Wednesday, December 23, 2015

கம்பன் காட்டிய கண்ணுதல் கடவுள்
வித்துவான் பெ. கு. வரதராசன் M . A., B. O. L, B. T.
கிருஷ்ணகிரி
 [சிவஞான பூஜா மலர் – துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
      உலகில் அழியாது என்றுமுள்ள பொருள்கள் மூன்று என வேதாகமங்கள் கூறுகின்றன. அவை இறைவன், உயிர், தளை என்பனவாம்.
                                சான்றவர் ஆய்ந்திடத் தக்கவாம் பொருள்
              மூன்றுள மறையெலாம் மொழிய நின்றன
              ஆன்றதோர் தொல்பதி; ஆருயிர்த் தொகை
              வான்றிகழ் தளையென வகுப்பர் அன்னவே.
                                                              - கந்தபுராணம்.
     
இவற்றுள் உயிர் இறைவனால் படைக்கப்பட்ட பொருளொன்று. இலது உள்ளதன்று; உளது இலதாகாது. இதனைச் சத்காரிய வாதமென்பர். இதுதான் நமது சைவசமயத்தின் உண்மை.
அற்பமான துன்பச் சேற்றில் ஆணவ இருளில் ஆன்மாக்கள் கட்டுண்டு அறிவின்றிக் கண்ணில்லாக் குழந்தைகள் போல் கிடந்தன. இறைவன் தனக்கேவுரிய அளப்பருங் கருணையால் உயிர்கட்கு உடம்பையும், உடம்பில் உள்ள கரணங்களையும், உலகத்தையும் உலக நுகர் பொருள்களையும் உண்டாக்கி வழங்கினான். குளிரால் நடுங்கும் ஒருவனுக்குச் சட்டை தருவது போலவும், கண்ணில்லாத ஒருவனுக்குக் கோல் தருவது போலவும் ஆகும்.
                       காரிட்ட ஆணவக் கருவறையில் அறிவற்ற
              கண்ணிலாக் குழவியைப் போல்
              கட்டுண்டிருந்த வெளியில் விட்டு
                                                       - தாயுமானவர்

      ஆகவே இறைவன் என்று உள்ளானோ அன்றே உயிர்களாகிய நாமும் இருக்கின்றோம்.
      ‘என்று நீ, அன்று நான் உன்னடிமையல்லவோ’ – தாயுமானவர்
      எல்லா நாட்டவரும் இறையென்று வணங்குகின்ற பரம்பொருள் சிவம். வள்ளுவர் செம்பொருள் என்பார்.
                                தெய்வம் சிவமே; சிவனருள் சமயம்
              சைவம் சிவத்தொடு சம்பந்தம் என்றான்.
                                                       - சிற்றம்பல நாடிகள்.

      சைவம் எல்லாச் சமயங்கட்கும் தாயகமாகவும் நாயகமாகவும் விளங்கும் ஒப்பில்லாத உண்மைச் சமயமாகும்.
            ‘அரிது அரிது மானிடராதல் அரிது’
                                                - ஒளவையார்.
அவ்வாறு பிறப்பதிலும் மக்கள் வாழும் நாட்டில் பிறப்பது அரிது. அதனினும் அரிது தெய்வம் உண்டு என்னும் நம்பிக்கையுடைய இந்திய நாட்டில் பிறப்பது அரிது. அதனினும் அரிது சிவத்தை வழிபடும் சைவ மரபில் பிறப்பது அரிது.
                                நரர்பயில் தேயந்தன்னில் நான்மறை பயிலா நாட்டில்
              விரவுதல் ஒழிந்து தோன்றில் மிக்கபுண் ணியத்தானாகும்
              தரையினில் கீழைவிட்டுத் தவஞ்செய் சாதியினில்வந்து
              பரசம யங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொணாதே.
                                                       - சிவஞானசித்தியார்

                                வாழ்வெனும் மையல்விட்டு வறுமையாஞ் சிறுமை தப்பி
              தாழ்வெனுந் தன்மையோடுஞ் சைவமாம் சமயஞ்சாரும்
              ஊழ் பெறல் அரிது
                                                       - சிவஞானசித்தியார்
     
