Friday, October 21, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவஜயம்
திருஞானசம்பந்தர்
கே. ஸரஸ்வதி, திருநெல்வேலி - 7

சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      எல்லாம் வல்ல எம்பிரான், உமையொரு பாகனான அர்த்தநாரீச்வரர். தன்னை வணங்குபவர்களுக்கு சகல வல்லமைகளையும் அளிக்க வல்லவன். இவ்வாறு அவனைப் பணிந்து அருள் பெற்ற அருளாளர்கள், அவ்வல்லமையை எம்பெருமானின் கருணையே என நினைக்கும் அளவில் அத்திறன் பெருகும். அஃதன்றி இது தன் ஒரே முயற்சியினால் கிடைத்த பேறு என்று இறுமாந்து போகும் அளவில் அடுத்த நொடியிலேயே அவ்வல்லமையெல்லாம் மறையும் அளவிற்கு சூழ்நிலையினை ஏற்படுத்தி, தன் நிலைத்தன்மையினையும், உலகின் நிலையாத் தன்மையினையும், உணர வைத்துவிடும் காரண கர்த்தாவாகி விடுகிறான்.
      பக்த பிரஹ்லாதனால் நாராயண! நாராயணா! என்று அவரது தாமத்தை பூவுலகில் நிலைநாட்டச் செய்த காலம் ஒன்று. ஆனால் அந்நாராயண நாமத்திற்கு அதிபதியை பின்னொரு நாள் சம்ஹரித்து அவர் தோலைச் சட்டையாகத் தரித்துசட்டைநாதராகசிவபிரான் சீர்காழியில் காட்சி அளிக்கும் காலமும் ஒன்று. காரணம் ஏன்? எல்லாச் சக்திக்கும் காரணமான சிவபெருமானைஎல்லாம் வல்லவனை நாராயணர் தற்பெருமையால் மறந்ததே. ஆயினும் படைத்த எம்பிரான் தன் குழந்தைகளுக்கு அறிவைக் கொடுத்துத் தன் நிலைத்த தன்மையை உணர்த்தி அருள் புரிபவனாகிறான். அவ்வறிவினைஞானத்தைப் பெறும் வரைஅந்தச் சரணாகதி எனும் நிலையைதன் குழந்தைகள் உணரும் வரை அவர்கட்கு பெருமையுடன் சிறுமைகளையும் வழங்கிக் கொண்டேதான் இருப்பான். இங்கு பெருமை சிறுமை என்று கூறியது இன்பங்களுக்கும், துன்பங்களுக்கும் காரணமானவை.
      பக்த பிரஹ்லாதனின் தந்தையான இரணியன் ஆண்டாண்டு காலமாகத் தவமியற்றினான். இறைவன் அவன் தவத்திற்கிரங்கி முன் தோன்றி, வேண்டும் வரம் யாது? என வினவினார். தனக்கு இறவா வரம் வேண்டும்எனும் நோக்கத்துடன், தனது முடிவு மனிதனாலோ, தேவராலோ, மிடுகத்தாலோ சம்பவிக்கக் கூடாததாகவும், இல்லினுள்ளோ, வெளியிலோ, இல்லாததாகவும், இரவிலோ பகலிலோ நிகழாததாகவும், நீரிலோ நிலத்திலோ இல்லாததாகவும் எந்த ஆயுதத்தினாலும் சம்ஹரிக்க இயலாததாகவும், இருக்க வேண்டும் என்று வரம் கோருகிறான். எம்பெருமானும் அருள் பாலிக்கிறார். பகதர்களுக்கு அருளுவது அவரது கருணை, ஆனால் அக்கருணையாளனின் கருணையை மனதில் நிறுத்தி எக்காரியத்தையும் செய்யின் சிறப்புற்று விளங்கும். அஃதன்றி இரணியன் தான் பெற்ற வரத்தினால் அடைந்த பயன் யாது? அக்கருணையாளனின் வெறுப்பிற்கே ஆளாகும் வண்ணம் தன் சிந்தனையைச் செலுத்தி விட்டான். இறவா வரம் பெற்று விட்டோம் என்ற எண்ணி, அவ்வரத்தைப் பெற்ற காரணத்தினால்தானே நிலைஎன்ற எண்ணம் ஏற்பட்டு தன்னை வணங்குபடி மக்களை துன்புறுத்துபவனாகி, அவ்வரம் தந்த ஈசனையே மறந்தவனானான்.
