Sunday, August 7, 2016

சிவமயம்
பழைய வடமொழி நூல்களில் சிவபெருமானின் முழுமுதன்மை

 [சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
      வடமொழியில் பழைய நூல்களென்று அம்மொழி நூல்களை நன்காரய்ந்து உணர்ந்த மாபெரும் புலவோர் கொண்டவை பின்வருவனவேயாகும். புராணங்களுள் மிகப்பழைமையானவைமற்சபுராணம்’ ‘வாயுபுராணம்என்பவைகளேயாம். சிவபிரான்றன் முழுமுதற்றன்மைகளை இவையிரண்டும் விரித்துரைக்கின்றன. மற்சபுராணத்தில் சிவபிரான் முப்புரங்களையும் காமவேளையும் நெற்றிக் கண்ணால் எரித்தமையும், கார்த்திகேயன் பிறப்பும், தாரகாசுரனை அழித்தமையும் பிறவுமாகிய வரலாறுகள் சொல்லப்படுகின்றன. வாய்புராணத்தில் தக்கன் வேள்வி அழிப்புண்டமையும், யோகஞ்செய்தலால் வருஞ் சிறந்தபயனும், யோகியின் சிவபிரான் திருவருட்பேற்றினை அடைதலும். சிவபுரத்தின் மாட்சியும் விரித்துரைக்கப்படுகின்றன. இவற்றிற்குப்பின் தோனறிய ‘அக்னி புராணம்’ ‘இலிங்க புராணம்’, ‘ஸ்காந்த புராணம்’, ‘வாமன புராணம்’, ‘கூர்ம புராணம்’, ‘தேவீபாகவதம்’, ‘பிரம்மாண்ட புராணம்’, ‘மார்க்கண்டேய புராணம்’, ‘பவிஷ்யோத்தர புராணம்’, முதலியனவும் சிவபிரானின் முழுமுதற்றன்மைகளையும் உமைப்பிராட்டியாரின் மாட்சிகளையுமே எடுத்துப் புகலுகின்றன. இவையல்லாத வைணவ புராணங்கள் எல்லாம் கி. பி. பதினொன்றாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டனவாகும். வைணவபுராணங்களில் முற்பட்டதாகிய ‘விஷ்ணு புராணமே’ கி. பி. 1045 ஆம் ஆண்டில் இயற்றப்ட்டதாகும் என்று அதனை நன்கு ஆய்ந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ‘உவில்சன்’ என்பவர் கூறியுள்ளா. (H. H, Wilson’s Puranas p. 120). எனவே ஏனைய வைணவபுராணங்கள் எல்லாம் வைணவம் சைவசமயத்துக்கு மாறாய்த் தோன்றி அதனைப் பழிக்கத் துவங்கியபின் வைணவப்புலவோரால் புதியவாய்ப் புனைந்து கட்டப்பட்டனவேயாதல் தெள்ளிதற் புலனாம். உதாரணமாக ‘வைணவபாகவதம்’ தேவகிரி அரசன் மகாதேவற்கும் அவற்குப்பின் வந்த இராமதேவற்கும் அமைச்சனான ஹேமாத்திரியின் அவையிலிருந்த போப தேவரால் அறுநூற்றைம்பது ஆண்டுகட்டுமுன் இயற்றப்பட்டதாகத் தெரிகிறது. இங்ஙனமே நாரதம் முதலிய மற்றைய வைணவபுராணங்களும் கி. பி, பத்தாம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்தே புனைந்துவைக்கப்பட்டன. பழைய பதினெண்புராணங்களிற் சேர்ந்த சிலவற்றின் பெயர்களையே புனைந்து கட்டிவிட்டமையால் ஆராய்ந்து பாதர்க்கும் ஆற்றல் இல்லாதார் இவ்வைணவ புராணங்களைப் பழைய பதினெண் புராணஙகளிற் சேர்ந்தனவாகப் பிறழக்கொண்டு மயங்கிப் பெரிதும் இடர்படுவர். உண்மையான் நோக்குவாரெல்லாம் இவை கி. பி. பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் பழைமையைப் பலவாறு திரித்துப் புதுப்பொய் பல புகுத்திச் செய்யப்பட்டனவாதலை நன்கு உணராநிற்பர். (See H. H. Wilson’s Puranas and R. C. Dutt’s A History of Civilization in Ancient India, Vol. II pp. 203-211).
