உ
சிவமயம்
ஶ்ரீ பெரும்பூதூர் ஶ்ரீ பூதபுரீச்வரன்
அருட்கவி மஹேந்திரவாடி ரா. உமாசங்கரன்
சிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
பூதங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நகரை ஏற்படுத்தின. அதுவும் சிவகணங்களாயிருந்த பூதங்கள் அல்ல. அவ்வூருக்குப் பிற்காலத்தில் பூதபுரி என்ற பெயர் ஏற்பட்டது. இவ்வூர் சென்னைக்கு மிக அருகாமையில் உள்ளது என்றால் வியப்பில்லையார் தற்காலத்தில் வழக்கில் ஶ்ரீபெருமந்தூர் என்று அழைக்கப்படும் ஶ்ரீபெரும்பூதூர் என்ற ஊர் தான் புராண காலத்தில் ‘பூதபுரி’ என்றும் ‘அருணாரண்யம்’ என்றும் அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் வைணவ மதாசாரியான ராமானுஜர் அவ்வூரில் அவதரித்ததால் காலப்போக்கில் அவ்வூர் வைணவத் தலமாக வளர்ந்து விட்டது. சென்னையிலிருந்து சுமார் 25 கல் தொலைவில் உள்ளது இவ்வூர். பஸ் வசதி நிறைய உண்டு. காலையில் சென்று இறை வழிபாட்டைச் சிறப்பாக முடித்து மாலையில் எளிதில் திரும்பலாம்.
புராண வரலாற்றிற்கு வருவோம். ஒரு சமயம் திருக்கயிலையில் பிரதோஷ காலத்தில் ஈசன் தன் சடையை விரித்து ஆனந்தக் கூத்தாடிய வேளையில் அங்கேயிருந்த சில பூதகணங்கள் அவரை மதியாது சிரித்தனவாம். இது கண்ட பெருமான் தன் சந்நிதியை விட்டு அக்கணங்களை விலகியிருக்க ஆணையிடுகிறார். தாங்கள் செய்த தவறுக்கு என்ன பரிகாரம் என்று நான்முகனை பூதகணங்கள் கேட்ட பொழுது அவர் சத்யவிரத க்ஷேத்திரம் என்றும் நகரேஷு காஞ்சி என்றும் புகழப்படும் காஞ்சி நகருக்குருகாமையில் உள்ள இவ்வூரில் தவம் செய்து நாராயணனை வழிபட்டு சாபவிமோசனம் பெறலாம் என்று கூறுகிறார். அதபடி பூதன் கணங்கள் இவ்வூரில் வந்து தவம் செய்து மஹாவிஷ்ணுவின் அன்பிற்கு அடிமையாகின்றனர். மஹாவிஷ்ணுவின் கட்டளைப்படி அனந்தன் என்னும் ஆதிசேஷன் ஒரு பெரிய திருக்குளத்தை இங்கு ஏற்படுத்துகிறார். அக்குளம் “அனந்தசரன்” என்ற பெயரில் இன்றும் உள்ளது. பூத கணங்கள் இதில் மூழ்கி எழுந்து சாபவிமோசனம் பெற்று மஹாவிஷ்ணுவுடன் கயிலையை அடைகின்றன. நாராயணன் ஈசனிடம் கணங்கள் செய்த பிழையைப் பொறுத்தருள வேண்டி பூத கணங்களை கயிலையில் திரும்பவும் பணிவிடை செய்யக் காரணமாகிறார்.
இத்தகைய அரிய உதவிக்கு நன்றிக் கடனாக பூத கணங்கள் தாங்கள் தவம் செய்த இடத்திலேயே ஒரு நகரை அமைத்து அதற்குத் தங்கள் பெயரையே இட்டு “பூதபுரி” என்று அழைக்கின்றனர். பூதங்களுக்கு உதவி செய்த நாரணன் இங்கே “ஆதிகேசவப் பெருமாள்” என்ற திரு நாமங் கொண்டு கோயில் கொள்கிறார். ஈசனும் “பூதபுரிச்வரன்” என்ற பெயரில் இங்கே அமருகின்றார்.
