Friday, August 5, 2016

சிவமயம்
பேராசிரியர் திரு. பெ.கு. வரதராசன் அவர்கள் பாடிய
சிவபெருமான் புகழ்மாலை ஒரு கண்ணோட்டம்

புலவர் மு. கங்காதரன் எம்.., பி.டி

[சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
பாயிரம்:
      ‘சிவபெருமான் புகழ் மாலைஎன்னும் இப்பக்தி சிறு நூல் மணத்தால் சீரிய நூல். ‘உருவு கண்டு எள்ளாமை வேண்டும்என்பது இந்நூற்கும் பொருந்தும் தொடரே. இது வாழ்த்துப் பகுதி, நூற்பகுதி என இருபகுதியைக் கொண்டு முன்னதற்கு ஆறுபாடலும், பின்னதற்கு முப்பது பாடலுமாக முப்பத்தாறு வெண்பா மலர்களைக் கொண்டு மணம் வீசுகிறது. இந்நூல் முகப்பில் நேரிசை அகவலால் பாடப்பெற்று நூலாசிரியரின் முன்னுரை ஒன்று இணைக்கப் பெற்றுள்ளது. இதன் ஆசிரியர்நன்னயம்சால் பண்புடையான், அன்புமிக்கான், நல்வயிரக் காவியங்கள் தோயுமநாவான், பன்னரிய தமிழ் வளர்க்கும் ஆசான், செவ்விபயில்வரதராசன்எனும் கவிஞர்ஆவார். இது நாளும் சைவ மணம் பரப்பும் பொத்தனூர் திருமுறை மன்ற வெளியீடாக வந்துள்ளது. அம்மன்றத்தின் பதினோராவது ஆண்டுவிழா நிகழ்ச்சி சைவ சமயத்தாரால் கோயில் என வழங்கப் பெறும் சிதம்பரத்தில் நடந்தபோது வெளியிடப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியர் உள்ளக்கிடக்கை:
                பருப் பொருட்டாகிய பாயிரங் கேட்டார்க்கு
       நுண் பொருட்டாகிய நூலினது விளங்கும்

என்ற முன்னையோர் கொள்கைப்படி நூற்பொருள் உணர்தற்கு முன்னர் நூலாசிரியரே வழங்கும் முன்னுரையில் காணப்பெறும் செய்தியை உணர்ந்து கோடல் நலம் செய்யும் என்பது ஒருதலை.
      ‘மலர்கள் மலர்ந்தால் இறைவன் முடித்தலத்தைச் சார வேண்டும். இன்றேல் வண்டு துய்த்தற்காகவேனும் மலர்தல் வேண்டும். அதுவுமின்றேல் பிறர்சூட்டிக் கொள்ளும்படியாக எண்ணத்தைத் தூண்டிச் சூட்டப்பெற்று இசைபட வாழவேண்டும். யாவராலும் காணப்படாத நிலையில் புதரின் இடுக்குகளில் இருப்பினும் மணமேனும் பரப்புதல் வேண்டும்என ஒட்டுவகையான மனிதவாழ்வு அமைய வேண்டிய முறையைச் சுட்டிக்காட்டிச் செல்வது பிறந்ததன் பயன் எவ்வகையிலேனும் பிறர்க்குப் பயன்பட வாழ்வதே என்பதைத் தெளிவாக்குகிறது இந்நூலின் பாயிரம்.
நூல்: யாப்பமைதி:
      தலைமாலை கொண்ட சிவபிரானார்க்கு அடியார்கள் பலரும் சொன்மாலை சூட்டி வழிபட்டனர். அவை எண்ணிறந்த தேவாரமாக, மும்மணி மாலையாகம் இரட்டைமணி மாலையாக மேலும் பிறவாகப் பொலிந்தன. ஆசிரியரும் அடியார் வழி நின்று கருத்தலங்கலைச் சூட்டுவதை,
                மனத்தில் தோன்றிய மலர்ப்பறித்து அவற்றைச்
       சிவபெருமான் புகழ்மாலை யான செய்தேன்.’
               
