உ
சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
கருணை பொழியும் கடம்பந்துறையார்
(ஶ்ரீ யாக்ஞவல்க்யதாசன்)
சிவஞான பூஜா மலர் அக்ஷய, பிரபவ - விபவ ஆண்டு - (1986, 1987-1988)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
சுவாமிமலையில் சுவாமிநாதன் பிரணவப் பொருளை விளக்க, பரவேச்வரன் சிஷ்யபாவத்தில் பவ்யமாய்க்கேட்கிறார்.
பிரணவஸ்வரூபியான பரமேச்வரன் இவ்வாறு செய்து குழந்தையைத் திருப்திப்படுத்துவதற்காக
என்று வெளித் தோற்றம் விளக்கினாலும், அதன் உள்ளே ஒரு தத்துவம்
உள்ளது. வேதத்தின் மூலம் பிரணவம். வேதத்தைப்
பாராயணம் செய்பவரும், விளக்குபவரும் வயது, இனம், மொழிக்கு அப்பாற்பட்டு வேத புருஷராக அத்தருணத்தில்
மாறுகின்றனர். வேதபுருஷருக்கு அளிக்க வேண்டிய மரியாதையின் நிமித்தம்
சிவன் இக்காட்சி தருகிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் ஒரு நாள்
சிவன் முருகனை அழைத்து, “குழந்தாய், அன்று
பிரணவத்தின் பொருள் உரைத்தாயே, அதை யாரிடம் நீ கற்றாய்?”
என்று கேட்கிறார். முருகன் பூர்வத்திலே சிவன் உமைக்கு
பிரணவப் பொருள் உரைக்கும் பொழுது மறைந்து கேட்ட குற்றத்தை உணர்கிறார். உடனே மோனியாகி விடுகிறார். இம்மோனம் நீங்கி ஞானம் பெற்று,
அம்மை அப்பனின் பிரியத்தைப் பெற்று அவர்கள் இடையே சோமாஸ்கந்தராக அமைதியுடன்
அமருகிறார் இத்தலத்தில். இதன் காரணமாக இத்தலம் கந்தபுரி என்றும்,
ஞானோதயபுரி என்றும் பெயர் பெறுகிறது.
சோமகன் என்ற அரக்கன் நான்கு மறைகளையும் களவாடி பாதாளம் சென்று மறைகிறான்.
உலகோர் பிரார்த்தனைக் கிணங்கி நாராயணன் இத்தலத்தை அடைத்து இறைவனைப் பூசித்து
அவனருளால் மச்சாவதாரம் எடுத்து, அரக்கனை வதைத்து, நான்மறைகளை மீட்டு, இத்தலத்து இறைவனடியில் சமர்ப்பித்து,
மீண்டும் உலகோர்க்கு அளிக்கிறார். இது காரணமாக
இத்தலம் சப்தபுரி என்றும் சதுர்வேதபுரி என்றும் பெயர் பெறுகிறது.
தேவசர்மா என்ற பாபி, தன் துன்பம் தாங்கமுடியாமல்,
இன்பம் பெறும்பொருட்டு, பல தலங்களைத் தரிசித்து
இத்தலத்தை அடைந்து, இங்கு இறைவன் இறைவியைப் பூசித்து வந்த அகத்திய
முனிவருக்கு பசுவைத் தானம் செய்கிறான். அப்பசுவின் பஞ்சகவ்யத்தால்
இருவரும் இறைவனையும், இறைவியையும் அபிஷேகித்து, ஆராதனை செய்து இறைவனை நேரில் காண்கின்றனர். தேவசர்மா
வேதசர்மாவாகிறான். அவன் பிரார்த்தனைக்கிணங்க இறைவனும்,
இறைவியும் மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கல்யாணக் காட்சியை அளிக்கின்றனர்.
இத்தலம் வடமதுரை என்ற பெயரைப் பெறுகிறது.
சப்தமாதர்களால் துரத்தப்பட்ட தூம்ரலோசனன் என்ற அரக்கன் காத்யாயன மகரிஷி ஆச்ரமமடைந்து
மறைந்து கொள்கிறான். அங்கு தவம் செய்து கொண்டிருக்கும் காத்யாவன
ரிஷியை அரக்கன் என்று நினைத்து, அவரை சப்தமாதர்கள் அழித்து விடுகின்றனர்.
