Saturday, September 10, 2016

சிவமயம்
மறவாது கல்லெறிந்த மாதவர்
பேராசிரியர். அய்யாசாமி எம். .

சிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

                சேக்கிழாரின் பெரியபுராணம் அறுபத்து மூன்று தனி அடியார்களின் பெருமையை நன்கு விரித்துரைக்கிறது. தொண்டர்களின் பல இனத்தினர், பல தொழிலினர்; பல நிலையினர். அவர்தம் தொண்டு முறையிலும் வேறுபாடு உண்டு. சிலர் பணிவும் அடக்கமுமே உருவானவர்கள்; சிலரோ எரியும் நெருப்பாய்க் கனன்றவர்கள். சிலர் செல்வம் மிகப் பெற்றுக் கணக்கற் அறச்செயல்களைப் புரிந்து சிறந்தவர்கள். சிலர் வறியவர்கள், ஆனாலும் வறுமையில் செம்மை காத்தவர்கள். சிலர் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைத் தாங்கிக் கொண்ட சத்தியாக்கிரகிகள். சிலர் கொடுமைகளைக் கண்டு பொங்கும் துணிச்சல்காரர்கள் ஒவ்வொரு நாயனாருக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அத்தகையவர்களில் ஒருவர் தான் சாக்கிய நாயனார்.
      அவர் திருச்சங்கமங்கை என்னும் ஊரில் வேளாளர் குலத்தில் பிறந்தவர். அவரது இயற்பெயர் என்னவென்று தெரியவில்லை. சாக்கிய மதம் என்று சொல்லப்படும் பவுத்த நெறியை மேற்கொண்டதால் சாக்கிய நாயனார் என்னும் பெயராலேயே குறிக்கப்படுகிறார்.
      இவர் இளவயதிலேயே அறிவு நிரம்பப் பெற்றவர். பல்லோருக்கும் அன்பு செய்து பிறப்பைப் ஒழித்துக் கொள்ள விரும்பினார். அதற்கான வழியைக் கண்டறிய ஏட்டுக் கல்வி மூலம் முயன்ற போது, முதன் முதலில் அவர் சாக்கிய மத நூல்களைக் கற்க நேர்ந்தது. அவை அவருடைய உள்ளத்தைக் கவர்ந்தன. நாயனார் சாக்கிய மதத்தில் சேர்ந்து அதற்கான கோலத்தையும் நெறி முறை ஒழுக்கங்களையும் மேற்கொண்டார்.
      வெறும் கல்வி அறிவால் ஞானத்தை எய்த முடியாது. இறை வழிபாடு இல்லாத கல்வி ஒருவரைக் குழப்பச் சுழலில் ஆழ்த்தி அலைக்கழித்து விடும். அதனால் தான் மாணிக்கவாசகர், “கல்வி என்னும் பல்கடல் பிழைத்தும்,” என்று கூறுகிறார். அவரேஅவன் அருளாலே அவன் தாள் வணங்கி,” என்று கூறுவது போல, இறைவன் அருள் இருத்தால் தான், இறைவனை உணர்ந்து தொழுமு வேட்கையும் தொழுவதனால் உண்டாகும் மெய்ஞ்ஞானமும் கைகூடும்.
      பவுத்த நெறியைக் கைக்கொண்டு ஒழுகிய நாயனாருக்கு ஈசன் அருள் கைகூடிற்று. சிவநெறியே மெய்ப்பொருள் என்ற உணர்வு கைவரப் பெற்றது. செய்கின்ற இருவினை, அதைச் செய்யும் உய்ரி, செய்யும் வினையால் வரும் பயன், அந்தப் பயனை வருத்துக் கொடுக்கும் இறைவன் என்று நிலையான பொருள் நான்காக இருப்பதைத் தெளிவாக அறிந்தார். இதனை உணர்த்துவது சைவ சமயம் தான் என்ற உண்மையையும் அறிந்து கொண்டார். ஒன்று என்று தனித்து நிற்கும்; உண்மைப் பொருள் சிவபெருமானே என்னும் உணர்வு நெஞ்சகத்தில் அரும்பி மலர்ந்து கனித்து நின்றது.
