உ
சிவமயம்
ஶ்ரீ மஹாதேவஜயம்
தனிப்பாடல்களில் பெருமான் புகழ்
சிவபக்திப்பிரசாரமணி ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா
சிவஞான பூஜா மலர் – அக்ஷய, பிரபவ - விபவ ஆண்டு - (1986, 1987- 1988)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
அமிழ்தினுமினிய நம் செந்தமிழ்மொழியில் சிவபெருமானின் பொருள்சேர் புகழ்கூறும் முழுநூல்கள் பலப்பல உள்ளன என்பதை அனைவருமறிவர் அதுபோலவே பெருமான் புகழ்பாடும் தனிப்பாடல்களும் பலப்பல உள்ளன. தண்டதமிழ்ப் புலவர் பெருமக்கள் பலரால் அவ்வப்போது பாடப்பெற்றவைகளே அத்தனிப்பாடல்களாகும். கணவர் புகழ் கேட்டு மகிழும் கற்புடை மனைவியர் போல நம் வாசகர்களும் ஆன்மநாயகனான பரமேசுவரனின் புகழ் கேட்டுப் பெரிதும் மகிழ்வர் என்ற எண்ணத்தில் “தனிப்பாடல்களில் பெருமான் புகழ்” என்ற இப்பகுதியை இந்த ஆண்டிலிருந்து ஆரம்பிக்கின்றோம். முதலாவதாக ஆசுகவி காளமேகப்புலவர் பெருமான் பாடியவைகளில் சிலவற்றை இந்த மலரில் பிரசுரிக்கிறோம்.
ஆசுகவி காளமேகப்புலவர் பாடியவை
1. சிதம்பரநாதனைப் போற்றியது
அரகர திருச்சிற் றம்பலவா ணாவந்
தரளு பமகே சரிதம் – பரதே
வசிதம் பரதே வசிதம் பரதே
வசிதம் பரதே வனே.
(இத பொருள்) அரகர, திருச்சிற்றம்பலவாணா, அந்த ரரூப, மகேச, சிதம்பரதேவ, சிதம்பரதேவ, சிதம்பரதேவ, சிதம்பரதேவனே என இயைத்துப் பொருள் கொள்ள வேண்டும். அங்ஙனம் கொண்டால் இப்பாடலின் பொருள்:- பாவத்தை அழிப்பவனே, திருச்சிற்றம்பலம் என்ற ஞானசபையில் வாழ்பவனே, சிதாகாசவடிவனே, மஹேசனே, சிதம்பரத்தில் எழுந்தருளியுள்ள தெய்வமே, ஞானமென்னும் ஆடையை அணிந்தவனே, ஞானாகாயத்தில் நடனம் புரிபவனே, சிதம்பர தேவன் என்னும் பெயருடைய பெருமானே (எனக்கு அருள் புரிவாயாக).
இப்பாடலில் சிதம்பர தேவன் என்னும் சொல் நான்கு முறைவந்துள்ளது. சித் அம்பரம் என்பது சிதம்பரமாயிற்று. அம்பரம் என்ற சொல்லுக்கு ஆடை, ஆகாயம் என்ற பொருள்கள் உள்ளன.
2. சிதம்பரத்திலுள்ள சின்னங்களைப் பாடியது.
ஞான சபைக னகசபைசிற் றம்பலம்பே
ரானந்தக் கூடந் திருமூலட் – டானம்பே
ரம்பலம்பஞ் சாவரண நாற்கோபுரம் பொற்செய்
கம்பமண்ட பஞ்சிவகங் கை.
சிதம்பரத்தில் சிறப்பாக உள்ளவை எவை என்பது இப்பாடலிற் கூறப்படுகிறது.
1. ஞானசபை – சிற்சபை, இதில் நடராஜப் பெருமான் எழுந்தருளியுள்ளார்.
2. கனகசபை – பொன்னம்பலம், இது சிற்சபைக்கு முன்னால் இருப்பது.
3. சிற்றம்பலம் – நுட்பமான அம்பலம், சிறுமை+அம்பலம்=சிற்றம்பலம். இதில் பெருமான் அருவாய் இருப்பர்.
4. பேரானந்தக் கூடம் – பேரின்பசபை, இதில் நடராஜப் பெருமான் ஊர்த்துவ தாண்டவம் செய்தருளுவர்.