      இவ்வைணவ புராணங்களுக்கு முற்பட்டனவாக மேலெடுத்துக்காட்டிய மற்சம், வாயு, இலிங்கம், காந்தம், தேவீபாகவதம் போன்றவைகளெல்லாம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரையில் ஆக்கப்பட்ட பழையகாலத்துப் புராணங்களாய்ச் சிவபிரான் அருட்டிறங்களையும் அம்மையின் அருட்செயல்களையும் எடுத்துரைத்து அவரே முழுமுதற் கடவுளாதலை வலியுறுத்துகின்றன. இவைகளுள் விஷ்ணுவை முதற்கடவுளாக உயர்த்திச் சிவத்தை இழிக்கும் பகுதி ஓர் எட்டுணையும் காணப்படமாட்டாது. அதனாற் சைவசமயாசிரியர் காலத்தும் அவர்க்கு முன்னே கி.பி. முதல் நூற்றாண்டு வரையிற் சென்ற காலத்தும் சிவபிரானும் அம்மையுமே எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளாக வணங்கப்பட்டமை தெளிவாக விளங்கும்.
      புராணங்களுக்கு முற்பட்ட பழைமையுடையது வால்மீகி இராமயணம் ஆகும். இந்நூலின் பழைய பகுதிகளில் இராமன் திருமாலின் பிறப்பாகக் கொள்ளப்படாமல் அவன் ஆண்மையிற் சிறந்த ஓர் அரசனாகவே உரைக்கப்பட்டுளன். ஆனால் இவ்விராமயணத்திலேயே பல இடங்களிலும் தேவர்கள் சிவபிரானையும் உமைப்பிராட்டியையும் வழிபட்டுப் பேறு பெற்ற வரலாறுகள் பல சொல்லபடுகின்றன. பாலகாண்டம் 27 ஆம் இயலில், தேவர்கள் அனைவருஞ்சென்று சிவபிரானையும் அம்மையையும் வழிபட்டுக் கார்த்திகேயனை (முருகனை)ப்பெற்று, அவனைத் தம் படைத் தலைவனாக அமைத்துக் கொண்டமை நுவலப்பட்டிருக்கின்றது. அதன் 42 ஆம் இயலில் பகீரதன் கங்கையை வானுலகத்திலிருந்து மண்ணுலகத்துக்குக் கொணரும்பொருட்டு நான்முகனை வேண்டிப் பெருந்தவம் புரிந்தகாலையில், அக்கடவுள் அவன் முந்தோன்றிக் கங்கையின் ஆற்றலைத் தாங்கி அதனை நிலத்து உய்க்கவல்லான் சிவபிரான் ஒருவனே யாதலால் அப்பெருமானை நோக்கி அது வேண்டித் தவம் புரியக்கடவாய் என ஏவி மறைந்தமையும் 44 ஆம் இயலில் அங்ஙனமே பகீரதன் சிவபிரானை நோக்கிப் கடுந்தவம்புரிய அப்பெருமான் அவனது தவத்துக்கு இரங்கி அவன் வேண்டியபடியே கங்கையைத் தனது சடைக்கண் தாங்கி நிலத்து உய்த்தமையும் கூறப்பட்டிருக்கின்றன. இஃது இங்ஙணமாகவும், பிற்காலத்து வைணவப்புலவர்கள், விஷ்ணுவின் அடிகளிலிருந்து விழுந்த கங்கையைச் சிவபிரான் தாங்கினார் என இராமாயணத்தில் காணப்படாததொரு செய்தியினைப் புதிது படைத்துத் தாம் புனைகந்த புராணங்களில் நுழைப்பாரயினர். விஷ்ணுவே தம் அடிகளில் கங்கையைத்தாங்கி விட வல்லுநராயின், அவரை நோக்கியே தவம்புரியுமாறு நான்முகக் கடவுள் பகீரதனை ஏகவியிருக்கலாமன்றோ? அது தாங்கவல்லார் சிவபிரானே என நான்முகன் மொழிந்ததும் அம்மொழிப்படியே பகீரதன் தவம் புரிந்ததும், சிவபிரான் அவன் குறை முடித்ததும் பண்டுதொட்டு உலகம் அறிந்த உண்மைகளாகலின் இவற்றைத் தம் புளுகுரைகளால் மறைக்கமுயலும் பிற்காலத்து வைணவர் முயற்சி சிறிதும் நிறைவேறாது.
