Thursday, September 29, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
சிந்தனைத் திரட்டு
திரு. ஆர். சி. கதிர்வேல் முதலியார், பி..
அலுவலர், விஜயகுமார் மில்ஸ் லிமிடெட்,
கலயம்புத்தூர் த. பெ. – 624615 (வழிபழநி)

சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      [பதிப்பாசிரியர் குறிப்பு: - பழநியில் மிகவும் சிறப்புடன் விளங்கிய சிவத்திரு ஈசான சிவாசாரிய சுவாமிகளின் மாணவரான திரு. ஆர். சி. கதிர்வேல் முதலியார் அவர்கள் சைவசாத்திரங்களிலும் திருமுறைகளிலும் (சிறப்பாகப் பெரியபுராணம், தேவாரம்) மிக்க பற்றுள்ளவர். நமது மூவர் தமிழ்மாலை வெளியீட்டில் 17வது தமிழ்மாலைக்கான முழுச்செலவையும் ஏற்றுக் கொண்டவர். தம் சிந்தையில் தோன்றிய சில கருத்துக்களை நம் வாசக அன்பர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பி நமக்கனுப்ப, அவற்றைத் தொகுத்து வெளியிட்டுள்ளோம். – ஆங்கீரஸ சர்மா]
1
      சேக்கிழார் புராணத்தில் நால்வர் பெருமைகளைக் கூறித்துதிக்க வந்த உமாபதி சிவம், திருஞானசம்பந்தரைக் கூறும் போதுபூழியர் கோன் வெப்பொழித்த புகலியர் கோன் கழல் போற்றிஎன்று சொல்லுவதன் கருத்து என்னவென்று சிந்தித்தேன். பூழியர்கோன் (பாண்டியன்) வெப்பொழித்தையே திருஞானசம்பந்தரின் மற்ற எல்லா அற்புதச் செயல்களைவிடப் (பூம்பாவையை உயிர்ப்பித்ததையும்விடப்) பெருஞ் செய்கை என்பதே அவரது கருத்தாக இருக்கக்கூடும் என்று தோன்றுகிறது. இதற்குக் காரணம் என்னவாக இருகும் என்று யோசித்த போது சில சிந்தனைகள் தோன்றின. செம்பு அல்லது கல் பொன்னானால் அது ஒரு மாற்றம், (Transformation) ஒரு கிலோ செம்பு பாதி தங்கமாகவும் பாதி செம்பாகவும் இருப்பதென்றால் ஒரு பொருளில் ஒரு பகுதி பழைய தன்மையுடனும் மற்றொரு பகுதி புதிய தன்மையுடனும் (அதாவது பொன்னாகிறது) உளதாக ஆகிறது. செம்பும் கல்லும் ஜடப் பொருள். உயிருள்ள பொருளாகிய மனிதனிடத்தில் ஒரு பக்கம் தண்மையாகவும் (குளிர்ச்சி) மற்றொரு பக்கம் வெப்பமாகவும் இருப்பதென்பது எங்கும் காணக்கூடாத ஒன்றாகும். இப்படிப்பட்ட தன்மை பரம்பொருள் ஒருவருக்கே உண்டு. ஒரு பகுதி பெண் (தண்மை) ஒரு பகுதி ஆண் (வெப்பம்). இப்படியிருப்பவர் மாதொருபாகனான பரம்பொருள் மட்டுமேயன்றோ? அப்பரம்பொருளின் மகனாராதலின் தன் தந்தையைப் போலவே செய்தார் என்று தோன்றுகிறது.
      இம்மாதிரிம் செய்யும் போது அதாவது பாண்டியன உடலின் ஒரு புறத்து வெப்பினை முதலில் போக்கும் போது, இது மிகவும் அரிய செயல் என உணர்ந்தே போலும், பிள்ளையார் இறைவரால் அருளப்பட்ட வேதங்களைத் துதித்துத் திருநீற்றுப்பதிகம் பாடுகிறார். இச்செய்தியைக் கூறும் சேக்கிழார்பெருமானின் தெய்வம் மணக்கும் பெரியபுராணத் திருப்பாடலைக் கீழே காண்க.
