உ
சிவமய்ம்
ஸெளரபுராணத்தில் சிவமஹிமை
டாக்டர் ந. கங்காதரன், M. A., M. Litt., Ph. D.
ஸம்ஸ்க்ருதத்துறை, சென்னைப் பல்கலைக்கழகம்
சிவஞான பூஜா மலர் – அக்ஷய, பிரபவ - விபவ ஆண்டு - (1986, 1987- 1988)
பிரசுரம்: ஆங்கீரஸ S. வேங்கடேச சர்மா, மேலமாம்பலம், சென்னை – 600 033]
மஹாபுராணங்கள் பதினெட்டு என்று வழக்கில் உள்ளது போல் உபபுராணங்களும் பதினெட்டு என்று புராணங்களும் உபபுராணங்களும் கூறுகின்றன. உபபுராணங்களின் பட்டியலில் ஸெளரபுராணமும் ஒன்றாக இடம் பெறுகின்றது. பூனா நகரிலுள்ள ஆனந்தாச்ரமம் என்னும் நிறுவனத்தாரால் தேவநாகரி எழுத்தில் ஸெளரபுராணம் அச்சிடப்பட்டுள்ளது. அந்த பதிப்பின் படி இப்புராணத்தில் 69 அத்தியாயங்கள் உள்ளன. மொத்தம் 3899 செய்யுட்களில் இப்புராணம் மிகச்சிறந்த கருத்துக்களை வாரி வழங்குகின்றது. ஸெளரம் என்பதற்கு ஸூரியனுடன் தொடர்புடையது என்பது பொருளாகும். ஸூர்யனால் மனுவிற்கு எடுத்துக் கூறப்பட்டதால் இப்புராணத்திற்கு இப்பெயர் ஏற்பட்டது. இதில் காணப்படும் பெரும்பான்மையான கருத்துக்கள் சிவபெருமானின் மேன்மையை விளக்கும் கதைகளாகவோ, புகழ்ந்துபாடும் பாக்களாகவோ அமைந்துள்ளன.
இப்புராணத்தின் முதல் அத்தியாயத்தில் செய்யுட்கள் 14-15ல் இது வலியுறுத்தப்படுகிறது.
புராணம் ஸம்ப்ரவக்ஷ்யாமி ஸெளரம் சிவகதாச்ரயம்
யச்ச்ருத்வா மநுஜ: சீக்ரம் பாபாகஞ்சு கமுத்ஸ்ருஜேத்
ச்லோகத்வயம் படேத்யஸ்து ச்லோகமேகமதாபி வா
ச்ரத்தாவான் பாபகர்மாணி ஸ கச்சேந் ஸவிது: பதம்
சிவனாரின் (மேன்மையை விளக்கும்) கதைகள் கொண்ட ஸெளர புராணத்தை நான் இப்பொழுது கூறுகின்றேன். இதைக்கேட்ட மானிடர்கள் (மனுவின் வழி வந்தவர்கள்) தங்கள் பாவ உடைகளை விரைவிலேயே களைவார்கள். மேலும் இப்புராணத்திலிருந்து இரண்ரொடு செய்யுட்களை சிரத்தையுடன் படிப்பவர்கள் ஸூர்யனின் ஸ்தானத்தை அடைவார்கள். சிவனாரின் ‘அஷ்டமூர்த்தி’ (எட்டு வடிவு) வடிவில் ஒன்றாக ஸூர்யனைக் குறிப்பது இங்கு நினைவில் கொள்ள வேண்டும். மேலும்,
வக்தா யத்ர ரவி: ஸாக்ஷாச்ச்ரோதா தஸ்ய ஸுதோ மனு:
மாஹாத்ம்யம் கத்யதே சம்போர் நாஸ்த்யஸ்மாததிகம் த்விஜா:
என்று செய்யுள் 17-ல் இப்புராணத்தின் மேன்மை கூறப்பட்டுள்ளது. இப்புராணத்தை எடுத்துக் கூறுவது ஸூரியனும், அதைக்கேட்பது மனுவும், எடுத்துரைக்கப்படும் பொருள் சிவனாரின் மேன்மை என்பதும் ஆனதினால் இந்நூலைவிட உயர்ந்தது மற்றொன்று கிடையாது என்று இச்செய்யுளின் பொருளாகும்.