இத்தவறினால் அவர்களை பிரும்மஹத்தி தோஷம் பீடிக்கிறது. இத்தோஷம் நீங்க, இத்தலத்தை அடைந்து, தினமும் காவிரியில் நீராடி, இறைவன், இறைவி பரிவார தேவதைகளை வணங்கி வழிபட்டு, பலன் பெறுகின்றனர்.
அன்று முதல் இன்றும் இறைவன் சன்னதியில் அவருக்குப்பின் நின்றுகொண்டு
சதாகாலமும் அவரை வழிபடுவதைக் காணலாம் இது காரணமாக இத்தலம் சத்தியபுரியாகிறது.
பிரமன் தன் படைப்புத் தொழிலில் அலுப்புக்கொள்கிறான். அரனிடம் தனக்கு இனிப் பிறவா வரம் வேண்டுகிறான். அரனோ
தான் பூவுலகில் அகண்ட காவிரிக் கரையில் ஒரு புறம் சத்துவடிவமான மலையாகவும்,
ஒரு புறம் சித்துவடிவான மலையாகவும், இடையில் காவிரியில்
தென்கரையில் ஆனந்த வடிவமாக அருளாட்சி செய்யும் இடத்தில் தன்னை அடைந்து, காவிரி நீர்கொண்டு அபிஷேக ஆராதனை செய்ய ஆக்ஞாபிக்க, பிரமனும்
இத்தலத்தை அடைந்து பூசனை புரிந்து, அரனுக்கும், அம்மைக்கும், பரிவார தெய்வங்களுக்கும் ஆலயம் எழுப்பி,
அக்னி மூலையில் அக்னி தீர்த்தம் உண்டாக்கி, நித்திய
பூசனைகளைச் செய்து இறைவனுடன் இரண்டறக் கலக்கிறான். அதனால் இத்தலம்
பிரம்புரி என்ற பெயர் பெறுகிறது.
சுக்ல யஜுர்வேத காண்ய சாகையை உலகுக்களித்த காண்வமகரிஷிக்கு கடம்பமரத்தடியில்
ஈசன் காட்சி தந்த தலம்.
கற்றைச் செஞ்சடையான், கனகப் புன்சடையான், ஆரியந்தமிழோடிசையானவன், கூரிய குணத்தார் குறிநின்றவன்,
காரிகையுடையான், பண்ணின் மொழி கேட்கும் பரமன்,
மறை கொண்ட மனத்தான், கறை கொண்டான், நங்கை பாகம் வைத்த நறுஞ்சோதி, கரிய கண்டத்தான்,
உமையொரு பாகம், காமற் காய்ந்த பிரான், நாரணன் பிரமன் அறியாததோர் காரணன், காலாலூன்றூகந்தான்
என்றெல்லாம் தேன் மதுரத் தேவாரத்திலே திருநாவுக்கரசர் அர்ச்சித்த தலம்.
பட்டியல் நீளுகிறதே. எங்கள் பொறுமையைச் சோதிக்காதீர்கள்
என்று நீங்கள் ஆதங்கப் படுவது தெரிகிறது. இவைமட்டுமல்ல,
இன்ன பல புராண வரலாறுகளை உடைத்த க்ஷேத்திரம் தான் திருக்கடம்பந்துறை.
சுந்தரர், பட்டினத்தார், ஐயடிகள் காடவர் கோனாயனார், அருணகிரிநாதர் முதலானோர் பாடல்களால்
பரமனைப் பாடிய தலம், வாருங்கள் அங்குசெல்லலாம்.
கங்கையினிற் சிறந்த காவிரி தமிழ்நாட்டில் இங்கு அகண்ட காவிரியாக பரிணமிக்கிறாள்.
தண்ணீர் கரை புரண்டு ஓடுகிறது. பொன்னி நிறை சூலியாய்
பூரணப் பொலிவுடன் பூரித்து விளங்குகிறாள். பொன்னியின் குளிர்ந்த
அலைகள் கரையை மோதி நீர்த்திவிலைகளை காற்றில் மிதக்க விட்டு மேலும் குளிர்ச்சியை உண்டாக்குகின்றன.