                தென்னவன் நோக்கங் கண்டு திருக்கழு மலத்தார் செல்வர்
       “அன்னவன் வலப்பால் வெப்பை ஆலவாய் அண்ணல் நீறே
       மன்னுமந் திரமு மாகி மருந்துமாய்த் தீர்ப்பதென்று
       பன்னிய மறகள் ஏத்திப் பகர்திருப் பதிகம் பாடி
                                    (திருஞானசம்பந்தர் புராணம் – 764)

      திருஞானசமபந்தர் தன்னால் செய்யப்பட்ட பல அற்புதச் சம்பவங்களின் போது இறைவனார் திருவருளை வழுத்திப் பாடினார் என்று தான் சேக்கிழார் கூறுகிறார். இந்த ஒரு இடத்தில் மட்டும்பன்னிய மறைகள் ஏத்திப் பகர்திருப்பதிகம் பாடிஎன்று தெய்வப்புலவர் சேக்கிழார் கூறக் காரணம் என்ன? செய்கை அரியது, தாம் பாடுவதும் வேதமேயானாலும் எழுதா மறையைத் தாம் எழுதும் மறையாகப் பாடுவதால், அந்த மூல மறையைத் துதித்துப் பாடினார் என்பதே எனது சிந்தனைக் கெட்டும் காரணமாகும்.
      திருநீற்றுப்பதிகம் பாடி, திருவளர் நீறு கொண்டு திருக்கையால் தடவத் தென்னன் உடலின் வலப்பக்கத்து வெப்பு நீங்கிப் பொய்கை போல் குளிர்ந்தது. ஆனால் அவ்வலது பக்க வெப்பும் கூடியது போல இடது பக்கம் மிக்க அழல் எனத் தீப்போல் பொங்கியது. இடது பாகத்து நோயைச் சமணர்கள் தீர்க்க இயலாது போக, மன்னவன், மொழியாகச் சேக்கிழார் கூறும் பாடலைப் பாருங்கள்
                மன்னவன் மொழிவான்என்னே! மதித்த இக்காயம் ஒன்றில்
       வெந்நர கொருபா லாகும் வீட்டின்பம் ஒருபா லாகும்
       துன்னுநஞ் சொருபா லாகும் சுவையமு தொருபா லாகும்
       என்வடி வொன்றி லுற்றேன் இருதிறத் தியல்பும்என்பான்.    
                                                (திருஞானசம்பந்தர் புராணம் – 768)

      இந்த நிலையைப் பொறுக்கவியலாத பாண்டியன்வந்தெனை உய்யக் கொண்ட மறைக்குல வள்ளலே! இந்த வெப்பு முழுதும் நீங்க எனக்கருள் புரிவீர்என்று திருஞானசம்பந்தரை வேண்டினான். பிள்ளையார் இடது பக்கத்து வெப்பினைத் தீர்த்தருளிய செய்தியைக் கூறும் போதும் சேக்கிழார்திருமுகம் கருணைகாட்டத் திருக்கையால் நீறுகாட்டிப், பெருமறை துதிக்கும் ஆற்றால் பிள்ளையார் போற்றிப் பின்னும், ஒருமுறை தடவ அங்கண் ஒழிந்து வெப்பகன்று பாகம், மருவு தீப்பினீயும் நீங்கி வழுதியும் முழுதும் உய்ந்தான்என்ற கூறுவது கவனத்திற்குரியது.
      ஆகவே பாண்டியனைப் பற்றிய வெப்பு நோயினைப் போக்குதற்கு முதல் முறையும் இரண்டாம் முறையும் திருஞானசம்பந்தப்பெருமான் மறைகளைத் துதித்தார் என்று தெரிகிறது.
2
      மறையெனினும் வேதம் எனினும் ஒன்றே. “பேசுவதும் திருவாயால் மறை போலுங் காணேடீஎன்று மாணிக்கவாசகர் திருவாசகம்திருச்சாழல் பதிகத்திலும்வேத மொழியினர் வெண்ணீற்றர்என்று அன்னைப் பத்திலும் கூறீயிருப்பது காண்க.
3
      வேதம் ஒரு பெரிய சமுத்திரம். அதனின்றும் (முத்தெடுப்பது போல்) சிறந்தவற்றை முகந்து நம் நால்வர் பெருமக்களும் கூறியுள்ளார்கள்.