      உள்ளத்தளவில் தன்னை ஈசனுக்கு அடியவரக்கிக் கொண்ட நாயனார் புறக்கோலத்தில் தன்னை மாற்றிக் கொள்ள முற்படவில்லை. சாக்கியக் கோலத்திலேயே தொடர்ந்து வாழ்ந்து வந்தார். ஆனால்எந்நிலையில் நின்றாலும் எக்கோலம் கொண்டாலும் மன்னிய சீர்ச் சங்கரன் தாள் மறவாமை பொருள்”, என்ற கொள்கையுடையவராப் வெளியே பெளத்த உடையும் உள்ளத்தில் சிவபெருமான் மீது அன்புமாகத் திகழ்ந்தார்.
      தினந்தோறும் வெளியே உடையும் உள்ளத்தில் சிவபெருமான் மீது அன்புமாக்த் திகழ்ந்தார்.
      தினந்தோறும் சிவலிங்கத்தைத் தரிசித்துவிட்டே உணவு கொள்ள வேண்டும் என்ற ஆசை இவருக்கு எழுந்தது. திறந்த வெளியில் ஒரு சிவலிங்கத்தைக் கண்டார். அதைப் பார்த்ததும் அவருடைய உள்ளத்தில் அன்பும் பரிவும் பக்தியும் உவகையும் ஊற்றெருத்தன. ஆனால் அந்தச் சிவலிங்கத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்று செயல்முறை அவருக்குத் தெரியவில்லை. இன்னது செய்வதென்று தோன்றாத நிலையில் அருகிலே கிடந்ததொரு கல்லைக் கண்டார். அவருடைய உள்ளம் கிளர்ச்சியுற்றது. அந்தக் கல்லைக் கையில் எடுத்துச் சிவலிங்கத்தின் மீது வீசினார். மறுநாளும் அந்த இடத்திற்கு வந்தார். முந்திய நாள் நடந்தவை அவருடைய நினைவுக்கு வந்தன. அப்போது தன் உள்ளத்தில் எழுந்த உணர்வுகளையும் நினைத்துப் பார்த்தார். எல்லாமே இறைவன் அருளின் வாயிலாக நடந்த நிகழ்ச்சிகளாக அவருக்குப் பட்டன. அதையே தொடர்ந்து செய்ய முடிவு செய்து நாள்தோறும் உணவு உட்கொள்ளுமுன் அந்தச் சிவலிங்கத்தின் மேல் கல் ஒன்றை எடுத்து எறியும் வழக்கத்தை மேற்கொண்டார்.
      கல்லெறிவது வழிபாடு ஆகுமா என்று கேட்கலாம். அப்படிப் பார்த்தால் அங்கு நின்றிருந்த சிவலிங்கமும் கல்தானே? கல்லின் மீது கல்லெறிந்தால் அது குற்றமாகுமா? ஆனால் தெளிந்த சிந்தனையுள்ள எவரும் சிவலிங்கத்தைக் கல் என்று சொல்லமாட்டார்கள். அது ஒரு சின்னம். திருமாலும் நான்முகனும் அடி முடி தேடிக் கண்டுபிடிக்க இயலாமல் ஓங்கி வளர்ந்து நின்ற நெருப்பு மலையின் சின்னம் சிவலிங்கம். இறைவன் உருவமும் இல்லாமல் அருவமும் இல்லாமல் அருவுருவமாய் இருக்கிறான் என்பதைக் காட்டும் திருவடிவம் அது.
      சிவலிங்கம் என்பது எப்படி ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதியாகத் திகழும் சிவபெருமானின் சின்னமோ அதேபோலச் சாக்கிய நாயனார் தனது கையால் எடுத்து எறிந்த கல்லும் அவருடைய ஆழமான பக்தியின் சின்னம். காதலாகிக்கசிந்து கண்ணீர்மல்கி மெய்விதிர்த்து நெஞ்சம் பதைத்து நாயனார் எறிந்த கல்லை சாதாரண மலருக்குச் சமானம் என்று சொன்னால் போதுமா? அது அவருடைய இதயக் கமலமல்லவா? தன்னையே இறைவனுடைய திருவடிகளில் சமர்ப்பிப்பது போலக் கருதியல்லவா நாயனார் அந்தக் கல்லை எடுத்து எறிந்தார்? விஜயனின் வில்லடியையும் வேடனின் செருப்படியையும் வேந்தனின் பிரம்படியையும் உவந்து ஏற்றுக்கொண்ட பெருமான் சாக்கிய நாயனாரின் கல்லடியில் மகிழ்ந்து போனதில் வியப்பில்லையே!
