உ
சிவமயம்
திருக்குறளில் சைவசித்தாந்தம்
சித்தாந்த வித்தகர்
கயப்பாக்கம் சோமசுந்தரம் செட்டியார்
[சிவஞான பூஜா மலர் – துன்மதி ஆண்டு -
(1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S.
வேங்கடேச
சர்மா, மேலமாம்பலம்,
சென்னை – 600 033]
இவ்வுலகின்
கண் பல தேசங்களிலுமுள்ள பலமொழி பேசுபவர், பல ஜாதியினர், பல சமயத்தினர் ஆகியோர் யாவரும்
திருக்குறள் என்னும் நம் உயரிய நீதி நூலைத் தங்கள் தங்கள் நூல் என்று தங்கள் தங்கள்
தாய்மொழியில் மொழிபெயர்த்துக் கொண்டு பாராட்டி வருவதை அறியதார் இல்லை எனலாம்.
இத்தகைய
நூலையிற்றியவர் திருவள்ளுவர் என்று மட்டும் நாம் அறிவோம். ஆனால், இவர் உண்மை வரலாற்றை
முழுமையாயறிய ஆதாரங்கள் ஏதுமில்லை. இவர் பிறப்பு முதலியவற்றைப் பலவாறாகப் பேசுவர் பலர்.
இவர் நம் செந்தமிழ் நாட்டில், திருமயிலையில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்
தோன்றியவர். சைவக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும், நெசவுத் தொழிலைச் செய்து வந்தார்
என்றும், இவர் மனைவி பெயர் வாசுகி என்றும், இவருக்குக் குழந்தைகள் ஏதுமில்லையென்றும்
செவி வழிச் செய்தியால் நாம் அறிகிறோம். இவர் இயற்றிய நூல் ஒப்பற்ற திருக்குறள் ஒன்றே.
சிலர் வேறு நூலையும் இயற்றியுள்ளார் என்று கூறுகின்றனர். இதற்கு ஆதாரம் ஏதுமில்லை.
சிலர் இந்நூல் வடமொழியிலிருந்து மொழி பெயர்க்கப்பெற்றது என்று கூறியும் எழுதியும் உள்ளார்கள்.
இவர்கள் கூற்றுக்கும் ஆதாரம் ஏதும் கிடையாது. இது ஒரு தனித் தமிழ் நூல் என்பது மட்டும்
உண்மை, முற்றிலும் உண்மை, முக்காலும் உண்மை.
இனி
நாம் எடுத்துக் கொண்ட “திருக்குறளில்
சைவ சித்தாந்தம்” என்பதை விளக்க முற்படலாம். சைவ சித்தாந்த
சாத்திரங்களில் “பதி,
பசும் பாசம்” என்னும் முப்பொருள் உண்மை பேசப்பட்டுள்ளது.
முன் செய்வினை, பிறப்பு, இறப்பு, இன்பம், துன்பம் முதலியன பேசப்பட்டு உள்ளன. உயிர்கள்
அடைய வேண்டிய முத்தியின்பம் பேசப்பட்டுள்ளது. வினையின் காரணமாகப் பிறப்புக்கள் ஏற்படுகின்றன.
கடவுள் தத்துவம், இன்னும் பல செய்திகள் பேசப்பட்டுள்ளன.
இவைகளையெல்லாம்
நாம் திருக்குறளில் காணலாம். எனவே, திருக்குறள் ஒரு சைவசித்தாந்த நூலே எனவும், இதில்
பேசப்பட்ட கடவுள் சிவபெருமானே எனவு, திருவள்ளுவர் சைவரே எனவும் தெற்றெனப் புலப்படும்.
ஒவ்வொன்றாக விளக்கிக் கூறுகின்றேன்.
கடவுள்
வாழ்த்து:-
(உண்மை)
“கவி
தான் வழிபடுகடவுளையாதல் எடுத்துக் கொண்ட பொருட்கு ஏற்புடைக் கடவுளையாதல் வாழ்த்துதல்,
அவற்றுள் இவ்வாழ்த்து ஏற்புடைக் கடவுளை என அறிக; என்னை?
சத்துவம் முதலிய குணங்களான மூன்று ஆகிய உறுதிப்பொருட்கு அவற்றான் மூவராகிய முதற்கடவுளோடு
இயைபுண்டு ஆகலான். அம்மூன்று பொருளையும் கூறலுற்றார்க்கு அம்மூவரையும் வாழ்த்துதல்
முறைமையாகலான். இவ்வாழ்த்து அம்மூவர்க்கும் பொதுப்படக் கூறினார் என உணர்க.”
