உ
திருச்சிற்றம்பலம்
பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் அருளிச் செய்த
அட்டாட்ட விக்கிரக லீலை
நாற்பத்தெண்சீர்க்
கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
உரையாசிரியர்:
நக்கீரன் வழியடிமை
புலவர் பி. மா. சோமசுந்தரனார்
இராணிப்பேட்டை, வ. ஆ. மாவட்டம்
சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
சந்திரசேகரமர்த்தநாரீசுரஞ்
சக்கரப்பிரதானம்
தக்ஷிணமூர்த்தமிலிங்கம் லிங்கோற்பவத்
தக்ஷயக்கியபங்கம்
சலந்தரவதமகொராஸ்திரமேகப
தம்மசுவாரூடம்
சத்யசதாசிவம் மிக்கசதாசிவத்
தருலகுளேசுவரம்
சகஜசுகாசனங் கூர்மசங்காரமச்
சாரிவராஹாரி
சற்குருமூர்த்த முமேசமுமாபதி
ஜயபுஜங்கத்ராசம்
சார்த்தூலஹரிபைரவங் கலியாணசுந்
தரம்வடுகங்கிராதம்
சுந்தர விருஷபவூர்தி விஷாபஹ
ரணஞ் சுவராபக்தம்
துகளறு க்ஷேத்திர பாலகந்தொல்கரு
டாந்திகம் முகலிங்கம்
துங்ககங்காதரங் கங்காவிஸர்ஜநஞ்
சுபசோமாஸ்கந்தம்
சூரஸிம்ஹாரி கமாரியமாந்தகஞ்
சுசிமாணவபாவம்
சுபகரபிராத்தளைமூர்த்தநறுந்திரி
புராந்தகஞ் சுரர்பரசும்
சுமுககங்காள மிரக்தபிக்ஷைப்பிர
தானமிருஞ்சுடரே
சுடர்கவுரீவரப்பிரதம் மஹாபா
சுபத சொரூபமணி
தோன்றுபுஜங்கலளிதம் ரிஷபாந்திகந்
தோமறுகஜயுத்தம்
விந்தைவிளம்பு கஜாந்திகம்வீணை
தயங்குதக்ஷிணமூர்த்தம்
மேதகயோக வினோதமதாக
விளங்குதக்ஷிணமூர்த்தம்
விமலபிக்ஷாடனங் கவலையுத்தாரணம்
வேதகணம்புகழும்
விதிசிரகண்டனங் கவுரிவிலாசமந்
விதமெழிலரியர்த்தம்
வீரபத்திரந்திரிமூர்த்தி முப்பாதம
ஹாவேதாளிநடம்
வெருவறுமேகபதந்திரி யுருவாய்
விளம்பறுபதுநான்கும்
விலாசவளிப்பு நிமித்தமெடுத்தவொர்
மெய்ப்பொருளெதுவதுவே
விண்ணவர்மண்ணவர் கண்ணவர்யாவரும்
வீடருளாயெனவே
வந்தனைபுரிய விருந்துளனீயென
வண்டமிழான் மனசாள்
வாழ்த்திவணங்கெனையாள வெனிருதய
மலரிலெழுந்தருளாய்
மந்திரநாயக தந்திரநாயக
மங்களநாயகவோம்
மயதவரீசுர பரமகுஹேசுர
வசனமனாதீத
வரதக்ருபாகர குமரபராபர
வரைவறு ஷாட்குண்ய
வஸ்துவெனற்புத சத்தியவித்தக
மரணமொடயனமிலா
வானவஞான நபோமணியேதிரு
மாலயனறியாவோர்
மாமலையின்பெயரான் குருநாதவென்
மருடெறு மாமுனியே.
இவ்விருத்தத்தினை உள்ளுருக்கத்தோடு முப்போதும்
பாடியாடுக. ஆடாவிடினும் பாடுக. அங்ஙனஞ் செய்வார்க்கு உரோக நாசம், பாபநாசம், சத்துருநாசம்,
ஆயுள் விருத்தி, தைரிய விருத்தி, வீரிய விருத்தி, புத்திர விருத்தி, புண்ணிய விருத்தி,
உண்டாதலோடு சர்வார்த்த சித்தியும் முத்தியும் வாய்க்குமென்பது வாய்மை.