      மக்கள் துன்பத்தினை துடைக்கும்படி இறைவனை வேண்ட, சிவனின் சக்தியான நாராயணர் அவனை சம்ஹரிக்கும் நேரம் வருகிறது. ஆயினும் கொடுத்த வரத்தினின்றும் மீறுவது நியதியன்று. ஆகையால், அவன் கேட்ட வரத்தின்படியே மனிதனாகவோ, மிருகமாகவோ அல்லாத ஒர் அவதாரமானநரசிம்மனாகத்தோன்றி, இல்லினும் வெளியிலும் இல்லாத இடைப்பட்டநொலையில் பகலும் இரவும் இல்லாதசந்தியாவேளையில் எவ்வித ஆயுதமுமின்றி தன் விரல் நகங்களை ஆயுதமாகக் கொண்டு நீரிலும் நிலத்திலுமன்றி தன் மடியில் கிடத்தி அவனது உடலை கிழித்து குடலை மாலையாக அண்கிறார். மனித சக்தியினால், புத்தியினால் நினைக்க இயலாத ஒரு அவதாரம். அந்நாராயணரையேகாத்தல் தெய்வமான திருமாலையே சம்ஹரித்துக் தோலைச் சட்டையாகத் தரித்துசட்டைநாதராகசீர்காழியில் சிவபெருமான் காட்சியளிக்கிறார் என்றால்எல்லாம் வல்லவன் சிவனேஎன்பதற்கு வேறு சான்றும் தேவையோ?
      இது போன்ற நிகழ்ச்சிகளைக் காட்டி மனிதனை அதில் லயிக்க வைத்து, பக்குவமடையச் செய்து நிலையான சிவத்தின் மேல் மனதை நிலைநிறுத்தி அவன் நாமமே சிந்தை செய்ய வைப்பதே உலகப்படைப்பின் சாராம்சம் ஆகும். உலகில் மக்கள் எனும் மாணக்கர்க்ளுக்கு ஆண்டவனின் வல்லமையை உணர்த்தும் உபாத்தியாயர்களாக விளங்குவபவர்கள் திருமுறைகளை அருளிச் செய்த ஆசிரியர்களாவார்கள். இவ்வாசிரியர்களின் பட்டியலில் முதலிடம் வகிப்பவர் ஞானசம்பந்தப் பெருமானாவார். இவரது புராணத்தைத் தெய்வச் சேக்கிழார் பெருமான் பின்வரும் பாடலால் தொடங்குகிறார்.
                வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப்
       பூதபுரம் பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
       சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர்
       பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்
      இவரின் தந்தையார் சிவபாதஹிருதயர். பெயருக்கு ஏற்ப சிவனது பாதக்கமலங்களையே தனது நெஞ்சில் நிறுத்தி வைத்தவர். சைவம் நலிந்து மற்றைய மதம் தலைதூக்க இருந்த நேரம், எம்பெருமானை வேண்டி, சைவம் தழைக்கப் பிரார்த்திக்க, உண்மை பகதர்களுக்கு இரங்கும் குணாளனாகிய ஈசன் சிவபாதஹிருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் ஞானசம்பந்தரைப் புதல்வராகச் சித்திரை மாதத்து திருவாதிரை நன்னாளில் அவதரிக்கச் செய்கிறார். அவர் அவதரித்த தலமான சீர்காழிப்பதியில் அம்மை அப்பர் சந்நிதிகளுக்கு இடையில் ஞானசம்பந்தர் சந்நிதி அமைக்கப்பட்டுள்ளது சோமாஸ்கந்த ரூபத்தைக் குறிப்பதாகும். ஞானசம்பந்தரை சுப்ரமண்யர் அம்சமாகவும் வழிபடுவது ஐதிகமானது இங்கு குறிப்பிடத்தக்கது. திருஞானசம்பந்தரது திருவவதாரத்தைக் கூறும் பெரிய புராணப்பாடல் இதோ காண்மின்.
                அவம்பெருக்கும் புல்லறிவின் அமண்முதலாம் பரசமயப்
       பவம் பெருக்கும் புரைநெறிகள் பாழ்படநல் லூழிதொறும்
       தவம் பெருக்கும் சண்பையிலே தாவில்சரா சரங்களெலாம்
       சிவம் பெருக்கும் பிஉளையார் திருஅவதா ரஞ்செய்தார்.

