உ
சிவமயம்
திருச்சிற்றம்பலம்
சிவபெருமான் திருவந்தாதி
கபிலதேவ நாயனார் அருளியது
சங்கரன்கோவில் வித்துவான் ச. இரத்நவேலன் அவர்களெழுதிய பொழிப்புரையுடன் கூடியது
சிவஞான பூஜா மலர் குரோதன ஆண்டு - (1985)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
முன்னுரை
பதினோராந் திருமுறை நாற்பது பிரபந்தங்கள் கொண்டது. 22-ஆம் பிரபந்தம் “சிவபெருமான் திருவந்தாதி” என்பதாம். இதனை அருளியவர் கபிலதேவ நாயனார். இவரருளிய மூன்று பிரபந்தனக்ள் இத்திருமுறைக்கண் உள்ளது. மூன்றாவது நூல் இந்நூல். வென்பா யாப்பில் செய்யப்பட்ட இந்நூலில் மடக்கு, யமகம் பயின்று வந்துள்ளன. ஆகலான் கற்றோரேயன்றி மற்றோர் இதில் பயிற்சிக் குறைவுடையவராய் உள்ளனர். கற்றோரையும் கலங்க வைக்கும் பாடல்கள் பல இதன்கண் உள்ளன. எனவே ப்ரும்மஶ்ரீ ஆங்கீரஸ சு. வேங்கடேச சர்மா அவர்கள் இந்நூலுக்கு உரை வரைந்தனுப்புமாறு கட்டளையிட்ட பொழுது அஞ்சினேன். திருமுறைக்கு உரை காண்பது எளிய காரியமன்று. அதனாலும் நான் தயங்கினேன். ஆயினும் பன்முறை ஶ்ரீசர்மா அவர்கள் வற்புறுத்தவே “யானை பிழைத்த வேல் ஏந்தல் இனிது” என்ற நீதிப்படி உரை கண்டுள்ளேன். குற்றங்களைந்து குணங்கொண்டு கோதாட்டுமாறு சைவ நல்லறிஞரைப் பிரார்த்திக்கிறேன்.
கபிலதேவநாயனார் சங்கப் புலவரே ஆயிடினும் திருமுறையில் பேசப்பெறும் கபிலதேவ நாயனார் சங்கப்புலவர் அல்லர் எனக்கூறுவதில் சிலருக்கு மகிழ்ச்சி, சைவர்க்கு சங்கப்புலவரினும் திருமுறை ஆசிரியன்மாரே உயர்ந்தவர். ஆகவே அவர் பாரி நண்பர் ஆயினும் ஆகுக, இன்னா நாற்பது பாடிய ஆசிரியராயினும் ஆகுக, அல்லாது இருப்பினும் இருக்க. அவர் திருமுறை ஆசிரியர், எனவே நம்மவரால் உச்சிமேற் கொள்ளத்தக்கவர். அவரது திருவடி போற்றி நூலைல் கற்போமாக.
இவ்வகையில் என்னைச் செலுத்திய ப்ரும்மஶ்ரீ சர்மா அவர்களைப் போற்றி நன்றியோடும் வணங்கிக்கொள்கிறேன்.
வித்துவான் ச. இரத்நவேலன்
சங்கரன்கோவில்
திருச்சிற்றம்பலம்
ஒன்று முதலாக நூறளவும் ஆண்டுகள்வாழ்ந்
தொன்றும் மனிதர் உயிரையுண் – டொன்றும்
மதியாத கூற்றுதைத்த சேவடியான் வாய்ந்த
மதியான் இடப்பக்கம் மால். 1
(பொழிப்புரை): - ஒன்று முதல் நூறு வயதுவரையும் வாழ்ந்து இறப்பினை அடையும் மாந்தர் உயிரை வாங்கும் இயமன் மார்க்கண்டேயர் செய்த ஒப்பற்ற புண்ணியமாகிய சிவபூசையை எண்ணாது அவரது உயிரைக் கவர்ந்து செல்ல முற்பட்டான். அதனால் அக்கூற்றுவனை உதைத்தருளிய சிவந்த திருப்பாதங்களை உடையவன் சிவபெருமான்; அவன் பிறைசூடியவன். அச்சிவபிரானது இடப்பக்கத்தைப் பொருந்தி நிற்பவர் திருமால்.
மனிதர் எனத் தலைமை பற்றிக் கூறினாரேனும் பிறஉயிர்களையும் கொள்க.