      நிற்க, விஷ்ணுபாதத்தினின்று கங்கை கீழ் இழிந்தாள் என வைணவர் கதை கட்டிச் சொல்லுதற்குத்தான் யாங்ஙனம் இடம் பெற்றார் எனின், இருக்குவேத காலத்தில் ‘விஷ்ணு’ என்னும் சொல் பகலவனுக்கே ஒரு பெயராக வழங்கிற்று. (See Dr. A.A. Macdonell’s ‘A History of Sanskrit Literature’ P.80). பகலவன் செல்லும் வழி வான் வெளியேயாகலின் அவ்வான்வெளி ‘விஷ்ணுவின் பாதம்’ எனப் பெயர் பெறுவதாயிற்று. ‘பதம்’ ‘பாதம்’ என்னும் வடசொற்கள் ‘அடி’ அல்;அது ‘அடிச்சுவடு தோய்ந்த இடம்’ எனப் பொருள் தரும். நிலத்தின் கண் உள்ள நீர் ஆவியாக மாறி மேலெழுந்து வானத்தின்கன் வைகுதலால் கங்கை வானுலகத்தின்கண் உளள் என ஆன்றோர் உருவகப்படுத்திக் கூறினர். வான்வெளி விஷ்ணுபாதம் எனவும் வானத்தினின்று மழையாக இறங்கும் நீர் கங்கை எனவும் பெயர் பெற்றமையால், இயற்கையில் நிகழும் இந்நிகழ்ச்சியைக் கொண்டு ‘விஷ்ணுவின் அடியிலிருந்ஹு கங்கை கீழ் இழிந்தாள்’ எனக் கதைகட்டி அம்முகத்தால் அக்கங்கை நீரைச் சடையில் ஏற்ற சிவபிரானை வைணவர் பழித்துரைத்து மகிழ்ந்தனர்.
      இன்னும், பாலகாண்டம், 45 ஆம் இயலில் தேவர்களும் தைத்தியர்களும் சாவாமருந்தாகிய அமிர்தம் பெறும் பொருட்டு ஒருங்குகூடிச் சென்று திருப்பாற்கடலைக் கடைய அதன் கண் வாசுகி உகுத்த நஞ்சு பெருகி அங்கே குழுமிய தேவர்கள் முதல் அனைவரையும் அழிக்கப்புக்கமை கண்டு, அவர்களெல்லோரும் பெரிதும் நடுக்குற்றுச் சிவபிரானை அடைக்கலம் புகுந்து “எல்லாம்வல்ல பெருமானே எம்மைப் பாதுகாத்தருள்க, எம்மைப் பாதுகாத்தருள்க!” என்று குறையிரந்தமையும், அங்ஙனமே விஷ்ணுவும் சிவபிரானை நோக்கித்* “தேவரீரே எல்லாத் தேவர்கட்கும் முன் உள்வீர், நீரே எல்லாத் தேவருள்ளும் சிறந்த தலைவராயினீர். ஆதலால், எல்லார்க்கும் வருவதில் முதற்பங்கு தேவரீரையே சாரற்பாலதாகலின், பெருமானே முதற்கண் வந்ததாகிய இந்நஞ்சினைப் பருகியருளும்” என வேண்டினமையும், அவ்விருதிறத்தார் கலக்கத்தையுங் கண்டு இரங்கிச் சிவபிரான் அந்நஞ்சினையே அமிந்தமாகப் பருகி அதனால் தான் ஏதுந்துன்புறாது தேவர் துயர் களைந்தருளினமையும் நன்கெடுத்துச் சொல்லப் பட்டிருக்கின்றன.
