Wednesday, July 20, 2016

நாதனார் செய்யும் நடம்
புலவர் பனசை சுவாமிநாதன், எம்.., பி,எட்., (எம்.ஃபில்)

சிவஞான பூஜா மலர்அக்ஷய, பிரபவ - விபவ ஆண்டு - (1986, 1987- 1988)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]

முன்னுரை:
                கேட்டிடில் காதுக் கின்பம்
            கிளந்திடில் நாவுக் கின்பம்
      ஊட்டிடில் உணர்வுக் கின்பம்
            உணர்ந்திடில் உயிருக் கின்பம்
      பாட்டுரை நடையில் செல்லும்
            பைந்தமிழ்ப் பாவாய்.

என, தமிழ்மொழியாம் உயர்தனிச் செம்மொழியை இன்பம் மிக அளிக்கும் ஏற்றமிகு அமிழ்தமெனப் போற்றிடும் கவி உள்ளங்கள் அளப்பிலவாம். உலகில் பல நூறு மொழிகள் பரத்து கிடக்கவும் இதற்கு மட்டும் ஏன் இந்தத் தனிச்சிறப்பு? அள்ள அள்ளக் குறையாத அறம் பெருங் கவிக்குவூலங்களைத் தன்னகத்தே கொண்டது இது; அம்மட்டோ! உலகம் முழுமைக்கும், காலங் கடந்தும், நிலையான, மாறாத கருத்துக் கோவைகளைப் பளிச்சென ஒளிவிட்டுக் காட்டுகின்ற பாக்கள் இதனகத்தே இயைந்துள்ளன. இம்மொழிக்குத்தான் எத்தனை யெத்தனை இலக்கியக் கூட்டங்கள், ஒரு புறம்பாட்டும்’ ‘தொகையும்முதலான பனுவல்கள். பிறிதோர் புறம் உலக நீதி சொல்லும் ஒண்தமிழ்ப் பதினென் நூல்கள்; காப்பியக் கவி மலர்கள் அணிவகுப்பு; சிற்றிலக்கியச் செல்வங்கள்இவை ஒருங்கியைந்து ஓர்புறம். அப்பப்பா! “மனித வாழ் நாளோ மிகக் குறைந்த அளவினது. அதற்கிடையில் ஓட்டமிட்டு வரும் நோய்களோ எண்ண முடியாதன. அதற்குள் கரையிலாத கடல் போன்ற பெரும்பரப்புக் கொண்ட இலக்கியக் கடலை எங்ஙனம் நீந்துவதுஎனக் கவலாதீர்கள். அன்னம்போல்பாலிலிருந்து நீரைப் பிரித்துப் பாலை மட்டும் அது அருந்துவது போலசில்வாழ்நாட் பல்பிணிச் சிற்றறி வினராகிய நாம் பயில வேண்டியவற்றை மட்டும் தவறாமல் பயிலவேண்டும்; அது போதும்என்கிறார் ஒரு தமிழ்க் கவிஞர். அவர்மொழி:-
                கல்வி கரையில் கற்பவர் நாள்சில
      மெல்ல நினைக்கின் பிணிபலதெள்ளிதின்
      ஆராய்ந்து அமைவுடைய கற்பவே நீரொழியப்
      பாலுண் குருகில் தெரிந்து.