4
      திருமயிலையில் திருஞானசம்பந்தர் எலும்பை பெண்ணாக்கினர். “மட்டிட்ட புன்னையங்கானல்எனத் தொடங்கும் பதிகம் பாட அதில் 10வதான சமண் பாட்டைப்பாடியவுடன் பூம்பாவை வெளியே வந்து விட்டாள். இதைக் கூறும் சேக்கிழார் பெருமானின் பாடலிலிருந்து ஒரு கருத்துத் தோன்றுகிறது. அதாவது பாட்டு வளர்ந்து கொண்டு போகுமோ, தான் மேலும் பாட வேண்டுமோ எனத் திருஞானசம்பந்தர் நினைக்க 10வது பாடல் பாடியதும் பூம்பாவை தோன்றிடக் கண்டுவிடுத்த வேட்கையர் திருக்கடைக்காப்பு விரித்தார்என்று சேக்கிழார் கூறுகிறார். விடுத்த வேட்கையர் என்பதற்கு மேலும் பாடுதலில் உள்ள வேட்கையை விடுத்தவர் என்று பொருள் கொண்டால் இந்தக் கருத்து புலப்படும். இறைவர் திருவுள்ளம் எப்படியோ எனத் திருஞானசம்பந்தரே அஞ்சுகிறார் என்றால் போன்றோர் நிலை என்ன?
5
      ஶ்ரீலஶ்ரீ ஆறுமுக நாலவர் அவர்கள் “புழுத்த நாயினுங் கடைப்பட்ட நானா அவர்கள் (நால்வர்) பெருமையைக் கூறுவது” என்று கூறுகிறார்கள். நால்வர் பெருமக்களுக்கு இறைவர் அருள் செய்து பற்றி உலகியல் நிலையில் சில கருத்துக்களை வாசகர்களுக்குச் சமர்ப்பிக்கிறேன். திருநாவுக்கரசர் பெருமான் ஆண்டான் – அடிமை உறவு குறிக்கும் தாசமார்க்கத்தில் ஒழுகினார். அவருக்குத் திருநீறளித்துத் தீட்சை செய்து சைவத்த்க்குக் கொண்டு வந்தவர் தமக்கையார் திலகவதியாராவர். இங்கு ஒரு சிந்தனை. பெரிய முதலாளி முன் தன் பணியிலிருந்து போய் மீண்டும் வேலைக்கு வந்தவனை இனி சரியாக வேலை செய்வானா என்று தானே கேட்காமல் தனது உதவியாளர் மூலம் கேட்டுப் பணியில் பயிற்றுவித்தல் போலவுள்ளது இது. அடுத்தது திருநாவுக்கரசர் வாழ்வில் இறைவர் நேரே வருவது பிற்பகுதியில் தான். அதுவும் கனவில் ‘வாய்மூருக்கு வா’ என்று கூறிப் போவதாகும் (கயிலாயக் காட்சி தவிர). பெரிய முதலாளிக்குப் பல இடங்களில் கடைகள் உள்ளன. வேதாரண்யம் கடையில் கணக்கு சரியில்லை. முதலாளி தன் மகனையும் தலைமைக்கணக்கரையும் சரிபார்த்து வரும்படி அனுப்புகிறார். மகன் (திருஞானசம்பந்தர்) தலைமைக் கணக்கரை (அப்பரடிகளை) நீர் முதலில் கணக்கைப் பாரும் (கதவு திறக்கப்பாடுக) என்று சொல்லுகிறார். தலைமைக் கணக்கர் என்ன கூறியிருக்க வேண்டும்? தம்பி, எதற்கும் நீயே முதலில் பார், பிறகு நான் பார்க்கிறேன்” என்று சொல்லியிருக்க வேண்டும். அதாவது அப்பரடிகள் திருஞான சம்பந்தரை, “நீரே முதலில் திறக்கப் பாடுவீர்” என்று கூறியிருக்க வேண்டும். பிறகு கணக்கையெல்லாம் சரி செய்த பிறகு (கதவு திறக்கவும் மூடவும் பாடிய பிறகு) மாலையில் இருவரும் முதலாளியிடம் போகிறார்கள். முதலாளி ஏதும் கேட்பதற்கு முன்னாடியே, தலைமைக்கணக்கர், “தம்பி என்னை முதலில் கணக்கைப் பார்க்கச் சொல்லியது, நான் பார்த்தேன். பிறகு தபியும் பார்த்தது. இதில் தம்பிக்கும் திருப்திதான்” என்று சொல்கிறார். முதலாளி பதில் ஒன்றும் சொல்லாது உள்ளே போய் விடுகிறார். தலைமைக்கணக்கருக்கு ஒரே பயம் வந்து விட்டது. தாம் முதலில் பார்த்தது முதலாளிக்குத் திருப்தியில்லையோ என்ற ஐயமே