Thursday, October 6, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவஜயம்
கவி காளமேகப் புலவரின் பாடல்கள்
சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

1.   சிதம்பரத்தில் சிறப்பாக உள்ளவை
                ஞான சபைக னகசபைசிற் றம்பலம்பே
       ரானந்தக் கூடந் திருமூலட் – டானம்பே
       ரம்பலம்பஞ் சாவரண நாற்கோபு ரம்பொற்செய்
       கம்பமண்ட பஞ்சிவகங்கை.

      இதன் பொருள்: (சிதம்பரத்தில் சிறப்பாக உள்ளவை யாவையெனின்) நடேசப் பெருமான் திருக்கூத்தியற்றும் சிற்சபை, சிற்சபைக்கு முன்னாலிருக்கும் பொன்னம்பலம், நடராஜப் பெருமான் அருவாய் இருக்கும் சிற்றம்பலம், ஶ்ரீ நடேசர் ஊர்த்துவ தாண்டவஞ் செய்யும் பேரின்பசபை, சிவலிங்கப் பெருமான் எழுந்தருளியிருக்கும் திருமீலஸ்தானம், தேவர்கள் கூட்டம் நடராஜப் பெருமானைத் துதித்து வணங்கும் இடமாகிய பேரம்பலம் என்னும் தேவசபை, ஐந்து பிராகாரங்கள், நான்கு திசைகளிலுமுள்ள பெரிய கோபுரங்கள், அழகுடன் விளங்குகின்ற ஆயிரங்கால் மண்டபம், சிவகங்கையென்னும் திருக்குளத்தீர்த்தம் என்பனவாம்.
2.   ஆட்டை விட்டுப் புலி போகுமோ?
       நாட்டுக்கு ளாட்டுக்கு நாலுகா லையாநின்
       ஆட்டுக் கிரண்டுகா லானாலும் – நாட்டமுள்ள
       சீர்மேவு தில்லைச் சிவனேயிவ் வாட்டைவிட்டுப்
       போமோசொல் லாயப் புலி.

      இதன் பொருள்:    புகழ் பொருந்திய தில்லைப்பதியில் வீற்றிருக்குஞ் சிவபிரானே! ஐயா, உலகத்திலே ஆடு என்னும் பிராணிக்கு கால்கள் நான்கே, உன்னுடைய ஆட்டுக்குப் (கூத்துக்கு) பயன் படுத்துவது இரண்டு கால்களேயானாலும் அந்த புகழ் பெற்ற புலி முனியாகிய வியாக்ரபாதர் விரும்பத் தக்கதான இந்த ஆட்டைப் பாராது நீங்கிப் போவாரோ சொல்வாயாக. (இப்பாடலில் ஆடு என்னும் பிராணியைப் பற்றாது புலி நீங்காது என்ற பொருள் வெளிப்படை. உள் பொருளாக அறிய வேண்டியது திருக்கூத்தைத் தரிசியாது புலி முனி நீங்கமாட்டார் என்பதாம்.)

சிவம்.

No comments:

Post a Comment