5. திருமூலட்டானம் – மூலஸ்தானம். இங்குப் பெருமான் சிவலிங்க மூர்த்தியாக திருமூலநாதர் என்ற திருநாமத்துடன் எழுந்தருளியுள்ளார்.
6. பேரம்பலம் – தேவசபை, தேவர்கள் கூட்டம் நடராஜப் பெருமானைத் துதித்து வணங்கும் இடம்.
7. பஞ்சாவரணம் – ஐந்து பிராகாரங்கள்.
8. நாற்கோபுரம் – நான்கு திசைகளிலும் உள்ள நான்கு பெரிய கோபுரங்கள்.
9. பொற்செய் கம்பமண்டபம் – அழகு விளங்கும் ஆயிரங்கால் மண்டபம்.
10. சிவகங்கை – சிவகங்கை என்ற பெயருடைய தீர்த்தம். (திருக்குளம்)
3. நடராஜர் திருவிழாவைத் தரிசித்து நிந்தாஸ்துதியாகப் பாடியது.
நச்சரவம் பூண்டதில்லை நாதரே தேவரீர்
பிச்சையெடுத் துண்ணப் புறப்பட்டும் – உச்சிதமாம்
காளமேன் குஞ்சரமேன் கார்கடல்போல் தான்முழங்கும்
மேளமேன் ராஜாங்க மேன்.
தில்லைத் திருவிழாவில் இறைவர் இரவலர் (பிக்ஷாடனர்) திருக்கோலத்தில் திருவீதி உலா எழுந்தருளியது தரிசித்துப் பாடியது இப்பாடல். விஷம் பொருந்திய பாம்பினை அணிகலமாகப் பூண்டருளிய தில்லைப் பெருமானே! தேவரீர் பிச்சை யெடுத்து உண்பதற்காகப் புறப்பட்டார். அப்படியிருந்தும் உமக்குச் சிறப்பான எக்கானம் ஊதுவது எதற்கு? யானை முதலிய பரிவாரங்கள் ஏன்? கரியகடல் போல முழங்கும் மேளம் எதற்கு? அரசனுக்குரிய சின்னங்கள் தான் எதற்கு? என்பது இப்பாடலின் பொருள். பிச்சையெடுப்பவருக்கு ஏன் இத்தகைய வைபவங்கள் என நிந்தையாகச் சொல்வது போலத் தோன்றினாலும், இப்பாடலில் பிக்ஷாடனர் திருவிழாச் சிறப்பை எடுத்தோதியது காண்க.
4. இதுவும் பிக்ஷாடனர் திருக்கோலத்தை நிந்தாஸ்துதியாகப் பாடியது.
தாண்டி யொருத்தி தலையின்மே வேறாளோ
பூண்டசெருப் பாலொருவன் போடானோ – மீண்டொருவன்
வையானோ வில்முறிய மாட்டானோ தென்புலியூர்
ஐயாநீ ஏழையா னால்.
(இதன் பொருள்) அழகிய புலியூர் எனப்படும் தில்லையம் பதியில் எழுந்தருளிய பெருமானே! நீர் எளியவராகிவிட்டால் ஒருவன் உமது தலைமீது தாவி ஏறமாட்டாளோ? ஒருவன் தனது காலில் அணிந்த செருப்பை உம்தலைமீது வைக்கமாட்டானோ? மற்றும் ஒருவன் உம்மை நன்குவைது தன் வில்முறிய உம்மைத் தலையில் அந்த முறிந்த வில்லால் அடிக்கமாட்டானோ? (இவ்வளவு அவமதிப்பும் நீர் ஏழையானதால் நேர்ந்தது என்பது கருத்து).