சீர்காழிப் பதியின் பெருமை
      பேரூழிகாலத்து உலகம் கடலால் சூழப்பட்ட மொழுது எம்பெருமான் அறுபத்து நான்கு கலைகளையும் ஆடையாக உடுத்திஓம்எனும் பிரணவதோணியில் அம்மை அப்பனாக எழுந்தருளி வந்தபொழுது அந்த ஊழியிலும் அழியாத இத்தலமே மூலமென்று தங்கினார். ஆகையினால்திருத்தோணிபுரம்என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது. இத்தலத்திற்குரிய பன்னிரு பெயர்களையும் அதன் காரணங்களையும் பல்பெயர்ப் பத்து எனும் தக்கேசிப்பண்ணில் அமைந்த திருப்பிரமபுரப்பதிகத்தில் விளக்குகிறார் ஞானசம்பந்தர்.
அவை பின்வருமாறு: -
1.     பிரமபுரம்பிரமன் வழிபாடு செய்து உய்ந்த காரணத்தால் பெற்ற பெயர்.
2.     வேணுபுரம் – (வேணுமூங்கில்) இந்திரன் சூரபத்மனுக்கு அஞ்சி இறைவனை பூஜிக்க இறைவன் மூங்கிலாய் முளைத்திருந்தமையின் வேணுபுரமாயிற்று.
3.     திருப்புகலிசூரபத்மனுக்கு அஞ்சிய தேவர்கள் அடைக்கலமாகப் புகுந்த இடமாதலால் புகலியாயிற்று.
4.     திருவெங்குரு – (வெங்கோதருமன்) செங்கோல் ஏந்தி நல்லாட்சி நடத்திய இயமன் பல உயிர்கட்கும் செய்யும் ஆட்சியின் உண்மையை அறியப்படுத்த இத்தலத்தில் இறைவரைப் பூசித்து அருள் பெற்றதால் வெங்குரு எனப் பெயர் வந்தது. சுக்கிரன் பூஜித்து தேவகுருவிற்கு இணையாகப் பேறு பெற்றமையாலும் இப்பெயர் உளதாயிற்று.
5.     தோணிபுரம்பிரணவத்தோணியில் எம்பெருமான் அம்மையுடன் வந்து தங்கிய இடமானதால் திருத்தோணிபுரம்.
6.     திருப்பூந்தராய் -   சங்கநிதி, பதுமதிநி என்ற இரு தெய்வங்கள் பூமாலையாய் இருந்து பூஜித்தமையாலும், ஆதிவராஹமான திருமால் தன் கொம்பில் பூமியை ஏற்று வருத்திய பழி நீங்கவும், இரணியனைக் கொன்ற பழி நீங்கவும் பூக்களைக் கொண்டு பூஜித்தமையாலும் இப்பெயர் பெற்றது.
7.     சிரபுரம் பாற்கடலினின்று கடைந்த அமுதத்தினை மோகினியான திருமாலிடமிருந்து தேவர்களுடன் கலந்து முறையின்றி உண்ட சிலம்பனின் சிரம் மோகினியான திருமாலால் வெட்டப்பட்டது. அத்தலை மாத்திரமான இராகு இத்தலத்தில் பூஜித்துப் பேறு பெற்றமையால் உண்டானது இப்பெயர்.
8.     புறவம்சிபிச்சக்கரவர்த்தியின் தசையினால் வாழ்வு பெற்ற புறா அப்பாவம் போக்க வழிபட்ட தலம். கெளதம் முனிவர் சாபத்தால் புறா வடிவு பெற்ற பிரசாபதி முனிவன் பூஜித்துப் பெற்ற தலமுமாம்.
9.     சீர்காழிகாளிதன் எனும் பாம்பும், நடனத்தில் தோல்வியடைந்த காளியும் பூஜித்துப் பேறு பெற்ற தலமாதலால் உண்டானது இப்பெயர்.
