உ
சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
நன்றுடையான் தீயதில்லான்
திருக்கயிலாய பரம்பரைத் திருத்தருமபுரம் ஆதினம்
16-வது குருமஹாசந்நிதானம்
ஶ்ரீலஶ்ரீ ஷண்முக தேசிக
ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் அருள்வாக்கு.
[சிவஞான பூஜா மலர் – துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
திருஞானசம்பந்த சுவாமிகள் 1300 ஆண்டுகளுக்கு முன் இங்கே (திருச்சிராப்பள்ளி0 எழுந்தருளியிருக்கும் பெருமானைத் தரிசித்துப் பாடியுள்ளார். அவர் அருளிய பதிகத்தின் ஒரு பாட்டு அனைவருக்கும் பொருத்தமான ஆசீர்வதாமாக அமைகிறது. நல்ல கருத்துக்களை நம் உள்ளத்தில் பதிய வைப்பதே ஆசீர்வாதம். உயிர்கள் உய்தி பெற்று வளர்வதற்கான நல்ல உணர்வுகளைக் கூறும் இத்தலத் தேவாரப் பதிகத்தின் முதற்பாடலில் ஞானசம்பந்தர் இரண்டு விஷயங்களை நமக்காக அருளிச்செய்துள்ளார்.
நன்றுடையானைத் தீயதிலானை நரைவெள்ளேறு
ஒன்றுடையானை உமையொருபாக முடையானைச்
சென்றடையாத திருவுடையானைச் சிராப்பள்ளிக்
குன்றுடையானைக் கூறஎன்னுள்ளங் குளிரும்மே.
இறைவன் நன்மையே நிறைந்தவன், தீமையே இல்லாத தன்மையன், மனிதர்களில் நன்மையே நிறைந்தவர்கள் எவருமிலர். தீமையே செய்யாதவர்களும் உலகில் இல்லை. பேச்சிலும் செயலிலும் தீமை காணப்பட்டால் அதனைத் தண்டிக்கச் சட்டங்கள் இருக்கின்றன. நெஞ்சால் தீமை நினைப்பாரைத் தண்டிக்க முடியாது. நமது முன்னோர்கள், சமயம் சமயம் என ஒன்று வைத்துக் கடவுள் கடவுள் என்று கூறுவதெல்லாம் நாம் இந்நெஞ்சத் தீமையை மாற்றி உய்தி பெறுதற்கேயாகும். ‘நன்றுடையானாகத் தீயதில்லானாகப்ப’ பெருமான், நாம் கண்டு வழிபடற்கென்றே ‘சிராப்பள்ளிக் குன்றுடையானாக’ எழுந்தருளியுள்ளான் என்கிறார் ஞானசம்பந்தர். அவன் அறமே வடிவினனாக என்கிறார் ஞானசம்பந்தர். அவன் அறமே வடிவினனாக, தீமையற்றவனாக விளங்கிகுன்றான் என்பதற்கு அவன் வாகனமாக இவர்ந்து வரும் காளையே சான்றாகும். அறமே வடிவமான காளை அவனுக்கு வாகனமாக அமைவதோடன்றி அவன் கொடியிலும் இடம் பெற்றுள்ளது. இவ்வுயர்ந்த தத்துவத்தை நமக்கு அறிவுறுத்தவே ‘நரை வெள்ளேறு ஒன்றுடையான்’ எனப் பிள்ளையார் (திருஞானசம்பந்தர்) குறித்தருளுகின்றார்.
