Sunday, October 23, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவஜயம்
ஸ்கந்தாச்ரம தரிசனம்
(ஆங்கிரஸ சர்மா)

சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      இந்த வருஷம் ஜூன் மாதம் முதல் வாரம் 3ம் தேதி உமையுடனே ஒன்றியுறும் சிவனது சோமவாரம். அது ஒரு நல்ல நாள். அந்த நாளிலே கிடைத்தது ஒரு அரிய தரிசனம். ஆம், பொன்னிறத் திருமேனி, அதன் மேல் காவியுடை, சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை புரையும் திருமுகம், கருணை பொழியும் திருக்கண்கள், விசாலமான நெற்றி, நெற்றியில் திருநீறு, நடுவிலே மூன்றாவது திருக்கண்ணோ என்று ஐயுறும் வண்ணம் குங்குமப் பொட்டு, சிரத்திலே தூக்கிக்கட்டிய சடைமுடிஇது என்ன காட்சி? ஸாக்ஷாத் சிவபிரானே இங்கு வீற்றிருக்கிறனணோ என்று பிரமிக்கத்தக்க திருக்கோலம் கொண்ட ஶ்ரீ ஸத்குரு சாந்தானந்த ஸ்வாமிகள் அவர்களைத் தரித்தேன். சென்னை அசோக் நகர்பகுதியில் உள்ள ஒய்வு பெற்ற இன்ஜினீயர் ஶ்ரீமான் கே. எஸ். கிருஷணய்யர் என்பவரது திருமாளிகையில் தான் இந்த அபூர்வ தரிசனம் எனக்குக் கிட்டியது. ஶ்ரீ சாந்தானந்தப் பேரொளியைக் கண்ட ஆனந்தம்கண்டேன் அவர் திருப்பாதம், கண்டறியாதன கண்டேன்என்ற அப்பரடிகளின் அருள் வாக்கின் அனுபத்தை உண்டாக்கியது. ஒரு சில ஆண்டுகளாகவே ஶ்ரீ ஸத்குரு ஸ்வாமிகளைப் பற்றி அறிவேனாயினும், அவர்களது ஆசி ஶ்ரீமுகமும் உருவப் படமும் எனது 1978-வது ஆண்டு புத்தகமலர் வெளியீட்டில் பிரசுரித்திருந்தேனாயினும், அவர்களை நேரில் தரிசித்து அருள் பெறும் நற்பேறு இன்று தான் இந்த நல்ல நாளிலே, நல்லவர் ஒருவர் இல்லத்திலே தான் கிடைத்தது. அந்த நல்லவர், ஶ்ரீமான் கே. எஸ். கிருஷ்ணய்யர் அவர்கள் ஶ்ரீமத் ஸத்குரு ஸ்வாமிகளவர்களிடம் அடியேனை அறிமுகப் படுத்தினார்கள். எனது சமயப் பணி, சைவப்பணி, செந்தமிழ்ப் பணி ஆகியவற்றை நிரந்து இனிது கூறினார்கள். எனது நல்லகாலம், நல்லவர் அறிமுகப்படுத்திய நன்னலம், ஶ்ரீமத் ஸத்குரு ஸ்வாமிகளவர்களின் பெருங்கருணைக்குப் பாத்திரனானேன்.
      ஸ்வாமிகளவர்களிடம்இறைவன் திருவருளால் அடியேனுக்குக் குடும்பக் குறைகல், கவலைகள் ஏதுமில்லை. ஆயினும் நான் எடுத்துள்ளமூவர் தமிழ்மாலைஎன்ற தெய்வத்தமிழ்ப்பணி என் ஆயுள் காலத்துக்குள்ளே நிறைவுற வேண்டுமே என்ற கவலைதான் என்னைப் பீடித்து வாட்டுகின்றதுஎன விண்ணப்பித்தேன். ஶ்ரீமத் ஸத்குரு அவர்கள் புன்னகை பூத்தார்கள். விபூதி குங்குமப்பிரசாதம் அளித்தார்கள். “கவலை வேண்டாம், எண்ணம் பூர்த்தியாகும்என்று திருவாய் மலர்ந்தருளினார்கள். குருபக்தியின் சின்னமான அந்த ஸத்குருநாதரை, அன்னை புவரேச்வரியாகவே பக்தர்களால் போற்றப்படும் அந்தத் தவச்சீலரை, அடியேன் கண்களுக்குச் சிவபரம்பொருளாகவே காட்சியளித்த அந்த மஹரிஷியைத் தரிசித்து மனநிறைவு பெற்றேன்.
