உ
சிவமயம்
நற்குஞ்சரக்கன்று
“சித்தாந்த
சிகாமணி”
க. வடிவேலாயுதனார். எம். ஏ.
[சிவஞான பூஜா மலர் – துன்மதி ஆண்டு -
(1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S.
வேங்கடேச
சர்மா, மேலமாம்பலம்,
சென்னை – 600 033]
எந்தச்
செயலைத் தொடங்கினாலும் முழு முதற் கடவுளை நினைத்துத் தொடங்குதல் சான்றோர் மரபு தொடங்கும்
செயல் இடையூறு இல்லாமல் முற்றிலுமாக நிறைவேற இறையருள் இன்றியமையாதது என்பது நம்நாட்டு
ஆன்றோரது அசைக்க முடியாத நம்பிக்கையாகும். ‘நம்பினோர் கெடுவதில்லை’ என்ற பழமொழிப்படி
அத்தகைய சிறந்த நம்பிக்கையோடு ஆரம்பமாகும் காரியங்கள் இறுதியில் நல்ல முடிவையே எய்தும்.
நம்
சைவ சமயத்தில் விநாயகப்பெருமானை எல்லோரும் வழிபட்ட பின்பே எந்த வினையையும் தொடங்குவர்.
அவரையே கணபதி என்றும் கணேசர் என்றும் பிள்ளையார் என்றும் பல காரணங்கொண்டு போற்றி வழிபடுவர்.
சிவ பெருமானின் மூத்தபிள்ளையாக அவரை நினைத்து ஆராதனை செய்வர். அவருக்கும் சிவபெருமானைப்
போலவே முக்கண் உண்டு.
திருவலிவலம்
என்ற தலத்திலுள்ள சிவபெருமானை வழிபடுகின்ற திருஞானசம்பந்தப் பெருமான், கணேசர் யானை
முகம் கொண்ட வரலாற்றைத் தம் தேவாரத்தில் பின் வருமாறு குறித்தருளியுள்ளார்: -–
“பிடியதன் உருஉமை கொள்மிகு
கரியது
வடிகொடு
தனதடி வழிபடும் அவர்இடர்
கடிகண
பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர்
பயில்வலி வலமுறை இறையே”
மிக்க
வள்ளல் தன்மையே வடிவாகக் கொண்ட நல்லவர் வாழும் திருவலிவலத்தில் வீற்றிருக்கும் எம்
இறைவன் (தன்
சங்கற்பத்தாலே) உமை ஒரு பெண் யானையின் வடிவம் கொள்ளத்
(தான்)
மேம்பாடுள்ள ஆண் யானையின் வடிவங்கொண்டு தன் திருவடியை வழிபடும் அடியார்களுக்கு வரும்
இடையூகளையெல்லாம் போக்கிய அருளும் கணபதி (யானைமுகக்கடவுள்)
அவதரிக்குமாறு அருள் செய்தான். அடியார்களின் இடர்களைக் களைவதே இறைவனின் திருவுள்ளம்.
அதில் குறை நேராதிருக்குமாறு அதற்கென்றே தனது அம்சமான ஒரு மூர்த்தியையும் தந்து அருள்
செய்துள்ளான் இறைவன்.
திருவருட்பயன்
என்ற ஞான சாத்திரத்தை அருளிய சந்தானாசாரியருள் நான்காமவரான உமாபதி சிவாசார்ய சுவாமிகள்
திருக்குறளைப் போலவே அதனைச் செய்தளித்துள்ளார்கள். அந்த நூலில் திருக்குறளின் யாப்பு,
எண்ணிக்கை அமைப்பு, சொற்பொழிவு ஆகியவற்றைப்பயன் படுத்தியுள்ளார்கள். திருக்குறள் நூல்
நாற் பொருள்களில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்றையும் கூறுகிறது. திருக்குறளை நிறைவு
செய்வார் போல, இறைவன் கருணையால் மட்டுமே எய்தக் கூடிய ‘வீடு’ என்னும் நான்காம் பொருளைப்
பற்றி தமது திருவருட்பயனில் நூறு குறள் வெண்பாக்களில் கூறுகிறார்கள். தம்நூல் இனிது
நிறை வேற விநாயகப் பெருமானைக்குறித்துக் கூறும் காப்புச் செய்யுள் மிகச் சுவையுடையதாக
உள்ளது.