இவ்வளவு புராணப் பெருமைகள் நிறைந்து இவ்வூரில் அமைதியும் அழகும், நீர், நிலவளம் மிக்க சூழ்நிலையில் ஈசன் கோயில் அமைந்திருக்கின்றது. கோயிலின் வாயில் மேற்கு நோக்கி அமைந்திருக்கின்றது. ராஜகோபுரம் ஏதும் இல்லாத சிறிய வாயில். இறைவன் சந்நிதி அமைந்திருக்கின்ற உட்கோயில் தெற்கு நோக்கியுள்ளது. இறைவி செளந்தரிய நாயகியின் சந்நிதி வெளிப்பிரகாரத்தில் கிழக்கு நோக்கியுள்ளது. இது போன்று அன்னையின் சந்நிதி கிழக்கு நோக்கியிருந்தால் அத்தலத்தில் இறைவி தவம் செய்த சிறப்புடையது என்று முன்னோர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். திருப்பாலைவனம், சங்கரன்கோயில், மாங்காடு ஆகிய ஊர்களில் அன்னை கிழக்கு நோக்கியே காட்சியளிக்கிறாள்.
இக்கோயிலில் உள்ள கல்வெட்டில் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து செங்காட்டூர்க் கோட்ட பெரும்பூதூர் என்று குறிக்கப்பட்டிருக்கிறது. கருவறை நல்ல சோழர் கால கற்றளி கோயில் கட்டி ஈராயிரம் ஆண்டுகளாவது ஆகியிருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது. தெற்கு பார்த்த வாயில் வழியாக ஈசன் கோயிலுக்குள் நுழையும் போதே வாயிலுக்கு இடது, வலது புறங்களில் காட்சியளிக்கும் விநாயகரும் வில்லேந்திய வேலவனும் நம்மை அருள் வழங்கி வரவேற்கின்றனர். வாயிலுக்கு நேர் எதிரே உட்புறத்தில் நடராஜர் சந்நிதியுள்ளது. ஆனால் நடராஜரின் உற்சவ மூர்த்தி இக்கோயிலில் தற்பொழுது இல்லை. நடராஜர் சந்நிதியின் வாயிலுக்கு மேற்புறம் ஆடும் கூத்தனின் கோலத்தை சிறிய சிற்பங்களாக சிற்பி வடித்திருக்கிறார். கருவறையில் ஶ்ரீ பூதபுரிச்வரனைக் கண்டு வணங்கி விட்டு அர்த்த மண்டபத்தில் உள்ள சந்திரசேகரர், வள்ளி தெய்வ யானையுடன் கூடிய சுப்ரமணியர் ஆகிய உற்சவ மூர்த்திகளையும் தொழலாம். கருவறைக்கு வெளியே உள்ள மஹா மண்டபம் ஒரு சிற்பக்கூடமாகவே காட்சியளிக்கிறது! அங்கு என்னதான் இல்லை? ரசிக்க மனமிருந்தால் அங்கு உள்ள சிற்பங்களை நாள் முழுதும் தங்கி பார்த்துக் கொண்டேயிருக்கலாம். கருவறை வாயிலுக்கு மேற்புறம் அன்னை காமாட்சி கம்பா நதிக்கரையில் மணலில் ஈசனை லிங்க வடிவத்தில் அமைத்து ஆலிங்கனம் செய்யும் காட்சி வெகு அழகாக அமைந்துள்ளது.
மண்டபத் தூண்களில் எண்ணற்ற சிற்பங்கள் அந்தப் பட்டியலையே இங்கு தருகிறோம்.
காராம்பசு லிங்கத்தின் மீது பால் சொரியும் காட்சி, காலசம்ஹார மூர்த்தி, ராமர், மீனாட்சி
திருமணம், வீரபத்திரர், அர்த்தநாரீச்வரர், பிட்சாடனர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்,
நடராஜரின் ஊர்த்துவ தாண்டவம், காளியின் நடனக்
கோலம், பஞ்சமுகத்துடன் கூடிய சதாசிவர், வில்லேந்திய வேலவன், மூஷிகவாகனத்தில் கணபதி,
சாஸ்தா, லிங்கோத்பவர், பைரவர், விருஷபாரூடர், பதஞ்சலி, வியாக்கிபாத முனிவர்கள் ஆகிய
இவ்வளவு சிற்பங்களைல்யும் கண்டு களிக்கலாம்.