என்னும் முன்னுரையாக நின்ற அகவல் அடிகளால் உணர்கின்றோம். கருத்து மணம் மிக்க முப்பது வெண்பா மலர்களை இறையன்பு என்னும் நார்கொண்டு பிணைக்கப் பெற்றிருப்பது இம்மாலை நூல்.
வெண்பா யாப்பு பத்தினித்தன்மை வாய்ந்தது. செப்பலோசையும் சங்கராபரணப் பண்ணும் தனக்கெனக் கொண்ட இவ்யாப்பில், சீரிய கருத்துக்களைச் செப்பவும், சங்கரன் புகழைக் கூறவும் ஆசிரியர் மேற்கொண்டது பொருத்தமானதே. வாழ்த்துப்பகுதி, நூற்பகுதி என்னும் இரண்டு பகுதிகளிலும் உள்ள வெண்பா மலர்கள் எண்ணிக்கை முப்பத்தாறு. இவற்றுள் இரண்டு வெண்பாக்களே இன எதுகையை நோக்கிப் பார்க்கும்போது ஒருவிகற்பத்தால் வந்த ஆசிடையிட்ட நேரிசைவெண்பாக்களாக அமைந்துள்ளன. ஏனைய முப்பத்து நான்கு வெண்பாக்களும் இருவிகற்பத்தான் வந்த ஆசிடையிட்ட நேரிசை வெண்பாக்களாகக் காணப்படுகின்றன. இவையனைத்தும் இயற்சீர்வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் விரவி வந்த ஒழுகிசைச் செப்பலோசையே பெற்று வருகின்றன.
சிவாய நமவென்னும் சீர்சொல்லி வாழ்வ
துவாயமெப் போது முனககு

      எனவரும் (நூற்பகுதி-4) ஓரிடத்தில் மட்டும் எதுகை நோக்கிய விகாரத்தைக் காண்கிறோம். நல் என்னும் நிலைமொழியுடன் உயிர்முதலாகிய இடம் என்னும் வருமொழி இணையும் போழ்து. ‘தனிக்குறில் முன் ஒற்று உயிர்வரின் இரட்டும்என்னும் விதிப்படி நல்லிடத்தை எனப் புணர்தல் வேண்டும். ஆனால்,
                உன்னிடத்தில் கூறி யிரப்பதற் கொன்றுண்டாம்
       நன்னிடத்தை யேநாடும் நாயகனே
               
என்னும் ஓரிடத்தில் மட்டும்நீணுலகம்என அப்பர் பெருமான் ஆண்டது போல எதுகை நோக்கிய விகாரமாக வந்துள்ளது. மேலும் இணைக்குறள் நேரிசை வெண்பாவோ, இன்னிசை வெண்பாவோ இதன்கண் இடம் பெற்றில். இந்நூலில் பலவகையான முரண்தொடைகள் அமைந்திருப்பதையுங் காணலாம். இதற்கு யாப்பமைதியோடு நடக்கின்றது இந்நூல்.
வாழ்த்துப் பகுதி:
      இந்நூலின் வாழ்த்துப் பகுதி கணபதி துதி (1), அவையடக்கம் (1), மூவரது பெருமையும் நினைவும் (1), திருமுறைகளும் பயனும் (2) என்னும் ஐஞ்சிறு தலைப்புகளுடன் ஆறு பாடல்கள் கொண்டு அமைந்துள்ளது.
வாழ்த்துப் பகுதி: கணபதி துதி
      பிடியதன் உரு உமை கொளமிகு கரியது என்னும் தேவாரத்தில் விநாயகர் பிறப்பு காணப்படுகின்றது. கணபதியைப் பற்றி வழங்கும் கதைகளில் ஒன்று. அவரை வழிபடாது சென்ற சிவனது தேர் இற்ற நிகழ்ச்சியாகும். இதனைஅச்சிவன் உறை ரதம் அச்சது பொடிசெய்தஅதிதீராஎனும் தொடர்களில் அருணகிரியார் குறிக்கின்றார். இலக்கண உரையாசிரியர்களுள் ஒருவரான சேனாவரையரும்,
                தன்தோள் நான்கின் ஒன்று கைம்மிகஉம்
       களிறுவளர் பெருங் காடாயினும்
       ஒளிபெரிது சிறந்தன் றளிய என்நெஞ்சே