      [* விஷ்ணு சிவபிரானை வேண்டிய இவ்வுரை வடமொழியிற் பின்வருமாறு உளது. “தைவதைர் மத்யமாநே துயத்பூர்வம் ஸமுபஸ்திதம், தத்த்வதீயம் ஸுரச்ரேஷ்ட ஸுராணாம் அக்ரதோ ஹி யத், அக்ரபூஜாம் இஹ ஸ்தித்வாக்ருஹாணேதம் விஷம் ப்ரபோ.” – வாலிமீகி இராமயணம், பாலகாண்டம், 45 ஆம் சருக்கம், ச்லோகம் 23-24.]
      இன்னும், அதன் 66 ஆம் இயலில், தக்கன் வேட்ட வேள்விக்கண் கூடிய தேவர்களெல்லாரும் தம்மைப் பெரியராகக் கருதி இறுமாந்து முதலிற் சிவபிரானுக்குச் சேர்ப்பிக்கற்பாலதாகிய அவியுணவினைச் சேர்ப்பியாதுவிட, அவர்களது இறுமாப்பை ஒழித்துத் தனது முதற்கடவுள் தன்மை காட்டி அவர்க்கு நல்லறிவு கொளுத்துதல் வேண்டிச் சிவபிரான் அவர்களைத் தலையறுத்தும், உடலங்களைப் பிளந்தும், உறுப்புக்களை வெட்டியும் ஒட்டித் தானே வெற்றி முதலவனாகத் திகழ்ந்து நிற்பப், பின்னர் அத்தேவர்கள் எல்லோரும் நல்லறிவு பெற்றுத் தமது சிறுமையும் எல்லாம் வல்ல அப்பெருமானின் பெருமையும் உணர்ந்து அவனை வழுத்த, அப்பெருமான் அவர்க்கிரங்கி மீண்டும் அவர்தம் உடலங்களையும் பழுதுபட்ட உறுப்புக்களையும் சீர்  திருத்திக் கொடுத்தருளினமையும் நன்கு விளக்கப்பட்டு உள்ளது.
      மற்றொரு இதிஹாஸமான மாபாரதப் பழம்பகுதிகளிலும் சிவபிரான் தன் முழுமுதற்றன்மையும் அவன் தன்னை வேண்டிக் குறையிரந்த அடியார்க்கு அக்குறை முடித்தமையும் பலவிடங்களிற் சொல்லப்பட்டிருக்கின்றன. இப்பகுதிகளிலுன்கூட இடையிடையே விஷ்ணுவையுங் கண்ணனையும் உயர்த்து உரைக்கும் கதைகள் சிலவற்றை வைணவர்கள் நுழைத்தனராயினும், அவர் நுழைத்த அக்கதைகள் பாரதத்திற்கும் மிக முற்பட்ட பிராமணங்களிலும் வேத நூல்களிலும் காணப்படாமையானும், மற்றுச் சிவபிரானுடைய இறைமைத் தன்மையை நாட்டுங் கதைகளே மிகப்பழைய அந்நூல்களிலெல்லாம் காணப்படுதலானும் விஷ்ணுவையும், கண்ணன் இராமனையும் உயர்த்த முனைந்த கதைகள் பிறகாலத்துப் போந்த வைணவர்களால் புதிது புனைந்து புகுத்தப்பட்டனவாதல் தேற்றமாம்.
      [பதிப்பாசிரியர் குறிப்பு: தவத்திரு மறைமலை அடிகளாரின் “மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்” (கழக வெளியீடு) என்ற நூலின் இரண்டாம் பகுதி 19-வது அத்தியாயத்தினின்றும் தொகுக்கப்பட்டது].


No comments:

Post a Comment