உ
சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
சொன்மலர்க்கொவ்வாது ஒண்மலர்
வித்துவான் பொன். முருகையன், B. Litt., B. Ed., (M. A.,)
சிவஞான பூஜா மலர் – அக்ஷய, பிரபவ - விபவ ஆண்டு - (1986, 1987- 1988)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே முந்தோன்றி மூத்தது எனப் போற்றப் பெறுவது தமிழ்க்குடியாகும். அத்தமிழ்க்குடி, தான் புகழொடு தோன்றியது மட்டுமல்லாமல், பின்வரும் சந்ததியினரும் தமிழ்னென்று சொல்லவும், தலை நிமிர்ந்து நிற்கவும் ஏதுவான பல அரிய இலக்கிய, இலக்கணக் கருவூலங்களை வழங்கிச் சென்றது. ‘மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர், தம்புகழ் திறீஇத் தாம்மாய்ந்தனரே’ எனும் புறப்பாட்டின் பொருளைத் தமது வாழ்க்கையில் மெய்ப்பித்துக் காட்டினர். அவ்வழியில் நாம் இன்று பெற்றுள்ள – கேடில் விழுச்செல்வம் கல்வியே, மற்றவை மாடல்ல” என உணர்ந்த முன்னோர் விட்டுச் சென்றுள்ள – தமிழ்ப் படைப்புகளில் தனிச் சிறப்புடையது தொல்காப்பியம். இன்றுள்ள தமிழ் நூல்களில் மிகப் பழமையானதும், இலக்கணம் என்ற துறைக்கே இன்றுள்ள இலக்கண நூல்களில் முதன்மையானதும், ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இயற்றிய பெற்றிருத்தல் வேண்டும் என அறிஞர் உலகத்தார் கருதுவதும் ஆகிய உயர் நலங்களைத் தன்னகத்தே கொண்டது இந்நூலாகும்.
சுவையைத் தருகின்ற பொருளும், அதனை முகர்கின்ற பொறியும் சேர்ந்துழி உண்டாகின்ற சுவைகளை எட்டு எனப் பட்டியலிட்டுக் காட்டும் தொல்காப்பியம். நகை, அழுகை, இனிவரல், மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவகை என்பன அவை.
நகையே அழுகை இனிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப.
(தொல்காப்பியம் – மெய்ப்பாட்டியல் நூற்பா)
எனும் நூற்பா இதனை விளக்குவதாகும். இவற்றுள் அடங்காததும், இவை எல்லாவற்றையும் விட உயர்ந்ததும், உடலுக்கு இன்ப துன்பம் பயக்கும் இவற்றைவிடச் சிறந்ததாய் உணர்வுக்கே உவப்பூட்டுவதும் ஆகிய ஒரு மெய்ப்பாடுதான் – சுவைதான் – பக்தியென்னும் சுவையாகும். பக்தி என்பது, குரு பக்தி, பதிபக்தி, பெற்றோரிடத்துப் பக்தி எனப் பலவகைப் பட்டதாயினும் ‘பக்தி’ யென்று சொன்னவுடன் அது சிறப்பாகக் கடவுள் மாட்டுக் கொள்ளப்படும் பக்தியையே குறிப்பதாகும். பக்திப் பரவசம் என்பது உணர்வு பூர்வமான ஓர் அனுபவம். பக்திச்சுவை வயப்பட்டால் இவ்வுலக இன்ப, துன்பங்கள் எதிரே தோன்றமாட்டா. அப்போது இறைமையும், ஆன்மாவும் ஆகிய இரண்டுமட்டுமே எஞ்சிநிற்கும். ஜீவன் எந்தவிதப் பற்றுமின்றிச் சிவத்தில் கலக்கும் நிலையை எய்துவிக்கும் மார்க்கமே பக்திச் செந்நெறியாகும்.
