உ
சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
ஶ்ரீதத்தகிரி தத்தாத்ரேயர்
(ஶ்ரீ யாக்ஞவல்க்யதாசன்)
சிவஞான பூஜா மலர் அக்ஷய, பிரபவ - விபவ ஆண்டு - (1986, 1987-1988)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
சேந்தமங்கலம் ஶ்ரீ அவதூத சுயம்பிரகாச பிரம்மேந்திர சுவாமிகள் தன் திக்விஜயத்தின் பொழுது ஹிமோத்கிரியில் உள்ள ஶ்ரீதத்தர் ஆலயம் வந்து வணங்கிய பொழுது, அவருக்கு பகவான் ஶ்ரீதத்தாத்ரேயர் பிரத்யக்ஷமாகி, அருளாசி வழங்கி, தனக்குத் தமிழ் நாட்டில் ஓர் ஆலயத்தை ஏற்படுத்த ஆக்ஞாபிக்க, அந்த ஆக்ஞையிபடி ஆலயம் உருவாகியது. சந்யாசிக்கரடு என்று அன்றுவரை அழைக்கப்பட்ட குன்று, ஆலயம் எழுந்த பிறகு, தத்தகிரி என்ற திருநாமத்தை அடைகிறது. சேலம் ஜில்லா நாமக்கல்லிலிருந்து சேந்தமங்கலம் செல்லும் பேருந்தில் செல்கிறோம். சேந்தமங்கலம் ஊரை அடையும் முன்னர் பேருந்து “தத்தகிரி முருகன் ஆலயம்” என்ற அலங்கார வரவேற்பு நுழைவாயில் அருகே நிற்கிறது. அங்கு இறங்கி ஆலயம் செல்ல நடையைக் கட்டுகிறோம். தத்தகிரியை அடைய சுமார் இரண்டு பர்லாங் தூரம் செல்ல வேண்டும். அடிவாரத்தை அடையும் வரை ஆலயத்தின் பின்னணியைச் சற்று நினைவு கொள்வோமாக.
ஸந்யாஸ மார்க்கங்களிலேயே மிகவும் சிரேஷ்டமானதும் நடைமுறையில் கடினமானதுமான அவதூத மார்க்கத்தின் ஆதிகுரு தத்தாத்ரேயர். அத்திரி முனிவருக்கும் அனஸூயா தேவிக்கும் மும்மூர்த்திகளின் அருளால் புத்திரராகத் தோன்றியவர். சதுஸ்ஸனன் என்ற ஒரு பெயரும் உண்டு. நான்கு புருஷார்த்தங்களையும் அளிப்பவர் என்பது பொருள்.
தத்தாத்ரேயர் சிறுவயது முதல் அவதூதராக சஞ்சரிக்கிறார். பகவான் அம்சமான தத்தாத்ரேயர் யதுவுக்கும் கார்த்தவீரியார்ஜுனனுக்கும் அருளி அவர்களுக்கு பல சித்திகளைக் கொடுக்கிறார். தத்தாத்ரேயர் பெரிய ஞானியாகி, சகல தேவரிஷி கணங்களால் வணங்கப்பட்டு, ஹிமோத்கிரியில் தத்தாத்ரேய குகையில் இன்றும் இருந்து கொண்டு அருள் பாலிக்கிறார். பகவான் தத்தாத்ரேயரை ஶ்ரீசிருங்கேரி சந்திரசேகர சுவாமிகள் ‘ஶ்ரீ தத்த நவரத்ன மாலிகா”வில் பின் வருமாறு வர்ணிக்கிறார். “ஶ்ரீ பகவான் உலகில் அவதூத தர்மத்தைப் பரப்புவதற்காக அத்ரி அநசூயையிடம் அவதரித்து, யதுவுக்கு ஆத்ம தத்துவத்தை உபதேசித்துப் பொன், பொருள், பெண் முதலிய வஸ்துக்களிடம் ஆசை அற்றவர்களான மனிதர்களுள் சிறந்த மகான்களால் எப்பொழுதும் சேவிக்கத் தக்க பாதகமலங்களை உடையவர், பக்தர்களின் சிரசில் தன் கையினால் சக்தியை அளிக்கின்றவர்; அஷ்டதிக் பாலர்களால் ஆராதிக்கப்படுபவர்; பரமசிவன் அவதாரம், சூரியன் பொறாமை கொள்ளும் தேஜஸை உடையவர், தன் கருணைக் கடாக்ஷத்தால் கூன், குருடு, செவிடு, ஊமையானவர்களை அக்குறை நீங்கச் செய்பவர்; தன்னை வணங்கும் பக்தர்களுக்கு யோகசித்தியை அளிப்பவர்; பரமாத்மாவை உணர்ந்தவர்; சம்சார சாகரத்தினின்று கரை ஏற்றுபவர்; தன்னைச் சரணடைந்தவர்களுக்கு வேண்டியதை வேண்டியவாறு அளிப்பவர்; கலியின் பாதிப்பைப் போக்குகிறவர்; சாதுக்களை ரக்ஷித்து துஷ்டர்களை சிக்ஷிப்பவர்”.
