உ
சிவாப்யாம் நம:
இறைவனின் இருபெருஞ்செயல்கள்
தர்மக்ஞ, சிரோமணி, வித்யாவாசஸ்பதி
பிரம்மஶ்ரீ மாயூரம் ராமநாத தீக்ஷிதர்
சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
[பதிப்பாசிரியர் குறிப்பு: சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் வடாற்காடு மாவட்டம்
அடையப்பலம் என்ற கிராமத்தில் பிறந்தவர் ஶ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதேந்திரர் அவர்கள். இவர்
104 நூல்களை இயற்றி ‘சதுரதிக சதகிரந்த கர்த்தா’ என அவரது காலத்திலேயே போற்றப்பட்டார்.
இவரது காலத்தில் வைஷ்ணவர்களது ஆதிக்கம் ஓங்கி, சைவப்பிரசாரம் நலிவுற்றது. எனவே, ஶ்ரீமத்
தீக்ஷிதேந்திரர் ஆதாரபூர்வமான பல நூல்களை இயற்றி அவைகளின் மூலம் சிவபெருமானே பரம்பொருள்
என நிலைநாட்டினார். அவைகளில் ஒன்று பிரமம் தர்க்கஸ்த்வம் என்ற நூலாகும். இந்த
நூலிலிருந்து ஒரு ச்லோகத்துக்கு ஶ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் வம்சத்தில் 12வது தலைமுறையில்
தோன்றிய பிரம்மஶ்ரீ மாயூரம் ராமநாத தீக்ஷிதர் அவர்கள் விளக்கம் தருகிறார்கள். இந்த
நூல் முழுவதையுமே தமிழ் உரையுடன் வெளியிடும் முயற்சியை மேற்கொண்டுள்ளோம் என்பதையும்
மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
- ஆங்கிரஸ சர்மா]
கங்கா த்ருதா ந பவதா சிவ
பாவநீதி
நாஸ்வாதிதோ மதுர இத்யபிகாலகூட:
|
ஸம்ரக்ஷணாய ஜகதாம் கருணாதிரேகாத்
கர்மத்வயம் கலிதமேததனன்ய
ஸாத்யம்: ||
இது பிரம்மதர்க்க ஸ்த்வத்தில் 35வது ச்லோகமாகும்.
இதன் பொருள்: ஓ சிவபிரானே! புனிதமானது என்று கங்கை உம்மால் தரிக்கப்படவில்லை. இனிப்பானது
என்று காலகூடம் என்னும் நஞ்சும் உம்மால் சுவை பார்க்கப்படவில்லை. கருணை மேம்பட்டமையால்
உலகைக் காக்கும் பொருட்டு மற்ற எவராலும் செய்ய முடியாத இந்த இரண்டு செயல்களும் உம்மால்
மேற்கொள்ளப்பட்டன.
பகீரதனது தவத்துக்கு இணங்கி பூவுலகம் வரும் பொழுது
மற்றெந்தத் தேவராலும் தாங்க முடியத அந்தப் பிரவாஹத்தைப் பரமேச்வரனே தாங்கினார். இதை
ஶ்ரீமத் அப்பய்ய தீக்ஷிதர் அவர்கள் பலவிதப் பிரமாணங்களைக் கொண்டு விளக்கியுள்ளார்கள்.
மஹாபாரதம், பாகவதம் போன்ற நூல்களிலும் இந்த விஷயம் கூறப்படுகிறது. மஹாபாரதத்தில் பகீரதனிடம்
கங்கை கூறுவதாக, “ஆகாயத்திலிருந்து விழும் எனது வேகத்தைத் தேவர்களில் மிகச்சிறந்தவரான
மஹேச்வரரான நீலகண்டன் ஒருவரைத் தவிர்த்து மூவுலகிலும் வேறு யாராலும் முடியாது. (அவரே
செய்ய முடியும் என்பதாம்),” என்று கூறப்பட்டுள்ளது.
