Friday, October 14, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
சிவலீலார்ணவத்தில் மாணிக்கவாசகர் சரிதம்
ஶ்ரீ பி. எஸ். ஸுப்ரமண்யம், இஞ்ஜினீயர், சென்னை.

சிவஞான பூஜா மலர் அக்ஷய, பிரபவ - விபவ ஆண்டு - (1986, 1987-1988)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      தொண்டைமண்டலத்திலுள்ள அடையப்பலம் கிராமத்தில் ஆவதரித்து சிவோத்கர்ஷ கிரந்தங்களும் இதர கிரந்தங்களும் எழுதி பரம சிவபகதராக இருந்துவந்த ஶ்ரீ அப்பய்ய தீக்ஷிதரின் தம்பியின் பேரனான ஶ்ரீ நீலகண்ட தீக்ஷிதரும் தன் பெரிய பாட்டனார் போலவே பரம சிவபக்தராக இருந்து பல கிரந்தங்களை இயற்றி மதுரையில் திருமலைநாயக்க அரசனிடம் மந்திரியாகப் பணியாற்றி அவ்வரசனின் அன்பையும் பெருமிக்க மரியாதையையும் பெற்றவராகி தன் கடைசி நாட்களை பாண்டிய நாட்டின் தென் பகுதியில் தாம்ரபர்ணி நதியின் வடகரையில் உள்ள பாலாமடை கிராமத்தில் கழித்து அங்கு ஸித்தியடைந்து ப்ரஹ்மீபூதாளாய் இன்றைக்கும் பிரகாசித்து வருகிறார் என்பது பிரஸித்தமே. அந்த மஹான் உலகுக்குத் தந்தருளியிருக்கிற பல கிரந்தங்களில்சிவலீலார்ணவம்என்பது மிலவும் சிறந்தது. ஶ்ரீரங்கம் ஶ்ரீ வாணீ விலாஸ் பதிப்புப்படி 22 ஸர்க்கங்களில் 1998 சுலோகங்கள் கொண்டது. இக்காவியம் மதுரையம்பதியில் ஶ்ரீ மீனாக்ஷி ஸமேதராய் எழுந்தருளியுள்ள ஶ்ரீ ஸுந்தரேசுவரரின் லீலைகளை வர்ணிக்கிறது.
      மதுரை மாநகரிலும் (ஹாலாஸ்யக்ஷேத்ரம்) அதைச்சுற்றியுள்ள பகுதிகளிலும் ஶ்ரீ சோமசுந்தரக்கடவுள் தன்னுடைய பக்தர்களுக்கு அருள் புரிந்து, தீமைகளை நீக்கி, ஆட்கொண்ட செயல்கள், ஹாலாஸ்யமாஹாத்மியம், (ஸம்ஸ்கிருத நூல்) பரஞ்சோதி முனிவர் இயற்றியுள்ள திருவிளையாடற் புராணம் (தமிழ்) இவைகளில் மிக அற்புதமாக விவரிக்கப்பட்டுள்ளன. மனதை உருக்கக்கூடிய பாடல்களாகவும் உரைநடையாகவும், தென்பாண்டிநாட்டின் நாயகனான கண் சுமந்த நெற்றிக் கடவுளின் கீர்த்தியையும் அவன்பக்தர்களுத்தந்த கருணைத் தேனையும், வினைகடிந்ததையும், கன்னல் பெருக்குப்போலக் கூறுகின்றன இக்காவியங்கள். இவற்றைத்தழுவி ஶ்ரீ நீலகண்டதீக்ஷிதர் சிவலீலார்ணவக் காவ்யத்தை, பக்தியும், ஆனந்தமும் பெருகும்படி நவரஸங்களுடன் அமைத்து எழுதியுள்ளார். எல்லாவற்றிற்கும் சிகரமாக தனது சிவோத்கர்ஷசிவாத்வைதக் கொள்கையையும், உமாதேவியையும் பரமசிவனையும் எப்பொழுதும் சேர்ந்தே தியானிக்க வேண்டுமென்ற நியதியையும் மஹோன்னதமான சுலோகங்களால் வர்ணிக்கிறார். இதில் வேதநெறி, சைவநெறி, பக்திநெறிகளை அறியலாம். ஶ்ரீ சோமசுந்தரர் ஆன்மாக்கள் உய்யும் பொருட்டு எக்காலத்திற்கும் உண்மையெனப்படும்படி செய்தருளிய 64 திருவிளையாடல்களையும் நன்கு விளக்கிக்காட்டுகின்றன திருவிளையாடற் புராணமும், ஹாலாஸ்யமாஹாத்மியமும், சிவலீலார்ணவமும்.
      பரமேசுவரனுடைய லீலைகள் அனந்தம் அவைகளில் 64 லீலைகள் இக்காவ்யத்தில் காணலாம். பரமேசுவரியின் 64 கலைகளுக்கு ஸமமாக இந்த 64 லீலைகள் அமைந்தன போலும். ஹாலாஸ்ய க்ஷேத்திரத்தில் இன்றுவரையிலும் கொண்டாடப்படுகின்ற உத்ஸவங்கள் ஶ்ரீ நீலகண்ட தீக்ஷிதரால் நிர்ணயிக்கப்பட்டு, திருமலைநாயக்கரால் ஏற்றுக்கொள்ளப்பட்டவை என்பதை சரித்திரம் கூறும்.
      பாண்டிய தேசத்தின் பெருமையையும், தாமிரபரணி நதியின் மஹத்துவத்தையும், கதம்பவனமான மதுரையையும் வர்ணனை செய்து, அந்த வனத்தில் ஒரு கதம்பமரத்தடியில் ஸர்வாகமங்களுக்கும் தாத்பர்யபூதரான பரமேச்வரன் ஒரு லிங்கரூபமாக ஆவிர்பவித்திருக்கிறார் என்று குதூஹலமாகச் சொல்கிறார்.
                அஸ்தி க்ஷிதேராபரணாயமான:
              பாரேஸமுத்ரம் ஹி பாண்ட்யதேச: |
       ஆசாமகஸ்த்மாத்யுஷிதாம் கதோsபி
              ஸர்வோத்தரோ யோ ஜகதி ப்ரதீத: ||                [சிவ.லீ.2-1]

அகஸ்தியர் வஸிக்கும் திக்கான தக்ஷிணத்தில் அமைந்திருந்த போதிலும் அந்தப் பாண்டிய நாடானது ஸர்வஜத்திலேயும் உத்தரமாக (உத்தமமாக) இருக்கிறது.
                யத்ஸங்கமாதேவ பவந்தி முக்தா:
              ஸா ஜாஹ்னவீ ஸர்வஜனீனமேதத் |
       ததோ விது: தக்ஷிணஜாஹ்னவீதி
              தாத்ருக்விதாம் யத்ர ஹி தாம்ரபர்ணீம் ||           [சிவ.லீ.2-18]

