உ
சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
சிவாலய தரிசனம்
மஹேந்திரவாடி உமாசங்கரன்
சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
1. திருப்பாசூர் உறைகின்ற வாசீச்வரர்
சாம்பல் பூசுவர் தாழ்சடை கட்டுவர்
ஒம்பல் முதுஎருது ஏறும் ஒருவனார்
தேம்பல் வெண்மதி சூடுவர் தீயதோர்
பாம்பும் ஆட்டுவர் பாசூர் அடிகளே.
- அப்பர் சுவாமிகள்
தொண்டை நாட்டின் பாடல் பெற்ற திருத்தலங்கள் முப்பத்திரண்டில் ஒன்றான இத்திருத்தலம் திருவள்ளூர் என்று சொல்லப்படுகின்ற திருஎவ்வளூருக்கு வடமேற்கே சுமார் 4½ கல் தொலஒவில் உள்ளது. ஈசன் இடதுகால் தூக்கி ஆடிய திருவாலங்காடும், கண் பார்வை இழந்த சுந்தரமூர்த்தி நாயனார் ஊன்றுகோல் ஈசனிடமிருந்து பெற்ற திருவுளம்பூதூர் என்னும் திருவெண்பாக்கமும் ஈசன் மணம் புரிந்து கொண்ட மணவூரும் அருகிலுள்ள அரிய தலங்கள். சென்னையிலிருந்து பூந்தமல்லி வழியாகச் செல்லும் திருத்தணி பஸ்களைப் பிடித்தால் கோயில் வாயிலிலேயே இறங்கி இறைவனை எளிதாகத் தரிசிக்கலாம். இவ்வளவு செளகரியம் இருக்கும்பொழுது அந்தக் கோயிலுக்கு ஏன் கோகாமால் இருக்க வேண்டும்?
சிந்தை யிடையார் தலையின் மிசையார் செஞ்சொல்லார்
வந்து மாலை வைகும் போழ்தென் மனத்துள்ளார்
மைந்தா மணாள ரென்ன மகிழ்வா ரூர்போலும்
பைந்தண் மாதவி சோலை சூழ்ந்த பாசூரே.
என்று ஞானசம்பந்தப்பெருமான் பாடிய திருப்பாசூர் திருத்தலம் நம்முடைய வினைகலையெல்லாம் தீர்த்து வைத்டு மங்களங்களைத் தரவல்லது. இத்தலத்தின் மீது ஞானசம்பந்தப் பெருமான் 1 பதிகமும், நாவுக்கரசர் 2 பதிகங்களும் (1 குறுந்தொகை, 1 திருத்தாண்டகம்) பாடியுள்ளார்கள்.
இத்தலத்தை உச்சிக்காலத்தில் தரிசித்தால் விசேஷம் என்று தலபுராணம் கூறுகிறது. ஏனைய தலங்களின் கலைகள் அங்கு வந்து அச்சமயத்தில் கூடுவதால் உச்சிக்கால தரிசனம் சிறப்பாகக் கருதப்படுகிறது. ‘பாகப் பொழுதெல்லாம் பாசூர் தங்கி’ என்ற வரி மூலம் இது கருதப்படுகிறது. பாசு என்றால் மூங்கில். ஒரு காலத்தில் இத்தலம் மூங்கில் காடாக இருந்திருக்கிறது. மூங்கில் இக்கோயொலின் தலமரம். சோழ அரசன் காட்டை அழித்து, நாடாக்கிய போது, வாசு என்னும் மரம் வெட்டும் கருவி கொண்டு மூங்கிலை வெட்டியபோது, ஒரு புதரிலிருந்து செங்குருதி வெளிப்பட்டது. அரசன் வெட்டுவதை நிறுத்தி விட்டு, சோதித்துப் பார்த்த பொழுது சிவலிங்கம் இருக்கக் கண்டான். தன்னுடைய தவறுக்கு வருந்தி ஒரு பெரிய கோயிலை எழுப்பினான். சிவலிங்கத்தின் மீது இன்றும் மரம் வெட்டும் போது ஏற்பட்ட தழும்புகள் அடையாளமாகத் திகழ்கின்றன. நீர் வளம், நிலவளம் காரணமாக இத்தலம் என்றும் பசுமையாக இருப்பதால் பாசூர் என்ற பெயர் பெற்றது என்றும் கூறப்படுகிறது. இறைவனுடைய திருநாமங்கள்: பாசூர்நாதேச்வரர், பாசுபதேச்வரர், வாசீச்வரர், இறைவியின் திருநாமங்கள்: பசுபதிநாயகி, ஸ்வயம்புவல்லி, ஸ்வய்ம்மோகனாம்பாள், தன்காதலீச்வரி.
