உ
சிவமயம்
கூர்மபுராணக் கதைகள்
Dr. ந. கங்காதரன் M. A., M. Litt., Ph. D.
[சிவஞான பூஜா மலர் – துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S.
வேங்கடேச
சர்மா, மேலமாம்பலம்,
சென்னை – 600 033]
முன்னுரை
பதினெட்டு
மஹா புராணங்களில் ஒன்றான கூர்ம புராணம் இரு பகுதிகளாக உள்ளது. அதன் முதற் பகுதியில்
53 அத்தியாயங்களும் இரண்டாம் பகுதியில் 45 அத்தியாயங்களும் உள்ளன. திருமாலின் ஆமை (கூர்ம)
வடிவினால் கூறப்பட்டது என்பதனால் இதற்கு அந்தப் பெயர்.
புராணங்களுக்கு
இருக்க வேண்டிய ஐந்து முக்கியமான அம்சங்கள் பெரும்பான்மையான புராணங்களில் காணப்படுவதில்லை.
கூர்ம புராணத்திலும் அந்த அம்சங்கள் குறைவாகவே காணப்படுகின்றன.
உலகின்
படைப்பைப்பற்றியும், மனுவின் வமிசத்தைப் பற்றியும், சூரிய, சந்திரவம்ச மன்னர்களின்
பரம்பரையைப் பற்றியும், பலவிதமான நோன்புகள், தானங்கள் இவற்றைப் பற்றியும் இங்கு கூறப்பட்டுள்ளது.
சைவ
சம்பந்தமாகக் கூறுங்கால் காசி க்ஷேத்திரத்தில் உள்ள பல்வேறு புண்ணிய தலங்களைப் பற்றி
விரிவாகவும். இங்கு சுருக்கிக் கூறப்பட்டுள்ள சிவ வழிபாட்டின் மேன்மையை விளக்கும் கதைகள்
விரிவாகவும் இந்தப் புராணத்தில் கூறப்பட்டுள்ளன.
இந்த
புராணத்தின் தமிழ் பாவடிவாக்கம் அண்மையில் தஞ்சை சரபோஜி மன்னன் ஸரஸ்வதி மஹால் நூல்
நிலையத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. தவிரவும் உரை நடையில் திரு. கார்த்திகேயன் எழுதிய
புத்தகமும் சென்ற ஆண்டு வெளி வந்துள்ளது.
இப்புராணத்தின்
மேன்மை மும்மூர்த்திகளின் சிறப்பைக் கூறி அதிலும் முக்கண்ணனை மேலும் சிறப்பாகக் கூறியிருப்பதேயாகும்.
(1) பிரம்ம விஷ்ணுக்களின் முன் தோன்றிய பரமன்
பலவிதமான
படைப்புகளைப் பற்றி கேட்டறிந்த பின் நாரதர் முதலான முனிவர்கள் நான்முகனின் பிறப்பைப்
பற்றியும் சிவனார் அவருக்கு மகனாக ஏற்பட்டதையும் திருமாலிடம் கேட்கின்றனர்.
ஒரு
ஸமயம் பிரபஞ்சத்தில் ஜீவராசிகள் எதுவும் இல்லாதபொழுது திருமால் அனந்தன் என்னும் அரவத்தில்
மீது படுத்து துயில் கொள்ளவும் விளையாட்டாக அவருடைய தொப்புளிலிருந்து ஒரு கமலம் தோன்றியது.
அது பரந்து விரிந்திருந்தது. அந்த இளஞ் சிவப்பு மலரின் இதழ்கள் முதலியனவற்றிலிருந்த
நறுமணம் நாற்றிசையிலும் பரவியது. அவ்வமயம் தற்செயலாக அங்கு வந்த நான்முகன்படுத்துறக்கும்
திருமாலை எழுப்பினார். மக்கள் நடமாட்டமில்லாதிருக்க பிரமனைக் கண்ட திருமால் வியப்படைந்தார்.
பிரமனும் திருமாலின் கண்ணைக் கவரும் தோற்றத்தைக் கண்னுற்று வியந்தார்.
நான்முகன்–
இருள் சூழ்ந்து மக்கள் சஞ்சாரமற்ற இந்த நிலையில் படுத்துறங்கும் நீர் யார்?
திருமால்– (நகைத்தவண்ணம்)
தேவலோகத்திற்குத் தலைவனும், சிறந்த யோகியும், மிகவும் புகழ் பெற்றவனும், அழிவற்றவனுமான
நாராயணன் நான் என்பதை நீர் அறிவீராக, என்னில் அனைத்து உயிர்களும் உறைகின்றன என்பதையும்
அறியும்.
நான்முகன்- (நகைத்து)
நானே பாட்டனார். தானே தோன்றியவன். என்னில் உலகமனைத்தும் உறைகின்றன. உமது கூற்று மிகவும்
வேடிக்கையாக இருக்கிறது.
இதைக்
கேட்ட திருமால் யோக முறையினால் நான்முகனின் உடலில் புகுந்து, அங்கு அவருடைய வயிற்றில்
தேவர்கள், அரக்கர்கள், மனிதர்கள் இவர்களுடன் கூடிய மூவுலகையும் கண்டு வியப்படைந்தார்.
திருமால்- நீரும் இதேபோல் என் வயிற்றினுள் புகுந்து பல்வேறு
உலகங்களையும் காணுவீர்.
அவ்விதமே
திருமாலின் வயிற்றினுள் புகுந்த நான்முகனும் அதே உலகங்களைக் கண்ணுற்றபின் வெளியே வர
வழி புலப்படாது குழப்பமடைந்தார். வெளிவரும் வழிகள் அனைத்தையும் திருமால் மூடி வடிவே
தொப்புள் துவாரத்தின் மூலம் மலர்ந்த தாமரையில் தோன்றினார்.
நான்முகன்- என்னை வெல்ல வேண்டுமென்று நீர் என்ன காரியம் செய்தீர்?
திருமால்- படைப்பவர் நீர் என்று உம்மை நான் அறிவேன். பொறாமையினால்
நான் வெளிவரும் வழிகளை அடைக்கவில்லை. நான் இதை விளையாட்டாகச் செய்தேன் என்று அறிந்து
கொள்வீராக. நான் செய்ததைப் பொறுத்து தாமரையினின்றும் தோன்றியவர் என்று பொருள் கொண்ட
‘பதம்யோனி’ என்ற பெயருடன் என் மகனாகச் சிறப்படைவீர்.
நான்முகன்- நீரோ அனைத்துயிரிலும் குடி கொண்டவர். உலகங்களனைத்தும்
என்னில் குடி கொண்டுள்ளன. நம்மிருவரைத் தவிர உலகிற்கதிபர் மற்று வேறெவரும் இல்லை.
திருமால்- இந்த உம்முடைய கூற்று உம்முடைய அழிவிற்கு அடிகோலும்.
சிறந்த யோகிகளும் உணர்ந்த பரமசிவனை நீர் அறிந்தீர் இவரோ?
அந்த பரம்பொருளை நீர் சரணடைவீராக.
நான்முகன்- (சினந்து)
நான் என்னைப்பற்றி நன்கு அறிவேன். நம்மிருவரையும் தவிர மேம்பட்ட பரமேச்வரன் என்றொருவர்
இல்லை. உம்முடைய துயிலை விட்டு நீர் உம்மையே நன்கு நோக்குவீராக.
திருமால்
அந்தப் பரமனைப் பற்றி இழிவாகப் பேசாதீர். எனக்குத் தெரியாததல்ல. நான் மாற்றிப் புகலவில்லை.
அந்தப் பரமனின் சக்தி என்னைக் கவருகிறது என்பதை நான் நன்கு அறிவேன்.