ஹைஹய தேச அதிபதி கிருதவீரியன் புதல்வன் கார்த்தவீரியார்ஜுனன் தத்தாத்ரேயருக்கு சிச்ரூஷை செய்து அவருடைய அனுக்ரஹத்தால் ஆயிரம் கைகளைப் பெறுகிறான். யோகம், அணிமா முதலிய சித்திகளை அடைகிறான். மிகுந்த பலசாலிகளாலும், சத்துருக்களாலும் ஜயிக்க முடியாதவனாகிறான். வாயுபோல், தடையின்றி எங்கும் சஞ்சரிக்கும் வாய்ப்பினைப் பெறுகிறான். அவன் ஒரு சமயம் ரேவாநதியில் ஸ்திரீகளுடன் ஜலக்ரீடை செய்யும் பொழுது, நதி நீரால் கரையில் இருந்த ராவணனின் கூடாரம் பாதிக்கப்படுகிறது. கோபம் கொண்ட ராவணன் கார்த்தவீரியனை போருக்கழைக்க, அவன் ராவணனை அநாயாசமாக ஒரு குரங்குக் குட்டியைத் தூக்குவது போல் தூக்கி மாகிஷ்மதி என்ற தன் பட்டினத்திற்கு எடுத்துச் சென்று, பிறகு விடுவிக்கிறான். தத்தாத்ரேயரின் அருளால் இவ்வளவு சிறப்பையும் அடைந்து ‘கார்த்தவீரியனை நினைத்தால் காணாமற்போன பொருள் கிட்டும்’ என்ற விசேஷ சிறப்பினையும் பெறுகிறான்.
இனி பகவான் தத்தாத்ரேயருக்கு தமிழ்நாட்டில் ஒரு தனி ஆலயத்தை நிறுவிய ஶ்ரீ அவதூத சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வரலாற்றுச் சுருக்கத்தைப் பார்ப்போம்.
திருக்கோவலூர் அருகில் உள்ள கல்பட்டு என்ற கிராமத்தில் அந்தணவகுப்பைச் சார்ந்த ராமஸ்வாமி சாஸ்திரிகள் ஜானகி அம்மாள் தம்பதியினருக்கு 28-11-1871 அன்று நான்காவது புத்திரராகப் பிறந்து கிருஷ்ண்மூர்த்தி என்ற திருநாமம் சூட்டப்படுகிறார். சிறுபிராயத்திலேயே கல்வியிலும், சீலத்திலும் சிறந்து விளங்கி, தான் பிற்காலத்தில் ஓர் அவதார புருஷராக விளங்கப்போவதை உணர்த்துகிறார். அவர்களுடைய சகோதரர்கள் வேதங்களைப்படித்து வேதபாட சாலைகளிலும், மற்றைய பள்ளிகளிலும் ஆசிரியர்களாகப் பணி புரிகிறார்கள். தாதுவருஷ பஞ்சம கல்பட்டை பாதிக்கிறது. சாஸ்திரியார் குடும்பம் ஆடுதுறையை அடைகிறது. குடும்பத்தினர் கிருஷ்ணமூர்த்தியை ஆங்கிகலப் பள்ளியில் சேர்க்கின்றனர். உபநயனம் முடிந்து, மேற்படிப்புக்கு கும்பகோணம் செல்கிறார். 19வது வயதில் மெட்ரிகுலேஷன் தேறுகிறார். வடமொழியில் பாண்டித்யம் பெறுகிறார். ஆசார்யன் ஶ்ரீநாராயண ஸ்வாமி சாஸ்திரிகளிடம் தர்க்கம், மீமாம்ஸை, வியாகரணம் படித்து மேதையாகிறார். தமிழிலும் பாண்டித்யம் பெறுகிறார். கிருஷ்ணமூர்த்திக்கு சேலத்தில் மாதம் ரூ 50ல் சர்க்கார் உத்யோகம் கிட்டுகிறது. என்னதான் உத்யோகம் பார்த்தாலும் அவர் மனம் வேறு ஒன்றை நாடுகிறது. ஓய்வு நேரத்தில் தியானம், பஞ்சாட்சர ஜபம் முதலியவைகளில் ஈடுபட்டார். வேலையிலும் திறமையாக செயலாற்றி ஊதிய உயர்வும் பெறுகிறார். விவாக ப்ரச்னை எழுகிறது. வித்தகர் விவாகத்தை விரும்பவில்லை. அதனைக்கண்ட மூத்த சகோதரர், “உன் படிப்புக்கு ரூ 3000 செலவழித்திருக்கிறோம். அதனைத் திரும்பக் கொடுத்துவிட்டு உன் இஷ்டம் போல் போ” என்று கூறுகிறார். கிருஷ்ணமூர்த்தி சாந்தமாக “அவ்விதமே செய்கிறேன். ஆனால் விவாகத்துக்கு என்னைக் கட்டாயப் படுத்த்தாதீர்கள்” என்கிறார்.
