Monday, October 3, 2016

திருச்சிற்றம்பலம்
தகராலய ரகசியம்ஓர் அறிமுகம்
(சைவசமயக்காவலர், சைவசமய சண்டமாருதம்,
சைவ சித்தாந்தச் செம்மல், நக்கீரன் வழியடிமை,
பி. மா. சோமசுந்தரனார், இராணிப்பேட்டை)

சிவஞான பூஜா மலர் அக்ஷய, பிரபவ - விபவ ஆண்டு - (1986, 1987-1988)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

1.     முன்னுரை: -   
      தமிழில் மரபு என்று ஒன்று உள்ளது. இன்ன சொல்லை இன்ன இடத்தில் பெய்து உரைக்க என்பதுவே அது. பூனைக் கன்று, பசுவின் குட்டி என்னாது பூனைக்குட்டி, பசுவின் கன்று என்று கூறுக என்பது மரபு. உள்ளமும் செவியும் இனிக்கப் பேசுதல் இயம்புதல், ஒன்றையே மீட்டும் மீட்டும் கூறுதல் விளம்புதல், சோறுதின்றாயா என்பது பிழை. சோறு உண்டாயா என்பதுவே மரபு. இம்மரபு புலமைக்குறைவால் மறைந்து வருகின்றது.
      கடவுள் (கடவு+உள்) = உயிர்களின் உள்ளக்குகை தோறும் இருந்து இச்சை, ஞானம், கிரியை என்பவற்றை இயக்கிவரும் பெரிய பொருள். இச்சொல்லுக்கு வேறு பொருள் கூறுதல் சிறப்பிற்றன்று. இங்ஙனம் ஆய பெரிய பொருள் ஒன்றே. கடவுளர் பலர் என்றால் உயிர்கள் எத்துணை அல்லல்பட நேரும் என்று எண்ணிப் பார்மின். எனவே கடவுள் ஒன்றே. அக்கடவுள் சிவமே என்று தேர்மின், வேதாந்த சித்தாந்த சமரசமெய்ந்நிலை கண்ட தாயுமானவ அடிகளார்
                அல்லலாந் தொழிற்ப டைத்தே அடிக்கடி வுருவெ டுத்தே
       மல்லல்மா ஞாலம் காக்க வருபவர் கடவுள் என்னின்
       தொல்லையாம் பிறவி வேலை தொலைந்திடா திருணீங் காது
       நல்லது மாயை தானும் நானென் வந்து நிற்கும்.

எனலும் காண்க. தீயவரை ஒழித்து நல்லவரைக் காக்க அவதாரம் செய்வார் கடவுள் என்று சொன்னாலே மும்மலங்களும் சூழும். எனவே கடவுள் ஒருவனே; அவன் சிவனே என்று உணர்க.
      இங்ஙனமே பகவான் என்ற வடசொல்லும் சிவபிரானுக்கே உரியது. ஞானம், ஐசுவரியம், திரு, வீரியம், வைராக்கியம், புகழ் ஆகிய ஆறும் பகம் எனப்படும். இதனையுடையவன் பகவான். இஃது ஒருவனுக்கேயன்றிப் பலர்க்கு அமைவதன்று. இவ்வுண்மை ஓராது தேவர்க்கும், மக்கட்கும் இப்பெயரைச் சூட்டி மகிழ்தல் பேதைமையாம். இருக்குவேத அட்சமாலிகை உபநிடதம்பகவான் குஹ:” என்று பரசும் இக்குகன் யார் என்பதைச் சுவேதாச்வதர உபநிடதம் தம் கீழ்வருமாறு கூறித் தெளிவுபடுத்தும்.
                ஸர்வாநந சிரோக்ரீவஸ் ஸர்வபூத குஹாசய: |
       ஸர்வவ்யாபீ ஸபகவாந் தஸ்மாத் ஸர்வகதச்சிவ: ||

