Monday, October 3, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
சிலம்பில் சிவம்
பனசை. சுவாமிநாதன், எம். ., பி. எட்.,

சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      முன்னுரை: -            “நெஞ்சை யள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணியாரம்: என்று சிலப்பதிகாரம் தமிழ்க் கவிஞர்களால் போற்றப் பெறும் பாங்குடையது. குடிமக்கட்காப்பியம், ஒற்றுமைக்காப்பியம், உரையிடையிட்ட பாட்டுரைச் செய்யுள் என்றும் எடுத்து வழங்கப்பெறும்சிலம்புஎன்னும் இச்சிலப்பதிகாரத்தை நல்கியவர் இளங்கோவடிகள் ஆவர். இக்கடலில் மூழ்கி ஆய்வுமணிகளை அள்ளி அள்ளி வழங்கிய ஆய்வாளர் பலர்.
      சைவநீதி: -  மறை முதலாம் சைவம்,’ ‘திவ்வியம் பழுத்த சைவம்,’ ‘ஓரும் வேதாந்தமென்றுச்சியில் பழுத்த ஆரா இன்ப அருங்கனிஎன்பன சைவ சமயம் பற்றிய அருளாளர்களின் வரையறைகள்கணிப்புகள்கண்டு காட்டல்கள் ஆகும். உலகின் பழுமை மிக்க, தொன்மை மிக்க சமயமும் அதுவே ஆகும்.
      ஒப்பு நோக்குச் சிந்தனை: - எல்லாப் பொருளிலும் கலந்தும், கடற்றும், ‘கடவுளாகவிளங்குகின்ற இறைவன் அநாதியான பரம்பொருள். அவன் ஆதியும் அந்தமும் இல்லாத அரும் பெருஞ்சோதி; முன்னைப் பழமைக்கும் பழமையாய், புன்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்குபவன். இவ்வகை மாட்சிமைகளையுடைய இறைவனாகிய சிவபிரானையும், சைவ சமயத்தையும் இச்சிலம்புக்காப்பியத்துள் பருந்தின் வீழ்வு நோக்கிலும் அரிமா நோக்கிலும் அமைந்தாங்கு சிந்தித்து ஒப்பு நோக்கி எடுத்துரைப்பது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
      நகரம்: -     புவியாளும் மன்னனுக்குக் கோநகர் உண்டல்லவா? நம் கண்ணுதற் பண்ணவனோ அண்டமுழுவதும் தண்ணளி செய்து ஆள்பவனாயிற்றே! அவனுக்குத் தலைநகர் கிடையாதா? அதுவே இராசதானியாக அமைய வேண்டுமே!
      :சீர்கொண்ட கூடல் சிவராசதானிபுரம்
                ஞாலம் நின்புகழே மிகவேண்டும் தென்
      ஆலவாயில் உறையும்எம் ஆதியே

என்றெல்லாம் அருள் நூல்கள் அவனது கோநகர் மதுரை என்றல்லவா கூறுகின்றன. இறைவனே,
                “மதிமலி புரிசை மாடக் கூடல்
      பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிறகு
      அன்னம் பயில்பொழில் ஆல வாயில்
      மன்னிய சிவன்யான் ………………………………………….”

எனத் தன்முகவரியை (Self-address) தெளிவாகக் கூறியுள்ளானே அந்த நகரை, இருப்பிடத்தைச் சிலம்பு, “அதிராச் சிறப்பின் மதுரை மூதூர்” (பதிகம்) என அடைமொழியிட்டு மொழிவது காணலாம்.
      கோயில்: -  நகரம் உடைய மன்னவனுக்கு அழகிய இருப்பிடம், அரண்மனை, இருக்குமே! அதைக் கோயில் (கோ+இல்) என்று சொல்வரே! உலகு புரந்தளிக்கும் ஒரு தனி முதல்வனுக்குக் கோயில் உண்டு; அக்கோயில் அரங்கத்தைக் கொண்டது; அதுவும் வெள்ளியம்பலம் என்று போற்றப் பெறும் சிறப்பான மன்றமாகும்.
                கொன்றையஞ் சடைமுடி மன்றப் பொதியில்
      வெள்ளியம் பலத்து” (பதிகம், வரிகள் 40-41)

                பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்” (5; 69)
      “ஊர்க்கோட்டம்” (9; 11)
      “அருந்தெறற் கடவுள் அகன் பெருங் கோயிலும்” (13; 137)
என இவ்வாறெல்லாம் பிறைமுடிக் கண்ணிப் பெரியவன் கோயிலை இளங்கோவடிகள் குறிப்பிடுவர்.
      “ஊர்க்கோட்டம்என்பதற்கு இறைவனுராகிய கைலாயம் நிற்கும் கோயில் என்றும்1, [1 சிலப்பதிகாரம்அரியார்க்கு நல்லாருரை பக்கம்: 246]
      “அருந்தெறற் கடவுள் அகன் பெருங்கோயிலும்
என்னுந் தொடர்க்குஅரிதாகிய அழித்தற்றொழிலை வல்ல கடவுளது அகன்ற பெரிய கோயிலிடத்தும்2 [2 சிலப்பதிகாரம்அரியார்க்கு நல்லாருரை பக்கம்: 348]
என்றும் அடியார்க்குநல்லார் வகுக்கும் உரைத்திறம் தனிச்சிறப்புடையது.
      மலை: -     “வெள்ளி வெற்பின் மேல்என்றும், “கயிலை மலையானேஎன்றும் இறைவனின் கயிலைப் பொருப்பை இலக்கியங்கள் அழகுற வர்ணித்துக்காட்டும். அந்நெறியில் சிலம்பும், “இமையச் சிமையத் திருங்குயிலாலுவத்து உமையொரு பாகத்து ஒருவனை” (28; 102-103) என்று குறிப்பிட்டுக் காட்டும்.
      இறைவனின் திருநாமம்: - இறைவனின் திருநாமத்தைச் சிலப்பதிகாரம்பெரியோன்என்றே உரைக்கும்.
      “பெரியோன் தருக திருநுதல் ஆகஎன” (2:41)
      “பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்” (5: 169)
      “பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய” (11; 72)
      திருமேனிப் பொலிவு: -   இறைவன் வானாகி, மண்ணாகி, வளியாகி ஒளியாகி நிற்பவன்; அவன்தன் மேனியின் பொலிவும், அவன் அணியும் உடைகள், அணிகள் ஆகிய சிலம்பில் சிறப்புறப் பேசப்பெறுகின்றன.
      நுதல் விழி நாட்டம்: -    இறையோனின் நெற்றிக் கண்ணைப் பலபடப் போற்றுவது புராண மரபு. அந்நெறி நின்று சிலப்பதிகாரமும் அவனது நுதல் விழியைப் போற்றிப் பரவும்.
      “கண்ணுதல் பாகம்” (12;2)
      “கண்ணுதலோன்” (12-10)
      “நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து” (12; 55)
      “நுதல்விழி நாட்டத்து” (14;  7)
என்பன அவ்வரிகள்.
      ஈர்ஞ்சடை அந்தணன்: -   “அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்என்பது திருமந்திரம். அவன் தன் சடையின் அழகு மாட்சிமையைச் சிலம்பு.
      “கொன்றையஞ் சடைமுடி” (பதிகம்; 40)
      “செஞ்சடை வானவன்” (26; 98)
என எடுத்தேத்தும்.
      பிறைசூடி: -பித்தா பிறைசூடிஎன்ற பாடுவர் சுந்தரர். இறைவன் பிறைசூடி நிற்கின்ற பெற்றிமையை இக்காப்பியமும் எடுத்தியம்பும்.
      “குழவித் திங்கள் இமையோர் ஏத்த
      அழகொடு முடித்த அருமைத்தாயினும்” (2; 38-39)
      “பிறைமுடிக் கண்ணி” (11; 72)
      “சென்னியன், இளம்பிறை சூடிய இறையவன்” (22, 86-87)
என்பன அவை.
      கொன்றை முடி சூடி: -   இறைவன் விரும்பியணியும் மலருள் சிறந்ததாகிய கொன்றைமலரைச் சடையில் மிலைச்சிய சிறப்பினைச் சிலம்பு. “கொன்றையஞ் சடைமுடி” (பதிகம்; 40) என்று பேசும்.
      திரிபுரம் எரித்த நிறம்: -  முப்புரத்தை இறைவன் எரித்த வீரச்செயலைதிரிபுரமெரியத் தேவர் வேண்ட” (6;40) என்று சிலப்பதிகாரம் குறிப்பிடும்.