சந்திரன் இத்தலத்தில் இறைவனைப் பூஜித்துப் பேறுகள் பெற்றதாக புராணம் புகழ்கிறது. இதனை அப்பர் பெருமான், இத்தலத்து திருக்குறுந்தொகை முதற்பாடலில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.
முந்தி மூஎயில் எய்த முதல்வனார்
சிந்திப் பாரிவினை தீர்த்திடும் செல்வனார்
அந்திக் கோன்தனக் கேஅருள் செய்தவர்
பந்திச் செஞ்சடைப் பாசூர் அடிகளே
மேலும் அப்பர் பெருமான் தான் அருளிச்செய்த திருத்தாண்டகத்தில், நாலாவது பாடலில் ‘பட அரவு அது ஒன்று ஆட்டிப் பாசூர் மேய பரஞ்சுடர்’ என்று பாடுகிறார். இது பற்றி இத்தலத்துப் புராணம் விவரமாகச் சொல்லுகிறது. குறும்பர் அரசன் ஒருவனுக்கும், கரிகாற்சோழனுக்கும் ஒரு முறை பெரும் போர் மூண்டது. கரிகாற்சோழன் தீவிர சிவபக்தன், குறும்பர்களுக்கு சமணர்கள் துணை நின்றனர். அவர்கள் ஆபிசார ஹோமம் வளர்த்து, தங்களுடைய மந்திர சக்தியால் சீறும் நாகம் ஒன்றைச் சிருஷ்டி செய்து, சோழராஜன் மீது ஏவினர். இது கண்ட சோழ அரசன் ஈசனைத் துதித்து உள்ளமுருகி வேண்டினான். இறைவன் பாம்பாட்டியாக வந்து கொடிய நஞ்சுவின் பாம்பை, அரசன் பொருட்டு அடக்கி பக்தனைக் காத்தருளினார் என்பது வரலாறு. சந்திரன் தவிர வியாச மஹரிஷியும் ஈசனை இங்கே பூஜித்திருக்கிறார்.
ஊருக்கு வடக்கே கோயில் இருக்கிறது. கோயிலுக்கு முன்பாக கோட்டை போன்ற அமைப்புடன் அழகான ஒரு சுற்றுலா மாளிகை. இக்கோயில் வெங்கடகிரி மஹாராஜா பொறுப்பில் இருந்ததாகவும், மன்னரின் குடும்பத்தினர் வந்தால் அங்கு தங்குவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. மஹாராஜாவிற்கு அர்ச்சகர் தரிசனம் செய்து வைத்தாலும், மஹாராணி கோயிலுக்கு வரும் பொழுது அர்ச்சகரின் மனைவி தரிசனம் செய்து வைப்பது இங்கு கடைப்பிடித்து வந்த பழக்கமாம். சுற்றுலா மாளிகையைக் கடந்ததும் தென்புறம் நோக்கி நீண்ட மதில்களுடன், நடு நாயகமாக மூன்று நிலைகளுடன் கூடிய ராஜகோபுரத்துடன், கோயில் காலவெள்ளத்தைக் கடந்து கம்பீரமாக நிற்கிறது.
