Monday, September 26, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
ஶ்ரீ மஹான் ஒடுக்கத்தூர் சுவாமிகளின் திவ்வியசரிதம்
(பெங்களூர் திருமடத்தில் அளிக்கப்பட்ட அச்சு நூலினின்றும் எடுத்துப் பிரசுரிக்கப்பட்டது)

சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      தண்டமிழ் நாடு உய்யவந்த தாயுமான அடிகள் தமது அருள் நூலில்வித்தகச் சித்தர்கன, நவநாத சித்தர்” – என்று ஒரு திருக்கூட்டத்தைக் குறிப்பிடுகின்றார். அவரேபிறிதோரிடத்தில்சைவ சமயமே சமயம்”, என்றும்சித்தாந்தமுத்தி முதலே சிரகிரி வளஙகவருதட்சணாமூர்த்தியேஎன்றும் அருளியுள்ளார். இவ்வருள் வாக்குகளை நோக்குமிடத்துசைவமார்க்கமேசித்தமார்க்கம்சித்த மார்க்கமே சைவ சித்தாந்தம் செந்நெறி என்று துணியத்தோற்றுகிறது அன்றோ?
      அத்தகைய சித்தர்கள் யார்? அவர் திருக்கூட்டம் எங்குள்ளது? அவர் சமயம் எது? அவர் சென்றது எந்நெறி? அவர்கள் குறிக்கொண்டு தொழுது எதனை? அட்டகுணம், எட்டுச்சித்தியை விடுத்து அவர்கள் ஓட்டி நின்றது எதனை? என்ற வினாக்களுக்கு விடை காணப்புகின் விரியும், எனினும் சுருங்கச் சொல்லி மேற்செல்லுகின்றேன்.
      சித்தத்தைச் சிவன்பால் வைத்துச் சித்திபெற்றவர் சித்தர். அவர் திருக்கூட்டமே கணங்களாம். இராப்பகல் அற்ற இடத்தே சிவனை நினைந்து, எங்கும் அவனைக் கண்டு இன்புறுவதே அவர்கள் நெறி.
      “பளவட்ஸ்கி அம்மையார் சித்தர் திருக்கூட்டத்தின் உண்மைகள் பலவற்றை விளக்கியுள்ளார்கள். வர், சித்தர் கூட்டத்தலைவராக மோன மூர்த்தியைக் குறிப்பிடுகிறார்.” மோனமூர்த்திதட்சணாமூர்த்தி என்பதை நாம் அறிவோம். ஆகவே சித்தர்களுக்கும் தெய்வம் சிவனே. அச்செம் பொருளை மெளன நிலையில் கண்டு களிப்புற்றவர்களே சித்தர்கள் என்பது போதரும். கீழ்வரும் அருள்வாக்குகள் இதனை வலியுறுத்தல் காண்க:
     
பதமுத்தி மூன்றும் பழுதென்று கைவிட்(டு)
இதமுற்ற பாச இருளைத் துறந்து
மதமற் றெனதியான் மாற்றிவிட் டாங்கே
தித முற்றவர்கள் சிவசித்தர் தாமே,”

சித்தர் சிவத்தைக் கண்டவர் சீருடன்
சுத்தா சுத்தத்துடன் தோய்ந்துந் தோயாதவர்
முத்தாம் முத்திக்கு மூலத்தர் மூலத்துச்
சத்தர் சதாசிவத் தன்மையர் தாமே.”

      புண்ணியம் மிக்க நாவலந் தீவில் சித்தர்கள் பலர் அவ்வப்போது தோன்றி பல அற்புதங்களைச் செய்து போயினர். அவர்களுள் தலையாயவர் திருமூலர். திருமூலர் சூக்கும கயிலாயத்தினின்றும் திருப்பெருகும் தமிழகம் போந்து ஓர் இடையன உடலில் புகுந்து ஆடிய ஆடலைக் கேட்டுள்ளோம். அவரது புறக்கருவி காணங்கள் எத்தொழிலைச் செயினும் எதவத்தைப் படினும் சித்தம் சிவன்பால் இருந்ததை மறுப்பார் யார்? இல்லை அன்றோ? மூலர் நெறி சித்தாந்த நெறி. சித்தாந்தம் வேறு, சித்தர் நெறி வேறல்ல, இரண்டும் ஒன்றே. இது நிற்க.