தக்கன் வேள்வியை சிவனார் அழித்த வரலாறு, முப்புரம் எரித்த வரலாறு, அந்தகனை அழித்த வரலாறு, ஜலந்தரனைக் கொன்ற வரலாறு, சிவனாரின் மேன்மையை விளக்கும் பல செய்யுட்கள், சிவனாரைப் போற்றி திருமால் பாடிய ஆயிரம் பெயர்கள், மேலும் பல்வேறு துதிகள், சிவனாரைக் குறித்து தோற்கப்படும் பலவித நோன்புகள் முதலியனவும் இப்புராணத்தில் காணப்படுகின்றன. இப்புராணத்திலடங்கிய கருத்துகள் அனைத்தையும் இச்சிறிய கட்டுரையின் மூலம் முழுமையாகக் கூற இயலாத காரணத்தினால் ஒரு சில கருத்துகளை மட்டும் கூற முற்படுகின்றேன்.
முதன் முதலில் அத்தியாயம் 2-ல் சிவனாரின் மேன்மையை விளக்கி மறைகள் பாடிய துதி இடம்பெறுகின்றது (செய்யுள் 31-51) அதன்படி “அறிஞர்களான யோகிகள் புலனடக்கத்துடனும், விருப்புகளை அடக்கியும் எந்த ஒருவரைக் காண்கின்றனரோ அவரே ஆத்தும வடிவமான மஹேச்வரன் ஆவார். நான்முகன், திருமால், இந்திரன், சந்திரன் முதலானவர் எந்த ஒரு தேவனுக்குத் தொண்டு செய்து அவர் அருளால் வாழ்கின்றனரோ அந்த தேவன் பார்வதியின் மணாளராகும். நான்முகன் முதலான தேவர்களும் எந்த ஒருவரின் உயர்ந்த நிலையை அறியமாட்டார்களோ, எந்த ஒருவரின் நிலையை நாம் இன்றும் அறியமாட்டோமோ அந்தத் தேவரே முப்புரம் எரித்த தேவராகும். அனைத்து தேவதைகளும் எமது கூற்றைக் கேட்கட்டும். ருத்திர மகாதேவரைக் காட்டிலும் உயர்ந்த மற்ற ஒரு கடவுள் கிடையாது. எப்படி ஆமையின் தோலின் மீது ரோமம் இல்லையோ, முயலின் தலைமீது கொம்பில்லையோ, வானில் மலரில்லையோ அவ்வண்ணமே சிவனாரை விட உயர்ந்த ஒருவரிலர். சிவ வழிபாடின்றி எவனொருவன் இன்பத்தைப் பெற விரும்புகின்றானோ அவன் ஆட்டின் கழுத்தில் தொங்கும் சதையினின்று பாலைப்படுக விரும்புவது போலாகும். முக்தியைப்பெற அவரைத்தவிர அறியவேண்டியதொரு பொருளில்லை. பிராஹ்மீ, நாராயணீ, ரெளத்ரீ, மஹேச்வரீ முதலானவரை வழிபட்டு சிறந்த யோகிகள் எதை காண்கின்றனரோ அதுவே சிவனாரின் இடம் என்றறிய வேண்டும். தேவ மார்க்கத்தைக் கடந்து, அதையும் தாண்டி பித்ரு மார்க்கத்தையும் தாண்டி வானிலிருந்து எந்த ஒரு நுண்ணிய ஒலி எழும்புகின்றதோ அதுவே சிவனாரைக் குறிப்பதாகும். அனைத்துயிரையும் தோற்றுவிப்பவர் அவரேயாகும்.
