Friday, July 29, 2016

சிவமயம்
கற்றோர் ஏத்தும் கலியில் கண்ணுதலோன் பெருமை
மதுரகவி திருமுறைச்செம்மல் வித்துவான் தா. . வெள்ளைவாரணம்
தமிழ்ப் பேராசிரியர், செந்தமிழ்க் கல்லூரி, திருப்பனந்தாள்

[சிவஞான பூஜா மலர்துந்துபி ஆண்டு - (1982)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
                முன்னுரை:- சைவசமயம் மிகத்தொன்மை வாய்ந்தது. கற்காலத்தொட்டே சிவ வழிபாடு தொடர்ந்து வருகிறது. இத்தகைய உயர்சமயம் சங்க காலத்தில் எங்ஙனம் விரிந்திருந்தது என்பதைச் சங்க இலக்கியங்களால் அறிய முடிகிறது. அவ்விலக்கியங்களில் ஒன்றான கலித்தொகை என்ற நூலில் கண்ணுதலோன் பெருமைகளாகக் கூறப்பட்டவற்றை ஒரு சிறிது இங்கே காண்போம்.
      கடவுள் வாழ்த்து: ஒவ்வொரு நூலின் தொடக்கத்திலும் கடவுள் வாழ்த்துக் கூறுவது தமிழ் மரபு. அம்முறையில் கலித்தொகையின் கடவுள் வாழ்த்து சிவபெருமானுக்கு உரியதாக அமைந்திருக்கிறது.
      இவ்வாழ்த்தில், “சிவபெருமான் ஆறு அங்கங்களையும் கற்ற முனிவர்களுக்கு அருமறையின் பொருளைப் பகர்ந்தவன்; கங்கை நீரைச் சடையிலே கரந்தவன்; திரிபுரத்தைத் தீ மடுத்தவன்; காளியோடு மாறுற்றுக் கூத்தாடியவன்; மணிமிடற்றையுடையவன்; எட்டுக்கைகளையுடையவன்; திருநீறணிந்தவன்; உழுவைத் தோலை உடுத்தியவன்; கொன்றைத்தார் அணிந்தவன்; பிரமனின் தலையைக் கையில் ஏந்தியவன்; கொடுகொட்டி, பாண்டரங்கம், காபாலம் என்ற மூன்றுவகைக் கூத்துக்களை ஆடியவன்என்று சிவபிரானது சிறப்புக்கள் குறிக்கப்பட்டுள்ளன.
      பிறைமுடியன்: முல்லைக்கலியின் 3-ம் செய்யுளில், “சிவ பெருமான் தனது தலையில் வளைந்த பிறையைச் சூடிக்கொண்டிருப்பது போல், செந்நிறமான காளையின் தலையில் கொம்புகள் வளைவாக இருந்தனஎன்று கூறப்பட்டுள்ளது. மற்றும் அந்தக் காளையானது தன்னைத் தழுவ வந்த பொதுவனைக் குத்தி அவனுடைய குடரைக் கொம்பிலே சுற்றிக் கொண்ட தோற்றமானது சிவனது பிறையில் செந்நிறமான பூமாலை சுற்றியிருப்பது போன்றிருந்ததுஎன்றும் கூறப்பட்டுள்ளது.
      நீலகண்டன்: சிவபெருமான் உடம்பெல்லாம் சிவப்பாக இருந்தாலும் நஞ்சைப் பருகியதால் கண்டம் மட்டும் கறுப்பாக இருப்பான். ஆகவே அவனை நீலகண்டன் என்பர். முல்லைக்கலியில் 5-ம் பாடலில்ஏறுதழுவுதற்காகத் தொழுவத்தில் விடப்பட்ட காளைகளுள் ஒன்று உடம்பு முற்றும் குரால் (சிவப்பு) நிறமாகவும் பிணர் மட்டும் (கழுத்து மாத்திரம்) கறுப்பாகவும் இருந்தது. அது மணிமிடற்றோன் போல் காணப்பட்டது.” என்று குறிக்கப்பட்டுள்ளது.