ராஜகோபுரத்துடன் போட்டி போட்டுக்கொண்டு கருவறையின் விமானங்கள் அழகுடன் மிளிர்கின்றன. ஈசன் குடிகொண்ட கருவறையின் விமானம் கஜப்ருஷ்ட்ட அமைப்பைப் பறைசாற்றி சோழர் கலைத்திறனுக்கு எழிலூட்டுகின்றன. கோயில் பழமையாய் இருப்பதில் வியப்பொன்றுமில்லை. ஆனால் நீண்டகாலமாக பாலாலயத்தில் இருக்கக் காரணம் என்ன என்று தெரியவில்லை. கோயில் வழிபாடுகள் சிவகாம நெறிப்படி நடத்தப்படுகின்றன. பாலாலயத்தில் மூர்த்திகளை நீண்டநாட்கள் வைத்திருக்க ஆகமம் இடம் தரவில்லை. திருத்தணி கோயிலின் ஆளுகைக்கு உட்பட்ட இக்கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடைபெற்றால் சிவநேசச் செல்வர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.
இக்கோயிலில் ஈசன், அம்பாள் சந்நிதிகள் கிழக்கு நோக்கியிருப்பது தனிச்சிறப்பு. அம்பிகை நான்கு திருக்கரங்களுடன் பாசாங்குசம் ஏந்தி, அபய வரத முத்திரை காட்டி தரிசனம் தருகிறாள். ஈசன் கோயில் கோஷ்ட மூர்த்திகளாக விநாயகப் பெருமான், தக்ஷிணாமூர்த்தி, பிரம்மா, ஆகியோரோடு துர்க்கை பிரியோக சக்கரத்துடன் கொலுவேற்று பரவசப் படுத்துகிறாள். வீரபத்திரர், பைரவர் ஆகிய திருவுருவங்கள் அழகும், பக்திப் பெருக்கும் நிறைந்து சிலா வடிவங்கள். இக்கோயில் சப்த மாதாக்களையும் நால்வரையும் தரிசிக்கலாம்.
ஈசனையும் அம்பிகையையும் தரிசித்துக் கொண்டு நடராஜர் சந்நிதிக்குப் போகும் வழியில் ‘ஏகாதச’ கணபதியைத் தரிசிக்கலாம். இப்படி கணபதி சபை என்னும் வகையில் 11 கணபதிகளை ஒன்று சேர தரிசிக்கும் வாய்ப்பு நிச்சயமாக வேறு எந்த கோயிலிலும் கிட்டாது. இந்த விநாயகர் திருக்கூட்டத்தில் ஒரு பெரிய விநாயகர் இருக்கிறார். அவருக்குக் கீழே மூன்று சிறிய விநாயகர் வடிவங்கள். அந்த மூன்று விநாயகரில் நடுவில் வீற்றிருப்பவர் வலம்புரி விநாயகர். விநாயகர் மண்டபத்தில் திருமால் வினைதீர்த்த ஈச்வரர் என்ற பெயரில் சிவலிங்கத் திருவுருவில் ஈசன் எழுந்தருளியிருக்கிறார். பெருமான் சக்கராயுதத்தைத் தொலைத்துவிட்ட நேரத்தில், அவருக்கு சக்கராயுதம் கொடுத்துதவியவர் இந்த ஈசனே என்று சொல்லுகிறார்கள்.
கணபதி சபையைத் தரிசித்துக் கொண்டு, நடராஜர் சபைக்குள் நுழைந்தால் பாலாலய மூர்த்திகளைச் சித்திரவடிவில் தரிசிக்கலாம். ஆடும் கூத்தனின் அழகில் மனதைப் பறி கொடுத்து இவ்வுலகையே மறந்து இன்புறலாம். பக்கத்தில் வரிசையாகப் பல உற்சவ மூர்த்திகள். எல்லாம் நம்மை தெய்வலோகத்திற்கே அழைத்துச் செல்லும் அரிய படைப்புகள். இக்கோயிலில் சுரங்கப்பாதை ஒன்று இருக்கிறது. அச்சுரங்கம் திருவாலங்காடு கோயில் வரை செல்லுவதாகச் சொல்லுகிறார்கள்.
இக்கோயிலுள்ள கல்வெட்டுகள் மூலம் அரசர்கள் இக்கோயிலுக்குச் செய்த தான தருமங்கள் தெரிய வருகின்றன. ராஜராஜன் பூஜைக்காக 47 பொன்காசுகள், விளக்கிற்காக 32 பசுவும், முரசு வாத்தியத்திற்காக 1 எருதும் அளித்தான் என்றும் குலோத்துங்கன் காலத்தில் ஒரு மாது திரு ஆபரணத்திற்காக 30 பொன்காசும், நாள் ஒன்றுக்கு 2 படி அரிசியும் கொடுத்ததாகத் தெரியவருகிறது.