கங்கையுடன் ஸங்கம்த்தால் ஜனங்கள் முக்தர்களாகிறார்கள் (முக்தா:) தாம்ரபர்ணி ஸங்கமத்தால் ஸமுத்திரத்தில் (முக்தாJ (முத்துக்கள்) உண்டாகின்றன. ஆகையினாலே தாம்ரபர்ணியை தக்ஷிண கங்கை என்று கொண்டாடுகிறார்கள்.
                தஸ்மின் விசாலே தருணேந்து மெளளே:
              ஆவாஸபூதம் பதமத்புதானாம் |
       வனம் ஜகத்பாவனமஸ்தி கிஞ்சித்
              நீபத்ருமாணாம் நிகஷா வ்ருஷாத்ரிம் ||             [சிவ.லீ.2-25]

இப்படிப்பட்ட தேசத்தில் பரமேசுவரனுக்குந்த  அத்புதமானதும், பரமபாவனமானதுமான ஒரு கதம்பவனம் இருக்கிறது.
       தஸ்மின் கதம்ப த்ருமமூல ஸிம்நி
              தப: பரீபாகபலம் ஜனானாம்
       ஆஸ்தே ஜகன்மங்களமங்கஜாரே:
              லிங்கம் தயாவிக்ரஹவத்தவ லிங்கம் ||            [சிவ.லீ.2-43]

      அங்கு ஒரு கதம்ப விருக்ஷத்தினடியில் சர்வஜனங்களின் தபஸ்ஸின் பலனாக உமையின்பாகன் சர்வமங்களமூர்த்தி தயையின் அடையாளமோவென்னும்படி ஒரு லிங்க ரூபமாக விளங்குகிறார். வேதங்களின் பல சாகைகளில் (கிளைகள்) பலவிதமான பலன்கள் (பழங்கள்) தோன்றிய போதிலும் எல்லா ஆகமங்களுக்கும் பலம் (பழம்) ஒன்று தான். அதுதான் கதம்ப விருக்ஷத்தின் அடியிலிருப்பது.
                சாகாஸு சாகாஸு பலாநி நாநா பரமார்த்தஸ்து |
       ஸர்வாகமானாம் பலமேகமேவ தச்ச கதம்பமூலே |      [சிவ.லீ.2-33]
               
இவ்விதம் ஆவிர்பவித்த சுந்தரேசுவரர், இந்திரனுக்கு ப்ரம்மஹத்தி தோஷம் நீங்கச்செய்தது முதலாக வன்னிமரம், கிணறு, சிவலிங்கம் இம்மூன்றையும் சாக்ஷியாக வரவழைத்தது வரையுள்ள 64 திருவிளையாடல்கள் செய்தருளினார்.
இந்த 64 லீலைகளில் 58-வதிலிருந்து 61 முடிய சோமசுந்தரக்கடவுள் சிவனடியார் மாணிக்கவாகருக்கு அருள் செய்த வரலாறு. சிவலீலார்ணவத்தின் 21-வது சர்க்கம் முழுவதுமே மணிவாசகரின் சரித்திரம் தான். அபரிமிதமான பக்தியின் இயல்புகளும் ஆச்சரியம், பச்சாத்தாபம், ஏசல், ஏக்கம் முதலான காவ்யக்களைகளும், வேதவேதாந்த தத்வங்களும் நிறைந்து 104 சுலோகங்கள் கொன்டது இந்த சர்க்கம்.
உலக இலக்கியங்களுள் தலைசிறந்த ஒன்று என ஒப்புக் கொள்ளப்பட்டிருக்கும் திருவாசகத்தைத் தந்தருளிய மணிவாசகப் பெருமானின் சரித்திரத்தைச் சொல்லும் தீக்ஷிதரின் வாக்கு வாசிப்போருக்குப் பேரானந்தத்தைக் கொடுக்கும். விண்ணுக்கொரு மருந்தும் வேதப்பொருளுமான பரமசிவனை நினைப்பது ஆனந்தம், தீக்ஷிதரின் வாக்கால் அநுபவிப்பது பரமானந்தம், அதிலும் தீக்ஷிதரின் வாக்கால் அமைந்த மணிவாசகரின் சரித்திரம் பேரானந்தம்.
மாணிக்கவாசகர் மதுரையம்பதிக்குச் சுமார் 12 மைல் தூரத்திலுள்ள திருவாதவூர் என்கிற கிராமத்தில் பிறந்தவர். சிவபக்தி நிறைந்து பிராம்மண குலத்தில் தோன்றினவர். மஹாமேதை. சகல சாஸ்திரங்களிலும் வியுத்பன்னர். திருவாதவூரி பிறந்தமையால் திருவாதவூரர் (வாதபுரீஸ்வரர்) என்று அழைக்கப்பட்டார். திருவாசகத்தைப் பாடினதால், மாணிக்கவாசகர், மணிவாசகப் பெருமான் என்று அழைக்கப்படுவர். அவர் காலத்தில் மதுரையை ஆண்டுவந்த அரிமர்த்தன பாண்டியனுக்கு திருவாதவூரர் ஸபா பண்டிதராகவும், வித்வத் பூஷணமாகவும், மந்திரியாகவும், இந்திரனுக்கு பிருஹஸ்பதிபோல இருந்துவந்தார். பூர்வஜன்ம வாஸனையினால் ஏற்பட்ட சிவபக்தி மேலும் பெருகி அரசனால் குதிரைகள் வாங்குவதற்காகக் கொடுக்கப்பட்ட பணத்தை, சிவகைங்கர்யங்களில் செலவு செய்து, அதனால் அரசனின் துன்புறத்தலுக்கு ஆளாகி, சோமசுந்தரக் கடவுளின் கருணையால் ஆட்கொள்ளப்பட்டு, கடைசியில் சிதம்பர க்ஷேத்திரத்தில் சிவனுடன் இரண்டறக் கலந்தார் என்பது அவருடைய சரித்த்ரம். சுந்தரேஸ்வரர் மணிவாசகரை ஆட்கொண்டவிதமோவெனில், நரியைப் பரியாக்கியது, பரியை நரியாக்கியது, வைகை ஆற்றில் பெருக்கு உண்டுபண்ணினது, பிட்டுக்கு மண் சுமந்ததுஎன்ற நான்கு லீலைகளில் தெளிவாகவுள்ளது தீக்ஷிதர் திருவாதவூரரை,
ஆஸ்தான பூஷா மணிரஸ்ய ராக்ஞ:
       ஸர்வாகமக்ஞ: ஸசிவ: ஸுமேதா: |
ஆஸித்த்விஜோ வாதபுரீச நாமா
              வாசஸ்பதி: வாஸவஸம்ஸதீவ ||                   [சிவ.லீ.21-2]

