Wednesday, December 23, 2015

அஷ்டாங்க நமஸ்காரம்
ஸாஹித்ய சிரோமணி ஶ்ரீ எஸ். வி. பரமேச்வரன்
[சிவஞான பூஜா மலர் – துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
      பிறவியில் மனிதப் பிறவியே உயர்ந்த பிறவி. அதிலும் உயர்ந்த உள்ளம் படைத்த, விவேகம் படைத்த பக்திமானாகப் பிறவி கிடைப்பது என்பது சாதாரணமல்ல. புண்ய கர்மாவே தான் இதற்கு காரணம். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் ஆண்டவனை வணங்க வேண்டும். ஆண்டவன் இருக்குமிடம் ஆலயம். ஆண்டவன் எங்கும் எல்லா இடத்தும் நிறைந்திருக்கிறான் என்பதெல்லாம் உண்மையாகவே இருந்தாலும் அதை புரிந்து கொண்டு ஆண்டவனை வணங்க, வழிபட சாதாரண ஒரு மனிதனால் முடியாதே என்று எண்ணித்தான் மகான் ஆதி சங்கரர் தன் உயர்ந்த அத்வைத நிலையில் இருந்து இறங்கி வந்து பல ஸ்தோத்திர க்ரந்தங்களை உலகுக்கு அருளினார். நாடெங்கும் சுற்றி பல கோயில்களுக்குச் சென்று வணங்கி நம்மையும் அது போல் செய்யும்படி சொல்லாமல் செய்து காட்டிச் சென்றிருக்கிறார். பக்திக்கிரங்காத தெய்வங்கள் இல்லை. நீ எப்படி பக்தி செய்தாலும் நான் அதை ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார் பகவான்.
      உலகில் தோன்றியிருக்கின்ற எல்லா மதங்களிலும் வணங்கும் முறை ஒன்று இருக்கிறது. நமது ஸநாதன தர்மத்தில் வணங்கும் முறையை நமஸ்காரம் செய்வது என்று கூறுகிறோம். கோயிலுக்குச் சென்று பிரதக்ஷிணம் செய்கிறோம். நமஸ்காரம் செய்கிறோம். நமஸ்கரிக்கும் பொழுது எப்படி நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும். குப்புற விழுந்து கும்பிடுவது என்பது ஒரு பக்தனைப் பொறுத்தவரை, அவனுக்குத் தெரிந்த அளவில் அது சரியாக இருக்கலாம். ஆனால் நமஸ்காரம் செய்யும் பொழுது நமது எட்டு அங்கங்களுக்கும் வேலை இருக்கிறது. அந்த எட்டு அங்கங்கள் யாவை என்பதை எடுத்துக் சொல்லுவதே இந்த கட்டுரையின் நோக்கம்.
      இரு பாதங்களும், கரங்களும், முழங்கால்களும், சிரஸும், (தலை), உரஸும் (மார்பு) தரையில் சீராகப் பதிந்திருத்தல் வேண்டும். மனத்தில் பகவானின் உருவத்தையும் நாவில் அவன் நாமத்தையும் வைத்து அகக்கண்களால் அவனை பார்த்துக்கொண்டு கவிழ்ந்து படுத்திருத்தல் அஷ்டாங்க நமஸ்காரம் என சிவாகமம் சொல்கிறது.
                                பத்ப்யாம் கராப்யாம் த்ருஷ்டிப்யாம் ஜானுப்யாம் சிரஸோரஸா |
              மனஸா வசஸா சைவ ப்ரணாமோஷ்டாங்க உச்யதே ||
     
இதில் குறிப்பிட்டபடியே அஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும். இதுவே ஆலயங்களில் ஆண்டவன் ஸன்னிதியில் நமஸ்காரம் செய்ய வேண்டிய முறை. இப்படி சீராக நமஸ்காரம் செய்யும் பொழுது ஈச்வர சன்னிதியில் படிந்திருக்கின்ற பக்தகோடிகளின் பாததூளி (தூசி) நமது உடலில் பதியும் படியாகவும் செய்ய வேண்டும். உடலில் பற்றி இருக்கின்ற தூசி எண்ணிக்கையில் எத்தனையோ அத்தனை ஆயிரம் ஆண்டுகள் அவன் சிவலோகத்தில் மகிமை பெறுவான் என்று கூறுகிறது சிவாகமம்.
                                ரேணு குண்டித காத்ரஸ்ப ரேணு ஸங்க்யா து யாவதீ |
              தாவத் வர்ஷ ஸஹஸ்ராணி சிவலோக மஹீயதே ||

இதில் இருந்து நமக்கு ஒன்று புலனாகிறது. கோயில்களில் சென்று நமஸ்காரம் செய்யும் பொழுது நாம் சட்டை போடக் கூடாது. வேட்டியோ, பஞ்சக்கச்சமோ தரித்து உத்திரியத்தை இடுப்பில் சுற்றி நமஸ்காரம் செய்தால் தான் நமது உடலில் தூசிகள் படியும் வாய்ப்பு உள்ளது. தூசிகளின் எண்ணிக்கை நமக்கு முக்யம். எண்ணிக்கையின் அடிப்படையில் தானே சிவலோக வாசம் சொல்லி இருக்கிறது? ஆகையால் இந்தக்காலத்து ஆத்தீகர்கள் இதை நன்கு கவனிக்க வேண்டும். அந்தக் காலத்தில் சட்டை போட்டுக் கொண்டு கோயில்களுக்கு யாரும் செல்லக் கூடாது என்று சட்டம் கூட உண்டு. மேலே சொன்ன சுலோகத்தின் பொருளை உணர்ந்து தான் இந்த சட்டத்தை நமது முன்னோர்கள் கடைப்பிடித்தார்கள் என்று தோன்றுகிறது அல்லவா? தினம் ஆலயம் செல்ல வேண்டும், ஆண்டவனை நினைக்க வேண்டும், அவன் புகழ் பாட வேண்டும் என்று ஒருவருக்கு உள்ளத்தில் உண்மையாகவே எண்ணம் இருக்குமானால் அவரது இன்னல்கள் யாவும் தானாகவே விலகிவிடும். மனத்தில் அலாதியான தைரியமும் அமைதியும் ஏற்படும் என்பது ஸர்வ நிச்சயம்.

சிவம்.

No comments:

Post a Comment