Wednesday, October 26, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
சிவ சின்னங்கள்
ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி 68வது ஜகத்குரு மஹாசந்நிதானம்
ஶ்ரீமத் சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சுவாமிகளின் அருள்வாக்கு

சிவஞான பூஜா மலர் துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      பரமசிவனுக்கு உரிய ஐந்து அடையாளங்களில் பஸ்மமாகிய விபூதி ஒன்று. அவனுக்கு ப்ரீதியான மற்றொரு அடையாளம் ருத்ராக்ஷம். பில்வம் மற்றொன்று. இந்த பில்வம் மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் விருக்ஷம். பஸ்மம் ஸத்யஸ்வரூபமானது. அதை ஸாக்ஷாத் பரமசிவனுடைய ஸ்வரூபமே என்று சொல்லவேண்டும். பிரபஞ்சமெல்லாம் நசித்தாலும், தான் அழியாமல் இருப்பவன் பரமசிவன். உலகத்திலுள்ள பொருள் எல்லாம் எரிந்துபோனால் பஸ்மம் ஆகிவிடுகிறது. பஸ்மத்தை எரித்தால் அது அழியாமல் பஸ்மமாகவே இருக்கும். சிவஸ்வரூபமும் அத்தகையதே.
      ருத்ராக்ஷத்தைச் சிவபெருமானுடைய அடையாளமாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். ருத்திரருடைய நேத்திரம் அது. அதைத்தமிழில்திருக்கண்மணிஎன்று சொல்லுகிறார்கள். மற்ற மரங்களுடைய விதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு ருத்ராக்ஷத்துக்கு உண்டு. மற்றப் பழங்களில் உள்ள விதைகளுக்கு உள்ளே துளை இல்லை. துளசி மணியை அல்லது தாமரை மணியை அல்லது ஸ்படிக மணியை மாலையாக அணியவேண்டுமானால் அந்த மணிக்கும் துவாரம் செய்தே கோத்து அணிய வேண்டும். இயற்கையில் துளையோடு உண்டாவது ருத்ராக்ஷம் ஒன்று தான். ருத்ராக்ஷத்திற்கு முகங்கள் உண்டு. ஸாதாரணமாக நாரத்தம் பழத்திற்குள் ஐந்தாறு சுளைகள் உண்டு. பஞ்சமுகம் உடைய ருத்ராக்ஷமே அதிகம். சுப்பிரமணிய பக்தர்கள் ஆறுமுகத்திற்கு ஏற்றது ஆறுமுக ருத்ராக்ஷம் என்று அணிவார்கள். ஒரே முகமுடைய ஏகமுக ருத்ராக்ஷம் உண்டு. அது கிடைப்பது அரிது. இரண்டு முகம், மூன்று முகம், நான்கு முகம் என்று ருத்ராக்ஷங்களில் பலவகை உண்டு. ஏழு முதல் பதிமூன்று வரை ஸாதாரணமாகக் கிடைக்கும். 32 முகம் உடைய ருத்ராக்ஷம் கூட அருமையாகக் கிடைக்கும். இப்படி முகங்களிலே பலவகை இருந்தாலும், எல்லா ருத்ராக்ஷங்களின் மத்தியிலும் இயற்கையாகவே துவாரம் இருக்கும், மனிதன் இதைத் தரித்து மோக்ஷஸாம்ராஜ்யத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே இதனைப்படைத்திருக்கிறார். இந்த விதைக்கு வேறு உபயோகம் இல்லை.
      பஸ்மம், ருத்ராக்ஷம், பில்வம், ஸ்படிகலிங்கம், பஞ்சாக்ஷரம் ஆகிய ஐந்தும் சைவசின்னங்கள். நாக்கிலே தரிப்பது பஞ்சாக்ஷர மந்திரம், பரமேசுவரனுடைய சுவாஸமே வேதம் என்று சொல்லியிருக்கிறது. வேதம் இல்லாமல் ஈச்வரனில்லை, ஈச்வரன் இல்லாமல் வேதமில்லை. வேதங்கள் நான்கு. அவற்றில் அதர்வண வேதத்தை நீக்கிவிட்டு வேதம் மூன்று த்ரையீவேத:” என்று சொல்வதுண்டு. ரிக், யஜுஸ், ஸாம என்று சொல்லப்படும் இம்மூன்று வேதங்களிலும் மத்தியிலிள்ள யஜுர்வேதம் பிரதானமானது. அதிலுள்ள ஏழுகாண்டங்களில் நான்காவது நடு காண்டத்தில் ஶ்ரீருத்ரம் இருக்கிறது. நமோநமோ என்று அதில் வருவதால் தெலுங்கு தேசத்தவர்கள் அதை நமகம் என்று சொல்லுவார்கள். தமிழ் நாட்டில் ருத்திரம் என்பார்கள். “பரமேசுவரனுக்கு நம:” என்று அடுத்தடுத்து வரும் மந்திரங்களையுடைய இந்த ஶ்ரீருத்திரத்தின் நடுவில் பஞ்சாக்ஷரம் இருக்கிறது. வேதத்திற்கு ஆபரணமாக இருப்பது ஶ்ரீருத்திரம். அதில் மத்தியமணி பஞ்சாக்ஷரம். இந்த மத்திய மணியை எடுத்து விட்டால் ஆபரணம் வியர்த்தமாகிவிடும். நெற்றிக்கு திலகம்போல் வேதத்திற்குத் திலகம்போல உள்ள இந்த பஞ்சாக்ஷரத்தில் சிவ என்று இரண்டு எழுத்துக்கள் பிரதானமானது. வேதத்திற்கு ஜீவாம்சமாக இருப்பவை இந்த சிவ என்னும் இரு அக்ஷரங்களே.
      “பாவ நிவ்ருத்திற்கு ஏதாவது உங்கள் சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறதா? எங்கள் தெய்வம் பாவநிவ்ருத்தி செய்யும்என்று அந்நிய மதஸ்தர்கள் சொல்லுகிறார்கள். ‘எங்கள் தெய்வத்தினிடம் கூடப் போகவேண்டியதில்லைஎங்கள் தெய்வத்தின் நாமாவே பாவத்தைப் போக்கும்என்று பாகவதத்திலுள்ள இந்த சுலோகம் சொல்லுகிறது.
                யத் த்வ்யக்ஷரம் நாம கிரேரிதம் ந்ருணாம்
              ஸக்ருத்ப்ரஸங்காதகமாக ஹந்தி தத் |
       பவித்ரகீர்த்திம் தமலங்க்யசாஸனம்
              பவாநஹோ த்வேஷ்டி சிவம் சிவேதர: ||