மாலை ஒருபால் மகிழ்ந்தானை வண்கொன்றை
மாலை ஒருபால் முடியானை – மாலை
ஒளியானை உத்தமனை உண்ணாநஞ் சுண்டற்
கொளியானை ஏத்தி உளம். 2
(பொழிப்புரை): - திருமாலைத் தம் இடப்பக்கத்தில் மகிழ்ந்து வைத்திருப்பவனும், வளப்பம் பொருந்திய கொன்றை மாலையைத் திருப்பள்ளித்தாமமாகத் திருமுடியில் சூடியிருப்பவனும், மாலைக்காலத்துச் செக்கர் வானத்தையொத்த ஒளி மயமான திருமேனியுடையவனும், உத்தமனும், பிரமம் விஷ்ணுவாதி தேவர்களும் கண்டஞ்சியதும் உண்ண முடியாததுமாகிய ஆலால விஷத்தை உண்பதற்கு ஒளித்துக் கொள்ளாதவனுமாகிய சிவபெருமானை நெஞ்சே துதிப்பாயாக.
உளமால்கொண் டோடி ஒழியாது யாமும்
உளமாகில் ஏத்தாவா றுண்டே – உளம்மாசற்
றங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி. 3
(பொழிப்புரை): - அங்கங்களில் எவ்வகைக் குற்றமும் இல்லாது போர் செய்யும் ஆற்றலுடைய ரிஷப வாகனத்தில் ஆரோகணித்து அடியார்க்கு அருள் செய்ய்த் திரியும் அழகிய தாமரை போன்ற திருவடிகளை உடைய சிவபிரானை, உள்ளம் மயக்கமடைந்து ஓடி நீங்காது மனந்தூயராய் நாமும் இருப்போமானால் வணங்காதிருக்க வழக்குண்டோ? இல்லை.
அடியார்தம் ஆருயிரை அட்டழிக்குங் கூற்றை
அடியால் அருவாகச் செற்றான் – அடியார்தம்
அந்தரத்தால் ஏத்தி அகங்குழைந்து மெய்யரும்பி
அந்தரத்தார் சூடும் அலர். 4
(பொழிப்புரை): - மார்க்கண்டேயராகிய அடியாரது அரிய உயிரைத் தன் ஆற்றல் தோன்றக் கவர்ந்து செல்ல முற்பட்டான் இயமன். அவனைத் தம் திருவடியால் செற்று உதைத்து அருவநிலை அடையச் செய்தான் சிவபெருமான். அப்பெருமானை அடியார்கள் உள்ளம் உருகி மெய்ம்மயிர் பொடிப்ப அகப்பூசை செய்து துதிப்பார். அத்துதியே சிவபிரான் சூடும் பூவாகும்.
அலராளுங் கொன்றை அணியலா ரூரற்
கலராகி யானும் அணிவன் – அலராகி
ஓதத்தான் ஒட்டினேன் ஓதுவன்யான் ஓங்கொலிநீர்
ஓதத்தான் நஞ்சுண்டான் ஊர். 5
(பொழிப்புரை): - மலர்தலைச் செய்யும் கொன்றையை அடையாளமாலையாகக் கொண்ட ஆரூர்ச் சிவபிரானை விரும்பி அடியாளும் அவ்வடையாளமாலையை அணிந்து கொண்டேன். அதனால் பிறர் தூற்றுதலுக்கு ஆளாகி உள்ளம் ஒடுங்கினேன். அவ்வலர் நீங்கக் கடல்சூழ்ந்த ஊரனும், நீலகண்டனுமாகிய அச்சிவபிரான் திருநாமங்களையான் கூறுவேன்.
தலைவி கூற்று இவ்வெண்பா.
ஊரும் தொற்றியூர் உண்கலனும் வெண்தலையே
ஊரும் விடையொன் றுடைதோலே – ஊரும்
படநாகம் மட்டார் பணமாலை ஈதோ
படநாகம் அட்டார் பரிசு. 6
(பொழிப்புரை): - சிவபெருமானுக்கு ஊர் திருவொற்றியூர். உண்ணும் பாத்திரமோ பிரமம் கபாலம்; ஊர்தியோ ஒப்பற்ற ரிஷபம்; உடையாவது தோலே; ஊர்ந்து செல்லும் படத்தோடு கூடிய நாகமும் தேன் பொருந்திய பூக்களும் மாலையே, யானை வடிவில் இருந்த கயாசுரனைச் சங்கரித்த சிவபெருமான் தன்மைகள் இவையே.