இது, வள்ளுவனின் வாய்மொழியில் முன்னமே.
      ‘கற்க கசடறக் கற்பவை
என ஒலித்ததல்லவோ?
      எனவே, பொழுது போக்கிப் புறக்கணிக்கும் நூல்களின் கவர்களில் ஆட்படக்கூடாது. இறைவனின் பொருள் சேர் புகழை ஓயாது சாற்றும் ஞானப் பனுவல்களைபிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருளைக் காண உதவுகின்ற அறிவை நல்குவதாயநூல்களையே பயில வேண்டும். அவற்றையும்,
      ‘காத லாகிக் கசிந்து கண்ணீர் மல்கிஓத வேண்டும், ‘சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்ல வேண்டும். இத்தகு நெறியை மேற்கொளின், எல்லையில்லா ஆனந்தம் எய்திடலாம்.
      இன்தமிழ்க் கவிச்சோலையில் எழிலார்ந்து, இன்பத்தேன் சொரியும் மலர்கள் தம்முன் பக்திச் சுவையையும், முருகியல் இன்பத்தையும் (Aesthetic feeling) ஒருங்கு குழைத்து ஊட்டுவன தெய்வக் கவிஞர் பெருமகனாராகிய ஶ்ரீகுமரகுருபர சுவாமிகள் அருளிய சிற்றிலக்கியச் செம்பொருள்களாம். பதினான்கு எனப் பேசப்பொறும் அவர் தம் இலக்கியக் கொடைகளாகிய சிற்றிலக்கியங்களில், சிதம்பர மும்மணிக் கோவையிம் சீர்மிக்கதொரு செம்பொன்மணிக் கோவையாம். நன்னடம் புரியும் ஞானக்கூத்தனார்பால் நண்ணி, ஆனந்த வெள்ளத்தில் நினைத்து மாறிலா மகிழ்ச்சியில் மலர்ந்து, கவிமலர்களால் கோத்து அவர் தம்பாதாளம் எழினும் கீழ்ச்சொற்கழிவு பாதமலர்என அருளாளர்களால் போற்றிப் புகழப்பெற்ற திருவடி மலர்களில்சூட்டப் பெற்றதே இம்மணியாரத்தின் மகிமை தமிழ்கூறு நல்லுலகெங்கும் பரவக்காரணமாக அமைந்தது. பழகு தமிழ்ச்சொல்லருமை கொண்டு, பக்திச்சுவை பரப்பிட அவர் தந்தகோவையில் கொண்டெடுத்த சில மணிகளைத் தொகுத்துக் காண்பதே இச்சிந்தனையின் நோக்கமாகும்.
மும்மணிக் கோவை:
      ஆசிரியம், வெண்பா, கலித்துறை எனும் மூன்று பாக்களும் விரவிட முப்பது பாடல்களால் இயற்றப்படுவது. இதன் பாடல்கள் ஒன்றோடொன்றுஅந்தாதியாக அமையும். ‘அந்தம் முதலாத் தொடுப்பது அந்தாதிஎனும் யாப்பருங் கலக்காரிகையின் பொருள் விளக்கத் தொடர் ஈண்டு நினைவு கூற்தற்குரியது.
மும்மணியுள் செம்மணிகள்:
      ஐந்தாண்டுகாறும் பேசாநிலையில் இருந்து பின் செந்திநகர்மேய நம் வள்ளிமணாளன் அருளால் பேசும் திறமையும், பழுத்த தமிழ்ப் புலமையும், கைவரப் பெற்ற கவிவலவர் ஶ்ரீகுமரகுருபரர். எனவே அவர் சிந்தையில் கருக்கொண்டு, சொல் வடிவம் பெற்றுப் பொலியும் அத்தனைப் பாடல்களும் நன்மணிகளே. எனினும் அவற்றினுட் சில செம்மணிகளை செம்பொருளை, செம்மேனி அம்மானாம் சிவ பரம்பொருளைப் போற்றிப் பரவும் செம்மை மிக்க சில கவிகளைஒருவாற்றான் தொகுத்தளிப்பதே நுதலிய பொருளாகும்.
போற்றியாம் பொன்மணி:
      எந்தையார், ஈசனார் என்றெல்லாம் அருளாளர் இறைவனின் அருளாரமுதப் பெருங்கடலில் நினைத்து மூழ்கையில் போற்றிப் பரவுவது வழக்கம். பித்தா! எனப் பேசிய நம்பிக்கும் அருள் செய்தவன் அவன்.
      தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண்மதிசூடி என்று தொடங்கிப்பிள்ளைபாட,
      “பேராயிரம் பரவி வானோர் ஏத்தும் பெம்மான்
என்றஅரசுபரவ,
      ‘பித்தா பிறைசூடி பெருமானே
எனநம்பிதொழுது போற்ற,
      ‘அம்மையே அப்பா ஒப்பிலா மணியே
எனும் வகையில் அடிகள் மொழிந்து வணங்கிட அவ்வழிகளில் பிறந்து, சிறந்த தமிழ்மறை மொழிகள் நாம் கண்டு, கேட்டு பயின்றவையே.
      அவ்வழியில் ஶ்ரீ குமரகுருபரர் தில்லையம்பலவாணனாரின் ஆனந்தக் கூத்தினை உள்ளங் குளிர, உரோமம் சிலிர்த்து உரையும் தள்ள, விழிநீர் அரும்பத் தன்னை மறந்து தரிசிக்கிறார். அப்போது அவர் வாய் மலர்ந்த போற்றி மலர்கள் தாம் எவ்வளவு பெருமையுடையன என நோக்குவோம்.
      தில்லையாகிய அவன்தன் ராசதானியோடு சார்த்தி அவனைப் போற்றும் துதிமலர்கள் சில:
                தில்லைச்சிற் றம்பலவன் (1)
      நடராசன், பொற்புண்டரீசு புரம் (3)
      நக்கனார் தில்லை நடராசர் (12)
      வலனுயர் சிறப்பில் புலியூர்க் கிழவ (20) (26)
      தில்லைச் சிற்றம் பலத்து மன்றவர் (21)
      திருவநீன் மறுகில் தில்லை வாண (23)
      நகைத் தில்லை யான் (31)

