Wednesday, September 28, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்

அரசு வீற்றிருந்த ஆதியங்கடவுள்
வித்துவான் பொன். முருகையன், பி. லிட்.
திருப்பனந்தாள்

சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

எடுப்பு: -    “உளங்கனிந்த போதெல்லாம் உவந்து உவந்து பாடுமேஎன்பது அருளாளர் வாக்கு. “உள்ளத்துள்ளது கவிதைஎன்பர் கவிமணி. கவிதை என்பதுஉள்ளத்து எழும் உணர்ச்சிப் பெருக்குஆகும் என்பது மேலை நாட்டு அறிஞர் கருத்து. (Spontaneous overflow of thoughts). இதற்கு தன்மைகள் மிக்குடைய கவிதைகளைப் படைத்தளித்துப் புகழ் பெற்ற கவிஞர்களுள் சீரும் சிறப்பும் பெற்றுத் தன்னிகற்றவராய் விளங்கியவர் ஶ்ரீ குமரகுருபர சுவாமிகள். அவர் பிரம்மனின் படைப்பைவிட, கவிஞரின் கவிகள் மாயாத புகழுடையன என்று நீதிநெறி விளக்கத்தில் கூறுவார்.
                கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
      மலரவன் வண்டமிழோர்க் கொவ்வான்மலரவன்செய்
      வெற்றுடம்பு மாய்வனபோல் மாயாப் புகழ்கொண்டு 
      மற்றிவர் செய்யும் உடம்பு”.

      சிந்தைக்கினியதாய், செவிக்கினியதாய்ப் பற்பல நயம்மிக்க பாடல்கள் செறிந்த பல சிற்றிலக்கியங்களைப் படைத்தளித்துள்ள சுவாமிகளின் கவிக்கொடைகளும்மதுரைக்கலம்பகம்என்னும் பிரபந்தம் பெருஞ்சிறப்புடையது. சொல், பொருள், தொடை, முதலிய நயங்கள் செறிந்தது. அதில் ஊடு பொருளாக எல்லாவிடத்தும் ஓங்கி நிற்பது சிவபரத்துவமே. அதனையே எங்கெங்கும் நிலை நாட்டுகின்றார் கவிஞர்.
பகுப்பு: - இறைவனின் தனிப்பெருங்கருணைத் திறமே சிற்றிலக்கியம் முழுவதும் செறிந்து நின்றாலும் அதில் அமைந்துள்ள பொருட்சிறப்பை ஆலவாய்ப் பெருமான் சுந்தர மாறனாகிய சிறப்பு, அவன் தன் திருவிளையாடற்சிறப்பு, புராணச்சிறப்புடைய அருட்செயல்கள், சைவ அருளாளர்கள் பற்றிய குறிப்புகள், அவர்தம் அற்புதச் செயல்கள், மற்றும் சிற்றிலக்யச்சிறப்புகள் ஆகிய தலைப்புகளில் பகுத்துக் காண்பது பொருத்தமுடையது ஆகும்.
அரசு வீற்றிருந்த ஆதியங்கடவுள்: - ஆலவாய்ப் பெருமான் தடாதகாதேவி என்னும் மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வை மணந்து அரசு வீற்றிருந்த சிறப்பைப் பலவிடங்களிலும் போற்றிப் பரவுவார் கவிஞர். அவன், பெண்ணாகிய தடாதகா தேவியாரளித்த மதுரைநகரப் பாண்டியப் பேரரசை செலுத்திய மாண்பினை,
                விண்ணரசும் பிறவரசும் சிலரெய்த விடுத்தொரு நீ
       பெண்ணரசு தரக்கொண்ட பேரரசு செலுத்தினையே      (1)

என்று பாடுவார்.
      ஒரு மன்னனுக்கு மாலை, கொடி, குதிரை, நதி ஆகியவை சிறப்பினைச் சேர்க்கும் இலட்சணங்களாகும். இறைவன் வேம்பின் கண்ணிமிலைச்சினான்; மீனேற்றுக் கொடியை உயர்த்தினான்; கனவட்டம் என்னும் பரியை உகைத்தான்; வைகைத் தண்டுறையில் நீராடினான். அழகுதமிழ் பாடும் மழலையின் பாடலைக் கேட்டனன் என்று அரசலட்சணங்களை அடுக்கிச் சொல்வார் தெய்வக்கவிஞர்.
                தேம்பழுத்த கற்பகத்தின் நறுந்தெரியல் சிலர்க்கமைத்து
      வேம்பழுத்த நறைக்கண்ணி முடிச்சென்னி மிலைச்சினையே.
     
