல்லே பிறிது காரணம் வேண்டாமல் முதல்வன் உயிர்களோடு பிரிப்பின்றி நிற்றலை உணர்த்தி நிற்கும். இச்சொல் பிரிவு அற்றதான அரிய ஒருமையை உணர்த்தும் திறன் உடையது. இதை பிரிவு அரும் அத்துவிதம் ஆகும் சிறப்பினது என்பர் உமாபதி சிவாசாரியார்.

      அத்துவிதம் என்ற சொல்லில் வருகின்ற அகரம். அன்மைஇன்மைமறுதலை என்கின்ற மூன்று அர்த்தங்களை உணர்த்த வல்லதாகும் இதற்கு நூலாசிரியர்கள் அப்பிராமணன், அமலம், அநீதி என்கிற மூன்று சொற்களை உதாகரிக்கின்றனர். இவற்றுள் அப்பிராமணன் என்னும் சொல், பிராமணன் அல்லாத ஏனையோரைக் குறிக்காது. ஆனால் பிராமணானாயிருந்தும் பிராமணத்தன்மை இல்லாமையைக் குறிக்கும். இங்கு அகரம் அன்மைப் பொருளில் வந்ததைக் காணலாம்.

      அமலம் என்ற சொல்லில் உள்ள அகரம் அடியோடு மலத்தன்மை இல்லாமையைக் குறிப்பதாகும். இங்கு அகரம் அபாவமாம் இன்மைப் பொருளில் வந்து. அபோஜனம் என்பது உணவின் அபாவம் என்பர் ஐயர். அதாவது அபோஜனம் என்பது உபவாசம் என்ற பொருள் தரும். உணவு இன்மை இங்கு கொள்ளப்பட்டது.

  அகரம் மறுதலைப் பொருளில் வருங்கால் அதர்மம் என்பது தருமத்துக்கு மறுதலையாகிய பாவம் எனப் பொருள்படும். அநீதி என்பது நீதியின் மறுதலை. இதை விளக்கபடும். அநீதி என்பது நீதியின் மறுதலை. இதை விளக்க வந்த John H Piet, “The one (நீதி) means “righteousness” and the other “aniti” (அநீதி) unrighteousness. One is the exact opposite of the other. This idea is used in English in such words as typical and atypical, where the “a” stands for the contrary idea. Atypical is not a mere negation of typical but a positive statement in which the presence of variant qualities is postulated.” 

  Piet அவர்கள் மறுதலைக்கு ஆங்கிலத்தில் உதாரணம் தந்தார், அன்மைக்கும், இன்மைக்கும் அவர் எந்த உதாரணமும் தரவில்லை. இன்மைக்கு இணையாக “amoral’ என்ற சொல்லைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது. Amoral does not mean immoral; it only means non-moral.

   அன்மைக்கும் ஆங்கிலத்தில் ஒர் உதாரணம் காண்பம். +துவைதம், அத்வைதம் ஆனாற்போல +நாமம், அநாமம் ஆயிற்று. நாமம் என்ற வடசொல்லுக்கு இணையான இலத்தீன் சொல் nomen என்பதாம். இங்கு அநாமம் என்பது anomen என்று நிற்கும். இதனடியாகப் பிறந்ததே anonymous என்ற சொல்லாம். அனாமதேயம் என்பதில் வருகின்ற அகரம் அன்மைப் பொருளில் வருவதாக எமக்குத் தோன்றுகிறது.

      அன்மைப் பொருளுக்கான விளக்கத்தை இன்னம் சற்று ஊன்றிக் காண்பம். துவிதம் என்பது எண்ணுப் பெயர். It refers to number. துவிதம் என்னும் எண்ணுப் பெயருக்கு முன் அகரம் எய்தி, அத்துவிதம் என்று நிற்குங்கால், அது இன்மை, மறுதலைப் பொருள்களில் நிற்காமல் பொதுமையில் நிற்கும். இதை ஒர் உதாரணம் கொண்டு விளக்கலாம்.

