Tuesday, September 13, 2016

திருச்சிற்றம்பலம்
மதுரைக் காஞ்சியில் சமயச் செய்திகள்
கா. ம. வேங்கடராமையா, எம். ஏ., பி.ஒ.ல்.,
சிதம்பரம்

சிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      சங்கமருவிய நூல்களில் பத்துப்பாட்டு என்ற தொகுப்பில் கண்ட பத்து நூல்களுள் மதுரைக் காஞ்சி ஒன்று. இது 782 வரிகளையுடைய ஒரு பெரிய பாடல். இது தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் பேரில் பாடப் பெற்றது. மாங்குடி மருதனார் என்ற பெரும் புலவரால் பாடப் பெற்றது; அப்பாண்டியன் வீடுபேறு அடைதற்பொருட்டுப் பல்வேறு நிலையாமையைக் கூறுவது. இந்நூலுள் சமயத் தொடர்பான பல செய்திகள் உண்டு. அவற்றைத் தொகுத்துக் கூறுதலே இக்கட்டுரையின் நோக்கம் ஆம்.
      மதுரையில் அந்தணர்கள் வேதம் ஓதுகின்றனர். அங்ஙனம் அவர்கள் ஓதுவது பொய்கைகளில் மலர்களை மொய்க்கும் தும்பிகள் பாடுவது போல இருக்குமாம்.
                “போது பிணிவிட்ட கமழ்நறும் பொய்கை
       தாதுண் தும்பி போது முரங்றாங்கு
       ஓதல் அந்தணர் வேதம் பாட”

என்பன அவ்வரிகள் (654-656). இங்ஙனம் அந்தணர் வேதம் ஓதுதலைச் சிலப்பதிகாரமும்,
                “காலை முரசக் கனைகுரல் ஓதையும்
       நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்
       ………………………………………………………………………………………………………………
       கார்கடல் ஒலியிற் கலிகெழு கூடல்”

என்று கூறும். (13:140-149)
      திருமால் திருவோணநாளில் திருவவதாரம் செய்தவர் என்பர். பெரியாழ்வாரும்.
                “நின்ற மராமரம் சாய்த்தாய் நீ பிறந்த திருவோணம்
       இன்றுநீ நீராட வேண்டும் எம்பிரான்”
என்று இச்செய்தி சொல்லப் பெறுகிறது (வரி 590-591)
      முருகப்பெருமான், ‘கடம்பின் நீர்மிகு நெடுவேன்” எனப் பெற்றார் (614)
      கோயில்களில் திருவிழா தொடங்குமுன் கொடியேற்றம் செய்தல் இந்நாளிலும் காணும் வழக்கமாகும். இதனை மதுரைக்காஞ்சி வரிகள் 365-366
                “ஒவுக் கண்டன்ன இருபெரு நியமத்துச்
       சாறு அயர்ந்தெடுத்த உருவப் பல்கொடி”.

என்றமையால் அறியப்பெறும். (சாறு-திருவிழா)
      “மழுவாள் நெடியோன்” என்று சிவபெருமானைக் குறிப்பிடுவர் மதுரைக் காஞ்சியில் (வரிகள் 452-455) இவரே ஐம்பெரும் பூதங்களை ஒருங்கு படைத்தவர் என்று பின்கண்ட வரிகள் புகலும்.
                “நீரும் நிலனும் தீயும் வனியும்
       மாக விசும்போடு ஐந்துடன் இயற்றிய
       மழுவாள் நெடியோன்”
               
பின்வரும் வரிகள் பற்றிய செய்தி ஆய்வுக்கு உரியதாகும். அது நெடுஞ்செழியனைப் பற்றிய விளியாகும். அவ்வரிகள் பின்வருமாறு:
                “தென்னவற் பெயரிய துன்னரும் துப்பின்
       தொன்முது கடவுள் பின்னர் மேய
       வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந”
               
இதற்குத் தரப் பெற்ற உரை வருமாறு:
      “இராவணனைத் தமிழ்நாட்டை ஆளாதபடி போக்கினகிட்டுதற்கரிய வலியினையுடைய பழமை முதிர்ந்த இருடியாகிய அகத்தியனார்க்குப் பின்னர்ப் பொருந்திய ஒப்பற்றவனே” என்பதாகும்.
      இதில் இவ்வுரையின்படி “தொன்முது கடவுள்” என்பது அகத்தியரையும், “தென்னவன்” என்பது இராவணனையும் குறிக்கும். இராவணன் தமிழ் நாட்டைக் கைப்பற்றி ஆளாதபடி அகத்தியர் செய்தார் என்பது இதில் குறித்த செய்தி. இவ்வரலாற்றை உட்கொண்டே நச்சினார்க்கினியர் தம் தொல்காப்பிய பாயிரவுரையில் “பொதியிலின் கண் இருத்து, இராவணனைக் கந்தருவத்தாற்பிணித்து இராக்கதரை ஆண்டு இயங்காமை விலக்கி” என்றெழுதினார்.
      எனினும், “தென்னவன்” என்பதற்குப் பாண்டியன் என்று பொருள் கூறித் “தொன்முது கடவுள்” என்பதைச் சிவபெருமானுக்காக்கி “மதுரையில் வீற்றிருந்து அரசாண்ட சோமசுந்தரக்கடவுளுக்குப் பின்னர் அரசு செய்தவனே” என்று சிலர் பொருள் கூறுவர். எனவே குமரகுருபர சுவாமிகள் மதுரைக்கலம்பகத்தில் கூறியது போலச் சிவபெருமானும் உமையம்மையாரும், முருகப் பெருமானும் தமிழ்ச் சுவை நுகர்தற் பொருட்டுத் தண்டமிழ் மதுரையில் வந்தருளினர் என்ற திருவிளையாடற் புராணச் செய்தி மதுரைக் காஞ்சியிற் குறிப்பிட்டதாகக் கொள்ளலாம். சிவபெருமான் சோமசுந்தரராகப் பாண்டிய நாட்டிற்கு அரசு செய்ய வந்தனம் கூறும் மதுரைக்கலம்பகம் (9) பாடற்பகுதியின் வருமாறு:
                தமரநீர்ப் புவனம் முழுதொருங்கு ஈன்றாள்
              தடாதகா தேவிஎன்று ஒருபேர்
       தரிக்க வந்ததும் தனிமுதல் ஒருநீ
              சவுந்தர மாறன் ஆனதுவும்
       குமரவேள் வழுதி உக்கிரன் எனப்பேர்
              கொண்டதும் தண்டமிழ் மதுரம்
       கூட்டுண எழுந்த வேட்கையால் எனிலிக்
              கொழி தமிழ் பெருமை யார் அறிவார்?


      இதுகாறும் கூறியவாற்றான் மதுரையில் அந்தணர் இனிமையாக வேதம் ஓதுவர் என்றும், திருமால் திருவோண நாளில் அவதரித்தவர் என்றும், கோயில்களில் திருவிழாத் தொடங்குமுன் கொடியேற்றம் நிகழும் என்றும், சிவபெருமானே ஐம்பெரும் பூதங்களையும் படைத்தவர் என்றும், இவரே தான் தொன்முது கடவுள் ஆவர் என்றும், இச் சிவபெருமானே மதுரையில் சோமசுந்தரராக எழுந்தருளினார் என்றும் மதுரைக் காஞ்சியினின்று அறியப் பெறும் சமயச் செய்திகளாகும்.

No comments:

Post a Comment