உ
திருச்சிற்றம்பலம்
செந்தமிழும் சைவநெறியும்
(சைவசமய சண்டமாருதம், நக்கீரன் வழியடிமை,
புலவர், திரு. பி. மா, சோமசுந்தரனார்,
இராணிப்பேட்டை)
சிவஞான பூஜா மலர் – அக்ஷய, பிரபவ - விபவ ஆண்டு - (1986, 1987- 1988)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
1. நிறைமொழி மாந்தர்
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப.
என்பது தொல்காப்பியம். நிறைமொழி மாந்தர் ஆணையில் தோன்றுவது மந்திரம். மந்திரம் என்பதன் பொருள்யாது? மந்திரம் என்பது எல்லாம் அறியும் தன்மை உடையதும் உயிர்களைப் பிறவிக் கடலினின்றும் எடுக்கும் தன்மையுடையதும் ஆகும் என்று அறிக. இவ்வுண்மையை “மநநம் ஸர்வ வேதித்வம், த்ராணம் ஸம்ஸார ஸாகராத் | மநநத்ராணதர்மித்வாத் மந்த்ரமித்யபிதீயதே ||” என்று காமிக ஆகம மந்த்ராவதாரப் படலம் கூறும். நிறைமொழி மாந்தராம் தன்மை இறையருளால் கூடுவது ஒன்று ஆகும். பல்கலைக் கழகப் பட்டங்களோ அரசு விருதுகளோ அதைக் கூட்டுவிக்கமாட்டா. நிறைமொழி மாந்தர் திருவருள் வழி இயங்குவர். இத்தன்மையை
“ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே
அடக்குவித்தால் ஆரொருவர் அடங்காதாரே
ஓட்டுவித்தால் ஆரொருவர் ஓடாதாரே
உருகுவித்தால் ஆரொருவர் உருகாதாரே
பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே
பணிவித்தால் யாரொருவர் பணியாதாரே
காட்டுவித்தால் ஆரொருவர் காணாதாரே
காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக்காலே.”
எனவரும் திருநாவுக்கரசு பெருமானின் திருமொழி உணர்த்தி நிற்கும். அடியவர் செயல் யாவும் அரன் செயல் என்றே நாம் உணர்தல் வேண்டும். அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்ற உண்மையை இப்பாடல் காட்டுவதாகச் சிலர் எண்ணுவர். அகப்பொருள் சிறப்புடையதன்று.
கண்ணுக்கு ஒளியூட்டிப் பொருள்களைக் காட்டுவது கதிரவன் ஒளியாகும். அதன் துணைபற்றி உயிர்கள் காணும் திறனைப் பெறுகின்றன. ஆயினும் ஓங்கி உயர்ந்து நிற்கும் திருக்கோயிலைக் கண்டு ஒருவன் இறைவனைப் போற்று கின்றான். மற்றொருவன் குளியலறையில் நீராடும் ஒரு பெண்ணின் உறுப்புக்களை மறையில் நின்று கண்டு மதிமயங்குகின்றான். இது கண்ணுக்கு ஒளிதந்து பொருளைக் காட்டும் கதிரவனின் குற்றம் அன்று. பார்ப்பவனின் குற்றம் ஆகும். இதனையே சீவசுதந்திர போதம் என்பர்.
(சுதந்திரம் என்பதைச் சுதந்தரம் என்று வழுப்படவரையும் தமிழறிஞன்மாரும் உளர். இதன் வடமொழி வடிவம் ஸ்வதந்த்ரம் என்பது ஆகும். இந்த்ரன், மந்திரம், தந்திரம் என்று வரையப்படுகின்றன. இவ்வாறே இச் சொல்லும் சுதந்திரம் என்றே வரையப்படல் வேண்டும். சொந்தம் என்பதும் கூறல் ஆம்).
எனவே சீவசுதந்திர போதத்தால் நிகழும் செயல்களைக் குறித்து எழுந்ததன்று இப்பாடல் என்று உணர்க. ‘பாட்டுவித்தால் ஆரொருவர் பாடாதாரே’ என்ற அப்பர் அடிகளாரே “சலம்பூ வொடுதூபம் மறந்தறியேன், தமிழோடிசைபாடல் மறந்தறியேன்” என்றும் அருளிச் செய்துள்ளார். இங்ஙனம் அவர் தமிழோடு இசைபாடியும் சமணப் படுகுழியில் தான் வீழ்ந்தார். காரணம் திருவருள் நின்று பாட்டுவிக்காமேயேயாம். இப்பெருமான் ‘நான்’ என ஒன்று இல்லை என நிற்கும் நிறைவுடையாராயினார். இறைவன் அவரைத் தனது திருவருளில் அடங்கச் செய்து தானே முழுவதுமாய்க் காணப்பட்டு நின்றான். அந்நிலையில் அருளப்பட்ட ‘கூற்றாயினவாறு’ என்ற திருப்பதிகம் அவரை அடர்த்த சூலைநோயை ஒழித்தது. இத்திறத்தை,
நானவனென் றெண்ணினர்க்கு நாடுமுளம் உண்டாதல்
தானெனவொன் றினறியே தானதுவாய் – நானெனவொன்
றில்லென்று தானே யெனுமவரைத் தன்னடிவைத்
தில்லென்று தானாம் இறை.
என்று சிவஞான போத முனிவர் விளக்கியருளினார்.
இஞ்ஞான்று எத்தனையோ கவிஞர்கள் உள்ளார்கள். அவர்கள் பாட்டுக்களை யாராவது பாராயணம் செய்வரா? அப்பாடல்கட்குப் பிணி, இடர் மாற்றம் அல்லல்களைக் களையும் ஆற்றல் உண்டா? கோள்களின் தீங்கு நீங்கத் திருஞானசம்பந்தப்பெருமான் அருளிய கோளறு
பதிகம் தான் ஓதுகின்றனர். உடற்பிணி நீங்கத் திருநீற்றுப் பதிகம், ‘கூற்றாயினவாறு’ முதலிய அருட்பாடல்களைத் தான் ஓதுகின்றனர். திருஞானசம்பந்தமூர்த்திகள் ‘விங்குவினை கழனிமிகு கடைசியர்கள்’ எனத்தொடங்கும் பதிகத்தினைத் திருமாகறலில் அருளிச் செய்தார். சேலம் சுப்பராயலு செட்டியார் என்ற முதியோர் ஒருவர் இப்பதிகத்தை
ஓதியே அவர்தம் முரிந்த கால் கூடப்பெற்றார். திருநீலகண்டர் மரபில் வந்தவர் கன்னியப்ப உடையார் மகன் மனமோகனம்
என்பவர். வாலாசாபாத்தில் வலம்புரி விநாயகர்
கோயில் தெருவில் வாழ்கிறார். இவர்க்குற்ற பிணி எம்மருத்துவத்தாலும் மந்திரத்தாலும் ஒழியாததாயிற்று. தாத்திகராயிருந்த இவர் நல்லூகழ்வயத்தால் திருமாகறல் திருப்பதிகம்
ஓதி நோய்க்கு நோய் செய்து நீறுகண்டிகையுடன் பொலிகின்றார். எல்லாப் பிணியும், இடரும் அகல என்று பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதார சுவாமிகள் அருளிய சண்முக கவசத்தை
எண்ணற்றவர்கள் இஞ்ஞான்றூ ஓதி நலம் துய்த்து வருதலும் கண் கூடு ஆகும்.