      சித்தர்கள் ஒருநெறியை அறிவிக்க அவ்வப்போது உலகில் தோன்றுகின்றனர். “சீலாங்க வேதத்தைச் செப்ப வந்தேனே,” என்பது போல், சமரஸ சன்மார்க்கத்தை அருளி, நம் போன்றவர்கள் உய்ந்து கரைகாண நம்மிடையே வாழ வருகின்றனர்.
      இங்ஙனம் திருஅவதாரம் செய்த சித்தர் கணத்துள் ஶ்ரீ மஹான் ஒடுக்கத்தூர் சுவாமிகள் ஒருவராவர். காணாமற் கண்டு கருத்தோடிருந்த சுவாமிகளது அருள் ஒளியால், மருளும், திருக்கண்பார்வையால் பெருத்த நோயும், நல்லருட் சொல்லால் சொல்லருந்துயரும், புன்முறுவலால் நன்ஞானமும், உதையால் ஊழ்பிணியும், அறையால் அகலாத் துன்பும், அகல இன்புற்றோர் பல்லோராவர். இத்தகைய மஹானது திவ்விய திருச்சரிதம், அதாவது இம்மையில் நம்பொருட்டுத் தாங்கி வந்த திருவடிவின் வரலாற்றைக் காண்போம்.
      பல்வளம் பெருகும் பரதகண்டத்தின் வடபால் உள்ள இரத்தினபுரியென்னும் சிற்றூரில் இற்றைக்குச் சற்றேறக் குறைய நூற்றிருபத்தைந்து ஆண்டுகட்கு முன்னர் க்ஷத்திரிய மரபு செய்த பெருந்தவத்தால் உலோகைய நாயுடு என்னும் புண்ணிய சீலர் வாழ்ந்து வந்தார். இவர் இளமையில் திருத்திய கல்வியைப் பொருந்தக்கற்று, அவ்வூர் அருகே இருந்த ஆங்கிலேயரது காலாட்படையில் ஒரு வீரராய்ச் சேர்ந்தார். சில ஆண்டுகட்குப்பின் தமது முயற்சியாலும் சலியா உழைப்பாலும் சிறிய தனகர்த்தரானார் (சுபேதார்). இவர் ஒரு படை வீரரேயாயினும் பண்பாடு மிக்கவர். சீலம் மிக்க வைதீக வாழ்வினர். உலகத்தோடு ஒட்ட ஒழுகலை உணர்ந்தவராதலின், ‘அழுக்காறுடையான்கண் ஆக்கம் போன்று இல்லை ஒழுக்கமிலான்கண் உயர்வுஎன்று உட்கொண்டு நல்லொழுக்க நெறிநின்றார்.
      ஒருவனுக்குரிய வல்லமைகளில் உயர்ந்தது தன் பசியைப் பொறுத்தல். அதனை உணவால் மாற்றுதல் அதினும் உயர்ந்தது. பசிப்பிணியைப் போக்குதல் இல்வாழ்க்கையால் தான் இயலும். நல்லொழுக்க நெறி நின்ற உலோகைய நாயுடு இருமைக்கும் உரிய அறத்தை ஈட்ட எண்ணினார். தமது குலத்தில் மனைத்தக்க மாண்புடைய மங்கை நல்லாள் பாலாம்பிகை என்னும் நல்லாளை மணந்தார். எளிய வாழ்வாயினும், இருவரும் கருத்தொருமித்து, ஒன்றே நினைந்து, ஒன்றே செய்தமையால் அவர்கள் இல்லறம் நிறைவுடையதாய் இன்பந் தவழ்ந்தது. மனைக்கு விளக்கம் மடவார், மனியாட்சி அவர்க்கு மங்கலம், நன்மக்கட்பேறு நன்கலம் அல்லவா? நிறைவுடைய வாழ்வில் இருந்த குறை அது ஒன்றே. குறையிலா வாழ்வு குவலயத்தில் ஏது? இல்லை அன்றோ?
