Monday, September 26, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்

சிவப்பிரகாசர் காட்டிய சிவப்பிரகாசம்
ஶ்ரீ ராமகதாரத்ன வே. தியாகராஜன்
சிருங்கேரி ஆஸ்தான வித்வான், சென்னை - 61

சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரசுவாமி தேசிகர் என்ற பெரியாருக்கு சிவப்பிரகாசம், வேலாயுதம், கருணைப்பிரகாசம் என்ற மூன்று புதல்வர்களும் ஞானாம்பிகை என்ற புதல்வியும் பிறந்தனர். மூத்தவரான சிவப்பிரகாசர் சைவப்பற்றும் தமிழறிவும் மிகுந்தவர். சிறிதுகாலம் துறைமங்கலம் என்ற ஊரில் பிறந்த அண்ணாமலை ரெட்டியார் என்பவருடன் தங்கியதால் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள் எனப்பெயர் பெற்றார். அவரது அழகிய நூல்களின் பலவித நயங்களைக் கண்டு மகிழ்ந்த சிலர் கற்பனைக்களஞ்சியம் சிவப்பிரகாச சுவாமிகள் என அழைத்தனர்.
      திருவண்ணாமலையில் சில வருடங்கள் தங்கிய போது, அத்தெய்வீகமலையை ஒரு முறை வலம் வருவதற்குள் 100 பாடல்களைப் பாடினார். கற்பனை வளம் நிரம்பிய அந்நூல் சோணசைலமாலை என விளங்குகிறது.
      “சோணசைலநாதரே! திருவாரூர் பிறக்க முத்தி – காசி இறக்க முத்தி – தில்லை தரிசிக்க முத்தி – எனினும் நினைத்தாலே முத்தியளிக்கும் நின் திருவண்ணாமலைக்கு நிகரேது? ஓடத்திற் செல்வோர் கரையடைய கலங்கரை விளக்கத்தைக் குறித்துச் செல்வர். முத்தியாகிய கரையை நோக்கி வருவோர் திருவண்ணாமலையை நோக்கி வருவர்” என்கின்றார்.
                துவக்கற அறிந்து பிறக்கும் ஆரூரும்
              துயர்ந்திடாது அடைந்து காண்மன்றும்
       உவப்புடன் நிலைத்து மரிக்கும்ஓர் பதியும்
              ஒக்குமோ நினைக்கும் நின்னகரை?
       பவக்கடல் கடந்து முத்தியங் கரையிற்
              படர்பவர் திகைப்பற நோக்கித்
       தவக்கலம் நடத்த உயர்ந்தெழும் சோண
              சைலனே! கலை நாயகனே!

      வாழ்வெனும் வெள்ளச்சுழியில் அகப்பட்டோர் முத்தியான கரையை அடையத் தவமெனும் ஓடம் ஏறுக எனக் குறிக்கிறார்.
      ஆசை காரணமாகப் பிறவியான சேற்றில் அகப்பட்டுள்ளேன். உன் கருணையான வெய்யிலால் பிறவிச் சேற்றை உலர்த்தி. எனது மனமான தாமரையை மலரச் செய்யும் ஆதவன் அன்றோ நீ! இறைவனே! உன் கோயில் கைலைமலை, உன்கையில் வில்லாக விளங்குவது மேருமலை, உன் மாமனோ இமயமலை, இத்தகைய நீ திருவண்ணாமலையாகவும் காட்சியளிக்கின்றாய் என்கிறார்.
                மயலினால் அழுந்தும் பிறவியாம் அளற்றை
              வளர்தரு நின்பெருங் கருணை
       வெயிலினால் உலர்த்தி எனதுளக் கமலம்
              விரிக்கும் ஒண்பரிதி நீயலையோ?   
       பயிலும் ஆலயம் ஓர்சைலம் ஓர்சைலம்
              பகைப்புலம் உருக்கு கார்முகம்; ஓர்
       சைலம் மாதுலனாம் எனக்கொள்ளும் சோண
              சைலனே! கலை நாயகனே.