பரியானை ஊராது பைங்கணே றூரும்
பரியானைப் பாவிக்க லாகா – பரியானைக்
கட்டங்கம் ஏந்தியாக் கண்டுவாழ் நன்னெஞ்சே
கட்டங்கம் ஏந்தியாக் கண்டு. 7
(பொழிப்புரை): - குதிரை, யானையை வாகனமாகக் கொள்ளாது பசிய கண்களைக் கொண்ட ரிஷபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமானை, மனத்தால் பாவிக்கவொண்ணாத பெருமை மிக்கவனை, மழு ஏந்தியவனாகவும், கட்டிய எலும்பையே ஆபரணமாக ஏந்தியவனாகவும் கண்டு நன்னெஞ்சமே நீ வாழ்வாயாக.
கண்டங் கரியன் உமைபாலுந் தன்பாலும்
கண்டங் கரியன் கரிகாடன் – கண்டங்கள்
பாடியாட் டாடும் பரஞ்சோதிக் கென்னுள்ளம்
பாடியாக் கொண்ட பதி. 8
(பொழிப்புரை): - கழுத்தில் நீலநிறமுடையவன், உமையை ஒரு பாகம் கொண்ட அரிய திருக்கோலங்கொண்டவன், சுடுகாடன், கண்டங்கள் செம்மையாகப் பாட அதற்கேற்ப நாட்டியும் செய்யும் பெரிய சோதி மயமானவன் சிவபெருமான். அச்சிவபெருமானது பாடிவீடாக என் உள்ளத்தைக் கொண்டேன். ஆதலால் அவ்வுள்ளமே ஒரு பதியாகும்.
பாடிவீடு – பாசறை; பதி – க்ஷேத்திரம், கடவுள் உறைவிடம்.
பதியார் பழிதீராப் பைங்கொன்றை தாவென்
பதியான் பலநாள் இரக்கப் – பதியாய
அம்மானார் கையார் வளைகவர்ந்தார் அஃதேகொல்
அம்மானார் கையார் அறம். 9
(பொழிப்புரை): - “நகர்த்தார் கூறும் பழிதீரவில்லை. ஆகலான் தேவரீர் அடையாளமாகிய கொன்றை மாலையைத் தந்தருளும்” என்பதொன்றையே அடியாளாகிய யான் பலநாள் யாசித்து வேண்டவும் தலைவராகிய அழகிய மான் ஏந்திய கையை உடைய சிவபிரான் அவ்வடையாள மாலையைத் தாராது என்னை மெலியச் செய்து வளை கவர்ந்தார். அது தானோ கடவுளது கைப்பட்ட நல்ல அறம்?
அறமானம் நோக்கா தநங்களையும் செற்றங்
கறமாநஞ் சுண்ட அமுதன் – அறமான
ஓதியாள் பாகம் அமர்ந்தான் உயர்புகழே
ஓதியான் தோற்றேன் ஒளி. 10
(பொழிப்புரை): - அறத்தையும் பெருமையையும் பாராது மன்மதனையும் எரித்து அறமாக ஆலகால விஷத்தை அமுதாக உண்ட அமிந்தனும், கருமணலை ஒத்த கூந்தலை உடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவனும் சிவபெருமான். அவன் புகழையே பேசி யான் எனது மேனியில் பசலை பூத்தேன்.
பசலை – அழகுத் தேமல், தலைவரைப் பிரிந்த தலைவியரிடம் தோன்றுவது. இவ்வெண்பா தலைவி கூற்று.
ஒளியார் சுடர்மூன்றும் கண்மூன்றாக் கோடற்
கொளியான் உலகெல்லாம் ஏத்தற் – கொளியாய
கள்ளேற்றான் கொன்ரையான் காப்பிகந்தான் நன்னெஞ்சே
கள்ளேற்றான் கொன்றை கடிது. 11
(பொழிப்புரை): - உலகிற்குப் பிரகாசம் தரும் சூரியன் சந்திரன், அக்நி ஆகிய முச்சுடர்க்கும் ஒளிதரும் காரணமாய முக்கண்களைக் கொள்வதற்குப் பின்வாங்காத சிவபிரான், உலகமெல்லாம் வணங்க ஒளியானயாவுத் திரண்ட ரிஷப வாகனத்தமர்ந்தான்; கொன்றை மாலையை அடையாளாமாகக் கொண்டான். தன்னைப் பிறர் பாதுகாக்கும் தன்மை நீங்கி யவன் சிவபிரான், எனவே பிறரைக் காப்பாற்றுபவன். ஆதலால் நல்ல நெஞ்சமே, தேன் பொருந்திய அவனது கொன்றைப்பூக்கிடைக்கும் காலம் அண்மையிலுள்ளது. இவ்வெண்பாவும் தலைவி கூற்று.