      நாயுடுகாரும் அவர்தம் மனைவியார்ம் இன்பந்தரும் அன்புப் புதல்வர் பெற அரிய விரதங்கள் தாங்கி, அறங்கள் பல செய்து வந்தனர். இறைவனருளால் அவர்க்கு ஒரு ஆண் மகவு பிறந்தது. நல்லோரையில் பிறந்த குழந்தையைக் கண்ட தாய் தந்தையர் பெருமகிழ்வெய்தி பெருமானைப் போற்றினர். அருந்தவத்தால் ஈன்ற அக்குழந்தைக்கு சேஷையா என்று திருநாமம் இட்டு கண்ணெனக காத்து வந்தனர். குழந்தையும் பிறையென வளர்ந்தது. தாய் தந்தையர் இருவரும் எடுத்தணைத்து உச்சிமோந்து உடல் இன்பமும் குழலினும் இனிய மழலை கேட்டுச் செவியின்பமும் பெற்று மகிழ்ச்சியில் திளைத்தனர்.
      இங்ஙனம் ஐந்து ஆண்டுகள் நிரம்பின. கல்வி கற்கப் பள்ளியில் வைத்தனர். பிள்ளைப் பெருந்தகைக்கு கல்வியும் கல்லாமல் பாகம் பட்டது. ஆரம்பக் கல்வி முடிந்தது; தந்தை தம் மகனுக்கு வேண்டிய கல்விப் பயிற்சி முடிந்ததாக்க் கருதி பள்ளிக்குப் போவதை நிறுத்தினார். பிள்ளையும் சம்மதித்தார். சாகாக்கலை கற்கப்போகும் தமக்கு இக்கலை எதற்கு என்று எண்ணினார் போலும். உடனே தந்தையார் தம் மைந்தனுக்கு வேலை தேடினார். அவ்வூரில் ஒரு உத்தியோகசாலையில் சிறிய பணியில் அமர்த்தினார். தனயரும் தந்தை விருப்பப்படிச் சின்னான் பணியாற்றினார். வேலை முடிந்ததும் வீடு திரும்புவது இல்லை. தனி இடந்தேடி தனித்திருக்க விழைந்தார். மாலை நேரங்களில் தியானத்தில் அமர்ந்திருந்து நெடும்பொழுது கழித்து வீடு திரும்புவார். விளையும் பயிர் முளையில் என்பார்களே அதுவா? அல்லது கருவிலே திருவுடையவரா? இருவினை கழல ஒருமனமுடையராய் வந்த ஞானியா? ஏதென்று யாம் இயம்புவது?
      பிள்ளைப் பெருந்தகை, சோலைக் குயிலோசை கேட்டு உள்ளங்குளிர்வார். தமது உள்ளத்தே குயிலோசை கேட்க விழைந்தார். ஆனால் அருகே ஐந்தாறு ஆந்தைப் பேய்போல் விழிப்பதைப் பார்த்து இவற்றை என்று துரத்துவதென்று கவல்வார். தமது கும்பிக்குளத்தில் அம்பலங்காண விழைவார்; விழைந்து என்ன பயன்? குளக்கருவூரில் சேறுமெத்த நிற்பதை உணர்ந்தார்; நம்பனை ஆதியை நான்மறை ஓதியை செம்பொனின் திகழ்கின்ற சோதியை கொம்பேறிக் கும்பிடக்குறிக் கொண்டார்.