எல்லாமற என்னை யிழந்த நலம்
சொல்லாய் முருகா சுரபூ பதியே (கந்தர் அனுபூதி)
தன்னை மறந்தாள் தன்னாமங் கெட்டாள்
தலைப்பட்டாள் நங்கை தலைவன் தாளே (அப்பர் தேவாரம்)
என அருளாளர்தம் அனுபவ உரைகள் சுட்டிக் காட்டுவன இப் பக்திப் பெருக்கையே. அந்த நிலையை எய்தியவர்கள், கும்பிடலே அன்றி வேறெதுவும் விரும்ப மாட்டார்கள். என், அந்தமில் இன்பத்து அழிவில் முக்தியைக்கூட விரும்பமாட்டார்கள். இன்பமும், துன்பமும் ஒன்றென மதிக்கும் செல்வத்தைப் பெறுவர் என பக்திக்கும், பக்தி வயப்பட்ட அடியார்க்கும் அடையாளங்களை வகுத்தவர், பக்திச்சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய கவி வலவர் எனச் சான்றோர்களால் போற்றப் பெற்ற சேக்கிழார் பெருமான் ஆவார்.
“பத்தியின் பால ராகிப் பரமனுக் காளாம் அன்பர்
தத்தமில் கூடி னாக்ள் தலையினால் வணங்குமாபோல்”
(பெரிய புராணம்)
கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொன்னும் ஒக்கலே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார். (பெரிய புராணம்)
என்பன அவர்தம் அருள்மொழிகள்,
மேலும் பக்தியைப்பட்ட பரமன் அடியார்கள், ‘எந்நிலையில் நின்றாலும் எக்கோலங் கொண்டாலும் மன்னியசீர்ச் சங்கரந்தான் மறவாமை பொருள்’ எனக் கொண்டவர்கள் எனச் சேக்கிழார் குறிப்பிடுவார்.
இத்தகைத்தான பக்திப் பெருநெறியில் ஈடுற்றுப் பரமன் திருவடியே பற்றுக்கோடு என உணர்ந்து பாகாய்க் குழைந்து உருகிப் பரவசமுற்றுப் பாடல்நூறு படைத்துச் சுவையூட்டிய கவிஞர் பெருமக்களுள் ஶ்ரீ குமரகுருபர முனிவர் எனப் பெறும் கவிஞர் கோமகனும் ஒருவர். ஏறத்தாழ 14 சிற்றிலக்கியங்களைப் படைத்துத் தந்து ‘சிற்றிலக்கியச் சக்கரவர்த்து’ எனப் போற்றத்தகும் பெருமை மிக்கவரும், திருச்செந்தூர் ஶ்ரீசெந்திலாண்டவன் திருவருளைப் பெற்றவரும், ‘மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்’ பாடி அம்மையால் முத்தாரம் அணிவிக்கப் பெற்ற வரும், சைவமும் தமிழும் இருகண் எனக்கொண்டு அவற்றைச் சந்தமும் வளர்த்த பெருமை மிக்கவ்ரும் சாத்திரம், தோத்திரம் என்னும் இரண்டு வகைக்கும் தனித்தனியே நூல்கள் செய்ததோடு இருபொருளையும் ஏற்புற, இடமறிந்து குழைத்துத் தந்தவரும் ஆகிய கவிஞர் கோமகனார் பக்திச் சுவை பாமலர்களைத் தமிழ் உள்ளங்கட்குத் தனிப்பெரும் கொடைகளாகக் கொடுத்துள்ளார். பஜ்திச் சுவையே சுவைகளுள் உயர்ந்தது. பக்திப் பாடலகளே சிறந்தவை. இப்பாடல்களை வழங்கும் கவிஞரே உயர்ந்தவர். இவர்களைவிட, பிரம்மனும் சிறிது தரம் குறைந்தவனே; அவன் படைப்புகள் (உடல்கள்) விரைவில் அழிந்துவிடும்; ஆயின் கவிஞர் தம் படைப்புகளோ காலத்தால், இடத்தால் அழியாது என்றும் வாழும் (Classic) இயல்புடையன” என்கிறார் பிறிதோரிடத்தில்.
கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்
மலரவன் வண்டமிழோர்க் கொள்வான் – மலரவன்செய்
வெற்றுடம்பு மாய்வனபோல் மாயாப் புகழ்கொண்டு
மற்றிவர் செய்யும் உடம்பு. (திருநெறி விளக்கம்)
என்பது அப்பாடல்.
“பொன் அணிகலன்களைச் சூடும் அரசரினும், அவற்றை அணியாது, கல்வியாகிய அணியை மட்டும் கொண்ட அரசரே உயர்ந்தவர். பிற உறுப்புகள் பொன்னால் ஆகிய ஆபரணங்கள் பலவற்றைத் தரித்துக்கொண்டு அழகுடன் திகழ்கின்றன. இருப்பினும் அணிகலனே தரிக்காத காணும் கண்ணைப்போல அவை உயர்ந்ததல்ல” என உவமை முகத்தான் கவிஞரின் உயர்வை அழகுற விளக்குவர் சிவப்பிரகாச சுவாமிகள்.