கடியரவர் அக்கர் கரிகாடு கோயில்
கடியரவர் கையதுமோர் சூலம் – கடியரவர்
ஆனேற்றார்க் காட்பட்ட நெஞ்சமே அஞ்சல்நீ
ஆனேற்றார்க் காட்பட்டேம் யாம். 12
(பொழிப்புரை): - கடிக்கும் பாம்பையும் உருத்திராக்ஷங்களையும் மாலையாக உடையவர், சுடுகாட்டைக் கோயிலாகக் கொண்டவர், காவல் பெற்ற பாம்பைக் காப்பாகக் கட்டிய கைக்கண் உள்ள ஒப்பற்ற சூலம் ஏந்தியவர், அதிசயமான பாம்பாபரணர். வெள்ளேற்றை வாகனமாகக் கொண்டவர் சிவபிரான். அவர்க்கு அடிமை பூண்டொழுகும் நல்ல நெஞ்சமே, நீ பயப்படாதே. தர்மத்தையே வாகனமாகக் கொண்ட அவரால் யாம் காப்பாற்றப்படுவது உறுதி.
யாமான நோக்கா தலர்கொன்றைத் தார்வேண்ட
யாமானங் கொண்டங் கலர்ந்தந்தார் – யாமாவா
ஆவூரா ஊரும் அழகா அனலாடி
ஆவூரார்க் கென்னுரைக்கோம் யாம். 13
(பொழிப்புரை): - யாம் மானத்தை நோக்காமல் மலர்ந்த கொன்றைப் பூவாகிய மாலையை விரும்பி வேண்ட, எமது பெருமையைத் தமது உடைமையாக்கிய பழிக்கிடமான தேமலைத் தந்தார் சிவபெருமான். ‘ஏறு ஊர்ந்து செல்லும் அழகரே, அனலைக் கையிலேந்தி ஆடுபவரே, அடியாள் இரங்கத்தக்கவன்’ என்று கூறி அரற்றுவதல்லால் ஆவூரரிடம் வேறு என்ன பேச வல்லேம் யாம்?
யாம் – உளப்பாட்டுத் தன்மைப் பன்மை. இவ்வெண்பா தலைவி கூற்று.
யானென்றங் கண்ணா மலையான் அகம்புகுந்து
யானென்றங் கையறிவும் குன்றுவித்து – யானென்றங்
கார்த்தானே யாயிடினும் அம்பரன்மேல் அங்கொன்றை
ஆர்த்தானேல் உய்வ தரிது. 14
(பொழிப்புரை): - ‘யானே உன் தலைவன்’ – என்று திருவண்ணாமலையான் மனம் புகுந்து, யான் என்ற செருக்கிற்குக் காரணமான ஐம்பொறியறிவையும் குறைத்து தன்னை முன்னிறுத்தி உயிரைப் பின்போக்கி அடியனாக்கும் நல்லருள் செய்தாலும் அச்சிவபெருமான் மேல் அழகிய கொன்றை மாலை சூட்டிப் பணி செய்வானேல் உய்வது அரிய காரியமன்று.
அரியாரும் பூம்பொழில்சூழ் ஆமாத்தூர் அம்மான்
அரியாரும் பாகத் தமுதன் – அரியாரும்
வேங்கடத்து மேயானை மேவா உயிரெல்லாம்
வேங்கடத்து நோயால் வியந்து. 15
(பொழிப்புரை): -வண்டுகள் பொருந்தி ரீங்காரம் செய்யும் பூஞ்சோலைகல் சூழ்ந்த திருவாமாத்தூர்ச் சிவபெருமான் திருமாலை ஒரு பாதியில் கொண்ட அமிர்தன்; சிங்கங்கள் உலா வரும் திருவேங்கட மலையப் பொருந்தியவன். அவனை வியந்து பொருந்தாத உயிர்க்கூட்டமெல்லாம் உடல் நோயால் வருந்தும்.