பட்டு மென்மையானது. அதைத் தன் பெயராகக் கொண்ட சிவத்திரு பட்டுசுவாமி குருக்கள் குழந்தை உள்ளம் படைத்தவர். கணீரென்ற தன் குரலில், ஈசனை 108 நாமாக்களைச் சொல்லி அவர் அர்ச்சித்துச் செய்த பூஜை இன்றும் என் மனக்கண் முன்னே நிற்கிறது. இவர் போன்ற சிவாச்சாரியர்களின் வாழ்க்கைத்தரம் உயரவேண்டும். இது போன்ற கோயில்களுக்கு அடிக்கடி செல்லுமாறு சிவபக்தர்களை வேண்டுகிறேன்.
2. பாவங்கள் தீர்க்கும் பஞ்சேஷ்டி
ஒருவனுடைய தாகத்தைத் தீர்த்து
வைத்தாலே பெரும் புண்ணியம். கோடிக்கணக்கான
மக்களுடைய தாகத்தை ஒரு சிறு கிராமம் தீர்த்து வைக்கிறது. அது சாதாரண கிராமம் அல்ல. அகத்தியர் யாகத்தால் அருள் சுரக்கும் அற்புத பூமி. அகத்தியர் அங்கு ஒரு யாகம் செய்யவில்லை. ஐந்து யாகம் செய்தார். இஷ்டி என்றால் யாகம். ‘பஞ்சேஷ்டி’ என்றால் ஐந்து யாகம் என்று பொருள். அகத்தியர் யாகத்தால் பெருமை பெற்ற அந்த தலம் ‘பஞ்சேஷ்டி’ என்றழைக்கப்பட்டு தற்பொழுது ‘பஞ்செட்டி’ என்று வழங்குகிறது. அங்குள்ள நிலத்தடி நீரைக் கொண்டு சென்னை நகரின் தண்ணீர் பஞ்சம் தீர்க்கப்படுகிறது.
அந்தத் தலத்திற்குச் செல்ல அதிகக் கஷ்டப்பட வேண்டாம். சென்னை பேஸின் பிரிட்ஜ் பஸ் நிலையத்திலிருந்து புறப்படும் 112, 131, 132, 133, 58C, 90 முதலிய பஸ்களில் ஏதாவது ஒன்றைப் பிடித்தால் போதும், நேராக பஞ்சேஷ்டியை அடையலாம்.
காவிரி ஆறு பிறந்ததற்கும், அகத்திய முனிவருக்கும் தொடர்பு இருப்பது போல, இத்தலத்திற்கும் கங்கைக்கும் தொடர்பு உண்டு. அத்தொடர்பு அகத்தியரால் ஏற்பட்டது. இத்தலத்தில் அகத்தியர் வேண்டுகோளுக்கிணங்க, சர்வ பாபங்களையும் போக்கவல்ல கங்கை மிகுந்த வேகத்துடன் பூமியிலிறங்கி, முனிவருக்கு முன்பிருந்த ஒரு குசை (தர்பை புல்) யின் நுனியிலுதித்து ஆறாகப் பெருகி வளம் சேக்கிறாள். அன்று முதல் இத்தலத்திற்கருகே ஓடும் ஆறு ‘குசஸ்தலையாறு’ என்று வடமொழியிலும் ‘குடத்தலையாறு’ என்று அழகு தமிழிலும் அழைக்கப் பெறுகிறது.