      இந்த ஆண்டிலேயே ஜூன் மாதம் 16ம் தேதி, (ஆனி மாதம் கிருத்தகை நாள்) அடியேனது அறுபது வயது பூர்த்திக்காக அதன் பத்திரிகையைத் தபாலில் அனுப்பினேன். ஶ்ரீ ஸ்வாமிகளின் முதல் தரிசனத்திலேயே அவர்களது பெருங்கருணைக்குப் பாத்திரனாகி விட்டேன் என்பதையும் தெரிந்து கொண்டேன், புதுக்கோட்டை அதிஷ்டானம் ஆஸ்தான வித்துவான் புலவர் ஶ்ரீ . சிகாகிரீசன் அவர்கள் மூலம் வாழ்த்துப்பா, திருவருட்பிரசாதம் ஶ்ரீ புவனேச்வரீ, கவசப் பட்டாடை முதலியவைகளை ஸ்வாமிகள் அனுப்பியருளியதுஇத்தனையும் எம்பரமோ, எம்பெருமான் திருக்கருணை இருந்தவாறேஎன்ற ஆன்றோர் வாக்கினைச் சிந்திக்கச் செய்தது.
      ஜூலை மாதக் கடைசியில் 27, 28 தேதிகளில் ஸ்கந்தாசிரமம் வருமாறு ஸ்வாமிகளின் அருளழைப்பு வந்து. இங்கு நடைபெற்றுக் கொண்டிருந்த அடியேனது தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி காரணமாக அடியேன் உடனே செல்ல இயலாதவனாயினேன். ஆயினும் அவர்களது கருணை விடவில்லை. மீண்டும் ஆகஸ்டு மாதம் 2ம் தேதி வரும்படி அருள் பிறந்தது. 1ம் தேதியே புறப்பட்டுச் சென்றேன். அன்று சேரன் எக்ஸ்பிரஸ் மூலம் மாலை 6 மணிக்கு சேலம் சந்திப்பு சென்றடைந்தேன். இது வரையில் அடியவன் சேலம் சென்றது இல்லை. ஸ்கந்தாச்ரமம் செல்வது எப்படியென்றும் அறியேன். ஆனால் எனது சேலம் நண்பர் ஶ்ரீமான் வி. ஆர். ராகவன் அவர்கள் என் கடிதம் பார்த்து இரயில் நிலையத்துக்கு என்னை அழைத்துச் செல்ல வந்திருந்தார். “ஸ்கந்தாசிரமத்துக்கு நேரே செல்லும்பஸ்இனிக்கிடைக்காது. உடையாப்பட்டி என்னுமிடத்துக்குச் சென்றால் (சேலத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது) அங்கிருந்து சுமார்கிலோ மீட்டர் நடந்தே சென்றுவிடலாம்என்றார். அப்படியே சேலம்ஆத்தூர் செல்லும் பஸ்ஸில் ஏறி உடையாப்பட்டியில் இறங்கினோம். ஶ்ரீமான் ராகவன் பலமுறை ஆசிரமம் சென்று ஸ்வாமிகளைத் தரிசித்தவர். வழிநெடுக ஆசிரமம் பற்றிய செய்திகளையெல்லாம் கூறுக்கொண்டே வந்தார். நடந்து செல்லும் சிரமம் தெரியாது ஸ்வாமிகளின் திருவடிச் சிந்தனையுடன் வந்தோம். சிறிது தூரம் சென்றதும் ஆசிரமம் செல்லும்பஸ்ஸும் பின்னால் வரக்கண்டோம். இதுவும் ஸ்வாமிகளின் அருளே எனக் கொண்டு, அதில் சென்று இரவு சுமார் 8:30 மணிக்கு ஆசிரமம் சென்றடைந்தோம். ஒரு சிறு தடை ஏற்பட்டது. ஆரிரம வாயிற்கதவு பூட்டப்பட்டிருந்தது. எவ்வளவோ விரைந்து வந்தும் உரிய காலங்கடந்துவிட்டது. ஆசிரமத்துள் எப்படிச் செல்வது? வேலியின் பக்கமாகச் சென்றோம். தூரத்தில் ஒரு பணியாளர் நின்றுகொண்டிருந்தார். அவரை யழைத்து கதவைத் திறக்குமாறு கேட்டுக்கொண்டோம். கதவு திறக்கப்பட்டது. உள்ளே சென்றோம். சில இடையூறுகளை யாவது அனுபவித்தால் தான் ஆனந்தம் ஏற்படும் என்பது போன்ற உணர்வை இந்த ஸ்காந்தாசிரமப் பயணம் உணர்த்தியது.
