Thursday, July 14, 2016

சிவமயம்
ஶ்ரீ மஹாதேவ ஜயம்
சிவநாமாவல்யஷ்டகம்
ஶ்ரீ ஆதிசங்கரர் அருளியது

தமிழ் உரை:
சிவபக்தி பிரசாரமணி ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா

சிவஞான பூஜா மலர்அக்ஷய, பிரபவ - விபவ ஆண்டு - (1986, 1987- 1988)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

                ஹே சந்த்ரசூட மதநாந்தக சூலபாணே
              ஸ்தாணோ கிரீச கிரிஜேச மஹேச சம்போ |
       பூதேச பீதபயஸூதன மாமநாதம்
              ஸம்ஸார துக்ககஹனாஜ்ஜகதீச ரக்ஷ || 1 ||

1.     சந்திரனைத் தலையில் தரித்தவரே, மன்மதனுக்கு முடிவைச் செய்தவரே, சூலாயதத்தை ஏந்திய திருக்கரத்தை உடையவரே, அசைவற்றவரே, கயிலையங்கிரியில் வசிப்பவரே, மலைமகள் மணாளனே, மஹேசரே, சுகங்களுக்கெல்லாம் உறைவிடமே, பூதங்களுக்கெல்லாம் தலைவரே, பயத்தைப் போக்குபவரே, நாதனற்றவனான என்னை பிறப்பிறப்பென்னும் தாங்க முடியாத துக்கத்தினின்றும், ஹே ஜகதீச ! காப்பாற்ற வேண்டும்.
      ஹே பார்வதீ ஹ்ருதயவல்லப சந்த்ரமெளலே
              பூதாதிப ப்ரமதநாத கிரீசசாப |
       ஹே வாமதேவ பவ ருத்ர பிநாகபாணே
              ஸம்ஸார துக்ககஹனஜ்ஜதீச ரக்ஷ || 2 ||

2.     பார்வதிதேவியின் உள்ளத்திற்குப் பிரியமானவரே, சந்திரனைத் தலையில் தரித்தவரே, பூதகணங்களுக்கும் பிரமதகணங்களுக்கும் தலைவரே, மஹாமேருவை வில்லாகக்கொண்டவரே, அழகுவாய்ந்த தேவனே, என்றும் எங்கும் ஸத் சொரூபியாய் விளங்குபவரே, துக்கத்தையும் அதன் காரணத்தையும் போக்குபவரே, பிநாகமென்னும் வில்லையேந்திய திருக்கரத்தையுடையவரே, அனைத்து உலகங்களுக்கும் தலைவரே, ஸம்ஸாரமென்னும் தாங்க இயலாத துக்கத்தினின்றும் என்னைக் காத்தருள்வீராக.
       ஹே நீலகண்ட வ்ருஷபத்வஜ பஞ்சவக்த்ர
              லோகேச சேஷவலய ப்ரமதேச சர்வ |
       ஹே தூர்ஜடே பசுபதே கிரிஜாபதேமாம்
              ஸம்ஸார துக்ககஹனாஜ்ஜகதீச ரக்ஷ || 3 ||

3.     நீலகண்டரே, காளைமாட்டினைக் கொடியில் உடையவரே, ஐம்முகப் பெருமானே, உலகத்திற்குத் தலைவனே, ஆதிசேஷனைத் தோள்வளையாகத் தரித்தவரே, பிரமத கணங்களுக்த்தலைவரே, பாவங்களைப் போக்குபவரே, பாரமான சடைமுடியை உடையவரே, பசுபதியே, கிரிஜா என்ற பார்வதியின் பதியே, ஸம்ஸாரமென்னும் பெரிய துக்கத்தினின்றும் ஹே ஜகதீச! என்னைக் காத்தருள்வீராக.
       ஹே விச்வநாத சிவசங்கர தேவதேவ
              கங்காதர ப்ரமதநாயக நந்திகேச |
       பாணேச்வராந்தகரிபோ ஹர லோகநாத
              ஸம்ஸார துக்ககஹனாஜ்ஜதீச ரக்ஷ || 4 ||

4.     அகில உலகத்துக்கும் தலைவரே, மங்களமூர்த்தியே, சுகத்தைச் செய்பவரே, தேவர்களுக்கு எல்லாம் மேலான தேவனே, கங்காநதியைச் சிரத்தில் தரித்தவரே, பிரமத கணங்களின் தலைவனே, நந்திக்கு ஈசனே, பாணனுக்கு ஈச்வரரே, அந்தகன் என்ற அசுரனையழித்தவரே, ஸம்ஹார மூர்த்தியே, உலகநாதரே, ஸம்ஸாரமென்னும் அதி துக்கத்தினின்றும் என்னைக் காத்தருள்வீராக.
       வாராணஸீ புரபதே மணிகர்ணிகேச
              வீரேச தக்ஷமககால விபோ கணேச |
       ஸர்வக்ஞ ஸர்வஹ்ருதயைக நிவாஸ நாத
              ஸம்ஸார துக்ககஹனாஜ்ஜகதீச ரக்ஷ || 5 ||