      இறைவனைக் கதிரவனாகவும், அவனது அருளை வெய்யிலாகவும், நம் பிறவியைச் சேறாகவும், மனத்தை தாமரைக்கு உவமை கூறுவதுடன் இறைவனுக்கு மலைகள் எந்தெந்த விதங்களில் பயன்பட்டன என்பதை வெகு நயத்துடன் விவரிக்கிறார்.
      “மலை போன்ற தெய்வத்திற்கு மலையளவு நாம் செய்ய முடியுமா? கடுகளவு தான் செய்ய முடியும்” என்பர். திருவண்ணாமலையே இறைவன். மலையான அப்பெருமானுக்கு அடியார்கள் நிறைய மலர்களிட்டு மலை போன்ற சாமிக்கு மலை போல மலரிட்டு விட்டார்கள் எனக்கூறுவதன் மூலம் அடியார்களின் மிகுதியைக் காட்டினார்.
                பாயும்வெண் திரைசூழ் ஆழி சூழலகில்
              பழமொழி ஒழிய! மெய்யடியன்
       ஆயுமென் மலர் ஓர்மலையளவு அணிய
              அமர்ந்தநின் கோலம் யான்மறவேன்.

      “மலையத்தனை சாமிக்கு மலையத்தனை செய்ய முடியாது” என்ற பழமொழி திருவண்ணாமலையில் பொய்யாகி விட்டது என்கிறார்.
      “உலகத்தவர் யாது காரணத்தாலோ, திருமணஞ்செய்து கொண்டு மணமக்கள் வணங்கும் காலத்தில் ‘நல்ல ஆண் குழந்தையைப் பெற்றுக் கொண்டு நீடுழி காலம் வாழ்க’ என வாழ்த்துகின்றனர். இத்தகையோர் பெண்ணின் அருமை அறியாதவர் போலும்! பெண்ணின் பெருமை உலகறியவும், பெண்ணைப் பெறுதல் அவ்வளவு உயர்ந்ததல்ல என்பவர் வெட்கும்படியாக, பர்வதராசன் உன்னை மகளாகப் பெற்றுப் பெருமை கொண்டான்” எனப் பெண்மக்களைப் பெறுவதும் உயர்வே என்ற கருத்தையமைத்து பெரியநாயகியார் கலித்துறை என்ற நூலிலே பாடுகிறார்.
                கற்றார் அறிவார் மக்கள் தம்பேறு எனக் கட்டுரைத்த
       சொல்தான் ஒருபெண் ஒழித்த தென்பாரொடு தொல்லுலகில்,
       நற்றான் மகப்பெறுக என்றுஆசி சொல்பவர்நாணஉனைப்
       பெற்றான் மலையரையன் குன்றை வாழும் பெரியம்மையே.
               
      “என் மனம் ஒரு காடு போன்றது. அதில் ஆசையான தீயும், கோபமான புலியும், சிற்றின்ப மென்னும் மதயானையும் உள்ளன. இத்தகைய மிருகங்கள் நிறைந்து காட்டிற்குள் வர பயமாயிருக்கிறதா! அன்னையே! கையில் நெருப்பை வைத்துக் கொண்டு ஆடுபவரும், புலித்தோலை அரைக்கசைத்து யானைத் தோலைப் போர்த்துக் கொண்டுள்ளவருமான உனது நாயகனுடன் வருக!”
                காம மென்கின்ற கதுவு வெந்தீயும்
              கடுஞ்சினம் எனப்படும் புலியும்
       களிப்பெறும் சிறுகண் புகர்முகப் புழைக்கைக்
              கரையடிக் களிநல் யானையுமே
       தாமிகும் எனது மனமெனும் னத்தில்
              தனிவரல் வெருவினையாயின்
       தழலினின் றாடிப் புலிகரி யுரிபோர்
              தடுத்தஆண் துணையொடு வருக!

என அம்மையப்பனாக இறைவனைக் காணும் தமது ஆவலை வெளிப்படுத்துகிறார் தமது பெரியநாயகியம்மை விருத்தத்திலே.
      பிற்காலத்தில் மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் இதே கருத்தை “அடியேன் கொடியவன் என்று என் முன் வர் அச்சமாயிருந்தால் யமனையே எட்டி உதைத்த உனது நாயகனான சிவபெருமானுடன் வருக. உலகத்தின் துணையான அவன் உனக்கும் உற்ற துணையாவானே!” என்ற கருத்தை
                அடியனேன் கொடியன் என்றுமுன் வருதற்கஞ்சினை
    என்னின் வெங்கூற்றம்
       மடியமுன் உதைத்தான் துணையடைந்தேனும் வருதி மற்று
                                                    அது நினக்கரிதோ?