      அந்த இரவு நேரத்தில் எங்களை முதலில் வரவேற்று ஸ்வாமிகளிடம் அழைத்துச் சென்றவர் ஆசிரமப் பூஜை கைங்கரியம் பிரம்மஶ்ரீ கணபதிராம சாஸ்திரிகளாவர். ஶ்ரீமத் ஸத்குரு ஸ்வாமிகளிடம் சென்று எட்டு உறுப்புகளும் நிலம் தோய (ஸாஷ்டாங்க நமஸ்காரங்கள்) விழுந்து வணங்கினோம். அன்று பார்த்த அதே கருணை விழிகள்வந்து விட்டீர்களா! நேரமாகி விட்டதால் ஒரு வேளை சேலத்திலேயே இரவு தங்கி காலையில் வரக்கூடுமென நினைத்தேன்என்று அருளிச் செய்து கொண்டே வரவேற்றார்கள். என் மெய்சிலிர்த்தது. இந்த எளியவன் வருகையை அந்தத் தவப்பெருமான் எதிர் பார்த்திருக்கிறார். நினைந்து இருக்கிறார். இதுவல்லவோ கருணை! இதுவல்லவோ ஸெளலப்யம்!! இப்படிப் பல சிந்தனைகள். அன்று காலை சுமார் 10 மணிக்குச் சாப்பிட்டது நல்ல பசி, ஸ்வாமிகளின் கருணையுள்ளம் இதனை உணராதிருக்குமா? அந்த நேரத்திலும் எனக்கும் உடன் வந்தவர்க்கும் உணவளிக்கப்பட்டது. உடன் வந்த அன்பர் ஶ்ரீமான் ராகவன் மறுநாள் காலையில் வருவதாகச் சொல்லி விடைபெற்றுக் கொண்டு சேலம் திரும்பினார். நானும் எனக்காக் விடப்பட்ட ஒரு விடுதியில் அன்று இரவு நன்றாகா தூங்கினேன்.
      மறுநாள் ஆகஸ்டு 2ம் தேதி, ஆடிப்பதினெட்டு. பதினெட்டாம் பெருக்கு என்று விமரிசையாகக் கொண்டாடப்படும் நல்ல நாள். ஆசிரமத்திலும் இது மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுவதாக அறிந்தேன். அதிகாலையிலேயே எழுந்து ஸ்நான, சந்தியா, ஜப அனுஷ்டனங்கள் யாவற்றையும் முடித்துக் கொண்டு ஶ்ரீமத் ஸத்குரு ஸ்வாமிகளின் தரிசனத்தை எதிர்பார்த்து இருந்தேன். வந்து அழைப்பு. 9 மணிக்கு மேல் அகண்ட நாம பஜனை ஆரம்பிக்கப்படும். அதற்கு முன் சிறிது நேரம் அம்பாளைப்பற்றியும் முருகன் பெருமை பற்றியும் பேசலாம் என்பது ஸ்வாமிகளைன் அருளானை எனத்தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன் நல்ல சூடானகாபியும் கிடைத்தது. அங்குப் பணிபுரிவோர்க்கும் வரும் விருந்தினர்க்கும் இரண்டு வேளை காபி, இரண்டு வேளை உணவு, காலைச் சிற்றுண்டி இவை அளிக்கப்படுவதாக அறிந்தேன்.