   என்னிடம் இரண்டு மாங்கனிகள் இல்லைஎன்று நான் சொன்னால், இதற்குப் பின்வருமாறு பல பொருள்கள் கூறலாம்.

1.     என்னிடம் மூன்று, நான்கு முதலிய அநேக மாங்கனிகள் உள.
2.     என்னிடமிருப்பது ஒரு மாங்கனியே.
3.       என்னிடம் மாங்கனியே இல்லை. அதாவது, என்னிடம் ஒரு மாங்கனி கூட இல்லாததால் இரண்டு மாங்கனிகள் இல்லை.

ஆகவே, இரண்டில்லை என்றால், இருக்கும் மாங்கனி ஒன்றுதான் என்று வரைவு படுத்திப் பொருள் கொள்ளுதற்கு இடம் இல்லை. ஆகவேதான் J. M. நல்லசாமிப் பிள்ளை அவர்கள், “Advaita means non-dualism and not monism” என்று கூறினார். ஆகவே, ஏகான்ம வாதிகள், அத்துவிதம் என்பதற்கு இன்மைப் பொருள் கூறி ஒன்று என்பதும் மத்துவர்கள் மறுதலைப்பொருள்கூறி இரண்டு என்பதும் ஒவ்வாதாம். அத்துவிதம் என்ற சொல் மாத்திரையானே, ஒரு பொருள் என்று கொள்ளுதல் பொருத்தமுடைத்தன்று.

தானே தன்னை ஒன்று என்று கருதவும் வேண்டுமோ? வேண்டாம். வேண்டாமையின், அவ்வாறு கருதும் பொருள் வேறு உண்டு என்று பெறப்படுகின்றது.
                ஒன்று என்றது ஒன்றே காண்; ஒன்றே பதி, பசுவாம்
             ஒன்று என்ற நீ பாசத்தோடு உனை காண்

என்பது மெய்கண்டார் அருள் வாசகம்.

      கடவுளோடு ஆனமா கொண்டுள்ள உறவு பேத, அபேத, பேதா பேதங்களில் ஒன்றாம் என்று பொள்ளுகின்றனர் சிலர்.

        மத்துவர் கொள்கை பேதம்.
       சங்கரர் கொள்கை அபேதம்.
       இராமாநுஜர் கொள்கை பேதாபேதம்.
       மெய்கண்டார் கொள்கை யாது?

       புறச்சமயத்தவர்க்கு இருளாய், அகச்சமயத்து ஒளியாய்
              புகல் அளவைக்கு அளவாகி பொன்பணிபோல் அபேதப்
       பிறப்பிலதாய், இருள்வெளிபோல் பேதமும், சொல் பொருள் போல்
              பேதா பேதமும் இன்றிப் பெருநூல் சொன்ன
       அறத்திறனால் விளைவதாய் உடல் உயிர், கண், அருக்கன்,
              அறிவு ஒளி போல் பிறிவரும் அத்துவிதமாகும்
       சிறப்பினதாய் வேதாந்தத் தெளிவாம் சைவ
              சித்தாந்த திறன்இங்குத் தெரிக்கல் உற்றாம்.

சிவப்பிரகாசம் செப்பும் செய்தியிது.

      மாயா இயந்திர தனுவினுள் இயங்குகின்ற ஆன்மா சுதந்திரஹீனன் ‘அதாவது, ஒரு செயலைச் செய்வதற்கோ’ அல்லது செய்யாமல் இருப்பதற்கோ, ஆன்மாவிற்குச் சுதந்திரம் இல்லை என்பதில்லை இதன் பொருள். வினை தொழில், கருமம் செய்ய, ஆன்மாவிற்குச் சுதந்திரம் உண்டு. இதை “Soul is the mistress of her choice” என்று ஷேக்ஸ்பியர் கூறுவார். ஆனால் வினையைச் செய்த பிறகு, வினை விளைவை புசிக்காமல் இருப்பதற்கு அதற்குச் சுதந்திரம் இல்லை.