இருந்தாலும் இக்கடவுள் வாழ்த்து சிவபெருமானுக்கே
உரியது என்பதனை விளக்குகின்றேன்.
“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே யுலகு”
என முதற்குறளின் கருத்து எழுத்துக்களெல்லாம்
அகரத்தை முதலாக உடையன; அதுபோல் உலகம் கடவுளை முதலாக உடையது. அக்கடவுள் யார்?
அக்கடவுளது இலக்கணங்கள் என்ன?
இரண்டாவது
குறளில் ‘வாலறியன்’ என்று கடவுளைக் குறிக்கப்பட்டுள்ளது.
‘மெய்யுணர்வினை உடையான்’ என்பது இதன் பொருள்.
இது சிவபெருமானையே குறிக்கும். நற்றாள் என்பதன் பொருள் – பிறவிப் பிணிக்கு மருந்தாகலின்
கடவுளது தாள் நற்றாள் என்றார்.
உயிர்களுக்கு
ஏற்படும் பிறவிகளை ஒழிக்க வல்லவன் பிறப்பிறப்பில்லாதவனாகத் தானே இருக்க வேண்டும்?
இனி
முழுமுதற்கடவுளாகிய சிவபெருமானைத்தான் எண்குணத்தான் என்றார் திருவள்ளுவர். இந்த எட்டு
குணங்கள் யாவை
1) தன்வயத்தனாதல்,
2) தூயவுடம்பினனாதல்,
3) இயற்கை உணர்வினனாதல்,
4) முற்றும் உணர்தல்,
5) இயல்பாகவே பாசங்களின் நீங்குதல்,
6) பேரருள் உடைமை,
7) முடிவிலாற்றல் உடைமை,
8) வரம்பிலின்பம் உடைமை.
இவ்வாறு
சைவாகமத்துக் கூறப்பட்டது.
எட்டு குணங்கள்
வேறெந்தக் கடவுள் பேதத்திற்கும் இல்லையென்பது நூல்களின் துணிபு. எனவே இங்குத் திருவள்ளுவர்
குறித்தது சித்தாந்த சாத்திரங்களில் கூறப்பட்ட சிவபெருமானையே.
மேலும்
சித்தாந்த சாத்திரங்களில் கூறப்பட்ட உண்மை, உயிர்கள் பாசத்தை விட்டு நீங்கிப் பதியாகிய
சிவபெருமான் திருவடிகளையடைந்து பேரின்பம் துய்த்தல் என்பதாகும்.
திருவள்ளுவரும்
‘கடவுள் வாழ்த்து’ என்னும் அதிகாரத்தில்
அடிசேர் முத்தியைத்தான் “தாள்”
என்றும் “அடி”
என்றும் 7 குறப்பாக்களில் கூறியுள்ளார். வேறெந்த மதத்திலும் (வைணவம்
தவிர)
அடிசேர் முத்தி கூறப்படுவதில்லை.
“வான் சிறப்பு”
என்னும் அதிகாரத்தில்,
“சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு”.
இதில் நித்திய
நைமித்திக பூசைகளைக் குறித்துள்ளார். இவ்வுண்மை சைவசித்தாந்தக் கருத்தை வலியுறுத்தும்.
இனி, வேதங்களில்
பேசப்பட்ட முக்கியமானவை இரண்டு; ஒன்று “தர்மம் சர”
மற்றொன்று “சத்தியம் வத”
இதனையே திருவள்ளுவரும் பேசுகிறார்.
“ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல்”
என்பது தர்மத்தைச் செய் என்பதை வலியுறுத்தும்.
உயிர் உண்மை:- உயிர் உடம்பின் வேறு என்று சைவ சித்தாந்தக்
கருத்து வலியுறுத்தும், ஏனைய மதவாதிகள் உடம்பே உயிர் என்றும், அந்தக்கரணங்களே உயிர்
என்றும் பிராண வாயுவே உயிர் என்றும் பலவாறு பேசுவர். இதற்கு ஒரு சான்று கூறலாம்.
“குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு”
இதற்குப்
பரிமேலழகர் உரை:- முன் தனியாத முட்டை தனித்துக்கிடப்ப,
அதனுள்ளிருந்த புள், பருவம்வந்துழிப் பறந்து போந்தன்மைத்து. உடம்பிற்கும் உயிர்க்கும்
உளதய நட்பு அதாவது முட்டை உடைந்து பறவை வெளியே பறந்து செல்வதைக் காண்கிறோம். அதுபோல
உடம்பில் இருந்து உயிர் வெளியே போவதை உணர்கிறோம். எப்படிப் பறவை மீண்டும் உடைந்து முட்டை
ஒட்டிற்குள் புக முடியாதோ அதுபோலவேதான் உயிரும் உடம்பை விட்டு வெளியேறினால் மீண்டும்
அவ்வுடம்பினுள் புகமுடியாது. வேறு சில உரையாசிரியர்கள் குடம்பை என்பதற்குக் கூடு எனப்
பொருள் கூறியுள்ளனர். கூடு என்றால் அது கெடுவதில்லை. பறந்து சென்ற பறவை மீண்டும் அக்கூட்டிற்குள்
வந்து தங்கலாம். ஆனால் முட்டை என்றால் அது உடைந்து விட்டபோது மறுபடியும் ஒன்றாய்ச்
சேரவோ அல்லது பறவை வந்து தங்கவோ இடவசதியளிக்க இயலாது. இது தான் பொருத்தமான உரை என்று
பேரறிஞர்கள் கூறியுள்ளனர்.
இனி,
பாசம் என்று சைவ சித்தாந்தத்தில் பேசப்பட்ட
மூன்றாவது பொருளும் திருக்குறளில் உள்ளது என்பதைச் சிறிது காணலாம்.
“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு”
என்ற குறளில் இருவினை மயக்கத்தைப் பற்றி வரும் நல்வினை தீவினை என்னும் இரண்டு வினையும்
உளவாகா என்றார் உரையாசிரியர். இக்குறளின் கருத்து:-
கடவுளுடைய கீர்த்தியை விரும்பினவரிடத்து நல்வினை தீவினை என்னும் இருவினைகளும் அடையா.
முற்பிறப்பு,
பிற்பிறப்பு முதலியன இல்லை என்பர் பல மதவாதிகள். ஆனால் முன் பிறவி உண்டு, பின் பிறவியுமுண்டு
என்று நம்புவது சைவசித்தாந்தம். மேலும் மற்றொரு குறளிலும் நமக்கு முற்பிறப்பு, பிற்பிறப்பு
உண்டு என்று கூறப்பட்டுள்ளதையும், அந்தப் பிறப்பும் வினை காரணமாக வரும் என்று நம் சித்தாந்த
நூற்களின் கருத்தையே வலியுறுத்தியுள்ளதையும் காணலாம்.
“ஒருமைக்கண் தான்கற்ற
கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்
புடைத்து”
இதன் பொருள்:- ஒருவனுக்கு, தான் ஒரு பிறப்பின் கண்
கற்ற கல்வி ஏழு பிறப்பிலும் சென்று உதவுதலையுடைத்து, வினைகள் போல உயிரின் கண் கிடந்து
அது புக்குழிப்புகும் ஆதலின் ‘எழுமையும் ஏமாப்புடைத்து’
என்றார். கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் முற்பிறப்பு முதலியவைகளில் நம்பிக்கையில்லாதவர்கள்.
இவர்கள் திருக்குறளைத் தஙகள் நூல் என்று சொல்வது எவ்வாறு பொருந்தும்?
அறிஞர்கள் சிந்திக்கவும்.
உதாரணமாக,
நம்நாட்டில் தம் காலத்தில் வாழ்ந்து உலகப் புகழ் பெற்று மறைந்த ராமானுஜம் என்னும் கணித
மேதையை கூறலாம். இவர் சிறு வயது தொடங்கியே உலகிலுள்ள கணித மேதைகளெல்லாம் கண்டு வியக்கும்படி
பல அற்புதங்களைக் கணிதவுலகில் இயற்றியுள்ளதை அனைவரும் அறிவர். இது எப்படி?
இவர் முன் பல பிறப்புகளில் கணித நூல் வல்லவராகவிருந்து வினைக்கீடாக இப்பிறவியை எடுத்திருக்கக்
கூடும் என்பதில் ஐயமில்லை.
மற்றொரு
உதாரணம்:- சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் காலத்தில்,
ஒரு பெண் எந்தக் கோயிலுக்கு அழைத்துச் சென்றாலும் அங்கெல்லாம் உபநிடதங்களை சரமாரியாகப்
பொழிந்தாள் என்று பத்திரிகைகளின் மூலம் நாம் அறிந்ததொன்று இது எப்படி?
அப்பெண் தன் முற்பிறப்புகளில் உபநிடதங்களையெல்லாம் நன்கு கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும்.
வினைவசத்தால் கிடைத்த இப்பிறவியிலும், அவளுக்கு அவள் முன் செய்வினை தொடர்ந்து வந்து
போல முன்கற்ற கல்வியும் தொடர்ந்து வந்தது எனலாம். இன்னும் பலவுண்டு. விரிப்பிற் பெருகும்
துறவறவியலில் ஆசிரியர் பேசியுள்லதையும் பார்க்கலாம். இதுவும் நம் சைவசித்தாந்த உண்மையினை
வலியுறுத்தும்.