      வானேறும் சிலபுள்ளும் பலரங்கு வலனுயர்த்த
      மீனேறோ வானேறும் விடுத்தடிகள் எடுப்பரே.
     
      மனவட்ட மிடுஞ்சிருதி வயப்பரிக்கு மாறன்றே
      கனவட்டம் தினவட்ட மிடக்கண்டு களிப்பதே
      விண்ணாறு தலைமடுப்ப நனையாநீ விரைப்பொருநைத்
      தண்ணாறு குடைந்துவையைத் தண்டுறையும் படிந்தனையே
      பொழிந்தொழுகு முதுமறையின் சுவைகண்டும் புத்தமுதம்
      வழிந்தொழுகும் தீந்தமிழின் மழலைசெவி மடுத்தனையே.  (1)

ஆலவாய்ப் பெருந்தகை அழகு பொருந்தியவன். அவன் மீனவனாகி அரசாண்டான் என்பதை, ‘விடமுண்ட கந்தரச் சுந்தர மீனவனேஎன்பார். அவனைச் சவுந்தரமாறன் என்றும் அழைப்பார். மேலும் செழியன் பெற்ற கன்னியை மணந்ததனால் கன்னிநாட்டைப் பெற்றார் என்பதை, ‘செழியரீன்ற, கன்னியை மணந்தேயன்றோ கன்னி நாடெய்தப்பெற்றார்’ (60) என்று பாடுவார்.
      இறைவன் சவுந்தரமாறானாகி அரசாண்டான். அம்மை பெண்ணரசியாகினாள். முருகன் உக்கிரகுமாரனாகி வந்தான். இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்? தண்டமிழின் மதுரச்சுவையைப் பற்பல சங்கப் புலவரோடு கூடி உண்ணவே ஆகும் என்பர் கவிஞர்.
      தமரநீர்ப் புவனம் முழுதொருங் கீன்றான்
       தடாதகா தேவியென் றொருபேர்
தரிக்கவந் ததுவுத் தனிமுதல் ஒரு நீ
       சவுந்தர மாறானா னதுவுங்
குமரவேள் வழுதி உக்கிர னெனப்பேர்
       கொண்டதுந் தண்டமிழ் மதுரங்
கூட்டுண வெழுந் வேட்கையா லெனிலிக்
       கொழ்தமிழ்ப் பெருமையா ரறிவார்.”                (92)

      ஆடல் சிறப்பு: -    இறையோன் உயிர்கள் மாட்டுக்கொண்ட பேரன்பினாலும், அருளாளர்கள் மாட்டுவைத்த பெருங்கருணைத் திறத்தாலும் கூடல் நகரின்கண் அவன் செய்த திருவிளையாடல்கள் பலப்பல. அவற்றைப் பலவிடத்தும் பொருந்தும் வகியில் எடுத்துப் போற்றுகின்றார் குமரகுருபரர். அவன் கலிமதுரையில் மண்சுமந்து கூலிகொண்டு அக்கோவால் மொத்துண்டு பொன்மேனியில் புண்சுமந்த திருவிளையாடலைக் கவிஞர்,
                வைகைக்கோ புனற்கங்கை வானதிக்கோ சொரிந்து கரை
      செய்கைக்கென் றறியேமால் திருமுடிமண் சுமந்ததே”      (1)
               
உருகிய மனமொடு தழுவியொர் கிழவி
கருந்துணி மேலிடு வெண்பிட் டுகந்தன
உறுதியொ டவன்மனை புகும்வகை கடிது
சுமந்தொரு கூடைமண் உந்திச் சொர்ந்தன
உருவிய சுரிகையொ டெதிர்வரு செழியர்
பிரம்படி காண நடுங்கிக் குலைந்தன.                     (11)