“பொன் அணியும் வேந்தர் அதுபுனையாப் பெருங்கல்வி
மன்னும் அறிஞ்ரைத் தாம் மற்றொவ்வார்”.
என்பது அவர் வாக்காகும். இப்படிப்பட்ட செம்மை நலங்கள் மிக்க கவிஞர் கூட்டத்தில் நமது சுவாமிகள் தன்னிகர் இல்லாத் தனிப்பெருங் கவிஞர் ஆவார். இவர் தம் கைவண்ணத்தில் மிளிர்ந்து இறைமையின் மேன்மை, அருட்செயல்கள், அடியவர்க்கு எளிவரும் செளலப்யத் தன்மை ஆகியவை கலந்த வண்ணத்தில் மின்னிடும் கவி முத்துக்கள் கணக்கில, அவற்றுள் திருவாரூர் நான்மணிமாலை எனும் அற்புதப் பிரபந்தத்தில் அமைந்திட்ட அரிய கருத்துக் கோவைகளைச் சொல்ல முயலும் முயற்சியில் கனிந்ததே இக்கட்டுரைக் கனியாகும்.
நூல் பெயர்:
இந்நூல் ஆரூர் மேவும் தியாகேசப் பெருமானின் சீர் பரவும் செந்தமிழ் மாலையாகும். நான்கு விதமான மணிகளைத் தொடுத்து மாலை செய்வதுபோல, நான்கு விதமான பாக்களால் தொடுக்கப் பெறுவது நான்மணிமாலையாகும். கட்டளைக் கலித்துறை, ஆசிரிய விருத்தம், வெண்பா, ஆசிரியப்பா ஆகிய பாக்களை முறையே அந்தாதியாக அமையப் பாடப் பெறுவது. நாற்பது செய்யுட்கள் அமையும். இதன் கண் பல அகத்துறைச் செய்திகள் விரவி வருகின்றன.
உள்ளுறை உயர் நயம்:
இந்நூலின் உள்ளே காண்ப பெறும் உயர்ந்த நயமிகு பாடலகள் பல. அவற்றுள் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் இங்கு தொகுப்பாகத் தருகிறேன்.
தோற்றப் பொலிவு:
தியாகப் பெருமானும், தேவியும் சிங்கஞ்சுமக்கின்ற மணி பதித்த அரியாசனத்தில் அழகொழுக வீற்றிருக்கின்ற காட்சியைக் கண்ட கவிஞர்க்கு, இரவும் பகலும் மாறிமாறி வருவதல்லாமல் இரண்டும் கலந்து ஒரே நேரத்தில் அருகருகே இருந்தாற்போல அது தோன்றுகிறது. இவ்வாறு இல்லாத பொருட்டன்மை ஒன்றை உவமையாக்கிக் கூறினமையின் இது இல்பொருளுவமை என அணியிலக்கணம் கூறும் சிறந்த அணிநலம் அமையச் சிறந்து காணப்பெறுகிறது.
கங்குலும் பகலும் கலந்தினி திருத்தாங்கு (5)
அப்பெருமானுக்கு ஆடைகள் வேண்டுமே; நமக்காயின் ஆடைகள் வாங்குவதும் அணிவதும் எளிது. ஆயின் இறைவனோ அண்டத்துக்கெல்லாம் தலைவன். திசைகளைக் கடந்தும் அவன் தன் திருக்கரங்களும், திருவடிகளும் விளங்குவதாகப் புராணங்கள் கூறும். அப்பேர்ப்பட்ட பேருரு உடைய பெம்மானுக்கு ஒளி பொருந்திய பகல் பொழுது வெள்ளையாடையாகும். இரவுப்பொழுது கரிய ஆடையாகும். மாலைப் பொழுதோ சிவந்த ஆடையாகும். இவற்றையன்றி அவனுக்குச் சிறந்த ஆடைகள் என எவற்றைச் சொல்வது எனும் கருத்தமைய, ஒரு பாடலில்,
வீங்கு பகற்போது வெண்படமாம் – தூங்கிருள் சூழ்
கங்குற் பொழுது கரும்படமாம் செம்படமாம்
பொங்குற்ற புன்மாலைப் போது. (6)
என உரைக்கிறார்.
