Wednesday, October 26, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவஜயம்
சிவ நாம ஜபம்
‘சிவபாத சேகரன்’

சிவஞான பூஜா மலர் துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      மகாமகோபாத்தியாய டாக்டர் உ.வே. சாமிநாடஹியர் அவர்களின் தாயாரின் தகப்பனார் ஶ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் ஆவார். அவர் தஞ்சை மாவட்டத்தில் காவிரியின் வடகிழக்கே 1½ மைலில் உள்ள ‘சூரியமூலை’ என்ற ஊரில் வசித்து வந்தார். அதனை சூரியமலை என்றும் வழங்குகிறார்கள். ‘சூரிய கோடி’ என்று வடமொழியில் கூறுவர். அந்த ஊரில் உள்ள சிவாலயத்தில் ஸ்வாமிக்கு ‘சூரிய கோடீசுவரர்’ என்று பெயர். ஊரின் அருகே பழவாறு ஓடுகிறது. ஶ்ரீ கிருஷ்ண சாஸ்திரிகள் பழவாற்று ஸ்நானத்தை மிகவும் விசேஷமாக கருதிவந்தார். அவர் ருக்வேதத்தில் மிகவும் தேர்ச்சி பெற்றவர். வாழ்நாள் முழுவதையுமே சிவபூஜை, ஜபம், வேதபாராயணம் ஆகியவற்றுக்காகச் செலவிட்டு வேறு எதிலும் ஈடுபடாமல் வாழ்ந்தார். (இது போன்ற பெரியோர்களை இக்காலத்தில் காண்பது அருமையிலும் அருமை). தனது பதினான்காவது வயதிலேயே தந்தை மூலம் பார்த்திப பூஜையும் ஸ்படிக லிங்கபூஜையும் பெற்றுக்கொண்டார். ஸ்படிகலிங்க மூர்த்திக்கு சிதம்பரேசர் என்று பெயர். தினந்தோறும் லட்சம் சிவநாமஜபம் செய்வார். ஆருணம் சொல்லி 124 சூரிய நமஸ்காரம் செய்து ஸஹஸ்ரநாமம் பாராயணம் செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். விடியற்காலை முதல் இரவு வரையிலும் அனேகமாக வைதீக மார்க்கத்திலேயே நேரத்தைக் கழித்தார். வீட்டில் பல புஷ்பச் செடிகளையும், பஞ்ச பில்வங்களையும் வளர்த்ததால் அவற்றைப் பறித்து சிவபூஜை செய்வார். பசும் பாலும் வில்வமும் இல்லாமல் சிவபூஜை செய்யமாட்டார். இதற்காக பசுமாடுகளையும் வளர்த்து வந்தார். மஹாகைலாஸ அஷ்டோத்தரம் சொல்லி அப்புஷ்பங்களால் சிவபூஜை செய்து வந்தார். அவருடைய வாயிலிருந்து மென்மையான தொனியில் சிவநாமம் வந்து கொண்டே இருக்கும். அதில் ஈடுபட்ட டாக்டர் ஐயரவர்கள் தனது பாட்டனாரைப் பற்றி எழுதியதைக்கீழே தருகிறோம்.
      “வண்டின் ரீங்காரத்தைப்போல உள்ள அந்த சிவநாமத்தில் நான் இளமையிலே ஈடுபட்டேன். என்னை அறியாமல் நானும் சிவநாம ஜபம் என் ஆறாம் பிராய முதலே செய்யத் தொடங்கினேன். இன்றளவும் “நின்றூம் இருந்தும் கிடந்தும்” அந்த ஜபத்தைச் செய்து கொண்டு வருகிறேன். பிறகு நான் முறையாகப் பல மந்திர ஜபங்களை உபதேசம் செய்து கொண்டேன். எல்லாவற்றிற்கும் முன் எனக்கு முதல் உபதேசமாக என் நெஞ்சில் தானே ஊன்றியது சிவநாமம் தான். அதை ஊன்றவைத்த முதல் குரு என் மாதாமஹராகிய கிருஷ்ண சாஸ்திரிகளேயாவர்.”
      ஒரு நாள் ஐயரவர்கள் சிவநாம ஜபம் செய்து கொண்டு இருந்ததைக் கண்டு வியப்புற்ற ஶ்ரீ கிருஷ்ண சாஸ்திரிக்ள் அவருக்கு மார்க்கண்டேயர் வரலாற்றைக் கூறி, ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்ரத்தையும் உபதேசம் செய்து விட்டு “அப்பா, இந்த மந்திரங்கலைத் தினந்தோறும் சூரிய அஸ்தமனத்துக்குப் பின்பு ஒவ்வொறு ஸ்லோகமாகச் சொல்லி ஈசுவரத் தியானம் செய்து நமஸ்காரம் செய்வாயானால் நல்ல செளக்கியம் ஏற்படும். ஆயுள் விருத்தியும் உண்டாகும்” என்றார். அதன்படி ஐயரவர்களும் செய்து வந்தார்.
      ஐயரவர்களது தந்தையாரும் சிவபக்தியில் சிறந்தவர். இதனை ஐயரவர்களே குறிப்பிடுவதை நினைவு கூர்ந்து இக்கட்டுரையை முடிபோமாக:
      “எப்போதும் சிவபக்தி பண்ணிக்கொண்டிரு” என்பது என் தந்தையார் எனக்குக் கடைசியில் கூறிய உபதேசம். அந்த உபதேசத்தை நான் கடைப்பிடிப்பதனால் தான் இந்த அளவில் தமிழ்த்தொண்டு புரியவும் அன்பர்களுடைய ஆதரவைப் பெறவும் முடிந்ததென்று உறுதியாக நம்பியிருக்கிறேன்.”
                குலிசம் குஸுமதி தஹனஸ்துஹிநதி வாராம் நிதி: ஸ்தலதி |
       சத்ருர்மித்ரதி விஷமப்யம்ரு ததி சிவேதி ப்ரலபதோ பக்த்யா ||

என்று ஒரு ச்லோகம் உண்டு. “சிவசிவ என்று சொன்னால் இந்திரனின் வஜ்ராயுதம் கூட புஷ்பமாகி விடுகிறது. நெருப்பும் பனிக்கட்டியாக மாறி விடுகிறது. சமுத்திரமும் நிலமாக ஆகி விடுகிறது. விரோதியும் சினேகிதனாகிறான். கொடும் விஷம் கூட அமுதமாக ஆகிறது” என்பது இந்த ச்லோகத்தின் அர்த்தம். சிவ சிவ என்றால் தீவினைகள் ஒழிந்து தேவர்களாவதோடு சிவ பதவியும் கிடைத்து விடுகிறது என்பார் திருமூலர். ஆகவே அனைவரும் சிவநாமத்தை ஜபம் செய்து கொண்டு சிவபக்தி செய்வோமானால் எல்லா நன்மைகளும் பெற்று வாழ்ந்து சிவனருளில் திளைப்போம் என்பது உறுதி. (ஶ்ரீ ஐயரவர்கள் எழுதிய “என் சரித்திரம்” என்ற நூலின் சில பகுதிகளை ஆதாரமாகக் கொண்டு இக்கட்டுரை எழுதப் பெற்றது).
      பதிப்பாசிரியர் குறிப்பு: சென்னை நுங்கம்பாக்கம் திருவாதிரையான் திருவருட் சபையார் நடத்தி வரும் ‘ஆடல்வல்லான்” என்ற மாதாந்திர வெளியீட்டினின்றும், எடுத்துப் பிரசுரிக்கப்பட்டது. மதி: 6, ஒளி: 5,6.

சிவம்.

No comments:

Post a Comment