பஞ்சேஷ்டி நீர்வளம், நிலவளம் மிக்க எழில் குலுங்கும் அமைதியான தலம். ஈசன் கோயிலுக்குப் போவதற்கு முன்பே நம்மை வழிமறிக்கும் ஆலயம் பஞ்சேஷ்டி அம்மன் கோயில். அடர்ந்து வளர்ந்திருக்கும் வேப்பமர நிழலில் அம்மன் கோயில் அமைந்திருக்கிறது. அங்கு சிறிது நேரம் அமர்ந்திருந்தாலே நம் கவலையெல்லாம் மறக்கும். அங்கு சென்று பார்த்தால் தான் அதன் அருமை புரியும். பஞ்சேஷ்டி அம்மன் கிராம தேவதை. உள்ளத்திற்கும் உடலுக்கும் உவகை ஏற்படுத்தும் அற்புதத் திருவுருவம் உட்கார்ந்த நிலையில், நான்கு திருக்கரங்களுடன் மேல் இரு கரங்களில் அங்குசமும் பாசமும் ஏந்தி கீழ் இரு கரங்களில் சூலமும் பொற் கிண்ணமும் ஏந்தி அம்பிகை தருகிறாள் காட்சி. இது அவள் மாட்சி.
பஞ்சேஷ்டி அம்மனைத் தரிசித்துக் கொண்டு அகத்தீசவரன் கோயில் நோக்கிச் செல்கிறோம். ஐந்து நிலைகளுடன் கூடிய ஒரு ராஜகோபுரம் கம்பீரமாக நின்று நம்மை வரவேற்கிறது. அந்த கோபுரம் ராயர் காலத்துப் படைப்பு.
சிற்பங்கள் கண்ணைல் கவருகின்றன. ராஜகோபுரத்துக்குள்
நுழைந்தால் வெளிப்பிராகாரத்தைக் கடந்து உட்கோயிலை அடையலாம். நம்மை
வரவேற்பது போல் அம்பிகை ஆனந்தவல்லி நின்ற கோலத்தில் அருளாட்சி செய்கிறாள். அம்பிகையின் உருவம் சிறியதாக இருந்தாலும், நம்மைக் கவர்ந்திழுக்கும்
திருவுருவம். அம்பிகையின் திருமுகத்தில் பொழியும் கருணையும்,
சாந்தமும் எழுத்தில் வடிக்க இயலாது. ஈசன் அகத்தீசன்
கிழக்கு நோக்கியிருக்கிறார். அகத்தியர் வழிபட்ட லிங்கத் திருவுருவமானதால்
அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறார்.
இக்கோயிலின் தலபுராணம் மிகவும்
சுவையானது. குபேரனுடைய நண்பனான
மணிபத்திரனின் தம்பி சுகேது என்னும் யட்சன், குபேரனுடைய நந்தவனத்தில் இருந்த சுகேசி என்னும் அழகியைக் கண்டு மோஹித்து, அவளுடன் பலகாலம் சந்தோஷமாக வாழ்ந்து வந்தான். இதனால் குபேரனின் சாபத்துக்கு ஆளாகி அவனால் சபிக்கப்பட்டு தன்னுடைய ஆண்மையை இழந்தான். சுகேசியும் குபேரனுடைய சாபத்துக்கு ஆளாகி அரக்கியானாள். சாபவிமோசனம் பெற சுகேது பிரம்மாவைக் குறித்து தவம் இருந்து, பிரம்மா காட்சி கொடுக்காததால், எரியும் தீச்சுவாலைக்குள் இறங்கினான். பிரம்மா காட்சி கொடுத்து அவன் கேட்டபடி யாராலும் பிளக்க முடியாத ஒரு கவசமும், கதையும் வில்லும் அம்பும் கொடுத்தார். இந்த வரங்களைப் பெற்றுக் கொண்ட சுகேது ஸர்வலோகங்களையும் ஆட்டிப்படைத்தான், கைலாயம் சென்று ஈசனைப் பரிகசித்தான். இதன் விளைவால் குமரப் பெருமானால் சபிக்கப்பட்டு அரக்கனானான். மரண்டூகி என்ற பெயருடன் இந்துவரனுக்கு மகளாகப் பிறந்து வளர்ந்து வந்த தன்னுடைய மனைவியோடு சேர்ந்து மூன்று பிள்ளைகளைப் பெற்றான். நாளுக்கு நாள் அவர்களுடைய கொடுமைகள் அதிகம் ஆயிற்று.