அட்டாட்ட விக்கிரக
லீலை – உரை
முழு முதல்வனான சிவபெருமான் உயிர்கள் உய்யும்
பொருட்டு நிகழ்த்திய திருவிளையாடல்கள் பல. அவன் திருவிளையாட்டாகக் கொண்ட அருள் திருமேனிகள்
அறுபத்து நான்கு என்பர். அவற்றைப் பேரருளாளரான பாம்பன் அடிகளார் இப்பாடலில் கூறுகின்றார்.
ஐம்முகச் சிவனே அறுமுகச் சிவன். “தனக்குத்தான் மகனாகிய தத்துவன்” என்றார் தணிகைப்புராணமுடையாரும்.
எனவே இத்திரு மேனிகளை முருகன் மீது சார்த்தியுரைத்தருளினார் என்று உணர்க.
1. சந்திரசேகரம்: பிறைநிலவைத் திருமுடியில் அணிந்த திருக்கோலம்.
(தக்கன் சாபத்தால் திங்கட் கடவுள் தன் கலைகள்
நாள் தோறும் ஒவ்வொன்றாகக் குறையப் பெற்றான். தன்னைக் காப்பாற்றக் கூடியவன் தனக்கு யாரும்
நிகரில்லாத பரமசிவனே என்று உணர்ந்து பரமனை அடைக்கலம் புகுந்தான். பெருமான் ஒரு புதிய
மலரை எடுத்து அணிவது போல அவனைத் திருமுடியில் அணிந்து இறவாப் பெருவாழ்வை அருளினான்.
இத்திருக்கோலம் உயிர்களின் பிறப்பு, இறப்பு ஆகிய
துன்பங்களை நீக்கி அழியாத பேரின்ப வீடு அருள நிற்பதாகும்)
2. அர்த்தநாரீசுரம்: ஒரே திருமேனியில் இறைவன் வலப்பக்கத்தும் தேவி இடப்பக்கத்தும்
விளங்கும் அம்மையப்பர் என்னும் திருக்கோலம்.
(தோலுடை, குழையணி, திருநீற்றுப் பொலிவு, சூலப்
படை ஆகியவை வலப்பக்கத்திலும் துகிலுடை, தோடு அணி, பசுஞ்சந்து அழகு, அழகிய வளையல் அணிந்த
கையில் பசுங்கிளி ஆகியவை இடப்பக்கத்திலும் இத்திருக்கோலத்தில் விளங்கும்).
3. சக்கரப்பிரதானம்: திருமாலுக்குச் சக்கரப்படையை வழங்கியருளிய திருக்கோலம்.
(சிவபிரான் தன் கால் விரலால் தரையில் கீறிய சக்கர
உருவத்தைத் தன் தலையில் தாங்குவான் கருதிச் சலந்தரன் அதைப் பெயர்த்துத் தலையில் வைத்தலும்
அச்சக்கரம் அவனுடலைப் போழ்ந்து அவனையழித்தது. அச்சக்கரப்படையைப் பெற விரும்பிய திருமால்
நாள்தோறும் ஆயிரம் தாமரை மலர்கள் கொண்டு சிவபிரானை வழிபட்டு வந்தார். ஒரு நாள் இறைவன்
திருவிளையாட்டாக ஆயிரம் மலர்களில் ஒன்றைக் குறையச் செய்தார். வழிபாட்டில் ஒரு மலர்
குறைவது கண்டு திருமால் தமது விழியைப் பிடுங்கி மலராக இறைவன் திருவடியிலிட்டு வழிபட்டார்.
அதுகண்டு மகிழ்ந்த இறைவன் திருமாலுக்குச் சக்கரப்படையும், கண்ணும், செந்தாமரைக்கண்ணன்
என்ற பெயரும் வழங்கியருளினார்).
4. தக்ஷிணமூர்த்தம்: தென்முக கடவுளாய் விளங்கும் திருக்கோலம்.
(மெய்ந்நூல்களின் உண்மைப் பொருளை அறியமாட்டாமல்
தம்மை வந்தடைந்த பிரம்மாவின் மக்களாகிய சனகர், சனாதரர், சனந்தனர், சனத்குமாரர் ஆகிய
நால்வருக்கும் கல்லால மரத்தின் கீழிருந்து வாக்கு இறந்த பூரணமாய், மறைக்கப்பாலாய இருந்ததனை
இருந்தபடி இருந்துகாட்டிச் சொல்லாமல் சொன்ன திருக்கோலம்).