பொருள்: -  “எங்கும்முகம் உடையவனும் தலையுடையவனும் கழுத்தையுடையவனும், எல்லா உயிர்களின் உள்ளக்குகைகளில் இருக்கின்றவனும், யாண்டும் நிறைந்திருப்பவனுமாய் உள்ளான் அந்தப் பகவான். ஆகலின் சிவபிரானே யாண்டும் நிறைந்திருப்பவன்எனவாம். “அனைத்தையும் அழித்து ஒடுக்குபவன் ஆகலின் அரன் என்றும், யாண்டும் நீக்கமற நிறைந்திருப்பவன் ஆகலின் விட்டுணு என்றும், முற்றும் உணர்ந்தவன் ஆகலின் பகவான் என்றும், காப்பவன் ஆதலின் ஓம் என்றும் சிவபெருமானுக்குப் பெயர்கள் விளங்குவ ஆயினஎன்று கூர்மபுராணமும் கூறும். எனவே யாண்டும் நிறைந்திருப்பவனும் யாவும் அறிந்தவனும் பகவான் என்பது புலனாகும். இவ்விலக்கணம் சிவபிரானுக்கேயல்லாமல் ஏனையருக்குப் பொருந்துமாறின்று. எனவே பகவானும் குகனும் ஆவான் சிவபிரானே என்று அறிக.
      சிவபிரானே முருகன் ஆதலின் குகன் என்ற திருப்பெயர் முருகனுக்கு உரியதாயிற்று.
      ஆதலின் நமது சத்தி யறுமுகன் அவனும் யாமும்
      பேதகம் அன்றால் நம்போல் பிரிவிலன் யாண்டும் நின்றான்
      ஏதமில் குழவி போல்வான் யாவையும் உணர்ந்தான் சீரும்
      போதமும் அழிவில் வீடும் போற்றினர்க் கருள வல்லான்
என வரூஉம் கந்தபுராணத் திருவிருத்தத்துள் பகவான், குகன் என்பனவற்றின் இலக்கணங்களைச் சிவபிரானே முருகனிடத்து வைத்து ஓதுதல் கண்டு தெளிக.
      அற்றேலஃதங்ஙனமாக, பகவான் என்ற பெயர் திருமாலுக்கும் செல்லும். அப்பெயர் திருமாலுக்கே உரித்து என்று விட்டுணு புராணம் விதக்குமாலோவெனின் யாம் காட்டிய வேதமொழிகளை முரணப் புராணவுரைகளைக் கொள்வார் ஆடிக்காற்றை எதிர்க்க இலவம்பஞ்சைத் துணைகொள்வாரை ஒப்பார் என்று விடுக்க. அதனாலன்றோ கர்ப்ப உபநிடதம்
                யதியோந்யா: ப்ரமுச்யேயம் ப்ரபத்யே பரமேச்வரம் |
      பர்க்கம் பசுபதிம் ருத்ரம் மஹாதேவம் ஜகத்குரும் ||