சென்னைக்கு மாற்றலாகி, அங்கு வந்த வருமானத்தில் சிறிது சிறிதாக சேமிக்கிறார். அது சமயம் பிரபலமாக இருந்த முத்துஸ்வாமி சாஸ்திரிகள் என்பார் தம் பெண்ணை அவருக்கு மணமுடிக்க விரும்பி, பெற்றோரை அணுகுகிறார். தகப்பனாரும் தமையன் குருஸ்வாமி கனபாடிக்ளும் சென்னை வந்து கிருஷ்ணமூர்த்தியிடம் தோல்வி கண்டு, கோபம் கொண்டு குருஸ்வாமி அவர் தலையில் ஒரு சொம்பு ஜலத்தைக் கொட்ட முயற்சிக்க, கிருஷ்ணமூர்த்தி சிரித்துக் கொண்டே “கனபாடிகளே, புருஷசூக்தம் சொல்லி ஜலம் கொட்டுங்கள்; நீங்கள் நிபந்தனையை மீறினீர்கள்; பாங்கில் ரூ 600 உள்ளது, பாஸ் புத்தகம் இதோ உள்ளது, அதனையும் எடுத்துக்கொள்ளுங்கள். இன்றுடன் என் தொடர்பு அறுந்தது” என்று கூறிகிறார். பிறகு உத்தியோகத்தை ராஜினாமா செய்து விட்டு காசிக்குக் கால் நடையாகச் சென்று, கங்கைக் கரையை அடைந்து, மன்னார்குடி ராஜு சாஸ்திரிகளிடம் மேல்கொண்டு ஆத்மசித்யையைப் பயில்கிறார். அவர் ஆசியுடன் அங்கிருந்த மெளன சுவாமிகள் ஒருவரிடம் ஆறுமாதம் சீடராக இருக்கிறார். துறவறத்தில் ஊக்கம் ஏற்படுகிறது. அது சமயம் காசியில் இருந்த திருவண்ணாமலை தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளை அடைந்து, பிரம்மசாரியாக சந்யாசம் மேற்கொள்ள விரும்புகிறார். தக்ஷிணாமூர்த்தி சுவாமிகள் அதற்கு பெற்றோர்க அனுமதி தேவை என்பதனை உணர்த்த, அவர் தந்தைக்கு கடிதம் எழுதிகிறார். தந்தையோ கிருஷ்ணமூர்த்திக்கும், தக்ஷிணாமூர்த்தி சுவாமிகளுக்கும் கடிதம் எழுதி அவரை ஊருக்குத் தருவிக்கிறார். கிருஷ்ணமூர்த்தி ஊரை அடைந்த தினம் தன் தகப்பனார் இறந்துவிட்டதை அறிந்து, மாயனத்தில் மறைந்திருந்து அந்திமக்கிரியைகளைப் பார்க்கிறார். அடையாளம் கண்ட சிலர் இவரை கிரியைகளில் கலந்து கொள்ள அழைக்க, இவர் மறுக்கிறார். கிரியைகளை நடத்தி வைத்த்வர்களில் ஒருவரான ராமசுப்ப சாஸ்திரிகள் “இப்புத்திரனால் இவன் தந்தை பிரம்மலோகம் சென்றார். இவனை வற்புறுத்தாதீர்கள்” என்று கூறுகிறார். பிறகு 13ம் நாள் தாயையும், தமையனையும் வணங்கி, துறவு மேற்கொள்ள அனுமதி கேட்டு, மறுக்கப்படுகிறார். பிறகு புதுக்கோட்டையை அடைந்து கரதல பிக்ஷை வாங்க முற்பட்டார். இதனைக்கண்ட தமையன் “உனக்கு சந்யாசம் கொடுக்கக் கூடிய குருவைக் கொண்டு வா, கவனிப்போம்” என்று கூற, புளகாங்கிதம் அடைந்த கிருஷ்ணமூர்த்தி ஒரு ஞான ஆசிரியனை நாடிச்செல்கிறார். அது சமயம் மதுரையில் ஜட்ஜ் சுவாமிகள் என்றும் சதாசிவ பிரம்மேந்திரர் என்றூம் அழைக்கப்படுபவர் பற்றி கேள்வியுற்று, மதுயையை அடைந்து, அவரை வணங்கி நமஸ்கரித்துத் தன் விருப்பத்தைக் கூறுகிறார். தவச்ரேஷ்டர் அவருக்கு தாய் தந்தையர் அனுமதி இல்லாது சந்யாசம் கொடுக்க இயலாது எனக்கூறுகிறார். தன் வித்தாந்தத்தைக் கூறி, தனக்கு அவதூதத்தையும் சந்யாசத்தையும் அருளப் பிரார்த்திக்க, இவரின் நிலை உணர்ந்த சுவாமிகள் அவரை சிஷ்யனாக ஏற்க முடிவு செய்து, “நி இடையில் ஏக வஸ்திரத்துடன் உன் தாயாரை அணுகி, அவளை மும்முறை வலம் வந்து, நமஸ்கரித்து அந்த இடத்திலேயே ஒரு முகூர்த்த காலம் அவளுடைய சந்நிதானத்திலே இருந்துவிட்டு வா, அகப்புறம் நீ கோரியபடி அவதூதமும், மெளனமும் அடையலாம். இறை அருள் உனக்கு பூரணமாக உண்டு” என்று அருளுகிறார்.