5. இலிங்கம்: எல்லாத்
தேவர்களையும் தன்னிடத்தில் அடக்கி ஐம்புலன்களுக்கும் புலனாகும்படி விளங்கும் இலிங்கத்
திருமேனி.
(இது சகள நிட்களத்திருமேனியாம். இத்திருவுருவில்
விருத்தமே உருத்திர பாகம், பீடத்தின் அதோ பாகத்தின் அடி நான்கு மூலை பிரமபாகம், நடுவின்
எட்டு மூலை விட்டுணு பாகம். இவற்றுள் பிரமபாகம் நபும்சகலிங்கம், விட்டுணு பாகம் ஸ்த்ரீலிங்கம்,
உருத்திர பாகம் புல்லிங்கம் என்று அறிக).
6. இலிங்கோற்பவம்: தாமே முதல்வர் என்று மயங்கிய திருமால் பிரமன்
ஆண்டுத் தோன்றிய பேரொளிப் பிழம்பின் முடியும் அடியுங்காணாது அயர்ந்து தருக்கொழிந்து
வழிபடலும் அவர்கட்குக் காட்சியளிக்க இலிங்கத்திலிருந்து தோன்றிய திருக்கோலம்.
7. தக்ஷயக்கிய
பங்கம்: தக்கன் வேள்வியை அழித்த திருக்கோலம்.
8. சந்தியினிர்த்தனம்: மாலையில் செய்த நடனத்திருக்கோலம், (உயிர்களைக்
கொல்லத் தோன்றிய ஆலகால நஞ்சத்தை உண்டு, திருமால் முதலிய தேவர்கள் மத்தளம் முதலியவற்றை
வாசிக்கும்படி செய்து இறைவர் நடனமாடிய திருக்கோலம். இதனைப் புஜங்கலனிதம் என்ற சிலர்
கூறுதல் தவறு. அது இப்பாடலை வேறோர் இடத்தில் வருதல் காண்க).
9. சந்தத
நிர்த்தனம்: ஆக்கல், அளித்தல்,
அழித்தல், மறைத்தல், அருளல் ஆகிய ஐந்தொழில்களும் நிகழுபடி ஆடும் நடனத் திருக்கோலம்.
10. சண்டேசாநுக்ரகம்: சண்டேசுவர நாயனாருக்கு அருளும் திருக்கோலம்.
(இவர் வரலாற்றைப் பெரியபுராணத்துள் காண்க).
11. சலந்தரவதம்: சலந்தரன் என்னும் அசுரனைச்சக்கரப் படையினால் பிளந்தருளிய
திருக்கோலம்.
12. அகோரஸ்திரம்: அகோராத்திரம் என்ற அம்பால் சப்ததந்து என்ற அசுரனைக்
கொன்றும் அவன் மனைவியர் வேண்ட அவனை எழுப்பியும் அருளிய திருக்கோலம்.
13. ஏகபதம்: கடையூழிக்காலத்தில் எல்லா உயிர்களும் தம் திருவடியில்
பொருந்த நிற்கும் ஒரே திருவடியுடன் விளங்கும் திருக்கோலம்.
14 அசுவாரூடம்: மாணிக்கவாசகப் பெருமான் பொருட்டு நரிகளைக் குதிரைகளாக்கித்
தான் குதிரைச் சேவகனாக மதுரையில் பாண்டியம் முன் எழுந்தருளிய திருக்கோலம்.
15. சத்யசதாசிவம்: சத்தியோசாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம்
ஆகிய ஐந்து முகங்கள் கொண்ட சதாசிவ மூர்த்தியாகி வேதமும் ஆகமமும் அருளிய திருக்கோலம்.
16. மிக்க
சதாசிவம்: இருபத்தைந்து திருமுகங்களோடு எழுந்தருளியிருக்கும்
மகா சதாசிவத் திருக்கோலம்.
17. தகுலகுளேசுவரம்: தகைமை பொருந்திய இலகுளம் என்னும் உலகத்தில் மணிகள்
இழைத்த அரியணையில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலம்.
18. சகஜசுகாசனம்: எம்பெருமான் ஆறு திருக்கைகளோடு தேவி இடப்பாகத்தில்
விளங்கச் சுகாசனத்தில் எழுந்தருளியிருக்கும் திருக்கோலம்.