அம்மண்டபத்தின்
நடுநாயகமாக மேற்புறம் கமல மலரும் அதைச்சுற்றிக் கிளிகளும் நான்கு மூலைகளில் முனிவர்களின்
உருவங்களும் காணப்படுகின்றன.
கருவறை வாயிலுக்கு
வெளிப்புறத்தில் இடது வலது புறங்களில் வீரபத்திரர், நாகம், விநாயகர், பைரவர், சுப்ரமணியர்
ஆகிய தெய்வத் திருவுருங்களும் உல் நந்திக்கருகில் பைரவர், சூரியன், நவக்கிரகம் ஆகிய
தெய்வங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மஹா மண்டபத்திற்கு வெளியில் உள்ள தூண்களில்
கண்ணப்பர், அர்ச்சுனன் தவம், கஜஸம்ஹாரமூர்த்தி, ஒற்றைக் காலில் தவம் செய்யும் முனிவர்,
புலிக்கு பயந்து சிவராத்திரி தினத்தில் வில்வ மரத்தின் மீதேறிய வேடனின் கதை ஆகிய சிற்பங்கள்
உள்ளன.
நீண்டுயர்ந்த
கொடி மரம் ஈசனை நோக்கி பெரிய பிரகாரத்தில் நிற்கிறது. விநாயகர், முருகர், நவக்கிரக
சந்நிதிகள் புதியதாக வெளிச்சுற்றில் கட்டப்பட்டு சிலைகள் இன்னும் நிறுவப்படாமல் இருக்கின்றன.
காஞ்சி மடாதிபதி
ஶ்ரீ ஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் இவ்வூருக்கு சமீபத்தில் விஜயம் செய்த பொழுது கிழக்குப்
புறம் ஒரு வாயில் ஏற்படுத்த ஆணையிட்டார்களாம். அப்பணி இன்னும் நிறைவேறவில்லை. அவ்வாயிலை
நிறுவவேண்டிய இடத்தில் ஒரு பெரிய புற்று காணப்படுகின்றது. தடைக்கு இதுவும் ஒரு காரணம்
என்று தெரிகிறது.
இவ்வூருக்கு
அருணாரண்யம் என்ற பெயரும் உண்டு என்று கட்டுரையின் ஆரம்பத்தில் கண்டோம். இவ்வூருக்கருகே
பல ஆரண்யங்கள் உள்ளன. திருவள்ளுவர் என்னும் வீக்ஷாரண்யமும், கூவம் என்னும் தர்பாரண்யமும்,
திருவாலங்காடு என்னும் வடாரண்யமும், திருப்பாசூர் என்னும் வேணுவனமும், மாங்காடு என்னும்
ஆம்ராரண்யமும், திருவேற்காடு என்னும் வடவேதாரண்யமும் அவற்றில் முக்கியமானவை.
இவ்வூர் தல
வரலாற்றோடு சம்பந்தப்பட்ட சில நிகழ்ச்சிகள் காஞ்சிப் புராணத்திலும் ஷ்டாரண்ய க்ஷேத்திர
புராணத்திலும் உள்ளன. ஞானசம்பந்தரும், நாவுக்கரசரும் காஞ்சியிலிருந்து மயிலை செல்லும்
பொழுது பூதபுரீஸ்வரரை வணங்கிச் சென்றார்கள் என்று கூறப்படுகிறது. இவ்வளவு சிறப்புகள்
கொண்ட இக்கோயில் அர்ச்சகர் சுந்தரேச குருக்கள் எளிமையும், அடக்கமும், நிறைந்து சிறந்த பண்பாளர். போதிய வருவாயின்றி இருக்கும், அவருக்குதவும்
வகையில் சைவ மெய்யன்பர்கள் ஈசனைத் தரிசித்து அவன் அருள் பெறுவதோடு அர்ச்சகரின் வறுமையையும்
துடைத்து புண்ணியம் பெற வேண்டுகிறேன். வருங்காலத்தில் இப்பூதபுரி சிறந்த சிவத்தலமாக
விளங்க சிவ பக்தர்கள் தொண்டுபுரிய வேண்டுமென்று கரம் கூப்பி வேண்டுகிறேன்.
சிவம்.
No comments:
Post a Comment