உலகம் முழுவதும் ஆணும் பெண்ணுமாக விளங்குவதை ஊடுருவிப் பார்ப்பவர்கள் நன்கு அறிய முடியும். எல்லார் உடலிலும் வலப்பாகம் ஆண் தன்மை உடையது; வலியது, இடப்பாகம் பெண்மைக்குரியது; மென்மையானது. மின்சாரத்தில் கூட இவ்விரு திறமும் இருக்கிறது. இதனையே ‘பாஸிடிவ்’ என்றும் ‘நெகடிவ்’ என்றும் கூறுகின்றனர். தமிழில் பாயும் சக்தி, தாங்கும் சக்தி என இவற்றை விளக்குவர். இவ்விரண்டு சக்திகள் இல்லாமல் உலகம் இல்லை. சைவசித்தாந்தம் பதி – பசு – பாசம் என்று மூன்று பொருள்களைச் சிறப்பாக விளக்குகிறது. இவற்றையே கடவுள் – உயிர் – தளை என்றும் கூறலாம். இவ்மூன்று பொருள்களும் ஆண் – பெண் என்ற பாகுபாட்டோடு விளங்கி நிற்பதனை ஆழ்ந்து நோக்குபவர்கள் கண்டுகொள்ள முடிவும். கடவுள் சிவ – சக்தியாக விளங்குகிறார். உயிர்கள், ஆண் – பெண் எனப் பாகுபட்டு நிற்கின்றன. தளை எனப்படும் அறிவற்ற ஜடம், தாங்கும் சக்தி – பாயும் சக்தி என இருகூறுபட்டு விளங்குகிறது. இவ்வுண்மைகளை எல்லாம் ஆய்ந்தறிந்தே ஞானசம்பந்தர் இத்தலத்து இறைவனைப் பாடும் போது ‘உமையொரு பாகம் உடையான்’ என விளக்கிச் செல்கின்றார்.
அடுத்து ஞானசம்பந்தர் ‘சென்றடையாத திருவுடையான்’ என இறைவனைக் குறித்தருளுகின்றார். ஆணவமுனைப்பாலோ, உடல்வலியாலோ, அறிவுத் திறத்தாலோ இறைவனைச் சென்றடைதல் என்பது முடியாது. அவன் அருள் இருந்தாலன்றி உய்ர்கள் தாமே முயன்று அவன் திருவடிகளைச் சேர்வதென்பது இயலாது. உயிர்களின் பக்குவம் அறிந்து இறைவன் அருல் செய்கின்றான். சிலவற்றைச் சிலருக்கு இறைவன் தராமைக்குக் காரணம் அவ்வுயிர்கள் பக்குவப்படாமையேயாகும். நம்முடைய குறைகளையும் குற்றங்களையும் உணரத்தக்க நிலையில் நாம் இல்லை. இதனால் தான் இறைவனது அருளிப்பாட்டினை நம்மால் முற்றும் உணர்ந்துகொள்ள முடியவில்லை. இவற்றையெல்லாம் உளங் கொண்டே ‘சென்றடையாத திருவுடையான்’ என ஞான சம்பந்தர் குறித்தருளுகின்றார். எனவே, இத்திருப்பாடலிலிருந்து ஞானசம்பந்த அருளும் ஆசிர்வாதமாக நாம் கொள்ளத்தக்கது மனிதர்களுள் தீமையேயற்ற நன்றேயுடையவர்கள் எவருமிலர் என்பது ஒன்று. பிறிதொன்று இறைவன் உயிர்களின் பக்குவமறிந்து அருள் செய்தாலல்லது உயிர்கள் தாமே அவன் அருளை அடையமுடியாது என்பது. இந்த இரண்டு செய்திகளும் நமக்குப் புரிந்துவிடுமானால், உலகியல் குழப்பங்கள் யாவும் தீர்ந்துவிடுமென்பது உறுதி.
ஒரு நல்ல மனிதரைப்பற்றி பேசுவது, நினைப்பது, விழா எடுப்பது யாவுமே மனத்திற்கு குளிர்ச்சி தருவனவாகும். தீரோர்களுக்குச் செய்வதோ நெஞ்சில் எரிச்சலை விளைவிக்கும் என்பது உலகியற்கையாகும். இவற்றையெல்லாம் உள்ளடக்கியே ‘சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூற என் உள்ளங்குளிரும்’ என்றார். இறைவன் புகழைப் பேசுவதும், சிந்திப்பதும் நெஞ்சிற்குக் குளிர்ச்சி தரும் என்பதைச் சொல்லால் விளக்க முடியாது. அனுபவத்தால் தான் உணரமுடியும்.
பதிப்பாசிரியர் குறிப்பு: ஶ்ரீலஶ்ரீ குருமஹா சந்நிதானம் அவர்களின் அருளாசித் தொகுதியான திருவருட் செய்தி என்னும் நூலில் நன்றுடையான் தீயதில்லான் என்ற தலைப்பில் உள்ள கட்டுரையினின்றும் தொகுக்கப்பட்டது.
சிவம்.
No comments:
Post a Comment