      அவன்தன்கூத்துஅகிலம் புரக்க அருள் செய்யப் பெற்றது. உலகப் பிரசித்தி பெற்றது. நாதமும் பரதமும் ஆகிய கலைகள் நடராஜப் பெருமானின் நல்லருள் தோற்றத்தையே அடிப்படையாகக் கொண்டு ஒருங்கியைந்து பொலிவன ஆகும். அருளாரமுதப் பெருங்கடலாம் அவன்தன் ஆடல்மாண்பினைக் கண்ட முனிவர், அதை, நினைக்குந்தோறும் பேசும்தொறும் எப்போதும் அனைத்தெலும்பு உள் நெக ஆனந்தத்தேன் சொரிவதெனப் போற்றி மகிழ்கின்றார்.
                சிற்சபை பொலியத் திருநடம் புரியும்
      அற்புதக் கூத்து’ (2)
      தெய்வப் புலியூர் வைதிகக் கூத்த (5)
      அருள்முந் துறுத்த ஐந்தொழில் நடிக்கும்
      பரமா னந்தக் கூத்த (11)
      மன்று ளாடுமா னந்தத் தேன் (14)
      நஞ்சங் களத்தும், வாமத் தமுதமும்
      வைத்தாடு மானந்த மாக்கடலே (22)
      தில்லை மன்றினுள் நின்றாடிய கூத்தன் (25)
      நன்னடம் புரியும் ஞானக் கூத்த (20)
      ‘ஓடியகட் காதனார் காணவொரு கால்காட்டிக் கையமைத்து
      நாதனார் செய்யும் நடம்’ – (30)