இவ்விதம்
புகன்று திருமால் வாளாவிருக்க, தன்னைப் பற்றி உண்மையுணர்ந்திருந்த நான்முகன் எப்படி
பரமன் யாவற்றிற்கும் மேம்பட்டவர் என்று வியந்திருக்கும் பொழுது நான்முகனுக்கு அருள
விரும்பிய சிவனார் நெற்றிக்கண்ணுடனும், சடைமுடி அணிந்தும் கையில் சூலம் தாங்கியும்,
ஒளி திகழ்பவராகவும், மற்றும் சந்திரன் சூரியன் தாரகைகள் புடைசூழ அவர் முன் தோன்றினார்.
அவருடைய பேரொளியால் மயங்கிய நான்முகன் திருமாலிடம் கேட்டார்.
நான்முகன்- முக்கண்ணனாய் சூலமேந்தி ஒளிக்கிருப்பிடமாய்த் தோன்றும்
இவர் யார்?
திருமால்- (பரமனையுணர்ந்தவராய் பிரம்மதேவனை நோக்கி)
இவரே அழிவற்றவரும், உயர்ந்த சோதியும், உலகங்களனைத்திற்கும் தலைவரும், உலகினைப் படைத்து
வளர்த்து அழிப்பவரும், உம்மைப் படைத்து மறைகளை உம்மிடம் அருளியவருமான பரமேச்வரன். இவருடைய
ஒரு வடிவே நான் என்பதையும் அறியும்.
திருமாலின் கூற்றினைக் கேட்ட நான்முகனும் நுண்ணறிவு
பெற்று பரமனின் மேம்பட்ட தன்மையை உணர்ந்து அவரைப்பணிந்தார்.
சிவனார்- (மகிழ்ந்தவராக)
நீர் எனக்குச் சமமானவர் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. என்னுடைய பக்தனான நீர் உலகனைப்
படைக்கும் பொருட்டு என்னாலேயே படைக்க பட்டவர். நீர் வேண்டும் வரனைக் கொடுக்க விரும்புகிறேன்.
நீர் கேளும்.
நான்முகன்- (சிவனாரிடம் மிகப் பணிவுடன்)
தேவே!
உம்மையே மகனாகப் பெற விழைகிறேன். இல்லையெனில் உம்மையொத்த மகனையாவது பெற அருள் தாரும்.
நுண்ணிய உமது மாயையினால் நான் கவரப்பட்டேன். பரமனே! உமது பக்தர்களுக்கு
நீரே தாய், தந்தை, உடன்பிறந்தோர் முதலிய அனைவரும். நான் உம்முடைய திருவடிகளைப் பணிகின்றேன்.
சிவனார்- (பிரமதேவனைப் பார்த்து பின்னர்)
நீர் வேண்டியதைச் செய்கின்றேன். நீர் அறிவிற்கு அதிபர். அனைத்துயிரையும் படைப்பாவ்ர்
நீரே ஆவீர். அவர்களிடம் உம்முடைய மாயையைக் காண்பிக்கவும். என்னுடைய இன்னொரு வடிவான
இந்தத் திருமாலும் உம்முடைய நலனைக் கண்காணிப்பவராக இருப்பார். (பின்னர்
திருமாலின் பக்கம் திரும்பி) உம்முடைய பக்தியினால் மனம் மகிழ்ந்தேன்.
நீர் விரும்பியதைக் கேளும். உண்மையில் நம்மிருவருக்கிடையே பேதம் எதுவும் இல்லை.
திருமால்- நான் வேண்டுவது ஒன்றே ஒன்று தான். உம்மிடம் எனக்கு
என்றும் குறைவற்ற பக்தி வேண்டும் என்பது தான்.
சிவனார்- அப்படியே ஆகட்டும்.
(2) தக்கன் ஆணவம் அழித்தல்.
சுவாயம்புவ
மனுவின் வமிசத்தில் தோன்றியவன் தக்கன். பிராசேதஸ்களுக்கும் மாரிஷை என்பவளுக்கும் பிறந்தவன்.
முன்னர் நான்முகனுக்கு மகனாகத் தோன்றி பரமேச்வரனுடைய வாதம் செய்து சினந்த அவரால் சபிக்கப்
பெற்று அதனால் பிராசேதன் என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தவன். சிவனாருடன் தனக்கேற்பட்ட
முன்பகைக் காரணமாக ஹரித்துவாரத்தில் தான் செய்யும் வேள்வியில் சிவனாருக்குப் பங்கின்றி
திருமால் முதலான அனைவரையும் மட்டுமே அழைத்தான். ததீசர் முதலான அனைவரையும் மட்டுமே அழைத்தான்.
ததீசர் என்னும் மாமுனிவர் அவனிடம் இதன் காரணத்தைக் கேட்டார்.
ததீசர்- தக்க! எந்த ஒரு தேவனின் ஆணைப்படி நான்முகன்
முதற்கொண்டு பிசாசுகன் வரை செயல்படுகின்றனவோ அந்தப் பரமனாகிய ருத்திரனை முறைப்படி நீ
ஏன் வணங்கவில்லை?
தக்கன்- மாமுனிவரே! வேள்விகள்
அனைத்திலும் அவருக்கு பங்கு ஒதுக்கப்படவில்லை. அதனால் நான் அவரை வழி படவில்லை.
ததீசர்- தக்க! எந்த ஒருவர் யாவருக்கும் மேம்பட்டவரோ,
எந்த ஒருவரிடமிருந்து யாவும் செயல்படுகின்றனவோ, அந்த சங்கரனை அறிந்தும் கூட வேள்விகளின்
மூலம் ஏன் வணங்கமாட்டேனென்கிறாய்?
தக்கன்-
மாமுனிவரே!
இந்த ருத்திரன் நன்மை பயப்பவர் அல்லர். அழிப்பவர். தாமஸகுணமுடையவர். ஆடையின்றித் திரிபவர்.
மண்டை ஓட்டைத் தாங்குபவர். இவருக்கு உலகின் ஆன்மாவானவர் என்பது ஒவ்வாதது. பரமன் நாராயணரே,
உலகினைப் படைக்கும் உத்தமர். உண்மையின் வடிவானவர் அவர் என்பதினாலே அவரையாவற்றிலும்
வழிபடுகின்றேன்.
ததீசர்- தலைவனே! ஆயிரம் கதிர்களுடைய இந்தப் பரமனை நீ
காணவில்லையா? காலனின் வடிவான பரமேச்வரன் உலகமனைத்தையும்
அழிப்பவர். பிரம்மனை உணர்ந்த அறிவாளிகள் எந்த ஒருவரை போற்றுகின்றனரோ அந்தப் பரமன் யாவற்றிற்கும்
ஸாக்ஷி ஆவார். முவ்வடிவுடைய இந்தப் பரமன் ஆதித்யன் முதலான அனைவரும் ஆவார்.
யம் க்ருணந்தீஹ வித்வாம்ஸோ
தார்மிகா ப்ரஹ்ம வாதின: |
ஸோ (அ)யம் ஸாக்ஷீ தீவ்ரருசி
காலாத்மா சாங்கரீ தநு: ||
ஏஷ ருத்ரோ மஹா தேவ:
கபாலீச க்ருணீ ஹர: |
ஆதித்யோ பகவாந் ஸூர்யோ
நீலக்ரிவோ விலோஹித: ||
ஸம்ஸ்தூய தே ஸஹஸ்ராம்சு:
ஸாமகாத்வர்யு ஹோத்ருபி: |
தக்கன்- மாமுனிவரே வேள்வியில் தம் தம் பங்கைப் பெற வந்திருக்கும்
இந்த பன்னிரு ஆதிதயர்களே சூரியர்கள் என்பவர்.
தக்கன்
இம்மாதிரி கூறவும் அங்குக் குழுமியிருந்த மாமுனிவர்களுமே இருள் சூழ்ந்த மனமுடையவர்களாக
சிவனாரைக் காணாமல் நாரணனின் மாயையினால் மயக்கமுற்றவர்களாக தக்கனின் கூற்றை மதித்தனர்.