அதனால் இந்த இடத்திற்கு குளிர்தண்அலை என்றும், குழித்த சோலைகளை உடையதால் குழித்தண்டலை என்றும், கடம்ப
மரங்கள் நிறைந்து இடமாக இருந்ததால் கடம்பந்துறை, கடம்பை,
கடம்பவனம், கடம்பர்கோயில் என்றும், தமிழ்நாட்டில் காவிரிக் கரையில் வடக்கு பார்த்த சன்னதி கொண்ட ஒரே தலமான படியால்
தக்ஷிணகாசி என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. திருச்சி
– ஈரோடு ரயில் மார்க்கத்தில் குளித்தலை ரயில் நிலைத்திலிருந்து சுமார்
ஒரு மைல் வடக்கேயும், திருச்சி – கரூர்
நெடுஞ்சாலையில் திருச்சியிலிருந்து மேற்கே இருபத்தி இரண்டு மைல் தொலைவிலும்,
வசிக்கச் சிறந்த வைகநல்லூர் கிராமத்தின் வடஎல்லையாகவும் அமைந்துள்ளது
திருக்கடம்பந்துறை என்ற இந்த திவ்ய க்ஷேத்திரம். கடலனைய கருணையைப்
பொழிந்து கொண்டு அருளாட்சி செய்கிறார் கடம்பந்துறையார். தேவாரப்
பாடல்கள் பெற்ற தலங்களில் காவிரியின் தென்கரைத் தலங்களில் இது இரண்டாவது தலம்.
காவிரிக் கரையினிலே கோயில் கொண்டுள்ளதால் கடம்பந்துறை என்றழைக்கப்படும் இக்கோயில்
மிகப் புராதனமானது. பிரமன் நிர்மாணித்தது என்பது புராணவரலாறு.
கோயிலின் ஆயுளை நிர்ணயிக்க ஆதாரம் இல்லை. பொலி
விழந்திருந்த இக்கோவிலுக்கு 1921ம் ஆண்டு நகரத்தார் வகுப்பைச்
சேர்ந்த தேவகோட்டை வெங்கடாசலம் செட்டியார் சில திருப்பணிகளைச் செய்து, 1944ம் ஆண்டு காஞ்சி மாமுனிவரின் அருளாசியால் குடமுழுக்கு விழா நடந்துள்ளது.
இவ்வாலயம் 1950ல் அறநிலைய பாதுகாப்புத் துறையின்
நேரடி நிர்வாக்த்திற்கு வந்துள்ளது. ராஜகோபுரம் இல்லாத இவ்வாலயத்திற்கு,
அறநிலைய ஆட்சித் துறையினரின் ஆதரவாலும், பொதுமக்கள்
ஆதரவாலும், ஐந்துவாயில் கொண்ட அழகிய ராஜகோபுரம் அமைக்கப்பட்டு,
எல்லா விமானங்களும் பழுது பார்க்கப்பட்டு, பல புதிய
திருப்பணிகளைச் செய்து 21-8-1966ல் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தரத் தம்பிரான்
சுவாமிகள் முன்னிலையில் அஷ்ட பந்தன மகாகும்பாபிஷேகம் நிறைவேறி இன்று பூரணப் பொலிவுடன்
ஆலயம் விளங்குகிறது.
ஆலயத்தின் முன் ஓடும் பெருவள வாய்காலில் கைகால் கழுவி ஆலயத்துள் நுழைகிறோம்.
சாதாரணமாக இக்கோயிலில் இறைவனைத் தரிசித்தபின் இறைவியைத் தரிசிக்க வேண்டும்
என்பது விதி. ஆனால் நம்மை முதலில் வரவேற்பவர் காவல் தெய்வமாகிய
பரமநாதர். எங்குமே காணாத அதிசயக் கோலத்தில் நம்மை வரவேற்கிறார்.
