Sunday, September 18, 2016

திருச்சிற்றம்பலம்
புராணங்கள்
திருவாவடுதுறையாதீன வித்வான்
சித்தாந்த பண்டித பூஷணம்
சிவஶ்ரீ ஆ ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள்

சிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      சமயத்துறையில் பயிற்சியும் ஆர்வமும் உடையவர்கள் வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் என அடிக்கடி பேசி வருவார்கள். வேதம் 4, ஆகமம் 28, புராணம் 18. இதிகாசமோ இராமாயணம், மஹாபாரதம், சிவரகசியம் என 3. சிவரகசியத்துக்குப் பரமேதிகாசம் என்ற விசேட நாமம் உண்டு. (பரம, இதிகாசம்பரமேதிகாசம், பரமமேலான).
      அந்நூற்கள் அனைத்தும் வடமொழியில் மூலமாக உள்ளன. சைவசமயப் பிறப்புடையார் அச்சமயப் பற்று உடையராயின் கூடியவரை அவற்றைக் கற்றல் வேண்டும். அஃது அவர்க்குக்க்டன். சிவபரத்துவ புத்தியும், சிவபக்தியும் உண்மையில் பெறவேண்டும் என்ற கருத்துடையார் அப்பேறின்றிப் போது போக்கிப் புறக்கணித்துக் கண்ணை மூடிக்கொள்வராயின் அவர் முதல்வனால் விசாரிக்கவே படுவர். தமிழிலுள்ள சைவநூற்களைப் படித்தால் போதும் என்பர் ஒற்றைக் கண்ணர். அவர் தாம் கெடுவதன்றிச் சைவ சமூகத்தையே வழிவழிக் கெடுப்பவர் ஆவர்.
      மேலே விவரித்த நூல்கள் எல்லாம் சைவசமயத்தையே இருதயமாகக் கொண்டவை. வடமொழியில் வைணவ மாயாவாதி வேற்றுச் சமயநூற்களும் ஏராளமாய் உள்ளன. அச்சமயங்களிற் பயிற்சி உடையாருட் பலர் அம்மொழியிலும் மிகத் தேர்ந்தவராய் இருப்பர். அவருக்குச் சைவ சமயத்திற் பற்றிருக்க முடியாது. சைவ சமயத்தில் மிகப் படித்தவராய் இருக்கும் சைவரோ சிலர். அவருட் பலர் வடமொழிக்கு வெகு தூரமாயினர். அது வேற்றுச் சமயத்தாருக்கு நன்கு தெரியும். அதனால் ஆரம்பத்திற் சொன்ன வடமொழி நூல் வரிசையில் சிவபரத்துவ வாக்கியங்கள் பலவற்றை அவர் தமக்கு ஏற்கு முறையில் அப்பரத்துவத்துக்கு விரோதமாகத் திரித்தும், புதுவாக்கியங்களைப் புகுத்தியும் உருக்கெடுத்துப் புத்தகங்கள் அச்சிடவுங்கூடும். அங்ஙனம் உருமாற்றி அச்சிடப்பட்ட புத்தகங்கள் சைவ சமயத்துக்கே பெருநஷ்டமாதல் திண்ணம். அவற்றில் ஸத்ஜன நம்பிக்கையும் இராது.
      பேரறிஞர் பலர் இருமொழியிலும் வல்லராய்த் தலபுராணம் என்ற பெயரால் பல புராணங்களைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கின்றனர். அவையெல்லாம் மூலவாக்கியங்களோடு முற்றிலும் ஒத்திருப்பன. ஆனால் உருமாறிய புத்தகங்களோடு அம்மொழிபெயர்ப்புக்கள் பல விடங்களில் ஒத்திரா. அதனைக் காட்டி அம்மொழி பெயர்ப்பாசிரியர் எல்லாம் வடமொழியறிவு இல்லாதவரெனவும், அதனால் அம்மொழிபெயர்ப்புகள் பிரமாணமாகா வெனவும், அவை சொல்நய முடையனவாயினும் பொய்களை உள்ளுறையாகக் கொண்டனவெனவும் உலகம் பலபல பேச இடனாக்குவார் அவ்வேற்றுச் சமயத்தார். அது தமிழ் இலக்கியக் கொலையுமாகும். ஆகவே அவ்வொற்றைக் கண்ணர் சைவத்துக்கும் தமிழுக்கும் கேடராவர்.
      சைவ சமயத்துக்குரிய தமிழ்மொழிபெயர்ப்புப் பேரிலக்கியங்களின் உயரிய தரத்தைக் காப்பாற்று நிமித்தமாவது வடமொழி மூலங்களைச் சைவர்கள் காப்பாற்ற வேண்டும். அந்த அளவுக்கேனும் அவர்கள் அம்மொழியைக் கற்றல் வேண்டும்.