இந்திரன் முதலான தேவர்களும் தம் பங்கினைப் பெற வந்து சேர்ந்தனர். வந்தவர்கள் நாரணனைத்
தவிர பரமனைக் காணவில்லை. நான்முகனும் பிறர் காணும் பொழுதே நொடியில் அங்கிருந்து மறைந்தார்.
நான்முகன் மறைந்த உடன் தக்கனும் நாரணனைச் சரண் புகுந்தான். பின்னர் தக்கன் அச்சமின்றி
அந்த வேள்வியைத் துவங்கினான். ததீசர் என்னும் மாமுனி மீண்டும் தக்கனுக்கு அறிவுரை கூறினார்.
ததீசர்- தக்க! தகாதவரை வழிபடுவதினாலும், தகுந்த வரை
வழிபடாததினாலும் மனிதன் பெரும் பாவத்தைச் செய்கின்றான் என்பதில் ஐயம் எதுவும் இல்லை.
எங்கு நேர்மையற்றவர் போற்றப்பட்டும் நேர்மையுற்றவர் ஏளனத்திற்கும் இலக்காகின்றனரோ அங்கு
தெய்வத்தின் கடுமையான தண்டனை ஏற்படுகிறது.
(இவ்வாறு எடுத்துரைத்த மாமுனிவர் பின்னர்
கூறிய வண்ணம் அவர்களைச் சபித்தார்.)
எந்த ஒரு
வேள்வியினின்றும் பரமன் உங்களால் புறக்கணிக்கப்பட்டாரோ அதன் பலனாக நீங்கள் அனைவரும்
மூன்று மறைகளின்றும் வழுவியவர்கள் ஆவீர்கள். மெய் அறிவின்றி கொடும் கலியுகத்தில் பிறந்து
அந்த இன்னல்களை அனுபவிப்பீர்கள். அதனின்று விடுபட்டும் கூட நாரணன் உம்மிடம் பராமுகமாக
இருப்பார்.
(இவ்வாறு கூறி முடித்த மாமுனி தன் மனத்தால்
ருத்திரனைப் பணிந்தார்).
இதற்கிடையில்
தேவியானவள் தன் கணவர் மஹா தேவரை அணுகி, நடந்தவை அனைத்தையும் அறிந்தவளாக வேண்டினான்.
தேவி- நாத! முன் பிறப்பில் என் தந்தையான தக்கன்
செய்யும் வேள்வியில் கூடியிருக்கும் பலர் முன்னிலையில் உம்மை இழிவாகப் பேசி இருக்கிறான்.
அந்த வேள்வியை உடனே சென்று அழியும். இதுவே என் வேண்டுகோள்.
இம்மாதிரி
தேவியினால் வேண்டப்பட்ட பரமன் ஆயிரம் தலை உடையவனும், சினந்தவனும், ஆயிரம் கண்களை உடையவனும்,
ஆயிரம் நீண்ட கைகளை உடையவனும், அடக்க முடியாதவனும், யுகத்தின் முடிவில் தோன்றும் நெருப்பைப்
போன்று ஒளிர்பவனும், அச்சுறுத்தும் பற்களை உடையவனும், சங்கு சக்கரம் முதலியனவற்றுடன்
கூடியவனும், வில்லைத் தாங்கி நிற்பவனுமான வீரபத்திரன் என்னும் ருத்திர வடிவானவனைத்
தோற்றவித்தார்.
ஸஸர்ஜ ஸஹஸா ருத்ரம்
தக்ஷயக்ஞ ஜிகாம்ஸயா |
ஸஹஸ்ரசிரஸம் க்ருத்தம்
ஸஹஸ்ராக்ஷம் மஹாபுஜம் ||
ஸஹஸ்ரபாணிம் துர்த்தர்ஷம்
யுகாந்தானஸ ஸந்நிபம் |
தம்ஷ்ட்ராகராலம் துஷ்ப்ரேக்ஷ்யம்
சங்கசக்ரதரம் ப்ரபும் ||
தண்டஹஸ்தம் மஹாநாதம்
சார்ங்கிணம் பூதிபூஷணம் |
தோன்றியவுடன்
தன்னை வணங்கி நிற்கும் வீரபத்திரனை, தன்னை நிந்தித்து தக்கன் நடத்தும் வேள்வியை அழித்து
வெற்றியுடன் திரும்பிவா என்று கட்டளையிட்டார். பிணைப்பினின்று விடுபட்ட ஒரு சிங்கம்
போல வீரபத்த்ரன் தக்கனின் வேள்வியை அழிக்க விரைந்தான். உமாதேவியினால் படைக்கப்பட்ட
பத்திரகாளியும் கணங்கள் பல புடைசூழ அவனுடன் புறப்பட்டாள். அனைவரும் தக்கன் வேள்வி நடத்தும்
இடத்தை விரைந்து சென்றடைந்தனர். சிவனாருக்கான பங்கைத் தங்களிடம் கொடுக்க கோரி வேள்வியை
பின்னர் பூர்த்தி செய்யுமாறு வீரபத்திரன் கூறியதைக் கேளாத தக்கன் ஏளனம் செய்யவே சினந்த
வீரபத்திரன் வேள்விக்கான பொருள்களைக் களைந்து கங்கையி எறிய, கணங்கள் மற்ற தேவர்களையும்
பல விதமாகத் துன்புறுத்தி அவர்களுக்கு உதவ வந்த கருடனையும் விரட்டியடித்தனர். அதன்
பின்னர் அங்கு வந்த நான்முகன் வீரபத்திரனை சாந்தப்படுத்தி சிவனாரைப் போற்றிப் பாடவும்,
சிவனாரும் அங்கு வந்து அவர்களுடைய புகழ் மாலையை ஏற்று தம்மை நிந்தித்த அனைவரையும் மன்னித்தருளினார்.
(3) அந்தகாசுரன் சிவகணங்களில் ஒன்றானது.
இரண்யகசிபுவின்
மகனான பிரகலாதன் யோக நெறியை கடைப் பிடித்தலில் மனம் லயித்ததால் அவனுடைய பேரரசை அந்தகன்
என்னும் அரக்கன் பெற்றான். முன்னொரு சமயம் தாருக வானத்தில் ஏற்பட்ட கடும் வரட்சியின்
காரணமாக அங்கிருந்த மாமுனிவர்கள் மாமுனிவர் கெளதமரை அண்டி தம்முயிர் காக்க வேண்டினர்.
அவரும் அவர்களுக்கு வேண்டிய மட்டும் உணவைப் படைத்துக் கொடுத்து மகிழச் செய்தார். பன்னிரண்டு
ஆண்டுகள் இன்ப்மாகக் கழிந்தன. பின்னர் ஏற்பட்ட பெரும் மழை காரணமாக மீண்டும் தங்களது
முன்னர் இருப்பிடம் செழிப்படைய அம்முனிவர்கள் திரும்பிச் செல்ல கெளதம முனிவரிடம் அனுமதி
கேட்டனர். அவர் அவர்களை இன்னம் சிறிது காலம் தங்கிவிட்டுப் போகுமாறு வேண்டினர். அவருடைய
வேண்டுகோளைப் புறக்கணிக்க முடியாத முனிவர்கள் ஒரு உபாயம் செய்தனர். அவர்களனைவரும் சேர்ந்து
ஒரு மெலிந்த பசுவைத் தோற்றுவித்து அதனை அம்முனிவரிடம் அனுப்பினர். அவரும் அதனை அன்புடன்
தடவிக் கொடுத்து கொட்டிலில் கட்ட முற்படுகையில் முனிவர்களின் மாயையினால் அது இறந்தது.
அம்முனிவர்கள் அனைவரும் எம்மட்டில் பசுவைக் கொன்ற பாவம் அவரை விட்டு அகலவில்லையோ அதுவரை
தாங்கள் அவரளிக்கும் உணவை ஏற்க முடியாதெனக் கூறி தாருகவனத்திற்குத் திரும்பிச் சென்றனர்.
