Tuesday, October 18, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவஜயம்
வில்லி பாரதத்தில் சிவபெருமான் பெருமை
சங்கரனடிமை ஆங்கிரஸ சர்மா

சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      வில்லிபாரதம் என்பது வில்லிபுத்தூரார் எனவும் வில்லி புத்தூராழ்வார் எனவும் வழங்கப்படும் ஒரு பெரும்புலவரால் இயற்றப்பட்ட தமிழ் பாரத நூல் ஆகும். வடமொழியில் வேதவியாஸர் என்ற மாமுனிவரால் ஆக்கப்பட்ட மஹாபாரதம் என்ற பேரிதிகாசத்தை இப்புலவர் பெருமான் தமிழ் விருத்தப்பாக்களினால் பாடியுள்ளார். வால்மீகி ராமாயணத்தைத் தமிழில் பெருங்காப்பியமாகப் பாடிய கம்பர், கவிக்கூற்றாகவும் கதாபாத்திரங்களின் வாயிலாகவும், எங்ஙனம் சிவபிரான் பெருமையைப் பாடியுள்ளார் என்பதைக் கிருட்டினகிரிப் பேராசிரியர் வித்துவான் திரு பெ.கு. வரதராசனார் அவர்கள் சில ஆண்டுகளாக நமது மலர்களில் தொடர் கட்டுரைகள் மூலம் விளக்கி வருவதை வாசகர்கள் படித்து இன்புற்று வருகின்றார்கள். அதே முறையில், வில்லிபுத்தூராழ்வார் தாம் மிக அழகாகப் பாடியுள்ள பாரதக் காப்பியத்தில் தம் கூற்றாகவும் பாத்திரங்களின் கூற்றாகவும் சிவபிரானை எங்ஙனம் போற்றிப் பாடியுள்ளார் என்பதைக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
      வில்லிபுத்தூரார் நடுநாடென்று வழங்கிய திருமுனைப்பாடி நாட்டில் (இப்பொழுதைய தென்னாற்காடு மாவட்டம்) வீரராகவாசாரியார் என்ற திருமண் இடும் வைணவப் பிராமணருக்குக் குமாராய்ப் பிறந்தவர். இவரது இயற்பெயர் வில்லிபுத்தூராழ்வார் என்பதாம். இவர் கல்வி கேள்விகளில் மிக்கவராய், அக்காலத்தில் கல்விச் செருக்கடைந்திருந்த புலவர்களைத் தம் பெரும் புலமைத் திறத்தால் வென்று அவ்வெற்றியின் சின்னமாகத் தோற்றுப்போன புலவர்களின் காதுகளைத் துறட்டுக் கோலால் மாட்டியிழுத்து அறுத்துவந்தார் என்றவொரு செய்தியும் “….குறும்பியளவாய்க் காதைக் குடைந்து தோண்டி, எட்டினமட்டறுப்பதற்கோ வில்லியில்லை…” என்ற ஒரு தனிப்பாடற்பகுதியால் தெரிய வருகிறது. பின்னர் இவர் அருணகிரிநாதரோடு அவர் பாடிய கந்தரந்தாதிக்குப் பொருளுரைக்கும் போட்டியில் ஈடுபட்டு அவரிடம் தோற்றுப் போனார் என்றும் தெரிய வருகிறது. இவரது காலம் கி.பி. பதினான்காம் நூற்றாண்டின் பிற்பகுதியாம் என்று கூறுவர்.
      இத்தகைய பெரும் புலவராகிய வில்லிபுத்தூராரை, அக்காலம் திருமுனைப்பாடி நாட்டை வக்கபாகை என்னுமுரைத் தலைநகராகக் கொண்டு அரசுபுரிந்து வந்த வரபதியாட் கொண்டான் என்னுமரசன் தனது அவைக்களப் புலவராக்கி ஆதரித்து வந்தான். அங்ஙனமிருக்கையில் ஒரு சமயம் அரசன் வடமொழியில் வியாஸ முனிவரால் மிக விரித்துரைக்கப்பட்ட மஹாபாரதத்தைச் செந்தமிழில் விருத்தப்பாக்களால் சுருக்கமாக ஒரு காப்பியமாகப் பாடவேண்டுமென்று இவரைக் கேட்டுக்கொள்ள அவ்வண்ணமே இவர் சொற்சுவை, பொருட்சுவை மிக்க நாலாயிரத்து முன்னூற்று முப்பத்தியாறு பாடல்களினால் இந்நூலைப் பாடினார் என்று கூறுவர். [இவர் இந்நூலைப் பாடியது பற்றி வேறு வகையான கதையும் வழங்குகிறது. நமது ஆராய்ச்சிக்கு அக்கதை மிகையாதலால் இங்குக் குறிப்பிடாது விடுத்தோம்].
      வில்லிபுத்தூராருக்கு திருக்குறள் சொன்ன முறையில் மகன் தந்தைக்காற்றும் உதவியைச் செய்த குமாரர் வரந்தருவார் (வரதன் என்ற வடமொழிச் சொல்லின் தமிழாக்கம்) இருந்தார். பெரும் புலவராய்த் திகழ்ந்த வரந்தருவார் தமது தந்தையாரின் அரிய நூலுக்குச் சிறந்த்தொரு பாயிரம் வழங்கித் தந்தையைச் சிறப்பித்துத் தானும் புகழ் பெற்றார். இருபத்துநாலு பாடல்கள் கொண்ட இப்பாயிரத்தில் ஒரு பாடலில் சிவபிரான் பெருமையையும் அப்பெருமையை உலகறியக் காட்டிப் பாடிய தேவார ஆசிரியர் மூவரையும் வாய் கொள்ளாமல் போற்றிப் புகழ்ந்துள்ளார். இதோ அப்பாடல்: -
                பாவரும் தமிழால் பேர்பெறு பனுவல்
              பாவலர் பாதிநாள் இரவில்
       மூவரும் நெருக்கி மொழிவிளக்கு ஏற்றி
              முகுந்தனைத் தொழுதநன் னாடு;
       தேவரும் மறையும் இன்னமும் காணாச்
              செஞ்சடைக் கடவுளைப் பாடி
       யாவரும் மதித்தோர் மூவரில் இருவர்
              பிறந்தநாடு இந்த நன்னாடு.
                                                (சிறப்புப்பாயிரம், 9-ம் பாடல்)