என்று சாற்றுவதாயிற்று. தமிழ்: - “கருப்பையை விட்டு வெளி வருவேனாயின் பரமேசுவரனும், பர்க்கனும், பசுபதியும், உருத்திரனும், சகத்குருவும் ஆன மகாதேவனையே சரணமாக அடைவேன்எனவாம். இங்ஙனம் கருவில் தங்கியுள்ள எல்லாவுயிர்களுமே உணர்ச்சி பெறும். கருவை நீங்கிப் புவியில் விழுந்த பின்னர் அந்த உணர்ச்சி குலைந்துஎம் கடவுள், நும் கடவுள்என்று கலாமிழைப்பர்.
2.     அண்டமும் பிண்டமும்
      அண்டம் = உலகம். பிண்டம் = உடம்பு. பிண்டம் உயிருக்கு உடம்பு. அண்டம் இறைவனுக்கு உடம்பு. ஆகலின் அண்டம் போலப் பிண்டமும், பிண்டம் போல அண்டமும் உள. அண்டத்திலே தேவர்கள் சூரபதுமன், சிங்கமுகன், தாருகன் என்னும் அசுரரால் அலக்கண்பட்டனர். பிண்டத்திலே உயிர்கள் ஆணவம், கன்மம், மாயை என்னும் மலங்களால் அலக்கணுறுகின்றன. தேவர்கள் இறைவனை நோக்கித் தவம் செய்தனர். இறைவன் அசுரரை அழித்து அமரரை வாழ்வித்தார். உயிர்கள் இறைவனை நோக்கித்தவம் செய்யின் மும்மலங்கள் அழிவுறும். முத்தியாகிய பெருவாழ்வு கிட்டும். அண்டத்தில் பதினான்கு உலகங்கள் உள. அவை பிண்டத்திலும் உள. அவ்விவரம் ஆமாறு: -
      1)     அகப்பாதம்அதலம்
      2)     புறப்பாதம்விதலம்
      3)     பரடு - நிதலம்
      4)     கணைக்கால்சுதலம்
      5)     முழங்கால் - மகாதலம்
      6)     தொடைஇரசாதலம்
      7)     இடை - தலாதலம்
      8)     கொப்பூழ்பூலோகம்
9)     வயிறுபுவர்லோகம். இதில் பிசாசு, குய்யகர், நவகோள், உடுக்கள், கந்தருவர், விஞ்சையர், தேவதாசியர், ஏழுமுனிவரர், துருவன் முதலியோர் வாழும் பல உலகங்களும் அடங்கியுள்ளன.
10)    இருதயம்சுவர்லோகம் (இஃது இந்திரன் வாழ் உலகு)
11)    தோள்மகர்லோகம்
12)    கழுத்துஜனோ லோகம்
13)    புருவநடுதபோலோகம்
14)    தலைசத்திய லோகம்.
3.     உள்ளத் தாமரை
      உயிருக்கு உடம்பு பிண்டம். பிண்டத்தின் நாப்பண் இருதயம். இறைவனுக்கு உடம்பு அண்டம். அண்டத்தின் நாப்பண் சிதம்பரம். இடைநாடி இலங்கைக்கு நேரே போகும். பிங்கலை நாடி இமயமலைக்கு நேரேபோம். இவ்விரண்டுக்கும் நாப்பண் சுழுமுனை நாடிபோம். நடுநாடியான இது சிதம்பரத்துக்கு நேரே போய்க் கூடும். எனவே அண்டத்தின் நடுவில் சிதம்பரம் உளதாதல் பெறப்படும்.
      பிண்டத்தின் உள்ள இருதயமே உள்ளத்தாமரை (இருதய புண்டரீகம்) ஆகும். இத்தாமரையின் நடுவில் மிக நுண்ணிதான வெளி நிலவுகிறது. இவ்வெளியிடைச் சித்து எனப்படும் தேவியை நீங்காத இறைவன் எல்லையற்ற பெரு வெளியாகவெளிக்குள் வெளியாக விளங்குகின்றான். இந்த எல்லையற்ற பெருவெளியே பிரமம் அல்லது சிவம் எனப்படுகின்றது. பிரமம் ஆகிய இப்பெருவெளி இருப்பதால் பிண்டம் ஆகிய உடம்பு பிரமபுரம் எனவும், சிவபுரம் எனவும் கூறப்படுகின்றது. இருதய புண்டரீகம் இருப்பதால் புண்டரீகபுரம் என்றும் பிண்டம் கூறப்படும். இங்ஙனமே பிரமப் பெருவெளி இருப்பதால் பிரமபுரம், சிவபுரம் எனவும் இருதய புண்டரீகம் ஆனதால் புண்டரீகபுடம் எனவும் இருதயமும் உரைக்கப்படும் என்று அறிக.