தன் நுண்ணறிவினால் நடந்தவை யாவற்றையும் உணர்ந்த மாமுனிவர் மிகவும் சினந்து அவர்களுக்கு
“நீங்களனை
வரும் மிகவும் பாவிகளுக்கொப்பாக் மூன்று மறைகளின்றும் விலக்கப் பட்டவராவீர் என்று சாபமிட்டார்.”
அதற்கஞ்சிய
முனிவர்கள் பரமனான சங்கரரை அண்டி தங்களைக் காத்தருள வேண்டினர். சிவனாரும் பக்கத்திலிருந்த
திருமாலிடம் இவர்களுக்கு என்ன வழி என்று கேட்டார். திருமாலும் மறைகளினின்றும் விலக்கானவர்.
பெரும் பாவத்திற்காளானவராகிய அவர்களுடைய மதியை மயக்கும் காபாலம், பாஞ்சராத்ரம் முதலலான
நூல்களை படைப்பதே தகும் என்று திருமால் கூற அதன்படி நூல்களை படைத்து அவற்றை முனிவர்
கடைப்பிடித்து பல முறை பிறந்து கொடிய நரக வேதனையை அனுபவித்து பின்னர் தம்மைப் பணிய
திருமாலும், சிவனாரும் கூறினார்.
அவர்களுடைய
நலனுக்காக் சிவனார் பார்வதியைக் காக்கும் பொறுப்பை நாரணரிடம் விட்டு தான் சடைமுடியுடன்
கூடியவராக மண்டை ஓட்டை அணிகலனாகச் சூடி யாசிக்கப் புறப்பட்டார். நாரணரும் பெண் உருவுடன்
தன் பணியைச் செவ்வனே செய்து வந்தார். இதற்கிடையில் அந்தகன் என்னும் அரக்கன் பார்வதி
தேவியை கவர்ந்து செல்ல நினைத்து மந்தர மலைக்கு வந்தான். அவர்களுடன் போரிட்ட கணங்கள்
யாவும் அழிக்கப்படவே மிகவும் சினந்த நாரணர் மிக்க பலம் பொருந்திய சக்திமார்கள் நூறு
பேரைப் படைத்து அனுப்பினார். அவர்களுடைய தாக்குதலினால் படைத்து அனுப்பினார். அவர்களுடைய
தாக்குதலினால் அந்தகனின் படைகள் அழிக்கப்படவும் பயந்த அந்தகன் ஓட்டம் பிடித்தான். தாருகாவனத்தில்
தன் பணியை முடித்த சிவனார் மந்தர மலைக்கு வந்து நடந்ததை அறிந்து நாரணரை மெச்சினார்.
இவ்விதம் இனிதே காலம் செல்கையில் பார்வதியின் அழகில் மயக்கம் கொண்டு அந்தகன் மீண்டும்
மந்தர மலைக்கு வந்தான். நாரணர், கணங்கள், தேவர்கள் முதலானவர்கள் புடைசூழ சங்கரனார்
அந்தகனுடன் போர் புரிய புறப்பட்டார். தன்னைத் தவிர அவனை அழிக்கவல்லவர் எவருமிலர் என்று
நாரணரால் புகழ்ந்து போற்றப்பட்ட சிவனார் தன்னுடைய சூலத்தை எறிந்து அந்தகனை அதன் முனையில்
தூக்கிப் பிடித்தார். அவரது சூலத்தின் ஸ்பரிசத்தினால் தன் அரக்கத் தன்மை அழிந்த அந்தகன்
சிவனாரைப் பலவிதமாகப் போற்றிப் புகழ்ந்தான்.
இவ்விதமாகப்
பணிந்த அந்தகனை சூலத்தினின்று கீழே இறக்கிய பரமன் அவனைத் தன்கைகளால் தடவிக் கொடுத்து
அவனை சிவகணங்களில் ஒருவனாக இருக்க அருள் செய்தார்.
(4) வானளாவி நின்ற சோதி வடிவம்.
மார்க்கண்டேய
மாமுனிவருடன் லிங்க வழிபாட்டை முடித்த பின்னர் கண்ணன் மார்க்கண்டேய முனிவர் விரும்பிக்
கேட்க பரமனின் சோதி வடிவின் தோற்றத்தைப் பற்றி விவரித்துக் கூறினார்.
முன்னொரு
சமயம் அச்சுறுத்தும் இருள் சூழ்ந்த பரத்த கடலொன்றே பரவிக்கிடந்தது. அதில் சங்கு சக்கர
கதையுடன் கூடி ஆயிரம் தலை கை கால்களுடன் நாரணர் சயனித்திருந்தார். இதற்கிடையில் மும்முறைகளினால்
புகழ்பெற்ற வரும், சிறந்த யோகியும், கரியமான் தோல் உடுத்தியவரும், ஆயிரம் கதிரவனின்
ஒளியுடன் ஒளிர்பவருமான நான்முகன் அங்கு வந்தார். நாரணனைப் பார்த்து அவர் பின் வருமாறு
கேட்டார்.
நான்முகன்- நீர் யார்? ஏன் இங்கு உறைகின்றீர்?
நான் உலகைப் படைக்கும் நான்முகன். தானே தோன்றியவன்.
நாரணன்
- நானே, உலகினைப் படைத்து பின்னர் அழிப்பவன்.
இம்மாதிரி
தொடர்ந்து அவர்களுக்கிடையில் விவாதம் நடைபெறவும் பரமனின் மாயையினால் சிவனாரின் வடிவான
உயர்ந்த லிங்கம் ஒன்று அவர்களுக்கு தெளிவுபடுத்த அவர்கள் முன்னர் தோன்றியது. அது பிரளய
கால நெருப்பைப் போன்று சுடர் விட்டு ஒளிர்ந்தது. அது அழிவும் வளர்ச்சியுமின்றி வானளாவி
நின்றது.
ப்ரபோதார்த்தம் பரம் லிங்கம்
ப்ராதுர்பூதம் சிவாத்மகம் |
காலாநல ஸமப்ரக்யம்
ஜ்வாலா மாலா ஸமாகுலம் ||
க்ஷய வ்ருத்தி விநிமுக்த-
மாதி மத்யாந்த வர்ஜிதம் |
அப்பொழுது,
“நான்முகன்
அன்னவடிவினனாய் நான் இதன் முடியைக் கண்டு வருகிறேன். நீர் இதனின் அடியைக் கண்டு வாரும்”
என்று கூறி மேலே சென்றார். பின்னர் அவ்விருவரும் பரமனின் மாயையையுணர்ந்து பரமனைப் போற்றிப்
பணிந்தனர். அவர்களது புகழ்மாலையினால் மகிழ்ந்த பரமன் அவர்களிருவரும் தன்னுடைய மற்றிரு
வடிவங்களே எனக் கூறி அவர்களுடைய குழப்பத்தைத் தெளிய வைத்தார்.
(5) காலபைரவருக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம்.
மேருமலையின்
உச்சியில் வீற்றிருந்த நான்முகனை அணுகிய முனிவர்கள் பரம்பொருள் யாதென்று வினவ, அவரும்
பரமனின் மாயையின் வசப்பட்டவராய் தன்னையே பரம் பொருள் எனக் கூறிக் கொண்டார். உலகங்களனைத்தையும்
படைத்து பின்னர் காத்து முடிவில் அழிப்பவர் தாமே என்றும் கூறிக் கொண்டார். அவருக்கு
உண்மையை எடுத்துக் கூறி விளங்க வைக்க திருமால் அவரிருக்கும் இடம் விரைந்து வந்தார்.
தன் நாபியில் உடுத்த பிரம்மன் எவ்விதம் பரம்பொருளாகும் என்று கடிந்துரைத்தார். அவர்களிருவருக்கிடையில்
விவாதம் தொடர்ந்து நடைபெறுகையில் நான்கு மறைகளும் அவர்கள் முன்னர் தோன்றி பரம்பொருளைப்
பற்றி எடுத்துரைத்தன.