      ஶ்ரீமத் ஸத்குரு ஸ்வாமிகளவர்களின் திருமுன்பு சிறிது நேரம் அம்பிகை பற்றியும் கந்தன் கதையமுதம் பற்றியும் பேசினேன். மாலையிலும் சிறிது பேசலாம் என்றார்கள். பின்னர் நாமசங்கீர்த்தனம் ஆரம்பமாகியது. ஓம் சக்தி ஓம் சக்தி ஓம், ஓம் ஓம் முருகா ஓம் முருகா ஓம் ஓம் என்ற நாம கோஷம் வானையெட்டியது. பிரார்த்தனை மண்டபத்தை விட்டுச் சிறிது வெளியே வந்தேன். ஸ்வாமிகளவர்கள் தாம் வழக்கமாக அமர்ந்து தரிசனம் கொடுக்குமிடத்தில் ஒரு ஆசனத்தே அமர்ந்திருந்தார்கள். அவர்களது திருவடிப் பக்கத்திலே கீழே அடியேனும் உட்கார்ந்தேன். உட்கார்ந்து கொண்டே பார்க்கிறேன். ஆஆ! இது என்ன ஆச்சரியம்! இப்படித் திரண்டு வருவது வங்காள விரிகடலின் அலை வரிசைகளா? அல்லது இந்துமஹா சமுத்திரமா? இப்படிப் பெருக்கெடுத்து வருகிறதே! இல்லை, இல்லை, இது கடல் அலைகளின் பெருக்கம் அல்ல. ஆடிப்பதினெட்டில் ஶ்ரீமத் ஸ்வாமிகளைத் தரிசித்து அருள் பெற வந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டம் தான். இது ஜனமஹா சமுத்திரம் என்று அறிந்தேன். ஆசிரமம் மலை மீதுள்ளது. அடிவாரத்தில் உடையாப்பட்டு என்னும் ஊர், மற்றும் சுற்றுப்புறத்துக் கிராமங்கள். இவை அப்படியே திரண்டு வந்து போல் மக்கள் வெள்ளம். ஆண்களும், பெண்களும் குழந்தைக்ளும், பிரார்த்தனை மண்டபத்தில் சிலாரூபமான கடவுளர்களைத் தரிசித்துப் பின் நடமாடும் கடவுளாகத் தாம் மதித்துப் போற்றும் ஸத்குரு ஸ்வாமிகளையும் வணங்கிச் செல்லுகிறார்கள். அனைவரும் கீழே விழுந்து வணங்குகிறார்கள். ஸ்வாமிகளும் தம் கை அசைப்பால், கண்பார்வையால், மோகனப் புன்முறுவலால், வாய் மொழியால் தக்கபடி அருளை வாரி வாரி வழங்குகின்றார்கள். அன்று சுமார் எத்தனை பேர் வந்து தரிசித்திருக்கலாம்? ஐந்நூறா, இல்லை ஆயிரமா? இல்லவே இல்லை ஐயாயிரம் பேர் இருக்கலாம். அப்படியில்லை, இன்று வந்த கூட்டம் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டு இருக்கும் என்று இப்படி ஒருவர் மாற்றி ஒருவர் பேசும் அளவுக்குப் பெருங்கூட்டம். வந்த பிரமுகர்களிடம் ஸ்வாமிகள் சிறிதும் சோர்வின்றி, ஓய்வுமின்றி உரையாடுகின்றார்கள். வந்த மக்கள் பல திறப்பட்டவர்கள். கிராமத்து விவசாயிகள் முதல் பட்டணத்துப் பிரமுகர்கள் வரையில் வந்திருந்தார்கள். அனைவருக்கும் ஸ்கந்த குருநாதனின் ஸ்கந்தமாதாவின் பிரதிநிதியாக ஸ்வாமிகள் அருளை வழங்குகின்றார்கள். இத்தகைய ஜனத்திரளை அடியேன் இதற்கு முன் கண்டதில்லை. இவ்வளவு மா பெருங்கூட்டத்தில் ஒரு சிறு குழப்பமாவது இருந்திருக்குமா? அல்லது பட்டணத்துப் பேருந்துகளில் நடக்கும்பிக்-பாக்கெட்இப்படி ஏதாவது? ஊஹூம் பேசக்கூடாது. இத்தனைக்கும் ஏதாவது போலீஸ் பாதுகாப்பிருந்ததா? ஒன்றுமே இல்லையே. இது என்ன விந்தை? தேவசேனாபதியான ஸ்கந்த குருநாதனின் சொந்தப் பாதுகாப்பா?