‘நற்குஞ் சரக்கன்று
நண்ணிற் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று
காண்.’
என்பது அக்குறள் வெண்பாவாகும்.
நல்லருளைப்
பொழிவதும் யானைமுகத்தைப் போன்றதுமான பிரணவத் திருமுகத்தையுடையவரும் எப்பொழுதும் இளமையுள்ளவருமாகிய
விநாயகக் கடவுளைப் பொருந்தி வழிபடுவாராயின் (ஒருவருக்கு)
ஞான சாத்திரம் வருந்திக்கற்க வேண்டிய பண்டம் அன்று என்பதே திரண்ட பொருளாகும்.
நூல்
இனிதே முடிவு பெற மங்கலச் சொல்லாகிய ‘நல்’
என்ற பொருள் பொதிந்த சொல்லை முதற்கண் வைத்தார் ஆசிரியப்பெருந்தகை. யானைக்குப் பல பெயர்கள்
உண்டாயினும் ‘குஞ்சரம்’ என்ற தொடரை ஈண்டுப்பயன்படுத்தியதற்கு
ஒரு சிறந்த உட்பொருள் இருக்க வேண்டும். குஞ்சரம் என்ற சொல்லிற்கு வானத்தில் திரிவது
என்பது பொருள் ஆகும். நமது மனத்தைக் காடாகக் கூறுவது ஒரு மரபு.
‘தன்றோணன்கி னொன்று கைம்மிகூஉங்
களிறு
வளர் பெருங்காடாயினு
மொளி
பெரிது சிறந்தன் றளியவென் னெஞ்சே,
என்ற
பழம் பாடலில், ‘களிற்று முகத்தான்’ திரியும்
பெருங்காடாக நமது மனம் குறிக்கப் பெற்றுள்ளது ஒப்பு நோக்கத்தக்கது.
உலகத்து
யானைகளைப் போல அடைந்தோர்க்குத் துன்பம் செய்யாமலும், கிழத்தன்மைப்பட்டு நீங்மாலும்,
அறிந்தறிந்து பாகனையே கொல்லாமலும், நீங்காமலும், அறிந்தறிந்து பாகனையே கொல்லாமலும்,
அடைந்தோர்க்கு இன்பம் செய்தலும், என்றும் இளமையாய் இருத்தலும், பாகன் ஒருவனை வேண்டாதிருத்தலும்
விநாயகராகிய யானையின் இயல்பு என்பதனை, ‘நற்குஞ்சரக்
கன்று’ என்ற சொற்றொடர் உணர்த்துகின்றது.
அறிவின்மையும்,
மயக்கமும், இருளும், நிறைந்து நம் மனத்துள், ‘நல்குஞ்சரக்கன்று’
வருமாயின் அம்மனம் அத்தீய குணங்களின் நீங்கி ஒளியுடையதாகும். அதனோடு ஞானமும் பெறும்
விநாயகரை ‘ஞானக்கொழுந்து’ என்று திருமூலர்
திருமந்திரத்துள் போற்றியுள்ளது இங்கு நினைவு கூரத்தக்கதாம்.
‘ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின்
இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி
மகன்றனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில்
வைத்தடி போற்றுகின் றேனே’
ஞானம்
எப்பொழுதுமே இளமையாக இருக்குமேயன்றி அதற்கு என்றுமே மூப்பில்லை. ஞானத்தின் வடிவே சிவ
பெருமான். அதனால் அப்பெருமான் அருளிய மதலையை ‘குஞ்சரக்கன்று’
என்று சிறப்பித்துள்ளார். நம்முடைய மனமாகிய வனத்திலே முதன்முறையாக விநாயகராகிய யானையை
உலவ விட வேண்டும். அவ்வாறு அக்குஞ்சரவாரணம் நம் பெருமுயற்சியின்றித்தானாகவே நம் மனத்துள்
தங்க நினைக்குமாயின் நாம் பெறும் பேற்றைச் சொல்லவும் வேண்டுமோ?
‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற மணிவாசகனாரின்
அருள்வாக்குப்படி அவன் அருள் இல்லாமல் நாமாகவே நம் மனதில் அவனை எண்ணி உளத்துள் இருக்கச்
செய்தல் அரிய செயலாகும். விநாயகரது எளிதில் அருளும் தன்மையை மனத்துள் நினைத்தே ‘நண்ணின்’ என்ற பொருள் நிறைந்து வினைச் சொல்லை
உமாபதி சிவசாரிய சுவாமிகள் பயன்படுத்தியுள்ளார்கள் போலும், பூசைகளுள் விநாயகர் பூசை
யாவரும் எளிதில் முயன்று பயன் பெறத்தக்கதாம். அதனாற்றான் போலும் எங்கும் விநாயகர் கோயில்கள்
நிறைந்திருப்பதைக் காண்கிறோம். மற்ற மூர்த்தங்களை வழிபட்டு அவ்வளவு எளிதாகப் பயன் கொள்ள
இயலாது. கடின முயற்சியும் அருஞ்சாதனைகலும் அங்குத் தேவைப்படலாம்.
அவ்வாறு
விநாயகப்பெருமான் நம்உள்ளத்தே நண்ணிய அளவிலேயே கலைஞானங்கள் எல்லாம் எளிதில் கைகூடும்.
கலைஞானம் என்ற தொடர் மேற்போக்காக நோக்கும் போது எல்லாக் கலைகளையும் குறிக்குமாயினும்,
நிரம்ப அழகிய தேசிகர் என்ற உரையாசிரியர் வேதகம்
புராண முதலிய கலைகள் யாவும் என்று குறித்துள்ளமை சிந்தனைக்கு உரியதாகும்.
உலகியற்
கல்வி இன்றியனையாததாயினும் அவ்வறிவொன்றே முத்தியினைப் பயவாது. வாலறிவனின் தூய குணவியல்புகளை
உணர்த்தும் அருள் நூல்களின் தெளிந்த அறிவே வீடு பேற்றிற்கு அவசியமான சாதனமாகும். இதனையே
திருவள்ளுவர்.
‘கற்றதனால் ஆயபயன் என்கொல் வால்அறிவன்
நற்றாள்
தொழாஅர் எனின்.’
‘பிறப்பு
என்னும் பேதைமை நீங்கச் சிறப்புஎன்னும்
செம்பொருள்
காண்பது அறிவு’
என்ற குறட்பாக்களில் விளக்கியுள்ளார்.
விநாயகப்பெருமான்
அருள் நோக்கு நமக்கு இருக்குமாயின் உயர்ந்த ஞானத்தை எளிதில் பெற முடியும் என்பதைத்
தெளிவாக்கவே கலைஞானம் கற்கும் சரக்கன்று
என்ற தொடரை அருளியுள்ளார். வருந்திக் கற்கும் தேவையில்லாமல் விநாயகர் அருள். அரும்பொருள்களை
எளிதில் உணரச் செய்யும் தன்மையது என்று அவரது செளலப்பிய குணத்தைத் தெளிவாக்கியுள்ளார்.
விநாயகர்
வழிபாட்டின் பயனை அவரவர் அநுபவித்துக் கண்டால் தான் விளங்கும் என்று தெரிவித்தற்பொருட்டே
ஞானசிரியர் முடிவிலே ‘காண்’ என்று ஆணையிட்டு
அருளியுள்ளார்.
முடிவாக
ஞானக்கொழுந்தாகிய விநாயகர், வெளியே ஞானசாத்திர வடிவாக நின்று, சிவ சிந்தனையை முதலிலே
நமக்கு உண்டாக்கி, அப்பால் அகத்தே சிவாநுபவ விளைவுக் குரியவராக உதவிகின்றார் எனத் தெளிதல்
வேண்டும்.
சிவம்.
No comments:
Post a Comment