எனக் கணபதி துதியை அமைக்கின்றார்.
                திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளாகிய சிவனார் முதல் சங்கத்துத் தலைமைப் புலவர். களவியல் என்னும் பெயரில் அறுபது நூற்பாக்கள் யாத்தவர். ‘கொங்கு தேர் வாழ்க்கைஎனும் சங்கப் பாடலை இயற்றியவர். ‘மதிமலிபுரிசைஎனும் சீட்டுக்கவியுந் தந்தவர். குமரக் கடவுள் சங்கப்புலவராக இருந்தவர். களவியல் உரைக்கும் காரணிகளாக நின்று மெய்யுரை கூறிய உருத்திரசன்மர். அகத்தியனுக்குத் தமிழ் உணர்த்தியவர். விநாயகரோஎனின், ‘முத்தமிழ் அடைவினை முற்படு கிரிதனில் முற்பட எழுதிய முதலோன்எனப் பெறுபவர். மூவருமே எழுதுதல், மெய்யுரை காணல் முதலியவற்றில் சிறந்த்வர்கள், தமிழோடு தொடர்பு பூண்டவர்கள். இம்மூவருள், இந்நூல் சிறக்க அருளும்படி சிவனை வேண்டியழைப்பது முறையன்று என்னை? சிவன் மீது பாடப்படும் தமிழுக்கு அவனே துணை நிற்றலாகாது என்பதனாலாம். குமரனோவெனில், அவன் இளையன் முன்னுரிமை குடும்பத்தில் மூத்தவர்க்கே தரல் இயல்பு என்பது பற்றிக் கணபதியைக் காக்கும்படி புலவர் துதிபாடினர் போலும். மேலும், எழுதுதலாகிய தன்வினைக்கு ஏடும் எழுத்தாணியும் எடுத்தவனையே துணையாக அழைத்தனர் எனலுமாம். அது பற்றியே இந்நூலாசிரியரும் கணபதி துதியை அமைத்துஅலகில் பெருமை புனையப் பிழை நலிய வருக களிறே மகிழ்ந்துஎன வேண்டி வணங்குகின்றார்.
      ‘ஓம்என்ற பிரணவத்தின் இடைப்பட்ட எழுத்தாகிய உகரம் மங்கல எழுத்தாகலின் பொருத்தம் பற்றி முதற் கண் உகரத்தில் இந்நூல் தொடங்கப் பெறுகின்றது. அன்றியும், ஓங்கார வடிவினனாகக் காட்சிதரும் கணபதியின் துதியாகலின், அதனுள் ஒன்றாகிய காத்தல் பொருண்மையை உணர்த்தும் உகரத்தை முதற்கண் பெய்தமைத்தார் எனலாம். மற்றும் முன்னைப் பெரியோர்கள் எல்லோரும்உலகம்எனும் சொல்லை முன்னர் வைத்துத் தங்கள் நூல்களைத் தொடங்கினார்களாதல் பற்றி இந்நூலாசிரியர்உலகம்எனத்தொடங்கினார் என்பது பொருந்துவதே. சிறப்பாகத் தென்னாட்டார்க்கும் பொதுவாக உலகர்க்கும் உரியன் இறைவன் என்பது கருதி
                தென்னாடுடைய சிவனே போற்றி
       எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

என்றுரைத்த மாணிக்கவாசகரைப் பின்பற்றிஉலக முதல்வன்எனத் தொடங்கினார் நம் ஆசிரியர் என்பதும் ஒன்று இங்ஙனம் கணபதி துதியைத் தொடங்கியவர்முதல்வன் இருதாள் நிலவும் மனத்தில் பெருமைபுனையப் பிழைகள் நலிய களிறே வருக மகிழ்ந்து நிறைகஎன முடிக்கின்றார்.
வாழ்த்துப் பகுதி அவையடக்கம்
      அவையடக்கப்பகுதிபூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்என்னும் பழமொழியுடன் தொடங்குகின்றது. பொன்மலையைச் சார்ந்த பொல்லாக் கருங்காக்கையும் பொன்னிறம் பெறும் என்னும் காரிகை ஆசிரியரின் வழி நின்றுபூவொடு சேர்ந்த நாரும் மணம் பெறும், காவொடு சேர்ந்த புன்மலரும் மேன்மையுறும், நீசன் என் பாடலும் இறைவன் புகழொடு சேர்தலால், தகுதியுறும், அவ்வழியே யானும் தகுதியுறுவேன்என மொழிவது நினைத்து மகிழ்தற்குரியது.