      18 புராணங்களுள் 10 சிவபிரானையும், 4 விஷ்ணுவையும், 2 பிரமனையும், 1 அக்கினிக் கடவுளையும், 1 சூரியனையும் பற்றிப் பேசும். சிவபுராணம் பத்துக்கும் கிரத்தங்கள் 2,68,000, விஷ்ணுபுராணம் நான்குக்கும் கிரத்தங்கள் 55,000. பிரமபுராணம் இரண்டுக்கும் கிரத்தங்கள் 65,000, அக்கினி புராணத்துக்குக் கிரத்தங்கள் 8,000, சூரிய புராணத்துக்குக் கிரந்தங்கள் 12,000. அப்புராணங்கள் வேத வாக்கியங்களையெடுத்துக் கதாரூபத்திற் பொருள் கூறுவன. ஆகலில் அவை வேத உபப்பிரும்மணம் எனத் தொன்றுதொட்டு ஆன்றோரால் கெளரவித்து அங்கீகரிக்கப் பட்டு வருகின்றன. ‘புராணம் பழமைஆகலின் அதற்குக் காலம் கணிப்பது செல்லாது. சமயத்துறை பற்றிய ஆராய்ச்சிக்கு அவையனைத்தும் பிரமாணமாகும். அவற்றுள் 2,68,000 கிரந்தங்களைக் கொண்ட 10 புராணங்களால் வந்திக்கப்பட்டவன் சிவபிரான். வேற்றுமதத்தார் பொருள்கோள் முறையை உதாசீனம் பண்ணி மதாபிமானத்தால் சிவநிந்தை அப்படி மலிந்து கிடக்கிறது இப்படி மலிந்து கிடக்கிறது என வடமொழி மூல புராணங்களில் இருப்பன போலச் சிலபல வாக்கியங்களை எடுத்துக் காட்டுகின்றனர். சவாலும் விடுகின்றனர். அவ்வாக்கியங்கள் அண்டு உளவா, உளவாயின் அவற்றின் தாற்பரியம் சைவ சமயிகள் பரம்பொருளெனக் கொண்டு வழிபட்டு வரும் சிவபெருமானைப் பற்றிய நிந்தை தானா எனக் கண்டு ஆராய்ந்து முடிவுகூற வல்ல வடமொழிக் கண்ணைச் சைவ சமயம் படித்த பண்டிதருள் பெரும்பகுதியினர் பெறாமலிருந்து வருவது அதற்கு ஒரு காரணம். அவர் அந்நிந்தைப் பிரசங்கத்தைத் தடுக்கும் ஆற்றல் இலராய் அதற்குத் துணை போகின்ற கேடரேயாவர்.
      சாத்துவிகம், இராசதம், தாமசம் என்னும் முக்குணமும் உடையவன் பிரமன், அவன் சாத்துவிகியாய் இருந்த போது சாத்துவிக புராணங்களையும், இராசசியாய் இருந்த போது இராசத புராணங்களையும், தாமசியாய் இருந்த போது தாமச புராணங்களையும் செய்தான். 18 புராணங்களையும் இப்படி ஒரு மதம் பிரித்துப் பேசும்.
      விஷ்ணு புராணங்கள் சாத்துவிகம், அவற்றிற் பேசப்படும் விஷ்ணுவே சாத்துவிக மூர்த்தி, பரம்பொருள். அவனே சர்வ சாத்துவிக ஜனங்களும் (நன்மக்களு) வழிபடற்குரியான். சிவபுராணங்கள் தாமசம். அவற்றிற் பேசப்படும் சிவன் தாமசமூர்த்தி, ஜீவனே. அவன் தாமசகுணத்தரா (கீழ்மக்களா)ல் வழிபடப்படுவன். அவ்வழிபாட்டைச் சாதுக்கள் தள்ளுவர். அச்சிவபுராணங்கள் பிரமாணமுமாகா. அம்மட்டோ? ஸ்மிருதி முதலிய மற்ற நூற்களும் அம்முக்குணம் பற்றியனவாம். சுதர்சனம் 218 ‘ஸ்மிருதி விசாரம்என்ற தலைப்புக் கட்டுரையைக் காண்க. விஷ்ணு பரத்வம் பேசிகிற சுவடி எதுவாயினும் அது சாத்விகம், அல்லாத அனைத்துச் சுவடிகளும் ராசத தாமசங்களெனத் தள்ளத்தக்கனவே என்பது அக்கட்டுரையின் முடிவு.
