Thursday, October 27, 2016

அன்பே சிவம்
மயிலை முருகன் காவடிச் சிந்து
இயற்றியவர்:
பைந்தமிழ்ப் பாவலவர், புலவர்ஏறு, மணிதீபம்,
சிவகதாப்ரசனகச் சக்கரவர்த்தி,
கே. ஆர். நாகராஜன்

சிவஞான பூஜா மலர் துன்மதி ஆண்டு - (1981)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

காப்பு
      திருவார் மயிலைநகர் வாழும்உயர்
            தெய்வக் கபாலி அருள் சூழும்தமிழ்
            ஓசை முழங்க, நடம் ஆசையுடனே செய்யும்
            யானைபருகும், தமிழ்த்தேனை!

நூல்

      தெள்ளு தமிழ் விரும்பும் சீலன்தமிழ்
            நாகன் எனும் பெயர்கொள் நூலன்உயர்
            மயிலை நகரில் வளர் முருகன் திருப்புகழைச்
            சொல்வேன்! அனைவரையும்வெல்வேன்!               1

      ஓசைக் கடல் முழுங்கும் முன்றில்தினம்
            உண்மை அடியவர்கள் மன்றில்உனைப்
            பாடிப் பரவிடுவார்! ஆடி மகிழ்ந்திடுவார்!
            முருகா! திருமால்மருகா!                             2

      அழகு மயிலதன் மேல் ஏறிஇரு
            அழகியர் அன்பதனைக் கோரிக்கையில்
            வேலை எடுத்துவிளை யாடிவரும் முருகக்
            கோனே! தமிழ்த்தேனே!                               3

      அற்புத மாமயிலை வாழும்ஒரு
            கற்பக வல்லி மடி வீழும்நல்ல
            சின்னஞ் சிறுமுருகன் என்னெஞ் சுருக்கிடுவான்
                  நாளும்! எந்தநாளும்!                           4

      தந்தை கபாலி உளம் மகிழஅன்னை
            கற்பக வல்லி அன்பு திகழவளர்
      செல்வத் திருமுருகன் சிந்தை நிறைந்திருப்பான்
            என்றும்! – தினம்நன்றும்!                              5

      தொந்தி கரைத்திடவே அண்ணன்தினம்
            தொந்தோம் என்றாடிடுவான் திண்ணம்! – அவன்
      தம்பி திருமுருகன் நம்பியவர்க் கருளும்
            அன்பன்! – தமிழ்ப்பண்பன்!                            6

      மயிலை ஊர்திஎனக் கொண்டான்! – திரு
            மயிலைத் தன்ஊர் எனவே கண்டான்! – இரு
      மயிலை மணந்தவனும் அயிலை எடுத்து, தினம்
            வருவான்! – இன்பம்தருவான்!                         7

      செக்கச் சிவந்திருப்பான் மேனி! அவன்
            செய்ய அடிமலரின் தேனைத்தினம்
      வந்தே குடித்து மகிழ் செந்தேன் கலிபொழியும்
            தேனீ! தான் தமிழ்த்தேனீ!                             8

      வள்ளல் பெருங்கருணை வேலன்! அவன்
            வந்தவர்க் கெல்லாம் அருளும் சீவன்! – என்றன்
      உள்ளமெனும் தாமரையில் அள்ளும் அழகுடனே
            இருப்பான்! தினம்சிரிப்பான்!                           9

      புன்னை மரத்தின் அடிமேடைஅது
            பெம்மான் அருள் பெருகும் ஓடைஅங்கு
      அன்னை தவம் புரிவான்! அழகன் அருள் புரிவான்!
            தினமும்! – மகிழும் என்மனமும்!                      10

மயிலை நகரின் சிறப்பு

      நீலக் கடல்முழங்கும் நாளும்! – அதன்
            நீண்ட கரையினில் செவ் வேளும்தினம்
      வணங்கிடும் அன்பர்தமக் கிணங்கியே இன்னருளைத்
            தருவான்! – மயில்மேல்வருவான்!                     11

      வள்ளுவனார் வாழ்ந்திருந்த மயிலைமுருக
            வள்ளல் உவந் தேறிவரும் மயிலைத்தினம்
      கண்டே நடுக்கமது கொண்டே அரவமெலாம்
            ஏங்கும்! சிவன் மேல்தூங்கும்!                         12

      எலும்பை அணிந்தவர்தம் முன்னால்ஐயன்
            எலும்பைப் பெண்ணாகச் செய்தார் தன்னால்! – திரு
      ஞானசம்பந்தப் பெயர் தானே முறையாய்க் கொண்ட
            அன்பர்! – தமிழ்ப்பண்பர்!                              13

      செல்வம் சிறந்தோங்கும் மயிலைகல்விச்
            செல்வம் உயர்ந்தோங்கும் மயிலைஉயர்
      விண்ணை முட்டும் மாளிகைகள் கண்ணைக்கவர் காட்சி தரும்
            அன்றும்! – முறையாய்இன்றும்!                        14

      தந்தை கபாலி அருள்புரிவான்! உயர்
            தாயாரும் முந்தி அருள் புரிவான்! – உயர்
      தொந்தி கணபதியும், கந்தக் குணபதியும்
            வருவார்! – அருள்தருவார்!                            15