உடனே ஊரை அடைந்து, தாயை மும்முறை வலம் வந்து நமஸ்கரித்து, தாய் தமையனாருடன் ஒரு முகூர்த்த காலம் பேசி விட்டு எழுந்தார். வஸ்திரம் நழுவுகிறது. அவர்களை வணங்கி அவதூதராகச் செல்கிறார். 23-6-1899 பெளர்ணமி தினம், வயது 28, அவதூதாச்ரமம் ஏற்று ஶ்ரீ அவதூத சுயம்பிரகாச பிரம்மேந்திர சரஸ்வதி என்ற தீக்ஷா நாமம் ஏற்று தன் நெடு நாள் கனவு நனவாவதைக் காண்கிறார். எத்தனை இன்னல்கள் இடைஞ்சல்கள். ஒரு சமயம் சிறைப்படுத்தவும் படுகிறார். சிவ பாக்கியம் என்ற ருத்ர கணிகையும், இன்னும் சிலரும் இவரது மகினையை உணர்ந்து இவருக்கு வேண்டியவைகளை அவ்வப்போது கவனித்து வருகின்றனர். சுவாமிகள் வெகு விரைவில் பிரபலமாகி, பல சித்துக்களைப் புரிந்து, பல பக்தர்களை சிஷ்யர்களாக அடைகிறார். ஒரு சமயம் லாலாப்பேட்டையில் காவிரியைக் கடக்க பரிசிலை அடைய, ஓடக்காரன் இவரது திகம்பரத் தோற்றத்தைக் கண்டு, மற்றவருடன் இவரைப் பரிசிலில் ஏற்ற மறுக்க, இவர் தன் கையில் இருந்த விசிறியை தோணியாக்கி அக்கரையை அடைகிறார். இப்படி ஏராளமான சித்துக்கள். விபூதிப் பிரசாதம் அளித்து பலருக்கு பலபலன்களை அளிக்கிறார். ஒரு சமயம் இவரது வைராக்கியத்தைச் சோதிக்க ஜமீந்தார் ஒருவர் விலைமாதர்களைக் கொண்டு இவருக்கு பல சிசுருஷைகளைச் செய்வித்தார். ஜிதேந்திரியரான சுயம்ப்ரகாசர் பாதிப்பு ஏதும் இல்லாமல் இருக்க, ஜமீந்தார் பணிந்து மன்னிப்புக் கேட்கிறார். பிரம்மேந்திரான் அதிஷ்டனம் சென்று வணங்கி, அருகில் உள்ள இடங்களுக்கு விஜயம் செய்கிறார். கூட்டம் கூடுகிறது. ஏகாந்தத்தை விரும்பி மலைக் குகைகளில் தியானத்திம் ஈடுபடுகிறார். எங்கும் தொந்தரவு. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி, கடைசியில் சேர்தமங்கலம் சத்யாசிக் கரடு குகையுல் தங்க சம்மதிக்கிறார் குகைக்கு முன் சிஷ்யர்கள் ஒரு கட்டடத்தை எழுப்பினார். சிஷ்யர்களை குகைக் கதவுகளைத் தானிடச் சொல்லி, அடிக்கட்க் நிர்விகல்ப சமாதியில் ஆழ்ந்து விடுவார். அது சமயம் அவர் உருவம் அருகில் உள்ள காடுகளில் நடமாடுதைப் பலர் பார்த்துள்ளனர். அவர் உத்தரவு கொடுத்தா, தான் குகைக் கதவு திறக்கப்பட வேண்டும். அவர் நிரிவிகல்ப சமாதியில் இருக்கும் சமயம் ஒரு நாள்
சர்க்கார் அதிகாரி ஒருவர் வந்து வலுக்கட்டாயமாகப் பூட்டை உடைத்து, கதவைத் திறந்து, குகையில் எலும்பும் தோலுமாக இருந்த ஒரு உடலை வெளியே இழுத்துப்போட, தூங்கி எழுந்தவர் போல் சுவாமிகள் எழ, அதிகாரி பிரமிப்பும்
பீதியும் மேலிட்டு அவர் அடிபணிந்து மன்னிப்புக் கேட்கிறார். சுவாமிகள்
ஆத்மசாக்ஷாத்காரம் அடைந்து திகம்பரராய் பதினெட்டு ஆண்டுகள் தேச சஞ்சாரத்தில் ஈடுபடுகிறார்.