      அன்று முதல் வாழ்வில் ஒட்டியும் ஒட்டாதும் வாழத் தலைப்பட்டார். இதனை அறிந்த பெற்றோர்கள் மணமானால் மனம் மாறும் என்று நினைத்தனர். ஐதராபாத்துலுள்ள தம் மரபினரிடம் பெண் பார்க்கச் சென்றனர். அதனை அறிந்த பிள்ளைப் பெருந்தகை அந்தோ! இவர்கள் மேற்கொண்டது என்னைப் பிறவிப் பெருங்கடலில் ஆழ அமுக்கும் பெருங்கல் அன்றோ? “கக்கிவிட்ட சோறும் கறியும் கண்ணுக்கு அசுத்திமன்றோ>” ஏனோ இச்செயலை மேற்கொண்டனர் என்று எண்ணமிட்டவராய். “தந்தை தாய் தமர் இவரெல்லாம் சிந்தையிற் கூட்டம்,” “நெஞ்சே ஆரலைந்தாலும் நீ அலையாதே, ஊரலைந்தாலும் ஒன்றையும் நாடாதேஎனத் தமது உள்ளத்திற்கு அறிவுறுத்திப் புறப்பட்டுவிட்டார். “பற்றது பற்றில் பரமனைப் பற்றுமின்என்றபடி பரமனைப் பற்றி நிற்க தனி இடந்தேடி தென்னாடு நோக்கி நடந்தார். வழியில் உள்ள தலங்கள் பலவற்றுள் கோயில் கொண்டுள்ள பரமனைத் தொழுது கொண்டே வந்து தொண்டைநாட்டை எய்தினார்.
      திருவிரிஞ்சை தொண்டைநாடுத் தலங்களில் ஒன்று. அவ்வூரையடுத்து நிற்பது வேலூர். நல்லியக்கோடனது வேண்டுகோளுக்கிணங்கி பகைவர் படைகளை அழித்து சக்தி வேல் மீண்ட இடமாதலால் வேலூர் எனப்பட்டது. அவ்வூரில் வந்து சில தினங்கள் தங்கினார். மனம் தவத்தை நாடியது. மனம் என்னும் குதிரையை வாகனமாக்கி அதன் மேல் மதியெனுங் கடிவாளமிட்டு, சினமெனும் சேணத்தில் சீராயேறிச் செலுத்த விழைந்தார்; மக்கள் நடமாட்டமுள்ள அந்த இடம் ஏற்றதல்லவென்றெண்ணினார்; அவ்வூரையடுத்துள்ள காட்டில் நுழைந்து ஒடுக்கத்தூர்க்காட்டை அடைந்து, கானாற்றங் கரையில் தக்கதோர் இடத்தைக் கண்டார். தியானத்திற்குரிய நல்லிடம் அதுவேயெனத் தேர்ந்து அங்கு அமர்ந்தார்.
                காயமே கோயிலாகக் கடிமனம் அடிமையாக
       வாய்மையே தூய்மையாக மனமணி இலிங்கமாக
       நேயமே நெய்யும் பாலா நிறையநீர் அமைய ஆட்டிப்    
       பூசனைஈசனார்க்குப் போற்றவிக் காட்டினோமே” – அப்பர்

       “உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
       வள்ளற் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்
       தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கங்
              கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே” – திருமூலர்

என்னுமாப் போல் பட்டி ஐந்தைப் பக்குவமாய் அடக்கி, அன்பெனும் நன்மலர் தூவி பரமானந்தத் தேவன் அடியிணையில் நாட்டங்கொண்டார். இங்ஙனம் அடிமல்ரில் அன்பு கொண்டு பரன்புகழ் கற்றுக் கருதும் நியமுமும், வருந்தித் தவஞ்செய்யப் பல்வகை ஆசனமும் பயின்று, பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி முதலிய அட்டாங்கயோகம் இயற்றி நிட்டை கூடினார்.
      ஒருநாள், அரை ஆடை உடுத்து, கையில் சிறு கோலுடன் அடுத்துள்ள ஒருசிறிய குன்றில் ஏறிச்சென்றார். அங்கோர் பாறையில் அமர்ந்து நிட்டை கூடினார். இரவு வந்து, நிட்டை கலையாது அமர்ந்திருந்தார். மறுநாள், ஆடுமாடுகளை மேய்ப்போர் அங்கு சென்றபோது சுவாமிகள் எதிரே புலி, ஓநாய், கரடி முதலிய விலங்குகள் படுத்திருப்பதைக் கண்டனர். அஞ்சி அகல நின்றனர். சுவாமிகள் நிட்டை கலைந்து விழித்து எழுந்தார்; எதிரே இருந்த விலங்குகளும் காட்டிற்குள் சென்று மறைந்தன.