5.     வாராணஸிபுரம் என்னும் காசிமாநகரின் தலைவரே, மணிகர்ணிகா கட்டத்தில் எழுந்தருளியுள்ள ஈசனே, வீரர்கட்கு எல்லாம் ஈசனே, தக்ஷனின் யாகத்துக்கு முடிவைச் செய்தவரே, எங்கும் நிறைந்தவரே, சிவகணங்களின் தலைவரே, முற்றறிவுடையவரே, எல்லா உயிர்களின் ஹிருதயத்தில் வசிப்பவரே, ஹே ஜகதீச! ஸம்ஸாரமென்னும் தாங்கமுடியாத துக்கத்தினின்றும் என்னைக் காத்தருள வேணும்.
       ஶ்ரீமன்மஹேச்வர க்ருபாமய ஹே தயாலோ
              ஹே வ்யோமகேச சிதிகண்ட கணாதிநாத |
       பஸ்மாங்கராக ந்ருகபாலகலாபமால
              ஸம்ஸார துக்ககஹஜ்ஜகதீச ரக்ஷ || 6 ||

6.     செல்வம் நிறைந்து மஹேச்வரனே, கருணையின் வடிவமே, தயாளுவே, ஆகாயத்தையே கேசமாக உடையவரே, விஷம் தங்கின இடம் தவிர மற்ற பாகம் வெண்மையான கழுத்தையுடையவரே, கணங்களின் நாதரே, பஸ்மா என்னும் விபூதியை உடலில் அணிந்தவரே, மண்டையோடுகளை வரிசையாக மாலைபோல் அணிந்தவரே, என்னை ஸம்ஸாரமென்னும் பெரிய துக்கத்தினின்றும் ஹே! ஜகதீச, காத்தருள வேண்டும்.
       கைலாசசைலவிநிவாஸ வ்ருஷாகபே ஹே
              ம்ருத்யுஞ்ஜய த்ரிநயன த்ரிஜகந்நிவாஸ |
       நாராயணப்ரிய மதாபஹ சக்த்நாத
              ஸம்ஸார துக்ககஹனாஜ்ஜகதீச ரக்ஷ || 7 ||

7.     திருக்கயிலாய மலையில் வசிப்பவரே, வ்ருஷபத்தின் மீது அமர்ந்தாவரே, மரணதேவதையான இயமனை வென்றவரே, முக்கண்ணரே, மூவுலகத்திலும் வசிப்பவரே, நாராயணனிடம் பிரியம் உள்ளவரே, துஷ்டர்களின் கொழுப்பை அழிப்பவரே, பராசக்தியின் கணவரே, என்னை ஸம்ஸாரமாகிய பயங்கர துக்கத்தினின்றும், ஹே! ஜகதீச, காத்தருள வேண்டும்.
       விச்வேச விச்வபவநாசக விச்வரூப
              விச்வாத்மக த்ரிபுவனைகருணாதிகேச |
       ஹே விச்வநாத கருணாமய தீனபந்தோ
              ஸம்ஸார துக்ககஹனாஜ்ஜகதீச ரக்ஷ || 8 ||

8.     உலகனைத்துக்கும் தலைவரே, இவ்வுலகில் பிறவிப் பிணியைப் போக்கும் தெய்வமே, அனைத்து உலகங்களையும் ஊடுருவிப் பேருருவங் கொண்டவரே, உலகத்தையே ஆத்மாவாகக் கொண்டவரே, மூவுலகிலும் மிக நல்ல குணமுடையவரே! ஹே விச்வநாத, கருணையே உருவானவரே, ஏழைகளின் பந்துவே, ஸம்ஸாரமென்னும் பயங்கர துன்பத்தினின்றும் ஹே! ஜகதீச, என்னைக் காத்தருள வேண்டும்.
      ஶ்ரீமத் ஆதிசங்கரர் அருளியதும், சிவநாமங்களால் தொடுக்கப்பட்ட மாலை போன்றதுமான சிவநாமாவல்யஷ்டகம் தமிழ் உரையுடன் முற்றிற்று.
சிவம்.
      

                  

No comments:

Post a Comment