      (ப்ரஹ்மசூத்ரம் 2-1-1) என்ற வியாச சூத்திரத்துச் சங்கர ராமானுஜ பாஷ்யங்களைக் கொண்டு
      ‘-----வேத விருத்தமான ஸ்மிருதி புராணாதிகளைத் தள்ளி விட வேண்டியதே என்று வேதவியாஸர் கூறியிருக்க, ஆதிசங்கரரும் தம்முடைய ப்ரஹ்ம சூதர் பாஷ்யத்தில் அதை ஆதரித்திருக்க…..’
எனஶ்ரீ வைஷ்ணவ ஸுதர்சனம்’ 214 பக்கம் 5 அதனைத் தெரிவிக்கும்.
      ஆனால் அந்த சூத்திரம் கபில சாங்கிய மதத்தை மறுக்க வந்த இடம். அதில் கபில ஸ்மிருதி மாத்திரம் மறுக்கப்படுகிறது. மறுக்கும் போது,
      ‘இதொன்றுக்காக (இக்கபில ஸ்மிருதியை மறாமல் விட்டு வைத்தால்) …. மற்றுமுள்ள அநேக ஸ்மிருதிகள் இதிஹாஸங்கள் புராணங்கள் பகவத்கீதையாகிய இவ்வளவுக்கும் அப்ராமண்யம் சொல்வது சரியன்று.’
எனப் புராணங்களை ஆதிசங்கரர் ஆதரித்தே பேசியிருக்கிறார். அவ்விடத்தில் ராமாநுஜர் புராணங்களைப் பிரஸ்தாபிக்கவேயில்லை. அங்ஙனமாகப் புராணங்களைத் தள்ளிவிட வேண்டியதே என வேத வியாஸர் கூறியதாகச் சுதர்சனம் சொன்னது மிகையன்றோ?
      புராணங்களை அம்மதம்,
      ‘யஸ்மிந் கல்பேது யத்ப்ரோக்தம் புராணம் ப்ரஹ்மணாபுரா |
      தஸ்ய தஸ்யது மாஹாத்ம்யம் தத்ஸ்வரூபேண வர்ண்யதே |
      அக்நேச் சிவஸ்ய மாஹாத்ம்யம் தாமஸேஷு ப்ரகீர்த்திதம் |
      ராஜஸேஷுச மாஹாத்ம்ய மதிகம் ப்ரஹ்மனோ விது: |
      ஸம்கீர்ணேஷு ஸரஸ்வத்யா: பித்ருணாம்ச நிகத்யதே |
      ஸாத்விகேஷ்வத கல்பேஷு மாஹாத்ம்ய மதிகம் ஹரே: \
என்ற மச்சபுராண வாக்கியத்தை ஆதரவாகக் கொண்டு சாத்துவிக முதலியனவாகப் பிரித்துப் பேசுகின்றது. எந்தப் புராணம் எந்தக் கற்பத்திற் சொல்லப்பட்டதோ அந்தப் புராணம் அந்தக் கற்பத்துக்குரிய குணத்தை விஸ்தரித்து, அவ்விஸ்தாரத்தோடு அப்புராணக் கடவுளின் மகிமையைக் கூறுகிறது என்பதே அதன் தாற்பரியம். பிரமன் அவ்வக்குணமிகுந்தவனாயிருந்து அவ்வப் புராணத்தைச் சொன்னான் என்பதற்கு அதில் பதப்பிரயோகமில்லை.
      தாமச கற்பத்துச் சீவகோடிகளின் தோஷ நிவர்த்துக்குச் சிவ மாஹாத்மிய படனமே பரம ஒளஷதம். அங்ஙனமாயின் மற்றைக் குணங்கள் மிகுந்த கற்பங்களிலுள்ள சீவ கோடிகளின் உய்தி அப்படனத்தால் விரைவில் சித்திக்கும் என்பதில் ஐயமும் உண்டோ? மற்றைப் புராணங்களின் படனங்களால் தாமச கற்பத்தின் தோஷத்தைப் போக்க முடியாது.
      வரதன் எனத் திருமாலைச் சொல்வதுண்டு. ஆனால் கலியுகத்தார்க்கு அவனால் வரங்கொடுக்க முடியாது. அவ்யுகம் அவ்வளவு தீயது. கலியுக வரதன் என்பது முருகனது திருநாமம். அவனை வழிபடின் கலிதோஷம் விரைவில் நிவர்த்தியாகும். அவன் வரங்கொடுப்பதும் நிச்சயம், அவ்வழிபாடு மற்றை யுகங்களுக்கு அந்நலஞ் செய்யாமற் போமோ? அப்படியே புராணங்களைக் குணம் பற்றிப் பிரிப்பதாலும் சிவபுராணங்களிலுள்ள சிவமாஹாத்மியம் முக்குண கற்பத்து மக்களுக்கும் பரம ஒளஷதமாகும் என்க.