தன்னுடைய வலது கையால் ஒரு ராணுவ சல்யூட் (சலாம்)
செய்தவண்ணம் உள்ளார். அவரை அடுத்து அனனை முற்றிலா
முலையம்மை வடமொழியில் பாலகுசாம்பாள் என்றும் திருவேணி என்ற திருநாமத்துடன் கிழக்கு
நோக்கி தனிச் சன்னதி கொண்டுள்ளாள். அன்னையை வணங்காமல் தாண்டிச்
செல்வது முறையல்ல என்று கருதி நாம் முதலில் அன்னையை வணங்குவோம். நான்கு கரங்களுடன், நின்ற திருக்கோலத்தில், பற்றிடுவார் வினையொழிக்கும் பரங்கருணை திருநோக்குடன் கருணையே உருவாக உள்ள சுந்தரத்
திருமுகத்துடன் அருள் பாலிக்கிறாள். அன்னையைப் பார்த்தாலே போதும்.
பல்வினை நீங்கி, சீரும் சிறப்பும் கிட்டும்.
அன்னையின் சன்னதியைக் கடந்து தெற்கே சென்றால் அய்யனின் சன்னதியை அடையலாம்.
கடம்பவனநாதர், சுந்தரேசர், செளந்தரேசர்,
பிரமேசர் என்ற திருநாமங்களுடன் சுயம்புத் திருமேனியாக விளங்குகிறார்.
ஆவுடையார் சதுர அமைப்பாக உள்ளது. எப்பொழுதும் கருணையைப்
பொழிந்த வண்ணம் காட்சி தருகிறார். தேவர்களுக்கு மட்டுமல்ல,
மாந்தர்க்கும் கருணையை கணக்கில்லாமல் வழங்குகிறார். கடம்பமரம் தல விருக்ஷம். ஈசனருகிலேயே இருந்தது என்று
கூறப்படுகிறது. தற்சமயம் அங்கு இல்லை. எல்லோரும்
இன்புற்றிருக்க அருள் புரியஒ பிரார்த்தித்துக் கொண்டு, இறைவனின்
உட்பிராகாரத்தை வலம் வருவோம். முதலில் நடராஜர் சன்னதி,
இரண்டு மூர்த்தங்கள் – ஒன்று முயலகனுடனும்,
சிவகாமி, மாணிக்கவாசகருடன் கூடியது. மற்றொன்று முயலகன் இல்லாமல் சிவகாமியுடன் கூடியது. ஆனி
உத்தரத்தில் முயலகன் இல்லா மூர்த்தம் உலாவரும். மார்கழி திருவாதிரையில்
முயலகனுடன் கூடிய மூர்த்தம் உலாவரும். சுற்றுப் பிராகாரத்தில்
தனி சனீச்வரர், நவக்கிரகங்கள், சூரியன்,
சண்டீசர், பிரமன், கொற்றவை,
அறுபத்திமூவர், தக்ஷிணாமூர்த்தி, வள்ளி தேவசேனா உடனுறை ஆறுமுகர் இரண்டு சன்னதிகள், லிங்கோத்பவர்
கோயில் கொண்டுள்ளனர். பல வருடங்களுக்கு முன் ஒரு ஆறுமுகர் பின்னம்
அடைந்ததாகவும், அதற்காக புதிய சிலையை உருவாக்கி அதைப் பிரதிஷ்டை
செய்யும் முன் தர்மகர்த்தர் கனவில் முருகன் தோன்றி “உன் குழந்தைக்கு
அங்க ஊனம் நேர்ந்தால் என் செய்வாய்?” என்று கேட்டதாகவும் அதனால்
பின்னமுற்ற ஆறுமுகத்துக்கே அர்ச்சனை, அபிஷேக ஆராதனைகள் நடப்பதாகவும்,
புதிய சிலையை பக்கத்திலேயே பிரதிஷ்டை செய்ததாகவும் அர்ச்சகர் கூறுகிறார்.
ஆறுமுகர் சன்னதிகு எதிரே அருணகிரிநாதர் கைகூப்பித் தொழுத வண்ணம் காட்சி
தருகிறார். அண்மையில் (1960) பிரதிஷ்டை
செய்யப்பெற்றது.
தெற்குப் பிராகாரத்தில் கொற்றவை என்ற திருநாமத்துடன் விளங்கும் ஜுரேச்வரரை
வெளிப் பிராகாரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் 48 நாள் நீராடி
பூசித்தால், சித்தப்பிரமை நீங்குகிறது என்றும், மூன்றே நாளில் பூச்சிக் கடிகள் நிவர்த்தியாகிறது என்றும் அனுபவஸ்தர்கள் கூறுகிறார்கள்.