வாழ்த்துப்பகுதி சமயக் குரவர் துதி
      காஞ்சிபுராணத்தில் சைவசமயக் குரவர் நால்வர் வணக்கத்தை வைத்தாற்போல இவ்வாசிரியரும் நால்வர்க்கும் வாழ்த்தமைக்கின்றார். இவர் தம் மனத்தில் மனைவியர் இருவருடன் இன்றைவாழ்க்கையை மேற்கொண்டொழுகிய சுந்தரரே முதற்கண் நிற்கின்றார். இரண்டாவதாகத் திருமனமேற்ற திருஞானசம்பந்தரும் மூன்றாவதாகத் மணமேற்காத அப்பர் பெருமானும் நிற்கின்றனர். காரணம், ‘பிறவிப்பெருங்கடல் நீந்த விரும்புவோர் துறவித்துயர் தாங்க வேண்டா, இல்லறத்தில் இருந்து வாழ்ந்து துயர் போக்குந் திருமுறைகளை ஓதினால் போதும்என்னும் கருத்தினர் ஆதலின் என்று கொள்ளலாம். திருநாவுக்கரசரும்காதல் மடப்பிடியோடும் களிறு களித்து வருவன கண்டேன்எனத் திருவையாற்றுத் திருப்பதிகத்தில் இல்லறத்தைச் சிறப்பிப்பான் போன்றே பாடியுள்ளமை உன்னத்தக்கது மேலும்,
                காமம் சான்ற கடைக்கோட் காலை
       ஏமம் சான்ற மக்களோடு துவன்றி
       அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
       சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே
                                                (தொல்காப்பியம்)