இதற்கு ஒரு முடிவு கட்ட எல்லாம் வல்ல பராசக்தியிடம் தேவர்களும், முனிவர்களும் முறையிட்டனர். அகத்தியர் மூலமாக இதற்குப் பரிகாரம் ஏற்படும் என்று தேவி அருள் மழை பொழிந்தாள். இதற்கிடையில் சுகேது கடலுக்குள் புகுந்து மறைந்தான். அவனைத் தேடும்பொருட்டு அவனின் மனைவியும் மூன்று குமாரர்களும் கடலைக்கலக்கினர். இதனால் கடல்நீர் பிரவாகித்து உயிர்களுக்குத் துன்பம் ஏற்பட்டது. அப்பொழுது கடல்நீர் முழுவதையும் அகத்தியர் குடித்தார். நீரோடு சேர்ந்து சுகேது முதலான ஐவரும் முனிவரின் வயிற்றில் போய்விட்டனர். கடல்நீர் வர்ண்டதால் வருணன் கவலையுற்று குபேரனுடன் சேர்ந்து முனிவரைப் பிரார்த்தித்தான். முனிவரும் நீரைக் கடலில் சேர்த்தார். அரக்கர்களும் சுயரூபம் பெற்று கடல் நீரோடு முனிவரின் வயிற்றிலிருந்து வெளி வந்தனர். அகத்தியரின் வேண்டுகோளுக்கிணங்க சமுத்திர ராஜன் கோயிலுக்குப் பக்கத்திலேயே ‘அகஸ்திய தீர்த்தம்’ என்ற பெயரில் ஒரு தடாகமாக விளங்கி வருகிறான். இராவண சம்ஹாரத்திற்காக இலங்கை செல்லும் வழியில் இராமனும், இலக்குவனும் இத்தலத்திற்கு வந்து அகத்திய முனிவரை தரிசித்து, ஈசன் அம்பிகை அருள் பெற்றூச் சென்றதாகப் புராணம் கூறுகிறது.
தற்பொழுது கோயில் முழுவதும் திருப்பணி செய்ய வேண்டிய நிலையிலிள்ளது. இக்கோயிலைப் பழுதுபார்த்து திருப்பணி செய்பவர்களும், அருகிலுள்ள குசஸ்தலை ஆற்றில் நீராடி, அங்கிருந்து நீர் கொண்டு வந்து அகத்தீசனுக்கும் ஆனந்தவல்லிக்கும், அபிஷேகம் செய்விப்பவரும் நைவேத்தியம் சமர்ப்பிப்பவரும் எந்நாளும் கயிலைநாதன் வீற்றிருக்கும் கைலாய மலையில் ஈசனுடைய பாதகமலங்களில் வாழும் பேறு பெறுவார்கள் என்று தலபுராணம் புகழ் பேசுகிறது.
பஞ்சேஷ்டிக்கருகில் எருமைவெட்டிப்பாளையும் என்னும் துர்க்கைத் தலமும், ஞாயிறு, திருக்கள்ளில் போன்ற சிவத் தலங்களும், பெரியபாளையம்ம் என்னும் பவானியம்மன் தலமும் உள்ளன. அங்கெல்லாம் சென்று இறைவனைத் துதித்துப் பலன் பெறுக.
3. மணவூர் திருநந்தீசுவரர்
தொண்டைநாட்டின் கோட்டங்கள் இருபத்திநான்கில் ஒன்றான மணவூர் கோட்டம் பண்டைய நாட்களில் பெரும் புகழோடு விளங்கி வந்த ஒரு பகுதியாகும். ஆதியில் குறும்பர்கள் தொண்டை நாட்டை ஆண்டு வந்தனர். சோழர்கள், பல்லவர்கள் ஆட்சியிலும், பிறகு வந்த விஜயநகர ராயர்கள் காலத்திலும் தொண்டைநாடு சிறப்புற்று இருந்தது. மணவூர் கோட்டத்திற்குத் தலைநகராக சிறப்புற்று இருந்தது மணவூர். சென்னையிலிருந்து அரக்கோணம் செல்லும் புகை வண்டித்தடத்தில் மணவூர் இன்று ஒரு சிற்றூராகக் காட்சியளிக்கிறது. மணவூர் ரயில் நிலையத்திற்குப் பக்கத்திலேயே ஊர் அமைந்திருக்கிறது. மணவூருக்கு அருகாமையில் உள்ள திருத்தலங்கள் திருவூறல், திருப்பாசூர், திருவாலங்காடு, திருவுளம்பூதூர் என்ற பாடல் பெற்ற தலங்களாகும்.