இவரெல்லாம் நிறைமொழி மாந்தராகலின் இவர் ஆணையிற்கிளந்த மறைமொழி மந்திரம் ஆயின. ஆளுடைய பிள்ளை யார் ‘எனதுரை தனதுரையாக’ எனவும் ஆளுடைய அரசுகள் ‘பாட்டுவித்தென் பனுவல் கொண்டான்’ எனவும் அருளிச் செயலை எண்ணுக.
இங்ஙனமே சேக்கிழார் பெருமான் திருவருளில் அழுந்தித் திருத்தொண்டர் புராணம் அருளிச்
செய்தார். இந்நாள் மாந்தர் பணம், பதவி, பட்டம், புகழ் ஆகியவற்றையே விழைந்து
நடைதருகின்றனர். எனவே சேக்கிழார் மாட்சியை அறிதற்குக்
கூடாராயினர். முடியாட்சியின் முதல் மந்திரிப்
பதவியைத் தூசாக் கருதித்தில்லையம்பலவன் திருவடியன்பில் ஈடுபட்டார். ‘கூடும் அன்பினில் கும்பிடலேயன்றி வீடும் வேண்டாவிறலின்
விளங்கினார்’ என்ற தம்மொழிகளுக்குத்தாமே
இலக்கியமாக விளங்கினார். இவையெல்லாம் ஓராது “சேக்கிழார் கூறுவது வருணாசிரமத்தையே நிலைநாட்டுகிறது. பாவம்! அவர் காலத்தில் அவ்வளவுதான் சொல்ல அவரால் முடிந்தது போலும் என்று கூறுவாரின் பேரறிவை
என்னென்று வியப்பது? சேக்கிழார் பன்னிரண்டாம் நூற்றாண்டு. இக்கூற்றுப்படி நாம் வாழும் இருபதாம் நூற்றாண்டு மிகத்தெளிவடைந்த
காலம் ஆகும், இக்காலத்தில் வாழும் இக்கூற்றுடையார்
ஆதித்திராவிடர் மரபில் நான் பெண்கொள்ளலும் கொடுத்தலும் செய்கிறார் போலும்! சேக்கிழார் மாட்டுக் கழிவிரக்கம் கொள்ளவும் இவர் ஆதித்திராவிடர்
முன்னேற்றத்துக்கே தம்வாழ்நாளைச் செலவிடுகின்றார் போலும்! வாய் புளித்ததா மாங்காய் புளித்தா என்று பேசும் மேடைப் பேச்சாளரில்
இவரும் ஒருவர் போலும்! இதை வெளியிடுவதும் ஒரு சைவ
சித்தாந்தக் கழகம் என்றுணரும்போது ஊழ்வலையைத்தான் நோக வேண்டியுள்ளது.
அத்துணை ஏன்?” கம்பராமாயணத்தை ஒரு தட்டிலே
வைத்து ஏனைய நூல்களையும் ஒரு தெட்டிலே வைத்தால் கம்பராமாயணம் உள்ள தட்டுத்தான் ஏனைய
நூல்கள் உள்ள தட்டை வென்று மேம்பட்டு நிற்குமாம். சைவ மடாதிபதியாயிருந்த ஒருவர் ஒரு பட்டிமன்றத்தில் உதிர்த்த
கீதை மொழி இது. அப்பட்டிமன்றம் தம்பியரில்
சிறந்தவன் பரதனா, இலக்குவனா, சுக்கிரீவனா, குகனா, என்பது பற்றியது. தனிமையில் உரையாடுங்கால் அம்மடாதிபதி தாம் தலைமை பூண்ட இப்பட்டிமன்றம்
பற்றி என் கருத்தை உசாவினார். “உங்களுக்கு ஏன் சாமி இந்த வீண்வேலை. இராமனே தன் தம்பியாகிய இலக்குவனிடம் “எத்தாயர் வயிற்றிலும் பின் பிறந்தூர்கள் எல்லாம், ஒத்தால் பரதன் பெரிதுத்தமன் ஆதல் உண்டோ?” என்று கூறிவிட்ட பிறகு வழக்கு எதற்கு” என்றேம்.
2. சிவன்
இது காறும் கூறுவந்தவை ‘மற்றொன்று விரித்தல்’ என்னும் குற்றத்தின் பாற்படாவோ எனிற்படா. என்னை? அவை இந்நாள் ஆய்வாளர் திறத்தை வெளிப்படுத்தலால் என்க. இவ்வாய்வாளர் ‘சிவன்’ என்னும் திருப்பெயர் சங்க நூல்களில்
பயிலாமையைக் குறை கூறுவர். இன்னோர் சங்கநூல் இயல்பைச் சற்றேனும் உணர்ந்துளர் என்று கருதவே இயலவில்லை. சங்க நூல்களில் ஒன்று கூட முழுநூலாகக் கிட்டியதில்லை. யாவும் தனிப்பாடல் திரட்டுக்களே. அத்தனைப்பாடல்களின் எண்ணிக்கையும் இரண்டாயிரத்து நானுற்றுக்கும்
குறைந்தே உள்ளது. அவற்றுள் நெடுந்தொகை, குறுந்தொகை, ஐங்குறு நூறு, கலித்தொகை, நற்றிணை ஆகியவை இன்பத்துப்பால் பற்றியவை. இவை 1850 பாடல்கள் கொண்டவை. புறநானூறு போர் கொடை முதலியவை
பற்றியது. பதிற்றுப் பத்தும் அன்னதே. எஞ்சி நிற்பவை பத்துப்பாட்டும் பரி பாடலும் ஆகும். பத்துப்பாட்டுள் திருமுறுகாற்றுப்படையும் பரிபாடலில் முருகனைப்
பற்றிய எட்டுப் பாடல்களும் திருமாலைப் பற்றிய ஏழு பாடல்களுமே இறை நெறி சார்ந்தவை. முருகனைப் பற்றிய 23 பாடல்களும் திருமாலைப்பற்றிய ஒரு பாடலும் மறைந்துவிட்டன.