ரிக்வேதம்
- எந்த
ஒன்றில் பொருள்கள் யாவும் உறைகின்றனவோ, எந்த ஒன்றிலிருந்து எல்லாம் தோன்றுகின்றனவோ,
எந்த ஒன்றை பரம்பொருள் என்று கூறுகின்றனரோ அந்த தேவன் பரமேச்வரனேயாகும்.
யஜுர்வேதம்
- எந்த ஒருவர் வேள்விகளனைத்தினாலும் வழிபடப்படுகின்றரோ,
எந்த ஒருவர் யோக நெறியின் மூலம் தொழப்படிகின்றரோ, எவரைத் தலைவன் என்று கூறிகின்றனரோ
அந்த தேவனே பரமேச்வரன்.
ஸாமவேதம்
- எவரால் இந்த பிரபஞ்சமானது சுழலும்படி செய்யப்படுகின்றதோ,
எந்த ஒருவர் யோகிகளால் நித்தமும் தியானம் செய்யப்படுகின்றரோ அந்த தேவனே சங்கரனாம்.
அதர்வவேதம்
- எவரை தேவர்களுக்கெல்லாம் தலைவனாகக் கூறி
சிறந்த துறவிகள் போற்றுகின்றனரோ அந்த தேவனே பவன், மஹேசன், ருத்திரன் என்றெல்லாம் அழைக்கப்படும்
சிவனார்.
நான்முகன்
– (புன்னகை
புரிந்து)
பெண்ணொரு பாகமும் கூடி கணங்களுடன் மகிழும் அவர் எப்படி பற்றொன்றுமில்லாத பரமனாவார்?
இம்மாதிரி
நான்முகன் கேட்கவும் வடிவற்ற பிரணவமும் வடிவுடன் கூடியதாக அவர் முன் தோன்றி பின்வருமாறு
கூறியது.
பிரணவம்
- உம்முடைய கூற்று தவறானது. சிவனும் சக்தியும்
இணைந்து அருள் பாலிப்பதைச் சுட்டிக் காட்டவே அவரது அந்த வடிவம் என்பதை நீர் அறிந்திலரோ?
இம்மாதிரி
பிரணவம் எடுத்துரைத்ததைக் கேட்டும் கூட நான்முகனின் மனமயக்கம் தெளியாமல் தான் கூறியதையே
கூறிக் கொண்டிருந்தார்.
இதற்கிடையில்
வானளாவி நின்ற மாபெரும் சோதி வடிவினில் ஈசனைக் கண்ணுற்ற நான்முகனின் ஐந்தாவது சிரம்
கோபத்தினால் சிவந்தது ஈசனை ஆணவத்துடன் கேட்டார் – “என்னுடைய
நெற்றியிலிருந்து முன்னர் நீர் தோன்றியது உமக்கு நினைவில்லையா என்ன?
அதனால் என்னைச் சரணமடையும்” பிரம்மனின் ஆணவத்துடன் கூடிய இந்த சொற்களைக்
கேட்ட ஈசன் தன்னுடையதொரு வடிவமான காலபைரவரை அனுப்ப அவரும் நொடிப் பொழுதில் பிரம்மனின்
செருக்கு கொண்ட ஐந்தாவது தலையைக் கிள்ளி எறிந்தார். அந்த தலை களையப் பெற்ற உடனே தன்னகந்தை
அடங்கிய நான்முகன் ஈசனின் காணக்ககிடைப்பதற்கரியதான ஒளிரும் திவ்யமான தேவியுடன் கூடிய
உருவைக் கண்டு களித்து பலவாறாகக் துதித்துப் பணிந்தார்.
அதனால்
மகிழ்ந்த ஈசனும் அருகில் நின்ற ருத்திரனிடம் பிரமம் தேவரின் மேன்மையைப் பற்றி எடுத்துக்
கூறி அந்த கொய்த தலையை கையிலேந்தி பிரம்மஹத்தி தோஷமகல புவியில் பிக்ஷை எடுத்து அலையும்
விரதம் பூணவேண்டுமென்று மொழிந்தார். அது முதற்கொண்டு பலகாலம் மண்டை ஓட்டை ஏந்திய கபால
பைரவராக புவியில் பிக்ஷை எடுத்து நாரணரின் சொற்படி காசியை அடைந்து தன் விரதத்தை முடித்தார்.
(6) சுவேத முனிவர் வரலாறு.
காலஞ்சரம்
என்னுமொரு புண்ணியத் தலமுள்ளது. முன்னொரு சமயம் சுவேதர் என்னும் மாமுனிவர் சிவனாரிடம்
மிகவும் பக்தி கொண்டவராய் ருத்திர மந்திரத்தை எப்பொழுதும் ஓதிக் கொண்டு சிவனாரை வழிபட்டு
வந்தார். அவரது காலம் முடிவடையவும் அப்பொழுது அவரை இட்டுச் செல்ல சூழமேந்தியவனாகக்
காலன் வந்தான். அந்த அச்சுறுத்தும் வடிவைக் கண்ட சுவேதர் லிங்கத்தை இரு கைகளினாலும்
அணைத்தவண்ணம் ருத்திரனை வணங்கி ருத்திர மந்திரத்தை ஓதத் துவங்கினார். அதனைக் கண்டு
நகைத்த வண்ணம் காலனும் அவரை அணுகி வா! வா! என்றழைத்தான்.
ஈசனை வழிபடுபவரை தவிர்த்து மற்றவரைக் கொள்வாய் என சுவேதர் கூறியதைப் புறக்கணித்த காலன்
ஈசனை வழிபடுபவரோ அல்லது வேறெவராயினும் சரி, தன் வசத்தில் யாவருமே தப்ப முடியாது எனக்
கூறி சுவேதரைப் பாசக் கயிற்றால் கட்டினான்.
செய்வதொன்றுமறியாத
சுவேதரும் சதருத்ரியம் என்னும் சிவபெடுமானைஒ போற்றும் மறையினை ஓதிக் கொண்டிருந்தார்.
பின்னர் வானில் பறந்து ஒளிரும் ஒளிப்பிழம்பினைக் கண்டார். அதன் மத்தியில் உமையுடன்
கூடிய பரமனைக் கண்டு மட்டில்லா மகிழ்ச்சி கொண்டார். பரமனைக் கண்ணுற்ற காலன் தன் வேலையை
முடிக்க விரைத்தான். அதைக் கண்டு சினந்த பரமனும் தனது இடது காலால் காலனை உதைத்துக்
கொன்றார். தன்னைப் பணிந்து போற்றிய சுவேதர் முன்னிலையில் சிவனார் மறைந்தார். பின்னர்
நான்முகன் விருப்பத்திற்கிணங்க சிவனார் காலனை உயிர்ப்பித்தார். அவ்விடமே காலஞ்சரம்
என்ற புகழ் பெற்ற தலமாயிற்று.
(7) சிலாத முனிவர் வரலாறு.
முன்னொரு
ஸமயம் சிலாதர் என்றொரு மாமுனிவர் இருந்தார். அவர் தரும நெறி வழுவாது வாழ்ந்து வந்தார்.
அவர் ஈசனைக் குறித்து கடுந்தவம் இயற்றினார். அவர் ஆயிரம் ஆண்டுகள் செய்த இடைவிடா தவத்தினால்
உலகமே தகித்தது. கணங்கள் புடை சூழ உமையுடன் கூடியவராக ஈசன் அவர் முன் தோன்றி உளம் மகிழ்ந்து
வரம் கொடுத்த சித்தமாய் நின்றார். ஈசனின் அருள் மொழியினைக் கேட்ட சிலாதரும் ஈசனுக்
கொப்பானதும், யோனியின் மூலம் பிறவாததும், இறப்பற்றதுமான மகவை வேண்டினார். ஈசனும் அவர்
வேண்டிய வரனை அருளி மறைந்தார். பின்னர் சிலாதர் ஏரைப் பூட்டி நிலத்தை உழுதார். அப்பொழுது
பிளந்த பூமியினின்று நெருப்பினைப் போன்று ஒளிரும் அழகு நிரம்பிய புன்னகை தவழும் பொலிவான
முகத்துடன் கூடிய மகவினைக் கண்டு உள்ளம் மகிழ்ந்தார். குமரனைப் போன்றும் ஒப்பற்ற அழகின்
வடிவாயுமுள்ள அக்குழந்தை மேகத்தினைப் போன்ற கம்பீரமான குரலில், அப்பா!
