உ
திருச்சிற்றம்பலம்
அபிராமி அந்தாதியில் சிவபரமான செய்திகள்
சாக்தப் பேருரை சக்ரவர்த்தி, புலவர்,
பருத்தியூர் கே. சந்தானராமன், எம். ஏ., பி.லிட்.,
சிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
தேவி பரமான நூல்கள் அனைத்திலுமே சிவபெருமானின் சிறப்புக்களும் ஆங்காங்கே குறிப்பிடப்படுவதைப் பரக்கக் காணலாம். அவ்வாறே அபிராமி அந்தாதியிலும் பல இடங்களில் இறைவனின் பெருமைகள் இடம் பெறுகின்றன.
இறைவனின் சடை
இறைவனின் சென்னியினையும் அதில் விளங்கும் திருச்சடையினையும் வேதங்களில் பாதிப்பகுதி புகழ்ந்துரைக்கின்றன என்று கந்த புராணம் – தட்சகாண்டம் குறிப்பிடுகிறது.
“நான்மறைகளில் ஓர்பாகம் நாரமர் கடவுள் சென்னி மேன்மையை தியம்பும்” -
கச்சியப்பர்
நான்மறைகளின் நடு நாயகமாகிய ஶ்ரீருத்திரமும் இறைவனை ‘கபர்த்தி’ – சடையினையுடைவன் எனப் புகழும் வேதம் சொன்ன வழியிலேயே அன்னையினை வழிபட்ட அபிராமி பட்டர் சிவபெருமானது சடையினைப் பற்றியே பல இடங்களில் குறிப்பிடுகிறார்.
“கொன்றை வார்சடைமேல் பனிதரும் திங்களும் பாம்பும் பகீரதியும் படைத்த புனிதர்” என்ற அடிகள் இறைவனின் ஐந்தொழிலையும் குறிப்பாக உணர்த்துகின்றன.
கொன்றை பிரணவத்தின் வடிவினதாகும். பிரணவத்திலிருந்து அனைத்தும் தோன்றுவதால் கொன்றை ‘சிருஷ்டி’ யைக் குறித்து நின்றது. ஆற்றுப் பெருக்கு உலகூட்டுவதால் காத்தலையும், அந்நதி சடையில் அடக்கப்பட்டதால் ‘சடை’ மறைத்தலையும், பாம்பு தாருகாவனத்து முனிவர்களால் அழிக்க ஏவப்பட்டு இறைவனின் கட்டுப்பாட்டில் நிற்பதால் சம்ஹாரத்தையும், திங்களுக்கு அருட் செய்ததால் அருளலையும் குறித்தனவாக அமைந்தன.
கங்கை தன்னுள் மூழ்குவோரைப் புனிதராக ஆக்கும் தன்மைத்து அக்கங்கையும் இறைவனின் படைப்பே. அதுவும் அவனது சடையினைச் சார்தலின் புனிதமுடையதாயிற்று. எனவே “பகீரதியும் படைத்த புனிதர்” என்றார்.
“மதியுறு வேணி மகிழ்நன்” என்றூம் “தாவு கங்கை பொங்கு அலைதங்கும் புரிசடையோன்” என்றும் “பிறை முடித்த ஐயன்” எனவும், “வெறித்தேன் அவிழ் கொன்றை வேணிப் பிரான்” எனவும் அத்திருச்சடையின் புகழ் பேசப்படுகிறது.
திருமுறை போன்ற தொடக்கம்
சைவத் திருமுறைகள் “தோடுடைய செவியன்” என அர்த்தநாரீச மூர்த்தம் பற்றிய குறிப்புடன் தொடங்குவது போலவே அபிராமி அந்தாதியும் “தார் அமர் கொன்றையும் சண்பக மாலையும் சாத்தும்
தில்லை ஊரர்” எனத் தொடங்குகிறது.
இறைவனுக்குகந்த கொன்றையும் இறைவிக்குகந்த சண்பகமும் இணைத்துக்கூறப்பட்டு
இருவரும் இணைந்த வடிவுடன் தொடங்குகிறது. “அத்துடன் தில்லை
ஊரர்” என்றதனால் சைவர்களுக்கு முதன்மைத் தலமாகிய
‘தில்லை’ பற்றிய குறிப்புடனும் தொடங்குகிறது.