      மச்ச புராணமும் சிவபுராணமே. ஆதலின் அம்மதக் கொள்கைப்படி அதனைத் தாமசம், கருதி விருத்தம் எனத் தள்ளிவிட வேண்டியதே. அதனைச் செய்யாமல் அப்புராண வாக்கியத்தை அம்மதம் தன்கொள்கைக்குப் பிரமாணமாகக் கொண்டது அஃதேன்?
      வைணவ புராணங்கள் ஸாத்விகம், சைவ புராணங்கள் தாமஸமே என்பதைப் பலபடியாலும் சிவனே உமைக்கு விவரித்தாராம். அதற்கு ஆதாரமாகப் பாத்மோத்தரம் என்ற புராண்த்திலிருந்து சில வாக்கியங்களைச் சுதர்சனம் 218 தன் 6, 10, 11-ஆம் பக்கங்களில் எடுத்துக்காட்டி உள்ளது. சிவனும் உமையும் சுதர்சனத்தின் கொள்கைப்படி தாமஸ தெய்வங்கள், அவர்களின் சம்பாஷணையும் தாமஸபுத்தியுடன் கூடியதாய்த் தானிருக்கும் அது சுதர்சனத்துக்கு எப்படி பிரமாணமாயிற்று?
      அன்றியும் பாத்மபுராணம் பிரமனுக்குரியது, ஆகலின் ராஜஸம், அதனைப் பிரமாணமாக எடுப்பது சுதர்சனத்துக்கு எப்படித் தகும்?
      இன்னும் History of civilization in Ancient India based on Sanskrit Literature by Romesh Chandra Dutt of the Bengal Civil Service and of the Middle Temple, Barrister-at-law; Member of the Artistic society of Bengal; Author of a Bengali Translation of the Rig Veda Samhita and other works.
            People’s Edition, Complete in one Volume, Calcutta, Tacker Spink & Co., 1891, Page 664.
            ‘Padma purana: - The Uttara Khanda which is probably later than the other portions of the Purana, is intensely Vaishnava in its tone; the nature of Bhakti or faith in Vishnu, the use of the Vaishnava marks on the body, the legends of Vishnu’s incarnations and the construction of images of Vishnu are all explained by Siva to his consort Parvati and they both finish by adoring Vishnu! We are also told that of the Hindu Trinity, Vishnu alone is entitled to respect! There can be no doubt much of this sectarian controversy has been added after the Moslem conquest of India. There is mention, even in the earlier books of this Purana, of mlechchas flourishing in India, while to the last portions of the work Dr. Wilson gives the 15th or 16th century A. D. as the probable date’
(பாத்ம புராணத்தின், உத்தர கண்டமானது அப்புராணத்தின் மற்றைப் பாகங்கள் தோன்றிய நெடுங்காலத்திற்குப் பிறகு பெரும்பாலும் வைஷ்ணவ நடையில் எழுதப்பட்டதாகவே இருக்கிறது. விஷ்ணு பத்தியின் சொரூபமும், வைஷ்ணவ புண்டரதாரணப் பிரயோசனமும், விஷ்ணுவின் அவதார சரித்திரங்களும், விஷ்ணு விக்கிரகங்கள் செய்யும் விதிகளும் சிவனால் தன் தேவியாகிய பார்வதிக்குக் கூறப்பட்டனவென்பதும், அவ்விருவரும் இறுதிக்கண் விஷ்ணுவை வணங்கி நின்றனரென்பதும் வரையப்பட்டுள்ளன. இந்துக்கள் வணங்கும் திருமூர்த்திகளில் விஷ்ணுவே வணக்கத்திற்குரியாரென்றுங் கூறுகிறது. (ஆகையால்) இந்தியாவை முஹம்மதியர் ஜயித்துக் கைக்கொண்ட காலத்திற்குப் பிறகு தான் மதச்சண்டைகள் நடந்ததற்கு அறிகுறியாகிய இவ்விஷயங்களெல்லாம் எழுதப்பட்டனவென்பது சந்தேகமற்ற விஷயம். இந்த உத்தர கண்டத்தின் சில பூர்வ பாகங்களில் இந்தியாவில் மிலேச்சர் விருத்தியடைந்தமையுங் குறிக்கப்பட்டது. உவில்சன் என்னும் பண்டிதரும், இந்த இறுதிப் பாகங்கள் பெரும்பான்மையும் கி.பி. 15-ம், 16-ம் நூற்று ஆண்டுகளில் உண்டாயிருக்கலாமென்று காலவரையறையுங் குறித்தனர் -664). ஆகவே பாத்ம உத்தர கண்டமானது மதாபிமானத்தால் நவீனமாக எழுதிச் சேர்க்கப்ட்டதொரு கற்பனைச் சுவடியென்பது தெரிகின்றது. சமய வாராய்ச்சிக்கு அது சிறிதும் பிரமாணம் ஆகாது. அதனைத் தள்ளிவிடுவதே மேல். அம்மதாபிமானிகளாலும், அவரைச் சார்ந்தவராலும் மற்றைப் புராணங்களிலும் அப்படிப் பல அவைதிகங்கள் சேர்க்கப்பட்டிருக்கும், அல்லது உண்மைப் புராண வசனங்கள் அங்கங்கே தம் மதாநுகூலமாகத் திரிவு செய்யப்பட்டிருக்கும். அப்பகுதிகளிளெல்லாம் சைவசமய பண்டிதோத்தமர்கள் கூர்ந்த கவனஞ் செலுத்த வேண்டியது மிகமிக அவசியம்.