இதுகாறும் கூறியவற்றால் சிவபெருமானைப் பற்றிய பாடலோ இறைநெறிநூலோ இல்லை என்பது தெளிவாம். எனவே சங்கநூல்களில் புலவன்மார் சிவபிரானை உவமையாக வைத்தெ ஆண்டுள்ளனர். எந்தச் சிறப்பைக் கருதி உவமம் கூறுவரோ அச்சிறப்பைத் தெரிவிக்கும்
சிறப்புப்பெயர்களாலேயே சிவபிரானை வழுத்திப் போந்தனர். இதனால் சிவனாரின் சிறப்புப் பெயர்களே சங்கநூல்களில் பயில்வதாயின
என்று அறிஞன்மார் உணர்வர். இந்த நிலையில் எதைப் பற்றுக்கோடாகக் கொண்டு சிவன் என்னும் பெயர் சங்க காலத்தில்
வழங்கிற்றில்லை என்று ஆய்வாளர் முடிவுகண்டனர் என்பதை யாம் அறிகிலோம்.
சங்கப் புலவன்மாரில் உருத்திரனார், நல்லருத்திரனார், சோழன் நல்லுருத்திரன், கடியலூர் உருத்திரங்கண்ணனார் என்னும் பெயரிய புலவன்மார் வாழ்ந்துள்ளனர். எனவே உருத்திரன் என்ற பெயர் பெருவழ்க்கிலிருந்தமையும் அப்பெயரைப்
பெற்றோர் தம் மக்கட்குச் சூட்டும் வழக்கும் சங்க காலத்திருந்தமைபுலனாம். ஆனால் உருத்திரன் என்ற பெயர் சங்கப்பாடலின் பயின்றுவரக் காணவில்லை. இப்பெயர் பூண்ட புலவன்மார் பாடல்கள் தொகுக்கப்பட்டிராவிடின்
ஆய்வாளர் உருத்திரன் என்ற பெயரும் சங்கநாளில் பயின்றிலது என்னுரைக்கப் பின்னிடையார். சிவனார் எனும் பெயருள்ள புலவன்மார் இருந்ததாகக் காணப்படவில்லையே
எனில் கூறுதும். 102 பாடல்கள் ஆக்கியோர்
பெயரின்றிக் கிடக்கின்றன. தெரிந்த பெயருள்ளும் பல இயற்பெயரல்ல. பாடல்களில் வரும் தொடர்களைக் கொண்டே பாடலாசிரியர் பெயர் வரையப்பட்டுள, அணிலாடு முன்றில் என்ற தொடரைப் பயன் படுத்திய புலவர் அணிலாடு
முன்றிலார் ஆனார். மீனெறி தூண்டில் என்ற தொடரைக்
கூறிய புலவர் மீனெறி தூண்டிலார் எனப்பட்டார். விட்ட குதிரை என்று பாடிய புலவர் விட்ட குதிரையார் என்று கூறப்பட்டார். இப்படிப் பலப்பல உள. இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு சிந்திப்பின் சிவனார் என்று
பெயர் பெற்ற புலவர் வாழ்ந்திலர் என்று துணிவுரைத்தல் இயலாது என்க.
சங்க நூற்களில் வரும் சிறப்புப் பெயர்களும் செய்திகளும் சங்ககால மக்கள் சிவபிரானைப்
பற்றிய எல்லாத் தத்துவங்களையும் வரலாறுகளையும் நன்கு உணர்ந்திருந்தனர் என்று சான்று
பகரவுள்ளன. புறநானூற்றுக் கடவுள் வாழ்த்தில்
வரும் “பெண்ணுரு வொருதிறன் ஆகின்றவ்வுருத், தன்னுள் அடக்கிக் காக்கினும் காக்கும்” என்னும் வரிகள் சங்ககால மக்களின் சித்தாந்த அறிவை நன்கு எடுத்துக்
காட்டுகின்றது.
இனி, சங்கநூல்களில் பயிலும் சில
செய்திகளை இக்கட்டுரையில் கண்டு இன்புறுவாயாக.
3. கொலைவன்
இறைவன் முத்தொழில் இயற்றுபவன். படைத்தல், காத்தல், அழித்தல் என்பவை அம்முத்தொழில்கள்
ஆகும். படைத்தலைப் பிரமனும் காத்தலை
விட்டுணுவும் அழித்தலை உருத்திரனும் செய்வர் என்பர். அன்னோர் சிவபெருமானின் அருட்சக்தி இயக்கும் ஆற்றலால் அப்பணியை
ஆற்றுவரேயல்லாது தாமே ஆற்றும் ஆற்றலினால்லர். இதனையுணர்த்தவே ஆளுடையபிள்ளையார் “படைத்தனித் தழிப்பமும் மூர்த்திகள் ஆயினை” என்று திருவெழுகூற்றிருக்கையில் போற்றியருனினார். பேரூழிக் காலத்தில் உருத்திரன் வாயிலாக எல்லாவுலகுயிர்களையும் (பிரம விட்டுணுக்கள்) உட்பட ஒடுக்கிக் கொண்டு, அவ்வுருத்திரன், மகேசன், சதாசிவன் என்பாரையும் தன்னகத்தே
இறைவன் ஒடுக்கிக் கொள்வான். இதனைக் காரைக்காலம்மையார்,
“இறைவனே எவ்வுயிருந் தோற்றுவிப்பான் தோற்றி
இறைவனே ஈண்டிறக்கம் செய்வான் – இறைவனே
எந்தாய் எனவிரங்கும் எங்கள்மேல் வெந்துயரம்
வந்தால் அது மாற்றுவான்”
என்று உணர்த்தியருளினார். இவ்வாறு யாவற்றையும் அழிக்கும் இறைவனை மகாசங்காரக் கடவுள் என்பர். யாவற்றையும் அழித்துத் தனியனாய் நிற்கும் அக்கடவுளே மீண்டும்
படைத்தல் வேண்டும். ஆகலீனாற்றான் “ஒடுங்கின சங்காரத்தின் அல்லது உற்பத்தி இல்லை” என்று சிவஞானபோதம் கூறிற்று.
மகாசங்காரக் கடவுள் என்பதையே தூய தமிழில் “கொலைவன்” என்று புலவன்மார் கூறினர்.
“கொலைவன் சூடிய குழவித் திங்கள் போல்”
என்று கலித்தொகை (103 ஆம் படல் வரி 15) என்று கூறலையறிக. இங்ஙனம் சிறப்புப் பெயர் பெற்ற கடவுளுக்கு இயற் பெயரும் இட்டுத்
தமிழர் எத்தியிருப்பர் அன்றோ! அவ்வியற் பெயர் யாது என்று ஆய்வாளர் கூறல் வேண்டும்.