எனத் தனது அகிலாண்டநாயகி மாலையில் பாடுகிறார்.
      சிவப்பிரகாச சுவாமிகள் செய்த மற்றொரு பெரிய காரியம் உண்டு. தமது ஆசிரியரின் கட்டளையால், திருச்செந்தூரில் எல்லா வித்துவான்களையும் ஏளனம் செய்து கொண்டு தருக்குடன் விளங்கிய ஒரு வித்துவானிடம் சென்று, உதடுகள் ஒட்டாத வண்னம் முப்பது பாடல்களைப்பாடி அவரைத் தோல்வியடையச் செய்தார். திருச்செந்தூர் முருகப்பெருமான் மீது பாடப்பெற்ற அந்நூல் திருச்செந்தில் நிரோட்ட யமக அந்தாதி என இன்றும் விளங்குகின்றது. மேற்படி அந்தாதியில் ஒரு பாடலைக் காண்போம்.
                கணக்காக நாய்கடின் காயநிலையெனக் கண்ணியென்ன
       கணக்காக நானலைந் தெய்த்தேன் எழிற்செந்திற் கந்த நெற்றிக்
       கணக்காக னார்ந்தந்த நின்றனையே யினிக்காதலினாற்
       கணக்காக னாநிகர்த்தேயழி அங்கத்தின் காதலற்றே.

(இந்தப் பாடலைப் பாடிப் பாருங்கள் – உதடுகள் ஒட்டாது – இதை இதழகல் அந்தாதி என்றே குறிப்பர்.)
இதன் பொருள்
      கணக்காகம் = காக்கைக்கூட்டமும், நாய்களும் தின்காயம் = உண்கின்ற உடலை, நிலையென்று (கண்ணி) நினைத்து, என்ன கணக்காக நான் அலைந்து (எய்த்தேன்) இளைத்தேன். எழில் செந்நிற் கந்த! நெற்றிக்கண் அக்கு ஆகனார் = நெற்றிக் கண்ணையும் எலும்பணிந்த உடலுமுடைய சிவனார் தந்த நின்றனையே! = உன்னையே. இனிக் காதலினால் = விருப்புடன் க(ண்)ண = தியானிக்க, கா = காத்தருளுக. கனாநிகர்த்த = ஸ்வப்னம் போன்ற, அழி அங்கத்தின் காதல் அற்றே = அழிகின்ற உடம்பின் மீதுள்ள விருப்பம் நீங்குவேனாக.
      கருத்து: - அழியும் உடம்பின் மீது வைத்துள்ள என் ஆசையை நீக்கிக் காத்தருள்க.
      சிவப்பிரகாச சுவாமிகள் 32 நூல்கள் வரை அருளியுள்ளார்கள். திருக்காளத்தி புராணத்திலுள்ள கண்ணப்பர், நக்கீரர் வரலாறுகள் இப்பெரியார் அருளியவை. நாட்டில் மறைந்துள்ள பல சுவை மிகுந்த நூல்களில் சில சிவப்பிரகாச சுவாமிகளுடைய நூல்களை ஆராய்ந்து பதிப்பித்து வெளியிடுவது தமிழுக்கு மேலும் வளந்தருவதுடன் இப்பெருமக்களையறிய உதவுவதுடன் தமிழின்பத்தை மக்களுக்கு அதிகமாக உண்டாக்கும். நம் நூல்கள் பல நானிலத்தில் பரவத் தமிழ்த் தெய்வமான ஆலவாயப்பனும் அங்கயற்கண்ணியும் அருளுக.
                தடவரை முனிவன் ஈன்ற தமிழ்க் கொழுங் குழவிதன்னை
       படர்வெயில் உமிழுஞ் சங்கப் பலகையாம் தொட்டிலேற்றி
       நடைவர வளர்த்தும் ஞால நனந்தலை மறுகின்விட்ட
       மடனறு புலமையோரை மனத்துயான் நினைத்துமன்றே.

இமயத்தின் எல்லை கண்ட
எந்தாய் மொழி வாழ்க!

வாழிய தமிழ் மொழி வாழிய வடமொழி
வாழிய பிற மொழியே.

             


No comments:

Post a Comment