மாநிலத்தில் இல்லாத மகிமை:
‘உடையார் முன் இல்லார்’ என வள்ளுவன் கூறியதற் கொப்ப இவ்வுலகில் பொருள் உடையார் ஒரு புறமும், அது இல்லாது வருந்தும் ஏழையர் ஒரு புறமும் இருக்கக் காண்கிறோம். கம்பன் கண்ட இலட்சிய இராஜ்ஜியத்தில் மட்டுமே, ‘கொள்வர் இலாமையால் கொடுப்பார்களும் இல்லை மாதோ’ எனும் அதிசயத்தைக் காணமுடியும். மற்றிடங்களில் எல்லாம் மேற்கூறிய இரண்டு இயற்கையே – களிறு, பொன்மணி ஆகியவற்றை அன்புடன் அளிப்பவரும், சிறிதும் நாணமின்றி வறுமை துரத்த அதை ஆவலுடன் ஏற்பவரும் ஆகிய இரு இயல்பே – உள்ளது. ஆனால் இயற்கையின் இறந்த ஒஉர் அற்புதத் தன்மை ஓரிடத்தில் அமைந்துள்ளது. அது எவ்வாறு நிகழ்கின்றது? எங்கு எந்த நாட்டில், நிகழ்கின்றது? ஆம், உலகம் முழுவதும் உவப்புடன் வாழ முப்பத்திரண்டு அறங்களை ஒரு பெருமாட்டி செய்கிறான். ஆயின் அவ் அறச் செல்வியின் துணைவரோ, பிரமகபாலம் கையிலேந்தி, ஊர் ஊராகப் பிச்சையேந்துகிறார். ஒரே உடம்பாகிய அப்பனின் திருமேனியில், இடப்புறமாகிய அம்மையின் பாகம் அறம் வளர்கிறது. ஆயின் அப்பனின் அருட்கூறோ காபாலியாய்ப் பிச்சையேந்துகிறது. இது இறைவரிடத்தன்றி வேறு உலகில் எங்கும் கிடையாது என்று அற்புதச் சுவை தோன்றப் பாடுகிறார்.
ஒருகா லத்தி லுருவமற் றொன்றே
இடப்பால் முப்பத் திரண்டறம் வளர்ப்ப
வலப்பால் இரத்தல் மாநிலத் தின்றே… (9)
தியாகர் என்பது தருமோ?
உலகில் மக்கட்குப் பெயர் சூட்டுகையில் யாதோ ஒன்றன் அடிப்படையில் சூட்டுவர். அவர் வளர்ந்து பெரியவர் ஆகையில் அது பொருந்துவதும் உண்டு. முரண்பட்டு அமைவதும் உண்டு. இளவழகன் என்ற பெயருடையான் அரூபியாகவும் தாமரைக்கண்ணன் எனும் பெயருடையான் ஒன்றரைக் கண்ணனாகவும், தேன்மொழி எனும் பெயருடையான் கரகரத்த குரலுடையாளாகவும், அறிவுச் செல்வி என்பவள் முட்டாளாகவும், வறுமை மிக்கவள் ஆகவும் அமைவதும் உண்டு.
ஆரூரில் மேவி அன்பர்தம் அரத்தை தீர்க்கும் பெருமானுக்குத் தியாகேசர் எனும் அழகுத் திருநாமம் உண்டு; அது முற்றிலும் பொருந்துமா என அணுகி ஆராய்கிறார் கவிஞர்.