ஈசனின் வீரச் செயல்கள்
திருக்கடவூர் வீரட்டானத்தில் பாடப்பட்ட அபிராமி அந்தாதி இறைவனின் எட்டு வீரச்செயல்களில் நான்கினை நவில்கின்றது.
1. “முப்புரங்கள் மாளுகைக்கு அம்பு
தொடுத்த வில்லான்”
“அசுரர் தங்கள் முரண் அன்று அழிய
முனிந்த பெம்மான்”
“தரியலர்தம் புரம் அன்று எரிய பொருப்புவில்
வாங்கிய போது”
“தானவர் முப்புரம் சாய்த்து”
“தீமை நெஞ்சில் புரிபுரவஞ்சரை அஞ்சக்
குனிபொருப்புச் சிலைக்கை எரிபுரை மேனி இறைவன்”
இவ்வடிகள் புரமெரித்த புகழினையும் மேருவை வளைத்த மேன்மையினையும் கூறுகின்றன.
2. “ககனமும் வானும் புவனமும் காணவில் காமன் அங்கம் தகனம் முன் செய்த தவப் பெருமான்”
“விழியால் மதனை அழிக்கும் தலைவர்”
3. “மதவெங்கண் கரிஉரி போர்த்த செஞ்சேவகன்” என்ற அடி கஜாசுரன் என்னும் யானையின் தோலையுரித்த வீரத்தினைப் புகழ்கின்றது. போர்க்களத்தில் தனியே நின்று நூறு யானைகளை வெற்றி கொண்டவனையே “சேவகன்” எனக் குறிப்பிடுதல் மரபு. “சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே” எனச் சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் வருதல் காண்க.
ஆயிரங்களான யானையின் வலிமையினையும், கொடுமையினையும், மதத்தினையும் கொண்ட கஜாசுரனை அழித்த இறைவனை “செஞ்சேவகன்” என்ற சொல்லால் குறித்தார்.
4. “அயன் சிரம் ஒன்று செற்ற கையான்” என்ற சொற்றொடர் இறைவன் செருக்குற்ற பிரமனின் சிரம் ஒன்றினைக் கொய்த வரலாற்றினையும் குறித்து நின்றது.
சைவ குரவர்கள் பற்றிய குறிப்பு
சைவ சமய குரவர்களில் முதல்வராகிய ஞானசம்பந்த மூர்த்தியைப்பற்றிய குறிப்பினை “பால் அழும் பிள்ளைக்கு நல்கின” என்ற சொற்றொடர் விளக்கி நின்றது. ஆளுடைப்பிள்ளையார் “அம்மே! அப்பா!” என்று அழுதார் அல்லவா? அதுவும் தோன்ற அவர் வரலாறு குறிக்கப்படும் பாடலில் “அம்மே” என அழைத்து “நீயும் வந்து என் முன் நிற்கவே” என வேண்டுகிறார். இது நயம்மிக்க ஓர் அமைப்பாகும்.
ஆசைக் கடலில் அகப்பட்டு அருளற்ற அந்தகன் கைப்பாசத்தில் அல்லற்படாமல் வாசக்கமலம் தன் தலைமேல் வலிய வைத்து திருவடி தீட்சை கொடுத்த நேசத்தை என் சொல்வேன்? என வியந்த அபிராமி பட்டர் பின் அது ஒன்றும் பெரிய வியப்பில்லை என்பது போல் பாடலின் நான்காவது அடியினை அமைக்கிறார்.
“ஈசர் பாகத்து நேரிழையே!” இறைவன் பாகத்தில் உறைபவள் அல்லவா நீ? சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு சித்த வட மடத்தில் வலியச் சென்று திருவடி தீட்சை கொடுத்த ஈசனின் இடப்பாகத்தில் உறைபவள் தானே நீ? நீயும் அவ்வாறு எனக்கு வலிய வந்து திருவடி தீட்சை கொடுத்தது ஒன்றும் வியப்பில்லை என்ற குறிப்பு இங்குத் தொனிக்கிறது.