என்றவாறு அறிமுகப்படுத்துகிறார். பாண்டியன் ஏராளமாகப் பணத்தை திருவாதவூரரிடம் தந்து உயர்ந்த குதிரைகளை வாங்கிக் கொண்டு வரவேண்டுமென்று சோழ தேசத்திலுள்ள துரைமுகங்களுக்குச் செல்லும்படி ஆஞ்ஞாபித்தார்.
வாதவூரரும் சில நாட்கள் பிரயாணம் செய்து சமுத்திரத்திலிருந்து மேற்குதிக்கில் ஒரு யோசனை துரத்தில், மா, வாழை இவைகள் நிறைந்து ஒரு பரமேசுவர க்ஷேத்திரத்தைக் கண்டார்.
மாகந்த ரம்பாவன ஸாந்த்ரமேகம்
              மாஹேச்வரம் தாம ஸமாலுலோகே ||              [சிவ.லீ.21-16]

பக்தகோடிகள் நிறைந்த அந்த வல்மீகநாதரின் இடத்தைப் பார்த்ததும் வாதபுரீசுவரருக்கு வர்ணிக்க முடியாத ஸ்வாபாவிகமான அந்தக்கரண சுத்தியானது பூர்வஜன்ம புண்யவசத்தால் ஏற்பட்டது.
அத்யாஸிதம் பாசுபதை: மஹத்பி:
              ஆலக்ஷ்ய வல்மீகபதே: பதம்தத் |
       அப்ராக்ருதீம் பாக்யவசாத் ததோயம்
              ஆத்யாத்மிகீம் காமபி சுத்திமூஹே ||                [சிவ.லீ.21-17]

      அங்கு மதுரமான வார்த்தைகளினால் நூற்றூக்கணக்கான மஹரிஷிகளுக்கு உபதேசம் செய்து கொண்டிருக்கிற கருணையே வடிவெடுத்த ஆசார்ய மூர்த்தியாக சந்திரசூடனைத்தன் கண்ணால் பிரத்யக்ஷமாகப் பார்த்தார்.
                ஆஸ்தாய காருண்யரஸைகரூபாம்
              ஆசார்யமூர்த்திம் மதுரை: வசோபி: |
       ப்ரபோதயந்தம் சதசோ மஹர்ஷீன்
              ப்ரத்யக்ஷம் ஐக்ஷிஷ்ட சந்த்ரசூடம் ||             [சிவ.லீ.21-18]

கண்களில் நீர்ததும்ப ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்த வாதபுரீசுவரரை தூரத்திலிருந்து பார்த்து பரமகருணையுடன் அவரை அருகில் வரும்படியாக பரமேசுவரன் ஆஞ்ஞாபித்தார். அவருடைய உன்னதமான மனபக்குவ நிலையை ஊஹித்துப் பார்த்து சிவஞான தீக்ஷையால் அவரை ஆட்கொள்ளவும் செய்தார்.
ஸம்பாவயன் நைஷ்டிக தீக்ஷயா தம்
              சந்த்ரார்த்தசூட: ஸ்வயம் அன்வக்ருஹ்ணாத் ||     [சி.லீ.21-20]

இந்த சம்பவத்தை மணிவாசகப் பெருமானே தனது திருவாசகத்தில் சொல்லலுற்றார்: -
மறையோர் கோல நெறியே போற்றி”                    (போ.. 189)
மெய்தரு வேதியனாகி வினைகெட,
கைதரவல்ல கடவுள் போற்றி”,                                                         (போ.. 88-89)