      உள்ளத்தாமரையின் நுண்ணிய வெளிக்குள் நுண்ணிய வெளியாக இருப்பதால் சிவபிரானை வியோமவடிவன் என்று வேதம் கூறும். இத்தன்மையை
                அணோரணீயாந் மஹதோ மஹீயாநாத்மா
      குஹாயாந் நிஹிதோஸ்ய ஜந்தோ: |”

என்று தைத்திரீயாருணசாகை நாராயணம் விளக்கும்.
பொருள்: - “அணுவிலும் அணுவாய்ப் பெரிதிலும் பெரிதாயுள்ள (பரம) ஆன்மா இவ்வுயிரினது இருதய குகையில் உளதுஎனவாம். சிதாகாசம் ஞானவண்ணமாதலின் சிதம் என்றும் ஓங்கார வடிவமாகலின் பரம், பரம்தேசு எனவும் வழங்கப்படும். இஃது இல்லாத இடமேயில்லை. எல்லா அண்டங்களும் இதன் ஆதாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இது பொன்மயமான ஒளிப்பிழம்பாய்த் நிகழ்வதாகலின் பொன்னம்பலம் எனப்படும். பொன் கொண்டு வேய்ந்ததனால் பொன்னம்பலம் எனப்பெயர் பெற்றது என்னும் வரலாற்றறிஞர் கூற்று ஏற்புடைத்தன்று.
4.     திருச்சிற்றம்பலம்
      இந்த வெளி பெரிதும் நுண்ணியதாதல் கருதி இதனைத் தகராலயம் என்று வழங்குவர். தகரம்சிறுமை, ஆலயம்வீடு எனவே மிக நுட்பமான வீடு என்க. இதன் கண் குகேசன் ஆகிய சிவபெருமான் திருக்கூத்தாடுகின்றான். கூத்தாடும் இடம் அரங்கு, அம்பலம் எனப்படும். எனவே தகர அம்பலம். இதைத் தமிழ்ப் படுத்தினால் சிறுமை அம்பலம் அதாவது சிற்றம்பலம் என ஆகும். இதனோடு மேம்பாடு என்னும் பொருள் தரும்திருஎன்ற மொழியைச் சேர்த்தால் திருச்சிற்றம்பலம் எனவாம். பிண்டத்திலே (நம் உடம்பிலே) உள்ள அம்பலம் திருச்சிற்றம்பலம். அண்டத்திலே உள்ள அம்பலம் பேரம்பலம். இவ்வேறுபாடு கருதாது இரண்டையும் திருச்சிற்றம்பலம் என்று வழங்குதலும் உண்டு. வழங்கிடின் மாட்சிமௌயுடைய நுண்ணியதான அம்பலம் என்று பொருள் கொள்க. இத்திருச்சிற்றம்பலம் இல்லாத இடமே கிடையாது. மேலும் கீழும் யாண்டும் நீக்கமற நிறைந்துள்ளது. இதனை யுணர்த்தவே திருமுறை ஓதுங்காலை முதலிலும் முடிவிலும் திருச்சிற்றம்பலம் ஓதப்படுகின்றது.
      திருச்சிற்றம்பலம் அண்டத்தும் பிண்டத்தும் உளது. உள்ளத்தாமரைக்கண் ஞானப்பெருவெளியாய் ஒளிரும் இறைவனை ஞானிகளே வழிபடல் இயலும்.
                ஐயமிலா நின்னுலகு வேண்டி யிங்கே
            அருமலர்நீர் கொடுபூசை புரிவார் போலத்
      தெய்வமெலாம் ஏத்துகுக யானும் யாதோர்
            சிற்றுருவில் வழிபடற்குப் பலவி கார
      வையமிலா ஞானநவில் நூல்கள் ஓரென்
            மனமிசையா தருள்சுரந்து நீமுன் சொன்ன
      துய்யவிலா சச்சொலுமே இடம்கொ டாது
            துரியநிலை மேல்நின்றே சூழல் சாலும்.