சைவ சித்தாந்தக் குறிப்பு
“அருளே” என அன்னையினை அழைப்பது “அருளது சக்தியாகும் அரன் தனக்கு” என்ற சித்தியாரை நினைவு படுத்தும் விளியாகும். “சக்தி தான் சிவத்தை ஈன்றும்” என்ற சித்தியார் கருத்து, “தாயும் மகளும் தாரமுமாமே” என்னும் திருமந்திரக் கருத்து, ‘இமவான் மகட்கு தன்னுடைக் கேள்வன் தாயும் மகளும் தாரமுமாமே” என்ற திருவாசகக் கருத்து ஆகியவற்றினுக்கு இணையாக அபிராமி அந்தாதியில் “கறைக் கண்டனுக்கு மூத்தவளே!” “அவளே அவர் தமக்கு அன்னையும் ஆயினன்” ஆகிய குறிப்புக்கள் வருதல் அறிவோம். “சக்தி தழைக்கும் சிவமும்” “துரியும் அற்ற உறக்கம்” போன்ற சொற்றொடர்களும் சித்தாந்தக் கருத்துக்கள் செறிந்த இடங்களாகும்.
திருவருட்செயல்கள்
கல்லடைப்பட்ட தேரைக்கும் கருப்பையில் வளரும் உயிருக்கும் இறைவனே படியளக்கிறான். அவன் கொடுப்பதைக் கொண்டே அன்னை அறம் வளர்க்கிறாள். இதனை “ஐயன் அளந்தபடி இரு நாழி கொண்டு” என்ற பாடல் விளக்குகிறது,
அடியவரின் பிழைகளைப் பொறுத்து அருள் செய்தல் இறைவனின் இயல்பு. அவ்வாறே அன்னையினையும் பொறுத்து அருட் செய்ய வேண்டுகிறார்.
இறைவனை நினையாது – வேண்டாது, தேவர்கள் பாற்கடலைக் கடைய முற்பட்ட பொழுது தோன்றிய நஞ்சினையும் உண்டு உலகினை அவன் காக்கவில்லையா? மறந்து சென்ற வரையும் மரணத்தினின்று காக்கவில்லையா? அதுதான் அவன் அளிக்கும் அடைக்கலச் சிறப்பு!
“புது நஞ்சையுண்டு கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த நீயும்” வெறுக்கும் தகமைகள் செய்யினும் அடியாரைப் பொறுக்க வேண்டும் என்ற இடத்தில் அவனது அபயச் சிறப்புப் பேசப்படுகிறது.
மோட்சப் பிரதான மூர்த்தி
அனைத்துக்கும் மேலாக சிவபெருமானே “வீடளிக்க வல்லவன்” அல்லது மோட்சப் பிரதான மூர்த்தி என்பதனையும் குறிப்பிடுகிறார். “நின் சேவடி சென்னி வைக்க துறக்கம் தரும் நின் துணைவர்” (துறக்கம் – மோட்சம் அல்லது வீடு பேறு) எனப் புகழ்கிறார்.
பிற செய்திகள்
இறைவன் “திக்அம்பரன் – திசைகளையே ஆடையாக உடையவன், இதனை பட்டும் எட்டுத் திக்கே அணியும் திருவுடையான்” என்கிறார்.
அவன் யோக மூர்த்தி என்பதனைத் “தவப் பெருமான்” என்ற சொல்லால் விளக்குகிறார்.
“தவளநிறக் கானந்தம் ஆடரங்கம்” என்பதால் அவனது பேரூழித் தாண்டவம் (மஹா கல்பதாண்டவம்) பேசப்படுகிறது.
அவன் “கைவந்த தீயும் தலைவந்த ஆறும்” உடையவன்.
அவன் “சுடரும் கலைமதித்துன்றும் சடை முடிக் குன்று”
“இமவான் அளித்த கனங்குழையினை” கடி மணங் கொண்ட “கல்யாண சுந்தரன்” என்ற குறிப்புடன் அந்தாதி நிறைவுறுகிறது.
சுபம்
No comments:
Post a Comment