அச்சத்துக்குக் காரணம். என்ன செய்வார் பாவம்? வீட்டுக்கு வந்து கவலையுடன் அன்றிரவு ஒன்றும் சாப்பிடாது படுத்துக் கொண்டார். தூக்கமும் வரவில்லை. புரண்டு புரண்டு படுக்கிறார். பிறகு ஒருவாறு சிறிது உறக்கம் வர முதலாளி (இறைவர்) கனவில் வந்து ‘வாய்மூருக்கு வா” என்று கூறிவிட்டுச் செல்கிறார். இது என் கொலோ என்று அப்பர் போக திருஞானசம்பந்தரும் இதையறிந்து தாமும் செல்கிறார். பிறகு இறைவர் பொற் கோயில் ஒன்று காட்டி அதனுள் மறைந்தருள அப்பர் பெருமான் “பிழைத்துச் செவ்வி அறியாதே திறப்பித்தேனுக்கேயல்லால் உழைத்தாமொளித்தால் கதவம் தொண்டுறைக்கப் பாடி அடைப்பித்த தழைத்த மொழியார் உப்பாலார் தாமிங் கெப்பால் மறைவது’ என இறைவனிடம் விண்ணப்பிக்கிறார். அதாவது பிழை செய்த எனக்குப் பேட்டியளிக்காது போனாலும் என்னுடன் உமது மகனாரும் (சின்ன முதலாளி) இருக்க தாங்கள் எப்பவி மறைவது என்று தலைமைக்கணக்கர் விண்ணப்பிப்பது போலவுள்ளது. இறைவர் திருஞானசம்பந்தருக்குக் காட்சியளிக்க அவர் அப்பருக்கு இறைவனைக் காட்டுகிறார். திருஞானசம்பந்தர் பதிகம் “வாய்மூர் அடிகள் வருவாரே” என்று வருகிறது. அப்பரடிகளின் வாக்கில் “வாய்மூர் அடிகளைக் கண்டவாறே” என்று வருகிறது. வருவதற்கும் காண்பதற்கும் உள்ள வேறுபாடு வெள்ளிடை. சைவசித்தாந்தக் கருத்து உயிர் சார்ந்த்தன் வண்ணம். Assimilation and reflection கொண்டது காட்டல்.
6
      ஏயர்கோன் கலிக்காம நாயனார் சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் சினம் கொள்கிறார். (விரிவு அவர் புராணத்தில் கண்டு கொள்க). “அரிவை காரணத்தினாலே ஆளுடைப் பரமர் தம்மை இரவினில் தூது போக ஏவி அங்கிருந்தான் தன்னை வரவெதிர் காண்பேனாகில் வருவது என்னாம் கொல்” என்று அவரது சினம் புலப்படுகிறது. இங்கு “வருவது என்னாம்” என்று நிறுத்தி அடுத்து “கொல்” அதாவது அவனைக் கொல்வாய் என்று கொள்ளுதலே முடிவு. பெரிய புராணம் சுந்தரர் வரலாற்று ஆய்வுரை எழுதிய மறை. திருநாவுக்கரசு அவர்களிடமும் இந்த என் கருத்தைக் கூறினேன். அவரும் சரியென ஒப்பினார். பந்தைச் சுவற்றிலடித்தால் திரும்பி வருகிறது. சுந்தரமூர்த்தி சுவாமிகள் சுவர் போல ஆகிவிட்டார். அதனால் ஏயர்கோனின் ‘கொல்’ என்ற சொல் பந்து போல அவருக்கே திரும்பி வந்து விட்டது. தன்னையே கொன்று கொள்கிறார். சுந்தரர் தானும் இறக்க முடிவு செய்த போது இறைவர் ஏயர்கோன் கலிக்காம நாயனாரை எழும்புகிறார். பிறகு சுந்தரரும் ஏயர்கோனாரும் நட்பு கொள்கிறார்கள்.
7
      இன்னொரு விஷயம் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும். அப்பரிடமும் சம்பந்தரிடமும் இறைவர் distance keep செய்கிறார். சுந்தரர் தோழர் ஆனதால் பலமுறைகள் தானே வருகிறார். திருவொற்றியூரிலும் திருவாரூரிலும் இறைவர் தாம் ஆம் தன்மையிலேயே தோன்றி சுந்தரரிடம் தேரில் உரையாடுகிறார். ஒரு தடவை கூட அப்பரிடமோ சம்பந்தரிடமோ தாமாம் தன்மையில் நேரில் உரையாடியதாகப் பெரிய புராணத்தில் இல்லை. தோழமை மார்க்கம் என்ற சக மார்க்கத்தின் தனிச்சிறப்பு இது எனத் தோன்றுகிறது.