அந்த நாமா பெரியதுகூட அல்ல. இரண்டே எழுத்தை உடையது. தங்கத்தாலும், வெள்ளியாலும் அதை எழுதி வைக்க வேண்டும் என்பது இல்லை. வாயாலே சொன்னால் பாவம் போய்விடும். யார் சொன்னாலும் அதற்குப் பலன் உண்டு. பலகாலம் சொல்லித் தவம் செய்யவேண்டும் என்பது இல்லை. பக்தியினால் ஒருமுறை சொன்னாலும் போதும். எந்தவிதமான நியமும் இல்லாமல் எப்போது சொன்னாலும் உச்சாரணம் செய்யும் போதே அந்த க்ஷணமேம் பாவங்களெல்லாம் போய்விடும். மஹாவிஷ்ணுவின் பெருமையைச் சொல்லுகிற பாகவதத்தில் சிவமஹிமை சொல்லப்பட்டிருக்கிறது. ஸத்யமான ஒன்றை எங்கும் சொல்லலாம அல்லவா?
      நாக்கைச் சுத்தமாக்கிக்கொள்ள சிவநாமத்தைச் சொல்வது போல இருதயத்தைச் சுத்தமாகிக் கொள்ள ஸ்படிக ரூபமாகச் சிவபெருமானைத் தியானம் செய்ய வேண்டும். மனத்தில் எதைத்தியானைக்கிறோமோ அந்த ஸ்வரூபம் ஆகிவிடுகிறோம். சுத்தஸ்படிக சங்காச ரூபமாக இருக்கிற பரமசிவனைத் தியானம் செய்தால் மனம் ஸ்படிகம்போல மலமற்றதாகிவிடும். தேஹத்தைப் பஸ்மத்தால் பரிசுத்தம் செய்து, நாக்கைச் சிவநாமாவினாலே பரிசுத்தம் செய்து, கண்டத்தில் ருத்ராக்ஷம் அணிந்து கொண்டு, பில்வத்தைக் கையில் தாங்கி சிவபெருமானை ஸ்படிகஸ்வரூமபாகத் தியானித்து மனஸைப் பரிசுத்தம் செய்து அர்ச்சிக்க வேண்டும்.
      சகல வஸ்துக்களும் அழிந்தாலும் கடைசியில், தான் ஒன்றுமட்டும் சத்தியமாக இருக்கிற பஸ்மத்தை நெற்றியிலும், ஸ்வபாவமாகத் துவாரங்களுடனும், முகங்களுடனும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற ருத்ராக்ஷத்தைக் கழுத்திலும், ஸாக்ஷாத் மஹாலக்ஷ்மியின் வாசஸ்தலமாகிய பில்வத்தைச் சிரஸிலும், வேதத்தின் மத்திய மணிக்குநடுநாயக மணிக்கு ஒப்பாக விளங்குகிறசிவஎன்னும் இரண்டு அக்ஷரத்தை நாக்கிலும், சுத்தஸ்படிகப பிரகாச மஹாலிங்கத்தை உள்ளத்திலும் தரித்துக் கொண்டு ஜன்ம ஸாபல்யத்தை அடைய வேண்டும்.
      [பதிப்பாசிரியர் குறிப்பு: கலைமகள் காரியாலயம் வெளியீட்டுள்ள ஆசாரிய ஸ்வாமிகளின் உபன்யாசங்கள்பாகம் 1-ல் சிவசின்னங்கள் என்ற தலைப்பில் பிரசுரமாகியிருக்கும் விஷயங்களினின்றும் தொகுக்கப்பெற்றது.]
சிவம்.


No comments:

Post a Comment