19. கூர்மசங்காரம்: திருப்பாற்கடலைக் கடைய ஆமை உருவமாகி உதவிய திருமால்
பின்னர்ச் செருக்குற்று மேன் மேலும் ஆமையான தன் உருவத்தை வளரச் செய்ய அதனால் திருப்பாற்கடல்
கரைபுரள, தேவர்கள் எல்லாரும் வந்து தன்பால் முறையிட உயிர்கள் உய்யும் பொருட்டு இறைவன்
அந்த ஆமையைப் பிளந்து அதன் ஓட்டை அணிந்த திருக்கோலம்.
20. மச்சாரி: சோமுகாசுரனை மீன் உருவம் எடுத்துக் கொன்ற திருமால்
பின்பு தருக்குற்றுக் கடலைக் கலக்க இறைவன் அந்த மீனின் கண்களைப் பிடுங்கி அணிந்து கொண்ட
திருக்கோலம்.
21. வராஹாரி: இரணியாட்சனைப் பன்றி உருவில் வந்து கொன்ற திருமால்
பின்பு செருக்குற்று உலகத் துன்புறுத்த அந்தப் பன்றியின் கோரைப்பல்லைப் பிடுங்கி அணிந்து
கொண்ட திருக்கோலம்.
22. சற்குருமூர்த்தம்: மணிவாசகர் பொருட்டாக மக்களிலொருவனாய்க் குருவாகி
வந்து ஆட்கொண்ட திருக்கோலம்.
23. உமேசம்: இடது பக்கம் தேவி விளங்க வீற்றிருந்து பிரமனின் படைப்புத்
தொழிலுக்கு அருள் வழங்கிய திருக்கோலம்.
24. உமாபதி: தேவி ஐந்தொழிலும் இயற்றிவரும்படி அருள் செய்யும்
திருக்கோலம்.
25. ஜயபுஜங்கத்ராசம்: தாருகவன முனிவர்கள் தன்னைக் கொல்லும்படி வேள்வியில்
படைத்தனுப்பிய பாம்புகளைத் தன் திருமேனியில் அணிந்து வெற்றி கொள்ளும் திருக்கோலம்.
26. சார்த்தூலஹரி: தாருகவன முனிவர்கள் வேள்வியில் உண்டு பண்ணித்
தன்னைக் கொல்லும்படி ஏவிய புலியைக் கொன்று அதன் தோலை உடுத்திக் கொண்டருளிய திருக்கோலம்.
27. பைரவம்: அந்தகாசுரனைச் சூலத்தில் குத்திக் கோத்துக்கொள்ளவும்
அவன் ஆண்டிருந்தபடியே செய்த வழி பாட்டைக் கண்டு மகிழ்ந்து அவனைக் கணநாதனாக்கி அருள்
செய்த திருக்கோலம்.
28. கலியாணசுந்தரம்: இறைவன் உமையம்மையாரை மணந்த திருக்கோலம்.
29. வடுகம்: துந்துபியின் மகனாகிய முண்டாசுரனை அழித்த வடுகராகிய
திருக்கோலம்.
30. கிராதம்: அருச்சுனனுக்கு அருள் செய்ய வேடுவராகிய திருக்கோலம்.
31. சுந்தரவிருஷபவூர்தி: அழகிய
இடபவடிவமான திருமால் மீது அமர்ந்து செலுத்தும் திருக்கோலம்.
32. விஷாபஹரணம்: திருப்பாற்கடலில்
தோன்றிய ஆலகாலம் என்னும் நஞ்சை உண்டு நீலகண்டராகிய திருக்கோலம்.
33. சுவராபக்நம்: கிருட்டிணன்
வாணாசுரன் மேல் ஏவிய சீதசுரம் அழிய உஷ்ணசுரத்தை ஏவிய திருக்கோலம். இது மூன்று திருமுகம், நான்கு கை, ஒன்பது விழி, மூன்று
திருவடிகளோடு கூடியது.
34. துகளறுக்ஷேத்திரபாலம்: நீர்ப்
பிரளயத்தால் அழிந்துபோன இவ்வுலகத்தை மீண்டும் படைத்துக் காப்பாற்றும் குற்றமற்ற திருக்கோலம்.
35. தொல்கருடாந்திகம் : திருமால்
சிவனாரைத் தொழும் அளவில் திரும்பிவர நேரமாகிவிட்டதால் சிவனாரைப் பழித்த கருடனை நந்தியெம்பெருமான்
விடும் மூச்சுக்காற்றால் பஞ்சு போல் அலைந்து நொந்தொழியச் செய்யும் திருக்கோலம்.