இவர், உலகம் முழுவதையும் படைத்தார். ஆனால் தனக்கென அதை வைத்துக் கொள்ளவில்லை. திருமாலாகிய கடவுளுக்கு அவ்வுலகை (மண்மகளை) உவப்புடன் தந்துவிட்டார். பின், எண்ணில் பலகோடி நவநிதிகளைப் படைத்தார். அவற்றையும் விருப்பத்துடன் மறைத்து வைத்துக் கொள்ளாது, குபேரனாகிய ஒருவனுக்கு நல்கினார். எனக்குப் பெறுதற்குரிய நற்பேருகிய மோட்சத்தை (வீடுபேற்றை) வழங்கினார். ஏன், தன்னுடைய உடலையாவது தனக்கென வைத்துக் கொண்டாரா எனில் அதுவும் இல்லை. அதிலும் ஒரு பாதியை உமையம்மைக்குத் தந்து உமையொரு பாகனாய்க் காட்சியளிக்கிறார். எனவே இவர் எதையுமே தனக்கென வைத்துக் கொள்ளாது எல்லாவற்றையும் பிறர்க்கே ஈந்து விட்டார். எனவே இவர் பெரும் தியாகசீலர். கொடையில் சிறந்தவர் என உலகமும், இலக்கியங்களும் ஒருங்கு போற்றிடும் உயர் அறச்செம்மல்களான பாரி, பேகன், சிபிமன்னன் ஆகியோரைப் பாராட்டிப் புகழும் நம்மனோரால் இறைவனின் இத்தகு சிறப்பு நலத்தை எவ்வாறு போற்றிப் புகழ்வது. அது இயலாதன்றோ? உள்ளத்தை உள்ளபடியே கூறுவது முகஸ்துதி ஆகாது. அது, அவர்கள், சிறப்பு நலம் கருதிய – தியாகர் என்ற பொருள் நலம் மிக்க பெயரேயன்றிப் பொய்ம்மை உரையன்று, புகழுமன்று என வித்தகம்படப் பேசுகிறார்.
‘தியாகரென்பது, ஐயரிவர்க்கே தகுமுகமன்
அன்று புகழு மன்றாமே’ (24)
இருந்தாடல் ஏன்?
தியாகேசப் பெருமான் திருஆருர்ப் பதியில் இருந்தாடழகர் என்னும் திருநாமத்தால் போற்றப் பெறுவர். அவ்வாறு, அவர் திருவடிமலர்களைத் தூக்கி ஆடாமல், இருந்தாடுகின்ற இயல்பைக் கண்ட இக்கவிஞர் இரண்டு காரணங்களை அதற்குரியனவாகக் குறிப்பிட்டுப் பாடுகிறார். அவ்வாறு இருந்தாடாமல், திருவடி தெரியும்படி நின்றாடுவர் ஆயின், முன்னர்த் திருவடி காணாது அலமந்த திருமால் இப்போது நான் திருவடியைக் கண்டு விட்டேன் என உறுதி கூறுவார்; மேலும், முன்னொரு முறை மார்க்கண்டேயற்காக பாசக் கயிற்றுடன் வந்த கூற்றுவனை ஆற்றல்பட உதைத்துத் தள்ளியது சிவபரம்பொருள். மீண்டும் திருவடியைத் தூக்கினால் கூற்றுவன் அதைக் கண்டு அஞ்சுவான். ஆகவே இவ்விரண்டு காரணங்களையும் திருவுளங்கொண்டே அவர் இருந்தாடுகின்றார் எனச் சமற்காரமாக மொழிகின்றார்.
கண்ணனார் பொய்ச்சூள் கடைப்பிடித்தோ தென்புலத்தார்
அண்ணலா ரஞ்சுவரென் றஞ்சியோ
இருந்தாடு கின்றவா ! (18)
கவிஞர் இயல்பாக நிகழ்கின்ற ஒன்றைக்கண்டு, அதற்கு பிறிதோர் காரணம் கற்பித்து, அதில் தன் கருத்தை ஏற்றிக் கூறுவதால் இது தற்குறிப்பேற்றம் எனும் பொருளணி ஆகும்
பெயர்பொருள் அல்பொருள் எனஇரு பொருளினும்
இயல்பின் விளைதிறன் அன்றிப் பிறிதொன்று
தான்குறித்து ஏற்றுதல் தற்குறிப் பேற்றம்.
(தண்டி அலங்காரம்)
என்பது அவ்வணியின் இலக்கணம் ஆகும்.
ஒண்மலர் சொல்மலர்க்கு ஒவ்வாது:
இறைவழிபாட்டில் மலர்கொண்டு அர்ச்சித்தல் மிகவும் இன்றியமையாததும், சிறந்ததும் ஆகும்.
‘அரும்பிட்டுப் பச்சிலையிட்டு ஆட்செய்யும் அன்னை’ என இவரே வேறோரிடத்துக் கூறுவர்.
‘இருந்துநல மலர் புனையேன்’ – என்பர் மணிவாசகர்.