மாஹேச்வர ஆச்ரமத்தை அடைந்ததும் வாதபுரீசுவரர் ஸகல பந்தங்களிலிருந்தும் அறுபட்டவராய் குதிரை வாங்கிக் கொண்டு வந்திருந்த எல்லா திரவியங்களாலேயும் பரமேசுவரனை ஆராதித்து, அந்த ஆராதனையே தன் அரசனுக்கு ரக்ஷை, ஸகல மங்களங்களையும் தரும் என்ற திருப்தியுடன் இருந்து வந்தார். சிவாராதனையின் பலம் என்ன? நசித்துப் போகக்கூடிய ஸாதனங்களின் பலம் என்ன? அரசனின் செல்வமும் நல்ல வழியில் ஸம்பாதிக்கப்பட்டதனாலே ஸத்கார்யமான சிவாராதனைக்கு உபயோகப்பட்டது. அரசன் தூதர்களை அனுப்பி அவர்கள் மூலம் குதிரைகள் வாங்கியாய்விட்டதா என்று கேட்டதற்கு வாதபுரீசுவரும் குதிரைகளுடன் வந்து சேருகிறேன் என்று பரமேசுவரனின் ஆஞ்ஞைப்படி பதில் சொல்லியனுப்பினார்.
மறுபடியும் பரமேசுவரன், ‘தானே விலைமதிக்க முடியாத கணக்கற்ற குதிரைகளைக்கொண்டு வருகிறேன், அரசனை ஸந்தேகப்படாமல் இருக்கச்சொல்என்று நிச்சயமாகச் சொல்லவே, வாதபுரீசுவரர் அதை பூர்ணமாக நம்பி மதுரைக்குத் திரும்பி வந்து அரசனிடம் குதிரைகள் வந்துவிடும் என்று வாக்குறுதி செய்தார். ஸுந்தரேசுவரர் ஆலயத்துக்குச் சென்று தான் அரசனிடம் சொன்ன வாக்குறுதியை ஸுந்தரேசுவரரிடமும் தெரியப்படுத்தினார். மறுநாள் ஸாயங்காலம் வரையிலும் குதிரைகள் வரவில்லை. பாண்டியனும் குதிரைகள் வரும் திக்கை நோக்கிப் பார்த்துப் பார்த்து அலுத்துப்போய் ரொம்பவும் கோபங்கொண்டார்.
இந்த இடத்தில் தீக்ஷிதர், ராஜகார்யங்களில், கெட்ட எண்ணம் படைத்தவர்கள் எந்த ஸந்தர்ப்பத்தையும் பயன்படுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதைச் சித்தரித்துக்காட்டுகிறார். (தீக்ஷிதரும் இந்தவிதமான பல தொல்லைகளுக்கு ஆளானார் என்கிறது அவருடைய சரித்திரம்) கோள் சொல்லுபவர்கள், க்ரூரமான மனமுள்ளவர்கள், ஸந்தர்ப்பவாதிகள் பாண்டியனின் கோபத்தைத் தூண்டிவிட்டார்களாம். வாதபுரீசுவரரை துன்புறுத்தினார்கள். வாதபுரீசுவரரும் துன்பத்தைப் பொறுக்க இயலாமல் பெரிதும் புலம்பினார்.
ஹே ப்ரபோ, பரமேசுவரா, நீ என்னுடைய கதறலைக் கேட்காமலிருக்கிறாயே, விஷ்ணு பிரம்மாதிகளுடன் ஏதாவது ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறாயா, அல்லது பார்வதியின் மதுரமான பேச்சில் மயங்கி இருக்கிறாயா, நான் வெகுகாலம் மாயை, காமம், கர்மா இவை மூன்றினால் கட்டுப்பட்டு இருந்து வருகிறேன். இவைகளை நீ நீக்குவாய் என்ற உறுதியுடனிருக்கும் சமயம் இப்பொழுது நான்காவதாக இன்னொரு பந்தத்தில் தள்ளியிருக்கிறாயே, இது நியாயமா? காலகதி, கர்ம பலன் என்று எத்தனையோ பேர்கள் சொல்லுவார்கள். அவை என்னை என்ன செய்யமுடியுமென்று ஜகத்தையே த்ருணமாக நினைத்து உன்னையே சரண் அடைந்த எனக்கு இப்படி ஒரு தசை வந்திருக்கிறதே! இது உனக்குத் தெரியாதா என்ன, இதனால் வரும் கீர்த்தியோ, அபகீர்த்தியோ உன்னைச் சேர்ந்ததுதானே. நான் அரசனிடத்திலும் பயப்படவில்லை. அரசு சேவகர்களிடத்திலும் பயப்படவில்லை. அவர்கள் மரணத்திற்கும் மேல் என்ன செய்வார்கள்? ஆனால் இப்படி யமனிடம் அகப்பட்ட என்னிடத்தில் நீ உதாஸீனமாக இருப்பதினால் உன்னுடைய ஸ்தானம் என்னவகுமென்பதே என்னை நடுங்க வைக்கிறது.
உலகில் ஒன்றையே பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற நீதியைப் புறக்கணித்து இருவரைப் பிடித்துக் கொண்டேன். ஒருவரில்லாவிட்டாலும் ஒருவர் காப்பாற்றுவரரென்று. அதாவது உனது இரு திருவடிகளைப் பிடித்துக் கொண்டேன். எனக்கு இந்தப் பெரிய ஆபத்து வந்த சமயத்தில் இருவரும் என்னைக் காப்பாற்றவில்லை. என்னைக் காப்பாற்றவேண்டிய பொறுப்பை வலது பாதம் இடது பாதத்திற்கும், இடது பாதம் வலது பாதத்திற்கும் கொடுத்துவிட்டபடியால் இருவரும் என்னை உபேக்ஷை செய்து விட்டார்களோ என்று நினைக்கிறேன். நான் இப்பொழுது இருக்கும் நிலையில் ஞானயோகங்களினாலோ, கர்மானுஷ்டானங்களினாலோ, தபஸ்ஸினாலோ உன்னை ஸந்தோஷிக்கச் செய்ய முடியாது. அழுது, புரண்டு என்னுடைய ஏழ்மைத் தன்மையைக் காண்பித்தே உன்னை ஸந்தோஷப்படுத்தி, திரும்பவும் உறுதியாக என்னுடைய தாஸ்யப்பதவியை நன்கு வஹிக்கிறேன். (தாஸனாகவே இருக்கிறேன்) என்று கதறுகிறார். (சுலோகம் 21-32) மேலும்,
                ப்ராரப்தகர்மணி சலதி அவிலங்கனீயே
              பக்தி: கரியஷ்யதி கிமீசபதார்பிதேதி |
       துர்நிச்சயோ ஹததியாமிஹ துச்ரவோயம்
              நிந்தேவ தே மனஸி மே பரிவர்தமாந: ||            [சி.லீ.21-33]
               
தாண்டமுடியாத ப்ராரப்தகர்மா ஆட்டிக்கொண்டிருக்கும் பொழுது ஈசுவரனிடத்தில் அர்ப்பணம் செய்விக்கப்பட்ட பக்தியானது என்ன செய்யமுடியும் (ஒன்றும் செய்யமுடியாது) என்று கேள்வி கேட்கும் முட்டாள்களின் பேச்சுக்கள் உன்னை நிந்தனை செய்வதுபோலவே என்று என் மனம் எண்ணுகிறது. இந்த மன வேதனையை திருவிளையாடல் புராணத்திலும் பின் வருமாறு சித்தரிக்கிறார்.
ஊரார் உனைச்சிப்ப தோராய் என்றுன்னடிமைக்கு
ஆராய் அடியேன் அயர்வேன் அஃதறிந்தும் வாராய் ………
உன் தன்மை இதுவோ, பரமேட்டி.

