Wednesday, October 26, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
மஹாபிரதோஷம்
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு மஹாசந்நிதானம்
ஶ்ரீமத் ஜயேந்திர ஸரஸ்வதி சுவாமிகளின் அருள்வாக்கு

சிவஞான பூஜா மலர் துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      இன்றையதினம் மஹாபிரதோஷம். இந்த நாளில் விளக்கு வைத்த சந்தியா நேரத்திலே திரயோதசி திதி என்று இருக்குமோ அன்றைய தினம் மஹாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. இன்றைய தினமானது சனிபிரதோஷம். மிகவும் விசேஷமானது. சிவனுக்கு மிகவும் விசேஷமான நாள் ஆகும். பார்வதியும், பரமேச்வரனும் இரண்டற்ற வடிவமாக இருக்கிறார்கள். ஈசன் தான் எல்லாவற்றுக்கும் பொதுவாக இருக்கிறார். விருஷபவாகனத்தில் இருந்து காக்ஷி கொடுப்பது இன்றைய மஹாபிரதோஷத்தின் சிறப்பாகும். குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் ஒரு அனுகூலம் வரவேண்டும் என்பதற்காகத்தான் ஒரே வடிவத்தில் காக்ஷி அளிப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர் அர்த்தநாரீச்வரராகவும், உமா மஹேச்வரராகவும் காக்ஷி அளிக்கிறார்.
      சிவபுராணத்தில் இறைவனது லீலைகள் பற்றிச் சொல்லபடுகிறது. அவருக்கு காலஸம்ஹார மூர்த்தி, காமஸம்ஹார மூர்த்தி, பசுபதிநாதர் என்ற பலவிதமான பெயர்கள் உண்டு. காமனைக் கண்ணால் எரித்தவர். காலனைக் காலால் உதைத்தவர் என்று தமிழில் பாட்டு உண்டு. தாரகாசுரன் என்று ஒரு அசுரன். அவன் தேவர்களுக்கெல்லாம் உபத்திரவம் செய்து கொண்டு இருந்தான். அவன் சிவபார்வதியால் உண்டாக்கப்பட்ட சுப்பிரமணிய சுவாமிகள் மூலம் அழிக்கப்படுகிறான். காமனை தன் மூன்றாம் கண்ணாகிய தன் நெற்றிக் கண்ணின் மூலம் எரித்தார் என்று சொல்லப்படுகிறது. அந்தகண் இரண்டு கண்களுக்கு மத்தியில் நெற்றியில் இருக்கும் கண் ஆகும். நம் வாழ்க்கையிலே தியானம் பண்னப்பண்ன நம்மிடையே உள்ள காமங்கள் எல்லாம் அழிந்துவிடும். பசுபதிநாதர் என்ற பெயர் பரமேச்வரனுக்கு உண்டு நேபாளத்தில் பஞ்ச முகத்தோடு உள்ளார். ஶ்ரீகாளஹஸ்தியிலும் பஞ்சமுகத்தோடு உள்ளார். பழங்காலம் தொட்டு பஞ்சமுகத்தோடு ஸ்வாமி இருக்கக் கூடியது நேபாளம் தான். மற்றவைகள் எல்லாம் இப்போது தான் வந்தவை. இவருக்குப் பெயர் தான் பசுபதிநாதர். பசு என்றால் உயிர் இனங்கள் என்று பெயர். அப்படியுள்ள பசுக்கூட்டங்களுக்கு எல்லாம் நாதன். தலைவராக உள்ளார் என்று இதற்குப் பொருள். நம் வாழ்க்கையிலே சுகதுக்கங்கள் எல்லாம் நிறைய வருகிறது. இவைகளை எல்லாம் பரமேச்வரன் அழித்து, சமாளித்து நம்மைப் பாதுகாத்துக் கொண்டு வருகிறார். நாமும் பசுவைப் போல ஒரு உயிரினம் தான். பகவானை வழிபட்டால் எல்லாம் கிடைக்கும். லக்ஷ்மியினால் பொன்னும் பொருளும் குறைவில்லாது கிடைக்கும். சரஸ்வதியினால் அருள் நமக்கு நிறைய கிடைக்கும். பகவானை வழிபட்டால் ஜீவன்முக்தி கிடைக்கும் எனச் சொல்லப்படுகிறது. ஆதிசங்கரர் சொல்லும் போது இறைவனை வழிபடுவதன் மூலமாக நல்ல புத்திகிடைக்கும். நல்ல ஞாபகசக்தி கிடைக்கும். நல்லருள் கிடைக்கும் என்று சொல்லுகின்றார். இறைவனை வழிபடுவதன் மூலம் சிரஞ்சீவத்துவம் கிடைக்கும். இறைவன் தன்னை வழிபடுபவரை காம க்ரோதம் இல்லாதவனாக ஆக்குவான். ஞானத்தைக் கொடுப்பவன் இறைவன். அத்தகைய பரமேச்வரனுக்கு விசேஷமான நாள். நம்முடைய வாழ்க்கையிலே இன்பங்கள் ஏற்பட அந்தப் பரமேசுவரனை பக்தி பண்ணினால் தான் முடியும். எல்லா துன்பங்களையும் போக்கக்கூடியது மஹா பிரதோஷம். யார் ஒருவன் அந்த காலத்தில் இறைவனைக் கும்பிடுகிறானோ அவனுக்குத் தோஷமே வராது. அத்தகைய அருள் நம் எல்லோருக்கும் கிடைக்கும்.
      [பதிப்பாசிரியர் குறிப்பு: ஶ்ரீமத் ஜகத்குரு அவர்களின் வியாஸபூஜா சாதுர்மாச விரத சேலம் விஜய விசேஷமலரினின்றும் தொகுக்கப்பட்டது. 19-9-1977 சனிக்கிழமை மஹாபிரதோஷ தினத்தன்று வழங்கிய அருளுரை.]

சிவம்.

No comments:

Post a Comment