Monday, August 1, 2016

திருச்சிற்றம்பலம்
சிவபெருமான் புகழ்மாலை
ஆக்கியோன்:
வித்துவான் பெ.கு. வரதராசன் எம்.., பி..எல்., பி.டி

[சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033] 
முன்னுரை
      பூவுல கதனில் பூத்தோ ரெல்லாம்
      பூவென வுதிர்தல் புதிதிலை; பூத்தால்
      அடியார் கையில் அகப்பட் டிறைவன்
      முடிமீ தமரும் முத்தியே பெறுவாய்;
      இலையேல் இருந்த இடத்துனைக் காணும்
      தொலைசேர் வண்டு துய்ப்பதற் கான
      தேனைத் தந்து திளைத்திட வாழ்க;
      தேனு மில்லை, தெளிவுடை யோர்க்குன்
      வண்ண நிறத்தால், வடிவின் அழகால்
      என்ண மெழுப்பி யிசைபட வாழ்க;
      புதரிடைத் தோன்றிப் பிறர்கன் படாவிடில்
      காட்சிக் கரிதாய்க் கருத்திற் கெளிதாய்
      மாட்சிமைப் பட்ட மணத்தால் வாழ்க
      இப்படிப் பட்ட இயல்புக ளுள்ளே
      எப்படிப் பட்ட முறையீருந் தேனும்    
      வாழ்ந்து காட்டுத லேவாழ் வாகும்,
      தாழ்த்து விடாது தான் கடைத் தேற
      சிவனை நினைப்பாய், சிந்தை மகிழ்வாய்
      அவனைச் சார்ந்த அடியார் காட்டும்
      துறையில் மூழ்கித் துன்பம் தவிர்ப்பாய்;
      இறையுந் தவிரா திருத்தியென் நெஞ்சே!
      இறைவன் இருதாள் எளிதிற் பற்ற
      மனத்திற் கிங்கோர் மாற்றங் கூறும்
      மனத்திற் றோன்றிய மலர்பறித் தவற்றைச்
      சிவபெரு மான்புகழ் மாலையான் செய்தேன்;
      தவநெறி பெற்றுத் தரணியில் உள்ளோர்
      பெற்ற மாலையால் பெரும்பே
      றுற்றவர் வாழ்க! வாழ்க வுவந்தே.
கணபதி துதி

      உலக முதல்வன் ஒருவன் இருதாள்  
      நிலவு மனத்தில் நிறையும்அலகில்
      பெருமை புனைய பிழைகள் நலிய
      வருக களிறே மகிழ்ந்து.

அவையடக்கம்

      பூவோடு நாரும் மணம்பெறும், புன் மலர்தான்?
      காவொடு சேரக் கதிபெறும்; - பாவொடு
      ஈசன் புகழ்சேர்த்தேன் என்பத னாலென்னை
      நீசனென் றாலும் நினை.

மூவரது பெருமையும் நினைவும்

      பாட்டால் முதலையுண்ட பாலகனைத் தந்திட்டான்;
      ஏட்டால் சிவநெறியை ஏற்றுவித்தான்; காட்டருஞ்சீர்
      தொண்டால் உயர்ந்தான்; துயர்களைந்த வப்பிறவி
      கொண்டார் திறத்தைக் குறி.

மாணிக்கவாசகர் துதி

      அழுதால் உனைப்பெற லாமெனுந் தேனைத்
      தொழுதார் சுவைக்கத் தொகுத்தாய் – கழுவாய்நீ
      காட்டிவிட்டாய் மாணிக்க வாசகர் கண்டுன்தான்
      கூட்டிவிட்டேன் நெஞ்சிற் குறித்து.

திருமுறைகளும் அவற்றின் பயனும்

      மூவர்தே வாரம் முதிர்ந்தசுவை வாசகமும்
      பாவிசையும் பல்லாண்டும் பாடுகவே – மூலனார்
      மந்திரமும் மாண்பார் தொகை நூலும் சேக்கிழார்த்
      தந்திரமும் பாடத் தரும்.

      பிறவிக் கடல்விழுந்தார் பேரின்பம் காணத்
      துறவித் துயர்தாங்க வேண்டா – இறவித்
      துயர்போக்கும் தூய திருமுறைகள் நாளும்
      உயர்வாக ஓதி வரின்.