      சத்தும் அசத்தும் சிவணிய சதசத்து நிலையே ஆன்மநிலை. இது சார்ந்ததன்  வண்ணமாய் இருக்கும். பாசத்தால் பந்திக்கப் பட்டிருப்பதால், இதற்குச் சுதந்தரி ஹீனம் ஏறப்ட்டுள்ளது. பாசப்பட்டுக் கிடப்பதாலே ஆன்மா பசு என்று பேசப்படுகிறது. ஒன்றே பதி என்ற மெய்கண்டார், ஒன்று என்ற நீ பாசத்தோடு உளை காண்என்றும் அருளியுள்ளார். பாச நீக்கத்திற்குத் தரப்பட்டதே பதி வழிபாடு. அந்நியம் இன்மை உணர்தலே அரன் கழல் அடைதற்கான உபாயம்.

      தன்னை நேசிக்கும் பசுவை, பதியும் நேசிப்பன். நேயத்தே நிற்கும் நிமலன் அவன். தாள் நயந்த தலைவியை தோள் நயக்கும் தலைவன் காதலிப்பன். இந்தக் காதல் இரு திறப்பட்டதாகவே இருக்கும். அன்பெனும் பிடியில் அகப்படும் மாமலையாம் இறைவனை பக்தபக்திமான் என்று பாகவதம் பேசும். இந்த நேசத்தை ஷேக்ஸ்பியர் வாசகம் கொண்டு.
      “So they loved as love in twain”  என்று வருணிக்கலாம்.

                கிடந்த கிழவியைக் கிள்ளி எழுப்பி, உடந்தையுடனே நின்றும்
          எட்டுக் கொண்டார் தமைத் தொட்டுக் கொண்டே நின்றும்
     
ஆன்மா செயல்பட்டு வந்தால், சித்தமும் கரணமும் சித்திலே ஒத்துப்போம். தற்போதம் தொலைந்து, சிவ போதம் தலைப்படும். இந்நிலையை,

“So they loved as love in twain,
Had the essence but in one.”

என்று ஷேக்ஸ்பியர் வாசகம் தெளிவு படுத்தும்.

     கண்டத்தைக் கொண்டு கருமம் முடித்த ஆன்மாவிற்குப் பிண்டத்தில் வேலையில்லை. அத்துவிதத் தித்திப்புக் கலப்பு அதற்குச் சித்தித்துவிடும். என்றாலும், முக்தியிலுங்கூட மும்முதல் உள என்னும் சைவ சித்தாந்தம். முக்தி நிலையிலும் பதி, பதிதான்; பசு, பசுதான். அப்படியாயின் இப் பசு, பதி கலப்பை எப்படித்தான் பேசுவது? இது அத்துவித கலப்பு என்று மட்டுமே பேசப்படும்.

      அத்துவிதம் என்னும்சொல் தானே, வேறு காரணம் வேண்டாது வேறன்மையை உணர்த்தி நிற்கும். வேறன்மை does not mean non-difference; but only non-separateness. இந்நிலையை ஷேக்ஸ்பியரைப் போல் துல்லியமாக விளக்க வல்லார் யாரும் இல்லை போலும்! அவர் கூறுவதாவது :-

      “Two distincts; division none.”

      திருவாளர் நல்லசாமி பிள்ளை கூறும் வாசகத்தையும் உடன் வைத்து ஓதுவோம்.

      “The word (advaita) does not mean one, or non-existence of two or more, but is used to express the peculiar relation that exists between two distinct things which can become one.”

            இவ்விருவர் மரபில் வருகின்ற நாம் கூறுவதாவது :-

      Advaita relationship is not of one oneness; but one of oned togetherness. It is losing oneself in a togetherness.

            ஷேக்ஸ்பியர் பாஷையில் வருணிப்போம் :-

            “Thou and I am one”.
            Advaitam postulates a unity, a union despite differences.