      நீலகண்டம்: -     பாற்கடலைக் கடைந்தபோது ஆலகால விடம் தோன்ற அது கண்டு அமரர் அஞ்ச, அம்மையப்பன் அதை எடுத்து உண்டான். விடம் கழுத்திலேயே தங்கி திருநீலகண்டமாயிற்று. இதனைச் சிலம்பு, “நஞ்சுண்டு கறுத்த கண்டி” (12; 57) என்று மொழிவது காணலாம்.
      ஆனைத்தோல் போர்த்தல்: -    சிலம்பு, இறைவன் யானைத் தோலைப் போர்த்தியதைஆணைத்தோல் போர்த்து” (12; 8) என்று பேசும்.
      புலித்தோல் போர்த்தல்: - இறைவன் புலியின் தோலை உரித்துப் போர்த்தமையைச் சிலம்பின், “புலியின் உரி உடுத்து” (12;3) என்னும் தொடர் குறிப்பிட்டுக்காட்டும்.
      மங்கை பங்கமர்ந்த மன்னன்: - கலைமதியின் கீற்றணிந்த அகிலேசர் சிலைமதனைக் கண்ணழலால் செற்றார். ஆனால் மலை மகட்குப் பாகம் வழங்கினான். சிலம்பின் கீழ்க்கண்ட பகுதிகள் ஆண்மையும் பெண்மையும் கலந்த அர்த்தநாரீசத் திருக்கோலத்தைப் பலபடப் புலப்படுத்திக் காட்டுவனவாகும்.
      “உமையவன் ஒரு திறனாக” (6;42)
      “கண்ணுதல் பாகம் ஆளுடையா:” (12; 2)
      “உமையொரு பாகத்தொருவனை” (28; 103)
      ஆலமர்செல்வன்: -        கல்லாலின் புடையமர்ந்த இறைவன் நான்குமறை ஆறு அங்கங்களின் பொருளை உணர்ந்த வல்லோர் நால்வர்க்கு இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டினான் என்பது புராணவரலாறு. இதனை,
      “ஆலமர் செல்வன் பெயர் கொண்டு வளர்ந்தோய்” (23; 91)
      ஆலமலர் செல்வன் மகன்” (21; 15)
என்னுமடிகளில், அடிகள் குறிப்பிட்டுக் காட்டுவர்.
      அனக நாடகனின் அரிய ஆடல்: -      ஆடல் வல்லானாகிய நடனசபாபதி ஒரு சில குறிப்பிட்ட ஆடல்கலை மன்பதைகள் உய்ய வேண்டிய ஆடியுள்ளான். அவற்றைக் கொடு கொட்டி, பாண்டரங்கம், கொட்டிச்சேதம் என்பன காணலாம்.
      கொடு கொட்டி: -  தேவர்கள் திரிபுரத்தை எரிக்க வேண்டி விண்ணப்பிக்க, எரிமுகத்தை உடைய பெரியதொரு அம்பு ஏவல் பணி கேட்டிட, உமையொருபாகனாக ஆடியது கொடுகொட்டி என்னும் கூத்து ஆகும்.
      “திரிபுர மெரியத் தேவர் வேண்ட
      எரிமுகப் பேரம்பு ஏவல் கேட்ப
      உமையவ ளொருதிற னாக வோங்கிய
      இமையவ னாடிய கொடுகொட்டி யாடலும்” (6; 40-43)
      பாண்டரங்கக் கூத்து: -    பாண்டரங்கம் என்பது பரமனின் பதினோராடலும் ஒன்று. அது தேவர்களாகிய தேரின் முன் நின்ற பிரமன் காணும்படி பைரவி வடிவாகிய பரமசிவன் திரிபுரசங்கார காலத்தில் வெண்ணீற்றையணிந்து ஆடியது. இதனைச் சிலப்பதிகாரம்,
      “தேர்முன் நின்ற திசைமுகன் காண்ப
      பாரதி யாடிய வியன்பாண் டரங்கமும்” (6; 44-45)
என்னுமடிகளில் நினைவுறுத்தும்.
      கொட்டிச்சேதம்: -   உமையவன் ஒரு திறனாக இருக்க ஓங்கிய இறைவன் ஆடிய கொட்டியாடலைக்கொட்டிச்சேதம்என்னும் பெயரிட்டுப் பிறிதோரிடத்தும் அடிகள் பாடுவர்.
                திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும்
      பரிதரு செங்கையிற் படுபறை ஆர்ப்பவும்
      செங்கண் ஆயிரம் திருக்குறிப்பு அருளவும்
      செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும்
      பாடகம் பதையாது சூடகம் துளங்காது
      மேகலை ஒலியாது மென்முலை அசையாது
      வார்குழை ஆடாது மணிக்குழல் அவிழாது
      உமையவள் ஒரு திறன் ஆக ஓங்கிய
      இமௌயவன் ஆடிய கொட்டிச் சேதம்” (28; 67-75)