என முன்னையோர் மொழிந்த இலக்கணம் இவ்வாசிரியரை இங்ஙனம் கருதச் செய்து போலும். திருவள்ளுவரும் இல்லறவியலின் பின்னரே துறவியல் வைத்தமை இக்கருத்தை உட்கொண்டோ எனக் கருத வேண்டியுளது.
      வான் கலந்த மாணிக்கவாசகர் தேன் கலந்த திருவாசகத்தைத் தந்து, ‘அழுதால் உன்னைப் பெறலாம்என மொழிந்த வாசகம் இறைவனை அடைவதற்குரிய எளிய சாதனத்தைக் குறிப்பதாகின்றது. ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்எனும் பழமொழியைப் பலகாலும் கேட்டவராகலின் கழுவாய் அறிந்த மகிழ்ச்சியில்உனதாள் கூட்டி விட்டேன் நெஞ்சில் குறித்துஎனக் குறிக்கின்றார்.
வாழ்த்துப்பகுதி: திருமுறையும் பயனும்
      திருமுறை நூல்களை எண்ணுமுகத்தான் அவ்வந்நூல்களுக்கு உரிய ஆசிரியர்களையும் நினைவுகூர்ந்து துதிப்பதாய்க் கருத வேண்டியுளது. காரணம், வாழ்த்துப் பகுதி என்பதால், திருமுறைகள் ஓதில் இல்லறத்தானும் பிறவிக் கடலைக் கடக்கலாம், மரணமிலாப் பெருவாழ்வு எய்தத் துறவித்துயர் தாங்க வேண்டா எனும் முகத்தால்அறம், பொருள், இன்பம், வீட்டைதல் நூற்பயனேஎன்பதைக் குறித்தாராயிற்று.
நூற்பகுதி:
      இப்பகுதி முப்பது பாடல்களைத் தன்னகத்தே கொண்டு மிளிர்கின்றது. பதினேழு சிறுதலைப்புகளைக் கொண்டுள்ளது (தலைப்புகளின் விவரங்களை இம்மலரில் வேறு இடத்தில் அச்சாயிருக்கும் நூற்பகுதியில் காண்க). இப்பதினேழு தலைப்புக்களில் கழிந்ததற்கு இரங்குவதாக அமைந்துள்ளஉண்மையறியாது உயர்விழ்ந்தேன்எனும் தலைப்பே நான்கு பாடல்களைப் பெறுகின்றது. இதனையடுத்து மூன்று பாடல்களைப் பெறுவதுநெஞ்சிற்கறிவுரையேஏழு தலைப்புகள் தலா ஒவ்வொரு பாடலும், எட்டுத் தலைப்புகள் இரண்டிடரண்டு பாடலும் பெற்று வருகின்றன. விளக்கங்கருதி இப்பதினேழு தலைப்புகளும் (1) சிவனார் சிறப்பும் பெயரும் (2) அவனை வணங்குக (3) அடியாரைச்சார்க (4) நெஞ்சிற்கறிவுரை (5) அடைந்தவர் பெறும் பேறு என்னும் ஐந்து அகத்தலைப்பும் (6) அணி என்னும் புறத்தலைப்பு ஒன்றுமாக ஆறு தலைப்புகள் தந்து நோக்குகிறது இக்கட்டுரை.
நூற்பகுதி: சிவனார் சிறப்பும் பெயரும்.
      சிவன் (7) வானவர் மகளிர் தம் காதோலையும் கடிசூத்திரமும் காக்க விடம் உண்ட கண்டன், ‘பித்தனோ மறையோய்என்ற மறையோனுக்கருள் புரிந்த பித்தன், அருளாளன், ஆண்டவன், ஆதி, குருநாதன், நன்றெல்லாம் ஒன்றானவன் (8) ஆண்டான், விஞ்சும் புகழ் சேர்ப்போன் (9) சீரழிந்து போவார்க்குந்துணை (10) கழுத்தில் கறுப்புடையான், கருணைபாலிப்பான், பொறுப்புடையான், (11) எண்ணி மகிழ்வோர்க்கு இதயம் களிக்கும் முக்கண்ணன், (12) பிழைகள் அனைத்தும் இறந்திடச் செய்வான் (13) பிழையை நலியச்செய்வான், விரும்பி ஆட்கொண்டான், (14) முருகன் தந்தை, பிழை போக்கும் நாதன், நடேசன் (15) நல்லிடத்தையே நாடும் நாயகன் (16) நாடினார்க்கு இன்பந் நயந்தருளால் நல்குவான், (17) தேடிவருவார்க்கும் வாரார்க்கும் வள்ளல் (18) வானகத்தில் மாமலையில் மண்மீது காணும் ஊனகத்துள் எல்லாமுளான் (20) கவலையெல்லாம் கூட்டோடே ஓட்டிடக்கண்ட ஒருவன் (21) செஞ்சடையான், தீக்கரத்தான், நிலா கங்கை அஞ்சல் என ஏற்ற அருளுடையான், தஞ்சம் என