10.    சண்பைநகர்துருவாச முனிவர் சாபத்தால் சண்பைக் காடொன்று தோன்ற அப்புற்களையே ஆயுதமாகக் கொண்டு யாதவகுமாரர் போர் செய்து மடிய அப்பழி நீங்க துருவாசர் பூஜித்துப் பேறு பெற்றதால் இப்பெயர் பெற்றது.
11.    கொச்சைவயம்பராசரர் மச்சகந்தியைக் கூடியதால் ஏற்பட்ட நாற்றம் நீங்கும்படி பூஜித்துப் பேறு பெற்றமையால் இப்பெயர் உண்டாயிற்று. (கொச்சைநாற்றம்)
12.    கழுமலம்உரோமச முனிவர் வழிபட்டு உயிர்கள் மலங்கழுவும் வரம் பெற்றமையால் கழுமலம் என்ற பெயர் பெற்றது. இப்பன்னிரு பெயர்களையும் முறையே தொகுத்துக் கூறும் பெரியபுராணப் பாடலைக் காண்க.
                பிரமபுரம் வேணுபுரம் புகலிபெரு வெங்குருநீர்ப்
       பொருவில்திருத் தோணிபுரம் பூந்தராய் சிரபுரமுன்
       வருபுறவஞ் சண்பைநகர் வளர்காழி கொச்சைவயம்
       பரவுதிருக் கழுமலமாம் பன்னிரண்டு திருப்பெயர்த்தால்.
      இவ்வாறு பல காரணப்பெயர்களைக் கொண்ட திருத்தலத்தில் அவதரித்த ஞானசம்பந்தரின் அவதார தினத்தைக் கொண்டாட, அவர் இல்லத்தில் ஏற்பாடாகிக் கொண்டிருக்கும் வேளையில், சிவபாதஹிருதயர் திருக்குளத்திற்கு நீராடச் செல்கின்றார். பிள்ளையார் தானும் வருவேன் என அடம்பிடித்து உடன் செல்ல, அவரைக் குளக்கரையில் நிறுத்தி விட்டு நீரினுள் இறங்கி அகமர்ஷண மந்திரத்தை மனதில் நிறுத்தி நீரினும் மூழ்கியதும் தந்தையைக் காணாத குழந்தை, ‘அம்மே’ ‘அப்பாஎன அழத்தொடங்குகிறது. குழந்தையின் அருளை உலகம் அறியும் காலம் வந்து விட்டதாலும், தம் பக்தரான சிவபாதஹிருதயரின் வேண்டுகோளை நிறைவேற்றும் வேளை வந்து விட்டதாலும், சிவபெருமான் அம்மையுடன் இடப வாகனத்தில் தோன்றிப் பிள்ளையின் அழுகையை நிறுத்தும் பொருட்டும், பிள்ளை சிவஞானம் பெறும் பொருட்டும், அம்மையை நோக்கிப்பொற்கிண்ணத்தில் முலைப்பாலைக் கறந்தூட்டுகஎன ஆணையிடுகிறார். விநாயகரும், முருகரும் வாய் வைத்து அருந்தாத முலையையுடைய அம்மை (இக்காரணம் பற்றியே திருவண்ணாமலையில்உண்ணாமலை அம்மைஎன அழைக்கப்படுகிறார்) சம்பந்தருக்குப் பாலை சிவஞானத்தோடு குழைத்து பொற்கிண்ணத்தில் ஏந்தி அருந்தக் கொடுக்கிறார்.
      இங்ஙனம் அம்மையப்பரால் பால்கொடுத்து ஆட்கொள்ளப்பட்டதால் இவருக்கு ஆளுடைய பிள்ளையார் என்னும் நாமமும் ஞானசம்பந்தர் எனும் நாமமும் வழங்கலாயிற்று.
                யாவருக்குந் தந்தைதாய் எனுமிவரிப் படிஅளித்தார்
       ஆவதனால் ஆளுடைய பிள்ளையா ராய்அகில
       தேவருக்கும் முனிவருக்குந் தெரிவரிய பொருளாகும்
       தாவில்தனிச் சிவஞான சம்பந்த ராயினார்.