      இங்ஙனம் சுவாமிகள் பன்னாள் நிட்டைகூடி மூலாதாரத்தினின்றும் குண்டலினி சக்தியைத் தட்டி எழுப்பிப் பிரம்மரத்திரத்திற்கு உயர்த்தி, அதன்வழி பெருகிய அமிர்தம் உண்டு, அதனால் அணிமா முதலிய எண்வகைச் சித்திகள் கைவரப் பெற்றவராய், “கரையருகே நின்ற கானல் உவரி, வரை வரை என்பர் மதியிலா மாந்தர், நுரை திரை நீக்கி நுகர வல்லார்க்க, நரை திரை மாறும் நமனு மங்கில்லையேஎன்றபடிஈயில்லாத் தேனுண்டு”, அகண்டாகார சச்சிதானந்த ஸ்வரூபரான இறைவன் திருவருளால் நிருவாண தீக்கைப் பெற்றுத் திகம்பரரானார். “ஒன்றோடு ஒன்று கூடில் ஒன்ரு கெடுங்காண்என்பது போல் அவனே தானே ஆகிய அந்நிலை எய்தி நின்றார்.
      சில சமயம் சுவாமிகள் நீர்பருக ஆற்றிற்குச் செல்வதுண்டு. நீர் பருகி அங்கே அமர்வார். அப்படியே நிட்டை கூட சமாதியில் அமர்ந்து விடுவார். திடீரென்று ஆற்றில் வெள்ளம் பெருகும். இவ்விடத்தைவிட்டு எழார். வெள்ளத்தினும் போகார்; மணல் மேடிட்டு மூடிவிடும். உணவும் உடையும் இல்லை; குளிரும் அவருக்கில்லை; மணலுக்குள் புதைந்த சுவாமிகள் தாமே மெல்ல எழுந்து செல்வார். இப்படி ஒரு சமயம் ஆறு தினங்கள் மணலுக்க்குள் இருந்தனர் என்று கூறப்படுகிறது.
      உடம்பினை முன்னம் இழுக்கென்றிருந்த சுவாமிகள் உடம்பினுள் உறுபொருள் கண்டார்; அதனால் உடம்புளே உத்தமன் கோயில் கண்டார். ஆகையால் உடம்பினை ஓம்ப ஒவ்வோர் சமயம் கந்த மூலாதிகளையுண்டு கானாற்று நீர் பருகிக் காலம் போக்கினார். உச்சிக்கு மேற்சென்று உயர வெளிகண்ட சுவாமிகள்; இச்சையற்றிருந்தாரென்று சொல்லவும் வேண்டுமோ! முத்திபெற்று உள்ளே முயங்கும் மெய்ஞ் ஞானிக்கு பத்தியம் இல்லையல்லவா? ஆகவே பாலும் பழமுமே வேண்டுமென்ற நியதியில்லை.
      “ஆடும் இறையின் சித்திரக்கூத்தை தினந்தினங்கண்டார் நித்திரை கெட்டு நினைவோடிருந்தார்முத்தமிழ்க் கற்று முயங்கும் மெய்ஞ்ஞானியாகிய சுவாமிகள் சத்தமின்றி ஆடம்பர ஆரவாரமற்று கானாற்றங்கரையில் இருந்து வந்தார். இறைவன் உணர்த்த ஊர் மக்கள் அறிந்தனர்; நாடும் அறிந்தது; அவர் இருக்கும் இடந்தேடிப் பலர் வந்தனர்.