வந்தவரை ஏற்போன் (22) கங்கை சடை கொண்டான், கன்னி இடங்கொண்டான், எங்களிறை (23) இன்பங்கள் எல்லாம் பெறச் செய்வான், கண்ணுதலான், எந்தை, கருணை உள்ளான், (24) எனையாளும் ஈசன் (25) அன்புடையான், அருளுடையான், தவம் முன்புடையார்க்கு என்றும் முன்னிற்பான், என்னுடைய தாய் பாசமே கொண்ட பசுபதி (26) இடர்களைவான், உளத்தே தான் உறைவான் (27) வேத முதல்வன் அப்பன், என நாற்பத்தைந்து பெயர்களை இந்நூற்பகுதியின் அமைக்கப்பெற்றுச் சிறப்புகளைச் சுட்டுவதாகவும் விளங்கின்றன. பல கதைகளும் இத்தொடர்களின் உள்ளமைவதால் இறைவனின் அருள் செயல்களும் புலப்படுகின்றன. அவையெல்லாம் விரிக்கின் பெருகும். வாழ்த்துப்பகுதியில் உலகமுதல்வன், ஒருவன், ஈசன் எனும் முப்பெயர்கள் காணப்பெறுகின்றன. இவற்றையும் சுட்ட நாற்பத்தெட்டாதல் காணலாம்.
நூற்பகுதி: அவனை வணங்குக.
      சிவன் முருகனை ஈன்றவன். முருகனே தன் திறத்தால் தேவர்களை நீக்கியவன். மூவுலகும் மகிழ்பூக்கச் செய்தவன், சிந்திப்பவர் குறையைத் தீர்க்கதன் தெய்வானையுடன் செந்திற்பதி வாழ்பவன். குன்று தோறாடிக் குறையிரந்து கும்பிடுவார் என்றுமே இன்பம் பெறச் செய்பவன். குன்றுருவ வேள்வாங்கி நின்றவன். வேதமுதல்வன். இவற்றுள் தந்தைக்குப் புகழ் சேர்த்தவன். இத்தகைய மகனைப் பெறுவதே பேறு. எனவே, யாவர் இவனைப் போல் புகழ் வளர்க்கும் பிள்ளையைப் பெற்றார்? எனப் பெருமிதத்துடன் கேட்டு அத்தகையானுக்கே சிரந்தாழ்த்த விரும்புவது சிறப்பாகவுள்ளது.
      மேலும் முருகன் தாய் வயிற்றில் தோன்றினவனல்லன். சிவனருளால் தோன்றியவன். பிறதேவரெல்லாம் பெண் சம்பந்தமாகத் தோன்றியிருப்பர். இவனோ பெண் சம்பந்தமாகப் பெறப்படாத சிவன் பிள்ளை. உண்மையில் ஆண் பிள்ளை இங்ஙனம் சிவனைப் போல் ஆண்பிள்ளை பெற்றவர் யார்? அத்தகு திறனுடையான் அனைத்திலும் வல்லான். அவனுக்கே, கண்டு, கேட்டு, உண்டு, உய்த்து, உற்றறிதல் எனும் ஐம்புலவாயில் கட்டுண்ட சிரமே தாழ்த்து என்பது நயம் பயப்பதாக உள்ளது. வள்ளுவனாரும்கோவில் பொறியில் குணமிளவே எண்குணத்தான், தாளைவணங்காத்தலைஎனக் குறிப்பிடுகின்றார். ‘தலையே நீ வணங்காய்எனும் அப்பர் பெருமானின் வாக்கும் உணர்க. மேலும், சிரன் எனும் சினைப்பெயர் அதனையிடைய முதலுக்கு ஆகி வந்து என்பதும் ஒன்று. இது காயத்தால் வணங்கல் வேண்டும் என்பதைக் குறிப்பதாகும்.
      ‘பாடும் பணியே பணியாய் அருள்வாய்எனக் குறையிரப்பதே அடியார்களின் உள்ளம். ‘ஒரு நாமம் ஒருருவம் ஒன்றுமில்லாற்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணங் கொட்டாமோ?’ என அவாவுகின்றது. இத்தகைய உள்ளங்களின் வழிநின்று ஆசிரியர். திருநாமங்கள் பல சொல்லுதல் வேண்டும் என்னும் வேணவாவில், நன்றெல்லாம் ஒன்றானானை, ‘திருநீலகண்டன், சிவபெருமான், பித்தன், அருளாளன், ஆண்டவன், ஆதி என்றெல்லாம் அழை; எனக் குறிப்பது வாக்கால் வணங்குவதாகின்றது. சுந்தரமூர்த்தி சுவாமிகளும், வழுக்கி வீழினும் திருப்பெயரல்லால் மற்று நான் அறியேன் மறுமாற்றம்எனவே உரைத்தார். மேலும், ‘நன்றெல்லாம் ஒன்றானான் நாடுஎனக்குறிப்பது மனத்தால் வணங்குவதாகின்றது.