36. முகலிங்கம்: இலிங்கத்திலேயே
புன்சிரிப்புக் கொண்ட திருமுகம் விளங்க்கும் திருக்கோலம். இது 5, 4, 3 2, 1 இவ்வகைய முக வேறுபாடுகளைக் கொண்டிருக்கும்.
37. துங்ககங்காதரம்: தேவி
ஒரு காலத்தில் திருவிளையாட்டாகச் சிவபிரானின் கண்களையும் தம் திருக்கைகளால் மூட அதனால்
உலகம் எங்கும் இருள் பரவி உயிர்கள் துன்புற்றன. அத்துன்பத்தைப் போக்க வேண்டி பரமன்
தனது நெற்றிக்கண்ணைத் திறந்தான். அதனால் உலகம் முன்போல் ஆனது. அதுகண்டு தேவியும் தன்
கைகள் எடுத்தனள். அப்போது அவள் கை நகக்கால்கள் தோறும் வியர்வைத்துளிகள் பெருகியது.
அது பெருவெள்ளமாய் பெருகி உலகெங்க்கிலும் வருதலைக் கண்ட பெருமான், உயிர்களைக் காக்கவேண்டி அந்த வெள்ளமாகிய கங்கையினைத் தம்
சடைமுடியில் தாங்கினார். தூய்மையான அந்தக் கங்கையை அவ்வாறு தாங்கிய திருக்கோலம்.
38. கங்கா விசர்ஜனம்: முன்
கூறியவாறு தாங்கிய கங்கையை இறைவன் திருமால், பிரம்மா, இந்திரன் முதலியோர் வேண்டுகோளுக்கு
இசைந்து அக்கங்கையின் சிறுசிறு பகுதிகள் அம்மூவர் உலகிலும் தங்கியிருக்க அருள் புரிந்தனன்.
பின்னொரு காலத்தில் கங்கையைப் பூமிக்குக் கொண்டுவர வேண்டிப் பகீரதன் எனும் அரசன் பிரமனை
நோக்கித் தவம் இருந்தான். பிரமன் தனது சத்தியலோகத்தில் இருக்கும் கங்கயை பூலோகம் செல்ல
விடுத்தான். தன்னைத் தாங்குவோர் எவரும் இல்லை என்ற செருக்கோடு அது பெருகி வரும் வேகத்தைத்
தாங்கிச் சிவபெருமான் தமது சடைமுடியில் ஒரு திவலையாக முடிந்துகொண்டார். பின்னர் பகீரதன்
வேண்டுகோளுக்கிணங்கி கங்கையைப் பூவுலகம் செல்ல விடுத்தார். அவ்வாறு விடுத்த திருக்கோலம்.
39. சுபசோமஸ்கந்தம்: சத்தாகிய
தனக்கும் சித்தாகிய இறைவிக்கும் நடுவில் ஆனந்தமாகிய முருகன் விளங்கும் மங்களகரமான சச்சிதானந்தத்
திருக்கோலம். (சோமஸ்கந்தமூர்த்தியின் நிலை இச்சாசக்தியையும், கிரியாசக்தியையும், ஞானசக்தியான கந்தனையும் செயல்படுத்தி, பஞ்சகிருத்தியங்களையும் லீலையாகப் புரிந்து நிற்கும் நிலை.
இதில் சிவன் சுகாசன மூர்த்தியாக விளங்குவார்)
40. சூரஸிம்ஹாரி: வீரத்தன்மை
கூடிய நரசிங்கமூர்த்தி இரணியனைக் கொன்று அவன் குருதியைக் குடித்ததனால் அசுர குணம் மேலோங்கி
நின்று அட்டகாசம் செய்ய அதனால் உலகத்தோருக்கு ஏற்பட்ட நடுக்கத்தைத் தீர்க்க பரமசிவனார்
சரபவடிவம் தாங்கி நரசிம்மரின் உக்கிரம் தனித்த திருக்கோலம். (சரபம் மனிதன், யாளி, பக்ஷி இம்மூன்றும் கலந்த உருவம். இந்த உருவத்தில் சூலினி, பிரத்தியங்கரா எனும் இரு பெண் சக்திகளும் அடங்கும்.)
41. கமாரி: நெற்றிக்கண்ணினால் மன்மதனை எரித்த திருக்கோலம்.
42. யமாந்தகம்: மார்க்கண்டேய
முனிவருக்காக வந்த காலனை இடது திருவடியால் உதைத்த திருக்கோலம்.