      அப்பைய தீக்ஷிதர் செய்த சிவகர்ணாமிர்தம், பிரமதருக்கஸ்தவம், அப்புசாஸ்திரி செய்த விஷ்ணு தத்வ ரஹஸ்ய கண்டனம் முதலிய வடமொழி நூற்களிலும், சிவஞான போத திராவிட மஹாபாஷ்யம் முதலிய தமிழ் நூற்களிலும் சிவபுராண தாமஸ்தவ கண்டனத்தை விரிவாகக் காணலாம்.
      பிரமன் விஷ்ணு உருத்திரன் ஆகிய திரிமூர்த்திகளுக்கும் அதீதமாகிய துரிய மூர்த்தியே சைவசமயப் பரதெய்வமாகிய சிவபரம்பொருள். அதனைப் பிராகிருதமாகிய முக்குணங்களில் எக்குணமும் பற்றாது. வேறான எட்டுக் குணங்களே அதற்குள. அவற்றையும் சாத்துவிகமெனச் சிலர் உபசாரமாகச் சொல்வர்.
      புராணங்களுள் அபகர்ஷம் (குறை) பேசப்படும் உருத்திரர் நீலலோஹிதர் முதலிய சிவகணத்தராகிய உருத்திரரேயாவர். அவர் துரீயசிவமல்லர். நீலலோஹிதர் முதலியோர் வேறாக உளரென்பதைக் கிருஷ்ணர்அர்ச்சுனர் இருவரும் பாசுபதாஸ்திரத்தின் பொருட்டுக் கைலாசத்துக்குச் சென்ற அமையத்து,
      ‘தத: பார்ச்வே வ்ருஷாங்கஸ்ய ப்ரஹ்மசாரீத்யவர்த்தத |
      பிங்காக்ஷஸ் தபஸ: க்ஷேத்ரம் பலவாந் நீலலோஹித: |’
(சிவபெருமானுடைய ஓர் பக்கத்தில் நின்ற பிரமசாரியும், பிங்கல நேத்திரரும், தபசுக்கு ஸ்தானமாயினரும், பலவானுமாகிய நீலலோகிதர் வந்தனர்) என்ற துரோண பர்வத்தாற் காண்க. அந்த முறையில்,
       ‘சிவபுராணம் பத்தும் சாத்துவிகங்களாம் சத்துவ
       குணம் வெண்ணிறமுடையதும் சுகத்துக்கும்
       ஞானத்துக்கும் இடமுமாம், யோகிகளுக்கு ஞானம்
       உபதேசிக்கும் சிவபெருமான் தெளிபளிங்கு வடிவி
       னராய் எங்குமுறங்காது பிராமணாதிபதியாயிருப்பர்’,

       ‘விட்டுணு புராணம் நான்கும் தாமசங்களாம், தமோ
       குணம் கருநிறமுடையதும் உதாசீனரூபமும், கூட கிருத்
       திய சமர்த்தமுமாம். நித்திரை, சோம்பு, பிரமாதம், வஞ்ச
       னம் முதலியவைகள் தாமசங்கள். விட்டுணு கரியரும்,
       சேஷசயனம் செய்வோரும் பக்தரை மோகிப்பிப்பவருமாயிருப்பர்,

       ‘பிரமபுராணம் இரண்டும் இராசசங்களாம். இரசோ
       குணம் சிவந்த நிறமுடையதும் துக்கத்துக்கிடமும்
       சஞ்சல ரூபமுமாம். பிரமாச் செந்நிறமுடையராய்ச்
       சஞ்சல ரூபியாயிருப்பர்.