நூற்பகுதி: அடியாரைச் சார்க
      ‘என்று நீ அன்று நான்என்னும் ஆற்ற்வர்கள் தொண்டர்கள். அவர்கள் தம் பெருமை சாற்றும் தரத்ததன்று. அவர்கள் பெருமையைஇறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம், தொண்டர் தம் பெருமை சொல்லவும் பெரிதேஎனும் ஒளவையார் வாக்கின் வழி விரித்துகிடக்கின்றது. சுந்தமூர்த்திகளும் திருவாரூரை அடைந்தபோழ்துஎந்தை இருப்பதும் ஆரூர் எம்மையும் ஆள்வரோ கேளீர்எனும் அந்தப்பாடல் பாடி அடியார்வாயிலாகவே இறைவனை அடைய விரும்புகின்றார். இதனையெண்ணியே இவ்வாசிரியரும்அடியாரைச் சார்கஎன அறிவுறுக்கின்றார் எனக்கருதலாம். மேலும், இவர்தம் உள்ளம் அடியாரினும் அடியார் கூட்டத்தில் திளைத்திருத்தலையே விரும்புவதை,
                மனத்தால் சிவனை மறவாமல் எண்ணி
       வனத்தார் மலரைப் பறித்தேஇனத்தார்
       உடன்கூடித் தூவுவார் உள்ளன்பு உடையார்
       உடன்கூடி வாழ்வாய் உவந்து.
               