      இவர் பெற்ற ஞானத்தின் தன்மையையும் சிறப்பையும் பின்வரும் பெரியபுராணப்பாடல் தெளிவாக்குகின்றது.
                சிவனடியே சிந்திக்கும் திருப்பெருகு சிவஞானம்
       பவமதனை அறமாற்றம் பாங்கினிலோங் கியஞானம்
       உவமையிலாக் கலைஞானம் உணர்வரிய மெய்ஞ்ஞானம்
       தவமுதல்வர் சம்பந்தர் தாமுணர்ந்தார் அந்நிலையில்.

      நீராடி முடித்துக் கரையேறிய தந்தையார், பிள்ளையின் வாயில் பால் அருந்திய சுவட்டைக் கண்டு சிறுகோல் கொண்டு, “யார் கொடுத்த பாலை உண்டாய்என கோபத்தோடு வினவுகிறார். குழந்தையை கண்டிப்பது பெற்றோரின் கடமையல்லவா! சிறுகுழந்தை யார் கொடுப்பினும், தன் அறியாமையால் ஏற்றுக்கொண்டு விடும். அக்காரணத்தினால் பல தீங்குங்கள் நேரலாம். அதை அறிய வைப்பது பெற்றோரின் கடன். இதையே செய்ய எண்ணுகிறார் சிவபாதஹிருதயர். தந்தையின் கேள்விக்கு பாலறாவாயினரான சம்பந்தர் பதிலுரைக்கிறார். அவை ஓரிரு வரிகளில் அல்ல. தேமதுரத் தமிழில் பண்ணுடன் ஒரு திருப்பதிகமாக வெளி வருகிறது.
      சேக்கிழார் பெருமான் தனது பெரியபுராணத்தில் ஞான சம்பந்தரைப்பற்றிக் குறிப்பிடுகையில்தோஎன அவர் முதல் எழுத்தை கூறக் காரணம் விளக்கியுள்ளார். ‘மறை முதல் மெய்யுடன் எடுத்டஹ் எழுதுமறைஎன்பதால், வேதம் பயின்ற மரபில் வந்து தமிழ் வேதம் தந்த இவர், காயத்திரி மந்திரத்தின் முதல் எழுத்தாகிய தகரத்தின் மீது (தத்ஸவிதூர்வரேண்யம்) பிரணவத்தின் முதலெழுத்தை (ஓம்) சேர்த்து தொடங்கியிருப்பது அறிந்து இன்புறத்தக்கது. இதை வெள்ளைவாரணர் தனது பன்னிரு திருமுறையில் தமிழ் என்பதின் தகரத்துடன் ஓம் எனும் பிரணவத்தைச் சேர்த்துதோஎனச் சம்பந்தர் தொடங்கியுள்ளார் எனக்குறிப்பிடுவதும் இன்புறத்தக்கதே. இதில்தோடுஎன ஆரம்பிக்கும் காரணம் பிள்ளையாரின் அழுகை ஒலி எம்பெருமானின் செவியில் நுகரப் பெற்று, அம்மையிடம் பாலைக் கொடுக்கும்படி ஆணையிட்டதாலும், அந்தக்கருணைக்கு இருப்பிடமான பெண் பாகத்திற்கு உரியது தோடு என்பதாலும், அதை முன்னே வைத்துப் பாடினார். சம்பந்தர் இவ்விளவயதிலேயே சன்மார்க்க நெறிகளில் நாயகநாயகி பாவத்தில் சிவபிரானைஎன் உள்ளம் கவர் கள்வன்எனப்பாடுவதில் பக்தியின் தீவிரம் வெளிப்படுகிறது. ‘கள்வன்என்பது, இவ்வுலக உயிர்கள் தோறும் மறைந்திருந்து இன்ப துன்பங்களை அனுபவிக்கச் செய்வதால் அவ்வாறு அமைக்கிறார். அவர், இடபவாகனத்தில் ஏறி வந்ததனால்விடை ஏறியோன்என்கிறார். ‘துவெண்மதிஎன்பது களங்கமில்லாத மதிரைக் குறிப்பிடுகிறது. வெண்மையே களங்கமில்லாததற்கு அடையாளம், ‘காடுடைய சுடலைப்பொடிப் பூசிஎன்று வருவது சுடுகாட்டில் உள்ள சாம்பலைப் பூசியவன் என்பதாகும். உலகில், ‘ஒருகாலத்தில் எல்லாம் சாம்பலாகவே இம்மண்ணில் முடிய வேண்டும்எனும் தன்மையை வெளிக்காட்ட இவ்வுடலில் சாம்பலைப் பூசியிருப்பவன். இதுவே திருநீற்றின் விளக்கமும். உலக உயிர்களின் நிலையாமையையும், சிவத்தின் நிலைத்த தன்மையையும் உணர்த்துவது திருநீறாகும். திருநீற்றைப் போற்றியே சம்பந்தர் பெருமான், ‘திருவால வாய்ப்பதிகத்தில் பாடியுள்ளார். (‘திருமந்திரம்பாடிய திருமூலரும், தனது மூவாயிரம் பாடல்களில் முத்துப்போன்று ஒரே பாடலில் திருநீற்றின் பெருமைகளை விவரிக்கிறார்.) ‘ஏடுடைய மலரான் முனை நாட்பணிந்து ஏத்த அருள் செய்தஎன்பதுபல இதழ்கள் உடையமலரால் நான் உன்னை முன் பணிந்ததால் இவ்வருள் செய்தவாறுஎனப்தாகும். ‘பீடுடைய பிரமாபுரமேவிய பெம்மான் இவனன்றேஎன்பது, பல பெருமைகளை தன்னிடத்தில் பெற்ற பிரமாபுரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான் அன்றோ (தனக்குப் பாலைப்புகட்டியவன் என்கிறார்.)
                தோடுடையசெவி யன் விடையேறியோர் தூவெண்மதிசூடிக்
       காடுடையசுட லைப்பொடுபூசியென் னுள்ளங்கவர்கள்வன்
       ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தவருள்செய்த
       பீடுடையபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