8
      திருஞானசம்பந்தப் பெருமான் புத்திர மார்க்கத்தில் ஒழுகியவர். தன் மகனுக்கு இக்காலத்தார் தனியாக ‘கார்’ (Car) வாங்கிக் கொடுப்பது போலத் தன் மகனுக்கு இறைவர் முத்துச்சிவிகை யளித்தருளினார். இது நடந்தது திருநெல்வாயில் அரத்துறை என்னும் தலத்திலாகும். பையன் வெயில் தாங்கமாட்டான் என்று அவன் அறையை தற்காலத்தில் தந்தையார் (Air Condition) ஏர் கண்டிஷன் செய்வது போலத் திருப்பட்டீச்சரம் என்னும் தலத்தில் முத்துப்பந்தர் அருள் செய்தார். மற்றும் திருஞானசம்பந்தர் உரையைத் தனது உரையாகக் கொண்டார். இது புத்திர மார்க்கத்ஹ்டின் சிறப்பு என்று தோன்றுகிறது.
9
      அப்பரடிகளின் தாசமார்க்கம் பற்றி முன்னரும் கூறினேன். திருவீழிமிழலையில் படிக்காசு பெற்ற வரலாற்றிலும் தாச மார்க்கச் சிறப்பு வெளிப்படுகிறது. திருமாமகனார் ஆனதால் சம்பந்தர் வாசியுடன் காசு பெற்றார் என்றும், கைத்தொண்டாகும் அடிமையினால் வாசியில்லாக் காசுபடி வாகீசர் பெற்றார் என்றும் கூறப்பட்டது காண்க.
10
      மாணிக்கவாசகருக்காக இறைவர் அடிபட்டது பற்றிய ஒரு சுவையான சிந்தனை. நானும் என் மனைவியும் ஓரிடத்துக்குப் போனபோது என் மனைவி மீது அடி விழுகிறது. நான் பரிந்து போக என் மீதும் அடி விழுகிறது. நான் பரிந்து போக என் மீதும் அடி விழுகிறது. நான் வாளா விருந்து விட்டால் எல்லோரும் என்னை ஆண்பிள்ளையா என்று கேட்ப்பார்கள். அதற்காக நானும் அடி வாங்கிக் கொள்ள வேண்டும். இறைவர் இதுபோல அடிவாங்கிக் கொள்கிறார். இது நாயக-நாயகி பாவன் என்னும் சன்மார்க்கச் சிறப்புப் போலும். இதையும் மறை திருநாவுக்கரசு அவர்களிடம் கூறினேன். மிகுந்த சமத்காரமாகக் கூறுகிறாய் என்றார்.


11
      சிவப்பிரகாச சுவாமிகள் இயற்றியருளிய நால்வர் நான் மணிமாலைக்கு சிதம்பரம் ஈசானிய மடம் ராமலிங்க சுவாமிகள் ஒரு அருமையான உரை எழுதியுள்ளார்கள். அதில் அவர் கூறுவது நால்வர் பெருமக்களுள் வேறுபாடு காணக்கூடாது. இவர் பெரியவர், அவர் பெரியவர் என்று கூறுவது தவறு. நான் உலகியல் நிலையை வைத்துப் பெருமக்களைப் பற்றிக் கூறும் பொழுது ஈசானிய மடம் சுவாமிகளின் இந்தக் கருத்தையும் மனதில் வைத்துக் கொண்டேதான் எழுதினேன்.
12
      ஒரு முறை என் குருநாதர் சொன்னார். “அப்பா வேதத்தைப்பற்றி ஒருவருக்கும் ஒன்றும் தெரியாது” என்று. நம் அறிவு சிற்றறிவு. வேதம் இறைவனின் வாக்கு என்ற நம்பிக்கையுடன் வாதப்பிரதிவாதத்துக்குப் போகாமல் இருக்க வேண்டும். அப்படிப் போனால் நம் நம்பிக்கை குறைந்து விடும். தற்காலம் வேதம் பற்றி வருகிற புத்தகங்களையும் மதிப்புரைகளையும் படித்து நம் மூளையைக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆகவே வேதமோடு ஆகமம் மெய்யாம் இறைவன் நூல் என்ற அருள்வாக்கில் நம்பிக்கை வைத்தால் க்ஷேமமடைவோம். சிவஞானசித்தியார் இது பற்றிக் கூறுவதையும் கைக்கொள்ள வேண்டும்.

சிவம்.

No comments:

Post a Comment