“இனி, முறையானே துறவுறங்கூறத் தொடங்கினார்,
துறவறமாவது மேற்குறிய இல்லறத்தின் வழுவாதொழுகி, அறிவுடையராய்ப் பிறப்பினையஞ்சி வீடுபேற்றின்
பொருட்டு துறந்தார்க்கு உரித்தாய அறம். அதுதான் வினைமாக தீர்ந்து அந்தக்கரணங்கள் தூயவாதற்
பொருட்டு அவரால் காக்கப்படும் விரதங்களும் அவற்றால் அவை தூயவாயவழி உதிப்பதாய ஞானமுமென
இருவகைப்படும்” என்றார் உரையாசிரியர். பிறமதங்களில்
கூறாத உண்மைகளே இத்திருக்குறளில் கூறப்பட்டது என்னலாம்.
“தவம்”
என்னும் அதிகாரத்திலும் நூலாசிரியர் சித்தாந்தக் கருத்தையே விளக்கியுள்ளார் என்பது
பின்வரும் உரையாசிரியர் கூற்றால் நன்கு விளங்கும் அஃதாவது மனம் பொறி வழி போகாது நிற்றற்
பொருட்டு விரதங்களால் உண்டி சுருக்கலும், கோடைக்கண் வெயினிலை நிற்றலும் மாரியினும்
பனியினும் நீர்நிலை நிற்றலும் முதலிய செயல்களை மேற்கொண்டு, அவற்றால் தம்முயிர்க்கு
வருந்துன்பங்களைப் பொறுத்துப் பிறவுயிகளை ஓம்புதல், புலால் மறுத்து உயிர்கள் மேல் அருள்
முதிர்ந்துழிச் செய்யப்படுவதாகலின் இது புலான் மறுத்தலின் பின் வைக்கப்பட்டது”
கடைசியாக ஒன்று கூறி, இந்தக் கட்டுரையை முடித்துக் கொள்ளுகிறேன்.
எல்லா நூல்களிலும்
பேசப்பட்டுள்ள பொருள் நான்கு (நான்கு புருஷார்த்தங்கள்)
திருவள்ளுவ நாயனாரும் தம் நூலில் சிறப்பாக அறம்,
பொருள், இன்பம் என்னும் மூன்று பொருள்களைப் பற்றியும் உய்த்துணரவைத்தல் என்றயுத்திப்படி
சுருக்கமாக “மெய்யுணர்தல்”
என்ற அதிகாரத்தில் வீடு (வீடு பேறு)
என்பதனைப் பற்றியும் பேசியுள்ளார் என்பர் கற்றறிந்தோர். உரையாசிரியர் உரை, “அஃதாவது
பிறப்பு வீடுகளையும் அவற்றின் காரணங்களையும் விபரீத ஐயங்களானன்றி உண்மையானுணர்தல் இதனை
வட நூலார் ‘தத்துவ ஞானம்’ என்பர். இதுவும்
பற்றற்றான் பற்றினைப் பற்றிய வழி உளதாவதாகலின், அக்காரண ஒற்றுமை பற்றித் துறவின் பின்
வைக்கப்பட்டது.
நம் சைவ
சித்தாந்தத்தின் உண்மை, உயிர்கள் வீடு பேற்றையடைந்தால் மீண்டும் நிலவுலகிற்கு அவை வர
மாட்டா என்பதாகும்.
உயிர்கள்
தம் வழிபடு கடவுளைச் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு வழிகளால் வழிபட்டால்
முறையே சாலோகம், சாமீபம், சாரூபம் என்னும் பதமுத்திகளையும் சாயுச்சியம் என்னும் பரமுத்தியையும்
அடையும். கடைசி நிலையான பரமுத்தி அலல்து சாயுச்சியத்தைத் தான் இவ்வதிகாரத்தில் நூலாசிரியர்
“மற்றீண்டு வாரா நெறி”
என்றார்.
“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி”
உரை: இம்மக்கட் பிறப்பின் கண்ணே உபதேசமொழிகளை
அனுபவம் உடைய தேசிகர் பால் கேட்டு அதனால் மெய்ப்பொருளையுணர்ந்தவர், மீண்டு இப்பிறப்பின்கண்
வாராத நெறியை எய்துவர்.
இன்னும்
பலவுண்டு, விரிவஞ்சி இத்துடன் இக்கட்டுரையினை முடிக்கின்றேன்.
சிவம்.
No comments:
Post a Comment