      இவ்வாறே இரண்டாவது பாடலில் முற்றிய ஆமை ஓட்டையும், இளமையான நாகத்தையும், பன்றியின் கூரிய கொம்பு ஆகியவற்றையும் அணிந்து, உலர்ந்து போன மண்டையோட்டை பாத்திரமாக ஏந்தி, அதில் பிச்சையேற்று எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் யான் எனின், உலக நூலகளைக்கற்று, கேட்டு அடங்கி அவ்வாறே இறைவன் புகழையன்றி மற்றதைக் கல்லாத பெரியோர்களாலேயே தொழுதற்கு உரியவனானவனும் (‘கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்கற்றவர்கள் உண்ணுங்கனியே போற்றிஎனும் வாக்கியங்கள் இங்கு ஒப்பு நோக்க வல்லன) இப்படிப்பட்ட கற்றல், கேட்டல், நிற்றலான வழியில் செல்பவர்க்கு அருள் புரிபவனும் இடபவாகனத்தில் ஏறி பிரமபுரத்தில் மேவி இருப்பவனும் ஆகும் என்கிறார்.
                முற்றலாமையின் நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு
       வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
       கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால்தொழுதேத்தப்
       பெற்றம்ஊர்ந்தபிர மாபுரம்மேவிய பெம்மானிவனன்றே.

      மூன்றாவது பாடலில் நீர் நிறைந்து கங்கை நதியைத் தாங்கியுள்ள சடையும் ஒளி பொருந்திய வெண் மதியையும் சூடிக் கையில் அடுக்கப்பட்ட வளையல்கள் கழன்று விடும்படியாக மனதைக் கொள்ளைக் கொண்ட கள்வன் யாவன் எனின், தலங்கள் பலஉள்ள இப்பூமியில் ஒப்பற்ற உயர்ந்த பதி என்று புகழ் பெற்ற பிரமாபுரத்தில் உறைகின்ற பெருமானே ஆவான்.
                நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி
       ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
       ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரி துவென்னப்
       பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

      நான்காம் பாடலில் விண்ணில் செருக்குடன் திரிந்த பொன் வெள்ளி இரும்பாலாகிய மதில்களை, மேருவை வில்லாக்கி, ஆதிசேஷனை நாணாக்கி எய்து துளைத்தது மட்டுமின்றி, பிரமம் கபாலத்தில் பிச்சை ஏற்று வந்து என் உள்ளத்தினைக் கொள்ளைகொண்ட கள்வன் யாவன் எனில் பாம்பும் கொன்றை மலரும் விளங்கும் மார்பினராய், இடப்பாகத்தில் உமை அம்மையும் வைத்து இப்பிரமபுரத்தில் மகிழ்ச்சியுடனிருக்கும் பெரும்மானேயாவான் என்கிறார்.
                விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்
       உண்மகிழ்ந்து பலிதேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்
       மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பிற்
       பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

      ஐந்தாவது பாடலில் பெண்ணொரு பாகத்தை உடையன், சடைமுடியுடையவன், எருதின்மீது வீற்றிருந்து பவனி வருபவன், யாவராலும் போற்றப்படுபவன். அவ்வாறு அமர்ந்து என் உள்ளத்தைக் கொள்ளைக் கொண்டவன், ஒரு காலத்தில் கடலால் சூழப்பட்டும் அழியாது தோணிபோல் மிதந்து தோணிபுரம் எனப் பெயர் பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெம்மான் இவன்தான் என்கிறார்.
                ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன
       அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
       கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததோர் காலம்மிது வென்னப்
       பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