ஏழைகளே பிச்சையெடுக்கப் போவராகலின் பிக்ஷாடனத்திருக்கோலத்தில் எழுந்தருளிய இறைவரும் ஏழையெனப்பட்டார். ஏழைகளையே அனைவரும் அவமதிப்புச் செய்வர் என்ற நியதி பற்றி இத்தகைய அவமதிப்புகளை இறைவரும் ஏற்க நேர்ந்தது என்று இப்பாடல் நிந்தையாகத் தோன்றிடினும், இறைவர் அடியவருக்கு எளியவர் ஆகையால் பகீரதனுக்கு அருள் புரிய வேண்டித் தம் தலையில் கங்கையைத் தரித்தார்; கண்ணப்பர் அன்புக்காக அவரது செருப்பைத் தம்தலைமீது வைத்ததை அன்புடன் ஏற்றுக்கொண்டார்; அருச்சுனனன் செய்த தவத்துக்கு இரங்கி அவனுக்குப் பாசுபதம் வழங்க எழுந்தருளியபோது விளையாட்டாக அவனுடன் செய்த போரில் அவன் தனது முறிந்த வில்லால் அடித்தையும் தாங்கிக் கொண்டார் என்று பெருமானது திருவருட் செயல்களையே சிறப்பித்துக் கூறுவது காண்க.
5. இதுவும் ஶ்ரீ நடராஜரை வணங்கிப் பாடிய நிந்தாஸ்துதி.
கொங்குலவுந் தெந்தில்லைக் கோவிந்தக் கோனிருக்கக்
கங்குல்பகல் அண்டர்பலர் காத்திருக்கச் – செங்கையிலே
ஓடெடுத்த அம்பலவா ஓங்குதில்லை உட்புகுந்தே
ஆடெடுத்த தெந்த உபாயம்.
மணம் வீசுகின்ற அழகிய தில்லை நகரில் கோவிந்தனாகிய ஆட்டிடையர் தலைவன் இருக்கவும், இரவும் பகலும் இடையர்கள் பாதுகாத்துக் கொண்டிருக்கவும், கையில் ஓடெடுத்த அம்பலவா! நீர் தில்லையம்பலத்திலே உள் புகுந்து ஆட்டினைத் தூக்கியது எந்த உபாயத்தால் (கூறுவீராக) என்பது இப்பாடலின் மேலெழுந்தவாரியாகத் தோன்றும் பொருள். இடையர் தலைவன் இருக்கவும், மற்ற இடையர்கள் பாதுகாத்து நிற்கவும், எப்படி ஆட்டை (அவர்களறியாது) எடுத்துக் கொண்டீர் என்று வினவியதாகும். கோன் – இங்கு இடையர் தலைவன் என்ற பொருளிலும், அண்டர் – இடையர் என்ற பொருளிலும் வந்து. ஆடு – பொருள் வெளிப்படை.
தில்லையில் திருமால் கோவிந்தராசன் என்ற பெயருடன் இருக்கவும், இரவும் பகலும் தேவர்கள் உம்மை வழிபாடு செய்யக் காத்திருக்கவும் (அவர்களறியா வண்ணம்) செங்கையிலே ஒரு ஓடு எடுத்தவரான அம்பலவாணனே! நீர் தில்லையம் பலத்துள் புகுந்து கூத்தாடத் தொடங்கியது எந்த தந்திரத்தால் (கூறியருள்வீராக) என்று இப்பாடலுக்கு வேறு பொருளும் உளது. இப்பொருளில் கோன் என்பது காத்தற் கடவுள் (அரசன்) என்றும், அண்டர்கள் என்பது தேவர்கள் என்றும் ஆடு என்பது ஆட்டம் அல்லது கூத்து என்றும் கொள்ளப்பட்டது. எனவே திருமாலும் தேவர்களும் அறியா வண்ணம் இறைவர் திருநடனத்தைத் தொடங்கினார் என்பதாம்.
6. பெருமானின் கையிலுள்ள மானின் செயலைப் பாடியது.
பொன்னஞ் சடையறுகம் புல்லுக்கும் பூம்புனற்கும்
தன்னெஞ் சுவகையுறத் தாவுமே – அன்னங்கள்
செய்க்கமலத் துற்றுலவுந் தில்லை நடராசன்
கைக்கமலத் துற்றமான் கன்று.
(இதன் பொருள்) வயல்களில் உள்ள தாமரை மலர்களின் மேல் அன்னப் பறவைகள் உலாவுகின்ற தில்லைப்பதியில் திருக்கூத்தியற்றும் நடராஜருடைய தாமரை மலர் போன்ற திருக்கரத்தில் உள்ள மான், பொன் போன்ற அழகிய திருச்சடையின்மீது உள்ள அறுகம்புல்லினிடத்தும், கங்கையாகிய நீரிடத்தும் தனது மனம் மகிழும்படியாகத்தாவும்.