      வெள்ளி மன்றுள் ஆடியது: -    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதன் வெள்ளிமன்றுள் ஆடிய சிறப்பு அடியிற்கண்டவாறு போற்றப்படுகிறது.
                கொன்றையஞ் சடைமுடி மன்றப்பொதியிலில்
      வெள்ளியம்பலத்து ……………………..” (பதிகம்; 40-41)
               
அருந்தெறற்கடவுள்: - முத்தொழில் முதல் இறைவன்,
                செழும் பொழில்கள் பயந்து காத்தழிக்கும் மற்றை
      மூவர்கோ னாய்நின்ற முதல்வன் மூர்த்தி

என்பது மணிவாசகம். அவன் அழித்தல் தொழில் செய்கின்றமையைஅருந்தெறற்கடவுள்” (12; 37) என்னும் காப்பியத் தொடர் குறிக்கும்.
      நாதன் நாமம் நமச்சிவாயவே: -வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது, நாதன் நாமம் நமச்சிவாயவேஎன்று திருஞானசம்பந்தப் பெருமானால் போற்றப்பெற்றநமச்சிவாயஎன்னும் பஞ்சாட்சரத்தை (ஐந்தெழுத்தை) பரிந்துருகி ஏத்தி மொழிந்தால் நன்மை பெருகும். துன்பம் அகலும், இம்மை மறுமை இன்பமும் கிட்டும். அஞ்செழுத்தாம் ஆதிமந்திரத்தை, மறை மொழியை,
                அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும்
      வருமுறை எழுத்தின் மந்திர மிரண்டும்
                                          (11, 128-129)
என்னும் பாடல் வரிகள்ஐந்துஎன்றும்எழுத்தின் மந்திரம்என்றுஞ் சுட்டிக் காட்டும். ‘எட்டுஎழுத்தின் மந்திரமும் சைவர்க்குரிய மந்திரமே என்பதைப் பலர் அறியாதிருத்தல் கூடும். அதனையும் சுட்டிக் காட்டுவோம். 108 உபநிடதங்களில் பஸ்மஹாபால உபநிடதம் என்பது ஒன்று. இது திருநீறு எனப்படும் பஸ்ம மாஹாத்மியத்தை முக்கியமாக உபதேசிக்க வந்தது. இதில் பஞ்சாக்ஷரம் ஓம் நமச்சிவாய என்றும் அஷ்டாக்ஷரம் ஓம் நமோ மஹாதேவாய என்றும் கூறப்பட்டுள்ளது.
      “ஓம் இத்யக்ரே வ்யாஹரேத், நம இதி பச்சாத், மஹா தேவாயேதி பஞ்சாக்ஷராணிஎன்பது இவ்வுபநிடத வாக்கியம். இதன் பொருள்ஓம்என்று முதலில் கூறுக. ‘நமஎன்று பின்னர், (அதற்கு மேல்) ‘மஹாதேவாயஎன்னும் ஐந்து எழுத்துக்க: என்பதாம். இதனைச் சேர்த்து வாசிக்கும் போதுஓம் நமோ மஹாதேவாயஎன்று வரும். பிரணவம் உள்ளிட்ட எட்டெழுத்து மந்திரம் இதுவாகும். எனவேஅருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும், வருமுறை எழுத்தின் மந்திரமிரண்டும்என்ற சிலப்பதிகாரம் கூறுவது மேலே காட்டிய ஓம் நமச்சிவாய, என்ற பஞ்சாக்ஷரமும், ஓம் நமோ மஹாதேவாய என்ற அஷ்டாக்ஷரமும் ஆகும் என்று அறிந்து இன்புறுக.