வடிவழகு போற்றும் வான்மணி:
      ‘செம்மேனி அம்மான்என்றும், ‘பவள வெற்புஎன்றும் அப்பெருமானின் திருமேனிப் பொலிவினையும், திருவுருவவனப்பையும் அழகோடு இசைகூட்டி அருந்தமிழில் தெரிந்துரைத்தனர் அருளாளர். ‘தொடுக்கும் கடவுட் பழம்பாடல் துறையின் பயனே! எனப்பிறிதோரிடத்துச் செப்பிய இச்செம்மலார் செம்பொருளாம் சிவபரம்பொருளின் திருமேனி வடிவழகில் நினைத்து நீந்துகிறார். அதனிடை மூழ்கி முத்துக் குளிக்கிறார். முத்துக்கள் விலை மதிப்பில்லாத தமிழ் முத்துக்கள் நமக்கும் தருகிறார். பெற்றுக்கொள்வோம்.
                சிற்றம் பலத்தெம் காருண்ட கண்டனை (7)
      செஞ்சடைக் கிடந்த வெண்மதிக் கடவுள் (5)
      முக்கட் பரனார் (16)
      திங்களங் கண்ணித் தில்லை வாண (17)
அருட்செயல் விளம்பும் அருமணி:
      அவர் மன்பதைகள் பொருட்டுச் செய்தருளிய விளையாடல்களைதிருவருட் செயல்களைத் தமக்கேயுரிய செந்தமிழ் நடையில் சொற்சுவையும், பொருட்சுவையும் தோய, பக்திச்சுவை பரவ, வடித்துத் தருகிறார் கவிஞர்.
                தக்கனார் வேள்வி தகர்த்துச் சமர்முடித்த
      நக்கனார்’ (12)
      காற்றேர்க் குடம்பைக் காமப்புட் படுக்கத்
      தீப்பொறி வைத்த திருநுதற் கண்ண’ (14)

      ஆதி நான்மறை வேதியற் பயந்த
      தாதை யாகிய மாதவ ரொகுவரும்
      இருங்கா ளத்தி யிறைவர்முன் னுண்ண
      அருஞ்சா பத்தா லமுதமூ னாக்கும்
      நற்றவ வேடக் கொற்றவ ரொருவரும்
      ஒருபிழை செய்யா தருள்வழி நிற்பவவ்
      இருவர்கண் பறித்த தரும மூர்த்தி (14)

      கண்ணகன் ஞாலத் தெண்ணில் பல்கோடிப்
      பிள்ளைகள் பெற்ற பெருமனைக் கிழத்திக்கு
      நெல்லீரு நாழி நிறையக் கொடுத்தாங்கு
      எண்ணான் கறமும் இயற்றுதி நீயென
      வள்ளன்மை செலுத்தும் ஒண்ணிதிச் செல்வ (14)

      பைந்தமிழ் நவின்ற செந்தாப்புலவன்
      ஐந்தினை யுறுப்பி னாற்பொருள் பயக்கும்
      காமஞ் சான்ற ஞானப்பனுவற்குப்
      பொருளெனச் சுட்டிய ஒரு பெருஞ் செல்வ!

      திருத்தொண்டத் தொகைக்கு முதற்பொரு ளாகி
      அருமறை கிளந்ததின் திருவாக்கில் பிறந்த
      அறுபதிற் றாகிய ஐம்பதிற்று முனிவருள்
      ஒருவனென் றிசைந்த இருபிறப் பாள (23)

ஐந்தொழில் மேன்மை சாற்றும் அழகுமணி:
      இறைவன் உலக உயிர்களின் நன்மையைக் கருத்தில் கொண்டு படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் எனும் ஐந்தொழில்களையும் செய்தருள்கிறான். இவ்வரிய திருவருட்செயலை எம்பெருமான் இயற்றுகின்ற மேன்மையை,
                ‘காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
      ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
      போக்குவாய் என்னை
      செழும் பொழில்கள் பயந்துகாத் தழிக்கும் மூவர்
      கோனாய் நின்ற முதல்வன்.