43. சுசிமாணவபாவம்: முருகனே
குருமார்களுக்கெல்லாம் தலைமைக் குரு என்பதை உலகம் உணர்ந்து உய்யவேண்டி முருகனாரிடம்
மாணாக்கர் கோலத்தில் நின்று உபதேசம் பெற்ற திருக்கோலம். (சிஷ்யபாவமூர்த்தி).
44. சுபகர பிரார்த்தனை மூர்த்தம்: வேண்டுகோளை
நிறைவு செய்யும் மங்களமான திருக்கோலம்.
(தாருக வனத்துக்குப் பிட்சாடனராய் இறைவன்
எழுந்தருளியபோது மோகினியாய் உடன் வந்த திருமால் காமவயப்பட்டுத் தன்னைத் தழுவுமாறு இறைவனை
வேண்ட இஞ்ஞான்று யாம் கொண்ட எமது திருமேனி யாராலும் தாங்குதற்கு அரிது. எனவே உனது விருப்பத்தை
மற்றோர் சமயத்தில் நிறைவேற்றுவொம் என்று அருளினான் இறைவன்.)
45. நறுந்திரிபுராந்தகம்: முப்புரத்தை
எரித்த நறிய திருக்கோலம்.
(முப்புரம் ஆவது மும்மல
காரியம் என்பது திருமந்திரம். அம்மலத்தின் ஒழிவு கருதி நறும் திரிபுராந்தகம் என்றார்.)
46. சுரர் பரசும் சுமுக கங்காளம்: தேவர்கள்
வழிபடும் நலமார்ந்த கங்காளம் அணிந்த திருக்கோலம். (கங்காளம் என்பது முதுகெலும்பு என்றும்
கூறுவர்)
(மகாபலியிடம் மூன்றடி மண்பெற்றுப் பேருருவம்
கொண்டு தருக்குற்ற வாமன அவதார விட்டுணுவைத் தமது வச்சிரதண்டத்தால் அடித்து முதுகெலும்மைப்
பிடுங்கிக் கையில் அணிந்தார் இறைவன் என்பது வரலாறு. இஃது அத்துணைச் சிறப்புடைத்தன்று.
சங்கார காலத்தில் பிரமம் விட்டுணுக்களுடைய கங்காளம் தரிப்பான்.
இஃதே கங்காளமாகும். அதனாலன்றோ திருவாதவூர்ப் பெருமான்
நங்காயி தென்னதவ நரம்போடெ லும்பணிந்து
கங்காளத் தோன்மேலே காதலித்தான் காணேடீ
கங்காள மாமாகேள் காலாந்த ரத்திருவர்
தங்காலஞ் செய்யத் தரித்தனன்காண் சாழலோ.
என்று அறிவுறுத்தியுள்ளார்).
47. இரக்த பிக்ஷைப் பிரதானம்: தேவர்களின் குருதியை பிரம்மனுடைய தலையோட்டில்
பிச்சையாக ஏற்கும் திருக்கோலம்.
(ஆணவத்தால் இகழ்ந்த பிரமாவின்
தலையைச் சிவனார் ஆணைப்படி வைரவர் கொய்து (பிரம்மசிரக்கண்டீஸ்வரர்)
அந்தத் தலையோட்டில் எல்லாத் தேவர்களின் குருதியையும் பிச்சையாக ஏற்றுக் குருதி
கொடுத்ததால் இறந்த தேவர்களை மீண்டும் உயிர்பெறச் செய்து வைகுந்தம்
அடைந்தார். அங்குத் தன்னை எதிர்த்த விடுவசேனனைச் சூலத்தால் குத்திக் கோத்துக் கொண்டு
வருதலை உணரந்த திருமால் பயந்து அவரை வழிபட்டு வைரவரின் ஆணைப்படி குருதிப் பிச்சை தரத்
தன் நெற்றியைக் கீறிக் குருதியைக் கபாலத்தில் வழியச்செய்தார். கபாலம் பாதியும் நிரம்பவில்லை.
விட்டுணுவோ உயிர் நீங்கி விழுந்தார். அதுகண்ட சீதேவி, பூதேவி இருவரும் வைரவக் கடவுளின்
திருவடியில் விழுந்து விண்ணப்பிக்க அப்பெருமான் நாராயனருக்கு உயிர்ப்பிச்சை அளித்து
எழச்செய்தார். பிறகு நாராயணரின் வேண்டுகோளுக்கு இசைந்து சூலத்தில் தொங்கிக்கிடந்த விடுவசேனனையும்
உய்ரிபெறச் செய்தருளினார்.)