இத்துணைச் சிறப்புப் பெற்ற சைவ சமயத்திலே நல்லூழ் வழிப் பிறந்தவரே கம்பர். ஏகம்பர் என்பது காஞ்சியிலே எழுந்தருளியிருக்கும் சிவபெருமானின் திருநாமம். முதல் குறை அல்லது மருஉ என்ற இலக்கண விதிப்படி ஏகம்பர் தான் கம்பர் ஆனார். சுந்தரமூர்த்தி சுவாமிகளும், அப்பர் அடிகளும், ஞானசம்பந்தப் பெருமானும் கச்சிக்கடவுளைக் கம்பன் என்றே குறிப்பிட்ட பாடல்களும் தேவாரத்துள் பல உள்ளன.
உவச்சர்குலம் - காளி கோயில் பூசாரி – கம்பரது தந்தையார். கம்பரை ஆதரித்த வள்ளலோ சடையப்பர். சடையன் என்பது சிவபெருமானைத் தான் குறிக்கும் என்பதை மறுப்பார் எவர்? கம்பரது ஒரே மகன் அம்பிகாபதி – சிவபெருமானுடைய திருப்பெயர்களுள் ஒன்று. இவ்வாய்வு கம்பர் சைவக் குடும்பத்தைச் சார்ந்தவர் என்பதை உறுதி செய்வதாகும்.
எனின் கம்பர் ஏன் வைணவக்காதையை எழுதினார் என்ற ஓர் ஐயந்தோன்றுவது இயல்பே. பூனை பாற்கடலை நாவால் சுவைத்துக் குடிக்க விரும்புவது போல் இராம காதையை எழுத வேண்டும் என்ற ஆசையால் தொடங்கினேன் என்கின்றார். இது கம்பர் கூற்று. இராமாயணம் எழுத ஆசை காரணமாயிற்று. இவ்வாசை கம்பருக்கு சமயக் காழ்ப்பில்லை என்பதைத் தான் வலியுறுத்துகின்றது. அன்றிச் சைவத்தில் ஈடுபாடில்லை என்ற முடிவிற்கு வருதல் அன்று.
சைவத்தையும், வைணவத்தையும் சிறிதும் வேறுபாடு இன்றிப் பேசும் சமரசக் கவி – கல்வியில் பெரியனன்றோ? காவியத்தலைவன் இராமனை உயர்த்திக் காட்டுகின்றார். சிவனையும் திருமாலையும் ஒன்றாகக் கருதிச் சிறப்பாக மதிக்கும் புலவன் காவியத் தலைவனைப் பாராட்டுவது காவிய மரபாகும். மரபு கெடாவண்ணம் சிவபெருமானையும் புகழ்ந்து பேசும் இடங்கள் ஏராளமுண்டு. சிவனையும், சிவ பெருமானது அரிய செயல்களையும் இராமகாதை முழுதும் காணலாம்.
சிவபெருமானைக் கதைப் போக்கில் கூறுவதைக் காட்டிலும் கதாப்பாத்திரங்களின் வாயிலாக அறிமுகப்படுத்தும் சிறப்பு போற்றத் தக்கதாகும்.
அநுமன் சுக்கிரீவனிடம் இராமனது பெருமையைக் கூறுகின்றான். இராமனது வில்லொடித்த செய்தியைக் கேள்விப்பட்டுள்ளான். இராமன் ஒடித்த வில்லின்று சிறப்பையும் அறிந்தவன் அநுமன். ஆகவே சுக்கிரீவனிடம் ‘பொன்மயமான அவ்வில்லினை ஒடித்தவர் இவர்தான் எனின் இவர் திருமாலே’ எனக் கூறுகின்றான். சொல்லின் செல்வன் மட்டுமல்லன் – சிந்தனைவல்லான். அவன் கூறுகின்றான். இவ்வில் சிவபெருமானுடைய வில்லல்லவா? இவ்வில்லையுடையவனது ஆற்றலை அவ்வில் மீது ஏற்றுகின்றான். துன்புறுத்தும் மிக்க வலியுடைய முப்புரத்தைத் தீயால் எரியும்படி கோபித்தவன். கடுங்கோபமுடைய யமனைக் காலால் உதைத்து அவன் வாழ்நாளை அழித்தவன் – ‘காலனையழித்து மார்க்கண்டேயனை வாழ வைத்தவன்’ என்பது இங்கு தொனிப்பதாகும்.
வாலியால் வந்த துன்பம் அழிவுறும். இராமபிரானது நட்பால் சுக்கிரீவன் வாழ்வு பெறப்போகிறான் என்ற செய்திகளை முன்னே அறிவிப்பது போல இப்பாடலைக் கம்பர் அநுமன் வாயிலாகக் கூறுகின்றார்.
                       செறுக்கும் வந்திறல் திரிபுரம் தீயெழச் சினவி
              கறுக்கும் வெஞ்சினக் காலன்தன் காலமும் காலால்
              அறுக்கும் புங்கவன் ஆண்டபேர் ஆடகத்தனிவில்
              இறுக்கும் தன்மையம் மாயவற் கன்றியும் எளிதோ?