      ஸ்வாமிகளவர்களின் திருவருளானைப்படி அன்று ஆசிரமத்தில் பெருமளவுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. ஆசிரமத்துக்கு வெளியிலும் ஆஸ்திகப்பிரமுகர்களால் பெரும் அன்னதானங்கள் செய்யப்பட்டன, அன்று காலை மாலை இரு வேலைகளிலும் ஸ்வாமிகளின் திருவடிப் பக்கத்திலேயே உட்கார்ந்து கொண்டு அனைத்தையும் பார்த்து வியப்புக் கடலில் மூழ்கியவாறு இருந்தேன். மாலை சுமார் 6 மணியவளில் ஓம் சக்தி, ஓம் முருகா என்ற அகண்டநாம பஜனை முடிவுற்றது. பின்னர் ஸ்வாமிகளவர்கள் கூடியிருந்த அன்பர்கள் மத்தியில் நாம சங்கீர்த்தன மஹிமை பற்றிய அருமையான கருத்துக்களை வழங்கியருளினார்கள். ஸ்வாமிகளது சொற்பெருக்கின் வன்மையை அன்று சிறிது நேரப் பேச்சிலேயே அறிந்து கொள்ள முடிந்தது. பின்னர் அருகிலே நின்று கொண்டிருந்த அடியவனையும் கூட்டத்தினருக்கு அறிமுகப்படுத்தி சிவமஹிமை பற்றிச் சிறிது நேரம் பேசுமாறு பணித்தருளினார்கள். அடியேனைச் செம்மை நெறியாய் சிவநெறியிற் செலுத்தி அப்பெருமானுக்கே மீளா ஆளாக்கிய பெருமைசிவானந்தலஹறீஎன்ற ஆதிசங்கரர் அருளிய நூலினையே சாருமாதலால் அந்நூலின் சில சுலோகங்களையும், ஒத்த கருத்துடைய சில தேவாரத் திருப்பாடல்களையும் கூறி சிறிது நேரம் பேசினேன். அவ்வாறு பேசியது சுமார் 45 நிமிடங்கள் என நண்பர் இராகவன் பிறகு கூறினார். ‘மொழிக்கு மொழி தித்திப்பாக மூவர் சொல்லும் தமிழ் கேட்கும் திருச்செவிகு மூடனேன் புலம்பல் முற்றுமோ தான்எனத் தாயுமானவ சுவாமிகள் திருவாய் மலர்ந்தருளியபடி எத்தனையோ பேருரைகளையெல்லாம் கேட்டிருக்கும் ஸ்வாமிகளுக்கு எனது சிற்றுரையும் இனித்திருக்குமோஇஃது யானறியேன்.