      சுவாமிகள் சமாதி கலைந்ததும், கருத்தின்றிப் பல இடங்களில் சென்று அமர்வார். அவற்றுள் அகரம், தருமராஜா தோப்பு. மகமதுபுரம் முதலிய இடங்கள் குறிப்பிடத்தக்கவையாகும். அப்படி ஒரு நாள் அகரம் போகும் வண்டிப்பாதையில் அமர்ந்திருந்தவ்ர் நிட்டை கூடினார். அந்த வழியே வண்டி ஒன்று வந்து. வழியில் இவர் அமர்ந்திருப்பதைக் கண்ட வண்டிக்காரன் இறங்கி சுவாமிகள் அருகே வந்து எழுந்து போமாறு பல முறை உரக்கக் கூவினான். அவர் நிலையை உணராத வண்டிக்காரன் அசைத்து எழுப்பினான்; எழாமையால் அப்பால் எடுத்து வைக்க முயன்றான். அட்டமா சித்திகள் கைவரப்பெற்ற சுவாமிகளை எடுக்கவோ அசைக்கவோ முடியாது. அட்டமா சித்தியில் இதுகரிமாஎனப்படும் (இலகுவாயிருக்கும் யோகியையெடுத்தால் மலைபோல் கணத்திருப்பதாகும்).
      இதனை அறியாத வண்டிக்காரன் சுவாமிகள் பிடிவாதங் கொண்ட ஒரு உன்மத்தன் என மதித்துப் பாரமேற்றிய வண்டியை அவர் மேல் ஓட்டிவிட்டான். சக்கரம் திருமேனியிற்பட்டதும் அவ்வளவு தான் வண்டிக்குடை சாய்ந்தது; மாடுகள் மயங்கி வீழ்ந்தன; வண்டிக்காரனும் வீழ்ந்தான். அவன் தெளிந்து எழுந்து கண்ட போது அவர் அங்கில்லை. வண்டியை ஓட்டிச்செல்ல நெடுநேரமாயிற்று. அவனால் ஊர் முழுதும் இச்செய்தி பரவியது.
                கண்டனுங் கண்டியுங் காதல் செய்யோகத்து
       மண்டலங் கொண்டிரு பாலும் வெளிநிற்கும்
       வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
       தண்டொரு காலுந் தளராது அங்கமே

எனவரும் அருள்வாக்கு அறிந்து இன்புறத்தக்கது.
      ஒடுக்கத்தூர் மக்களும், சுற்றுப்புறங்களிலிருந்தும் மக்கள் திரண்டு வந்து விரும்பி உபசரிக்க முற்பட்டனர். சுவாமிகள் சில சமயங்களில் ஏற்று விரும்பி உண்பார். பல சமயங்களில் அவர்களைக் கண்டதும் காட்டுக்குள் ஓடி மறைந்து விடுவார். பின் தொடர்ந்து வருவாராயின், அடர்ந்த நாகாதாளிப் புதரிடையே புகுந்து மறைவார். சென்றவர் செய்வதறியாது திகைத்து மீள்வர். முள்ளோ, கல்லோ அவரை உறுத்துவதில்லை. மலர்ந்த முகத்தோடு காட்சியளிப்பார். பொறி புலன்களை வென்ற ஆத்ம ஞானியாதலின் முள்ளும் கல்லும் உறுத்தாவாயின. மலர் அமளியும் அவர்க்கு மகிழ்வைத் தாராது.

      நெற்பயிர் அருகே புற்பூண்டும், நெல்லிடையே பதரும் இருப்பதைக் காண்கிறோம். அது போன்ற நல்லோரிடையே சில புல்லியர்களும் உண்டு அல்லவா? சுவாமிகளைக் காண வந்தவர்களில் சிலர் அவரைப் பரிசோதிக்கவெண்ணி சில தீமைக்குள்ளாக்கினர். அதனையும் பொறுத்து ஓவியம் போல் அமர்ந்திருப்பார். நெறிவழிச் சென்று நேர்மையுள் ஒன்றித் தறியிருந்தாற்போல் தம்மையிருத்திச் சொறியினுந் தாக்கினும் துண்ணென்றுணராக் குறியறிவாளர் குறிக்கோளும் அதுவே.

No comments:

Post a Comment