என்றெல்லாம் போற்றிப் பரவுவார்.
      வளையல் விற்றது: -    இறைவன் சங்கவளையோடு முத்து வளையலை விற்ற சிறப்பு மிக்க திருவிளையாடல், ‘முலைகொண்டு குழைத்திட்ட மொய்வளைகை வளையன்றே மலைகொண்ட புயத்தென்னீ வளைகொண்டு சுமந்ததேஎன்றும்                                             (2)
வலங்கொண்டு மழுவுடையீர் வளைகொண்டு விற்பீர்போல் மதுரைமுதூர்க்
குலங்கொண்ட பெய்வளையார் கைவளையெல் லாங்கொள்ளை கொள்கின்றீரால்
பலங்கொண்ட செட்டுமக்குப் பலித்ததுநன் றானீரிப்பாவை மார்க்கு
பொலங்கொண்ட வரிவளைகள் விற்பதற்கோ கொள்வதற்கோ புறப்பட்டீரே (7)
என்றும் பேசப்படுகிறது.

      விறகு விற்றது: -  மதுரைநகர்ப் புரந்தருளும் சோமசுந்தரக் கடவுள் பாணபத்திரன்பால் வைத்த பேரன்புத் திறத்தினால் விறகு விற்றுச்செய்த திருவிளையாடல் அற்புதமானது.
                உருமிடி யெனவெடி படவெதிர் கருவி
      நடந்தொரு பாண னொதுங்கத் திரிந்தன                  (11)

என்னும் அடிகளில் இவ்விளையாரல் பேசப்படுகின்றது.
      அங்கம் வெட்டிய ஆடல்: -     குருவொடு முரணிப் பொறாமை கொண்ட சித்தன் என்பவனின் செருக்கினைத் தீர்க்க ஆசிரியன் வடிவங்கொண்டு அவனை அமருக்கழைத்து அங்கம் வெட்டியது திருவிளையாடற்புராணச் செய்தியாகும். இதனைக் குறிப்பிடும் பிரபந்தப்பாடல் அழகிது.
                இருவருக்கும் காண்பரிய ஈசர்மது ரேசனார்
      விருதுகட்டி அங்கம் வெட்டி னென்றனர்காண் அம்மானை (13)

என்பது அப்பாடல் தொடர்.
      வெள்ளானை சாபம் தீர்த்த விளையாட்டு: -  இந்திரனின் ஊர் தியாகிய ஐராவதத்திற்குத் துர்வாஸ முனிவர் இட்ட சாபத்தைத் தீர்த்தருளினன். இதனை வெள்ளானை சாபந்தீர்த்த திருவிளையாடற்பகுதியில் காணலாம். இதனைப் பிரபந்தத்தின்
                காரானைப் போர்வைதழீஇ வெள்ளானைக் கருள்
      சுரந்த கடவுளேயோ.                                    (17)

எனும் அடிகள் இதனைக் குறிப்பிடுவதாகும்.
      கல்லானைக்குக் கரும்பருத்தியது: -    புல்லாய்ப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பிறக்கும் எல்லா உயிர்கட்கும் அருள்செய்கின்ற இறைவன், கல்லானைக்குக் கரும்பருந்திய அருட் செய்லை.
                பல்லா ருயிர்க்குயி ராமது ரேசரப் பாண்டியன்முன்
      கல்லானைக் கிட்ட கரும்பு ….”                           (20)
               
கரும்பை முன்புகல் லானைக் கிடுஞ்சித்தர்.               (57)
என்னும் பாடல் அடிகளில் சுவாமிகள் குறிப்பிட்டிருக்கின்றார்.
      பழிக்கஞ்சியபான்மை: -  பெண்கொலையால் வரும் பழியை அஞ்சும் சொக்கநாதரின் பேரருள் திறத்தைக் கீழ்க்கண்ட பாடலடிகள் எடுத்துப் போற்றுவனவாகும்.
      “பாருக்குள் நீரே பழியஞ்சியா ரெனின்”                    (31)
                ஓவமே யன்னாள் உயிர்விற்றுப் பெண்பழைகொள்
      பாவமே பாவம் பழியஞ்சுஞ் சொக்கருக்கே”                (29)