48. இருஞ்சுடரே சுடர் கவுரீ
வரப்பிரதம்: இறைவி பேரொளி வீசும் கௌரியாக, விரும்பியவண்ணம் ஈசன் அவருக்கு வரம் அளித்த திருக்கோலம்.
49. மஹாபாசுபத சொரூபம்: அர்சுனனுக்கு
பாசுபதப்படை அருளிய திருக்கோலம்.
50. அணிதோன்று புஜங்கலளிதம்: கருடனுக்கு
அஞ்சித் தன்னைப் புகலடைந்த பாம்புகளை (அவைகள் "ஏன் கருடா! சுகமா?" என்று அக்களிப்புடன் வினவியதால்) அணியாகக் கொண்ட திருக்கோலம்.
51. ரிஷபாந்திகம்: அறக்கடவுளை
விடையாகக் கொண்டு அதன் மீது எழுந்தருளிய திருக்கோலம்.
52. தோமறுகஜயுத்தம்: தேவர்களை
வருத்திய கயாசுரன் என்னும் ஆனை வடிவம் கொண்ட அரக்கனை காசியம்பதியில் கொன்று ஆனைத்தோலை
உரித்துத் திருமேனியில் அணிந்து கொண்ட குற்றமற்ற
திருக்கோலம்.
53. விந்தை விளம்பு கஜாந்திகம்: சூரபன்மன்
மகனான பானுகோபனுடன் நேரிட்ட போரில் தனது கொம்பொடிந்து துயரங்கொண்ட தெய்வயானையான ஐராவதம்
திருவெண்காட்டில் வழிபட அதற்கு அருள்செய்த கோலம்.
54. வீணைதயங்கு தக்ஷிணமூர்த்தம்: தும்புரு
நாரதர் முதலிய முனிவர்களுக்கு வீணையின் இலக்கணமுணர்த்தி அருளும்படி வீணைகொண்ட தென்முகக்
கடவுள் திருக்கோலம்.
55. மேதக யோக வினோதமாக விளங்கு தக்ஷிணமூர்த்தம்: யாவரும்
யோகத்தின் நிலையை உணர்ந்துகொள்ள வேண்டுமென்ற பேரருளால் கொண்ட யோக தக்ஷிணமூர்த்தி
திருக்கோலம்.
56. விமல பிக்ஷாடனம்: தாருகாவனத்தில்
எழுந்தருளிய பிட்சாடனத் திருக்கோலம். (இறைவன் பிச்சைக்காரனாக வேடந்தாங்கி தாருகாவனத்தில்
திருமாலுடன் (மோகினி) அலைந்த வடிவமே இது. பாம்புகளை அணிந்து, கையில் கோடாரியும் சூலமும் தாங்கி திகம்பரனாக அறியப்படுகிறது
இவ்வுருவம்).
57. கவலையுத்தாரணம்: தன்னை
வந்தடைந்தவர்களின் இடுக்கண்களை நீக்கும் ஆபதோத்தாரணமூர்த்தம் என்னும் திருக்கோலம்.
58. வேதகணம் புகழும் விதி சிர கண்டனம்: வேதங்கள்
புகழும்படி பிரமன் தலையைக் கைந்நகத்தால்
கிள்ளிய திருக்கோலம்.
59. கவுரிவிலாசமந்விதம்: தேவியைத்
திருவிளையாடல் காட்டி மணந்து உடன் விளங்கும் திருக்கோலம்.
60. எழிலரியர்த்தம்: திருமாலைத்
தன் உருவில் பாதியாகக் கொண்ட கேசவார்த்தம் என்னும் திருக்கோலம். (இறைவன் பாதி அரியின்
அம்சமாக விளங்கும் அரிஹரமூர்த்தி வடிவம்).
61. வீரபத்திரம்: வீரமார்த்தாண்டன்
என்ற அசுரனைக் கொண்ற வீரபத்திரர் ஆகிய திருக்கோலம். (பைரவரையும் வீரபத்திரரையும் சிவனின்
மூர்த்தி பேதங்களாக நூல்கள் கூறுவன. எனினும், இவ்விருவரையும் சிவனின் மைந்தர்களாகக் கொள்ளும் மரபும் நிலவுகிறது.)