நடராஜப் பெருமானின் திருக்கரத்தில் பொருந்திய மான்கன்றானது அப்பெருமான் முகத்துக்கு நேராகத்தன் முகத்தையும், முன்னங்கால்களையும் உயரத் தூக்கியிருப்பது ஏன் என்று வினவியதில்லை மூவாயிரவர்க்க்குக் காளமேகப் புலவர் கூறிய விடையாக இப்பாடல் கருதப்படுகிறது.
7. தில்லைக் கோவிந்தர் கால்மாட்டில் நடராஜர் நடனஞ்செய்வது குறித்துப் பாடியது.
ஆட்டுக் கிசைந்தவ ரம்பல வாண ரவர்க்கெதிரே
நீட்டிற்று மால்வட பாலினிற் காலென நீநினையேல்
சூட்டுற்ற முப்புரஞ் செற்றவர் தம்மைச் சுமந்தலுத்த
மாட்டுக்கென் னோவிடங் கால்நீட்டல் சொல்ல வழக்கில்லையே.
தில்லைச் சபாநாதராகிய சிவபெருமான் திருக்கூத்திலே விருப்பங்கொண்டவர். அவர் எதிரே திருமால் வடதிசையில் தமது பாதத்தை நீட்டினார் என்பதைக் குற்றமாக நீ நினையாதே. ஏனெனில் திருபுரங்கள் எரியுற்ற அழியச் செய்தவராகிய சிவபெருமானைக் காளையாகிச் சுமந்து அலுத்தவர் அன்றோ திருமால்? எனவே இவ்வலுப்பினால் கால் நீட்டுதற்கு இடம் யாதென்று அவருக்குத் தெரியுமா? (அச்செயலைக் குற்றமாகக் கொள்ளுதல் பொருத்தமன்று என்பதாம்).
தில்லைக் கோவிந்தராஜர் கால் மாட்டிலிருந்து நடராஜர் நடனஞ் செய்கிறார் என்று வைணவர்கள் கூறியபோது அதற்கு விளக்கமாகப் புலவர் இப்பாடலைப் பாடினார் என்று கூறப்படுகிறது. காளைமாடு யஜமானனைச் சுமந்ததனால் ஏற்பட்ட உடல் வருத்தங்காரணமாகக் கால் நீட்டும் திசை அறியாது நீட்டிற்று என்பதாம்.
8. இதுவும் தில்லை நடராஜர் மேற்பாடிய நிந்தாஸ்துதி.
வில்லாலடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன்
கல்லா லெறியப் பிரம்பாலடிக்கவிக் காசினியில்
அல்லர் பொழில்தில்லை அம்பலவாணற்கொ ரன்னைபிதா
இல்லாத தாழ்வல்ல வோவிங்ஙனே யெளிதானதுவே.
இந்த உலகில் ஒருவன் வில்லால் அடிக்கவும், ஒருவன் செருப்பாலுதைக்கவும், கோபித்து ஒருவன் பிரம்பாலடிக்கவும், ஒருவன் கல்லால் எறியவும் இவர் இங்ஙனம் யாவர்க்கும் எளியரானது இவருக்குத் தாய்தந்தையர் இல்லாத குறையினாலன்றோ? என்பது இப்பாடலின் பொருள். முன் 4ம் பாடல் விளக்கத்தில் கூறியபடி இவை யாவும் இறைவர்க்குதிந்தையாகாது புகழ்களேயாகும் எனக் கொள்க.
9. திருமாலே பரம் எனக் கூறிய வைணவர்க்குப் பதில் கூறியது.
சத்தாதி யைந்தையும் தாங்காததெய்வந் தனிமறையும்
கர்த்தா வெனும்தெய்வ மம்பலத்தேகண்டு கண்களிரு
பத்தான வன்மைந்தன் பொய்த்தேவியைக் கொல்லப்
பித்தா னவன்றனையோ தெய்வமாகப் பிதற்றுவதே.