மேற்குப் பிராகாரத்தில் உற்சவ மூர்த்தங்களை மிகவும் பாதுகாப்பாகப் பாதுகாத்து
வருகிறார்கள். காரணம் ஒரு சமயம் அம்மன் மூர்த்தம் கள்வரால் களவாடப்பட்டு,
மீட்கப்பட்டது. பிடாரி அம்மன், மாரி அம்மன், பிக்ஷாடனர், சண்டிகேச்வரர்,
பிரதோஷமூர்த்தி, ஷஷ்டி சுப்பிரமணியர், அருணகிரிநாதர், விநாயகர், வள்ளி
தேவசேனா உடனுறை சுப்பிரமணியர், சோமாஸ்கந்த மூர்த்தி இரண்டு,
சந்திரசேகரர், அம்பாள், சுக்ரவார
அம்மன் முதலிய உற்சவ மூர்த்தங்கள் ஒய்யாராமாகக் காட்சி அளிக்கின்றன. இவைகளில் பிக்ஷாடனரும், பெரிய சோமாஸ்கந்த மூர்த்தமும்
நாள் முழுவதும் பார்த்துக் கொண்டிருக்கலாம். அவ்வளவு அழகு.
இவர்களை தரிசனம் செய்து கொண்டு வெளிப்பிராகாரத்துக்கு வருகிறோம்.
பைரவர் சன்னதி, நந்தவனம், அக்னி
தீர்த்தம் என்கிற பிரம்மதீர்த்தம் முதலானவற்றை தரிசித்துக் கொண்டு இறைவனின் வெளிச்
சன்னதிக்கு வருகிறோம். கடம்பவனம் என்ற பெயருக்கேற்ப வெளிப் பிராகாரத்தில்
மீண்டும் ஒரு கடம்பவனத்தை உருவாக்கிவரும் ஆலய நிர்வாகிகளுக்கு ஒரு பாராட்டையும் கூறலாமே.
ஆலயத்தில் அன்றாடம் ஐந்து கால பூஜைகள். இறைவன்,
இறைவி, பரிவார தேவதைகளுக்கு அபிஷேக, அலங்கார, ஆராதனைகளுக்கும், திருவிழாக்களுக்கும்
குறைவில்லை. தைப் பூசத்திருவிழாவும், மாசி
பிரம்மோற்சவப்பெருவிழாவும் முக்கியமானவை. தைப்பூசத்தன்று கடம்பந்துறை
முற்றிலா முலையம்மை உடனுறை கடம்பவனேச்வரர், ரத்னகிரி கரும்பார்
குழலி உடனுறை ரத்னகிரீச்வரர், ராஜேந்திரம் தேவ நாயகி உடனுறை மத்தியார்ச்சுனேச்வரர்,
பேட்டைவாய்த்தலை தேவநாயகி உடனுறை மத்தியார்ச்சுனேச்வரர். கருப்பத்தூர் சுகந்தகுந்தளாம்பாள் உடனுறை சிம்மபுரீச்வரர், திருஈங்கோய் மலை மரகதாம்பாள் உடனுறை மரகதாலேசுவரர், முசிறி
கற்பூரவல்லி உடனுறை சந்திரமெளலீச்வரர், வெள்ளூர் சிவகாமியம்மை
உடனுறை திருக்காமீச்வரர் ஆகிய எட்டு ஊர் இறைவன் இறைவிகள் காவிரிக்கரையில் முகாமிட்டு,
தீர்த்தவாரி கொடுத்து, அன்று இரவு அவரவர்களுக்கு
ஏற்பாடு செய்துள்ள அலங்காரப் பந்தலில் கொலுவீற்று ஆயிரக்கணக்கானவர்களுக்கு காட்சி கொடுத்து
அடுத்த நாள் அவரவர்கள் ஆலயம் செல்லும் காட்சியை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
இந்த இரு நாட்களிலும் காவிரிக்கரையில் ஒரு புதிய நகரம் உருவானது போன்ற
விளங்கும். பூம்புகாரில் நடைபெற்ற இந்திரவிழா இப்படித்தான் இருந்திருக்கும்
என்று ஊகிக்கலாம். அவ்வளவு காட்சிகள், ஆடல்
பாடல் நிகழ்ச்சிகள் அனைவரையும் மகிழ்விக்க நடைபெறுகின்றன. மாசியில்
இறைவனும், இறைவியும் தனித்தனி தேரில் ஆரோகணித்து ஆலயத்தின் தேரோடும்
வீதியில் உலா வருவதைக் காண்க கண் கோடி வேண்டும்.