      வலைவீசிய விளையாடல்: -    அம்பிகை வலிஞன் திருமகளாக வளர்ந்தமையின் அவளை மணஞ்செய்தருள வலைஞராகி வள்ளல் வலைவீசிய திருவிளையாடல் அற்புதம் மிக்கது.
                ஊன்வலையி லகப்பட்டார்க் குட்படாய் நின்புயத் தோர்
      மீன்வலைகொண் டதுமொருத்தி விழிவலையில் பட்டன்றே (1)

என்னும் பிரபந்த அடிகள் இவ்வருள் விளையாடலைப் போற்றிப் பாவுவனவாகும்.
      பன்றிக் குட்டிக்குப் பால் அளித்தது: -  பன்றிக்குட்டிகளுக்கு அவை தாயென நினைத்துப் பொருந்திய கரிய பன்றிக்குட்டிகளுக்குப் பால் வழங்கிய கவிஞரால் பாடப் பெறுகிறது.
                இருநிலன் அகழ்ந்ததொரு களிறுவெளி றும்படியோர்
      இருளியினணைந்த ணையுமக்
      குருளையைம ணந்தருளி னிளமுலை கரந்துறவு
                              குழகரிது ணர்ந்தி லர்கொலாம்”  (34)

இழிந்த அஃறிணையினிடத்தும் வரம்புகடந்து அருள் கூர்ந்து பாலருத்திய சொக்கநாதரின் கருணைத்திறத்தைக் குறிப்பிடுவது இவ்வருளாடல்.
பாண்மகற்குப் பலகையருளியது: -    பண்பால் யாழ்பயில் பாணபத்திரன் பொருட்டு விறகு விற்றது போலவே அவற்குப் பொற்பலகை தந்து சங்கத்து இருப்பிலே இடமளித்த செயலை அடிகள் புகழ்ந்து போற்றுவதை,
பாண்மகற் கலர்பொற் பலகை நீட்டுங் கடவுள்”     (47)
நரி பரியாக்கிய நாடகம்: -      சிற்கோல வாதவூர்த் தேசிகன் பொருட்டு வனத்தில் திரிந்த நரிகளைப் பரிகளாக்கி குதிரைச் சேவகனாகிய கொள்கையை இப்பிரபந்தத்தின் கிழ்க்கண்ட பாடலடிகள் எடுத்துச் சுட்டும்.
      “நரியைப் பரியாக்கி நடத்தினரால்”            (71)
வால விருத்த குமாரர் ஆகிய வண்மைள: -   எல்லோர்க்கும் ஆதியாகிய அண்ணல், கெளரி என்ற பார்ப்பனப்பெண்ணுக்கு அருள்புரிய, விருத்தனாகி வந்து குமாரனாகிப்பின் பாலனாகிய திருவிளையாடலை,
                வால விருத்த குமாரனெ னச்சில்
      வடிவு கொண்டு நின்றாய் …”                       (68)

எனப் போற்றுவார் கவிஞர்.
      நாரைக்கு முத்தி நல்கியது: -   மனிதகுலத்துக்கே அன்றிப் பறவைக்கும் பெருங்கருணை காட்டிய இறைவன் செங்கால் நாரைக்குச் சிவபதம் தந்தருளினான். இதனை,
                முட்டாட் பாசடை நெட்டிதழ்க் கமலத்து
      இரைவா வுறங்குங் குருகு விசிசிறைச்
      செங்கால் நாரைக்குச் சிவபதங் கிடைத்தன.         (87)
               