      ஆறாவது பாடலில் ஒலி உருவாகிய வேதங்களை ஓதுதலை உடையவராயிருப்பதுடன், திருக்கூத்தினையும் உடையவராயும், தவறிழைத்தாரைக் தண்டிப்பதற்க்கா ஏந்திய மழு என்ற தீப்பிழம்பகிய ஆயுதத்தை ஏந்தியவரும், என் முன் கையில் செறிந்து கலந்திருந்த சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு (உடம்பு) நனி கருங்கல் எனும் மெய்ப்பாடு உணர்த்தியவாறு) என் உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன், மணம் மிகுந்ததுமான பொழில்கலடர்ந்தும் நீண்டும் உயர்ந்த சோலைகளிடத்து தன் ஒளிக்கிரணங்களைச் சிந்தும் சந்திரன் தவழும் பிரமபுரத்தை விரும்பி உறைகின்ற பெருமானாகிய இவனே என்கிறார்.
                மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி
       இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்
       கறைகலந்தகடி யார் பொழினீடுயர் சோலைக்கதிர்சிந்தப்
       பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானி வனன்றே.

      ஏழாவது பாடலில் சடையில் கலந்திருக்கின்ற கங்கையையுடையவன், திருக்கரத்தில் அனலையுடையவன், ஆடையின் மேல் இறுகக்கட்டிய கச்சையாகிய பாம்பை உடையவன் ஊடத்தக்க பெண்ணும், அஞ்சத்தக்க எரி, அரவம் முதலியவற்றை அணிந்து திரிபவராயிருந்தும் என் உள்ளத்தைக் கவர்ந்தார் என்றது பெருமானின் பேரழகின் திறத்தையும், கருணையையும், எல்லா உயிரையும் பகை நீக்கியாளும் வன்மையையும் வியந்தவாறு. அப்பேர்ப்பட்ட பெம்மான் கடலோடு கலக்கின்ற உப்பங்கழிகள் சூழ்ந்த குளிர்ந்த சோலைகளில் அழகிய பொன்நிறம் பொருந்திய சிறகுகளை உடைய அன்னங்கள் தங்கள் பெடைகளை தழுவுகின்ற இப்பிரமபுரத்தில் எழுந்தருளியவனாவான்.
                சடைமுயங்குபன லன்னலனெரி வீசிச்சதிர்வெய்த
       உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்
       கடன்முயங்குசுழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிற கன்னம்
       பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

      இவ்வாறு முதல் ஏழு பாடல்களிலும், ஞானப்பால் கொடுத்த இறைவனது அடையாளங்களைக் கூறியபின் எட்டாவது, ஒன்பதாவது பாடலில், இம்மண்ணுலக மக்களும் தேவர்களும் தவறு செய்தும், பின் தம் தவறுகளுக்கு வருந்தி இறைவனைச் சரணடைந்தால், அவர் பெரும் கருணை காட்டி, ஆட்கொண்டு, அருள் செய்வார் என்பதை விளக்குகிறார்.
      எட்டாவது பாடலில் திருக்கயிலாய மலையைப் பெயர்த்தெடுக்க விழைந்த இராவணனை அம்மலையின் அடியில் சிக்கவைத்து பின் அவன், தன் தவறுணர்ந்து, சிவபிரானைத் துதித்து சாமகானம் பாட, அவனுக்கு அருள் புரிந்தவரான எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், துயர் விளங்கும் இப்பூமியில் ஊழியிலும் அழியாது புகழோடு விளங்கும் பிரம்மா புரத்தில் வீற்றிருக்கும் பெருமானே ஆவான் என்றவாறு.
                வியரிலங்குவரை யுந்தியதோன்களை வீரம்விளைவித்த
       உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்
       துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்
       பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