என்று பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச அடிகளார் அருளிச் செயலை அறிக. இங்ஙனமே தாயுமானவ அடிகளார்

      “பண்ணேன் உனக்கான பூசையொரு வடிவிலே
            பாவித்திறைஞ்ச வாங்கே
      பார்க்கின்ற மலரூடு நீயே யிருத்தியப்
            பனிமலர் எடுக்கமனமும்
      நண்ணேன் அலாமலிரு கைதான் குவிக்கவெனின்
            நாணுமென் உளம்நிற்றிநீ
      நான்கும்பி டும்போ தரைக்கும்பி டாதலால்
            நான்பூசை செய்யல்முறையோ
      விண்ணேவிண் ஆதியாம் பூதமே நாதமே
            வேதமே வேதாந்தமே
      மேதக்க கேள்வியே கேள்வியாம் பூமிக்குள்
            வித்தேஅவ் வித்தின்முளையே
      கண்ணே கருத்தேஎன் எண்ணே எழுத்தே
            கதிக்கான மோனவடிவே
      கருதரிய சிற்சபையில் ஆனந்த நிர்த்தமிடு
            கருணா கரக்கடவுளே.

என்று கூறுதலும் உளத்தில் நன்கு பதிக்கற்பாலது.
      இந்நிலை யாவருக்கும் எளிதில் எய்துவதன்று. அங்ஙனம் எய்தாதார் இறைவனை ஓர் வடிவில் வைத்து வழிபாடு உஞற்றுவர். இன்னோர் உய்திகருதியே இறைவன் (அண்டத்திலே) உருவமும் அருவமும் ஆனதிருமேனி கொண்டு சிதம்பரத்திலே திருக்கூத்து இயற்றுகின்றான். இத்திருக்கூத்து ஐந்தொழில் கூத்தாகும். இஃது உயிர்களின் உய்தி பொருட்டு நிகழ்கின்றது. ஐந்தொழிலாவன; - படைப்பு, காப்பு, அழிப்பு, மறைப்பு, அருள். இராசதகுணம் உடையவன் பிரமன். வெளியே சத்துவகுணமும் உள்ளே தாமதகுணமும் உடையவன் திருமால். உலக ஒடுக்கத்தின் பொருட்டு வெளியே தாமதகுணமும் உள்ளே சத்துவகுணமும் பொருந்தியவன் உருத்திரன். இம்மூவரையும் திருமேனிகளாகக் கொண்டு முத்தொழில் நடாத்தி அவர்கட்கு மேம்பட்ட நான்காவது பொருளாக விளங்குபவனே சிவபிரான். இவன் சிற்றம்பலத்தில் தேவியின் விழியும் உளமும் களிக்க ஆடுகின்றான். கருவுற்றிருக்கும் தாய் உண்ணும் உணவின் காரம் அவள் வயிற்றில் இருக்கும் குழவியைச் சென்றடைவது போல எம்பெருமாட்டிகாணும் திருக்கூத்தின் பயன் அவன் குழந்தைகளாகிய எல்லாவுயிர்களையும் சென்றடைகிறது. இந்நடேசனை வணங்காத தலை முதலை; வாழ்த்தாத வாய் கால்வாய்; போற்றாத நூல் புல்நூல்; காணாத கண் புண் என்று அறிக.
      திருச்சிற்றம்பலத்தை மண், நீர், தீ, வளி, வெளி, மகத், அகங்காரம் என்னும் ஏழு திரைகள் மறைத்துக் கொண்டுள்ளன. இவற்றினுள்ளே ஒளி வண்ணமாய் நிலவுகிறது திருச்சிற்றம்பலம் இதைக் காண்டற்கு ஏழு திரைகளும் விலகல் வேண்டும். விலகவேண்டுமேல் உயிர்ஞானத்தைக் கூடுதல் வேண்டும். எல்லாவற்றையும் விழிகாணும். ஆனால் தன்னைக்காணாது. காணவேண்டுமேல் விழிகள் முன்பு ஒரு கண்ணாடி வேண்டும். அதுபோல ஆன்மா பரமான்மாவுக்கு உடம்பாயிருந்தும் தன்னையும் அறியாது; தன தலைவனையும் அறியாது. அறியவேண்டுமேல் ஞானம் என்னும் கண்ணாடி வேண்டும். இந்த ஞானம் திருவருளால் எய்தப் பெறுவது.
      ஞானம் விழைவோர் தீய கனவிலும் கருதலாகாது. ஞானம் குடு வழிபாடு. இலிங்க வழிபாடு. அடியார் வழிபாடு ஆகியவற்றால் கைகூடும். மக்களுக்கு இழைத்த பிழை மன்னனால் தீரும். மன்னவனுக்கு இழைத்த பிழை தேவரால் தீரும். தேவர் பால் செய்த குற்றம் இந்திரனாலும், இந்திரனுக்கு இழைத்த பிழை பிரமனாலும், பிரமனுக்கு செய்த குற்றம் விட்டுணுவாலும் விலகும். விட்டுணுவின்பால் செய்த குற்றம் சிவனால் தீரும். சிவன்பால் இழைத்த பிழை குருவால் சிதையும். குருவின் பால் செய்த குற்றம் யாராலும் குன்றாது. குருவே தான் தீர்க்க வேண்டும். இதனால் குருவின் பெருமையை அறிக.
      எல்லா வழிபாட்டிலும் மேம்பட்டது இலிங்க வழிபாடு. தகராலயத்தில் இவ்வழிபாடே செய்தற்கு உரியது.
      அடியார் வழிபாடு பெரிதும் சிறந்தது. அடியவர் வழிபாட்டால் முத்தியடைந்த சான்றோர் வரலாற்றைப் பெரிய புராணம் கூறுகின்றது. அடியார் வழிபாடு என்றால் அறுபான் மும்மை நாயன்மார் என்று சிலர் கருதுவர். அவர்க்கு வழிபாடாற்றி அறுசுவையுண்டியைக் கேளும் கிளையும் சூழ அமர்ந்துண்பர். இது தவறு. “பதியான ஞான முனிவன்எனவும்சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்டஎன்றபடி அவர்கள் சிவமாய் விட்டனர். இவ்வழிபாட்டை ஏற்றுக் கொள்ளார். எனவே இக்காலை உள்ள அடியவரை வழிபட்டு உணவூட்டலே மகேசுர பூசை ஆகும். அடியார் வழிபாட்டின் பெருமையை
                படமாடக் கோயிற் பகவற்கொன் றீயினன்
      தடமாடக் கோயில் நம்பர்க்கங் காகா
      நடமாடக் கோயில் நம்பர்க்கொன் றீயினன்
      படமாடக் கோயில் பகவற்க தாமே.