            பிள்ளை அவர்கள் கூறுவதாவது :-

            “Though in all these cases, an identity is perceived, a difference in substance is also felt. It is this relation which could not be easily postulated in words, but which may perhaps be conceived, and which is seen as two (Dvaitam) and at the same time as not two (Advaitam). It is this relation which is called advaitam, ‘a unity in duality’ and the philosophy which postulates it, the Advaita Philosophy.”
   சைவ சித்தாந்தத்தின்படி அத்துவிதம் என்பது ஓர் உறவு. ஆன்மா அத்துவிதப்பட்டிருப்பது கேவல நிலையிலும், சகல நிலையிலும், முத்தி நிலையிலும் ஆன்மா பூண்டிருப்பது அத்துவித உறவே. கேவல, சகல நிலைகளில் ஆன்மா ஆணவ மலத்தோடு கட்டுண்டு கிடக்கும். ஆணவ மலம் என்பதை the ancestral blindness of the soul என்று வருணிக்கலாம். ஆணவ மலத்தோடு கூடியிருப்பதோ, பிரிந்திருப்பதோ ஆன்மாவின் சுதந்திரத்திற்கு விடப்பட்ட விஷயம். Soul is the mistress of her choice. இருட்பாவையாம் ஆணவ மலத்தின் சக்தி பலதிறப்பட்டது. மாசறு காட்சி வேட்கின்ற ஆன்மாவே, இருளைக் கடக்க எண்ணம் பூண்டு செயல்படத் தொடங்கும். வள்ளுவர் பெருமானும்

                இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
            மாசறு காட்சி யவர்க்கு

என்று அருளியுள்ளார். தவராஜ யோகியரான தாயுமானவர்,

              ஆணவத்தோடு அத்துவிதம் ஆனபடி மெய்ஞ்ஞானத்
           தாணுவினோடு அத்துவித மாகுநாள் எந்நாளோ? என்றார்.
     
      தாயுமானவர் என்ற சொல்லைக் கவனியுங்கள். தாயும் ஆனவர் என்பதே அத்துவித நிலைதான்.

      அத்துவிதம் என்று சொல்லுக்குப் பொருள் ஒன்றா, இரண்டா என்றால், ஒன்று என்றோ, இரண்டு என்றோ, ஒன்றும் இரண்டும் இன்று என்றோ சொல்ல முடியாது. ஆகவேதான் ஒன்றகாமல் இரண்டாகாமல் ஒன்று மிரண்டுமாகாமல் என்றிந்நிலையை சர்வ ஜாக்ரதையுடன் பேசுகிறார் அருள்நந்தி சிவாசார்யர்.

      அத்துவிதம் என்ற சொல்லை எண் என்ற சிறையில் இருத்தி வைக்க முடியாது. ஏகம், இரண்டு என்னாமல் சும்மாயிரு என்கிறார் ஒழிவிலொடுக்க ஆசிரியர். கேட்பான் புகில் அளவில்லை கிளக்க வேண்டா என்ற ஆளுடைய பிள்ளையார் மரபில் வந்தவர் அவர். ஆகவே ஏகம், இரண்டு என்னாமல் சும்மாயிரு என்றார் அவர்.

  ஏன் அங்ஙனம் சும்மா இருத்தல் வேண்டும் என்பதற்கான காரணங்களை ஷேக்ஸ்பியரிடம் தெரிந்து கொள்ளலாம். எண் என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை என்பதே ஷேக்ஸ்பியரின் சித்தாந்தம். 

        “Two disntincts, divison none
            Number there in love was slain”
     
எண் என்பது இங்கு மாண்டு போகிறது; இல்லை, இல்லை, கொலையுண்டு போகிறது.
      தந்தது என் தன்னை கொண்டது உன் தன்னை என்பதை அடியொற்றிச் சொல்லுமா போலே, “Either was the other’s mine” என்கிறார் ஷேக்ஸ்பியர்.