      பண்டை நாள் பல்லவர்கள் காலம்! – மயிலை
            பாரில் சிறந்திருந்த கோலம்! – பல
      மேலைப் புலத்திருந்தும், கீழைப் புலத்திருந்தும்கலம்கள்
            வருமே! செல்வம்தருமே!                             16

      வாயிலார் எனும்பெயர்கொள் அன்பர்! – அவர்
            வள்ளல் கபாலியிடம் அன்பர்! – அவர்
      தோன்றியநற் காரணத்தால் ஆன்றபுகழ் பெற்றதுநல்
            மயிலை! – சீர்மயிலை!                               17

      அழகு மயில்வடிவம் கொண்டேஉமை
            அம்மை, இறைவர்உருக் கண்டேமுன்னாள்
      புன்னை மரத்தடியில் அன்னை வணங்கியசீர்
            மயிலை! – உயர்மயிலை!                             18

      நாயன்மார் அறுபத்துமூவர்! – அவர்க்கே
            அவனியில் நிகர் உளார் யாவர்? – அவர்தாம்
      ஆண்டுதோறும் தெருவில் யாண்டும் உலாவகுவார்
            அன்றும்! – இனிஎன்றும்!                              19

      அன்னை அறம் புரியும் மயிலை! – எங்கள்
            அப்பன் அருள் புரியும் மயிலை! – உயர்
      முருகப் பெருமான் சக்தி வேலை தாய் தன்னிடமே
            பெற்றான்! – பகையைச்செற்றான்!                      20

முருகவேள் மாண்பு

      ஆறு தலையுடைய அழகன்! – அன்பர்க்
            காறுதலை வழங்கும் குழகன்! – அவன்
      பன்னிரு கையதனால் பகையை ஒழித்திடுவான்
            வேலன்! – சிவ – பாலன்!                                21

      கற்பக வல்லி மகிழ் வேலன்! – கல்வி
            கற்றவர் உளத்துறையும் பாலன்! – இரு
      பாவையர்களை மணந்து, பரிவுடன் அருள்செய்யும்
            வீரன்! மயிலை – ஊரன்!                                22

      சிவனார் மனம் மகிழும் கந்தன்! – செல்வ
            மயிலை நகரில் வளர் மைந்தான்! – என்றும்
      நல்லவரைக் காத்திடுவான்! அல்லவரைத் தேய்த்திடுவான்!
            அமரன்! – தெய்வக் – குமரன்!                            23

      விண்ணைத் தொட உயரும் கோயில்! – அதில்
            கண்ணைக் கவரும் உயர் வாயில்! உள்ளே
      அழகு குடியிருக்கும் அன்பன் முகத்தில் – நகை
            இலகும்! – பகை – விலகும்!                             24

      பச்சை மயிலின் மிசை வருவான்! இரு
            பாவையர் சூழ அருள் தருவான்! – சக்தி
      வேலை வலக்கரத்தில் ஏந்திப் பகைவன் உயிர்
            கொல்வான்! – என்றும் – வெல்வான்!                     25

      புன்னை மரங்கள் நிறை சோலை! – அதன்
            முன்னை முழங்கும் கடல் வேலை! – அந்தப்
      புன்னை மரநிழலில் அன்னை அறுமுகனைக்
            கண்டாள்! – உவகை – கொண்டாள்!                       26

      அற்புதக் கபாலி உருக்கண்டு – அன்னை
            கற்பகம் மனத்தில் மகிழ் கொண்டு – முன்னர்
      பொற்புறப் பணிந்துதினம் போற்றியதால் வந்தபெயர்
            மயிலை! – நகர் – மயிலை!                              27
      வேலை வலக் கரத்தில் ஏந்தித் – தினம்
            விரும்பித் தமிழமுதம் மாந்தி – மகிழ்
      வள்ளி, தெய்வ யானையுடன் உளத்தில் மகிழ்வுடனே
            வருவான்! – வரங்கள் – தருவான்!                        28

      புள்ளிமயில் ஏறிவரும் பாலன்! – அவன்
            வள்ளிக் குறமகளின் லோலன்! – முன்பு
      சூரன் உயிர் குடித்துச் சுற்றும் பகைமுடித்த
            குமரன்! – அவன் – அமரன்!                              29

      தமிழ்க்கவித் தேன்உண்ணும் தேனீ! – தமிழ்
            நாகன் முன் காட்சிதரவாநீ! – மயிலை
      நகரில் வதியும் குமரேசப் பெருமான் புகழ்
            பாடு! – மனம் – நாடு!                                   30

      குமரன் பதமலரைப் பாடி – இரு
            குமரியர் அடிமலர் நாடித் – தினம்
      திமிரக் கடல் மயிலைக் குமரன் அருளால் ஞாலம்
            வாழ்க! – இன்பம் – சூழ்க.                                31

      கற்பகவல்லி புகழ் வாழ்க! – உயர்
            கபாலி பதமலர்கள் வாழ்க! – உயர்
      அற்புதக் குமர வடிவேலன் இரு அன்னையுடன்
            வாழ்க! – தினம் – வாழ்க!                                32

     


      

No comments:

Post a Comment