அடுத்து, கவிக்கூற்றாக ஒரு நயத்தினைக் காண்போம்.
      வானர சேனைகள் கடற்கரையை அடைந்தன. கடலைத் தாண்ட அநுமனைத் தேர்ந்தனர். அநுமன் மஹேந்திரமலை மீது நின்று கடலைக் காண்கின்றான். தொலைவில் தோன்றிய இலங்காபுரியினையும் பார்க்கின்றான். கடலைக் கடந்து செல்ல அம்மலை மீது நின்று ஓர் உந்து உந்துகின்றான். அம்மலை அநுமனது பேருருவப் பாரம் தாங்கமாட்டாது நெக்குவிடுகிறது. மலை பிளவுபட்டு வெடிப்பேற்படுகிறது. இவ்வதிர்ச்சியால் தேவர்களை அவர்களது மயில் போலும் சாயலையுடைய மனைவியர் அச்சத்தால் இறுகத் தழுவிக் கொண்டனர். இச்செயலுக்கு ஓர் உவமை தருகின்றார் கம்பர். அன்று இராவணன் கயிலையைத் தூக்கியபோது மலையசைவதால் நடுக்குற்ற உமாதேவி சிவபெருமானைத் தனதூடலையும் விட்டுத் தழுவிக் கொண்டாற்போல என்று. இதில் காட்டும் இன்னொரு நயம் உமாதேவிபோல தேவப்பெண்டிர் ஒவ்வொரு வரும் தத்தம் கணவன்மாரைத் தழுவித் கொண்டனர். ஆகவே தேவலோகத்தில் உள்ளார் அனைவரும் சிவனும் உமையுமாகவே காட்சியளித்தனர் என்பதாம். கம்பர் தம் உவமையணியால் இக்கருத்தினைச் சிறப்பிக்கின்ற பாடலை இதோ பாருங்கள்.
                      வெயில்இயல் குன்றம் கீண்டு
                     வெடித்தலும் நடுக்கம் எய்தி,
              மயிஇயல் தேவி மார்கள்
                     தழீஇக்கொளப் பொலிந்த வானோர்,
              அயில்எயிற்று அரக்கன் அள்ளத்
                     திரிந்தநாள், அணங்கு புல்லக்
              கயிலையில் இருந்த தேவை,
                     தனித்தனிக் கடுத்தல் செய்தார்