அப்பா!
என்றழைத்தது. சிலாத முனிவரும் அந்த ஆசிரமத்திலிருந்த மற்ற முனிவர்களையும் அழைத்து குழந்தையைக்
காண்பித்தார். ஜாதகர்மம் போன்ற பிறந்த உடன் செய்ய வேண்டிய சடங்குகளை செய்வித்தார்.
காலக்ரமத்தில் தகுந்த வயதில் ‘நந்தி’ என்னும் அக்குழந்தைக்கு உபநயனம் முதலியவற்றை செய்வித்து
மறைகளைக் கற்பித்தார்.
மறைகளை
முறைப்படி பயின்ற நந்தியானவர் சிவனாரைக் கண்டு அவரருளால் காலனை வெல்வேன் என்று உறுதி
பூண்டு கடற்கரையை அடைந்து ஒருமித்த மனத்துடன் பரமசிவனின் மீது ஈடுபாடுடையவராக இடையறாது
‘ருத்துரம்’ என்னும் மறையினை ஓதிக் கொண்டிந்தார். அவர் கோடி முறை கூறி முடிந்த பின்னர்
கணங்களுடன் கூடிய சிவனார் அவர் முன் தோன்றி அவர் வேண்டும் வரம் எதையும் கொடுக்க இசைந்தார்.
ஒரு கோடி முறை அவரது பெயரை ஜபம் செய்து பின்னர் சிவபெருமான் அவர் முன்னர் தோன்றி அவர்
வேண்டுவது யாது என்று கேட்க மீணுடும் சிவபெருமானின் பெயரை ஜபம் செய்வதே என்று ‘நந்தி’
கூறினார். மூன்று தடவை இம்மாதிரி ஜபம் செய்த பின்னர் மீண்டும் ஜபம் செய்ய விரும்புகையில்
ஈசன் மீண்டும் ஜபம் செய்ய தேவை இல்லை எனக் கூறி மூப்பைத் துறந்து தன் கணங்களுக்குத்
தலைவனாக தன்னிடம் இருக்குமாறு கூறி தன் கணங்களை அழைத்து ‘நந்தி’ க்கு புனித நீராட்டல்
செய்வித்தார். அந்த இடமே காசியில் ‘ஜப்யேச்வரம்’ என்னும் புண்ணியத் தலமாக விளங்குகின்றது.
(8) கிருத்தி வாஸேச்வரர்.
காசியில்
கிருத்திவாஸேச்வரம் என்றொரு புண்ணியத் தலம் உள்ளது. அதன் மேன்மையைப் பற்றி வியாச முனிவர்
மற்றவர்களுக்கு எடுத்துரைத்தார். முன்னொரு ஸமயம் அரக்கனொருவன் அங்கு வாழ்ந்து வந்தான்.
அவன் யானை உருவு எடுத்து அங்கு ஈசனைத் தொழ வரும் அந்தணர்களைக் கொல்ல நினைத்தான். தன்
பக்தர்களிடம் அன்பு பூண்ட முக்கண்ணன் சூலம் ஏந்தியவராய் அங்கு தோன்றி யானை உருவில்
வந்த அரக்கனைக் கொன்றார். யானைத் தோலைத் தான் அணிந்து கொண்டதால் அதற்கு கிருத்தி வாஸேச்வரம்
என்று பெயர் ஏற்பட்டது.
(9) கபர்த்தீச்வரர்.
பல புண்ணிய
தலங்களை தரிசித்த பின்னர் முனிவர்கள் கபர்த்தீச்வரம் என்னும் தலத்திற்கு வந்து அங்கு
மேன்மையான லிங்க வடிவினைக் கண்டு வழிபடலாயினர். அப்பொழுது அவர்கள் வியப்பைத் தரும்
காட்சி ஒன்றைக் கண்டனர். அங்கு மேய்ந்து கொண்டிருந்த பெண் மானைக் கொல்ல அச்சுறுத்தும்
புலி ஒன்று பாய்ந்து வந்தது. பயந்த அந்த மானும் ஓடி ஓடி லிங்கத்தைச் சுற்றி சுற்றி
வந்து கடைசியில் புலியின் பிடியில் சிக்கியது. அந்த மானைத் தன் கூரிய நகங்களால் கிழித்துக்
கொன்ற புலியும் வேறிடம் சென்றது. அந்த மான் லிங்கத்தின் முன்னர் விழுந்து மடிந்ததுமே
வானில் கதிரவனின் ஒளியையொத்த ஒளியொன்று தென்பட்டது. வானவர்கள் அதன்மீது மலர்களைத் தூவினர்.
மறுகணமே அது ஒரு சிவகணமாக மாறி அதற்குப் பின்னர் புலப்படாமல் மறைந்தது.
ஜைமினி
முதலான முனிவர்கள் நாரணரைப் பணிந்து அந்தத் திலத்தின் சிறப்பைப் பற்றி கூறுமாறு கேட்டுக்
கொண்டனர். நாரணரும் கூறத் தொடங்கினார்.
முன்னொரு
காலத்தில் சங்குகர்ணர் என்னும் சிறந்த தபஸ்வி ஒருவர் அந்தத் தலத்தில் நெறி தவறாது வாழ்ந்து
வந்தார். அவர் இடையறாது சிவனாரை வழிபட்டு வந்தும் ருத்திர மந்திரத்தையும் பிரணவத்தையும்
எப்பொழுதும் ஒதிக்கொண்டும் ஆயுள்முழுவதும் பிரம்மசரியம் பூண உறுதி பூண்டும் இருந்து
வந்தார். அம்மாதிரி அவர் யோக நெறியைக் கடைப்பிடித்து வாழ்ந்து வருகையில் ஒரு நாள் அவர்
ஒரு பிரேதத்தைக் கண்டார். அந்த பிரேதமானது எலும்பு தோல் இவைகளைப் போர்த்திக் கொண்டும்
பசியுடன் கூடியதாகவும் மீண்டும் மீண்டும் பெருமூச்சு விட்டுக் கொன்டும் இருந்தத, அதைக்
கண்ணுற்ற அந்த மாமுனிவர் கருணையுடன் அந்த பிரேதத்தைக் கேட்டார்.
முனிவர் - நீ யார்? எங்கிருந்து இங்கு வந்தாய்?
பிரேதம்
- முன்பிறப்பில் நான் ஒரு செல்வந்தனாக இருந்தேன்.
பிள்ளை பேரன் முதலியவருடன் கூடி குடும்பத்தைப் பேணி வந்தேன். ஆனால் இறைவழிபாடோ விருந்தினர்களுக்கு
விருந்தோம்பலும் மற்றும் புண்ணியம் பயக்கும் நல்வினைகள் எதுவும் செய்யவில்லை. ஒரு முறை
காசியில் விடை மீது வீற்றிருக்கும் பரமன், லோக நாயகரான சிவனாரை வணங்கினேன். உடனேயே
எனக்கு மரணம் ஏற்பட்டது மிகவும் அச்சுறுத்தும் அந்தக் கொடிய காலனைக் காணும் வாய்ப்பு
எனக்கு ஏற்படவில்லை. ஆனால் கொடிய பசியுடன் இந்த உருவத்துடன் ஒரு பிசாசாக அலைகின்றேன்.
