உ
சிவமயம்
ஆங்கிலமாதுக்கு அருள்புரிந்த அண்ணல் சிவபெருமான்
நாடோடி
சிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
உஜ்ஜயினி நகருக்குப் பக்கத்திலுள்ள ஆகர் என்னும்
நகருக்குப் பக்கத்தில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது. இந்தக் கோவிலுக்குப் பக்கத்திலுள்ள
கண்டோன்மெண்டில் தான் ஆங்கிலத் துருப்புகளின் வீடுகள் இருந்தன.
1879-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் இந்திய – ஆப்கானிய
யுத்தம் ஆரம்பித்தது. அப்பொழுது நம் நாட்டில் பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் இருந்தது. பிரிட்டிஷார்
இந்தியப் படைகளின் உதவி கொண்டு ஆப்கானியரை எதிர்த்து நின்றனர். ஆனால் ஆப்கானியர் வெகு
வேகமாக முன்னேறவே, பிரிட்டிஷ் துப்புக்கள் உஜ்ஜயினிக்குப் பக்கத்தில் இருந்த கண்டோன்மென்ட்
துருப்புக்களையும் போர்முனைக்கு அனுப்பவேண்டி வந்து. அப்பொழுது துருப்புகளுக்குத் தலைவராக அங்கிருந்த லெப்டினன்ட் மார்ட்டின் என்னும்
ஆங்கிலேயரும் செல்லவேண்டி வந்து. அவருடைய மனைவி ஶ்ரீமதி
மார்ட்டின் கண்டோன்மெண்டிலேயே தங்கினார்.
சில நாட்களுக்கு ஶ்ரீமதி மார்ட்டினுக்குத் தம்
கணவரிடமிருந்து கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. திடீரென்று கடிதங்கள் நின்றுபோகவே அவருக்குக்
கவலையாகி விட்டது. அத்துடன் அந்தச்சமயத்தில் ஆப்கன் துருப்புகள் வெகு வேகமாக முன்னேறிக்
கொண்டிருக்கின்றன என்றும், அவை பிரிட்டிஷ் துருப்புக்களை வெகு கொடூரமாக நடத்துகின்றன
என்றும் செய்திகள் கிடைத்தன. தம் கணவருக்கு என்ன ஆபத்தோ என்னவோ என்று ஶ்ரீமதி மார்ட்டின்
கவலைப் பட்டார்.
ஒரு நாள் அவர் தம் குதிரையின் மீதேறிச் சென்று
கொண்டு இருந்த போது அந்தச் சிவன் கோவிலைக் கண்டார். மக்கள் உள்ளே செல்வதையும், உள்ளே
சென்று வழிபட்டுத் திரும்புவதையும் கண்டார்.
அவர் தம் குதிரையை அங்கிருந்த ஒரு மரத்தோடு கட்டி
விட்டு, கோவிலுக்குள்ளே சென்றார்.
ஒரு ஆங்கில மாது கோவிலுக்குள் வந்ததைக் கண்டு
பூஜாரி அவரைத் தேடிக்கொண்டு வந்தார்.
“இது என்ன கோவில்? இங்கு வந்து மக்கள் என்ன செய்கிறார்கள்?
என்று ஶ்ரீமதி மார்ட்டின் பூஜாரியிடம் கேட்டார்.
“இது பைஜநாத் சுவாமியின் கோவி, அதாவது சிவன்
கோவில். இங்கு மக்களுக்கு என்ன குறை உண்டோ அதைப் போக்க வேண்டும் என்று பகவானிடம் பூஜை
செய்வார்கள். பகவானும் அவர்களுடைய குறைகளை நீக்குவார்” என்று சொன்னார் பூஜாரி.
“அப்படியானால் நான் சுவாமிக்குப் பூஜை செய்தால்
அவர் என் மனக்கலையைப் போக்குவாரா?” என்று ஶ்ரீமதி மார்ட்டின் கேட்டார்.
“யார் பகவானிடம் பக்தி செய்கிறார்களோ அவர்கள்
மனக்கவலையை அவர் நிச்சயமாகப் போக்குவார்.”
“என் கணவர் போர்முனைக்குச் சென்றிருக்கிறார்.
அவர் பத்திரமாகத் திரும்ப வேண்டுமே என்று எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. இந்த்
சுவாமி என் கணவரைக் காப்பாற்றுவாரா?”