நூல்

சிவபெருமானை வணங்குவாயாக

      தேவர் களைநீக்கி தேவ அணங் கைமணந்தான்
      மூவர் மகிழ முருகேசன் – யாவர்
      இவனைப்போல் பிள்ளையை யீன்றெடுத்தார்; ஈன்ற
      சிவனுக்கே தாழ்த்துன் சிரம்.                                   1

பல சிறப்புக்களும் பெற்ற ஒருவன்

      திருநீல கண்டன் சிவபெருமான் பித்தன்
      அருளாளன் ஆண்டவன் ஆதி – குருநாதன்
      என்றெல்லாம் சொல்லி அழைக்கும் ஒருவன்தான்
      நன்றெல்லாம் ஒன்றானான் நாடு.                              2

ஐந்தெழுத்தின் பெருமை

      தேடித் திரிந்தலைந்தாய் தேசிழந்தாய் நெஞ்சமே
      பாடிப் பரவிடநீ பற்றற்றாய் – ஓடிப்போம்
      செல்வத்தை யெண்ணாது சிந்தையில் எப்போதும்
      நல்வித்தை நாடு நயந்து.                                      3

      நயந்துநீ நாடும் நலமான வித்து
      பயன்தரும்சொல் பஞ்சாக் கரமாம் – உயர்ந்த
      சிவாய நமவென்னும் சீர்சொல்லி வாழ்வ
      துவாயமெப் போது முனக்கு.                                   4

அதை ஓதுவார் அடையும் பயன்

      அல்லும் பகலும் அரனை நினைவார்க்குக்
      கொல்லும் கொடுவினைகள் கூடாவே – வெல்லும்
      திருவைந் தெழுத்தைத் தெளிவகக் கூறி
      உருகிவந் திப்பவர்க் கு.                                       5

      பஞ்சாக் கரமோதி பாடு கிடந்தார்க்கு
      எஞ்சாக் குறைகள் எதுவுமே – தஞ்சம்
      சிவனை யடைந்தார்க்குச் சீவமுத்தி யுண்டாம்
      அவனை யடையாதார்க் கென்?                                6

அடியார்க்குரிய அடையாளங்கள்

      மார்பில் உருத்திராக்க மாலை மனத்தகத்தே
      சேர்தல் சிவபெருமான் சிந்தனையே – நேர்சடையும்
      நெற்றியிலே பூசும் திருநீறும் நேர்வாழ்வும்
      உற்றவரே ஈசர்க் குறவு.                                       7

      மனத்தால் சிவனை மறவாமல் எண்ணி
      வனத்தார் மலரைப் பறித்தே – இனத்தா
      ருடன்கூடித் தூவுவா ருள்ளன் புடையா
      ருடன்கூடி வாழ்வா யுவந்து.                                  8
     
நெஞ்சிற்கறிவுரை

      நெஞ்சே! நீ ஆண்டானை நீள நினையாமல்
      தஞ்ச மடைந்தாய் தரணிசுகம் – விஞ்சும்
      புகழ்சேர்க்கும் ஈசன் பொதுமை யுணரா
      திகழ்சேர வாழ்கின்றாய் என்?                                 9

      வஞ்சகரைச் சார்ந்தேன் வகையறியா தேவாழ்ந்தேன்
      தஞ்சமெனக் கூறித் தலைவணங்கேன் – நெஞ்சே!
      சிவனை நினையாமல் சீரழிந்து போவார்க்(கு)
      அவனே துணையன்றோ? ஆம்.                                10

      வழுத்தாது வாழும் மடநெஞ்சே! அன்பு
      பழுத்தாலும் பாடுமடி யார்க்கே – கழுத்தில்
      கறுப்புடையான் என்றும் கருணைபா லிப்பான்
      பொறுப்புடையான் ஈசனென்றே பேசு.                           11
     
அவனிடத்துள்ள அன்பு வினையைச்சுடும்

      அழுகின்றேன் உன்னை அகமுருகப் பாடித்
      தொழுகின்றேன் என்னைத் தொடரும் – பழுதெல்லாம்
      தீயிட்ட பஞ்சாகத் தீரும் சிவனேயுன்
      மேலிட்டு அன்பால் மெலிந்து.                                 12

பிழை பொறுக்கும் பெரியோன்

      எண்ணி மகிழ்வார்க் கிதயங் களிக்குமுக்
      கண்ணன் பெருமை கணித்திடவோ – மண்ணில்
      பிறந்தமுதல் செய்த பிழைகள் அனைத்தும்
      இறந்திடச் செய்வா னிவன்.                                    13

      நான்செய் பிழையை நலியச்செய் வானைநிதம்
      நான்செய் கரும நலமுணர்த்தி – நான்செய்
      வினைப்பயனால் என்னை விரும்பியாட் கொண்டான்
      தனைப்புகழும் வாழ்வே தரும்.                                14

சிவபெருமானிடம் வேண்டுதல்

      சிந்திப் பவர்குறையைத் தீர்க்கத்தெய் வானையுடன்
      செந்திற் பதிவாழும் சீர்முருகன் – தந்தையே
      நான்செய் பிழைபோக்கும் நாதன் நடேசன்தாள்
      தானுறையும் என்னுளத்தில் தான்.                             15

      உன்னிடத்திற் கூறி யிரப்பதற் கொன்றுண்டாம்     
      நன்னிடத்தை யேநாடும் நாயகனே – என்னிடத்தில்
      உண்டான தீமை ஒருகோடி மேலாகும்
      கண்டா யவைபோற்றிக் கா.                                   16

