Friday, October 21, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவஜயம்
நாராயணன் முதலிய நாமங்களின் பொருள்
பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச ஸ்வாமிகள்
இயற்றியருளியசைவ சமய சரபம்
என்னும் நூலில், கைவல்லிய காண்டம்
14-ம் அத்தியாத்தைத் தழுவிப்
பதிப்பாசிரியரால் எழுதப்பட்டது.

சிவஞான பூஜா மலர் அக்ஷய, பிரபவவிபவ ஆண்டு - (1986, 1987-1988)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

      நாராயணன், வாஸுதேவன் முதலிய பெயர்கள் திருமாலின் பெயர்களாகக் கருதப்படுகின்றன. ஆனால் இவை சிவபரமான பொருளைத் தருபவையே என்பதை பாம்பன் ஶ்ரீமத் குமர குருதாச சுவாமிகள் நிலை நாட்டுகிறார்கள்.
      நாராயணன் – (1) இதன் பொருள்நரனது இருதயத்தில் இருப்போன்என்பதாம்; நரன்ஆன்மா. ஆன்மாவின் இருதயத்தில் இருப்போன் சிதாகாச சிவனெனல் ஏற்படுகிறதலின் நாராயணன் என்னும் பெயர் சிவனுக்கும் ஆம் என்க.
      (2)    நாரம்நீர்; இது சிவபெருமானுடைய அஷ்டமூர்த்தங்களில் ஒன்றாகலின் அதில் இருக்கும் சிவன் நாராயணன் எனப்படுவார்.
      (3)    சிவசக்தியாகிய நாராயணி கொண்ட புருஷ வடிவமே நாராயணன்.
      மேலும் நாராயணன் என்ற சொல் 28 வகையாகச் சிவபரமாகப் பொருள் படுதலை மல்லிகார்ச்சுநாராத்தியர் என்பவர் இயற்றிய சிவபரகேசவாதி நாமநிர்வசனம் என்ற நூலில் காணலாம் என்று சுவாமிகள் கூறியுள்ளார்கள்.
      வாசுதேவன் என்பது திருமாலின் நாமமாகக் கருதப்படுகிறது. அதனைச் சிவபரமாகப் பொருள்படுத்தியுள்ளார்கள் சுவாமிகள். வஸுதனம்; வஸுகுபேரன்; குபேரன் எந்தத் தேவனால் பிரகாசிக்கின்றனனோ அந்தத் தேவன் வாசுதேவன். குபேரனுக்கருள் புரிந்தவர் சிவபெருமானே என்பதை அறியாதாரும் உளரோ?
      (2)    வஸதி, வாஸுபிருதிவீ, இது சிவபெருமானது எண்வகைத் திருமேனிகளில் ஒன்றாகலின் அதிலிருக்கும் சிவனே வாஸுதேவன் எனக்கொள்க.
      ஸங்கர்ஷணன்இது ஸம்யக்கர்ஷ எனப்பிரிக்கப்பட்டு முன்னைய இரண்டும் நிர்விகல்பஸமாதியெனவும் பின்னையது சுகமெனவும் ஆம். ஆகவே அச்சமாதியிலிருப்போனுக்கு எச்சுகம் எய்துமோ அச்சகசொரூபன் சிவபிரானாதலின் ஸங்கர்ஷணன் என்ற பெயர் சிவபெருமானுடையதே என்று அறிக.
      (2)    யாவையும் இழுத்துக்கொள்வோன் ஸன்கர்ஷனன் என்று கூறப்படுதலின் ஸர்வ சங்கார மஹாருத்திரன் என்ற பொருள் தரும்.
      ப்ரத்யும்நன்: ப்ரமேலான; த்யும்நன் -தேவன்; எனவே மேலான தேவன். சிவபிரானே மேலான தேவன் என்பதை மஹாதேவன் என்ற சிவநாமம் விளக்குவதை யாவரும் அறிவரே!
      அநிருத்தன்: - அநிந: ருந்த இதி அநிர: - தம் அநிரம் ஹம்தீதி அநிருத்த: எனுமாற்றானேபிராணிகளைத் தடுக்கும் ஆற்றலுள்ள மன்மதனைக் கொன்றவன்என்று பொருள்படும். மன்மதனைக் கொன்றது யார்? சிவபெருமானெயன்றோ? எனவே அநிருத்தன் என்பதும் சிவநாமமே ஆதல் காண்க.
      ஹரி என்பதன் பொருள்: - ஹரிசூரியன்: இவன் சிவ பெருமானது எட்டு மூர்த்தங்களில் ஒன்றாகலின் இவனுக்கு அந்தரியாமியாக இருக்கும் சிவ சூரியன் ஹரியெனப்படுவன் எனக்கொள்க.
      (2)    ஹரிசந்திரன்; இவனும் சிவபெருமானுடைய அஷ்டமூர்த்தங்களில் ஒன்றாகலின் இவனுள்ளிருக்கும் அந்தர்க்கத சந்திரனான சிவபிரான் ஹரியெனப்படுவர்.
      (3)    ஹரிவாயு; இவனும் சிவபெருமானுடைய அஷ்டமூர்த்தங்களுள் ஒன்றாகலின் இவனுள்ளிருக்கும் அந்தர்க்கத வாயுவான சிவபிரானே ஹரியெனப்படுபவர்.
      (4)    பாசங்களையும் பாவங்களையும் ஹரிப்பவன் ஹரி. அத்திறமுளோன் சிவபிரானே யென்பது சரபோபநிஷத்தில்பரமேசுவரர் அத்தேவர்களுடைய தாபத்திரய ஜனன மிருத்தியு ஜரை முதலியவற்றாலுண்டான நாநாவிதமான துக்கங்களையும் ஹரித்தருளினர்எனப்படுதலாலும்விஷ்ணுவுக்கு நல்ல பிரஸாதம் செய்தருளினர்என்ற அருத்தத்தில் அறியப்படுதலாலும் சிவபெருமான் ஹரியெனப்படுவர்.
      கோவிந்தன்இதன் பொருள் விருஷபாரூடன் என்பதாம், இதனை திரிபுரஸம்ஹார காலத்தில் சிவனார் ஏறிச் சென்ற தேர் அச்சுமுறிந்தபோது, திருமால் விருஷபமாகி அத்தேரைத் தாங்கினர் என்பதால் அறிக. கூரேசவிஜயம் என்னும் வைணவர் சுவடியிலும்இடபமாய்த் தாங்கின கக்ஷிஎன்பதில் இச்செய்தி ஒப்புக் கொள்ளப்பட்டதேயாம். சிவபிரானுக்கு நந்தி விடை மால்விடை, தருமவிடை என்று மூன்று விடைகள் (விருஷபங்கள்) உள்ளன என்பதையும் அனைவரும் அறிவர். திருமால் இடபமாகிச் சிவபிரானைத் தாங்கியதை பின்வரும் திருவாசகத் திருப்பாட்டாலும் அறிக.
                கடகரியும் பரிமாவுந் தேருமுகந் தேறாதே
      இடபம்உகந் தேறியவா றெனக்கறிய இயம்பேடீ
      தடமதில்கள் அவைமூன்றுந் தழலெரித்த அந்நாளில்
      இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ.
-    திருவாசகம், திருச்சாழல், -15


சிவம்

No comments:

Post a Comment