மேலும் வாதவூரர், என்னைக் காப்பாற்றுவதற்கு நீ என்ன புதிதாக அவதாரம் எடுக்கவேண்டுமா, இது உனக்குப்பழக்கமில்லாததா அல்லது மல்லயுத்தம் செய்யவேண்டுமா, இவை ஒன்றுமே வேண்டாம், நீ மனஸினால் நினைத்தாலே போதுமே, ஆனால் ஒன்று தோன்றுகிறது, கணக்கிலடங்காத என் பாபங்கள் உங்களால் ஒன்றும் செய்யமுடியாதபடி ஜெயித்துவிட்டன. தவிரவும், என்னுடைய பக்தி திடமாக இருந்தால் இவ்விதக் கஷ்டங்கள் ஏற்படுமா (ஏற்படாது) என்கிற உண்மை என் அந்தரங்கத்தில் இருக்கத்தான் செய்கிறது. அந்த விஷயம் மற்ற யாருக்குத் தெரிடும்? நான் உயர்ந்த பக்திமான் என்றே உலகம் (உண்மை தெரியாமல்) சொல்லுகிறது. உன்னையும் பக்தனுக்குக் கட்டுப்பட்டவன் என்றும் சொல்லுகிறது. இந்த உலகப்பேச்சுக்காகவாவது நீ எனக்கு தயை செய்யமாட்டாயா? செய்யத்தான் வேண்டும்.
ஹே, சந்திரமெளளே! உன்னுடைய சரணங்களில் இந்த மதியீனன் ஒரு பண்டிதனைப்போல பாவித்துப் புலம்பியிருக்கிறனே, அதை மன்னிக்க வேண்டும். எனக்குப் பேச என்ன அதிகாரம் இருக்கிறது? என்னவோ சொன்னேன். ஸ்வாமி, அதைத் தீர அலசிப்பாருங்கள் (ஏதாவது நியாயம் இருக்கிறதா என்று). அதைத்தள்ளினாலும் தள்ளிவிடுங்கள்.
வாதபுரீசுவரர் தைன்யத்துடன் புலம்பியதைக் கேட்டு கருணாநிதியான சந்திரசேகரனும் லக்ஷக்கணக்கான குதிரைகளைக் கொண்டு வந்து காண்பித்தார். தானே குதிரை காஸாரியாகவும் ஆவிர்ப்பவித்தார். “மதுரைப் பெருநன்மாநகரிருந்து குதிரைச் சேவகனாகிய கொள்கையும்என்கிறது திருவாசகம். அக்குதிரைகளோ, ஆம்பல் பூ நிறம், கண்ணின்மை நிறம், சிவப்பு நிறம், மாதுளைப்பூ நிறம், தங்கநிறம், பொன்கொன்றை நிறம் இவ்விதமாகப் பல நிறமுள்ளவைகள். கடுமையான கனைப்பினாலேயே எதிரிகளைப் பயமுறுத்துபவைகளாயும் வேகமாக ஓடுகின்றனவும், உயர்ந்த நடைபோட்டு கம்பீரமாக வருகின்றனவுமான குதிரைகள் புழுதியைக் கிளப்பிக்கொண்டு வந்தன. தீக்ஷிதரின் சுலோகங்கள் குதிரைகளின் நடைபோலசப்த ஜாலங்களுடன் அமைந்திருக்கின்றன. அரிமர்த்தன பாண்டியனும், அந்த அதிரூபவானாயும் மரியாதையாக வணக்கம் செய்கிறவனாயுமுள்ள அந்த காஸாரியை வெகு ஆச்சரியத்துடன் கண்கொட்டாமல் பார்த்தான். இந்த வைபவத்தைபரிமாவின் மிசைப்பயின்ற வண்ணமும்என்கிறது திருவாசகம். லஜ்ஜையாலும் பச்சாத்தாபத்தினாலும் பாதிக்கப்பட்டவனாய் பாண்டியன் வாதபுரீசுவரருக்கு நல்ல வார்த்தைகள் சொல்லி காஸாரி சிரேஷ்டன் பக்கத்தில் வந்ததும் ஸந்தோஷமாக எதிர் கொண்டு சென்றான். காஸாரியும் குதிரை விற்க வந்தவனாகப் பேச ஆரம்பித்தான்.
       ஆனீதமாஸீத் தனம் அச்வஹேதோ:
              அனேன யத்தே ஸசிவேன ராஜன் |
       தத்ஸர்வமாதாய தவைவ பூத்யை
              மயாஹ்ருதா: பச்ய சிவாஸ்துரங்கா: ||              [சி.லீ.21-47]

      உன்னுடைய இந்த மந்திரியால் குதிரை வாங்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட தனத்தைப் பெற்றுக் கொண்டு உன்னுடைய க்ஷேமத்துக்காக மங்களகரமான குதிரைகளைக் கொண்டு வந்திருக்கிறேன், பார்! மங்களகரமானவை, நரிகள் என்று இருபொருள் கொண்டசிவா:’ என்ற பதம் கவனிக்கத் தக்கது.
       குல்மேஷு குஞ்ஜேஷு வனோதரேஷு
              கேதாரகேஷூபவனேஷு சாமி |
       ஸ்வச்சந்தசாரா லகுவிக்ரமாச்ச
              தரந்தி தோயேஷு அபிதுஸ்தரேஷு ||               [சி.லீ.21-48]

      (நிர்யத்னமாகக் கொட்டும் ஶ்ரீ தீக்ஷிதரின் வாக்குக்கு இந்த சுலோகம் ஓர் உதாரணம்) புதர்களிலும் பூஞ்சோலைகளிலும், நடுக்காடுகளிலும் வயல்களிலும் உத்யான வனங்களிலேயும், தங்கள் இஷ்டப்படி ஸஞ்சாரம் செய்ய அலக்ஷ்யமான கதியோடு கூடினவைகள் இக்குதிரைகள், ஆழமான நீர் நிலைகள் நீந்தித் தாண்டக்கூடிய சக்தி உடையவைகளும் கூட என்று தன் குதிரைகளை அறிமுகப்படுத்தினார் காஸாரி உருவம் கொண்ட சந்திரசேகரர். (இந்த வர்ணனை முழுவதும் நரிகளுக்கும் பொருந்தும்) மேலும் சிலேடையாகச் சொல்லுகிறார்.
                நச்வோ அயமஸ்தீதி கிலாச்வசப்த:
              தந்த்ரைர்நிருக்தோ விதிதஸ்தவாபி |
       ஸம்யக் பரீக்ஷ்ய த்வம் இமான் க்ருஹாண
              தனம் மனைதத் துரகாஸ்தவேமே ||                 [சி.லீ.21-49]

      அசுவசப்தத்துக்குநாளை இருக்காதுஎன்ற பொருள் சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது என்பது தங்களுக்குத் தெரிந்ததுதானே, நன்கு சோதனை செய்து இவைகளைப் பெற்றுக்கொள்ளும். பணம் என்னைச்சேர்ந்தது, குதிரைகள் தங்களைச்சேர்தன. அரசனோ காஸாரியின் கம்பீரத்திலும் குதிரைகளின் லாவண்யத்திலும் ஈடுபட்டிருந்தானேயன்றி, வார்த்தைகளின் தாத்பர்யத்தை அறிந்தானில்லை. ஸர்வேசுவரனின் மாயை அல்லவா! சரி என்று ஒப்புக்கொண்டு பிரதி வந்தனம் செய்து, ஸன்மானங்களால் கெளரவித்து காஸாரியை விடைசொல்லி அனுப்பினான். தன்னுடைய குதிரை லாயங்களில் ஏற்கெனவே உள்ள மற்றக்குதிரைகளுடன் புதிய குதிரைகளைக் கட்டுப்படி ஆக்ஞாபித்தான் (47, 48, 49-வது சுலோகங்களில் ஈசுவரன் ஸத்யவாக்குச் சொல்லியும், 47-வது சுலோகத்தில் பின்னால் வரும் மங்களகரமான செயல்களை ஸூசிப்பித்தும் பாண்டியனுக்கு அநுக்ரஹமாகவே செய்தார்.) மணிவாசகர் இந்த அற்புதலீலையைப் பின்வருமாறு திருவாசகத்தில் உறுதி கூறுகிறார்.
                நரியைக் குதிரை ஆக்கிய நன்மையும்,
      ஆண்டு கொண்டருள் அழகுறுதிருவடி
      பாண்டியன் தனக்குப் பரிமாவிற்று ……….”                   [கீ.தி. 36-38]
      “நரியைக் குதிரைப் பரி ஆக்கி,
      ஞாலமெல்லாம் நிகழ்வித்து,
      பெரிய தென்னன் மதுரை எல்லாம்
      பிச்சு அது ஏற்றும் பெருந்துறையாய்”.              [ஆனந்தமாலை-7]