இவ்வாலயத்தில் கோயில் கொண்டுள்ல சோமஸ்கந்தரை தரிசித்தால் ஞானமும் முக்தியும்
எளிதிற் பெறலாம்; கார்த்திகை மார்கழியில் இவர் சன்னதியில் தீபமேற்றி
வைத்தால் கயிலையை அடைந்த பலனைப் பெறலாம்; சித்திரை திருவோணம்,
ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, ஆவணி, புரட்டாசி, மாசி சதுர்த்தசியில்
இத்தலத்து நடராஜ மூர்த்திக்கு ஆவின்பால் அபிஷேகம் செய்து, பால
அன்னம் நிவேதனம் செய்தால் குபேர சம்பத்தும் பெறலாம்; சித்திரை
வைகாசி பூரணையிலும், விஷுபுண்ய காலங்களிலும், சூரிய சந்திர கிரகண காலங்களிலும், பருவகால ஆரம்பங்களிலும்
அகண்ட காவிரியிலும் அக்னி தீர்த்தத்திலும் நீராடி அம்மையையும் அப்பனையும் வணங்கினால்
அளவிட முடியாத பலனைப்பெறலாம்; இத்தல அம்மை அப்பனை நினைத்தாலே
போதும் என்று தலபுராணம் கூறுகிறது.
காலையில் கடம்பரையும், உச்சியில் சொக்களையும்
(ரத்னகிரீச்வரர்), மாலையில் திருஈங்கோய் மரகதாசலேச்வரரையும்
ஒரே நாளில் தரிசனம் செய்தால் சிறந்த பலன் கிட்டும் என்று தலபுராணமும்; இவர்களுடன் அர்த்த சாமத்தில் கருப்பத்தூர் சிம்மபுரீச்வரரையும் தரிசனம் செய்தால்
அளவற்ற பலன் கிட்டும் என்று காவேரி ரஹஸ்ய புராணமும் கூறுகின்றன. இத்தனை தலங்களையும் ஒரே நாளில் அக்காலத்தில் தரிசிப்பது சற்று சிரமம்.
ஆகவே அதற்கு ஒரு மாற்றையும் புராணம் கூறுகிறது. திருச்சிக்கு அருகே உள்ள முத்தரசநல்லூரில் ஒரு காலத்தில் முத்தரசனுக்கு இம்மூவரும்
சேர்ந்து தரிசனம் கொடுத்தனர் என்றும், ஆகையால் முத்தரசநல்லூரில்
உள்ள ரத்னகிரீச்வரர், விசுவேசுவரர், சுந்தரேச்வரர்
மூவரையும் தரிசித்தாலே போதும் என்று கூறுகிறது. தற்சமயம் போக்குவரத்து
வசதி மிகச்சிறந்த முறையில் இருப்பதால் இந்நான்கு தலங்களையும் தரிசிப்பது மிகவும் எளிதாக
உள்ளது.
கடம்பந்துறைக்கு வடக்கே மணப்பாறை செல்லும் பஸ் மார்க்கத்தில் ஐந்து மைல் தொலைவில்
உள்ளது ரத்னகிரி. ரத்னகிரி, சிவாயமலை,
அய்யர்மலை, வாட்போக்கி மாணிக்க நாதர்மலை என்ற பெயர்களுடன்
கூடிய சுமார் 952 படிகளுடன் கூடிய மலையில் கோயில் கொண்டுள்ள கரும்பார்
குழலி உடனுறை சொக்கரை மதியம் தரிசிப்பது விசேஷம். மலை எறுவது
சற்று சிரமம்.