என்னும் பாடல் அங்கைக் கனியாக்குகின்றது. இங்ஙனம் அடியாருடன் கூடி மகிழ்வதை விரும்பும் ஆசிரியர் வாழையடி வாழையென வந்த அடியார் கூட்டத்தை அடையாளங் காட்டத் தவறவில்லை.
மார்பில் உருத்திராக்க மாலை மனத்தகத்தே
சேர்தல் சிவபெருமான் சிந்தனையேநேர்சடையும்
நெற்றியிலே பூசுந் திருநீறும் நேர்வாழ்வும்
உற்றவரே ஈசர்க் குறவு.

என்ற பாடலால் அடியாரது திருமேனிப் பொலிவும் மனப்பொலிவும் எடுத்துரைக்கின்றார்.
      எரியும் விளக்கிற்குத் தூண்டுகோல் தேவை. அது போலவே இறையன்புடையார்க்கும் குரு எனும் தூண்டுதல் வேண்டும். அதனால் தான்.
                கொண்ட கவலையெல்லாம் கூட்டோடே ஓட்டிடக்
       கண்ட ஒருவனை நான்கண்டு கொண்டேன்.
               
என இந்நூலில் ஆசிரியர் குறிப்பிடுகின்றார். பெற்ற குருவினுக்குத் தொண்டனாகித் தொழும்பு செய்தலும், படைத்த குருபரனுக்கு அகமும் புறமும் உரிமையாக்கலும் இவ்வாசிரியரின் மதமாக உள்ளது என்பதைக் ‘…தொண்டன், அவனுக்கே ஆகி அகமும் புறமும் சிவனுக்கே ஆக்கிவிடல்எனும் அடிகளில் காண்கிறோம். இங்ஙனம் அடியார், அடியார் திருக்கூட்டம், குரு, குருபரன் ஆகியோர்க்கு அடியராகும் சிவன் பேசப்படுகின்றது.
நூற்பகுதி நெஞ்சிற்கறிவுரை.
      சிவபிரானுக்குரிய சிவாயநமஎன்னும் ஐந்தெழுத்து பாடிப்பரவிடப் பற்றறுக்கும் ஆற்றலது. அவ்வைந்தெழுத்து வித்து முளைத்துச் செழித்துப் பயன் கதிர் விளைவிப்பது. அப்பயனே உபாயமாவது. வேண்டுதல் வேண்டாமை இல்லாதானை அல்லும் பகலும் நினைந்து மார்க்கண்டேயரைப் போன்ற அன்பர். கூற்றத்தின் பிடியிலிருந்து விடுபட்டுக் கொல்லும் இடும்பைகள் யாண்டும் இலராயினர், ‘நமசிவாய வாழ்க’ என வாழ்த்திக் கதியெனப் பாடு கிடப்பார்க்கு அதிர வரும் வினைகள் இல்லை. குறைகள் தீரும், சீவன் சிவனாம், முத்தியுண்டாம். இவற்றையெல்லாம் அறியாமல், நிலையில்லாப் பொருளையெல்லாம் தேடித்திரிந்து அலைந்து தேசிழந்த நெஞ்சமே! படைத்தளித்தானை நீ நினையாமல் மனை, மனைவி, பொன் முதலிய தரும் பொய்ச்சுகத்தை மெய்ச்சுகமாக நிஅனைந்து அவற்றிற்கே தஞ்சம் அடைந்தாய். விஞ்சும் புகழ் சேர்க்கும் இறைவனைத்தஞ்சமடைய மறந்தாய். அதன் காரணமாக இகழ் சேர்த்தாய். சிவபெருமான் எத்தகையான் என்பதை அறியாய். சீரழிந்து போவார்க்கும் துணையவன். நம்பனென ஆடும், பாடும், அடியார்க்கு அருள் பாலிப்பவன். அவன் மேலிடும் அன்பு, பழுதெல்லாம் தீயிட்ட பஞ்சாகப் பொசுக்க வல்லது ஆதலின் இறைப்பொழுதும் மறவாது அவனை நினை என மொழிவது இனிமை பயந்து ஊற்றின்பம் தோற்றுவிப்பதாய் உள்ளது. அங்கிங்கெனாதபடி – வான், மலை, மண், காணும் ஊனகம் எனும் எப்பொருளிலும் நிறைந்து பிரகாசிக்கும் மெய்ப்பொருளை, அவரவுடைய நெஞ்சமே! அதனை நீங்கி அகக்கண் பெற்றால் காணலாம் எனப் பற்றில் செல்லும் நெஞ்சத்தைப் பற்றற்றவன் பற்றைப் பற்றும்படி மடைமாற்றம் செய்கின்றார்.
நூற்பகுதி: அடைந்தவர் பேறு
      ‘நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே’ என்றருளிய சுந்தரர் வழிநின்று இவ்வாசிரியரும் என்னுடைய தாய் பாகமே கொண்ட பசுபதியை நான் மறக்க ஆகுமோ? ஆகாது இது! என்றும், ‘குன்றுருவ வேல்வாங்கி நின்றவன் வேத முதல்வன் அப்பன் கால் தாங்கி வாழ்வாய் கதி’ என்றும் வடிக்கின்றார். மற்றும் இறைவனை எந்நாளும் மனத்தில் எழுந்தருளப் பண்ணும் வகையினையும் குறிப்பிடுகின்றார். இங்ஙனம் மறவாமையும், அவனடிக்கே கசிந்துருகலும் பணியாகக் கொண்ட அடியார்கள் தாம் அடையும் பயன்கள் யாவையெனின், பிழைகள் தலிதல், தீமைகள் வாராமை காத்தல், மனம் இன்பச்சுவையாக அவன் தாளைப்பெறுதல், காலன் அணுகாது வாழ்தல், எண்ணும் இன்பமெல்லாம் பெறுதல், வறுமை தவிர்தல், தொல்லை வினையும் இனித்தொடரும் வினையும் நீங்கல் என்பன போன்றவைகளாம் என ஆசிரியர் ஆங்காங்கு விரித்துக் கூறுகின்றார்.
புறப்பகுதி: அணி
      இதுகாறும் நூலினகத்து இடம் பெற்ற செய்திகள் நோக்கப்பெற்றன. இனி நூலின்கண் அமையப்பெற்றுள்ள அணிகளைக் காண்போம்.
      1.     ‘பூவொடு நாரும் மணம் பெறும்’ எனத் தொடங்கும் பாடலில் எடுத்துக்காடுவமை அணியும், ஏதுவணியும் அமைந்துள்ளன.
      2.     ‘மார்பில் உருத்திரக்க மாலை’ எனத் தொடங்கும் பாடலில் தன்மை அணி அமைந்துள்ளது.
      3.     ‘அறிவூட்டும் நூலை அறியாது ஒருவன், வெறியூட்டும் நூலை விரும்பி – நெறிகெட்டு அலைதலைப் போல் ஆனேன்’ என்ற அடிகளில் உவமையணி பொருந்தி வருகின்றது.
      4.     ‘நெஞ்சக் கருங்கல்லை நெக்குவிடச் செய்தாங்கே, கொஞ்சம் கரிசில் நீர் கூட்டுவித்தால்’ எனும் பாடலடிகளில் உருவக அணியைக் காணலாம்.
முடிவுரை.
      பண்டைச் சான்றோர் வழிநின்று படைக்கப்பெற்ற இச்சிறிய நூல் பன்னலங்களும் தன்னகத்தே கொண்டு இலங்குவதை நோக்கத் தொடக்கத்தில் கூறியாங்கு மணத்தால் சீரிய நூலே என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
சிவம்.




                

No comments:

Post a Comment