திருவாலங்காடு பஞ்ச சபைகளில் ஒன்றான ரத்னசபை, காளியின் கர்வத்தை இறைவன் அடக்கி, இடதுகால் தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடி அருளிய பதி திருவாலங்காடு. ஆடியது ஆலங்காட்டில், அமர்ந்தது திருவூறலில், மணந்தது மணவூரில் என்று ஒரு பழமொழி உண்டு. ஈசன் மணம் புரிந்து கொண்ட தலமாதலால் மணவூர் என்று இத்திருத்தலம் வழங்கலாயிற்று.
ஒரு சமயம் ஈசனுடைய கோபத்துக்கு நந்திபகவான் ஆளாக நேர்ந்தது. பூலோகத்தில் பல தலங்களில் ஈசனைக் குறித்துத் தவம் செய்து சாபம் நீங்கப்பெற்றார். அவற்றுள், கர்நாடகா மாநிலத்தில் உள்ள நந்திமலை, ஆந்திர மாநிலதிலுள்ள நந்தியால், வடஆற்காடு மாவட்டத்திலுள்ள நந்தியாலம், செங்கற்பட்டு மாவட்டத்திலுள்ள நந்திவரம் ஆகியவை புகழ்பெற்ற தலங்களாகும். மணவூரிலும் நந்திபகவான் ஈசனைக்குறித்து தவம் செய்து லிங்கத்தை நிறுவி வழிபட்டார். நந்திபகவான் வழிபட்டதால் திருநந்தீசுவரர் என்ற பெயரில் ஈசன் வழங்கப்படுகிறார். அம்பிகையின் திருநாமம் ஆனந்தவல்லி. சோழர்கள் கலைச்சிறப்போடு கூடிய ஒரு உயர்ந்த விமானம் கோயிலை அலங்கரிக்கிறது. கோயிலின் பெரும் பகுதி பாழடைந்து காணப்படுகிறது. ஆனால் இன்றும் பூஜைகள் தவறாமல் நடந்து வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும்.
உற்சவ மூர்த்திகளில் விலேந்திய கண்ணப்ப நாயனார் உருவமும் கண்டு களிக்கத்தக்கது. கண்ணப்ப நாயனாரின் உருவம் இங்கு இருப்பதால் அவருக்கும் இக்கோயிலுக்கும் உள்ள தொடர்பை ஊகிக்க முடிகிறது. முறையான தல புராணம் இக்கோயிலுக்கு இல்லாததால் அரிய பல செய்திகள் கிடைக்க வழி இல்லாமல் போய்விட்டது.
ஊருக்கு ஈசான்ய பாகத்தில் மற்றொரு சிலாலயம் பாழடைந்த நிலையில் இருக்கிறது. அங்கு வீற்றிருக்கும் ஈசனை நண்டு பூசித்ததால் கற்கடகேசுவரர் என்று அழைக்கப்ட்டுகிறார். அம்பிகையின் திருநாமம் வடிவாம்பிகை. காமாட்சியம்மன், கோயிலுக்கு வெளியே உள்ள திருக்குளத்திற்கும் கடக தீர்த்தம் என்ற பெயரே வழங்குகிறது. ஊருக்குத் தெற்கே ஒரு மடு பத்மசரோருஹம், சரவணப்பொய்கை என்ற பெயரில் வழங்குகிறது.
நந்தீசுவரர் கோயிலுக்கருகே முருகனுக்கு ஒரு தனிக்கோயில் உள்ளது. இக்கோயில் கந்தகோட்டம் என்று வழங்கப்பெறுகிறது. காஞ்சியிலே குமரகோட்டம், இங்கே கந்த கோட்டம். பிரணவத்திற்குப் பொருள் தெரியாத பிரம்மனை சிறையிலடைத்துவிட்டு கமண்டலமும், அக்ஷ மாலையும் தாங்கி முருகன் அளித்த கோலமே பிரமம் சாஸ்தா என்னும் கோலமாகும். இவருக்கு நான்கு திருக்கரங்கள், இரு கரங்களில் அக்ஷ மாலையும், கமண்டலமும் தாங்கி, ஒரு கரத்தை அபயமாக வைத்துக் கொண்டு, இடது திருக்கரத்தினில் ஒன்றை இடுப்பிலே வைத்துக் கொண்டு திருமுருகன் காட்சி தருகிறார்.