எனவரூஉம் திருமந்திரத் தூக்கானும் தெளிக.
5.     மனமே கூட்டுவிக்கும்
      தீயவை கடிந்து குரு, இலிங்க, அடியார் வழிபாடில் உறைப்பாக நின்று மண், பொன், பெண் ஆகிய மூன்று ஏடணைகளையும் நீங்கி நிற்பது புறத்துறவு ஆகும். “நான்என்னும் ஆணவமலமும்எனதுஎன்னும் மாயாமலமும், “தான் நல்லன்என்று பிரிக்கும் அறிவை விளக்கும் கன்ம மலமும் ஒடுங்குமாறு தியானம் ஆகிய அகத்துறவு கை வருமாறு செய்து கொண்டால் திருச்சிற்றம்பலம் ஆகிய அருள் மன்றத்தை அடையலாம்.
      அகத் துறவு என்பது கருவிகளைக் கடந்து நின்று தியானித்தல் ஆம். கருவிகளைக் கடந்து நிற்றல் என்பது தத்துவங்கள் கெடுதல் ஆம். தத்துவம் எனில் உண்மை என்று பொருளாகும். எனவே உண்மையாகிய தத்துவம் கேடுறல் யாங்ஙனம் என்று ஓர் ஐயம் நிகழல் கூடும். இறந்து போதற்கு உரிய தேவரை சாவு அற்றவர் என்று பொருள் படும் அமரர் என்கிறோம். அழிவுக்கு உரிய விட்டுணுவை அழியாதவன் என்று பொருள்படும் அச்சுதன் என்கிறோம். இவை ஒப்பக் காரியக் கேடுடைக் கருவிகட்கும் உண்மை எனும் பொருளுடைத் தத்துவம் என்னும் பெயர் ஏற்பட்டது என்று உணர்க.
      மனம் காற்று என அலையும் தன்மைந்து. மேற் கூறியவாறு தத்துவங்கள் ஒன்றன பின் ஒன்றாக அடங்கு தலையறிந்த மனமும் ஒடுங்குதல் வேண்டும். நடேசன் திருக கூத்தியற்றும் திருச்சிற்றம்பலத்திலே ஒரே நாட்டமுடன் நின்று தியானம் செய்தல் வேண்டும். செய்யின் மனம் தோன்றும் இடமும் அதே இருதயம் ஆகலின் அங்கிருந்து விரைந்தெழு மனத்தின் தோற்றம் எல்லாம் வெளிவராமல் ஓய்ந்துவிடும். ஓய்ந்துவிடின் அவ்விடத்தில் இருக்கின்ற போதாகாசம் (மனவிண்) காணப்படும். (போதாகாசத்தில் தான் மனம் தோன்றும்)
      இந்தப் போதாகாசமும் அடங்குதல் வேண்டும். உயிர் திருவருளில் நன்கு ஒடுங்கி நின்றால் தான் போதாகாசம் ஒடுங்கும். இவ்வாறு போதாகாசம் ஒடுக்கம் எய்தத் திருவருளில் ஒடுங்கி நின்ற ஆன்மா தன்னையும் காணும். தன்னைக் காட்டிய அருளையும் காணும். இப்பேறு கிட்டியபின், அதாவது ஆன்மா தன்னையும் அருளையும் கண்ட நிலைக்கு மேலே மன அசைவு சிறிதும் இல்லாத பரையோகம் பெருகும். பரை யோகம் என்பது அருளில் உறைந்து நிற்றலும், நீங்கி நிற்றலும் இல்லா நடுநிலையாகும் இந்தப் பரையோகத்தைக் கடந்து மேலே செல்லுகின்ற நிலையில் அருட்செல்வமான பரை போகம் கூடும். பரைபோகம் என்பது பரையோகத்தின் பயனாய் விளையும் நாத சுகானுபவம் ஆம். இங்ஙனம் சுகானுபவமாய் உள்ள அருட்பரையோகம் நீங்கும் நிலைக்கண் விளைவது சிவானந்தமேலீடு என்னும் பரிபூரணம் ஆகும். இஃதே சுகாதீதம் என வழங்கப்படுகின்றது. பட்டினத்தடிகளாரும்.
                மாயநட் போரையும் மாயா மலமெனும் மாதரையும்
      வீயவிட் டோட்டி வெளியே புறப்பட்டு மெய்யருளாம்
      தாயுடன் சென்றுபின் தாதையைக் கூடிப்பின் தாயைமறந்
      தேயும தேநிட்டை யென்றான் எழிற்கச்சி யேகம்பனே.