       ‘அக்கினி புராணமும் சூரிய புராணமும் திரிகுணயுத்த
       மாம். அக்கினியுஞ் சூரியனும் முக்குண வடிவினராயிருப்பர்.
       ஆதலால், இப்பதினெட்டினுள்ளுஞ் சிவபுராணங்கள்
       பத்துமே உயர்ந்தனவாம். ஆகையாற் சிவனடியார்கள்
       சிவ புராணங்களையே விதிப்படி மெய்யன்போடு கேட்கக்கடவர்கள்

      என்றார் யாழ்ப்பாணத்து நல்லூர் ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாலவர் அவர்கள்.
      சிவபுராணம் பத்தனுள் ஸ்காந்தபுராணமும் ஒன்று. அதன் ஒரு பகுதியைக் கச்சியப்ப சிவாசாரியார் தமிழில் மொழி பெயர்த்து அழகு ததும்பிய 10345 செய்யுளாகப் பாடி கந்த புராணம் எனவே பெயரிட்டு வைத்தார். அது சுப்பிரமணிய சுவாமியின் பிரபாவத்தைச் சாங்கோபாங்கமாய் எடுத்து விரிப்பது. தமிழிற் பேரிலக்கியமாய்த்திகழ்வது, சைவ சமய உண்மைகளைப் பலவிடங்களில் விளக்குவது, சிவபரத்துவ நறுமண மலராய் ஒளிர்வது. அவ்வாசிரியர் வடமொழி மூலக் கந்தபுராணத்தைப் பற்றிப் பேசும் போது அது சரித்திர சாகரம், கதைக் களஞ்சியம் எனப் புகழ்கிறார்.
                ‘புதுமயி லூர்பரன் புராணத் துற்றிடாக்
       கதையிலை யன்னது கணித மின்றரோ
       அதுமுழு தறையவெற் கமைதற் பாலதோ
       துதியுறு புலமைசேர் சூதற் கல்லதே’

      என்றது அப்புராணத்து அவையடக்கம்.
      கந்தபுராணத்தில் வந்துள்ள கதைக்குக் கணக்கில்லை. அக்கதைகளைச் சொல்ல வல்லவர் அறிஞரெல்லாந் துதிக்கத் தகுந்த புலமை மிக்க சூத முனிவரொருவரே யென்பது அச்செய்யுள் கருத்து. யாரேனும் ஏதேனும் ஒரு கதை சொன்னால் அதனைக் கேட்டவர் அதன் சிறப்பை அனுபவிக்கு முகத்தால் இந்தக் கதை கந்தபுராணத்திற்றானுங் கிடையாதே எனக்கூறி வியப்பர். அது கந்தபுராணத்தை வியந்தபடியாம். அதனால் ‘காந்தம் புகாக் கதையில்லை’ என்ற பழமொழி நல்லோர் அரங்கில் வழங்கி வரலாயிற்று.
      ஆனால் அச்செய்யுளைப் படித்திராத, படித்திருந்தால் அருந்த்தந் தெரியாத, அல்லது விஷமப் புத்தியுள்ள யாரோ ஓர் அறிவிலி அப்பழமொழியை ‘எந்தப் புளுகும் கந்தபுராணத்தில்’ என மாற்றி வழங்கலானான். ஶ்ரீவைஷ்ணவ ஸுதர்சனம் 214 பக்கம் 1இல் அவ்வபத்த மொழி ‘என்பதற்கிடையில் வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கும் ஆநுசாரிகள் கிடைத்திருப்பது காலக் கொடுமை. அதனைப் புகலாகக் கொன்டு அப்பத்திரிகை
      ‘லிங்கத்திலிருந்து பிறந்த முருகனை’
      ‘ஆதி பரம் பொருளை ஈனத் தனமான முறையிலே தாக்கும் அபத்தக் கதைகளை’
      ‘அதிமானுஷ்யச் செயல்களைச் செய்யச் சக்தியற்றுக் கிடந்த சிவன் முதலான தெய்வங்கள்’
      ‘பொய்க் கதைகள் பலவற்றைப் புனைந்து சிஷ்ட பரிக்ரஹமில்லாத தாமஸ புராணங்களிற் சேர்த்துக் கொண்டார்கள்’
      ‘விஷ்ணு த்வேஷத்திற் கென்றே இட்டுப் பிறந்த நாயன்மார்களுடையவும், அவர்களைப் பின்பற்றியவர்களுடையவும் நூல்களில் தவிர வேறு எந்த நூல்களிலும் இக்கதைகளைக் காண முடியாது’
      ‘ஸர்வ ம்ருதி விருத்தமான கந்தபுராணக் கட்டுக்கதைகளை’
      ‘சிவனும் பார்வதியும் புணர்ந்ததனால் சிவனின் வீரியம் விழுந்து அதனால் உண்டான முருகன்’
      முதலிய பலவற்றை எழுதியிருக்கிறது. அவையெல்லாம் சைவ சமய தெய்வத்தையும், நூற்களையும், அடியார்களையும் மிகக் கீழ்த்த்ரமாகப் பேசிய பேச்சுக்களல்லவா? பாவைக்கூட்டு மகாநாடுகள் வீண் வேலையும், வீண் செலவும், போது போக்குமேயாகும் என்பதற்கு அவை ஒரு சான்றாகும். பச்சை மெண்ணும் சுட்ட மெண்ணும் ஒட்டினாலும் ஒட்டும் சைவ வைஷ்ணவங்கள் ஒரு நாளும் ஒட்டா. வெவ்வேறு சமயங்களைச் சமரசப்படுத்த முயல்வது நாய் வாலை நிமிர்த்த முயல்வதோடொக்கும் அது கிடக்க.