தாகத்தினால் அல்லல்படுகின்றேன். நல்லது கெட்டது எதுவுமே எனக்குத் தெரியாது. இந்த நிலையிலிருந்து
விடுபெற எனக்கொரு வழி கூறுமாறு பணிவுடன் கேட்கின்றேன்.
முனிவர்
(சங்குர்ணர்)- உன்னைப் போன்ற புண்ணியம் செய்தவர் உலகில் வேறெவருமிலர்.
உன்னைப் போல் வேறெவர் சிவனாரைக் கண்டு வழிபடும் பெரும்பேற்றை பெற்றவர்?
அந்த நற்செயலின் பயனாக இவ்விடத்தை நீ இப்பொழுது அடைந்துள்ளாய், விரைவாக இதோ அருகிலிருக்கும்
நீர்நிலையில் குளிப்பாயாக. அதனால் வெறுக்கதக்க தோற்றமுள்ள இந்த உருவைக் களைவாய் என்பது
திண்ணம்.
இவ்வாறு சங்குகர்ணரால் கூறப்பட்ட பிரேதமும் கருணை
வடிவான முக்கண்ணர் கபர்த்தீச்வரரை மனத்தில் நினைத்து அந்நீரில் மூழ்கி எழச் சித்தமாயிற்று.
அதில் மூழ்கி எழுந்தவுடன் பழைய தோற்றம் மறைந்து பல்வேறு அணிகலன்களுடன் ஒளிர்ந்து கொண்டு
சிறந்த யோகிகளால் சூழப்பட்ட ஒரு தலைசிறந்த தேஜோமயமான வடிவினைப் பெற்று வானில் காட்சி
தந்தது. வானவர், தானவர் முதலான அனைவராலும் போற்றப் பெற்று தம் பழைய உருவினைப் களைந்து
நிற்கும் விந்தையைக் கண்டு மகிழ்ந்த சங்குகர்ணர் பரமனின் (கபர்த்தீச்வரனின்)
மேன்மையை புகழ்ந்து பாடி பணிந்து நின்றார்.
(10) பிக்ஷை பெறாது வருந்திய
வியாச முனிவர்.
பல புண்ணிய
தலங்களுக்குச் சென்று வழிபட்ட பின்னர் வியாஸ முனிவர் கடைசியில் வாராணஸி (காசி)யை
அடைந்தார். அங்கு அவர் முனிவர்களின் நெறியைக் கடைப்பிடித்து பிக்ஷை எடுத்து உண்பராகவும்
பரமனைப் போற்றி பணிபவராகவும் இருந்து வந்தார். ஒரு நாள் பிக்ஷைக்காக சுற்றி அலைந்தும்
கூட அவருக்கு பிக்ஷை கிடைக்கவில்லை. அதனால் சினமடைந்த அவர் அங்கு வாழும் அந்தணர் அனைவருக்கும்
தாம் விரும்பியது கைகூடாமல் போக தடை ஏற்படுத்துகிறேன் என்று நினைத்தார். அந்தக் கணமே
சிவனாரின் உடலினொரு பாகத்தினளான உமை அன்னை அவர் முன் மனித வடிவில் தோன்றினாள். “ஓ
மாமுனிவரே! இந்தப் பட்டணத்திற்கு நீங்கள் சாபம்
கொடுக்க வேண்டாம். என்னிடமிருந்து பிக்ஷையை ஏற்றுக் கொள்ளும்”
என்று கூறி பிக்ஷை அளித்தாள். மேலும், “நீங்கள் இப்பொழுது சினத்திற்கு இடங்கொடுத்தமையால்
நீங்கள் இப்பட்டணத்தில் இனியும் தங்கக்கூடாது. ஏன் எனில் நீர் நன்றி மறந்தவர்,”
எனக் கூறினாள். இம்மாதிரி அனனை கூறியதைக் கேட்ட வியாஸ முனிவரும் தியானத்தின் மூலம்
தன் முன் மானிட வடிவில் வந்தது அகில உலகிற்கும் அன்னையான உமாதேவியாரென்பதை உணர்ந்தவராக
அன்னையைப் பலவிதமாகப் போற்றிப் பணிந்தார். பின்னர் அவர், அஷ்டமியிலும் சதுர்த்தசியிலும்
மட்டும் அப்பட்டணத்திற்குள் நுழைய அனுமதி தாருங்கள்,”
என்று அன்னையிடம் வேண்டினார். அப்படியே ஆகட்டும் என்று அருளிய அன்னையும் அப்பொழுதே
மறைந்தார். இம்மாதிரியாக வியாசமா முனிவர் அந்தந்த தலங்களின் சிறப்பையுணர்ந்தவராக அதன்படி
நியமம் கடைப்பிடித்து பயனடைந்தார். இதனின்றும் அவிமுக்தம் என்னும் காசியின் சிறப்பு
நமக்குத் தெரியவருகின்றது.
(11) ருத்திர கோடி என்னும்
திலத்தின் மேன்மை.
முன்னொரு
ஸமயம் கோடிகணக்கான பிரம்ம வித்துக்களான மாமுனிவர்கள் ஒரு புண்ணிய காலத்தில் ஒன்று கூடி
‘ருத்திர கோடி’ என்று பின்னர் பெயர் பெற்ற அந்தத் தலத்தை அடைந்து சிவனாரைக்காண அவாக்
கொண்டனர். தானே அவரைக் காணும் பேற்றை முதலில் பெறுவேன் என்று ஒவ்வொருவரும் கூறவே அவர்களுக்கிடையில்
பெரும் விவாதம் ஏற்பட்டது. அச்சமயம் தன்னிடம் அவர்களின் சிறந்த ஈடுபாட்டைக் கண்ட யோகிகளின்
முதன்மையான ருத்திரன் என்றழைக்கப்படும் சிவனார் அவர்கள் முன்னிலையில் கோடி ருத்திர
வடிவில் தோன்றினார். அது முதற்கொண்டு அவ்விடம் ‘ருத்திர கோடி’ என்று அழைக்கப்பட்டது.
தம் முன்னர் தோன்றிய கோடிக்கணக்கான ருத்திரரை வழிபட்டு மாமுனிவர்களும் மட்டிலா மகிழ்ச்சியடைந்தனர்.
அவ்விடம் சென்று வழிபடும் யாவரும் நான்கு விதமான முக்திகளில் ஒன்றான சிவனாருடன் ‘ஸாமீப்யம்’
அல்லது ‘அவரது அருகில் இருத்தல்’ என்னும் நிலையை அடைவர்.
(12) பாணன் என்னும் அரக்கனின்
வரலாறு.
பலி என்னும்
அரக்க மன்னனுக்கு நூறு பிள்ளைகள் இருந்தனர். அவர்கள் அனைவரிலும் பாணன் என்பவனே சிறந்து
விளங்கினான். அவன் சிவனாரிடம் மிகவும் ஈடுபாடு உடையவனாக ஆட்சி புரிந்து வந்தான். மூவுலகையும்
தன் குடைக்குக் கீழ் கொணர்ந்து இந்திரனுக்கும் இன்னல் செய்தான். இந்திரன் முதலான தேவர்கள்
சிவனாரிடம் சென்று முறையிட்டனர். “உம்முடைய சிறந்த பக்தனான பாணன் என்னும்
அரக்கன் எங்களுக்கெல்லாம் தீங்கு விளைவிக்கின்றான்” என்று
கூறினர். அந்தப் பரமனும் தன்னிடம் தேவர்கள் முறையிட்ட அந்தக் கணமே ஒரே ஒரு அம்பை எய்து
திருவிளையாட்டாகவே பாணனுடைய பட்டணத்தை எரித்தார். பட்டணம் எரியவே பாணனும் சிவனாரைச்
சரண் அடைந்தான். அங்குள்ள சிவலிங்கத்தைத் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு அந்தப்
பட்டணத்தினின்றும் வெளியேறி பரமனைப் பலவிதமாகப் போற்றிப் பணிந்தான். தனனைப் பணிந்த
பாணனை தன் கணங்களில் ஒன்றாகச் செய்தார்.