மாமிக்காக ஏழுகடலழைத்தது: -      இறைவன் தன்னுடைய மாமியாகிய காஞ்சனமாலை கடல் நீராட விரும்பியபோது, மதுரை நகரின்கண் சிவதீர்த்தம் ஒன்றில் கடல் ஒன்றே, ஏழு கடலும் வரும்படிச் செய்தருளினான் என்பதை,
மாமிக்குக் கடலேழும் வழங்கினீர்”                 (90)
உலவாக் கோட்டை அளித்தமை: -     அடியார்க்கு நல்லாரெனும் ஒரு வேளாளருக்கு எடுக்க எடுக்கக் குறையாத நெற் கோட்டையை ஆலவாய் அண்ணல் வழங்கியருளிய செய்தியை,
அடுத்தாங் குலவாக்கோட்டை சுமந்தளித்தீர்”        (93)
என்று பாடியருளுவர்.
      புராணச்சிறப்பு மிக்க அருட்பெருஞ்செயல்கள்: -    இப்படியன் இவ்வண்ணத்தன் என்றெழுதிக் காட்ட முடியாத இறைவனை, அவந்தன் ஆட்டத்தை, திருமேனிப் பொலிவை, வீரச் செயல்களை விரிவாகப் போற்றிப் பரவுகின்றார் அடிகள்.
      நள்ளிரவில் அவன் நட்டம் பயின்றாடுதலை ஶ்ரீ குமரகுருபரர்மன்றேயிருக்கப் புறங்காடரங்காட வல்லாயே” (6) என்பர். “புறங்காடரங்காட வல்லான்என்னும் தேவாரத்தொடர் ஈண்டு ஒப்பு நோக்குதற்குரியது.
      திரிபுராசங்காரத்தில் அவன் ஆடியருளிய பண்டரங்கம் என்னும் திருக்கூத்துபட்டிருக்கத் தோலசை இப் பாண்டரங்கக் கூத்தாடும் மட்டிருக்கு நீபவனத்தானே” (8) என்ற பாடலடிகளில் பேசப்படுகிறது.
      இறைவன் புலியதளை உடையாக வீக்கியமையை,
               
புகையெழ அழலுமிழ் சுழல்விழி யுழுவை
      வழங்குமொரு ஆடை மருங்குற் கணிந்தன”               (11)

என்றும, அவன் யானையின் ஈருரிதோல் போர்த்தமையை
                பொருசம ரிடையெதிர் பிளிறுமொர் களிறு
      பிளந்தொரு போர்வை புறஞ்சுற்றி நின்றன”                (11)

என்றும் இலக்கியச் சுவைபட எடுத்து மொழிவர் கவிஞர்.
      இல்லாள் முப்பத்திரண்டு அறங்கள் புரிய ஏந்தலோ பிரமகபாலத்து இரவொழியாமை மேற்கொண்டனர் என்பதை. “எடுத்ததாள் பதித்து ஆடிக் கடைப் பிச்சைக் கிச்சை பேசும் அப்பிச்சன்” (32) என்ற பகுதி காட்டும்.
      அப்பணி செஞ்சடை ஆதி புராதனன் முப்புரஞ் செற்ற முதன்மையை, “கூடார் புரந்தீ மடுக்கின்றதும்” (39) என்னும் அடியிற் பாடிப்பரவுவர்.
      ஆதியும் அந்தமுமில்லா அரும்பெருஞ்சோதியைக் கண்டு அடி, முடி தேடப்புறப்பட்டமால், அயன் செய்தியில் திருவடி தேடிய செய்கையை, “இருநிலன் அகழ்ந்த தொருகளிறு வெளிறும்படி” (34) என்னும் பாடல் தொடர் குறிப்பிடும்.
      இறைவன் தடாதகா தேவியாரைத் திருமணஞ் செய்து கொண்டு பாண்டியனாகி அரசு புரியத் தொடங்கியபோது பாண்டியர்க்குரிய மீன்கொடியைக் கைக்கொண்டார் அல்லவா? இச்செய்கை, மன்மதன் மலர்க்கணையை எறிந்த போது அவனை நெற்றிக் கண்ணால் எரித்து, அவனை வெற்றி கொண்டதற்கடையாளமாக அவனது மீன்கொடியைப் பறித்துக் கொண்டது போலுமிருந்தது என்று அரியதோர் கற்பனை நயம் தோன்றப் பாடுவர் நம் தெய்வக் கவிஞர். இதனைக் குறிப்பிடும் பாடற்பகுதி, “கானறாத சுருப்பு நாண் கொள் கரும்பு வில்லையைக் காயந்த நாள், கைப்பதாகை கவர்ந்து கொண்டதொர் காட்சியென்ன வெடுப்பதோர், மீனறாதவடற் பதாகை ….” (50) என்பதாகும்.
      இறையோன் தன்னிரண்டு திருச்செவிகளிலும் இரண்டு கந்தவர்கள் இசைபாடிக் கொண்டிடுக்கின்றனர் என்னும் புராணவரலாற்றுச் சிறப்பு, “பாணாறா மழலைச் சீறியாழ் மதுரப் பாடற்குத் தோடுவார் காதும் ….” (46) என்னும் பாடற் பகுதியில் பேசப்படுகின்றது.
      பாலற்காச் சினத்த காலனை உதைத்தருளிய வீரச்செயலை, :கூற்றுயிர் குடித்தாய்க் காற்றலாம்” என்பர். (46)
      மாதொருபாகனாய், மலைவளர்காதலியுடன் அவன் வீற்றிருக்கும் திருவருட் பொலிவினை,
                “வையமீன் றளித்த மரகதக் கொடிக்குன்
      வாமபாகமும் வழங்கினையால்”