கன்னியாகுமரி முதல் ஹிமோத்கிரி வரை க்ஷேத்ராடனம் செய்து பல அற்புதங்களைச்
செய்கிறார். கடைசியில் ஹிமோத்கிரியில் தத்தாத்ரேயர் குகையை அடைந்து,
தியானத்தில் ஈடுபட்டு, அங்கேயே தங்க நினைக்கிறார்.
ஒரு நாள் பகவான் தத்தாத்ரேயர் அவருக்கு பிரத்யக்ஷமாகி தென்னாட்டில் தனக்கு
ஒரு ஆலயம் ஏற்படுத்தி அங்கு தன்னைப் பிரதிஷ்டை செய்ய ஆக்ஞாபிக்கிறார். மீண்டும் சேந்தமங்கலம் அடைந்து சந்யாசிக்கரடில் குகையில் தங்குகிறார்.
பல சிஷ்யர்கள் தோன்றினர். சந்யாச ஆச்ரமும் அவதூத
ஆச்ரமும் பலர் மேற் கொள்கின்றனர்.
ஆலயப்பிரதிஷ்டை வேலை துவங்குகிறது. சீடர்கள் நிஜானந்தர்,
சிவானந்தர், அபயானந்தர் மற்றும் பக்தர்கள் பொருள்
கொண்டு வந்து குவிக்கின்றனர்.
தத்தாத்ரேயர் உருவச்சிலை உருவாகிறது. இப்படி பல சிஷ்யர்கள்
பல கைங்கர்யங்களில் ஈடுபட்டு, ஶ்ரீதத்தாத்ரேயருக்கு தமிழ் நாட்டில்
ஓர் அற்புத ஆலயம் சேந்தமங்கலத்தில் சந்யாசிக் கரடில் எழுகிறது. சந்யாசிக்கரடு தத்தகிரியாகிறது. 29-5-1931 அன்று ஶ்ரீ
தத்தாத்ரேயர் ஆலயம் பூர்த்தியாகி குடமுழுக்கு விழாக் கொள்கிறது. சுவாமிகளுக்கு வயது 60. தினசரி பூஜை, பிரதி பெளர்ணமி விசேஷ அலங்காரம் அபிஷேகம் நடந்து வர ஏற்பாடாகிறது. வருடாவருடம் மார்கழி மாதம் ஶ்ரீ தத்த ஜெயந்தி விசேஷமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
பல சீடர்கள் ஆலயத்திருப்பணியை விஸ்தரிக்கின்றனர். சுவாமிகளின் சிஷ்யர் ஶ்ரீ ஸத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள் ஆலயத்தை அற்புதமாக
விஸ்தரித்து, முருகனைப் பிரதிஷ்டை செய்து, ப்ரு சபாமண்டபத்தையும் கட்டி அதில் அதி அற்புதமாக தெய்வத் திருவுருவங்களைப்
பிரதிஷ்டை செய்து வைதிக முறையில் பூஜைகள் நடைபெற ஏற்பாடு செய்கிறார்.
கிருஷ்ணாநந்தர், சங்கரனந்தர், துரியானந்தர்,
துரிய சிவம், தத்தானந்தர், விமலானந்தர், நிரஞ்சனானந்தர், சுகானந்தர்,
ஹம்ஸானந்தர் இப்படி எண்ணற்ற சிஷ்ய பரம்பரையினரை உடையவர் ஶ்ரீ சுயம்பிரகாச
சுவாமிகள். ஶ்ரீ சுவாமிகள் தத்தகிரி குகையில்
29-12-1948ல் தன்னுள் ஐக்கியமாகி விட்டார்.