      காஸாரி எச்சரித்தபடியே மறுநாள் காலையில் புதுக்குதிரைகள் அனைத்தும் நரிகளாக மாறி ஊளையிட்டுக் கொண்டும் பழைய குதிரைகளைக் கடித்துக் கொண்டும் ரகளை செய்தன. ராஜஸேவகர்கள் நடுங்கிப்போய் அரசனிடம் முறையிட்டார்கள். கோபத்துடன் ஜ்வலிக்கிற பாண்டியன், நடந்த இந்திர ஜாலமெல்லாம் தன்னுடைய மந்திரி வாதவூரராலேயே செய்யப்பட்டிருக்கிறது, ஸந்தேகமில்லை என்று உறுமினான்.
      அவகாசத்துக்குக் காத்துக் கொண்டிருக்கும் ராஜாவின் துஷ்ட பிருத்தியர்கள் திரும்பவும் தங்களுக்கு ஒரு ஸந்தர்ப்பம் கிடைத்ததே என்று வெகு வேகத்துடன் வாதபுரீசுவரைத் துன்பப்படுத்தினார்கள். அவரோ, கொஞ்சமும் கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல் ஆத்ம தியானத்திலேயே ஈடுபட்டிருந்தார்.
      இந்த இடத்தில் ஆத்மத்யானத்தில் அமர்ந்திருந்த நிலை ஶ்ரீஸோமஸுந்தரக் கடவுளை ஹ்ருதயத்தில் நிறுத்தி மற்றெல்லாவற்றையும் மறந்து ஆனந்தானுபவத்தில் ஒடுங்கியிருந்தார் என்பது வெளிப்படை. ஶ்ரீநீலகண்ட தீக்ஷிதர் வாதவூரரை ராஜபடர்கள் துன்புறுத்தினார்கள் என்று மட்டும் சொல்லி நிறுத்திவிட்டார். எனன மாதிரியான துன்புறுத்தல் என்பதை வாசகர்களே ஊஹித்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிட்டார். காவ்யங்களில் இது ஒரு அழகு. பரஞ்சோதி முனிவர், வாதவூரரைத் தண்டலாளர்கள் கடிய உச்சிப்பொழுதிலே சூரியனைப் பார்க்கும்படி அசையாமல் நிற்கச்செய்து இரண்டு கைகளிலும் நெற்றியிலும் கல்லேற்றித் துன்புறுத்தினர் என்கிறார். வாதவூரர் அவ்வேதனையைப் பொறுக்க முடியாது சூரியன் சந்திரன் அக்னி என்னும் முச்சுடராகிய கண்களையுடைய ஸோமஸுந்தரக் கடவுளை அழைத்து அழுது துதிப்பாராயினர் என்று பல பாசுரங்களைப் பரஞ்சோதி முனிவர் பாடியிருக்கிறார்:
                அத்தவோ! கல்லாக்கடையேனை ஆட்கொண்ட பித்தவோ
      பொய்யுலகை மெய்யாகப் பேதிக்கும் சித்தவோ!
      சித்தம் தெளிவித்து எனைத்தந்த முத்தவோ!
      மோன மயமான மூர்த்தியவோ!

      யோகியானவன் தன் மனதைக் கட்டுப்படுத்தியிருக்கும் நிலையில், குழந்தை போலவும், பைத்தியம் பிடித்தவன் போலவும் ஆனந்தித்து இருப்பான் என்கிறார் ஆதிசங்கரர் தமது பஜகோவிந்தத்தில். பரஞ்சோதி முனிவரின் இப்பாடல்கள் சங்கரரின் யோகிஸ்வரூபத்தையும் தீக்ஷிதரின் ஆத்மானுஸந்தானத்தையும் ஒட்டியே இருக்கின்றன. மஹான்களின் வாக்கு ஸத்யத்திலேயே நிற்கும்!
      பரமதயாளுவான கதம்பவனேசுவரன் பக்தனுக்கு அனுக்ரஹம் செய்ய ஆலோசித்து, வாதவூரடிகளின் பெருமையை அரிமர்த்தனனுக்குத் தெளிய வைக்கவும், வந்திக்கு மோக்ஷம் கொடுக்கவும், ஹாலாஹல விஷத்தை ஈந்த ஸமுத்திரத்துடன் நான் கலக்கமாட்டேன் என்று உறுதியுடன் ஓடுகின்ற வைகை நதியின் மண்ணைத் தன் சிரம்மேல் தாங்கவும் தீர்மானித்தான். (வைகை ஸமுத்திரத்தில் சேரவில்லை).
      அகாலமாகவிருந்தபோதிலும் வைகை நதியைப் பெருக்கு எடுக்கும்படித் தூண்டினார். வெள்ளப்பெருக்கு பயங்கரமான அலைகளுடனும் அதிவேகமாகவும், மரம், செடி, கொடி முதலியவற்றைப் பிடுங்கிக் கொண்டு மதுரையம்பதியில் பிரவேசித்தது  . வாதபுரீசுவரரும் விடுவிக்கப்பட்டவராய் ஹாலாஸ்ய நாதரை தரிசிக்க வந்தார். அரசனின் ஆக்ஞைப்படி நூற்றுக்கணக்கான ஆட்கள் நதியின் பிரவாஹத்தைக் கட்டுப்படுத்த அணைகள் போட்டும் கட்டுப்படுத்த முடியவில்லை. அரசன், மதுரை மக்கள் அனைவரும் (குழந்தைகள் பெண்கள், வயோதிகர்கள் உட்பட) வெள்ளத்தடுப்பு வேலைக்கு இறங்க வேண்டுமென ஆக்ஞாபித்தான். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாகம் கொடுத்து அதனதன் எல்லையையும் தீர்மானப்படுத்தினான். இத்தனை ஜனக்கூட்டத்தில் ஒரு கிழவி பிட்டுச் சுட்டு விற்கிற வந்தி என்பவள் ஒருத்திக்கும் ஒரு பாகம் விதிக்கப்பட்டது. வயது முதிர்ந்தவள், யாருமற்ற தனியாள், நாள்தோறும் தான் அவித்தை பிட்டினை ஸோமஸுந்தரக் கடவுளுக்கு மனத்தால் நிவேதனம் செய்த பின்னே விற்பவள்.
      கடவுளே கதி என்று இருப்பவள். தனக்கு அளந்துவிடப்பட்ட பங்கினை அடைப்பதற்குக் கூலியாள் கிடைக்காமல் நடுங்கி ஒடுங்கி மதுரை நாயகனை நினைந்து கண்ணீர் சொரிய அழுது, “பேதையாகிய நான் இதுவரையும் உன் திருவருளால் துன்பம் எள்ளளவும் இல்லாமல் இருந்தேனே. இப்பொழுது இடையூறு வந்துவிட்டதே. அரசன் ஆணையை நிறைவேற்ற எனக்கொரு கூலியாள் வேண்டுமே. அவன் கிடைப்பனோ, வருவனோஎன்று பலவாறாகப் பிரார்த்தித்தாள். நாலாபக்கங்களிலும் அலைந்தாள். அப்படி அலைந்து தேடிக்கொண்டிருக்கும் பொழுது எல்லா வேதங்களும் எவனைத் தேடுகின்றனவோ, அந்த ஸர்வேசுவரன் தோளில் மண்வெட்டியுடன் ஒரு வாலிப வேலையாளாக அக்கிழவியின் முன் தென்பட்டான். கிழவியும் பார்த்தாள்.
                கவேஷயந்தீ ஜரதீ ஸமந்தாத் கவேஷ்யமாணம்
              நிகமை: ஸமஸ்தை: |
       ஐக்ஷிஷ்ட ஸா கர்மகரம் யுவானம்
              அம்ஸோபரிந்யஸ்த கனித்ரமேகம் ||                [சி.லீ.21-61]