என்னும் பிரபந்த அடிகள் ஓவியமாக்கிக் காட்டும்.
      அருளாளர்க்கு அருளிய மாண்பு: - கழுமலப்பதி கவுணியப் பிள்ளைக்குப் பொற்றாளம் வழங்கினன் இறைவன். இவ்வருட் செயலை,
                “புகலியர் குரிசில்பண் ணொடுதமி ழருமை
      அறிந்தொரு தாளம் வழங்கப் புகுந்தன.”       (11)

என்ற அடிகள் விளக்கிக் கூறும்.
      தழைத்த ஆத்தியின் நீழலில் மணலை லிங்கமாக்கி, ஆவின் பாலைக் கறந்து ஆட்டி, பிழைத்த தன் தாதை தாளைப் பெருங் கொடு மழுவால் வீசிக் சண்டீசராம் பதம் பெற்ற விசாரசருமர் செய்தியை, “தவப்பயன் பெரிதெனும் தந்தைதாள் எறிந்தார்க்கே” (14) என்று குறிப்பிடுவர்.
      சுதரிசனம் என்னும் சக்கராயுதத்தைப் பெறற் பொருட்டுத் திருமால் நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு சிவபெருமானை அருச்சித்து வழிபட்டு வருகையில் ஒரு நாள் சிவபிரான் அத்திருமாலினது அன்பு நிலையைப் பரிசோதிக்க வெண்ணி ஒரு மலரை மறைத்திட, திருமால் மனந்தளர்ந்து தனது செந்தாமைரை மலர் போலும் கண்களுள் ஒன்றைப் பறித்து அருச்சித்தாரென்னும் புராண வரலாற்றினை உட்கொண்ட குமரகுருபரரது நயமிகுந்த பாடலைப் பாருங்கள்.
                பொருணான் கொருங்கீன்ற பொன்மாடக் கூடல்
      இருணான் றிருண்ட கண்டத் தெம்மான் – சரணன்றே
      மண்டுழாய் உண்டாற்குக் கண்மலரோ டொண்மவுலித்
      தண்டுழாய் பூத்த தடம்.                                 (2)
               