* * * * *
தத்தகிரி அடிவாரத்தை அடைகிறோம். அடிவாரத்திலிருந்து நோக்குகிறோம். சிறிய குன்றுதான். என்ன அற்புதமான காட்சி. எழில் கொண்ட சூழ் நிலையில் அமைந்த ஆலயம். பகவான் தத்தாத்ரேயருக்கு பல்வேறு இடங்களில் சிலைகள் இருந்தாலும், இவ்வளவு நேர்த்தியாகவும் சிறப்பாகவும் அமைந்த ஆல்யம் இது ஒன்று தான். அடிவாரத்தில் ஆலயத்தை நோக்கிய வண்ணம அமைந்துள்ள துரியானந்தர், சங்கரானந்தர் சமாதிகளை வணங்கி, கிரியின் தென் பக்கம் அமைந்துள்ள தத்தகங்கையை அடைகிறோம். இக்கிணற்றுக்கு அருகே கலிதோஷம் நிவர்த்தி செய்யும் கங்காதேவியின் கலைக்கோயிலைப் பார்க்கலாம். கங்காதேவி பத்மாசனத்தில் கிழக்கு நோக்கி நான்கு திருக்கரங்களுடன் தத்தகங்கையைப் பார்த்த வண்ணம் கொலு வீற்றிருக்கிறாள். கங்காதேவியைத் தரிசித்துவிட்டு மேலே ஏறுகிறோம். முதலில் நாம் சந்திப்பது இடும்பன். தோற்றமோ ஆஜானுபாகுவானது. வடக்கு நோக்கி நின்ற திருக்கோலம். அவரைப் பிரார்த்தித்துக் கொண்டு அவருக்கு நேர் எதிரே உள்ள முருகன் சபாமண்டபத்திற்குச் செல்கிறோம். மண்டபத்திற்குக் கீழ் ஒரு பக்கம் மகாகாளன் ஶ்ரீகருப்பர் சுவாமி என்ற நாமத்துடன் மண்டபத்திற்குச் செல்லும் பதினெண்படிக் காவலராக, அஜாமுகி என்ற அரக்கியின் கையைச் சேதித்து இந்திராணியைக் காத்த கர்வத்துடன் கூடிய எழில் கோலத்தில் காட்சி அளிக்கிறார். 7 அடி உயரம், கிழக்கு நோக்கி சந்நதி கொண்டுள்ளார். மற்றொரு பக்கம் மண்டபத்துக்குக் கன்னி மூலையில் பஞ்சமுக ஹேரம்ப மகா கணபதி கம்பீரமாக காட்சி அளிக்கிறார். ஐந்து கஜமுகங்கள், பத்துக் கரங்களில் அபயம், வரதம், பாசம், தந்தம், ருத்ராக்ஷமாலை, மாவட்டி, பரசு, உலக்கை, மோதகம், பழம் கெண்டு, சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், திரோதானம், அனுக்கிரஹம் செய்பவராக விளங்குகிறார். பிரணவ ஸ்வரூபியான பரப்ரம்மமாக உள்ளார். பக்தனின் ஆசையைப் பூர்த்தி செய்யும் ஆசா பூரக கணபதி என்ற திருநாமம். எவர்க்கும் அருள் புரியத் தயாராக உள்ள நிலை, நின்ற திருக்கோலம், 9 அடி உயரம், சிம்ம வாகனம், நாள் பூராவும் கணபதியைத் தரிசனம் செய்து கொண்டிருந்தாலும் திருப்தி ஏற்படாது. அவரை வணங்கிவிட்டு, பதினெண்படியைக் கடந்து மேலே சென்று சபா மண்டபத்தை அடைகிறோம்.
முதலில் நம்மை எதிர்கொண்டு அழைப்பவர் பாரததேசத்திலேயே மிகப் பெரிய சிலா விக்ரஹமாக அமைந்துள்ள ஶ்ரீ ஐயப்ப ஸ்வாமி, அவரின் சரணாரவிந்தங்களைத் தரிசித்து மண்டபத்தை வலம் வருகிறோம். தெற்குப் பக்கம் தென்புறம் நோக்கிய வண்ணம் ஆலமரக்கடவுளான தக்ஷிணாமூர்த்தி 7½ அடி உயரத்துடன் கூடியவராய் எங்குமே காணமுடியத தோற்றத்துடன் மூன்று கண்கள், நான்கு கரங்களுடன் காட்சி அளிக்கிறார். அவர் அருகில் சனக, சனந்தன, சனத்குமார, சனாதரர் எழுந்தருளியுள்ளனர். அவரிடம் அருளாசி பெற்று மேல்புறம் வருகிறோம். இந்தியாவில் எங்குமே காணக்கிடைக்காத சிறப்புடன் பிரதிஷ்டை செய்யப்பட்ட சனீச்வரரையும் அவரின் உக்ரத்தை சமனம் செய்யும் வகையில் எதிரே பஞ்சமுக ஆஞ்சநேயரையும் காண்கிறோம். சனிபகவான் 8 அடி உயரம். எனக்குத் தெரிந்த வரையில் சனிபகவானின் மிகப்பெரிய சிலை இதுதான். இங்கு சனிபகவானுக்கு சனிக்கிழமை அன்று வன்னி பத்திரத்தால் சஹஸ்ரநாம அர்ச்சனை செய்து, என் கலந்த உளுந்து அன்னம் நிவேதனம் செய்து, கருப்பு வஸ்திரம், போர்வை தானமளித்து, ஸ்தோத்திரம் செய்தால் சனி பகவான் பிரீதி அடைந்து பாதிப்பை உண்டாக்க மாட்டார் என்று கூறப்படுகிறது. சனிபகவான் காக்கைவாகனத்துடன் நின்ற திருக்கோலம்.