      அடுத்ததோர் நயம் :
      அநுமன் பெருவடிவங் கொண்டு இலங்கையை நோக்கிச் செல்ல ஆயத்தமாகவிருக்கின்றான். மஹேந்திர மலைமீதிருந்து ஓர் இமயமலையே செல்வது போலத் தோன்றுகிறது. இமய மலை இலங்கையை நோக்கிச் செல்லுவதேன்! கம்பர் காரணம் கற்பிக்கின்றார். அன்று இராவணன் அசைத்த பொழுது சிவபெருமான் தன் பெருவிரலால் அழுத்த இராவணன் இமயமலையடியில் சிக்குண்டு வருந்தினான். அவ்வருத்தம் போதாது. இன்னுமவனை அமுக்குதல் வேண்டும் என்ற விருப்பத்துடன் செல்லுகிறது என்று தன் குறிப்பை ஏற்றிச் சொல்லுகின்ற திறம் பாராட்டுதற்குரியதாம். இன்னுங் கூட ஒரு நயத்தினைக் காண்போம். தூக்க்ப்பட்டது இமயம், தண்டனை தந்ததோ சிவபெருமான். நமது பங்கு என்ன என நினைத்த கயிலை சிவபெருமானை விட்டு விட்டுத் தான் மட்டும் செல்லுகிறது என்பதாக அப்பாடல் சுட்டிக்காட்டுகிறது. அப்பாடலை நோக்குங்கள்.
                                விண்ணவர் ஏத்த வேத
                     முனிவரர் வியந்து வாழ்த்த,
              மண்ணவர் இறைஞ்ச, செல்லும்
                     மாருதி மறம்உட் கூர,
              ‘அண்ணல்வாள் அரக்கன் தன்னை
                     அமுக்குவன் இன்னும்’ என்னா
              கண்ணுதல் ஒழியச் செல்லும்
                     கைலைஅம் கிரியும் ஒத்தான்.

      பாலகாண்டத்துள் ஆற்றுப் படலத்துள் ஒரு செய்தியைச் சொல்லுகின்றார் கம்பர்.
      மழைப் மேகமின்றி வான் வெண்மையாகக் காட்சியளிக்கின்றது. இந்த வெண்மையான வெளிக்காட்சியைக் கம்பர் வருணிக்கின்றார் மேனி முழுதும் வெண்ணீறணிந்த சிவ பெருமான் தோற்றம் போல என்று.
            நீறணிந்த கடவுள் நிறத்த வான்
      தன்மனதிலே ஊன்றியதாக உள்ள எண்ணங்களே வாக்கில் வெளிப்படுவன, சேரமான் பெருமாள் நாயனார் தம் பொன்வண்ணத்தந்தாதியில்
                                விரிகின்ற ஞாயிறு போன்றது மேனி,
                     அஞ்ஞாயிறு சூழ்ந்
              தெரிகின்ற வெங்கதிர் ஒத்தது செஞ்சடை;
                     அச்சரைக் கீழ்ச்சரிகின்ற
              காரிருள் போன்றது கண்டம்
                     அக்காரிருட் கீழ்ப்
              புரிகின்ற வெண்முகில் போன்றுளதால்
                     எந்தை ஒண்பொடியே

இப்படியொரு பாடலைச் சொல்லுகின்றார். இரண்டையும் ஒப்பு நோக்குக.
      காவிய நாயகியை உயர்த்துவது போலவும் கதைத் தொடர்பு கெடாது சிவபெருமானை உயர்த்துவது போலவும் கதைத் தொடர்பு கெடாது சிவபெருமானை உயர்த்துவது போலவும் அநுமனைக் காட்டும் ஓர் அற்புதமான இடம். அநுமன் இலங்காபுரி சென்றான். அவனை அரக்கர் பலர் காண்கின்றனர். அவனது வீரதீரச் செயல்களைக் கண்டு வியந்து இவன் யாராக இருக்கலாம் என யூகிக்கின்றனர். அரக்கர்களுடைய யூகமும் சரியாகவே அமைகின்றது என்று கற்பார் உணரும் வண்ணம் கம்பர் கவி இங்கு அமைகின்றது.
      சீதை கற்பில் சிறந்தவள். அக்கற்பின் வண்மை சிவ பெருமானை இலங்கைக்கு வரப்பணித்தது. சிவபெருமான் இலங்கைக்குச் செல்வதற்குரிய தோற்றம் இப்படித்தான் இருக்கவேண்டுமென்று கூரிய பற்களோடு கூடிய அநும வடிவத்தில் சென்றார். அநுமனை அனைவரும் சிவபெருமானே இவ்வடிவில் வந்துள்ளதாகக் கருதினர்.
                                கயிலையின் ஒருதனிக் கணிச்சி வானவன்
              மயில்இயல் சீதைதன் கற்பின் மாட்சியால்
              எயிலுடைத் திருநகர்ச் சிதைப்ப எய்தினன்
              அயில் எயிற்று ஒருகுரங்கு ஆய்என் பார்பலர்.