      மற்றைத் தெய்வங்களைக் கீழ்ப்படுத்திக் குன்றில் மேலிட்டு தீபமாய்ப் பிரகாசிப்பது சிவபரத்துவமொன்றே. 18இல் 10 புராணங்கள் அதனை அங்கீகரித்து அப்பெருமானை வந்திப்பதொன்றே அதற்குச் சாட்சி. நூற்புரட்டுக்களால் அவன் பரத்துவத்தில் ரோமக்கால் அளவு தானும் அசைக்க முடியாது. ஆனால் அவனது பரத்துவத்தை அறியு முறையில் அறிந்து ஊக்கங் குறையாமல் வந்தித்து ஆன்மலாபத்தைத் தேடிக் கொள்ள மாட்டாமல் சைவ சமூகம் வாழ்நாளை வீழ்நாளாகக் கழிக்க நேரும். அந்நஷ்டம் இப்போதுள்ள தலைமுறைக்கு மட்டிலன்றி இனிவருந் தலைமுறைகளுக்கும் வந்து சேரும். சந்நதி விருத்திக்கு ஆசைப்படுவோர் முதலில் அந்நஷ்டம் உண்டாகாத வழியைத் தேடிக் கொள்ள வேண்டும். அஃதின்றிப் பெறப்படும் சந்ததிகள் சைவ சமயப் பிரக்ஞையின்றி வளர்ந்து வேற்றுச் சமய விலங்குகளுக்கே இரையாகும். அதற்காகவா அச் சமூகம் சந்ததி விருத்தி செய்ய வேண்டும்? அதை விடச் சந்ததி வறந்து போவது நலமன்றோ? பிறந்து பிறந்து அவ்வப்போதே எமனுக்கு இரையாய் விடும் என்பதை முன்னமேயறிய வல்லவொருவன் பிள்ளை பெறச் சிறிதும் ஆசைப்படுவானா?
      சைவ சமயத்தைப் பறிகொடுத்துக் கொள்ளப்படும் மொழிப்பற்றுச் சைவசமயியாவானுக்கு மொழி வெறியேயாகும். அவன் தன் சமயத்துக்குப் பிரதான ஸ்தானங் கொடுத்து, அதனைத் தொடர்ந்து மொழியைப் போற்ற வேண்டும். அதனால் அம்மொழிப்பற்று அவனுயிர்க்கே இன்பம் ஊட்டும். வடமொழியில் சைவசமய நூற்கள் கணக்கின்றியுள்ளன. அவை மற்றை மொழிச் சைவ நூற்களுக்குத் தந்தை தாய். அவற்றை உருமாறாமல் அவசியம் காக்க வேண்டும். அதற்காகச் சைவ சமயத்தினர் தம் மாகாண மொழியைக் கற்பதோடு தேசீயமாகிய வடமொழியையும் திறம்படக் கற்றல் அவசியம். அஃதின்றேல் தம் வாழ்க்கையை வீணே கழித்தவர். தம் புத்திரர்களையாவது அக்கல்வியிற் செலுத்தி அறிவுடையராக்குவாராக. இல்லா விட்டால் வேற்றுச்சமயிகள் நம் சமயத்தைச் சுற்றுயிட்ட முற்றுகையை முறியடிக்க முடியாது. சைவ சமயிகளுக்கு இஃதொரு முன்னறிவிப்பாகும்.