      செம்மேனியான்: இலவமரங்கள் இலைகளை எல்லாம் உதிர்த்து விட்டு மரம் மற்றும் செந்நிறமாகப் பூத்து நிற்கின்றன. இதற்கு உவமை கூறவந்த பெருங்கடுங்கோ பாலைக்கலியின் 25-ம் செய்யுளில், “ஆனேற்றுக் கொடியோன் போல் இலவமரம் பூத்தனஎன்று கூறியுள்ளார். இதனால் சிவன் செம்மேனியுடையவன் என்பதோடு, இடபக் கொடியும் உடையவன் என்ற செய்தியும் புலனாகின்றது.
      காலகாலன்: இடையர்கள் காளைகளின் கொம்புகளைச் சிவனது கனிச்சியைப் போல் (சூலத்தைப் போல்) கூர்மையாகச் சீவித் தொழுவின் விட்டார்கள். அந்தக் காளைகளைத் தழுவும் பொருட்டு பல இடையர்கள் அவற்றின் மீது பாய்ந்தார்கள். அப்போது, வெண்மையான நெற்றிச் சுட்டியை உடைய செவ்வண்ணக்காளை ஒன்று கருவண்ணமான இடையன் ஒருவனைக் குத்திக் கீழே தள்ளி அவனது குடரை வெளியே இழுத்துப் போட்டது.
      இந்தக் காட்சியை சோழன் நல்லுருத்திரனர் முல்லைக் கலியின் முதற் செய்யுளில் குறிப்பிட்டு அதற்கு ஓர் உவமையும் கூறினார். அதாவது சிவபெருமான் எமனைக் குத்தி அவன் குடரை வெளிப்படுத்தினதைப் போலும்என்று கூறினார். சிவன் காலனுக்குக் காலனான வரலாறு இங்கே குறிக்கப்பட்டிருக்கிறது.
      கயிலைமலையான்: ஓர் யானை தான் செல்லும் வழியில் வேங்கைப் புலிபோல் பூத்திருந்த வேங்கை மரத்தைப் பார்த்தது . உடனே அந்த யானை சினங்கொண்டு வேங்கை மரத்தை புலிதான் என்று கருதிக் கொண்டு தனது இரண்டு கொம்புகளால் அடிமரத்தில் குத்தியது. கொம்புகல் ஆழமாகப் பதிந்து சிக்கிக் கொண்டன. கொம்புகளைப் பிடுங்க முடியாமல் அந்த யானை மருண்டுபோய் மலைமுற்றும் எதிரொலிக்கும்படி கத்தியது.
      இந்தக்காட்சியைக் கூறவந்த கபிலர் குறிஞ்சிக் கலியின் 2-ம் செய்யுளில் இதனோடு ஒக்க ஒரு உவமையும் கூறினார்.
      இமயமலையை வில்லாக வளைத்தவனும், கங்கை நீரால் ஈரம்பட்ட சடையுடையவனும் ஆகிய சிவபெருமான் கயிலை மலையில் உமாதேவியோடு வீற்றிருந்தார். அவ்விடத்திற்கு வந்த இராவணன் கயிலைமலையைக் கண்டான். அந்த மலையைப் பெயர்த்துக் கொண்டுபோய் இலங்கையில் வைத்துவிட வேண்டும் என்று விரும்பினான். ஆகவே நொடியணிந்த தனது தோள்களில் இரண்டை அம்மலைக்குக் கீழே செருகினான். ஆனால் மலையையும் பெயர்க்க முடியவில்லை. கையையும் எடுக்க முடியவில்லை. அதனால் மலை முற்றும் எதிரொலிக்கும்படி ஓவென்று கதறி அழுதான். – இந்த வரலாற்றைத்தான் கபிலர் உவமையாகக் காட்டியுள்ளார்.
      முடிவுரை: சிவபெருமானைப்பற்றிக் கலித்தொகையில் கண்ட சில செய்திகளை மேலே கண்டோம். மற்றும்அச்சிவன் முக்கண்ணன்; ஆலின் கீழ் அமர்ந்தவன்; சுடுகாட்டுச் சாம்பலில் கூத்தாடுபவன்.” என்பன போன்ற சில செய்திகளையும் இந்நூலிற் காணலாம்.

சிவம்.

No comments:

Post a Comment