      ஒன்பாவது பாடலில் பிரம்மாவும், திருமாலும் முறையே சிவபெருமானின் அடிமுடி காணும் பொருட்டு (அவ்வாறு காண்பவரே உயர்ந்தவர் என்ற எண்ணத்தைக் கொண்டு) தன் நிலைமைக்கும் கீழ்ப்பிறப்பான பறவை உருவமும், பன்றி உருவமும் எடுத்து தேடிச்செல்ல, அவர்களிருவரும் தோல்வியுற தீப்பிழம்பாக உயர்ந்து என் உள்ளத்தைக் கவர்ந்து நின்றவன். (பின் அவ்விருவரும் ஐந்தெழுத்தோதி பேறு பெற்றனர்) வானோர்களும், உலகத்தாரும் உயர்ந்து பேணும்படி, பிரம்மபுரத்தில் அமர்ந்திருக்கும் இப்பெருமானேயாம் என்றவாறு.
                தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்
       நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்
       வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்
       பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.
      பத்தாவது பாடலில் புத்தரும் அறிவற்ற சமணரும் புறங்கூற, வேத நெறியில் நில்லாத உலகத்தார், அப்பழிக் கூற்றுக்கு ஏற்றவாறு தமக்குத் தோன்றியதைச் சொல்லவும் பிச்சையேற்று, எனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டவன், (யாவன் எனின்) மதம் பொருந்திய யானை வருந்த அதன் தோலை உரித்துஇது என்ன மாயம் எனுமளவிற்குபோர்த்தி கொண்டவரும், பித்தரைப் போன்றவருமான இப்பிரமபுரத்தில் மேவியிருக்கும் பெருமானேயாம்.
                புத்தரோடு பொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா
       ஒத்தசொல்லஉல் கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்
       மத்தயானைமறு கல்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்
       பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

      இவ்வாறு பத்துப்பாடல்களில் இறைவனைப் பற்றிய விவரங்கள் இன்னிசையுடன் பாடிய சம்பந்தர் கடைச்ப் பாடலான பதினொன்றாவதைத் திருக்கடைப்பாகப் பாடியுள்ளார். அதில் ஒருமைப்பட்ட மனத்துடன், மறைகளில் வல்ல பிரமனால் இறைவர் பூசையின் பொருட்டு உண்டாக்கப்பட்ட தாமரை மலர்கள் நிறைந்து விசாலமான பிரம்தீர்த்தம் எனும் பொய்கையையுடைய பிரமாபுரத்தில் விரும்பியிருக்கும் சிவனை சிவநெறி காட்டும் ஞானசம்பந்தரால் ஆக்கப்பட்ட தமிழ்ப் பாக்களால் ஓதவல்லவர்கள் தங்கள் பழவினைகளை போக்கிக் கொள்ளுதல் எளிதாம். இப்பாக்களால் சிவபிரானைத் துதித்தலின் பலன் கூறியவாறு.
                அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய
       பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை
       ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த
       திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.

      திருஞானசம்பந்தப் பிள்ளையார் தமது இளம்பருவத்தில் நிகழ்ந்த இவ்வற்புத நிகழ்ச்சியை பின்னொரு காலத்தில் நினைத்து போற்றும் நிலையில், தாம் பாடிய திருப்பதிகமொன்றில் குறிப்பிடுகிறார். இவர் தலயாத்திரையாகப் பல தலங்களையும் பாடிச்சென்று வந்த காலை மதுரையம்பதியில் தங்கிய வேளையில் இவரது தந்தையார், இவரைக் காணும்பொருட்டு மதுரையம்பதிக்கு எழுந்தருளுகின்றார். தந்தையாரைக்கண்ட பிள்ளையார், சீர்காழிப்பதியில் எழுந்தருளிய இறைவனது நலத்தினை, ‘மண்ணில் நல்ல வண்ணம்எனும் பதிகத்தைப் பாடி வினவும் விதமாக உள்ளது. அப்பதிகத்தின் இரண்டாவது பாடல்.
                போதையார் பொற்கிண்ணத் தடிசில் பொல்லாதெனத்
       தாதையார் முனிவுறத் தானெனை யாண்டவன்
       காதையார் குழையினன் கழுமல வளரகர்ப்
       பேதையா ளவளொடும் பெருந்தகை யிருந்ததே
      அழகிய பொற்கிண்ணத்திலே ஊட்டியருளிய பாலடிசில்  பொல்லாதென்று கூறித் தந்தையார் வெகுளும்படி என்னை ஆட்கொண்டருளிய பிரமபுரத்து இறைவனாகிய பெருந்தகை பிராட்டியுடன், கழுமல வளநகரில் எழுந்தருளியிருக்கின்றதா? எனத் தன் தந்தையை நோக்கி கேட்பதாக அமைந்தது.
      

No comments:

Post a Comment