என்று இச்சுகாதீத நிலையை உணர்த்தியருளினார். இந்நிலையே வீடுபேறு என்று தெளிக.
      மூக்கு நுனி, கொப்பூழ், புருவநடு, கண்டம், உச்சி, விழி, மூலாதாரம் என்பவற்றில் ஒவ்வொன்றை ஒவ்வொரு நூல் உயர்த்திக் கூறி அதுவே வழிபாட்டுக்குரியது என உரைத்து நிற்கும். அத்தகு உரைகள் கோடற்பாலவல்ல. மனமடக்கப்பட வேண்டுவது முதன்மைத்தாகும். அந்த மனம் தோன்றுமிடம் இருதயம். எனவே மனம் அடங்க வேண்டும் இடமும் இருதயமே ஆகலானும் குகேசன் நடம்புரி இடமும் இருதயமே ஆகலானும் தகராலய வழிபாடே மேம்பட்டது என்று தெளிக. சில நூல்கள் புருவநடுவைச் சிதம்பரம் என்று சாதிக்கும். நடேசனை அங்குப் பாவிக்கும் பாவனையால் அவ்வாறு சொல்லப்பட்டது எனலாம். வேதம் இருதயபுண்டரீகத்தையே சிதம்பரம் என்று கூறுவது நினைக்க. வேதமொழிக்கு முரண்படுவன ஏதம்படும் என்க.
      எல்லா நூல்களிலும் சிறந்தது வேதம். அதனைப்பழித்தல் ஒவ்வாது. மெய்யறிவினராய மெய்கண்ட தேவர் அருளிச் செய்த சிவஞான போதத்தை உயர்த்துவான் விழைந்த ஒரு புலவர்
                வேதம் பசுவதன்பால் மெய்யா கமநால்வர்
      ஓதும் தமிழதனின் உள்ளுறுநெய்போதமிகு
      நெய்யி னுறுசுவையாம் நீள்வெண்ணெய் மெய்கண்டான்
      செய்ததமிழ் நூலின் திறம்.

என்று பாடியுள்ளார். இதில் வடமொழி வேதமும் தென் மொழி வேதமும் பழிக்கப்பட்டன. வேதத்தைப் பசுவாகக் கூறியவர் ஆகமத்தைப் பாலாகச் சொன்னமையின் வேதமாகிய பசு இனிக்கறவாது எனல் பெறப்படும். ஆயின் இன்னோர் ஆகமத்தையேயன்றி வெறும் சக்கையாய்ப் போன வேதத்தை நாடுதல் கூடாது. நால்வர் தமிழ், தமிழ் வேதமாக இருப்பவும் ஆகமமாகிய பாலில் இருந்து கடைந்தெடுக்கப்பட்ட வெண்ணெய் எனல் வெள்ளறிவின் விளைவாம். சாத்திரம் எத்துணைச் சிறந்ததே ஆயினும் அது கடவுளைக்காட்டாது. அது கடவுளை நாட்ட வந்ததே ஆகும். தோத்திரமே கடவுளைக் காட்டவும் கூட்டவும் வல்லது. அவ்வாறு காட்டவல்லதான நால்வர் தமிழைத் தாழ்த்திச் சிவஞான போதத்தை உயர்த்தி இப்பெரியார் பெற்ற பயன் யாதோ அறிகிலம். இப்பெரியார்
                பஹுசாஸ்த்ரகதாக்ந்தா ரோமந்தேநவ்ருதைவகிம் |
      அந்வேஷ்டவ்யம் ப்ரயத்நேந மாருதேஜ்யோதிராந்தாம் ||
என்று முக்திகோபநிடதம் கழறுவதை அறிந்திருப்பரேல் இங்ஙனம் பாடார் எனல் சாதமே. இதன் தமிழ்: - “மாருதீ! மிக்க சாத்திரக் கதையாகிய கந்தையைப் பெயர்த்தும் பெயர்த்தும் மெல்லுவதனால் (மீட்டும் மீட்டும் படிப்பதனால்) யாது பயன்? உள்ளேயுள்ள சோதியை முயற்சியால் தேடிக்கோடல் வேண்டும்எனவாம்.
      திருச்சிற்றம்பலத்தை அடைதற்கு நம்பால் உள்ள மனமே சாலும். என்னை? இம்மனம் எல்லாம் செய்யவல்லதாகலின். இந்த மனமே ஆசையுட்பட்டுத் துன்பத்தை விளைக்கும். இந்த மனமே அருள் வழிப்பட்டு இன்பத்தையும் ஈயும். இந்த மனமே பிறப்பிறப்புக்குக் காரணமாய் நிற்கும் உலகாயும் உலகல்லாததாயும் இருப்பதும் இதுவே. பயன் தருவதும் இதுவே. பயனைக்கெடுப்பதும் இதுவே. “கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே எடுப்பதூஉம் எல்லாம் மழைஎன்று திருவள்ளுவ நாயனார் வானத்துக்கு வகுத்த இலக்கணம் மனத்துக்கும் இயையும். மதி ஆவதும் மனமே. விதி ஆவதும் மனமே. மலத்தில் உழல்வதும் மனமே. மலத்தை நீங்குவதும் மனமே. சிறுமையைத் தருவதும் பெருமையைத் தருவதும் மனமே. துவிதமாயும் அதற்கு வேறான ஒரு தன்மையாயும் இருப்பது மனமே. ஶ்ரீமத் பாம்பன் அடிகளார்
                மனமே சனனமும் மனமே மரணமும் மனமே உலகும் லதுமாகும்
      மனமே அபலமும் மனமே சபலமும் மனமே மதியொடு விதியாகும்
      மனமே சமலமும் மனமே நிமலமும் மனமே வளியொடு வெளியாகும்
      மனமே சிறுமையும் மனமே பெருமையும் மனமே இருமையுமொருமையுமே.
-    (தகராலய ரகசியம்)