4. வாய்மொழிப் பிரான்
இறைவன் அனாதி எனவே அவனைச் சத்து என்பர். அவன் குணம் வாலறிவு, அதனைச்சித்து என்பர். அவன் இன்ப இருக்கை எனவே ஆனந்தம் என்பர். இங்ஙனம் சத்து, சித்து ஆனந்தம் (சச்சிதானந்தம்) ஆக விளங்குகிறான். சத்துப் பொருளாகிய அவன் திருமொழி அசத்து ஆகுமா? ஆகாது. இறைவன் திருமொழியே வாய்மை யாகும். அதுவே நிலை பேறுடையது. ஏனையோர் மொழிகள் அவர்களைப் போன்றே பொய்த்துப் பொன்றிவிடும். மற்றும் அவர் இயல்பும் பொய்யுரைப்பது. இறைவனின் திருமுடியைக் கண்டேன் என்று பிரமன் பொய் பேசினான். திருமாலோ “கார்ப்பாக சாதனன்றன் மகனுக் கெல்லாக், கலகமும் செய் வஞ்சனையே கற்ற கள்வன்” என்று வில்லிபுத்தூராழ்வார் கூறிய இயல்பினேன். எனவே வாய்மையுரை உடையவன் இறைவன் ஒருவனே. சத்துப் பொருளின் மொழியே சத்து. ஏனைய அசத்து. இக்கருத்தைக் கலித்தொகை,
“ஐயந்தீர்ந் தியார்கண்ணும் அருந்தவ முதல்வன்போல்
பொய்கூறாய் எனநின்னைப் புகழ்வது கெடாதேதான்” (100)
என்று கூறும். அருந்தவ முதல்வன் என்ற தொடர்க்கு
உரை வகுத்த ஆசிரியர் நாச்சினார்க்கினியர் “அரிய தவத்தையுடைய அறம் வளர்ந்த நாயனார்” என்று கூறினார். அரிய தவத்துக்கு முதல்வன் சிவபிரான் எனப்படலால் தவம் என்பது அவனை நோக்கியே செய்யற்பாற்று
என்ற உண்மையும் தெளியப்படும். இவ்வருந்தவ முதல்வனை சிவன் என்ற பெயரால் சங்ககால மக்கள் அறிந்திலர் எனின் வேறு
எப்பெயரால் அறிந்திருந்தனர் என்று ஆய்வாளர் தெரிவிப்பாரா?
5. அந்தணன்
எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகும் அறநெறியினர் அந்தணர் எனப்படுவர். தேவர்களில் அந்தணன் சிவபிரான். விட்டுணு அரசன், “திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே” என்பது நாலாயிரப்பிரபந்தம், பிரமன் வணிகன். சாமவேதப் பிரமாணம்,
“த்வம் தேவேஷுப்ராஹ்மணோஸி அஹம் மநுஷ்யேஷுப்ராஹ்மணோஹி
ப்ராஹ்மணமுபதாவதி உபத்வாதாவாமி” என்றும்
“விஷ்ணுர்வை க்ஷத்ரியோ ப்ரஹ்மாவைச்யஇதி”
என்றும் கூறும். பொருள்:- “உருத்திரன் என்னும் நீ தேவர்களுள் அந்தணன், நான் மாந்தரில் அந்தணன். அந்தணன் அந்தணனைத் தான் வழிபடுவான். ஆகலின் யான் உன்னை வழிபடுவேன்” எனவும் “விட்டுணு அரசன், பிரமன் வணிகன்” எனவும் ஆம், சிவபிரான் அந்தணன் என்னும் கருத்தைப் பரிபாடல்.
“ஆதி யந்தணன் அறிந்து பரிகொளுவ
வேத மாபூண் வையத்தேர் ஊர்ந்து
நாகம் நாணா மலைவில் லாக
மூவகை ஆரெயில் ஓரழல் அம்பின் முனிய
மாதிரம் அழலவெய் தமரர் வேள்விப்
யாகம் உண்ட பைங்கட் பார்ப்பான்” (5. வரி 22-27)
என்று கூறுதல் காண்க. “உலகைப் படைக்கும் நான்முகன். நான்முறைகள் ஆகிய குதிரைகளைத் தேர்ப்பாகனாய் நின்று தூண்டவும், மண்ணுலகம் ஆகிய தேரில் எழுந்தருளி ஆதிசேடனை வில்லின் நாணாகவும் மேருமலையை வில்லாகவும் கொண்டு மூவகைப்பட்ட அரிய மதில்களை தீயாகிய ஓர் அம்பைத் திசைகள் வெதும்பும்படி தொடுத்து அழித்து தேவர்களின் வேள்விக்கண் அவிகொண்ட சினத்தால் பசிய கண்ணையுடைய அந்தணானாகிய ஈசன்” என்பது அவ்வரிகளின் பொருள் ஆகும். கலித்தொகையிலும்,
“இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்” (38)
என வருதலும் ஈண்டு நினைவு கூரற்பாற்று.
பரிபாடலில் வரும் “பைங்கட் பார்ப்பான்” என்ற தொடர்க்குச் சினத்தால் பசிய கண்ணையுடைய அந்தணன் என்று பரிமேலழகர் உரைத்தாங்கு உரைத்தேம். ஆயினும் அது செம்பொருள் அன்று. உபநிடதங்கள் இறைவனைச் ‘சாந்தம்’ என்று புகழ்வதற்கு இப்பொருள் முரண்படும். நாரதபரிவ்ராசகோபநிதம் ‘ப்ரபஞ்சோப சமம் சிவம் சாந்தமத்வைதம் சதுர்த்தம் மந்யந்தே” என்று கூறுதல் காண்க. மாண்டூக்கியம், நிருசிம்ம பூர்வதாபிந், உத்தரதாபிந், ராமோத்தரதாபிநீ முதலிய உபநிடதங்கள் சாந்தம் என்ற சொல்லையிட்டுக் கோடிக்கும் எனவே பைங்கண் என்பதன் உண்மைப் பொருளைத் தெளிந்து உரைத்தார் நச்சினார்க்கினியர் ஒருவரே, அவர் கூறும் பொருளையும் காட்டுவாம்.
6. பசுங்கட் கடவுள்
“சுடர்விரிந் தன்ன கரிநெற்றிக் காரி
விடரியங் கண்ணிப் பொதுவனைச் சாடிக்
குடர்சொரியக் குத்திக் குலைப்பதன் தோற்றங்காண்
படரணி யந்திப் பசுங்கட் கடவுள்
இடரிய வேற்றொருமை நெஞ்சிடந் திட்டுத்
குடர்கூளிக் கார்த்துவான் போன்ம். (கலித்தொகை 101. வரி 21-26)
இதன் பொருள்: - “நிலவு விரிந்தாற் போன்ற சுட்டியை நெற்றியில் உடைய கரிய எருது மலைப்பூவாகிய தலைமாலையைக் கொண்ட இடையனை வருத்தி அவன் குடர் சரியும்படி தன் கொம்பாலே குத்திக்குலைக்கும் காட்சியைக் காண்பாயாக. உலகம் குலைவுறும்படி நிகழும் ஊழிக்காலத்திலே பசிய நிறத்தளாய உமா தேவியைப் பாகத்தே கொண்ட உருத்திரன், மார்க் கண்டேயராகிய தன் அடியவர்க்கும் இடர் விளைத்த எருமையேற்றை ஊர்தியாகக் கொண்ட கூற்றுவனின் மார்பைப் பிளந்து அவன் குடரைக்கூளிக்கு உணவாக்கும் செயலை ஒத்துள்ளது” எனவாம்.