கச்சியம்பதியிலே இருந்த சிற்பி ஒருவர் இதையும் இதே போன்று இன்னும் இரு உருவங்கள் செய்தாராம். மணவூருக்கு அருகாமையில் உள்ள பாகசாலையில் ஒரு உருவமும், விடையூர்நத்ததில் ஒரு உருவமும் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். பாகசாலை முருகனை அருணகிரியார் திருப்புகழில் பாடியுள்ளார். மணவூரில் கொலுவிருக்கும் முருகன் மிகவும் உக்கிரமூர்த்தியாக இருந்தாராம். வள்ளி, தெய்வயாளையின்றி நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கியுள்ளார். சந்நிதி சைவவேளாளர் வீதியை நோக்கியுள்ளது.
அவ்வீதியில் எந்த சுபநிகச்சிகள் நடந்தாலும் அந்நிகழ்ச்சி தொடர்புடையதாக, முருகனுக்கு ஏதாவது சமர்ப்பிக்காமல் நடந்தால் அந்நிகழ்ச்சியே வெற்றியாக நடைபெறாதாம். குழந்தை பிறந்தால் முருகனுக்கு தொட்டில் கட்டுவதும், பெயர் சூட்டினால் பதுமை செய்து சமர்ப்பிப்பதும், குழந்தைக்கு அரைஞாண் கட்டினால், வெள்ளியிலே முருகனுக்கு அரைஞாண் கட்டுவதும், வயலில் விதை விதைத்தால், நெல்விதை முருகனுக்குக் கொடுப்பதும், மாடு கன்று போட்டால் ஒரு வேளை பால் அபிஷேகத்திற்குக் கொடுப்பதும், அறுவடை செய்தால், அறுவடை செய்ததில் ஒரு மூட்டை கோயிலுக்குத் தருவதும் அங்கே வழக்கமாம். ஒரு முறை காஞ்சி பெரியவர்கள் இவ்வூருக்கு விஜயம் செய்தபொழுது ஊர் மக்கள் முருகனின் உக்கிரத்தன்மையை சமனப்படுத்த வழி கேட்டபோது அவர் அம்மூர்த்திக்கு முன்பு சிறிய அளவில் அதேபோன்று பிரதிஷ்டை செய்யச் சொன்னாராம். அதேபோன்று செய்த பிறகு முருகன் காருண்யமூர்த்தியாக தற்பொழுது விளங்கி வருவதாகச் சொன்னார்கள்.
காஞ்சி பெரியவர், பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் பொன்விழா ஆண்டை ஒட்டி பல கோயில்களில் திருப்பணிகள் அவர் ஆதரவோடு நடைபெற்று வருகின்றன, அவற்றுள் இக்கோயிலும் ஒன்று. விரைவில் குடமுழுக்கு நடைபெற இருக்கின்றது. ஊர் மக்களின் ஒத்துழைப்பைக் கண்டு பெருமையும் மகிழ்ச்சியும் கொள்ளும் அதே நேரத்தில், பழுதுபட்ட இரண்டு புகழ்மிக்க சிவாலயங்களையும் புதுப்பிக்கவில்லையே என்ற ஏக்கமும் இருக்கத்தான் செய்கின்றது. இறைவன் திருவருளால் நம் எண்ணம் ஈடேற பிராத்திப்போம்.
மணவூருக்கு அருகாமையில் களியனூர் என்று ஒரு சிற்றூர் உள்ளது. சுமார் 2 கல் தொலைவு. அங்கே கடும்பாடி அம்மன் என்ற பெயரில் கிராம தேவதை எழுந்தருளியுள்ளாள். சின்னம்மன் என்ற பெயரில் கிராம மக்கள் வழங்குகிறார்கள். மிகவும் வரப்பிரஸாதி அவள். கண்டு தொழுது வரங்கள் பல வாங்கி வாருங்கள்.
சிவம்.
No comments:
Post a Comment