62. திருமூர்த்தி முப்பாதம்: மூன்று
திருவடிகளோடு பிரமன், விட்டுணு
உருத்திரன் மூவரும் தன்னிடத்தில் ஒடுங்க இருக்கும் திருக்கோலம்.
63. மஹாவேதாளி நடம்: காளியோடு
ஆடிய நடனத் திருக்கோலம்.
64. வெருவருமேகபதத் திருவுரு: ஒரு
திருவடியே கொண்டு பிரம விட்டுணுவைத் தன்னிடத்தில் ஒடுங்க இருக்கும் திருக்கோலம்.
ஆய் விளம்பறுபது
நான்கும்: ஆகக் கூறப்படும் அறுபத்து நான்கு திருக்கோலங்களையும்
விலாசவளிப்புநிமித்தம்
எடுத்த: திருவிளையாட்டாகத் தன் பெருமையை உயிர்கள் உணரும் பொருட்டு மேற்கொண்ட
மெய்ப்பொருள்
எது அதுவே: – உண்மையாகிய பரம்பொருள் எது என்பது உணர வேண்டின், அந்தப் பரம் பொருளே
விண்ணவர்
மண்னவர் கண்ணவர் யாவரும்: தேவர்களும் பூவுலகத்தவர்களும் ஏனை உலகத்தில் உள்ள மற்ற
யாவரும்
வீடருளாய்
எனவே: எங்கட்குப் பேரின்ப நிலையை அருளுவாயாக என்று
வந்தனை
புரிய: தொழுது புகழ
இருந்துளன்
நீ என: விளங்குகின்ற முருகனாகிய நீயே என்று
வண்டமிழான்:
வளம் நிறைந்து தமிழ் மொழியாலும்
மனசான்:
மனத்தாலும்
வாழ்த்தி
வணங்கு: நின் சீரை வாயால் வாழ்த்தி அன்பு நிறைந்து மனங்கொண்டு
மெய்யால் வணங்குகின்ற
எனை ஆள:
என்னை ஆட்கொள்ளும்படி
என் இருதய
மலரில் எழுந்தருளாய்: என் உள்ளமாகிய தாமரை மலரில் எழுந்தருளுவாயாக
(இவ்வாறு
வேண்டுகின்ற அடிகளார் பின்வருமாறு மயிலேறும் பெருமானைத் துதிக்கின்றார்)
மந்திரநாயக: வேதங்களில் விளங்குகின்ற முழுமுதற் பொருளே
தந்திரநாயக: ஆகமங்களில் விளங்குகின்ற முழுமுதற் பொருளே
மங்கள
நாயக: மங்களங்களுக்கெல்லாம் மங்களமாகிய
வீடு பேற்றின்பத்தின் தலைவனே
ஓம் மய: பிரணவத் திருமேனி கொண்டவனே
தவரீசுர: தவம் செய்வார் கருத்தில் திகழும் இறைவனே
பரம்:
பெரியவற்றுக்கெல்லாம் பெரியவனே
குஹேசுர:
உயிர்களின் இருதயமாகிய குகையில் எழுந்தருளியுள்ள கடவுளே
வசனமனாதீத:
மனத்தையும் மொழியையும் கடந்த நிலையில் விளங்குபவனே
வரத: வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரியபொருளை வேண்டும்
அளவில் உதவுபவனே
க்ருபாகர: அருளே உருவமானவனே
குமர: என்றும் இளையவனே
பராபர: பராபரப் பொருளே
வரைவறு
ஷாட்குண்ய வஸ்துவென்: எல்லையில்லாத ஆறு குணங்களையுடைய பகவன் என்னும் பொருளாயிருப்பவன்
எனப்படும்.
அற்புத
சத்தியவித்தக: சச்சிதான்ந்தப் பெருமானே
மரணமொடயனமிலா
வானவ: பிறப்பும் இறப்பும் இல்லாத தேவனே
ஞானநபோமணியே:
ஞானவெளி (சிதாகாசம்)யில் விளங்கும் மாணிக்கமே
திருமாலயனறியாவோர்
மாமலையின் பெயரான் குருநாத: பிரமனும் விட்டுணுவும் அடிமுடி காணமுடியாத மலையின்
பெயரைக் கொண்ட அருணகிரிநாதரின் குருநாதனே
என் மருடெறுமாமுனியே:
எனது அறியாமையாகிய இருளை அழிக்கும் பெருமை பொருந்திய ஆசிரியப் பெருமானே
திருச்சிற்றம்பலம்
No comments:
Post a Comment