உ
சிவமயம்
ஶ்ரீ மஹாதேவஜயம்
சிவ வழிபாடு
Dr. N. கங்காதரன் M.A., M.
Litt., Ph.D.,
(ஸம்ஸ்க்ருதத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்)
சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
வழிபாட்டில் பல முறைகள், எங்கும் பரவியுள்ள கடவுளை
ஒரு உருவில் கண்டு வழிபாடு செய்தல் எல்லோருக்கும் மிகவும் எளிதானது. அதிலும் அவரவர்க்கு
உகந்தபடி பல்வேறு வடிவங்கள். சிவனாரை பிக்ஷாடன மூர்த்தி, திரிபுராந்தகர், கல்யாணசுந்தரர்,
நடராஜர், தட்சிணாமூர்த்தி போன்ற பல வடிவங்களிலும், உமையுடனும், விநாயகர், முருகன் முதலானோருடன்
கூடியவராயும் வழிபடுகின்றோம். மேலும் சிவனாரின் மிகவும் உன்னத தத்துவத்தை விளங்கச்
செய்யும் லிங்க வடிவிலும் வழிபடுகின்றோம். சிவனார் லிங்க வடிவில் தோன்றிய புராணக் கதையும்
லிங்க வடிவின் தத்துவமும் முந்தைய சங்கர ஜயந்தி மலர்களில் விவரிக்கப்பட்டுள்ளன.
லிங்க வழிபாட்டிற்கும் மேம்பட்ட தத்துவத்தை விளக்கும்
ஸம்ஸ்க்ருத ச்லோகம் ஒன்றை இப்பொழுது இங்கு ஆராய்வோம். கடவுள் என்னும் சொல் நம் உள்ளே
உறைந்துள்ள பரம்பொருளைக் குறிக்கிறது. இவ்வுணர்வு நமக்கு ஏற்பட்டால் ஸாரூப்யம், ஸாமீப்யம்,
ஸாலோக்யம் என்னும் நிலைகளைக் கடந்து ஸாயுஜ்யம் என்னும் நிலையைக் காணலாம். முதலில் நம்
ஆன்மா வேறு நம் உடல் வேறு என்ற பாவம் நிலைபெற வேண்டும். பின்னர் நாம் செய்யும் செயல்கள்
யாவும் சிவ வழிபாட்டில் ஒன்றானவை என்று கொள்ள வேண்டும். நம் உள்ளேயே இறைவன் குடிகொண்டுள்ளான்
என்ற கருத்து நிலை பெற்றால் நம் செய்கைகள் யாவும் தூய்மையானதாக இருக்கும், நம் சொற்களனைத்தும்
மேம்பட்டவையாக இருக்கும்.
ஆத்மா த்வம் கிரிஜாமதி: ஸஹசரா:
ப்ராணா: சரீரம்க்ருஹம்
பூஜா தே விஷயோபபோகரஸநா நித்ரா ஸமாதிஸ்திதி: |
ஸஞ்சார: பதயோ: ப்ரதக்ஷிணவிதி: ஸ்தோத்ராணிஸர்வாகிர:
யத்யத் கர்மசுரோமி த த்ததகிலம் சம்போ தவாராதனம் ||
ஹே சம்புவே! நீ தான் என் ஆன்மா. மலைமகள் என்
அறிவு. பிராணன்கள் பணியாட்கள். இந்த என் உடலே உன் வீடு. உலகிலுள்ள பொருட்களை நுகர்வதே
உனது வழிபாடு. உறக்கமே ஸமாதி நிலை. கால்களால் நடந்து செல்வதே உன்னை வலம் வரும் வழிவகை.
நான் கூறும் சொற்களனைத்லும் உன் புகழ் மாலை. எந்த ஒரு செயல் செய்யினும் அது அனைத்தும்
உன் வழிபாட்டு முறையாகும்.
தன் செயல்களனைத்தையும் பரமனுக்கு அர்ப்பணம் செய்யும் உயிர் வாழ்ந்து கொண்டே
முக்தி நிலையைப் பெறுகிறான் என்னும் சிவானந்தலஹரி (81) ச்லோகமும் இங்கு கவனிக்கத்தக்கது.
கடவுள் நம்முன் இருக்கிறார் என்ற எண்ணம் மனதில் நிலைத்து நின்றால் தீய எண்ணங்கள் மனதில்
புகா, தீய செயல்கள் செய்ய மனம் எண்ணாது. நம் உடல் புனிதமானது என்ற கருத்து மேலோங்கும்.
இக்கருத்தை மனதில் கொண்டு பரமனுடன் ஒன்றிய நிலையை அடைய முயல்வோமாக.
சிவம்.
No comments:
Post a Comment