      சிவபரத்துவம்: -    இதுகாறும் சிவபெருமான், அவன் நகரம், கோயில், மலை, அருட்செயல்கள், ஆடற்சிறப்புகள் ஆகியனபற்றிக் கண்டோம். இவையோடன்றி, வேறு ஒரு சிறப்பான குறிப்பும் காப்பியத்துள் காணக்கிடக்கின்றது. அதுதான் பரம்பொருளின் உயர்தனி முதன்மையை, மூவர்கோனான நின்ற முதன்னையை, மூதாதையாந் தன்மையை அதாவது சிவபரத்துவ மேன்மையைச் செப்புவதாகும்.
      பத்தினித்தெய்வத்துக்குக் கோயில் கட்டக் கல் எடுக்கவும், தமிழரசரை இகழ்ந்த வடவாரிய மன்னரைப் புறங்காணவும் சேரன் செங்குட்டுவன் வஞ்சி மாலையணிந்து போர்க்குப் புறப்படுகின்றான். ஆனால் வெற்றிக்கு முதன்மையாகஅனைத்துச் செயலுக்கும் ஆதாராமாகஉள்ள சிவபெருமானின் திருவடிகளை முடிமேல் சூடுகின்றான்.
                நிலவுக்கதிர் முடித்த நீளிருஞ் சென்னி
      உலகுபொதி உருவத்து உயர்ந்தோன் சேவடி 
      மறஞ்சேர் வஞ்சி மாலையொடு புனைந்து
      இறைஞ்சாச் சென்னி இறைஞ்சி வலங்கொண்டு
      மறையோர் ஏந்திய ஆவுதி நறும்புகை
      நறைகெழு மாலையின் நல்லகம் வருத்தக்
      கடக்களி யானைப் பிடர்த்தலை ஏறினன்.” (26; 54-60)

      அச்சமயம் பாம்பணையில் பள்ளி கொள்ளவும் திருமாலின் சேடத்தை (பிரசாதம்) சிலர் கொண்டு வந்து சேரனைப் போற்றி செய்தனர். சிவபெருமானின் திருவடி தங்குந்தலையாகலின் திருமாலின் சேடம் அங்கு இடம் பெறுதல் தகுதியுடையதாகாது. எனவே அதனை வாங்கித் தன் தோளில் தரித்தனன். இவ்வரலாற்றை.
                குடக்கோக் குட்டுவன் கொற்றம் கொள்கென
      ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
      சேடங் கொண்டு சிலர்நின்று ஏத்தத்
      தெண்ணீர்க் கரந்த செஞ்சடைக் கடவுள்
      வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
      ஆங்கது வாங்கி அணிமணிப் புயத்துத்
      தாங்கினன் ஆகித் தகைமையில் செல்வுழி” (26; 61-61)