எதிரே அமைந்துள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் 7 அடி உயரம் ஆஞ்சநேயர், நரசிம்மம், கருடன், வராகம், ஹயக்ரீவர் முகங்கள். பத்து திருக்கரங்கள், அவைகளில் சக்தி, சூலம், விருக்ஷம், மலை, பாசம், அங்குசம், முத்திரை, பிண்டிபாலம், கட்வாங்கம், குண்டிகை முதலியவைகளைத்தாங்கி, நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். சனீச்வரனின் பாதிப்பைத் தடுக்க வேண்டுமேயானால் ஆஞ்சநேயரை வழிபட வேண்டும் என்பது மரபு. இங்கு இரு சன்னதிக்கும் ஒரே சமயம் அர்ச்சனை செய்து தீபாரதனை காட்டி வழிபட்டால், வழிபடுவோரை ஏழரை நாட்டுச் சனி மட்டும் அல்ல, எந்த சனியின் தோஷமும் விலகிவிடும்.
அடுத்து வடபுறம் வருகிறோம். அங்கு 7 அடி உயரம் கொண்டு எழில் தோற்றத்தோடு தன்னைச் சரணமடைபவர்களைக் காப்பவனாகவும், நாடிய பொருள் கைகூட அருள்பவளாகவும், விருப்பங்களை நிறைவேற்றுபவளாகவும், சகல செளபாக்கியங்களை அருளுபளாகவும் காட்சி அளிக்கிறாள் அன்னை துர்க்கை அகஸ்திய மாமுனிவருக்கு விந்திய பர்வதத்தின் கர்வத்தை அடக்க வல்லமையைக் கொடுத்தவளாக, மகிஷாசுரனை சம்ஹாரம் செய்தவளாக, நான்கு திருக்கரங்களில் சங்கம், சக்கரம், வீரம், அபயம் கொண்டவளாக, கருணை நிரம்பிய பார்வையுடன் விஷ்ணு துர்க்கை உருவில் வன துர்க்கை என்ற நாமத்துடன் வடக்கு நோக்கி எழுந்தருளி உள்ளாள்.
இந்த சிலா உருவங்கள் அனைத்தும் சிற்பிகளின் உன்னதக் கலைத்திறனை வெளிப்படுத்துகின்றன. பாரதத்தில் வேறு எங்குமே காணமுடியாத எழிலுருவங்கள். அத்தகைய அற்புதச் சிலைகளைப் பிரதிஷ்டை செய்த ஶ்ரீ ஸத்குரு சாந்தானந்த சுவாமிகளை எவராலும் என்றும் மறக்க முடியாது. இந்த சபா மண்டபத்தை விட்டுச் செல்ல மனம் வெகு எளிதில் இடம் கொடுக்காது. பார்க்கப் பதினாயிரம் கண்கள் வேண்டும். வனதுர்க்கையை வணங்கி நம் வாழ்விலும் இடர்களை நீக்கி இன்பம் அருளப் பிரார்த்தித்துக் கொண்டு இன்னொரு வலம் வந்து ஆஞ்சநேயருக்கு அருகாமையில் உள்ள படிக்கட்டுகள் வழியாகக் கீழிறங்கி, சபாமண்டபத்தின் வடபுறம் உள்ள சுயம் பிரகாச சுவாமிகள் தவம் செய்த குகையைக் காண்கிறோம். ஶ்ரீ சுவாமிகளின் ஜீவியகாலத்தில் சேந்தமங்கலம் சிவபாக்கியத்தம்மாள் அவருக்கு அளித்தா நாற்காலியையும் இங்கு காணலாம்.