என்று அருளிச் செய்தலைக் கருத்தில் இருத்துக.
      மனம் இருவகைத்து. கண்கொண்டு உருவங்களை அறியும் உருவமனம் என்பது ஒன்று. இஃது அருவப்பொருளை அறியாது. அருள் கொண்டு அருவங்களை அறியும் அருவ மனம் என்பது மற்றொன்று. இது பரமனம் எனவும் படும். இஃது ஒன்றை வலிந்து பற்றும் இயப்பிற்று அன்று. ஒளி வண்ணமாக பெருவெளியில் கன் நிலைத்து நிற்றலே இதன் தன்மை ஆகும். எனவே இஃது உருவங்கருதுவது ஆகாது. இறைவனை ஓர் உருவிலே பாவித்து இடைவிடாது சிந்தித்து வரும் உருவமனமே அச்சிந்திப்பின் பயனாய் அருவ (பர) மனமாகிவிடும்.
      இருவினை நேரொப்பு நிகழும் காலை இறைவனே குருவின் திருமேனி கொண்டு எழுந்தருளி உயிர்களை ஆட்கொள்வான். எனவே உயிரின் அறியாமையைக் கெடுக்கும் மந்திரமூர்த்தியே குரு என்று உணர்க. தகராலயத்தில் எழுந்தருளியுள்ள நடேசனே குரு என்பது தேற்றமாம். எனவே குருவின் திருவடியையே எஞ்ஞான்றும் சிந்திக்கும் தெளிவு பெறுதல் வேண்டும். உண்முகச் சிந்தனையில் ஆசிரியரது வடிவத்தையே தகராகாசப் பரமாசாரியனது வடிவமாக நன்கு பாவித்துக் குருவினால் உணர்த்தப்பட்ட குகேசன் ஒருவனுக்கே உரிய மந்திரத்தை உள்ளத்துள் ஓதி மனம் அலையாவாறு நிலை பெறுத்தல் வேண்டும். உணர்வு புறமுகமான காலை அறியப்படும் பொருள்கள் யாவும் குருவின் திருவுருவமே என்று கருதுதல் வேண்டும். இதனால் பந்தமனோலயம் கைகூடும். கூடிய பின்னர் உண்முகச்சிந்தனையில் தோன்றும் சடரூப ஆகாசத்தைக் குருவின் அருவத்திருமேனி என்று பாவித்து நடேசனின் மந்திரம் ஓதுக. அதற்கு மேல் சிந்தைக்கு எட்டாத சிற்றம்பலப்பெருவெளி இதுவாம் என்று பாவித்து அவ்வெளியின் ஒடுங்கி நிற்க. நிற்பின் உயிர் அருள்வண்ணமாம் என்க.
      மூர்த்தி, தலம், தீர்த்தம் என்பவை ஞானத்துக்கு வழி காட்டும். என்னை? ஞானமின்றி வீடுபேறு இன்றாகலின். இதனால் ஞானாசிரியனைக் கூட்டும். ஆயின் உய்ரி இச்சைவயப் படுமேல் ஞானாசிரியனைக் கூட்டாது தேவருலகம் முதலிய இன்பவுலகங்களில் செலுத்தி மீட்டும் பிறப்பினுட் படுத்தும். எனவே தகராலய வழிபாட்டை விடுத்த வேறு எந்நெறியும் உய்தி பயவாது என்க.
6.     முடிப்புரை
      தகரவித்தை ஆசிரியன் மூலமாகத் தெளிய வேண்டிய ஒன்றாகும். இக்கட்டுரையில் அறிமுகமே செய்யப்பட்டுள்ளது. இதனை ஜயந்தீர அறிய விழைவோர் ஶ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளியுள்ல பரிபூரணானந்த போதம், தகராலய ரகசியம் என்ற நூல்களை முறையாகப் பாடங்கேட்டல் வேண்டும். இக்கட்டுரையைப் படிப்போர் அந்நூல்களைக் கற்க விழைவுறுவராயின் அஃதே யான்பெறும் பயன் ஆகும்.
திருச்சிற்றம்பலம்
     


1 comment:

  1. https://www.youtube.com/playlist?list=PLbb60V1ZcvreY5o7cBkB87OAVFEGp1RHW

    ReplyDelete