      மிதிலைக் காட்சிப் படலத்துள் ஒர் இயற்கை வருணனை. சூரியன் தனது கிரணங்களை விரிக்கின்றான். வானத்தின் மீது சூரிய கிரணங்கள் பரவுதல் வானத்தையளாவி ஓங்கி உயர்ந்த சிவபெருமானது செஞ்சடைவிரித்தலை யொக்கும். கின்னர்கள் இசைபாட உலகோர் வழிபாடு செய்ய, முனிவர்களும் வேதியர்களும் கரம் கூப்பித் தொழ, கடல் தன் அலைகளால் முழவினை முழக்க, வானரங்கில் சிவபெருமான் நடனமாடிகின்றான் என ஓர் அரங்கினைக் கம்பர் நம் கண் முன் கொண்டு வந்து காட்டுகின்றார். பொருளறிந்து பாடலைப் படிக்கும் போது நம் கண்முன் அக்காட்சி தோன்றுகிறது.
                                எண்ணரிய மறையினொடு கின்னரர்கள்
                     இசைபாட, உலகம் ஏத்த
              விண்ணவரும், முனிவரரும் வேதியரும்
                     கரம்குவிப்ப வேலை என்னும்
              மண்ணுமணி முழவதிர வானரங்கில்
                     நடம்புரிவான் இரவி யான
              கண்ணுதல்வா னவன்கனகச் சடை விரிந்தால்
                     எனவிரிந்த கதிர்கள் எல்லாம்.

      இவைபோல பலப்பல. எதனை விளக்குவது எதனை விடுவது. விரிக்கின் பெருகுமாகையால் குறிப்புகள் சில தந்து இவ்வாய்வுக் கட்டுரையினை முடித்துக் கொள்ல ஆசைப்படுகின்றேன். சிவபெருமானைக் கண்ணுதற் கடவுள் என்றும் முக்கணான் என்றும் கங்கையணிந்தான் என்றும், உமையொரு பாகன் என்றும், நீலகண்டன் என்றும், தோற்றப் பொலிவினடிப்படையில் பல இடங்களில் கம்பர் தம் காவியத்துள் குறிப்பிடுகின்றார். திரிபுரமெரித்தவன், காலகைக் காய்ந்தோன், மன்மதனை அழித்தவன் எனச் சிவபெருமான் வீரச்செயல்களைக் குறிப்பிடும் இடங்கள் பல மும்மூர்த்திகள் எனக் கூறி அவர்களுள் முதல் சிவனே எனக் குறிப்பிடுகின்ற இடங்கள் பல.
      இராமபிரானையே ஈசானம் ஒருவன் மூர்த்தி என்று சிறப்பிகின்ற இடங்களும் உண்டு. ஈசன் என்ற சொல்லைத் தலைவன் என்ற பொருளில் கையாண்ட இடங்களும் உள.
      காவியத்துள் சிவபெருமானை கவி தம் வாக்காலின்றி பிற பாத்திரங்களின் வாயிலாகவும் பெருமைபடப் பேசியுள்ளார். வீடணன், இராவணன், இந்திரசித்து, மண்டோதரி, விசுவாமித்திரன், இராமன், அநுமன் ஆகியோருடைய கூற்றால் வெளிப்படும் சிவபெருமானின் பெருமைகள் அளவிலடங்கா.
      பத்தாயிரம் பாடல்களுள் முந்நூற்றுத் தொண்ணூற்று ஐந்து இடங்களில் கம்பர் சிவபெருமானைப் பற்றிக் குறிப்பிடுகின்றர். ஆசைபற்றிப் பாடிய இராம காதையில் தொடர்ந்து முப்பது பாடல்களைக் கூட சிவபெருமான் நினைவின்றிப் பாடக் கம்பரால் முடியவில்லை. மொத்தப் பாடல்களில் நான்கு விழுக்காடு எனின் இருபத்தைந்து பாடல்களுக்கு ஒருமுறையேனும் சிவ நினைவோடு பாடிய பாடல்கள் இடம் பெறுகின்றன. இராமாயணம் சமயக் காழ்ப்பில்லாத சமரசக் காவியம்.
கம்பன் வாழ்க! கம்பன் இராமாயணம் வாழ்க ! !
     
     

      

No comments:

Post a Comment