குன்றின் ஆலயத்தை அடைய மீண்டும் படிக்கட்டுகளைக் கடக்கிறோம். ஆலயத்தின் ராஜகோபுரம் நம்மை வரவேற்கிறது. திருக்கைலாயம் அடைந்துவிட்ட மகிழ்ச்சி. கோபுரத்துள் நுழைகிறோம். நம்மை எதிர்கொண்டு அழைக்கும் விநாயகரை வணங்கி தலை நிமிர்கிறோம். எதிரே குகைக் கோயில் சந்நதியைக் காண்கிறோம். உள்ளே ஓர் அற்புதத் திருஉரு புன்முறுவலுடன் நம்மை அழைக்கிறது. ஶ்ரீ சுயம் பிரகாச சுவாமிகள் நிஜமாகவே உட்கார்ந்திருப்பது போன்ற தோற்றம். வலக்கை சின்முத்திரையுடனும், இடக்கை கீழ் நோக்கியும் அமைந்து அருள்புரியும் அதி ஆனந்தக் காட்சி, அருகே லிங்கம். ஶ்ரீ சுயம்பிரகாச சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்த இடம். சுவாமிகளின் சிஷ்யகோடிகள் அவர் திரு உருவச் சிலையைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். குகையில் உள்ள தியான மண்டபத்தில் சற்று உட்கார்ந்து சுவாமிகளை தியானிக்கிறோம். சுவாமிகள் நேரிலேயே நமக்கெதிரில் ஜீவியாக அமர்ந்து கொண்டு நமக்கு அருள் பாலிப்பதைக் கண்ணால் காண்கிறோம். சுவாமிகளின் சிலையின் திருஉருவம் வெண்மையாக உள்ளது. பெளர்ணமிதோறும் விபூதி அபிஷேகம் நடைபெறுகிறது. அந்த விபூதியைப் பிரசாதமாகப் பெற்றுக் கொண்டவர்கள் பெற்ற பலனைக் கூறப் பக்கங்கள் போதா.
சுவாமிகளின் சந்நிதியை விட்டு, மீண்டும் முன் மண்டபம் வருகிறோம். மண்டபத்தில் மேல் புறம் யதுமகாராஜா, கார்த்தவீரியார்ஜூனன், மகாலக்ஷ்மி, விக்னேச்வரர் திருவுருவங்கள் சுதை வடிவில் காட்சி அளிக்கின்றன. குகைக்கோயிலை ஒட்டி இரு பக்கமும் மேலே போகப் படிக்கட்டுகள் உள்ளன. ஒரு பக்கமாக ஏறி மேல் தளத்தை அடைகிறோம். அங்கு ஶ்ரீ சுயம் பிரகாசர் பிரதிஷ்டை செய்த பகவான் தத்தாத்ரேயர் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக அமைந்துள்ள வேத மண்டபத்தில் நின்ற திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார். அருகிலேயே சென்று தரிசிக்கலாம். பக்திமணம் கமழும் பவித்ரமன சூழ்நிலை. நம்மையும் நமது சூழ்சிலையையும் மறக்கிறோம். நாமும் தத்தருடன் ஐக்கியமாகிவிட்ட உணர்ச்சியைப் பெறுகிறோம். தெய்வத் திருவுருவத்தை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அழகுப் பெட்டகம் ஒப்புவமை இல்லா உருவப் பொலிவு, பார்ப்பவர் பரவச நிலை அடையும் கருணை பொழியும் முகம். தரிசித்தாலே நம் துன்பமும் துயரும் விலகி, இன்பம் நம்மை அடையும். வேதத் தூண்களிலே ஶ்ரீ சுயம்பிரகாசரின் தோற்றங்கள் இடம் பெற்றுள்ளன. ஒரு தூணில் ஶ்ரீ துர்க்கை சிலை உள்ளது. மகா சக்தி வாய்ந்தது. வெள்ளி, செவ்வாய், ஞாயிறூ தரிசனம் விசேஷம். உட்பிராகாரத்தில் அத்ரி, அநசூயை, ஶ்ரீதத்தாத்ரேயர், சுயம்பிரகாசர், ராஜராஜேஸ்வரி பஞ்சலோகச் சிலைகள் மிகப் பொலிவுடனும் கலைச்சிறப்புடனும் விளங்குகின்றன. ஶ்ரீதத்தாத்ரேயரின் மூலத் திருவுருவம் மும்மூர்த்திகளின் அம்சங்களுடன் கூடிய மூன்று சிரங்கள், ஆறு கரங்கள் – அவைகளில் இரண்டில் விஷ்ணுவின் அம்சங்களான சங்கு, சக்கரமும்; இரண்டில் சிவபிரானின் அம்சங்களான கபாலம், திரிசூலம்; இரண்டில் பிரம்மனின் அம்சங்களான கமண்டலு, ஜபமாலையும் கூடி, இரு கால்களுடன் நின்ற திருக்கோலத்தில் திகம்பரநாதர் காட்சி கொடுக்கின்றனர். நம் ஆயுள் முடிவதற்குள் ஒரு தடவையாவது இங்கு வந்து பகவான் தத்தாத்ரேயரை வணங்கி, சுயம்பிரகாச சுவாமிகளின் விபூதிப் பிரசாதம் பெற்று இக, பர சுகத்தை அடையும் பாக்கியத்தைப் பெறலாமே.
ஐயா வணக்கம் நிஜானந்த அய்யாவுடைய சமாதி எங்கிருக்கிறது என்று கூறுங்கள் ஐயா
ReplyDelete