இதன் கண் பசுங்கட் கடவுள் என்பதற்குப் பசிய நிறத்தளாய தேவியைப் பாகத்தே கொண்ட இறைவன் என்று நுண்பொருள் கண்ட நச்சினார்க்கினியர் நுண்மாண் நுழைபுலம் பெரிதும் போற்றற்பாலது. எனவே ‘பைங்கட் பார்ப்பான்’ என்ற இடத்தும் பரியநிறத்தளாகிய தேவியைப் பாகங் கொண்ட அந்தணன் ஆகிய சிவபிரான் என்று பொருள் காண்டலே சிறப்பிற்று. பசுங்கண் = பசுமை+கண் பசுமை அந்நிறத்தையுடைய தேவியைச் சுட்டியது. கண் என்பது அவளைத் தன் இடத்திலே கொண்டமையைக் குறிப்படுவது.
இங்ஙனமே நச்சினார்க்கினியர் கூறும் அரிய பொருள் நுட்பங்களில் மேலும் ஒன்றைக் காண்பாமாக.
7. மணிமிடற்று எண்கையான்
இறைவன் மனமொழிகளைக் கடந்து நிற்பவன். இத்திறத்தை “மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே” என்று மணிவாசகப் பெருமான் உணர்த்தியருள்வர். அவன் அடியவர் அல்லலை அறுப்பவன். இதனைச் ‘சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறிநின்று. பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்’ என்று அப்பெருமான் அருளிச் செய்துள்ளார். அவன் அடியவர்கட்கு ‘வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை வேண்டும் அளவில் உதவும் பெருமானே’ என்று போற்றுவார். இச்செய்திகளைக் கலித்தொகை.
“ஆறறி அந்தணர்க் கருமறை பலபகர்ந்து
தேறுநீர் சடைக் கரந்து திருபுரத் தீமடுத்துக்
கூறாமல் குறித்ததன்மேல் செல்லும் கடுங்கூளி
மாறப்போர் மணிமிடற் றெண்மையாய் கேளினி”
(கடவுள் வாழ்த்து)
என்று கூறுகின்றது. நான்முகனுக்கு நான்கு மக்கள். சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குனரர் என்பார். நால்வரும் நற்கலை பல கற்றும் வீடுறுநெறியை விளக்கமாகக் கண்டிலர். எனவே சிவபிரானை அணுகினர். அவன் வாக்கிறந்த பூரணமாய் மனக்கப்பாலாய் எல்லாமாய் உள்ளதுமாய் உள்ள பொருளை உணர்த்தினான். அதனை எவ்வாறு உணர்த்தினான்? காதலம் உரத்தில் சேர்த்து மோன முத்திரையைக் காட்டிச் சொல்லாமல் சொல்லியருளினான். இதனையே
“ஆறறி அந்தணர்க் கருமறை பலபகர்ந்து”
என்றார். மதங்கொண்டயானை யாவற்றையும் அழிவு பண்ணும். ஆனால் அதைவயப்படுத்திப் பயிற்சி தந்தால் மக்கட்குப் பயன்படும் பல பணிகளைச் செய்யும். அதுபோலக் கங்கை யாறு வீறுகொண்டு பாய்ந்தால் உலகம் நீறுபடும். அதை ஒருதுளியாக்கிச் சடையில் கரந்து அதன் வீறு ஒழித்து நிலவுலகிற் பாய்ந்து நலம் பல விளையச் செய்தான் பரமன். அங்ஙனமே உலகை நடுங்கச் செய்த முப்புரங்களையும் முறுவலின் தோன்றிய தீயால் எரித்துக் காத்தருளினான். இதை விளக்குவது,
“தேறுநீர் சடைக்கரந்து முப்புரத் தீமடுத்து”
என்பது. “இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவன் இறைவன்” என்று கூற ஒண்ணாதபடி மொழிகடந்து நிற்பவன் இறைவன். “கூறாமல்” மொழியால் கூறப்படாமல் என்பது பொருள். மனம் சிந்திக்கும் தன்மையுடையது. அச்சிந்தனைகளுக்கு எல்லாம் எட்டாது அசிந்தன் இறைவன். இதனைக் “குறித்ததன் மேற்செல்லும்” என்ற தொடர் உணர்த்துகிறது. குறித்த மனத்தால் குறிக்கப்பட்ட அதன் மேல் செல்லும் அப்பொருளையும் கடந்து விளங்கும் என்பது பொருள். சிவபிரானே சருவ சங்காரகருத்தா என்பதைச்சரப உபநிடதம் “யோந்தகாலே ஸர்வலோகாந் ஜஹாரஸ ஏக ச்ரேஷ்டச்சஸர்வ” என்று கூறும். இதனையே “கடுங்கூளி மாறாப்போர்” என்றார். கடிதாகிய கூளிகள் தங்கிய முதுகிடாத போர் என்பது பொருள். அடைந்தவர்க்கு அளி செய்யும் அண்ணல் அரன். அதனையே நீலமணியொத்த அவனது மிடறு காட்டி நிற்கும். கடலின் தோன்றிய நஞ்சை எம்பிரான் உண்டு உலகைக் காவானேல் யாவரும் அழிந்திருப்பர். இதனை
“பாரோடும் விண்ணோர்கள் பறந்தோடப் புரந்தரனார் பதிவிட்டோடத்
தேரோடும் கதிரோட மதியோட விதியோடத் திருமால்மேனிக்
காரோடத் தொடர்ந்தோடும் சுடல்விடத்தைப் பரமனுண்டு காவா விட்டால்
ஆரோடும் நீரிருப்பீர் எங்கோடியுயீர் பிழைப்பீர் அறிவிலீர்காள்”
என்று குற்றாலப்புராணம் கூறும். எனவே இறைவன் அடியவர் அல்லலை அலைப்பவன் என்று அறிக. இதனையே ‘மணிமிடற்று’ என்பது குறித்தது. எட்டுத்திக்கில் உள்ளவர்களாய அடியார்களுக்கு வாரி வழங்கும் எட்டுக் கைகளையுடையவன் இறைவன். எனவே ‘எண்கையாய்’ என்றார். இத்தனைப் பொருளும்
“கூறாமல் குறித்ததன்மேல் செல்லும் கடுங்கூளி\
மாறப்போர் மணிமிடற் றெண்கையாய் கேளினி”
என்னும் வரிகளால் உணர்த்தப்படுகின்றன. இறைவன் எட்டுத்திருக்கைகளை உடையவன் என்ற உண்மையை உணர்ந்திருந்த சங்ககால மக்கள் அவன் சிவன் என்னும் பெயருடையான் என்றறியார் என்பது அவம்படுவதே.
இப்பாடலில் ‘கூறாமல் குறித்ததன்மேல் செல்லும்’ என்ற தொடர்க்குப் புலவன்மார் ‘வாய்பேசாமல் தான் குறித்த கருத்தின் மேற் செல்லும்’ என்று எளிய, சிறப்பு ஏதும் தங்காத பொருளையே கூறுவர். நச்சினார்க்கினியர் இத்தொடர் இறைவன் ‘மாற்றம் மனம் கழிய நின்ற மறையோன்’ ஆதலைக் குறிப்பது என்று உணர்ந்து பொருள் விரித்த நிண்மாண் நுழைபுலம் வியத்தற்குரியது.