சத்தம், பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் ஐந்து தன் மாத்திரையாயாகிய உடலைத் தாங்காத (அதாவது பிறப்பற்ற) கடவுளாகியவனும், ஒப்பற்ற வேதங்களும் உலகத்துக்குக் கர்த்தா எனத்துதிக்கும் பெருமானுமான சிவபெருமானை சிற்சபையிலே தரிசித்தபிறகு, இராவணன் மைந்தனான இந்திரசித்து என்பான் மாயாசீதையைக் கொல்வதைப் பார்த்து அது உண்மைச் சீதையே என்று அழுதமயல் கொன்டவனையோ கடவுள் என்று பிதற்றுவது (இந்திரசித்து மாயா சீதையைக் கொன்றது, இராமன் அதைப்பார்த்தழுதது இவை இராமயணத்தில் கூறப்பட்ட செய்திகளேயாம்).
10. தில்லை நடராஜர் உடைமைகள் இன்னின்னவை என்று பாடியது.
ஏறுகட்டிய கொட்டிலரங்கமே
ஈரிரண்டுமுகன் வாயி லாயமே
மாறுகண்ணப்பன் வாய்மடைப்பள்ளியே
வாய்த்தவோடை திருமால் வதனமே
வீறுசேர்சிறுத் தொண்டனில்லாளுந்தி
வேட்டநற்கறி சாய்க்கின்ற தோட்டமே
நாறுபூம்பொழில் சூழ்தில்லையம்பல
நாரிபாகற்கு நாடக சாலையே.
(இதன் பொருள்) உமாதேவியாரை ஒரு பாகத்தே வைத்த சிவபெருமானுக்கு அவரது வாகனமான காளை மாட்டினைக் கட்டிய தொழுவம் ஶ்ரீரங்கமாகும். அவரது குதிரைகளைக் காட்டும் இலாயம் நான்முகனது வாயாகும். அன்புருவமான கண்ணப்பனது வாயே அவர்க்குரிய நிவேதனம் சமைக்கப்படும் மடைப்பள்ளி யாகும். அவரது பூசைக்குரிய தாமரைப் பூ மலரும் ஓடை திருமாலின் முகமேயாகும். சிறுத்தொண்டநாயனாரது மனைவியின் வயிறு பெருமான் விரும்பிய நல்ல காய்கறிகள் விளையும் தோட்டமாகும். அழகிய சோலைகள் சூழ்ந்த தில்லையம்பதியே அவரது நடனசாலையாகும்.
முப்புரங்களையும் அழிக்கச் சென்ற போது இறைவனாச் ஏறிச்சென்ற தேரின் அச்சு முறிந்தபோது திருமால் காளை வடிவெடுத்துத் தாங்கினாராகலின் அந்த ஏறு (காளை மாடு) கட்டிய கொட்டகை ஶ்ரீரங்கம் (திருமால் கோயில்) என்றும், அந்தத் தேரின் குதிரைகளாய் அமைந்த நான்கு வேதங்களையும் பிரமதேவன் எப்போதும் ஓதும் இயல்புடையவனாகலின் அவனது வாயை இறைவரது குதிரைகள் காட்டும் இலாயம் என்றும், கண்ணப்ப நாயனார் இறைவருக்கு ஊன் உணவு ஊட்டுமுன்பு தமது வாயில் அதனைச் சுவைத்துப் பார்த்து சுவையானவற்றை இறைவர்க்கு அளித்தமையால் அவரது திருவாயை மடைப்பள்ளி யென்றும், திருமால் சிவபெருமானை ஆயிரம் தாமரைமலர் கொண்டு அருச்சித்தபோது ஒரு மலர் குறையத் தமது ஒரு கண்ணையே எடுத்து மலராகத் திருவடியிற் சாத்தியமையால் அவரது முகமே தாமரைமலர் பூக்கும் நீரோடை எனவும், சிறுத்தொண்டர் பிள்ளைகறி சமைத்து இறைவருக்கு விருந்திட்டாராகலின் அப்பிள்ளையைப் பெற்ற சிறுத்தொண்டரின் மனைவியாரது வயிறே இறைவருக்குரிய காய்கறிகள் பயிரிடப்படும் தோட்டம் என்றும் இவ்வாறு நயம்படக் கூறிய அருமை படித்துப் படித்துச் சுவைத்தற்குரியது.
11. நடுவெழுத்தலங்காரம்.
திருமால்வா கனநாவா யிராசி யொன்று
சினைதெவிட்டார் மாதுலன்கோ கிலமினவ் வேழின்
உருவாமே ழெழுத்தினடு வெனக்குச் செய்தான்
உகந்துபதி னான்கிளையும் தானே கொண்டான்
ஒருபாகத் திருத்தினான் கையி லேற்றான்
ஒருமதலை தனக்களித்தா னுண்டான் பூண்டான்
பரிவாயொண் கரத்தவைத்தா னுகந்தா னிந்தப்
பைம்பொழிற்றில் லையுளாடும் பரமன் தானே.