      ஒரு நாள், என்ன காரணமோ தெரியவில்லை, வழக்கமாகத் கல்லெறியும் பணியை மறந்து விட்டு உணவுண்ண அமர்ந்து விட்டார் நாயனார். இந்த மறதியும் இறைவன் அருளால் நிகழ்ந்தது தான் என்கிறார் சேக்கிழார் பெருமான். ஏனெனில் இறைவனின் திருவடிகளில் நாயனாரைக் கொண்டு சேர்க்கப் போகிறதல்லவா அது?
      உணவு உட்கொள்ளுமுன் இறைவன் நினைவு வந்து விடுகிறது நாயனாருக்கு ஒரு நாள் தானே என்று விட்டு விட்டாரா? இல்லை. என் பெருமானை மறந்து விட்டேனே என்று உள்ளம் நைகிறார். கல் எறியும் பணியைத் தவற விட்டு விட்டேனே என்று தன்னையே கடிந்து கொள்கிறார். கல்லெறிவதா அது? இறைவனே சாத்தியம் என்று முழுமையாக உணர்ந்து செய்யும் ஆத்ம நிவேதனமல்லவா? அதில் பிறழ்ந்து விட்ட நாயனாரின் நெஞ்சம் பதைக்கிறது. விருட்டென எழுகிறார். தன் நெஞ்சத்தில் குடிகொண்டிருக்கும் சிவலிங்க இருக்கும் இடம் நோக்கி ஓடோடிச் செல்கிறார். உள்ளத்தில் பக்திப் புனல் பொங்கி வழிகிறது. வழக்கம் போலவே ஒரு கல்லை எடுத்துச் சிவலிங்கத்தை நோக்கி எறிகிறார்.
      கல்லெறிவதற்காக உணவைக்கூட விட்டு விட்டு ஓடி வந்திருக்கும் அடியவரை இறைவன் கண்டார். அவரது பக்தியும் உறுதியும் இறைவனை உருக்குகின்றன. நாயனாரின் அன்புக்கு அருட்பட்டு ஆகாயத்தில் உமையம்மையோடு காட்சி கொடுத்து அவருக்குச் சிவலோகம் தந்து அருள்கிறார்.
      “வார்கொண்ட வனமுலையான் உமைபங்கன் கழலே மறவாமல் கல்லெறிந்த சாக்கியர்,” என்று திருத்தொண்டத் தொகையில் இந்த நாயனாரைச் சிறப்பிக்கிறார் சுந்தரமூர்த்தி சுவாமிகள். கல்லெறியும் பணிதான், ஆனால் அதை விடாமல் கடைப் பிடித்தார். ஒரு நாள் மறதி ஏற்பட்டும் கூட அந்தப் பணியை விடவில்லை. மறவாது கல் எறிந்த அவருடைய செய்கை, அவர் ஆற்றிய அந்த நூதனமான வழிபாடு எத்தகைய ஆழமான பக்தியிலிருந்து பிறந்தது என்னும் உண்மையை நமக்குப் புலப்படுத்தி அவருடைய பெருமையைப் பறைசாற்றி நிற்கிறது.
சாக்கிய நாயனாரின் திருவடிகளைச் சிந்திப்போமாக.
சிவம்.
சாக்கிய நாயனார்
      சங்கமங்கை வரும்வேளாண் தலைவர் காஞ்சிச்
            சாக்கியரோடு இயைந்தவர்தந் தவறும் சைவத்
      துங்கமலி பொருளுமுணர்ந் தந்த வேடம் துறவாதே
            சிவலிங்கந் தொழுவோர் கண்டோர்
      அங்கன்மலர் திருமேனி அழுந்தச் சாத்தி
            அமருநாள் மறந்தொருநா ளருந்தாதோடிச்
      செங்கலெறிந் திடுமளவில் மகிழ்ந்த நாதன்
            திருவருளால் அமருலகம் சேர்ந்துளாரே.

-    திருத்தொண்டர் புராண சாரம்: 35

No comments:

Post a Comment