என்றெல்லாம் திருமுறைகண்ட பெருமக்கள் பாராட்டி மகிழ்வர். இவ்வழியில் நின்று நம் கவிஞர் திலகமும், - தேவலோகமும், நானிலப் பரப்பும் ஏனைய உலகமும், உயிர்களும், படைத்துத் தந்தது உடுக்கையை அணிந்த ஒரு கரம்; தனித்தனியே படைத்த எல்லாவற்றையும் காப்பது அபயத் திருக்கரமாகிய ஒரு கரம்; எல்லா உயிர்களையும் சங்காரம் (அழிப்பது) செய்வது அனல் ஏந்திய ஒரு கரம்; இதுவரை ஈட்டிய இருவினைப் பயன்களை நுகரச் செய்து அருள்வது (திரோபவம்) மறைப்பைச் செய்வதுஊன்றி நின்ற ஒரு திருவடியாகும். தன்னை அண்மி வந்து தொழுது உயிர்கட்கு அளவில்லாத பேரின்பத்தைக் கொடுப்பது குஞ்சித பதமாகியவளைந்த திருவடி ஆகும். இவ்வைந்தும் அவனுடையமெய்த்தொழிலாகும்என விரிவாகச் சொல்கிறார். கரங்கள் மூன்றும், திருவடி இரண்டும் ஐந்தொழிலையும் செய்தருள்வதாகக் கூறுகிறார். இது நடனக் கோலத்தில் கொண்ட குறிப்பாகும்.
      இத்தொழிலைந்தும் மெய்த்தொழிலாக,
தாய் மருந்துண்ணும் தகைமைகாட்டும் தனிமணி:
      தாய் என்னும் உறவு, மன்பதைகட்கு நலமே எண்ணி, நலமே செய்வது. தான் துன்புற்றாலும் தன் குழவி நலம்பெற வேண்டும் என எண்ணுவது குழந்தையின் நலனுக்காக, அதன் உடல் நலத்துக்குத் தீங்கு தரும் பொருட்களை அவை தனக்கு மிகவும் உவப்பளிப்பதாய் இருந்தபோதிலும் அவற்றை வெறுத்தொதுக்குவது. மணமிகு மலர்களை சூடல் மங்கையரின் இயல்பும், இன்றியமையாமைய்ம் ஆகும். மலர் மணம் குழந்தைக்கு ஊறு செய்யுமே எனக் கருதி தாய் அதைச்கூடச் சூடாமல் தவிர்ப்பாள். இதற்குய் தியாக சீலங்கள் உடைய அன்னைக்காகக்கூட, தவறான செயல்களைச் செய்து தவறான வழியில் பொருள் ஈட்டக்கூடாது; அதைக்கண்டு சான்றோர் பழிக்கக்கூடாதுஎன அங்கும் அன்னைக்கே தனி முதன்மை தந்து போற்றுகிறதுஉலகப் பொது மறையாம்குறள்.
                ஈன்றாள் பரிகாண்பான் ஆயினும் செய்யற்க 
      சான்றோர் பழிக்கும் வினை
               
அத்தகு குணநலமிக்க தாய், ஒரு சமயத்தில் கோபம் கொண்டு மகவைத் தண்டித்தாலும், அதுவும், அதன் நன்மையைக் கருதியே அதனிடத்துள்ள தீய பண்புகளை நீக்கவே என ஶ்ரீ குமரகுருபரர் பிறிதோரிடத்துச் சுட்டுவர்.
அன்னைமுனி வதுந்தனயர்க் கருள்புரிதற்கே யன்றோ?
                              (சிதம்பரச் செய்யுட்கோவை – 68)