      கிழவியும் ஸர்வேசுவரனுடைய தயாபாத்ரமானாள். மஹாதேவன் கிழவியை அணுகிஉனக்கு என்ன வேலை செய்ய வேண்டும் அம்மா! அதை எனக்கு கட்டளையிடு, நான் ஜனங்களுக்காக உழைப்பவன், எனக்கு யஜமானன் யாரும் கிடையாது, ரொம்ப நாளாக யஜமானன் கிடைக்கமாட்டானா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்குப் பணமாக கூலி தரவேண்டாம். நன்றாகச் சமைத்த பிட்டை நீ வியாபாரம் செய்து கொள், வேகாதது, அதிகமாக வெந்தது, உதிரிப் போனது இவைகளை எனக்கு சாப்பாட்டுக்காகக் கொடுத்தால் போதும். நதியில் எந்தப் பாகம் அடைக்க வேண்டும் என்று உனக்கு அளந்து விடப்பட்டிருக்கிறது சொல்லு, என்னிடம் பொறுப்பை ஒப்படைத்து நீ கவலையில்லாமல் பிட்டுச் சமைத்துக் கொண்டிருஎன்றார்.
                மாத: பச பிஷ்டகம் த்வம் வின்யஸ்ய
              பாரம் மயி வீதசங்கா ||                              [சி.லீ.21-64]
               
கிழவியுடன் பேச்சுக் கொடுத்துக் கொண்டு, தாயே, தேவியே, பாட்டியே என்று பலவிதமாகக் கூப்பிட்டுக் கொண்டும், கிழவியை மோஹிக்கச் செய்து சமைக்கச் சமைக்க கொஞ்சம் கொஞ்சமாக எல்லாப் பிட்டினையும் எடுத்துக் கொண்டார். அவளுடைய பக்தியையும் கிரஹிப்பது போல கொஞ்சம் பேசுவது, சிறிது சிரிப்பது, அழகாக நடிப்பது, விளையாட்டாகப் பேசுவது இவ்வாறாக மற்ற வேலையாளர்களையும் மயக்கி உல்லாஸமாக அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தார். காவலாளர்கள் பார்வையிட வந்தால், இந்தா இதோ பார் என் மண்வெட்டி, கூடை, நான் குவித்த மண் குவியல், இது இன்று நான் செய்த வேலை எனக் காட்டிவிட்டு அவர்கள் போனதும் தான் சிரித்துச்சிரித்து விளையாடுவார்.
நதியும் கட்டுக்கடங்காமல் அலைகளோடு இரண்டு கனகளுக்கும் மேல் புரண்டு ஓடுகிறதைப் பார்த்து பயந்து ஸேவகர்கள் அரசனிடம் தெரியப்படுத்தினர், அரசனும் தான் நேரில் பார்வையிட வந்தான். மற்ற ஆட்கள் ஜாக்கிரதையாகத் தங்கள் வேலைகளை முடித்துவிட்டு நிற்பதைப் பார்த்து தானும் பூமியைத் தோண்டுவது போலவும், நதியில் மண்ணைப் போடுவது போலவும் துரிதமாக வேலை செய்வது போல்தோற்றமளித்தான் ஸர்வேசுவரன். பிட்டுக்கிழவியின் பங்கோ அடைபடவில்லை.
வரிசையாகக் கரை முழுவதும் பார்வையிட்டு வரும் அரசன் அங்கங்கே அடைப்பட்ட கரையை கவனித்துக்கொண்டு, அடைபடாமல் பள்ளமாக இருந்த இடத்தைப் பார்த்து அதிக கோபத்துடன் இந்த இடம் யாருடைய பங்கு, ஏன் அடைபடவில்லை என்று அதட்டிக்கேட்டான். வேலையாட்கள் பிட்டுக்கிழவியின் கூலியாளைக் கையைப்பிடித்து இழுத்து வந்து இவன் தான் வேலையை முடிக்காதவன், ரொம்ப வயதான பிட்டுக்கிழவியால் அமர்த்தப்பட்டவன், தேகவலிவுள்ளவன், பிட்டுக்கிழவியிடமிருந்து கூலியையும் பெற்றுக் கொண்டவன், ரொம்பவும் போக்கிரியாக இருக்கிறான், அசையமாட்டேனெக்கிறான், மரியாதை காட்டுபவன் போல் பேசுகிறான். ஆனால் பின்னால் சிரிக்கிறான், கேலிசெய்கிறான். விளையாட்டாக பேசி மற்றவர்களையும் சிரிக்கவைக்கிறான். மேலும்,
தத்தம் கியத் தாருணயா ஜரத்யா
       தத்தே து கிஞ்சித் சிதிலான் அபூபான் |
அஹோ மமாபாக்யமியம் கிலாஸீத்
       நாதேதி சேதே முஹுராத்தசோக: ||                 [சி.லீ.21-74]