      பதியினைப் போல் பசு, பாசங்களும் அநாதி. ஆகவே பாசத்தை அறவே ஒழித்தல் என்பது இல்லை. பாச க்ஷயமே உண்மை. பாச க்ஷயம் ஏற்பட பசுத்வம் நசுக்கப்படும். அதாவது பொருளுக்குப் பண்டு இருந்த தன்மை நசுக்கப்படுகிறது. இதை “Property was thus appalled” என்று பேசுகிறார் ஷேக்ஸ்பியர். Property என்பது பொருளின் விசேஷகுணம்.

      பசுபோதம் நீங்கப் பெற்ற ஆன்மா, புதிய ஆன்மா, இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற மஹாகவி பாரதியாரின் வாசகம் பொருள் பொதிந்தது. என்னைப் புதிய உயிராக்கி என்று அவர் வேண்டுவார். பழையது கழிய புதிது பிறக்கும்.

      “Property was thus appalled that the self was not the same” என்பது ஷேக்ஸ்பியரின் கூற்று.

      இந்த அத்துவிதம் ஒன்று என்றோ, இரண்டு என்றோ பேசப்படாது. பின் எப்படி? ஷேக்ஸ்பியர் கூறுகிறார்.

      “Single nature’s double name
        Neither two nor one was called.”

      மதியில்லார் இதை ஆராயத் தலைப்பட்டால் இடருற்று, தட்டுண்டு, மாழாந்து போவர். “Reason, in itself confounded” என்பதே ஷேக்ஸ்பியர் வாசகம். பதி, பசுக்கள் இரண்டாக இருந்தன. அத்துவிதத்தில் இரண்டற்றநிலை. என்றாலும் பசு பதியாகிவிடவில்லை. பதி பசுவாகிவிடவில்லை. அப்படியோர் பேரதிசயக் கலப்பு.

            “Reason in itself confounded
            Saw division grow together
            To themselves yet either neither
            Simple were so well compounded”

என்பதே ஷேக்ஸ்பியர் கண்டுணர்ந்த காட்சி.

      இரண்டாக இருந்த பொருள்கள் ஒன்று போல் ஆகிவிட்டன. ஒன்றுபோல் தோற்றம் என்பதே ஷேக்ஸ்பியர் தரும் குறிப்பு.

                “How true a twain
               Seemeth this concordant one!”

இந்தக் கலப்பே அத்துவிதக் கலப்பு.

      பெத்த நிலையில் முதல்வன் உயிராய் ஒற்றுமைப்பட்டு நிற்பதும் முத்தி நிலையில் உயிர் சிவமாய், ஒற்றுமைப்பட்டு நிற்றலும் அத்துவித சம்பந்தம். இதன் நுணுக்கத்தை அகக் கண் ஒரு பதினாயிரம் உடையார் என்று கவிவாணர் கோலரிட்ஜால் போற்றப்படும் ஷேக்ஸ்பியர் மிக அழகாகக் காட்டியுள்ளார். இந்த அத்துவித கலப்பு காலாதீதமானது. ஆகவே, “To eternity doth rest” என்றிதை ஷேக்ஸ்பியர் விளக்குகிறார்.

      பாசத் தோற்றத்துக்குத் தொடக்கம் இல்லை, என்றாலும் பாச க்ஷயத்திற்குத் தோற்றம் உண்டு. அந்த வகையில் பாசத்திற்கு முடிவு உண்டு. முக்திக்குத் தோற்றம் உண்டு ஆனால் அதற்கு முடிவில்லை. இதை, the soul’s state of bondage has no beginning; but has an end, while the soul’s spiritual freedom has a definite beginning, but no end என்பார் ரமண சாஸ்திரிகள்.

      ஆகவே அத்துவித முத்தி காலம் கொன்ற விருந்து காண்!

            “To eternity doth rest” என்பது ஷேக்ஸ்பியரின் தரிசனம்.

சைவ சித்தாந்தம் வாழ்க! ஷேக்ஸ்பியர் வாழ்க!!


சிவம்

No comments:

Post a Comment