வால்மீகி இராமாயணத்தில் பகீரதனிடம் பிரம்மா கூறுவதாக,
“ஏ அரசே! கங்கை விழும் வேகத்தை பூமி பொறுக்க முடியாது. அதைத் தாங்குவதற்குச் சூலபாணியான
பரமேச்வரனைத் தவிர யாராலும் முடியாது என்பதை அறிவேன்” என்று கூறப்பட்டுள்ளது.
வைஷ்ணவ புராணங்கள் நான்கினுள் ஒன்று என்று கருதப்படுகிற
பாகவத்தில் “எனது வேகத்தை யாராவது தாங்காவிட்டால் பூமியைப் பிளந்து கொண்டு பாதாளம்
செல்வேன்” என்று கங்கை பகீரதனிடம் கூறப் பகீரதன் பதிலளிக்கிறான். “உனது வேகத்தைப் பிராணிகள்
அனைத்திற்கும் ஆத்மாவாயும் தாங்குபவரயும் உள்ள ருத்திரன் (பரமசிவன்) தாங்குவார்” என்று
கூறுகிறான்.
இதே போல் திருப்பாற்கடலைக் கடையும்பொழுது முதலில்
காலகூடம் என்ற விஷம் வெளிவந்தது. அதைக் கண்டவுடன் தேவர்கள் அசுரர்கள் அனைவரும் மூர்ச்சையடைந்தனர்.
வேறு எந்த தேவராலும் அதனையழிக்க முடியாமல் பரமசிவனே அதனை விழுங்கினார். அதனால் நீலகண்டன்
என்ற பெயரும் ஏற்பட்டது. இச்செய்தியையும் பாகவதத்தில் காணலாம். இராமாயணத்திலும் தேவர்களெல்லாம்
நடுக்கமடைந்து சிவபிரானை அடைக்கலம் புகுந்து, “எல்லாம் வல்ல பெருமானே! எம்மைக் காத்தருள்வீராக”
என்று குறையிரந்தமையும், அங்ஙனமே மஹாவிஷ்ணுவும் சிவபிரானை நோக்கி, “தேவரீரே எல்லாத்
தேவர்கட்கும் முன் உள்ளீர், நீரே எல்லாத் தேவருள்ளும் சிறந்த தலைவராயினீர். ஆதலால்,
பிரபுவே, எல்லோர்க்கும் வருவதில் முதற்பங்கு தேவரீரையே சாரற்பாலதாகலின் முதலில் வந்ததாகிய
இந்த விஷத்தை ஏற்றருளும்” என வேண்டினதும், அவர்களது கலக்கத்தைக் கண்டு சிவபிரான் இரக்கங்
கொண்டு அந்த விஷத்தையே அமிர்தமாகப் பருகி தேவர்களது துயரத்தைப் போக்கியருளினமையும்
நன்றாகா எடுத்துச் சொல்லப்பட்டிருக்கிறது.
இங்ஙனம் கங்கையைத் தாங்கியதால் சிவபிரானுக்கு
கங்காதரன் என்றும், விஷத்தை உண்டு அதனைக் கழுத்தில் நிறுத்த அது அங்கு நீலநிறத்துடன்
தங்கியமையால் நீலகண்டன் என்றும் பெயர்கள் உண்டாயின. இவ்விரு செயல்களும் பிறரால் செய்ய
இயலாதவை – அனன்யசாத்யம் – என்று ஶ்ரீமத் தீக்ஷிதேந்திரர் இந்த ச்லோகத்தில் கூறியுள்ளார்
என்று அறிவோமாக.
[சிவபுராணங்களிலிருந்து
ஆதாரம் காட்டாது, வைஷணவ எனக்கருதப்படும் நூல்களின் மூலமாகவே இவ்விரு பெருஞ்செயல்களை
விளக்கிய கட்டுரையாசிரியரின் திறம் போற்றற்குரியது. – பதிப்பாசிரியர்]
சிவம்
No comments:
Post a Comment