ஒரு சில சொற்களின் நடுவெழுத்துக்களை ஒன்று சேர்த்துப் படித்தால் வேறு ஒரு சொல் வரும்படிப் பாடுவது நடுவெழுத்தலங்காரம் எனப்படும். இம்முறையில் பாடப்பட்ட இந்தப் பாடலின் பொருளைக் காண்போம்.
திருமால் வாகனம் கருடன். இவனுக்கு மற்றொரு பெயர் நாகாரி என்பது; நாவாய் என்பது படகு என்ற பொருளைத் தரும் கலம் என்ற சொல்; இராசி ஒன்று என்பது இங்கு கன்னியைக் குறித்தது; சினை என்பது கிளையென்ற பொருள்தரும் கவடு என்ற சொல்; தெவிட்டார் என்பது ஒரு பொருளை நுகர்வதில் ஆசைகுறையாதவர் என்று பொருள்படும் ஆரார் என்ற சொல்; மாதுலன் என்பது மாமன்; கோகிலம் இங்குப் பல்லி என்ற பொருளில் வந்து. இவ்வேழு சொற்களும் முறையே (1) நாகாரி (2) கலம் (3) கன்னி (4) கவடு (5) ஆரார் (6) மாமன் (7) பல்லி என்பனவாம். இச்சொற்களின் நடுவெழுத்துக்களை எனக்குச் செய்தான் என்று புலவர் கூறுவது யாதெனில் நடுவெழுத்துக்களை ஒன்று சேர்த்துப் படித்தால் “காலன் வராமல்” என்று வரும். எனவே காலன் வராமல் எனக்குச் செய்தான் என்றார்.
அடுத்தபடி உகந்து பதினான்கினையும் தானே கொண்டான் என்பதைப் பார்ப்போம். மும்மூன்று எழுத்துக்களாலான இவ்வேழு சொற்களிலும் நடுவெழுத்து போக பதினான்கு எழுத்துக்கள் எஞ்சியுள்ளன. இவை ஏழு சொற்களைத்தரும். அவையாவன (1) நாசி (2) கம் (3) கனி (4) கடு (5) ஆர் (6) மான் (7) பலி என்பனவாம். இவற்றை முறையே ஒரு பாகத்திருத்தினான், கையிலேற்றான், ஒரு மதலை தனக்களித்தான், உண்டான், பூண்டான், பரிவாயொண்கரத்து அமைத்தான், உகந்தான் இந்தப் பைம்பொழில் தில்லையுள் ஆடும் பரமன் தானே எனப்பாடல் முடிகிறது.
இதை இன்னம் சற்று விளக்கமாகக் கூறினால்
(1) நாரியைப் பாகத்திருத்தினான் (நாரி – உமாதேவி)
(2) கம் என்ற பிரம கபாலத்தைக் கையில் ஏற்றான்.
(3) கனி அதாவது மாங்கனியை ஒரு குமாரனாகிய கணபதிக்கு அளித்தான்.
(4) கடு அதாவது விஷத்தை உண்டான்.
(5) ஆர் என்ற ஆத்தியின் பூவைத் தலையிற் பூண்டான்.
(6) மான் இதனைப் பரிவாய் ஒண் கரத்து அமைத்தான்.
(7) பலி அதாவது பிச்சையை உகந்தான் (விரும்பினான்)
எனவரும், எஞ்சிய பதினான்கினையும் தானே கொண்டான் என்பதை இவ்வாறு விளக்கமாக அறிக.
காளமேகப்புலவர் சிவதீக்ஷைபெற்ற பெரும் புலவர். திருத்தலங்கள் சிலவற்றைத் தரிசித்து இவர் பாடிய மற்றைப் பாடல்களையும் ஏனைய சில புலவர்கள் அவ்வப்போது பெருமான் மீது பாடிய தனிப்பாடல்களையும் வரும் ஆண்டு மலர்களில் தொடர்ந்து பிரசுரிக்க அவனருளை வேண்டுகின்றோம்.
சிவம்.
No comments:
Post a Comment