      இப்பாடலில் முதலிரண்டு அடிகளில் முதலாழ்வார்கள் எனப்படும் மூன்று வைணவ ஆழ்வார்களைச் சிறப்பித்தார். வைணவராகிய வரந்தருவாருக்கு இது தக்கதே. மூன்றாம் அடியில் சிவபிரானைதேவரும் மறையும் இன்னமுங் காணாச் செஞ்சடைக் கடவுள்என்று இவர் பாடியது தான் குறிப்பிடத்தக்கது. திருமாலும் நான்முகனும் தேடி அடிமுடி காணாத சிவபெருமான் என்ற குறிப்பு தேவரும் என்ற சொல்லால் பெறப்படுவது காண்க. “காணாச் செஞ்சுடர்க் கடவுள்என்று ஒரு பாட பேதமுண்டு. இப்பாடபேதப்படி இக்கருத்து மேலும் உறுதிப் படுகின்றதன்றோ? “திருமாலும் நான்முகனும் தேர்ந்துணராது அன்று அங்கு, அருமாலுற அழலாய் நின்ற பெருமான்என்ற சேரமான் பெருமான் நாயனாரின் வாக்கை நினைவு கூறச் செய்கின்றதன்றோ? மேலும் இவர் இப்பாடலில் திருமாலைக் குறிப்பிடும் போதுமுகுந்தனைத் தொழுதஎன்ற பெயர் மட்டுமே கூறி, சிவபிரானைக் கூறும் போதுதேவரும் மறையும் இன்னமுங் காணாச் செஞ்சடைக் கடவுள்என்று சிறப்பித்துக் கூறியது இவரது மெய்ப்பொருள் உணர்ந்த உள்ளத்தைப் புலப்படுத்துகின்றதல்லவா?
      அடுத்த நான்காமடியில் அந்தக் கடவுளைப் பாடி அதன் காரணத்தால் யாவராலும் மதிக்கப் பெற்ற மூவரில் இருவர் பிறந்த நாடு என்று திருமுனைப்பாடி நாட்டைச் சிறப்பிக்கின்றார். மூவர் என்றது திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகியவராம். இவர்களில் இருவராகிய அப்பரும், சுந்தரரும் இந்த நாட்டிலே அவதரித்தவர்கள். இவ்விருவரும் அவதரித்த காரணத்தால் அந்த நாடு பெருமையடைந்தது என்பது புலவரின் பாடற்கருத்து. இக்கருத்து சேக்கிழார் பெருமானின் கீழ்க்கண்ட பாடலின் பொருளை ஒத்து இருப்பதும் கண்டு இன்புறௌக. இதனால் இப்புலவர்பெருமான் சிவபிரானை எந்த அளவுக்குப் போற்றுவதில் ஈடுபட்டு இருந்தார் என்பது மட்டுமல்லாமல் மூவர் முதலிகளது தேவாரப் பாடல்களையும், சேக்கிழார் பெருமானின் பெரிய புராணத்தையும் நன்கு கற்றுத் துறைபோனவர் என்பதையும் ஊகித்து உணரலாம். திருமுனைப்பாடி நாட்டினைப் போற்றிய சேக்கிழாரின் தெய்வமணங் கமழும் பாடலையும் இதோ பாருங்கள். இதனை அடையொற்றியது போலிருக்கும் கருத்துடைய வரந்தருவார் பாடலுடன் ஒப்பிட்டு மகிழுங்கள்.
                மறந்தருதீ நெறிமாற மணிகண்டர் வாய்மை நெறி
       அறந்தருநா வுக்கரசும் ஆலால சுந்தரரும்  
       பிறந்தருள உளதானால் நம்மளவோ பேருலகில்
       சிறந்ததிரு முனைப்பாடித் திறம்பாடுஞ் சீர்ப்பாடு.

      திருநாவுக்கரசரும் (அப்பர்) சுந்தரரும் பிறந்ததனால் திருமுனைப்பாடி நாட்டுக்குப் பெருமை என்ற இப்பாடற் கருத்தைத்தான் மூவரில் இருவர் பிறந்த நன்னாடு எனத் தம் பாடலில் வரந்தருவார் போற்றினார் எனக் கொள்க.
      

1 comment:

  1. வில்லி பாரதத்தில் சிவபெருமான் குறித்த மற்ற செய்திகள் உங்களது இணைய தளத்தில் வேறு எங்கு படிக்கலாம்? ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா அவர்கள் 'சிவஞான பூஜா மலர்' இதழ்களில் இந்த தலைப்பில் எழுதிய வேறு கட்டுரைகள் உள்ளனவா? எங்கு படிக்கலாம்? வேறு யாராவதும் எழுதிய சங்க இலக்கியத்தில் மற்றும் மற்ற பண்டைய தமிழ் இலக்கியத்தில் சிவபெருமானை முழு முதற் கடவுள் என்று போற்றிய குறிப்புகள் உள்ளனவா? படிக்க ஆவலுடன் உள்ளேன். சுப்ரமண்யன்.வை

    ReplyDelete