‘யாவற்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை’ இது திருமந்திரம் மொழி.
‘போதும் பெறாவிடில் பச்சிலையுண்டு’ பட்டினத்துப் பிள்ளையின் வாக்கு இது.
இத்தகு பெருமைமிகு மலரை விடச்சிறந்த மலர் உண்டா? உண்டு;
திருமாலாகிய கடவுள், சிவபரம்பொருளை நியமமாக வழிபட்டு வருகிறான், அப்போது ஆயிரம் மலர்ல் ஒரு மலர் குறைந்திட, உடனே சிறிதும் தயங்காது தன் கண் மலரையே சாத்தி வழிபடுகிறான். அவ்வாறு கண்மலர் சூட்டியும் இறைவனின் திருவடியை அவனால் காணமுடியவில்லை.
ஆயின், சுந்தரரோ இறைவனைப் பரவையார் பால் தூது செல ஏவி அவர்தம் திருவடிகளை எளிதில் கண்டுவிட்டார். அவர் என்ன மலர் சூட்டினார். அது பண்ணியைந்த பாமலர்.
எனவே, ஒண்மலரைவிட, மணமிகு மலரைவிட, கண்ணாகிய மலரைவிட, பண்ணியைந்த பாமலரே இறைவற்கு உகந்தது என்பது முடிவாகிறது. ஒண்மலர் சொல்மலரை ஒவ்வாது. இதனை அப்பெருமானே சொல்லியருளினானே!
‘அர்ச்சனை பாட்டே யாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
சொற்றமிழ் பாடுகென்றார் தூமறை பாடும் வாயார்’ (பெரிய புராணம்)
இதனைக் கருத்தில் கொண்ட கவிஞர் கூறுவது இது:
ஒண்மலர் சொல்மலர்க் கொவ்வாது போலும் மற்றோர் புலவன்
பண்மலர் சாத்திப் பணிகொண்ட வாபச்சை மால்சிவந்த
கண்மலர் சாத்தியும் காண்பரி தானகழல்மலரே. (31)
தோகையின் உடனுறை துணிவு:
அச்சந்தரக்கூடிய பொருளைக் கண்டாலே அச்சவுணர்வு பெருகும். அதுவும், ‘பாம்பென்றால் படையும் நடுங்கும்’ பாம்பென்று சொல்லக்கேட்டாலே அச்சம் தரும் என்பது வெளிப்படை ஆயின், அச்சந்தரக்கூடிய பலபொருள்கள் உடனிருந்தும் அஞ்சாமல் ஒருவர் இருந்தால் அது ஆச்சரிய மன்றோ? அதற்கும் ஒரு காரணம் இருக்குமன்றோ?
சிவபெருமான், கண்டார்க்கு அச்சம் மிகுவிக்கக் கூடிய பாம்புப் புற்றினில் குடியிருக்கிறார். (புற்றிடங் கொண்ட ஈசர் என்பது ஆரூர்ப்பெருமானின் நாமம்) பாம்பாகிய அணி கலனையும் அணிந்துள்ளார். மிகவும் வெம்மையுடையதாகிய ஆலகால விடத்தையும் உண்டார். இவ்வளவுக்குப் பின்னும் அச்சமேயில்லாமல் இருக்கிறார். என்ன காரணம்? அருகே தோகை (மயில் ஆகிய பறவை, தோகை போன்ற உமையம்மை) இருப்பதால் துணிவு அவருக்கு உண்டாயிற்று எனச் சிலேடை நயம்படப் பாடுகிறார்.
கரும்புற்று கார்வரைத் தோகைபங்கான துணிவு கொண்டே (35)
மேற்கண்ட நெறியில் நூலுட் புகுந்து நோக்கினால் பக்திச்சுவையே ஊடுபொருளாக எங்கும் பரவியுள்ளது. அது தான் எத்தனை வகைகளில் பரிமளிக்கிறது. இங்கு எடுத்துச் சொல்லப்பட்டன ஒரு சிறிதே. முழுதும் துய்க்க எண்ணில் மூலநூல் உதவிடும். செஞ்சொற் கவியின்பம் சேர உண்மையில் பக்திப்பரவசமும் கிட்டும். பகர்தற்கரிய முருகியல் இன்பமும் முன்னே வந்துறும்.
சிவம்.
No comments:
Post a Comment