காவிரிக்கு அக்கரையில் உள்ள மரகதமலை என்கிற திருஈங்கோய் மலையில் மரகதாம்பாள்
உடனுறை மரகதாசலேச்வரரை அகத்தியமுனி ஈயின் வடிவம் கொண்டு பூசித்த இடம் என்றும்,
பஞ்சப்பிரம்மாசனத்தில் ஶ்ரீலலிதாம்பாள் ஶ்ரீசக்ரராஜ பரிபூரண மகாமேரு
பீடமாக மூலஸ்தானத்தில் வீற்றிருக்கிறாள் என்றும், 51 அக்ஷர சக்தி
பீடங்களுள் ஶ்ரீலலிதாம்பிகையின் அக்ஷரம் தோன்றிய சாயபுர சக்திபீடம் என்றும் புராணம்
கூறுகிறது. காவிரியைக் கடக்க நல்ல பாலமும் உண்டு, பஸ் வசதியும் உண்டு. மாலை தரிசனம் விசேஷம்.
கடம்பந்துறைக்கு மேற்கே பஸ்மார்க்கத்தில் இரண்டு மைல் தொலைவில் கருப்பத்தூர்
உள்ளது. மகாவிஷ்ணு இரண்யகசிபுவை வதம் செய்த தோஷம் நீங்கப்பெற்ற
தலம் என்றும், அவர் பாலயோக வடிவில் நரசிம்ம உருவமாக்த் திகழும்
தலம் என்றும், நரசிம்மமூர்த்தியை விக்னேச்வரர் வரவேற்று சிவதத்துவத்தை
வலஞ்சுழியனாக இருந்து உபதேசித்த இடம் என்றும், சுகந்த குந்தளாம்பாள்
உடனுறை பச்சாதாபேசுரர் என்ற சிம்மபுரீச்வரரை இந்திராணி அர்ச்சித்ததாகவும், இந்திராணி அர்ச்சித்த புஷ்பங்கள் மஞ்சள் குவியலாக மாறுதல் அடைந்ததாகவும் தலபுராணம்
கூறுகிறது. யாத்ரீகர்கள் இங்கு மஞ்சள் பிரசாதம் பெறுவதை முக்கியமாகக்
கருதுகின்றனர். அர்த்தசாம தரிசனம் விசேஷம்.
மீண்டும் கடம்பனை வணங்குகிறோம். பரமனின் சன்னதியில் பக்தை
ஒருவன் இத்தலத்து இறைவன் இறைவியைத் துதித்து சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துஸ்வாமி
தீட்சிதர் கேதாரகெளனையில் பாடிய “நீலகண்டம்” என்று தொடங்கும் பாடலின் பாலகுசாம்பா சஹிதம் பாலசந்திர சேவிதம், சீலகுருகுஹ பூஜிதம் ஶ்ரீ கதம்பவத நாதம்” என்ற அனுபல்லவியை
நிரவல் செய்து பாடிமுடிக்கிறாள். பஞ்சமும், பசியும் நாட்டில் விலகி, அன்பும் அறமும் தழைத்து அனைவருக்கும்
ஆனந்தம் அளிக்க இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டு விடைபெறுவோமாக.
செங்கல்பட்டு ஜில்லா காஞ்சி தாலுகாவில் கடம்பர் கோயில் என்று ஒரு தலம் உள்ளது
என்றும் அங்குறையும் இறைவனின் திருநாமம் கடம்பநாத சுவாமி என்றும் தெரிய வருகிறது.
கடம்பந்துறைக்கு வந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொண்டு, ஆலயத்திற்கு எதிரே ஆற்றங்கரையோரத்தில் அழகும், அமைதியும்
நிறைந்து அரவக்குறிச்சி ஶ்ரீலஶ்ரீ திருப்பதி சுவாமிகள் துயில் கொள்ளும் சமாதிக் கோயிலையும்
தரிசித்து மேலும் புண்ணியத்தைக் கூட்டிக்கொள்வோமே. ஓம் நம:
சிவாய நம:
சிவம்.
வினைதீரத் தொழுமினே!
திருச்சிற்றம்பலம்
மறைகொண் டம்மனத் தானைம னத்துளே
நிறைகொண் டந்நெஞ்சி னுள்ளுற வைம்மினோ
கறைகண் டன்னுறை யுங்கடம் பந்துறை
சிறைகொண் டவ்வினை தீரத் தொழுமினே.
- அப்பர் தேவாரம் (5-ம் திருமுறை)
திருச்சிற்றம்பலம்.
No comments:
Post a Comment