      இனி ஸ்கந்தாசிரம வரலாறு பற்றி நான் அறிந்து கொண்ட சிலவற்றை இங்குக் கூற விரும்புகிறேன். ஆசிரமம் பூஜைக் கைங்கரியம் பாதர்க்கும் பிரம்மஶ்ரீ கணபதிராம சாஸ்திரிகளைப் பற்றி முன்னரே குறிப்பிட்டேனல்லவா? இவரே அடியேனுக்கு அங்கு ஆசிரமத்தில் பிரதிஷ்டை செய்வித்துள்ள எல்லா தெய்வ மூர்த்தங்களையும் விளக்கிக் கூறியவர். மிக்க உற்சாகமும் சுறு சுறுப்புமுடைய இளைஞர். சொற்சாதுரியம் மிக்கவர். பிரஸானுப்பிராஸமாகப் பேசுவதில் வல்லவர். அங்கு வருபவர்களுக்கெல்லாம் இவரே மூர்த்திகளைத் தரிசனம் செய்து வைப்பதில் பெரும்பங்கு கொள்கின்றார். ஆசிரம வேத பாடசாலையிலேயே பிரமசாரியாய் வேதாத்தியயனஞ் செய்து கிரஹஸ்தராகி இங்கேயே பணிபுரிகின்றார். ஶ்ரீமத் ஸ்வாமிகளின் கருணாகடாக்ஷமே இவருக்கு இத்தகைய வாக்கு வன்மையை அளித்தது என்றால் மிகையாகாது. இவர் கூறியபடி ஆசிரம வரலாறுகளைத் தொகுத்துக் கீழே தருகிறேன். இது வரையில் ஸ்கந்தாசிரமத்தைத் தரிசனம் செய்யாதவர்களுக்கும் இவ்வரலாறு பயன்படும் அல்லவா?
      ஶ்ரீமத் ஸத்குரு சாந்தானந்த ஸ்வமிகள் தமது குருநாதராகிய சேந்தமங்கலம் சுவாமிகள் எனப் பிரசித்தி பெற்ற ஶ்ரீமத் ஸ்வய்ம்பிரகாச ப்ரம்மேந்த்ர ஸரஸ்வத்யவதூத ஸ்வாமிகளின் அருளாணையின் வண்ணம் புதுக்கோட்டை ஶ்ரீஸாதசிவ ப்ரம்மேந்த்ர ஸரஸ்வத்யவதூத ஸ்வாமிகள் என்ற ஜட்ஜ் ஸ்வாமிகளின் அதிஷ்டான கைங்கரியத்தை மேற்கொண்டு புதுக்கோட்டையில் தங்கியிருந்தார்கள். ஜட்ஜ் ஸ்வாமிகள் நமது ஶ்ரீ சாந்தானந்த ஸ்வாமிகளுக்குப் பரமகுருவும், சேந்தமங்கலம் ஸ்வாமிகளுக்கும் குருவும் ஆவார்கள். தமது குருநாதர் கட்டளையிட்டபடி பரமகுருநாதரின் அதிஷ்டானத்தை மஹோந்நத நிலைக்குக் கொணரும் பணியில் ஈடுபட்டிருந்த நம் ஸ்வாமிகளுக்கு 1965-ம் ஆண்டு ஒரு அதியசமான கனவு ஏற்பட்டது. “உனது குருநாதர் ஜில்லாவில் (சேந்தமங்கலம் சேலம் ஜில்லாவைச் சேர்ந்தது) நாலைந்து மலைகளுக்கு நடுவில் ஒரு ஓடையின் கரையில் ஒரு குன்றில் இருக்கிறேன், வாஎன்று ஸ்கந்த குருநாதனின் குரல் ஒலித்தது. மலைகளுக்கு நடுவில், ஓடையின் கரையில், ஒரு குன்று, ஓஹோ! குன்றுதோறாடும் குமரப்பெருமான் அச்சிறிய குன்றினையும் தனது இருப்பிடமாகக் கொண்டானோ? தனது அதிசயக் கனவினை அன்பர்கள் அறியக் கூறினார்கள். சேலம் ஜில்லாவில் அத்தகைய இடம் எங்கே உளது என்று தேடினார்கள், தேடவைத்தார்கள். அப்பொழுது சேலம் பகுதியில் ரெவின்யூ டிவிஷனல் ஆபிசராக இருந்த ஶ்ரீ ஜகந்நாதன் (தற்பொழுது ஓய்வு பெற்று விட்ட திரு, ஜகந்நாதன் அவர்களையும் நான் ஆசிரமத்தில் பார்த்தேன்) என்பவர் ஸ்வாமிகளிடம் மிகவும் பக்தி கொண்டவர். மிகவும் சிரத்தையுடன் தேடி தற்பொழுதைய உடையாப்பட்டி அருகே உள்ள மலைப் பிரதேசத்தைக் கண்டு பிடித்தார்கள். என்ன ஆச்சரியம்? ஸ்வாமிகள் கண்ட கனவு அப்படியே நனவாயிற்று. குன்றின் மீது அமர்ந்து ஸ்வாமிகள் தியானத்திலமர்ந்தார்கள். ஜோதி வடிவாகக் காட்சியளித்தான் குமரன். அந்த ஆண்டு கார்த்திகை தீபம் அண்ணாமலை தீபம்போல அந்தக் குன்றின் உச்சியில் ஏற்றினார்கள். தொடர்ந்து ஆண்டுதோறும் கார்த்திகைப் பெளர்ணமி நன்னாளில் ஸ்கந்தஜோதியை பல்லாயிரக்கணக்கான மக்கள் தரிசனம் செய்கிறார்கள்.