நீங்கள் ‘நமசிவாய’ என்ற மந்திரத்தை ஜபித்துக்
கொண்டே இருங்கள். பகவானுக்கு ருத்ராபிஷேகம் செய்து வையுங்கள். பகவான் கட்டாயம் உங்கள்
கணவரைக் காப்பாற்றுவார்” என்றார் பூஜாரி.
ஶ்ரீமதி மாட்டினுக்குச் சிவன் பேரில் பக்தி உண்டாகி
விட்டது. பதினோரு உத்தமர்களைக் கொண்டு இந்த அபிஷேகம் பதினோரு நாள் நடந்தது. தினம் விடியற்
காலையில் ஸ்நானம் செய்து விட்டு, ஶ்ரீமதி மார்ட்டின் இந்தப் பூஜையில் கலந்து கொண்டார்.
பதினோராம் நாள், பூஜையில் கலந்து கொண்டவர்கட்கெல்லாம்
அவர் அன்னமும், தட்சிணையும் கொடுத்து விட்டு, வீரு திரும்பினது தான் தாமதம், “அம்மா!
போர் முனையிலிருந்து உங்களுக்கு ஒரு கடிதம் வந்திருக்கிறது” என்று வேலைக்காரன் ஒரு
கடிதத்தைக் கொடுத்தான்.
ஶ்ரீமதி மார்ட்டின் அதை வெகு ஆவலாகப் பிரித்துப்
பார்த்தார். அது அவர் கணவர் எழுதியிருந்த கடிதம் “சிவ பெருமானே! உன் கருணையே கருணை!
என் கணவரை உயிரோடு வைத்திருக்கிறாயே!” என்று நினைத்துக் கொண்டு ஶ்ரீமதி மார்ட்டின்
கடிதத்தைப் பார்த்தார்.
அவருடைய கணவர் எழுதியிருந்தார்:
“நான் செளக்கியமாக இருக்கிறேன். ஆகவே என்னைப்
பற்றிக் கவலைப்படாதே! எத்தனையோ ஆபத்துக்களில் சிக்கியும் எனக்கு ஒன்றும் நிகழ்வில்லை.
பதினோரு நாட்களுக்கு எங்களை நாலாபுறமும் எதிரி சேனை சூழ்ந்து கொண்டது. அன்று நான் நிச்சயமாக
எதிரிகளின் கையில் சிக்கி கொல்லபடுவேன் என்ற நிலை இருந்தது. அப்பொழுது ஆச்சரியமான ஒரு
சம்பவம் நிகழ்ந்தது. யாரோ தாடியும் ஜடையும் உள்ள ஒரு சந்நியாசி, கையில் திரிசூலம் ஏந்தியவர்
என்னை காப்பாற்றினார். அவர் அடிக்கடி இந்த மாதிரி ஆபத்துச் சமயங்களில் என்னை எத்தனையோ
தடவை காப்பாற்றினார். நாங்கள் வெற்றி கொண்டோம்; நான் சீக்கிரம் வீடு திரும்புவேன்!”
சில நாட்களில் லெப்டினன்ட் மார்ட்டின் ஊர் திரும்பினார்.
திருமதி மார்ட்டின் நடந்த விஷயங்களைச் சொன்னபோது, காப்பாற்றிய அந்தச் சந்நியாசி சிவ
பெருமான் தான் என்பதை மார்ட்டின் உண்ர்ந்தார்.
தம்பதிகள் இருவரும் சிவ பக்தர்களாயினர். தினம்
கோவிலுக்குபோவதை வழக்கமாக வைத்துக் கொண்டார்கள். ஒரு நாள், கோவில் ஒரு பக்கம் ஜீரணமாக
இருப்பதைக் கண்ட மார்ட்டின் அதற்குப் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து, ஜீரணோத்தாரணம் செய்யச்
சொன்னார்.
பதிப்பாசிரியர் குறிப்பு:
இது லெப்டினன்ட் மார்ட்டின் என்ற தலைப்பில் ஶ்ரீ ராமகிருஷ்ண விஜயம் 1981 வது
ஆண்டு மணிவிழா மலரில் வெளியான விஷயம். அப்பதிப்பகத்துக்கு நன்றி தெரிவித்து இங்கு வெளியீடுகிறோம்.
சிவபிரானின் அவ்யாஜமான கருணைக்கு அனைவரும் பாத்திரரே என்பதை அறிந்து அப்பெருமானிடம்
திடமான பக்தியும் நம்பிக்கையும் கொள்வோமாக.
No comments:
Post a Comment