வியந்தாழி நன்னெஞ்சே மெல்லியலார்க் காளாய்
வியந்தாசை யுள்மெலிய வேண்டா – வியந்தாய
கண்ணுதலான் எந்தைகா பாலி கழலடிப்பூக்]
கண்ணுதலாம் நம்பாற் கடன். 16
(பொழிப்புரை): - எனது நன்னெஞ்சமே! மென்மையான இயல்புகளை உடைய பெண்களை விரும்பி அழிய வேண்டா; அவரை அதிசயித்து ஆசைப்பட்டும் உள்ளம் மெலிய வேண்டா. வியந்து ஆராயத்தக்க கண்ணை நெற்றியில் கொண்டவன். எம் தந்தை, காபாலி ஆகிய சிவபெருமானது, வீரகண்டையணிந்த திருபாதப் பூவைத்தியானித்தல் நம்மவர்க்குக் கடனாம்.
கடனாகம் ஊராத காரணமும் கங்கை
கடனாக நீகவர்ந்த வாறும் – கடனாகப்
பாரிடந்தான் மேலிப் பயிலும் பரஞ்சோதி
பாரிடந்தான் மேயாய் பணி. 17
(பொழிப்புரை): - மதம் பொழியும் யானையை வாகனமாகக் கொள்ளாத காரணமும், ஆகாச கங்கையைத் திருமுடியில் மறைத்துக் கொண்ட வழியும், பூதக்கூட்டத்தைப் பொருந்திப் பழகுவதைக் கடனாகக் கொண்ட காரணமும், பூமியாகிய இடத்தைப் பொருந்திய வகையும் சிவபெருமானாகிய மேலான சோதியே! ஏன் என்று திருவருள் பண்ணு.
பணியாய் மடநெஞ்சே பல்சடையான் பாதம்
பணியாத பத்தர்க்குஞ் சேயான் – பணியாய
ஆகத்தான் செய்துமேல் நம்மை அமரர்கோ
னாகத்தான் செய்யும் அரன். 18
(பொழிப்புரை): - இளமை பொருந்திய நெஞ்சே! நீ பணிவாயாக. பலவாகிய சடையையுடையவன், தமது திருப்பாதமிடும் ஆணைக்கடங்காத பக்தர்களுக்கும் தூரத்தில் உள்ளவன். பாம்புகளையே ஆபரணமாகக் கொண்ட திருமேனியையுடையவன் சிவபெருமான். அவனுக்கு ஆட்பட்டுப் பணி செய்வோமாயின் நம்மை அவ்வரன் தேவர்களுக்கும் அரசனாகக் செய்வான்.
அரன்காய நைவேற் கநங்கவேள் அம்பும்
அரன்காயும் அந்தியுமற் றந்தோ – அரங்காய
வெள்ளில்சேர் காட்டாடி வேண்டான் களிறுண்ட
வெள்ளில்போன் றுள்ளம் வெறிது. 19
(பொழிப்புரை): - அரன் மேல் ஏற்பட்ட மையல் என்னை வருத்தி நான் வருந்துவேன். ஆனால் அச்சிவபெருமான் அம்மையலுக்கு காரணமான அந்திப் பொழுதையும் மன்மதனையும் அந்தோ அம்போடும் காய்ந்தானே. சுடுகாட்டை அரங்காகக் கொண்டு நட்டமாடும் சிவபெருமான் அடியானை விரும்பவில்லை போலும். அதனால் எனது உள்ளம் யானை யுண்ட விளங்கனி போல வெறுமையாயிற்று. இவ்வெண்ப தலைவி கூற்று.
வெறியானை ஊர்வேந்தர் பின்செல்லும் வேட்கை
வெறியார்பூந் தாரான் விமலன் – வெறியார்தம்
அல்லல்நோய் தீர்க்கும் அருமருந்தாம் ஆரூர்க்கோன்
அல்லனோ நெஞ்சே அயன். 20
(பொழிப்புரை): - மதங்கொண்ட யானையை ஊர்ந்து செல்லும் மன்னர்கள் பின்னே வர ஆசைப்படும் பவனி மேற்கொள்ளும் வாசனை பொருந்திய பூமாலையணிந்த மலமற்றவன் சிவபெருமான். அப்பெருமான் தம்மேல் பித்துக்கொண்டவர் பெற்ற துன்பநோய் நீக்கும் அரிய மருந்தாவான். ஆதலால், நெஞ்சே! திருவாரூர்த் தலைவனாகிய அச்சிவபிரான் அல்லனோ நம் தலைவன்?
No comments:
Post a Comment