8. நீர்சடைக் கரந்தான்
உலகில் உள்ள எல்லாப் பொருளும் அழிவுறும், எல்லாவுயிர்களும் அவ்வப்போது தம் நிலை திரிவுறும். இறைவன் அன்றும் இன்றும் என்றும் அழிவின்றித்திரிபின்றி விளங்குவன். கங்கையாறு கரைபுரண்டு தன்கைப்பட்ட எப்பொருளையும் உந்திச் சென்று
கரையிலும் கல்லிலும் மோதவிட்டு ஆரவாரம் செய்யும் நீர்மையது. அதன் முந்தைய நிலையோ பல மடங்கு அச்சம் விளைவிக்கும் தன்மையது. அதன் கடிதாகிய வேகத்தைப் பரமேசுவரனேயன்றித் தாங்குதற்கு வேறு
யார் உளர் என்று நான்முகனே உரைத்தான். தேவியின் கைவிரல் நசுக்கண்களினின்றும் பிறந்தமையால் அத்தனை ஆற்றல் கொண்டதாயிற்று. இறைவன் அதைச் சடையில் ஒரு துளி யாகத்தரித்துக்கொண்டான். இறைவன் அக்கங்கையைச் சடையில் ஏற்றதற்கு முன்னும் பின்னும் நிலை
திரிந்திலன். செல்வம் பலரிடத்தும் சென்று
சிலபோது வைகிப் பெயரும் தகைமையது. இவ்வாறு ஓரிடத்தில் நில்லாது பல்லிடங்களில் சென்று தங்கினும் செல்வம் இறைவனைப்போலவே
தன் நிலை திரியாது நிற்கும். (ஒரு பொற்காசு எப்போதும் ஒரு பொற்காசாக இருக்குமேயன்ற் வெள்ளிக்காசாகவோ செம்புக்காசாகவோ
நிலை திரியாது. இப்படிக் கண்டுகொள்க). இக்கருத்தைக் கலித்தொகை,
“இறந்துதாம் எண்ணிய எய்துதல் வேட்கையால்
அறந்துறந் தாயிழாய் ஆக்கத்தில் பிரிந்தவர்
பிறங்குநீர் சடைக்கரந்தான் அணியன்ன நின்னிறம்
பசந்துநீ இனையையாய் நீத்தலும் நீப்பவோ.” (150)
என்று விளக்குதல் காண்க.
9. புரம் எரித்த புண்ணியன்
“ஆதியந்தணன்” என்று முற்காட்டிய பாடலிலே
சிவபிரான் புரமெரித்த வரலாறு நன்கு விளக்கப்பட்டுள்ளது. புறநானூறும்
“ஓங்குமலைப் பெருவில் பாம்புஞாண் கொளீஇ
ஒருகணை கொண்டு மூவெயில் உடற்றிப்
பெருவிறல் அமரர்க்கு வென்றி தந்த
கறைமிடற் றண்ணல்”
என்று கவினுறப்பாடும். இத்துணைவரலாறுகளும் வழங்கி வந்தகாலை சிவபிரானின் பெயர் மட்டும் வழங்கவில்லை என்று
கொள்வது நறிதோ? சிந்திமின்! இவ்வரலாற்றைக் கலித்தொகை கூறும். சிலப்பதிகாரமும்
“திரிபுரம் எரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேரம் பேவல் கேட்ப”
என்று இவ்வரலாறு கூறும். திருமங்கையாழ்வாரும் இவ்வரலாற்றை
“தழல்நிற வண்ணன் நண்ணார் நகரம் விழநனி மலைசிலை வளைவுசெய்தங்
கழல்நிற அம்பது ஆனவனே”
என்று கூறித் திரிபுரம் எரித்தகாலை அம்பாய் நின்ற தன் கடவுளைப்போற்றி செய்தார். இவ்வாறு அம்பாகிய செயலைச் சீவகசிந்தாமணியும்
“மேகம் ஈன்ற மின்னனை யாள்தன் மிளிர்பைம்பூண்
ஆகம் ஈன்ற அம்முலை யின்பால் அமிர்தேந்த
போகம் ஈன்ற புண்ணியன் எய்த கணையேபோல்
மாகம் ஈன்ற மாகதி யன்னான் வளர்கின்றான்.”
என்று உரைத்தது. போகம் ஈன்ற புண்ணியன் எய்த
கணையே போல் தான் சத்தியும் சிவனுமாய் உலகத்துக்கெல்லாம் போகத்தை உண்டாக்கின புண்ணியன்
ஆகிய பரமேசுவரன் திரிபுரவிசயத்தில் எய்த கணையாகிய திருமால் (அவதாரம் ஆகிய கண்ணன் ஆய்ப்பாடியில் ஒளித்து வளர்ந்ததைப்) போல.
10. நஞ்சுண்ட நம்பன்
இத்திருப்பெயர்ப் பற்றிய விளக்கம் முற்கட்டுரையிலேயே வந்துள்ளது. திருவண்ணாமலை என்பது திருமால் பிரமர்களுக்கு எட்டாத மலை என்பது
யாவரும் அறிந்ததே. இதன் வடமேற்றில் திருசூலகிரி
என்று ஒரு மலை உள்ளது. இதைப் பருவதகிரி என்றும் வழங்குவர். இதன் தொன்மைத் தமிழ்ப் பெயர் தவிர மலை என்பது ஆகும். இம்மலையில் இறைவன் எழுந்தருளியுள்ளான். அவன் இஞ்ஞான்று கானகண்ட ஈசுவரன் என்று வழுத்தப்படுகின்றான். பெருமான் நஞ்சையுண்டு அதைத் தன் மிடற்றில் நிறுத்திப் பளிங்கன்ன
தன்மேனியின் நிறத்தால் அதனை நாம் எல்லாம் கண்டு உய்யும் வண்ணம் காட்சிப்படுத்துவதால்
இப்பெயர் பெற்றான். இதே பொருளில் அமைந்ததே இவனது
தொன்மைத் தமிழ்ப் பெயரும். அது காரியுண்டிக்கடவுள் என்பதாகும். இவ்வுண்மையை மலைபடுகடாம்
“நீரகம் பனிக்கும் அஞ்சுவரு கடுந்திறல்
பேரிசை நவிர மேஎ யுறையும்
காரி யுண்டிக் கடவுள தியற்கையும்”
என்று எடுத்தியம்புதல் அறிந்து இன்புறுக. இதனையே புறநானூறும்
“கறைமிட றணியலு மணிந்தன் றக்கறை
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே”
(கடவுள் வாழ்த்து)
என்று கூறிற்று. இதற்கு உரையாசிரியர்
“நஞ்சினது கறுப்பு திருமிடற்றை அழகு செய்தலும் செய்தது. அக்கறுப்பு தான் மறுவாயும் வானோரை உய்யக்கொண்டமையின் வேதத்தைப்
பயிலும் அந்தணரால் புகழவும் படும்” என்று உரைவகுத்த திறம் உணர்ந்து மகிழ்தற்பாலது ஆம்.