இப்பாடலில் உள்ள மற்றொரு நயமுங்காண்க. மண்துழாய் உண்டாள் என்பது திருமாலைக் குறிக்கும். எம்பெருமான் சரணம் திருமாலது கண்மலர் மட்டுமல்லது அவரது தலையில் அணிந்த திருத்துழாயும் பூத்த தடம் என்றது. தடம் என்ற சொல்லுக்கு குளம் என்பதல்லாது மலைப்பக்கம் என்ற பொருளும் உண்மை பற்றீயாம். மலைப்பக்கத்தில் திருத்துழாய் துளசி வளரும் எனக் கொள்க. திருமாலுக்கு மவுலித்துழாய் பூத்த தடம் (மலைப்பக்கம்) என்றது திருமால் சிவபிரானது திருவடியில் தமது முடி படுமாறு சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கும் போது சிவபிரானது திருவடியில் திருமாலது திருமுடியில் உள்ள திருத்துழாய் பொருந்துமாதலின் என்பதுபற்றியாமென்க.
விற்பதற்கா வாங்குவதற்கா: - இறைவன் வளையல் வணிகனாய் மதுரை மாநகரில் வந்தபோது அவரைக் கண்டு காமுற்ற நங்கையர் கைவளையல்கள் சோர்ந்தன. எனவெ வளையல் விற்க வந்தவர் அவர்களிடம் உள்ள வளையல்களைக் கவர்ந்து விட்டார். அப்படியாயின், வியாபாரம் மிகவும் இலாபகரமானதே. அப்படி இலாபகரமாய் அமைந்த போதிலும் உமது வருகையின் நோக்கமென்ன? வளையல்களை விற்பதற்கா? அல்லது வாங்குவதற்கா புறப்பட்டீர்? என்று இலக்கிய நயம்பட வினவுகின்றார் கவிஞர். “பொலங் கொண்ட வரி வளையல்கள் விற்பதற்கோ கொள்வதற்கோ புறப்பட்டீரே” (7) என்ற பாடல் பகுதி இச் செய்தியைக் குறிக்கும்.
செய்யாள் சரக்கறை: - பொருள்களைச் சேமித்துவைக்கும் அறைக்குச் சரக்கறை (Store Room) என்பது பெயர். திருவாலவாய் நகரைத் திருமகளின் சரக்கறை என வருணிப்பார் கவிஞர். “செய்யா: செய் சரக்கறையாம் திருவாலவாயிலுறை செல்வனாரே” என்பது அப்பாடற் பகுதி.
      காதலனே காதலியான விந்தை: - மேக வண்ணத்தினனாகிய திருமால், திருமகள் நிலமகள் ஆகிய இரு பெண்களுக்கும் காதலன் – அதாவது கணவனாகின்றான். அதே காதலன் உனக்கு ஒரு காதலியாக இருக்கின்றான். இது என்னே விந்தை! ஏனெனில் இரண்டு பெண்களுக்குக் கணவனாக இருக்கும் ஓர் ஆண்மகன் மற்றொரு ஆண்மகனுக்குக் காதலியாக இருப்பது இயலுமா? இருக்கின்றானே, அது விந்தையிலும் விந்தை அன்றோ? “காதலனே காதலி” எனக் காவிய நயம்படக் கூறும் அழகைப் பாருங்கள்.
                …………………………………………………..இறும்பூதந்தோ
      போதலர்பைந் துழாய்ப்படலைப் புயல்வண்ணத்
            தொருவன் இருபூவை மார்க்குக்
      காதலனாய் மற்றுனக்கோர் காதலியாய்
            நிற்பதொரு காட்சிதானே.                          (95)

முடிவுரை: - வெள்ளி மன்றத்தை அரங்கமாகக் கொண்டு ஆடுகின்ற ஹென் திரு ஆலவாயில் உறையும் ஆதியே பாடு பொருளாக அவந்தன் மேன்மை உள்ளிடைப் பொருளாக ஶ்ரீ குமரகுருபர சுவாமிகள் அவர்களால் படைத்தளிக்கப்பட்ட மதுரைக் கலம்பகம் என்னும் சிற்றிலக்கியம் எல்லா வகையிலும் ஈடு இணையற்ற ஒரு இலக்கியமாகும். கண்ணுதற் கடவுளின் கருணையை, அவனது முழுமுதற்றன்மையை இலக்கியச் சுவைபட அமைத்தருளிய கவிஞரின் திறம் போற்றுதற்குரியது. கற்பவர்க்குக் களிப்பினையும், பக்திப் பரவசத்தையும் அளிக்கும் பாடல்களில் ஒரு சிலவே கண்டோம். முழு நூலையும் அறிஞர்கள் பயின்றால் மேலும் பல விழுப்பொருள்கள் கிடைக்கும் எனக்கூறி அமைகின்றோம்.
சிவம்

     
      
           


No comments:

Post a Comment