      நிரம்ப துக்கத்துடன் அடிக்கடி படுத்துக் கொள்கிறான். எதற்காக எனக் கேட்டால் இந்தக் கிழவி கருணையில்லாதவள். ஏதோ கொஞ்சம் பிட்டினைக் கொடுக்கிறாள். அந்தப் பிட்டோ சிதறிப்போன பொடிகள். (ஒரு யஜமானனைத் தேடிவந்த) எனக்கு என்னுடைய துரதிருஷ்டத்தினால் இப்படி ஒருயஜமானி கிடைத்தாளே. எனக்கு அப்பா இருக்கிறாரா, அம்மா இருக்கிறாளா, வேறு ஆதரவுதான் உண்டா, கொஞ்சம் செல்வமாவது இருக்கிறதா, ராஜஸேவர்ஜளின் எச்சோ, என்னைப் போன்ற ஏழைகளிடம்போடா, வாடாஎன்றபடி கீழ்த்தன்மையாகவுள்ளது.
                கிம்மே அஸ்தி தாதோ ஜனனீ கிமாஸ்தே
              கிம் ஆஸ்பதம் கிம் தனமஸ்தி கிஞ்சித் |
       கிம் ராஜப்ருத்யா: க்ருபணேஷு குர்யு:
              யாதேதி : அத: குருதே கதாபி ||                    [சி.லீ.21-75]

என்று பலவாறாக ப்ரஸங்கம் செய்கிறான். இப்படி ப்ரலாபிக்கிறானே என நினைக்கும் பொழுதே மிகவும் மிருதுவாக தத்வம் சொல்கிறான். “ராஜா அநியாயவிருத்தியில் இருந்தால் நகரம் வெள்ளத்தில் முழுகத்தான் செய்யும், வேலையாட்களை அடிக்கிறதனால் என்ன லாபம்என்று.
                அன்யாய வ்ருத்தே ந்ருபதோ அமுஷ்மின்
              ஆப்லாவ்யதே கிம் நகரம் தோயை: ||            [சி.லீ.21-76]

      இவ்விதம் ராஜபிருத்யர்கள் சொன்ன விருத்தாந்தங்களைக் கேட்டு பாண்டிய ராஜா, அந்தக் கூலியாள் தனக்குள்ளேயே சிரித்துக்கொண்டிருப்பதையும் பார்த்து வெகு கோபத்துடன் கீழுதடு துடிக்க, தன் கைப்பிரம்பைச் சுழட்டி அப்பிரம்பினால் அவனை அடித்தான். (முந்தின சுலோகத்தில் வேலையாட்களை அடிப்பதினால் என்ன பிரயோஜனம் எனும் வார்த்தை அரசனை வந்தியின் ஆளை அடி எனத் தூண்டிவிடுவது போல் அமைந்திருக்கின்றது.)
      எந்த சந்திரசேகரனுடைய சரீரம் மூவுலகங்களாகவே உள்ளதோ அந்தச் சரீரம் அரசனால் அடிக்கபட்டதும் அப்பொழுதே, சொன்னவர்களும் அடித்தவனும் பார்த்தவர்களும் ஸகல உலகங்களும் அப்பிரம்பினால் அடிபட்டவனாக ஆகின.
                அங்கம் த்ரிலோகீமயமிந்து மெளளே:
              அப்யாஹதம் தேன யதா ததைவ |
       வக்தா ஹந்தா நிரீக்ஷிதா
              வேத்ராஹதம் விச்வமபூத் ஸமஸ்தம் ||            [சி.லீ.21-78]

      ஸகலோகங்களும் ஸ்தம்பித்து விட்டன, அரசனும் கூட, பிரக்ஞை திரும்பி வந்ததும், அரசன் இது எவ்விதம் நேர்ந்தது என்று சிந்தனை செய்வதற்குள் பரமேசுவரன் மறைந்து விட்டார். வைகை வெள்ளமும் தணிந்தது. பரமேசுவரன் பக்திக்குக்கட்டுப்பட்டவன். எங்கிருந்தாலும், எந்த வேளையிலும் வேறு தெய்வத்தைக் கனவிலும் நினையாது, சிவத்யானம் செய்வதே போதும். உடம்பை வாட்டி அலைந்து திரிந்து காணமுடியாததைக்காண உழைக்க வேண்டாம், ‘யாம் ஆர்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்,’ என்று தன்னையே சிவார்ப்பணம் செய்து, அவனைத்தவிர வேறு புகலிடம் இல்லை என்ற நிச்சயபுத்தியுள்ள ஜீவன்களுக்கு, ஆதிகுரு பரமேசுவரன் தானாகவே வந்து அருள் புரிவார் என்பதைத் தெளிவூட்டுகிறது இந்தத் திருவிளையாடல். மனமுருகவைக்கும் திருவாசகத்தில் இந்தப்பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடலை,
                குதிரைச்சேவகனாகிய கொள்கையும்,
      ஆங்கு, அதுதன்னில், அடியவட்கு ஆக,
      பாங்கு ஆய், மண்சுமந்தருளிய பரிசும். (கீர்த்தித்திருவகவல்)

      பாண்டிய நாடேபழம்பதி ஆகவும் (கீர்த்தித்திருவகவல்)

      பிட்டுநேர்பட, மண்சுமந்த பெருத்துறைப்பெரும் பித்தனே
                                                (திருக்கழுக்குன்றப்பதிகம்)
     
      மண்பால், மதுரையில் பிட்டு அமுது செய்தருளி
      தண்டாலே பாண்டியன் தன்னைப்பணி கொண்ட
      புண்பாடல்பாடி, நாம்பூவல்லி கொய்யாமோ, (திருப்பூவல்லி)

      பண்சுமந்த பாடல் பரிசு படைத்தருளும்,
      பெண் சுமந்த பாசகத்தன், பெம்மான் பெருந்துறையான்,
      விண் சுமந்த கீர்த்தி வியன் மண்டலத்தீசன்,
      கண் சுமந்த நெற்றிக்கடவுள், கலி மதுரை
      மண் சுமந்து கூலிகொண்டு, அக்கோவால் மொத்துண்டு,
      புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய். (திருவம்மானை)


      முதலான பாட்டுக்களில் தன் அநுபவத்தை முத்திரை வைக்கிறார்.

No comments:

Post a Comment