என்ற காப்பியப்பகுதி பறை சாற்றும். இதனால் சேரன் செங்குட்டுவனது சிவப்பற்றும் இதன் வழி சிவபரத்துவமும் நிறுவப்படுகிறது.
      சிலப்பதிகாரம் டாக்டர் . வே. சாமிநாதையர் அவர்கள் பதிப்பில் நூலாசிரியரான இளங்கோ அடிகள் வரலாறு என்னும் தலைப்பிட்டு அவர்கள் அடிகளது சமயம் பற்றி ஆய்ந்து வெளியிட்டுள்ள பகுதியை4 [4 சிலப்பதிகாரம்-அடியார்க்கு நல்லாருரை டாக்டர் .வே.சா. அவர்களின் 1968-ஆம் ஆண்டுப் பதிப்பு இளங்கோவடிகள் வரலாறு, பக்கம்-17]  ஈண்டு ஒப்பு நோக்கல் தகுதியாகும்.
      ‘நிலவுக் கதிர் முடித்த ………..இறைஞ்சி வலங்கொண்டுஎனவும், “ஆடகமாடத்தறிதுயில் அமர்ந்தோன்………..அணி மணிப்புயத்துத் தாங்கினன்எனவும், ‘செஞ்சடை வானவன்எனவும், “ஆனேறு ஊர்ந்தோன் அருனினில் தோன்றியஎனவும் கூறியிருத்தலால் இவரது சமயம் சைவம் என்று தோன்றுகின்றது. “குணவாயிற் கோட்டத்துஎன்பதில் கோட்டம் என்றதற்குஅருகன் கோயில்என்று அடியார்க்கு நல்லார் பொருள் செய்திருத்தலையும், இந்நூலில் சிலவிடத்துச் சைனமதக் கொள்கையை இவர் மிகுத்துக் கூறியிருத்தலையுங் கொண்டு இவரது சமயம் சைனமென்று ஐயுறுதற்கும் இடம் உண்டு.
      தொகுப்புரை: -    சிலம்பில் நகை முதலாய எண்சுவைகள் இயைந்துள்ளன. கருத்துச் செறிவும் உண்டு. உவமை, உருவகம், தற்குறிப்பேற்றம் முதலிய அணியழகுன நிரம்பவுண்டு, இருசுடர்த் தோற்றம், நகர் வருணனை, பொழில் விளையாட்டு முதலியனவும் பேசப்படுகின்றன. ஆயினும் அவற்றையெல்லாம் பருந்தின் வீழ்வாய்ப் பாய்ந்து இறங்கி ஒதுக்கி, என்றென்றும் நின்று நிலவும்ஒன்றாய்[‘ பரம்பொருளின் உயர் முதன்மையை ஒல்லும் வகையான உரைக்க முற்படுவதே இப்படைப்பின் நோக்கமாகும்.
      டாக்டர் ஐயரவர்கள் வரலாற்றுக் குறிப்புரையில்இவரது சமயம் சைனமென்று ஐயுறுதற்கும்எனஉம்மை கொடுத்து எழுதியுள்ளமையாலும், நூலில் சமண மதக்கருத்துக்கள் கூறப்பட்டபோதிலும், ‘பெரியோன்’, ‘கடவுள்’, ‘கண்ணுதலோன்எனப்பலவிடத்தும் சிவபிரான் திருநாமங்களும் அவன்தன் அருட்செயல்களும் பிறவும் பரக்கக் கூறப்படுவதாலும் இளங்கோவடிகளது சமயம் சைவமே என்றும், இவர் சிவபரத்துவத்திலேயே நாட்டமுடையவரென்றும் துணிந்து கூறலாம். அதற்கு, முதலும் முடிவும் முத்தாய்ப்பானதும் ஆன சான்று, சேரன்செங்குட்டுவன் சிவபெருமானின் சேவடியைத்தன் திருமுடியிலும், திருமாலின் சேடத்தைத் தன் தோளிலும் தாங்கிய சிறப்பு ஒன்றேயாகும்.
      முடிவுரை: - எங்கும் எதிலும் முதலும் முடிவுமாக இருப்பவன் சிவபிரானே. அவன்தன் மாட்சிமைகள் எல்லா இலக்கியங்களிலும் வெளிப்படையாகவும், உள்ளுறைப் பொருளாகவும் கலந்துள்ளன. அவற்றில் சில கண்டுரைத்தாம். எல்லாங் காணமுயன்ற தற்செருக்குக் கொள்ளின் குன்று முட்டிய குரீஇப் போலவும், குரிச்சிபுக்க மான் போலவும், இடர்ப்பட நேரிடும். அடிகள் தந்த அரிய இத்தமிழ்க் காப்பியத்துள் இசைச்சுவை முதலான நயங்கள் ஊடுருவி உள்ளது போலவே உலக முதல்வனின் ஒண்புகழும் ஒட்டி உறைகின்றது.
சிவம்.

     
     


No comments:

Post a Comment