(13) யதுவம்ச அரசன் துர்ஜயனின்
வரலாறு.
யதுகுலத்தில்
தோன்றிய ‘துர்ஜயன்’ என்றொரு மன்னனிருந்தான். அவன் சிறந்த கல்வி கற்றிருந்தான். அவனது
மனைவி சிறந்த அழகுள்ளவளாகவும், நற்குணங்களனைத்தும் கொண்டவளாகவும், தரும நெறியில் தன்
கணவனைப் பின் பற்றிச் செல்பவளாகவும் இருந்தாள்.
ஒரு ஸமயம்
அந்த மன்னன் யமுனை நதிக்கரையில் இனிமையாகப் பாடிக் கொண்டிருக்கும் ஊர்வசி என்னும் தேவ
மடந்தையைக் கண்டான். காம வேட்கை மிகுந்தவனாக அவளருகில் சென்று தன்னிடம் இன்புற்றிருக்க
அவளை வேண்டினான். அவனழகில் மயங்கிய அவளும் அவனுடன் பல காலம் இன்புற்றிருந்தாள். பின்னர்
நினைவு கொண்டவனாகத் தன் நகருக்குத் திரும்பி செல்ல அவளிடம் விடை கேட்டான். இத்தனை காலம்
இன்புற்றிருந்தும் தனது வேட்கை தணியவில்லை என்று கூறிய அவள் தன்னுடன் இன்னமும் ஓராண்டு
காலம் தங்கியிருக்குமாறு வேண்டினாள். அதற்கு அம்மன்னன் தன் நகரத்திற்குச் சென்று பின்னர்
உடனேயே திரும்பி வருகின்றேன் என்று கூறி அவளிடம் அனுமதி கேட்டான். மீண்டும் மற்றொரு
தேவ மடந்தையுடன் தங்கிவிடக் கூடாது என்று கூறி அவளும் அவனுக்கு தன் நகரம் செல்ல விடை
தந்தாள். அப்படியே செய்கிறேன் என்று கூறிய அவனும் உடனேயே தன்னுடைய பட்டணத்தை அடைந்தான்.
திரும்பி
வந்த அவனைக் கண்ட பதிவிரதையான மனைவி அவன் முகத்தில் ஏற்பட்டுள்ள கலக்கத்தைக் கண்டு
அதற்கென்ன காரணமென்று இன்முகத்துடன் கேட்டாள். அவளது சொற்களைக் கேட்ட அவன் நடந்தவற்றைக்
கூற நாணி வாளாவிருந்தான். தன் கற்பின் மேன்மையால் நடந்தது என்னவென்பதை அறிந்த அவள்
“நீங்கள்
கவலைப் படவேண்டாம். செய்த பாவம் அகல நீங்கள் செயல்பட வேண்டும். நீங்கள் கவலை கொண்டால்
இந்தப் பெருங்குடியும் நாசமடையும்,” என்று கூறினாள்.
பின்னர்
துர்ஜயன் மாமுனிவர் கண்வரின் குடிலை அடைந்து அவரைப் பணிந்தான். கண்வர் வாயிலாகத்தான்
கடைப்பிடிக்க வேண்டிய மாற்று நெறியை அறிந்து அவன் இமயமலைச்சாரலை நோக்கி புறப்பட்டான்.
செல்லும் வழியில் அந்த மாமன்னன் அழகிய மாலையை அணிந்து தன் பொலிவினால் சுடரும் சிறந்த
கந்தர்வன் ஒருவனை வானில் கண்டாள். அந்த மாலையைக் கண்ட மன்னன் அது ஊர்வசிக்கு மிகவும்
பொருத்தமாக இருக்கும் என்று எண்ணியவனாக காம வேட்கை மிகுந்தவனாக அந்த மாலையை அந்த கந்தர்வனிடமிருந்து
கைப்பற்ற எண்ணி அவனுடன் போரிட்டு அவனை வென்று மாலையைக் கைப்பற்றினான்.
முதலில்
யமுனை நதிக்கரைக்குச் சென்று அங்கு ஊர்வசியைக் காணாத மன்னன் புவி முழுவதையும் சுற்றிப்
பார்த்தான். இமயமலைப் பிரதேசத்தை அடைந்த மன்னன் ஹேமகூடம் என்னும் இடத்தை அடைந்து அங்கு
தேவமடந்தையர் பலரைக் கண்டான். ஊர்வசி கூறியதை நினைவில் கொண்டவனாக அவளையே நினைத்துக்
கொண்டு மற்றும் பலவிடங்களில் அவளைத் தேடி அலைந்தான். கடைசியில் தேவலோகம் சென்று மகாமேருவினை
அடைத்து கண்டான். அந்த மாலையை அவளுக்கு அணிவித்து அவள் அழகினைக் கண்டு மயங்கியவனாகப்
பல காலம் செல்வதறியாமல் இன்புற்றிருந்தான். முடிவில் ஊர்வசி, “நீங்கள்
உங்கள் பட்டணம் சென்ற பின் என்ன செய்தீர்?” என்று கேட்டாள். நடந்தவை யாவையும் கூறி,
தன் மனைவி தனக்குக் கூறியது, கணவர் தனக்கு வகுத்த வழி, கந்தர்வனுடன் போர் செய்து தான்
மாலையைப் பெற்றது முதலானயவற்றையும் கூறினான். அவன் மொழிந்தது யாவற்றையும் கேட்டு அவனுக்கு
நன்மை பேணும் அவள் அவனைத் திரும்பிப் போகுமாறு கூறினாள். மேலும் கண்வமுனிவர் அவனுக்கும்
தனக்கும் சாபமளிப்பார் என்றும் கூறினாள்.
அவள் பன்முறை
வற்புறுத்தியும் கூட வேட்கை மிகுந்த அவன் அவள் கூறியவை ஏற்றுச் செயல்படவில்லை. பின்னர்
அவன் மனதை மாற்ற எண்ணிய அவள் தான் விரும்பும் உருவெடுக்கத் திறமையுடையளாதலால் மிகவும்
அருவருக்கத்தக்க உருவத்துடன் புலப்பட்டாள். அதனால் மயக்கம் தெளிந்த மன்னன் கண்வர் கூறியதை
நினைவில் கொண்டு தன்னைத் தானே கடிந்து கொண்டு கடுந்தவம் மேற் கொண்டான். கிழங்குகள்
முதலியனவற்றை புசிப்பவனாக பன்னிரண்டு ஆண்டு காலமும், தவம் செய்த பின்னர் பயத்துடன்
கண்வமுனிவரை அடைந்து நடந்தது அனைத்தையும் அவருக்குத் தெரிவித்தான். அவனைக் கண்டு மகிழ்ந்த
மாமுனிவர் அவன் பாவத்தைக் களைய விரும்பி ‘காசியில் விசுவநாதர் தன் பக்தரைக் காக்கக்
குடிகொண்டு உள்ளார். கங்கையில் புனித நீராடி முன்னோர்களுக்கான சடங்குகளைச் செய்து பின்னர்
விசுவநாதரைத் தரிசிக்க உடனேயே பாவம் யாவும் அகலும். உடனேயே காசிக்குச் செல்,’ என்று
கூறினார். கண்வரை வணங்கிய மன்னன் காசியை அடைந்து அவர் கூறிய முறைப்படி விசுவநாதரை வழிபட்டு
தன் பாவங்களனைத்தும் களையப்பெற்றவனாக தன் நகரத்தை அடைந்து புவியை தரும நெறியுடன் ஆண்டு
வந்தான்.
சிவம்.
கூர்ம புராண சமஸ்கிருத ஸ்லோகங்களுடன் தமிழில் பொருளுடனும் வெளியிட வேண்டுகிறேன்
ReplyDelete