      அந்த மலைப்பிரதேசத்துக்கு ஸ்கந்தகிரி என்றும் அதன் நடுவில் ஸ்கந்தாச்ரமம் என்றும், ஆசிரமப் பணியாளர்கள் விடுதிகள் அமைக்கப்பட வேண்டிய இடம் ஸ்கந்தபுரி என்றும் பெயரிடப்பட்டது. இந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டது 1967 ஆண்டு செப்டம்பர் மாதத்தில் என்று கூறப்படுகிறது. ஒரே வாரத்தில் இந்த இடம் ஸ்வாமிகளுக்கு அரசினரால் உரிமை வழங்கப்பட்டது என்பதும் ஆச்சரியமாகவே இருக்கிறது. இதற்கு முன்பேயே 1966 இறுதியில் ஸ்கந்தாசிரமத்தில் தான் எப்படிக் கோலங்கொள்ள விரும்புகின்றான் என்பதை ஸ்வாமிகளுக்குக் கனவில் உணர்த்துகின்றான். “நாளை ஒரு விக்ரஹம் ஒரு பக்தனால் உன்னிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி குன்றின் மேல் என்னைப் பிரதிஷ்டை செய்திடுகஎன்ற குரல் ஒலித்தது. அதன்படி மறுநாள் புதுக்கோட்டை மாருதி கபே உரிமையாளர் ஒரு பஞ்சலோக ஞானதண்டாயுதபாணியின் விக்கிரஹத்தைச் சமர்ப்பித்தார். தனக்குக் கனவில் உத்தரவானதாகக் கூறினார். அதிசயங்கள் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகத்தில் மட்டும் அல்ல, இந்தக் கலியுகத்திலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.