11. முத்தொழிலோன்
படைத்தல் முதலிய ஐந்தொழில் இயற்றும் இறைவன் என்று சிவபிரானைப் பஞ்சப்ரஹ்மோபநிடதம்
போற்றி செய்யும். மைத்ராயண உபநிடத்து நான்காம்
பிரபாடகம் “அக்கினி, வாயு, சூரியன், பிராணகாரம், அன்னம், பிரமா, உருத்திரன், விட்டுணு முதலினோர் பிரமத்துக்கு உடம்புகள் என்று கூறும். ஈண்டு உடம்புகள் என்றது அவர்களின் உடம்புகளைக் குறியாது உயிர்களைக்
குறிக்கும் என்றறிக. எனவே படைப்பவனும் அவனே. காப்பவனும் அவனே, துடைப்பவனும் அவனே என்று அறிக. இதனை முன்னருங் கூறினாம். ஆதியுலாவும்
“அரியாகிக் காப்பான் அயனாய்ப் படைப்பான்
அரனாய் அழிப்பவனுந் தானே”
என்று கூறியது. இக்கருத்தை
“மணிவிளங்கு திருமார்பின் மாமலரான் வீற்றிருப்பப்
பணிதயங்கு நேமியும் பால்நிறந்த சுரிசங்கும்
இருசுடர்போல் இருகரத்தில் ஏந்தியமர் மாயோனும்
பங்கயத்தில் உறைவோனும் பாகத்தோர் பசுங்கொடி சேர்
செந்தழற்கண் நுதலோனும் தேருங்கால் நீயென்பார்”
எனவரும் பாடல் கூறுதல் காண்க. இப்பாடல் தொல்காப்பியம் பொருளதிகாரம் செய்யுளியலில் (146ஆம் சூத்திரத்துப்) பேராசிரியராலும் நச்சினார்க்கினியராலும் ஆளப்பட்ட மேற்கோள் செய்யுளாகும். படைத்தலைச் சிவபிரானுக்கு உரியதாக்கி
“நீல மேனி வாலிழை பாகத்
தொருவ னிருதாள் நிழற்கீழ்
மூவகை யுலகும் முகிழ்த்தன முறையே”
என்று ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்தும், காத்தலைச் சிவபிரானுக்கு உரியதாக்கி
“எல்லா யுயிர்க்கும் ஏமம் ஆகிய
நீரற அறியாக் கரகத்துத்
தாழ்சடை பொலிந்த அருந்தவத்தோற்கே”
என்று புறநானூறு கடவுள் வாழ்த்தும், துடைத்தலைச் சிவபிரானுக்கு உரியதாக்கி
“படுபறை பலவியம்பப் பல்லுருவம் பெயர்த்துநீ
கொடுகொட்டி யாடுங்கால் கோடுயர் அகலல்குல்
கொடிபுரை நுசுப்பினாள் கொண்டசீர் தருவாளோ”
என்று கலித்தொகைக் கடவுள் வாழ்த்தும் கூறலும் நினைவு கூரற்பாற்று.
இனி முத்தொழிற்கும் உரியோன் என முற்காட்டிய தொல்காப்பிய மேற்கோள் பாடல்
“அவரவர்தம் உள்ளத்துள் அவ்வுருவாய் அல்லாத
பிறவுருவும் நீயென்ன்னில் பிறவுருவும் நீயேயாய்
அளப்பரிய நான்மறையால் உணர்த்துதற் கரியோனே”
என்று கூறிற்று. சிலப்பதிகாரம் இக்கருத்தைத்
தேவிமேல் சார்த்தி
“வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக்
கரிய திரிகோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால்
அரியரன் பூமேலோன் அகமலர்மேல் மன்னும்
விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்”
என்று கூறலும் உணரற்பாலது, இத்தொல்காப்பிய மேற்கோள் பாடல் கந்தழியைக் குறிப்பதென்று சிலர் கூறுவர். அவரெல்லாம் “ப்ரபஞ்சோபசமம் சாந்தம் சிவமத்வைதம் சதுர்த்தம் மந்யந்தே’ என்ற மாண்டூக்கியோபநிடத நெறியை விலக்கி “முதலாவார் மூவரே யம்மூவருள்ளும், முதலாவன் மூரிநீர் வண்ணன்” என்னும் மயல் நெறியினராகலின் அவருரை கொள்ளற்பாற்றன்று.
12. யாவர்க்கும் அரியவன்
“வான்வந்த தேவர்களும் மாலயனோ டிந்திரனும், கானின்று வற்றியும் புற்றெழுந்தும் காண்பரிய, தான்” என்று மாணிக்கவாசகப் பெருமானார் அருளிச் செய்தனர். இக்கருத்தையே, அகநானூறு
“மூவா அமரரும் முனிவரும் பிறரும்
யாவரும் அறியாத் தொன்முறை மரபின்
வரிகிளர் வயமான் உரிவை தைஇய
யாழ்கெழு மணிமிடற் றந்தணன்.” (கடவுள் வாழ்த்து)
என்று ஏத்துதல் கண்டு இன்புறுக.
13. திருக்கோயில்
இங்ஙனம் யாவர்க்கும் அரியவனாயினும் யாவர்க்கும் உரியவனும் ஆதல் பற்றி அவனுக்குத்
திருக்கோயில் எடுத்துச் சங்ககால மக்கள் வழிபட்டனர்.
“பணியிய ரத்தைநின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே”
என்று வரும் புறநானூறு (6-ஆம் பாடல்) இதனை உணர்த்துகின்றது. இப்பாடலிலும் சிவபிரான் அந்தணன் ஆவன் என்பதை ‘முனிவர்’ என்ற சொல் உணர்த்தி நிற்றல் அறிதற்பாலது. இக்கோயில்களில் ஒன்றாய்த் திகழ்ந்த மதுரை எம்பிரான் திருக்கோயில்
பரிபாடலில் கீழ்வருமாறு விளக்கப்படுகின்றது.