இறைவனைத் தந்தையாகவும், அம்மையைத் தாயாகவும் கொண்டு போற்றியன தொண்டில் களிந்த தூய அருள் உள்ளங்கள்.
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து’       (திருவாசகம்)
தாயினும் நல்ல தலைவர்’                        (சம்பந்தர் தேவாரம்)
எந்தை யாய் எம்பிரான்’                          (திருவாசகம்)
என்பன அவ்வாக்குகள்.
      அன்னையாவனள், தன் குழவிக்கு உடலநலம் குன்றும் போது மருந்து கொடுக்க முனைகிறாள். அம்மருந்தோ சக்தியுக் வீர்யமும் மிக்கது. அம்மருந்தை உண்ண வேண்டிய குழவியோ சின்னஞ்சிறியது. அதன் குடலோ மிகவும் மென்மையானது. இம்மருந்தைத் தாங்கும் சக்தி அதற்குண்டோ என ஐயமுற்று, அஞ்சிப் பின் அதனைத் தானுண்டாள். அதன்பின் அம்மருந்து சீரணமாகி இரத்தத்தில் கலக்க, அவ்விரத்தத்தையே பாலாக்கி அம்மகவுக்கு அளித்து அதன் நோயைத் தீர்க்கிறாள். என்னே தியாக உள்ளம்! அப்படியாயின், எல்லாத் தாய்களுமே, முல்லைக் கொடிக்குத் தேரை மட்டும் ஈந்த பாரி, மயிலுக்குப் போர்வை தந்த பேகன், தமிழ்ப்புலமைக்குத் தலையை அளிக்க வந்த குமணன், புறவுக்குச் சதையீந்த சிபி மன்னன் ஆகியோரைவிட உயர்வாக அல்லவா போற்றப்பெற வேண்டும்? போற்றாவிடினும் அவ்வுள்ளத்தை வருந்தா வண்ணம் வாழ்வது மட்டுமாவது செய்ய வேண்டும். அகிலம் ஈன்ற அன்னையும், அப்பனும் எல்லோருக்கும் அம்மை யப்பர் ஆவர். அவர்கள் அம்மையப்பர் போலவே உயிர்களுக்கு அருள்செய்வர்
                அம்மை யப்பரே உலகுக்கு அம்மையப்பர்
      அம்மை யப்பர் அப்பரிசே வந்தளிப்பர்

எனும் ஞானநூல் வாக்கு ஈண்டு நினைதற்குரியது. உலகம் காக்கும் உயர் பெருமாட்டி, தாயைப்போலப் பரிவுடன் அப்பனின் திருவருட் பொலிவுடன் கூடிய திருக்கூத்தைத் தான் தரிசித்து அதன் பயனை மட்டும் உயிர்களுக்கு ஊட்டுகிறாள் எனும் கருத்தமைய கவிஞர்கோ அளிக்கும் கவிதைத் தொடர்கள் இவை;
                பாலுண் குழவி பசுங்குடர் பொறாதென
      நோயுண் மருந்து தாயுண் டாங்கு
      மன்னுயிர்த் தொகுதிக் கின்னருள் கிடைப்ப
      வையமீன் றளித்த தெய்வக் கற்பின்
      அருள்சூல் கொண்ட ஜயரித் தடங்கண்
      திருமாண் சாயல் திருந்திழை காணச்
      சிற்சபை பொலியத் திருநடம் புரியும்
      அற்புதக் கூத்த”                            (2)

முடிவுரை:
      செந்தி நகர்க் கந்தனே, கருணைத் திருவுருவாய்க் காசினிக்கே தோன்றிப் பழுத்த தமிழ்ப் புலமை பாலிக்க, பண்ணும் பரதமும் கவி சொல்லவல்ல நல்வித்தையும் பெற்றுக் கவிபாடிய கோமகளின் கொடையாகிய இலக்கியச் சோலையில் மலர்ந்த எண்ணிலா மணமிகு பொன்மலர்களில், பருந்தின் வீழ் அப்பார்வையில் ஒரு சிலவற்றைக் கண்டு காட்ட முயன்றது இச்சிந்தனைத் தொகுப்பு.
                கூடும் கதியொருகால் கும்பிட்டால் போதுமென
      நாடு மவிநயத்தை நண்ணிற்றால்ஓடியகட்
      காதனார் காணவொரு கால்காட்டிக் கையமைத்து
      நாதனார் செய்யும் நடம்.

சிவம்.
     
     
     


No comments:

Post a Comment