      ஸ்கந்தாச்ரமக் கட்டிடங்கள் கட்டத் திட்டமிடப்பட்டன. ஞானஸ்கந்த மூர்த்திக்கு அந்த பஞ்சலோக விக்ரஹத்தை மாதிரியாகக் கொண்டு பெரிதொரு சிலையினை அமைக்கத் திட்டமிட்டார்கள் ஸ்வாமிகள். அந்த சமயம் புதுக்கோட்டை வந்திருந்த சரவணா பிலிம்ஸ் உரிமையாளர் திரு ஜி. எம். வேலுமணி அவர்கள் ஞானஸ்கந்தனின் சிலா விக்ரஹத்தை அமைக்கும் பொறுப்பினைத் தாமே ஏற்றுக் கொண்டார். 1968ம் ஆண்டு ஸ்வாமிகள் ஸ்கந்த குருநாதனின் சிலையுடனும், பஞ்சலோக விக்ரஹத்துடனும் ஸ்கந்தகிரிக்கு எழுந்தருளினார்கள். உடையாப்பட்டி மஹாஜனங்கள் நல்ல வழி வகுத்துக்கொடுத்து ஒரு சிறு குடிலும் அமைத்துக் கொடுத்தார்கள். முருகனைப் பிரதிஷ்டை செய்து ஒரு கிருஷ்ணயஜுர்வேத பாடசாலையையும் ஒரு சாம வேத பாடசாலையையும் நிறுவப்பட்டது. இது 1969ம் ஆண்டில் நிகழ்ந்தது. பிறகு ஞான பண்டிதனாகிய முருகனின் எதிரில் 18 திருக்கரங்களுடன் கூடிய அஷ்டாதசபுஜ மஹாலக்ஷ்மி துர்க்கா தேவியின் திருவுருப் பிரதிஷ்டை செய்யத் திருவருள் ஆணை பிறந்தது. அதன் சின்னமாகச் சில அடையாளங்களும் தோன்றின. பக்த மஹாஜனங்களின் ஒத்துழைப்புடன் அம்பாளது பஞ்சலோக விக்ரஹமும் தயார் செய்யப்பட்டு 1971ம் ஆண்டு ஸ்கந்த குருநாதன், ஸ்கந்த மாதா (அஷ்டாதசபுஜ மஹாலக்ஷ்மி துர்க்கைக்கு இங்குச் சுவாமிகள் சூட்டிய பெயர்) ஆகிய இரு சந்நிதகளுக்கும் கும்பாபிஷேகம் சிறப்பாக நடை பெற்றது. ஸ்கந்தகுருநாதன் 5½ அடி உயரமுள்ள சிலா விக்ரஹமாகவும், ஸ்கந்த மாதா 5½ அடி உயரமுள்ள பஞ்சலோக விக்ரஹமாகவும் அமைந்து தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அருளை வாரி வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த இரண்டு சந்நிதிகளும் எதிர் எதிராக அமைந்துள்ள பிரார்த்தனை மண்டபம் மிக அழகாகவும் விசாலமாகவும் காண்போர் கண்ணையும் கருத்தையும் கவரும் பல தெய்வ மூர்த்தங்களின் சிலைகளுடன் விளங்குகிறது. மாதாவின் விக்ரஹம் அமைக்க இரோடு டாக்டர் நல்லுசாமி என்பவர் மிகவும் உதவி செய்ததாகக் கூறப்பட்டது. அம்பாள் விக்ரஹத்தின் மேல் உள்ள திருவாசியில் நவதுர்க்கைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். தேவீமாஹாத்மிய கவசத்தில் கூறப்பட்டபடி இந்த நவ துர்க்கைகளின் பெயர்கள் வருமாறு.
                ப்ரதமம் சைலபுத்ரீச த்விதீயம் ப்ரஹ்மசாரிணீ |
       த்ருதீயம் சந்த்ரகண்டேதி க்ஷுஷ்மாண்டேதி சதுர்த்தகம் ||
       பஞ்சமம் ஸ்கந்தமாதேதி ஷஷ்டம் காத்யாயனீதிச |
       ஸப்தமம் காலராத்ரீதி மஹாகெளரீதி சாஷ்டமம் ||
       நவமம் ஸித்திதா ப்ரோக்தா நவதுர்கா: ப்ரகீர்த்திகா: |
       உக்தான்யே தானி நாமானி ப்ரஹ்மணைவ மஹாத்மனா ||

      பொருள்: - (முதலாவது சைலபுத்ரீ, இரண்டாவது பிரமம்சாரிணி, மூன்றாவது சந்திரகண்டா, நான்காவது கூஷ்மாண்டா, ஐந்தாவது ஸ்கந்தமாதா, ஆறாவது காத்தியாயனி, ஏழாவது காலராத்ரி, எட்டாவது மஹா கெளரீ, ஒன்பதாவது சித்திப்ரதா என்று இவ்வாறு துர்க்கையின் ஒன்பது வடிவங்கள் எடுத்துரைக்கப்பட்டன. இந்த நாமங்கள் பெருமை மிக்க வேதபுருஷனாலேயே கூறப்பட்டவை)
      

No comments:

Post a Comment