Sunday, January 3, 2016

அந்தம் ஆதி
க. வச்சிரவேல் முதலியார் பி. ஏ. எல். டி. காஞ்சிபுரம்

[சிவஞான பூஜா மலர் – துந்துபி ஆண்டு - (1982)

பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      இத்தொடர் சிவஞானபோதம் முதற்சூத்திரத்தில் மூன்றாம் அடியில் வருகின்றது. அச்சூத்திரம், ‘அவன் அவள் அது எனும் அவை மூவினைமையின் தோற்றிய திதியே; ஒடுங்கி மலத்துளதாம்; அந்தமாதி என்மனார் புலவர்’ என்பது.

      இவ்வுலகத்தொகுதி அவன் என்றும்,அ வன் என்றும், அது என்றும் இவ்வாறு, இன்னது என்று சுட்டியறியப்படுவதாய் இருத்தலின், தோற்றம் நிலை இறுதி என்னும் மூன்று நிலை வேறுபாடு உள்ள பொருளே ஆகும். ஆதலால் அது தானே அவ்வேறுபாடுகளை உடையதாகாமல், ஒருவனால் தோற்றுவிக்கப்பட்ட (அவ்வாறே மறைக்கப்படும்) உள்பொருளே ஆகும். (திதி என்னும் சொல் இச்சூத்திரத்தில் உள்பொருள் என்னும் பொருளைத் தருவதாகக் கொள்ளப்படுகிறது.) அது அவ்வாறு புலப்பட்டுத் தோன்றும் போது, தான் ஒடுங்குதற்கு இடமாக நின்ற முதற்பொருளை இடமகாக் கொண்டு அதனினின்றும் அதன் நினைவாற்றலால் புலப்பட்டுத் தோன்றும். (இங்கே ஒடுங்கி என்றது தான் ஒடுங்குதற்குக் காரணமாய் நின்ற சங்காரக் கடவுள் என்னும் பொருளில் உள்ளது.) உலகத்தைத் தன்கண் ஒடுங்கும்படிச் செய்து அநாதி முத்த சித்துருவாய் நிற்கும் போது வேறு ஒரு பொருளும் அந்நிலையில் இல்லாமையினாலே அந்தத்தைச் செய்யும் கடவுளை உலகிற்கு முதலாகவும் உளன் என்று ஆராய்ச்சி அறிவில் வல்ல புலவர்கள் சொல்லி வருகிறார்கள். இது அச்சூத்திரத்தின் பொருள்.

      சிவஞான போதம் என்பது எல்லா வேதங்கள் சாரமாகத் தமிழில் மெய்கண்டார் என்னும் பெரியார் 13-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் செய்த நூல். இது பிரமம் சூத்திரம் என்னும் வியாச சூத்திரத்தின் சாரமாய் உள்ளது என்று உணர்தல் வேண்டும். வேதாந்த சூத்திரம் எனப்படும் வியாச சூத்திரம் நான்கு அத்தியாயமும், ஒவ்வொரு அத்தியாயமும் நந்நான்கு இயல்களை உடையதாய், மொத்தம் 545 சூத்திரங்களை உடையது. அவற்றில் முதல் இரண்டு சூத்திரங்கள்.

      1.     அதாதோ பிரம்மஜிஞ்ஞாஸா [(இனி ஆகலின் பிரம்மத்தை அறிய ஆசை (கொள்)].
   2.    ஜந்மாதி அஸ்ய யத (இதற்குத் தோற்றம் முதலியன எங்கிருந்து?) என்பவை.

      இவற்றில் இரண்டாவது சூத்திரப் பொருளைச் சிவஞான போதம் தெளிவுபடுத்திச் சொல்லுகிறது. இதற்கு (அஸ்ய) என்றது காணப்படும் உலகிற்கு என்றபடி. ஜந்மாதி என்றது ஜந்மம் முதலியன எனக் குறித்து, தோற்றம், நிலை, இறுதி என்னும் முத்தொழிலையும், அவற்றை இன்னும் விரித்து உணரும் போது கிடைக்கும் தோற்றம், நிலை, இறுதி, மறைப்பு, அருள் என்னும் ஐந்து நிலைகளையும் குறிப்பது.

      அந்தம் ஆதி என்னும் தொடர் அந்தமே ஆதி எனப் பரிநிலை ஏகாரம் தொக்கதாகக் கொள்ளப்படுகிறது. அந்தத்தை (முடிவை)ச் செய்யுங் கடவுளை அந்தம் என்றார். ஆதி என்பது முதல் எனப் பொருள்படும், அச்சொல் முதலாக உள்ள கடவுளைக் குறிக்கின்றது. முதல் திருமுறை 11-ஆம் பதிகமாகிய சிவபுரத் தேவாரத்தில் திருஞான சம்பந்தர் மும்மூர்த்திகளையும், சிவபூசை, சிவயோக, சிவ ஞானம் என்னும் சாதனங்களையும் முறையாகக் குறிப்பிடுகின்றார். அவற்றில் மூன்றாவது பாட்டில் சங்காரத்தைச் செய்யும் கடவுளைக் குறிக்கும் போது ‘அவையவை, முழுவதும் அழிவகை நினைவொடு முத உரு, இயல் பரன்’ எனக் குறிப்பது நினைவில் வைக்கத் தக்கது. முத்தொழிலைக் கொள்ளவும் போது, பிரமனுக்குச் சிருட்டி மாத்திரம் கொண்டு, காத்தற் கடவுளைக் குறிக்கும் போது காத்தல், மறைத்தல் (ரோதயித்திரி) என்னும் இரண்டையும் அடக்கி, அழிக்குங் கடவுளைக் குறிக்கும் போது சங்காரம், அருளல் என்னும் இரி தொழிலையும் அடக்குதல் காணப்படுகிறது. ஆதலால் முதல் உரு எனச் சங்காரமே முதல் என வற்புறுத்துவதைக் காணலாம். அரி அலால் தேவியில்லை ஐயன் ஐயாறனார்க்கே என்னும் திருநாவுக்கரசர் தேவாரமும் பொருள்படுத்தி உணரத்தக்கது.

      முதல் திருமுறையில் 4-வது திருப்பதிகத்தில் 4-வது திருப்பாட்டில் ‘ஏக பெருந்தகையாய பெம்மான்’ என்றதும், முதல்வனை மும்மூர்த்திகளாக உபாசிக்கும் நம்மாழ்வாரும் ‘ஒளிமணி வண்ணன் என்கோ’ எனத் தொடங்கும் திருவாய் மொழியில் ‘ஒருவன் என்று ஏத்த நின்ற நளிர்மதிச் சடையன் என்கோ…கண்ணனெம் மாயனையே’ என்றதை எண்ணும் போது பிறவாயாக்கைப் பெரியோனை சுவேதா சுவதர உபநிடதம் மூன்றாம் அத்தியாயம் 2-ஆம் மந்திரம் ஏகோஹிருத்ரோ நத்விதீயாயதஸ்து என்றபடி ஏகன் அத்விதீயமாய் நிற்பவன் எனவும், ‘சத்தாம் அறிவறியாமெய்சிவன் தாள் ஆம்’ எனத் தமிழ்ச் சிவஞான போதம் 6-ஆம் சூத்திரம் 2-ஆம் அதிகரணம் உதாரணச் செய்யுள் கூறியுள்ளபடி சத்துப் பொருளாகவும் கொள்வது பெரியோர்கள் மரபாக உள்ளது எனக் காணலாம்.   
      

No comments:

Post a Comment