உண்மையறியாது உயர்விழந்தேன்

      நில்லாத செல்வம் நிலைத்த சுகமென்றே
      பொல்லா உலகில் பொலிவிழந்தேன் – நல்லாய்
      படைத்தவனை நெஞ்சாலும் பாடா தொழிந்தேன்
      துடைத்திடநான் பட்ட துயர்.                                   17

      நாடினார்க்கின்பம் நயந்தருளால் நல்குவான்
      கூடினார்க் கென்றும் குறைவில்லை – தேடி
      வருவார்க்கும் வாரார்க்கும் வள்ளல் வழங்கும்
      ஒருநோக் குடையா னுளன்.                                   18

      அறிவூட்டும் நூலை அறியா தொருவன்
      வெறியூட்டும் நூலை விரும்பி – நெறிகெட்
      டலைதலைப் போலானேன்; அந்தோ! சிவனே!
      நிலைகாணேன் உன்னை நினைந்து.                            19
     
      வானகத்தில் மாமலையில் மண்மீது நீகாணும்
      ஊனகத்தில் எல்லாம் உளனன்றி – நீயகத்தும்
      காணலாங் கண்பெறத்தான் வேண்டும் பெறவே
      வீணவா நீக்கி விடு.                                          20
மனக்கவலையோட்டும் வழி

      கொண்ட கவலையெல்லாம் கூட்டோடே ஒட்டிடக்
      கண்ட ஒருவனைநான் கண்டுகொண்டேன் – தொண்டன்
      அவனுக்கே ஆகி அகமும் புறமும்
      சிவனுக்கே யாக்கின விடல்.                                   21

சிவபெருமானின் திருவடிச் சிறப்பு

      செஞ்சடையான் தீக்கரத்தான் சோரும் நிலாகங்கை
      அஞ்சலென ஏற்ற அருளுடையான் – தஞ்சம்
      எனக்கூறி வந்தவரை ஏற்கும் இவன்தாள்
      மனத்தூறு மின்பச் சுவை.                                     22
     
திருவடி பெற்றவர் பெறும் பேறு
     
      வாலறிவும் செல்வமுடன் வானாளும் பேறுண்டாம்;
      காலனவன் துன்பம் கடுகாது; மேலவனாம்
      கங்கை சடைகொண்டான் கன்னி யிடங்கொண்டான்
      எங்களிறை சார்ந்தா ரிவர்க்கு.                                 23

      எண்ணுகின்ற இன்பங்கள் எல்லாம் பெறச்செய்வான்
      கண்ணுதலான் எந்தை கருணையுளான் – பண்ணிறைந்த
      செந்தமிழாற் பாடின் சிரந்தாழ்த்திக் கைகூப்பி
      நொந்தழுவார்க்க் கில்லை நொடி.                              24

இரக்கும் இழிவில்லையாம்

      இல்லை யெனச்சொல்லி ஈயாதான் முன்னின்று
      பல்லை இனிக்குஉன் பாவம்போம் – தொல்லை
      வினைபோம்; தொடரும் வினைபோம்; சிவனே
      எனையாளும் ஈசனென்றக் கால்.                               25

மறவாமல் அவனையே நம்பியிருத்தல்

      அன்புடையான் யார்க்கும் அருளுடையான் ஆனதவம்
      முன்புடையார்க் கென்றுமே முன்னிற்பான் – என்னுடைதாய்
      பாகமே கொண்ட பசுபதியை நான்மறக்க
      ஆகுமோ ஆகா திது.                                          26
     
      எத்தனைதான் துன்பம் எனைநோக்கி வந்தாலும்
      பித்தனையே நம்பிப் பிழைத்திடுவன் – அத்தனையும்
      ஏற்றென் இடர்களைவான் என்னுளத்தே தானுறைவான்
      போற்றிப் பொறுத்திடுவா னால்.                                27

சிவபெருமானின் திருவடிகளை உள்ளத்தில்
எழுந்தருளவித்தல்

      நெஞ்சக் கருங்கல்லை நெக்குவிடச் செய்தாங்கே
      கொஞ்சங் கரிசலும்நீர் கூட்டுவித்தால் – விஞ்சுமனப்
      போதும் மலர்ந்தவன்றன் பொன்னடிகள் தோன்றாவோ?
      ஓதுவதும் பூஜை யுணர்வு.                                     28

திருவடியே கதி

      குன்றுதோ றாடிக் குறையிரத்து கும்பிடுவார்
      என்றுமே இன்பம் பெறச்செய்வான் – குன்றுருவ
      வேல்வாங்கி நின்றவன் வேத முதல்வனப்பன்
      கால்தாங்கி வாழ்வாய் கதி.                                    29

      சிவபெருமான் சீரடிகள் வாழ்க!! சிறந்த
      அவனடியார் வாழ்க! அனைத்தும் – அவனாம்
      புகழ்சேர் திருமுறைகள் வாழ்க புவியில்
      இகழ்நீங்க எல்லா மினிது.                                     30

திருச்சிற்றம்பலம்.
     


      

No comments:

Post a Comment