“மாயோன் கொப்பூழ் மலர்ந்த தாமரைப்
பூவொடு புரையும் சீரூர் பூவின்
இதழகத் தனைய தெருவம் இதழகத்
தரும்பொருட் டனைத்தே அண்ணல் கோயில்”
திருமாலின் திருவுந்தியில் மலர்ந்த தாமரையை நிகர்த்து
சிறப்பையுடைய மதுரை விளங்குகின்றது. அப்பூவின் இதழகம் போன்றவை தெருக்கள். அவ்விதழகத்துத் தங்கிடும் குமிழி போன்றது சிவபிரான் திருக்கோயில் என்பது இதன் பொருள். சங்ககாலத்து அண்ணல் (சிவபிரான்) கோயிலாக விளங்கிய இத்திருக்கோயில் இஞ்ஞான்று என் அம்மை (மீனாட்சி)யின் திருக்கோயிலாக வழங்கப்படுகின்றது. இவ்வழக்கம் எக்காலத்தில் தோன்றியது என்பது உணர்தற்குக் கூடவில்லை. அம்மையாயினுமென்? அப்பனாயினுமென்? இருவரையும் ஒருவராகவே நம் பழந்தமிழ்
மக்கள் வழிபட்டனர் என்பது
“மூவிலை நெடுவேல் ஆதி வானவன்
இடமருங் கொளிக்கும் இமயக் கிழவி
தனிக்கண் விளங்கும் நுதற்பிறை மேலோர்
மிகைப்பிறை கதுப்பில் சூடி வளைக்கையின்
வாள்பிடித் தாளி யேறித் தானவன்
மானக் கடும்போர் கடந்த குமரி
மூவா மெல்லடித் திருநிழல்
வாழி காக்கவிம் மலர்தலை யுலகே”
எனவரும் ஆசிரியமாலைப் பாடலாலும் முற்காட்டிய “வரி வளைக்கை வானேந்தி” என்னும் சிலப்பதிகாரப் பாடலாலும் நன்கு விளங்கும்.
14. அடியார்க்கு எளியன்
முற்கூறியபடி இறைவன் யாவர்க்கும் அரியவனாக இருந்தாலும் அவன் அடியவர்க்கு எளியவனேயாவன். இதனை
“ஒண்மைய னேதிரு நீற்றையுத் தூளித் தொளிமிளிரும்
வெண்மைய னேவிட் டிடுதிகண் டாய்மெய் யடியவர்கட்
கண்மைய னேயென்றும் சேயாய் பிறர்கறி தற்கரிதாம்
பெண்மைய னேதொன்மை யாண்மைய னேயலிப் பெற்றியனே”
என வரும் திருவாசகத்தால் உணரலாகும். சிவபிரான் தேவர்க்கும் திசைமுகற்கும் திருமாற்கும் ஏனைப் பிறர்க்கும் தெரிவரியான். இவ்வுண்மையை எல்லா மெய்ந்நூல்களும் சாற்றுகின்றன. எனவே ‘என்றும் சேயாய் பிறர்க்கு’ என்றார். இப்படிப்பட்டவனை வழிபட்டு உய்தி
பெறவேண்டுமோ! வழிபாட்டில் என்னென்ன சிறப்புச்
செய்ய வேண்டுமோ என்று எண்ணி மலைத்தல் வேண்டா. அவன் அடியவர்க்கு எளியவன். இதனை “மெய்யடியவர்கட்கு அண்மையனே” என்றார். அவனுக்குப் பொன்னாலான நகைகள்
பூட்டவேண்டுமே என்று கவலேல். பொன் அவனுடைய வீரியம். எனவே பொன் அணிகளைப் பிறர் பூணலாயினர். அவன் பூண்பன பாம்புகள் இதனை
“மையணி கண்டனை வானோர்தம்
ஐயனை யாயிரம் பேழ்வாய்ப்
பையர வம்பல பூணும்
மெய்யனை மேயது வீடே”
எனவரும் பாடல் உணர்த்தும். இப்பாடல் தொல்காப்பியத்தில் பேராசிரியர் காட்டியது ஆகும். சிவபிரான் திருவடியை அடைவதே வீடுபேறு என்று இப்பாடல் அறிவுறுத்தலையும்
அறிக. அடியவர்க்கு எளியவனாகிய இறைவன்
தன்னை வழிபடுதற்கு அடியார் வருத்தம் மேற்கொள்ளலை விரும்பான். எனவே நான் தாமரையிட்டுப் பூசித்தாலே ஏற்பேன். முல்லை, மல்லி முதலிய நறுமணமுடைய பணச்செலவை உண்டாக்கும் பூக்களையிட்டுப் பூசித்தாலே ஏற்பேன்
என்று இறைவன் கூறான். இங்ஙனம் உடலுக்கு வருத்தமும், பணச்செலவும் நறுமணமும் கூடிய மலர்களை மக்களே அணிந்து கொள்ளுமாறு
நீக்கிவிட்டுப் புல், பச்சிலை, எருக்கு இவைகளை அணிந்து மகிழ்கிறான். இவை கிடைத்தற்கு எளியவை, பணச்செலவு இல்லாதவை. இவற்றைப் பெறற்கு உடல்வருந்த வேண்டுவதின்று. திருமூலநாயனாரும் “யாவர்க்கும் ஆம் இறைவற்கொடு பச்சிலை” என்றார். இக்கருத்தைச் சங்கப் புலவராகிய
கபிலர் கூறலைக் கேண்மின்
“நல்லவும் தீயவும் அல்ல குவியிணர்ப்
புல்லிலை எருக்கம் ஆயினும் உடையவை
கடவுட் பேணேம் என்னா வாங்கு
மடவர் மெல்லியர் சொல்லினும்
கடவன் பாரி கைவண் மையே” (புறநானூறு)
இக்கருத்தை வடலூர் இராமலிங்க சுவாமிகள்
“பகுதி தகுதி விகுதி யெனும்பாட்டில்
இகலில் இடையையிரட் டித்துத் – தகவின்
அருச் சித்தான் முன்னாம் அதுகடையாம் கண்டீர்
திருச்சிற் சபையானைத் தேர்ந்து”
என்று உரைத்தார். தில்லையில் சிற்சபையில் உள்ள பெருமானை உள்ளத்தில் பதித்து வழிபடுக
என்கிறார். யாங்ஙனம் வழிபடல் வேண்டுமோ
எனில் கூறுதும். பகுதி, தகுதி, விகுதி இவற்றின் இடையெழுத்து கு. மூன்றிலும் உள்ளதைச் சேர்த்தால் குகுகு ஆகும். இதை இரட்டித்தால் குகுகுகுகுகு அதாவது ஆறு கு உள்ளன. அதாவது அறுகு. இந்த அறுகம் புல்லைக் கொண்டு சிவபிரானை முறைப்படி வழிபடுக. வழிபாட்டின் பயன் யாதெனில் “முன்னாம்” அதாவது அச்சொற்களில் முன்னால் உள்ள எழுத்துக்களால் ஆனபொருள். அது பதவி. எனவே இம்மையிலே நல்ல பதவி பெற்று இன்புற்று வாழலம். அவ்வுலகத்திலே பெறும் பயன் யாதெனில் ‘கடையாம்’ அதாவது இறுதி எழுத்துக்களால் ஆன பொருள் கிட்டும். அது யாது? திதிதி. அதாவது மூன்று தி = முத்தி. எனவே வீடுபேறு கூட்டும் என்றாராயிற்று.
நாம் இறைவனை நெஞ்சில் நீங்காதவண்ணம் வழிபட்டு அவன் திருவருட்கு உரியராவோமாக.
சிவம்.
No comments:
Post a Comment