      [கட்டுரை ஆசிரியர் பற்றிய குறிப்பு: - 12.3..1897 இல் பேட்டையைச் சார்ந்த ஶ்ரீ த. ஆறுமுகநயினார் பிள்ளைக்கு ஈசுரவடிவு அம்மையார் பால் ஶ்ரீமாந் ஆ. ஈசுரமூர்த்திப் பிள்ளையவர்கள் தோன்றினார்கள். காலஞ்சென்ற திருவாவடுதுறையாதீன வித்வானும், திருநெல்வேலி இந்துக் கல்லூரி உயர்நிலைப் பள்ளித் தமிழ் போதகாசிரியருமாகிய ஶ்ரீமாந் வி. சிதம்பரராமலிங்கப் பிள்ளையவர்கள் இவர்க்கு சமய ஆசிரியராவர். இவர் தந்தையாரே சிறந்த கவிஞரும் நூலாசிரியருமாவார். இவர் 1922 முதல் 1958 வரை ஆசிரியர் பணியாற்றினார். பலநூறு மாணவர்களுக்குச் சமய சாத்திர போதக ஆசிரியராகவுமிருந்தார். சைவ சாத்திரங்கள் பலவற்றிற்கு தெளிந்த தமிழில் உரை இயற்றி வெளியிட்டுள்ளார்கள். செய்யுள் நூல்கள் நான்கு ஆக்கியுள்ளார். உரைநடை நூல்களாக 20 ஆக்கி வெளியிட்டுள்ளாகள். ‘சிவநேசன், சமயஞானம், செந்தமிழ்ச் செல்வி, சைவ சாஸ்திர பரிபாலனம், செந்தமிழ் சிவகாம வித்யா, குமர குருபரன்’ போன்ற பல பத்திரிகைகளில் இவர் எழுதிய கட்டுரைகள் நூற்றுக்கணக்கிலாகும். ‘சமயசாதனம்’ எனத் திருநெல்வேலியிலிந்து வெளிவந்த பத்திரைக்கு ஆசிரியராயிருந்தார். அதற்கென எழுதி வைத்திருந்ததே இக்கட்டுரை. இதுவரை பிரசுரமாகவில்லை. இவர் ஆக்கிய ‘சைவாலயங்களில் சம்ஸ்கிருத மந்திரங்களே வேண்டும்’. ‘நாடும் நவீனரும்’ என்ற இருநூல்களும் தமிழ் நாட்டில் ஒரு புரட்சியையே ஆண்மையோடு நிகழ்த்தின. தமிழக அரசு பிறப்பித்த தமிழ் அர்ச்சனை உத்தரவு ஆகம விரோதமானது என சுப்ரீம் கோர்ட்டில் தொடுக்கப்பட்ட வழக்கில் இவ்விரு நூல்களும் சாட்சியங்களாய் நின்றிலங்குகின்றன.
      திருவாவடுதுறையாதீனத்து 22-ம் குருமஹா சந்நிதானம் ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிக மூர்த்திகள் 30-5-1968 அன்று கல்லிடைக்குறிசிக்கு வரவழைத்து ஶ்ரீமாத் ஆ. ஈ. பிள்ளையவர்களை ஆதீனவித்துவானாக நியமித்தருளினார்கள். இவர்கள் ஆக்கிய ‘அத்வைதம்’ என்ற உரைநடை நூலும் திருமடத்து நூலாக வெளி வந்து. இடைவிடாது சமயப் பணியாற்றிய நமது ஆசிரியர் தம் 75-ஆம் வயதில் 19-10-71 அன்று சிவபிரான் திருவடியடைந்தார்கள்.
      இக்கட்டுரை, இவ்வாசிரியரது மாணவராகிய வித்வான் - ஶ்ரீ ச. இரத்நவேலன் அவர்களால் நமது மலர்க்கு அனுப்பப்பட்டது.]
சிவம்.

      

1 comment:

  1. வைஷ்ணவ சுதர்சனென்னும் ருத்ரமூர்த்தியை தாமஸி என்று 18 புராணங்களிலும் உள்ள சுலோகங்களை
    சான்றாகக் காட்டியுள்ளது.இதற்கு சமாதானம் கொள்வதெப்படி?

    ருத்ரமூர்த்தி சாத்வகி என்பதற்கு எதனை ஆதாரமாகக் கொள்வது?அதற்கு
    ஆதாரமிருந்தால் தயவு செய்து கூறுங்கள்.கிருஷ்ண உபநிடதம் தவிர வேறு எங்காவது ருத்ரமூர்த்தியை சாத்வகி என்று சொல்லப்பட்டுகிறதா?

    ReplyDelete