இதயத்தாமரையில் விளங்கும் உமையாள் மணானான மஹாதேவனை நித்தமும் காணும் அறிஞர்கள் நிலையான அமைதியைப் பெறுவார்கள், அந்தப்பரமன் நிலம், நீர், நெருப்பு, காற்று, வானம், சூரியன் சந்திரன் யஜமானன்முதலானவற்றில் நிலை கொண்டுள்ளார். ஆனால் இவையனைத்தும் அவரை அறிவதில்லை. இவ்வனைத்தும் எவருடைய வடிவங்களோ அவருக்கு வணக்கங்கள், உம்மிடமிருந்தே நாங்கள் தோன்றினோம், உம்மிடமே நாங்கள் லயிக்கின்றோம் என்று மறைகள் போற்றின.
இவ்வண்ணம் மறைகளால் போற்றப்பட்டவரும் கோடிஸூர்யனின் ஒளியை உடையவரும், ஆயிரம் கண்களும், கால்களும், தலைகளும் கொண்டவரும், ஸூர்யன், சந்திரன் நெருப்பு இவைகளைக் கண்களாகக் கொண்டவருமான உமையாளின் மணாளன் அவற்றின் முன் தோன்றினார். தூலமான பொருளைவிட தூலமானவரும், நுண்ணியதைவிட நுண்ணியவருமான அந்த மஹாதேவன் மறைகளுக்கு அருள்பாலித்தார்.
இப்புராணம் நான்காம் அத்தியாத்தில் வாராணஸீ திலத்தின் மேன்மையை விளக்குகிறது. அனைத்து புண்ணிய தலங்களிலும் மேன்மையான வாராணாஸியில் அனைத்துயிர்களுக்கும் தேவனான விசுவேச்வரர் பிறப்பினின்றும் விடுதலை பெற வழிவகுக்கும் அறிவை வழங்கும் வள்ளலாக அருள் பாலிக்கின்றார். இங்கு புனிதமான கங்கை ‘உத்தரவாஹினீ’ என்று போற்றப்படும் சிறப்புடன் வடக்கு நோக்கி பாய்கிறது. இந்த நதியைப் பார்த்தாலும், தொட்டாலும், வணங்கி வழி பட்டாலும் இது பாவங்களனைத்தையும் களைகிறது. தீர்த்தங்களில் புனிதமானது கங்கை அதிலும் புனிதமானது வாராணஸியில் ஓடும் கங்கை. அதிலும் சிறந்தது மணிகர்ணிகை என்னும் தீர்த்தகட்டம். எவனொருவன் அவ்விடத்தில் நீராடி விசுவேச்வரரை தரிசனம் செய்கின்றானோ அவன் முக்தியைப் பெறுகின்றான். இதன் மேன்மையை சற்றே விரிவாக இப்பொழுது பார்ப்போம்.
ஸனத்குமாரரின் வாயிலாக வாரணாஸியின் மேன்மையை கேட்டறிந்த கிருஷ்ணத்வைபாயனர் என்னும் வியாஸர் வாரணாஸிஅயி அடைந்து விசுவேச்வரரை வழிபட்டார் (செய்யுள் 18-21)
“உலகுக்கு நாதனானவர்க்கும், சூலத்தை உடையவர்க்கும், பினாகம் என்னும் வில்லை ஏந்தியவர்க்கும், உலகிற்குக் காரணமாவனர்க்கும், ‘விச்வம்’ என்னும் மாயையை தோற்றுவிப்பவர்க்கும், அறிய முடியாதவர்க்கும், பரமானந்த வடிவானவர்க்கும், பக்தியை விரும்புபவர்க்கும், நுண்ணியவருமான பார்வதியின் மணாளாருக்கு வணக்கங்கள். மும்மறைகளின் வடிவானவருக்கும் வணக்கங்கள்.”
மேலும் 6-ம் அத்தியாயத்தில் அவிமுக்த மென்னும் வாராணஸீ க்ஷேத்திரத்தின் மேன்மை விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விடத்தில் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ‘வாபீ’ மிகவும் புகழ்பெற்றது. ‘வாபீ’ என்னும் சொல்லுக்கு ‘கிணறு’ என்று பொருள். இங்கு ஶ்ரீ விசுவேச்வரர் எப்பொழுதும் நிலை கொண்டிருக்கிறார். இவ்விடம் நீராடுவது மிகவும் பயனுடைத்ததாகும். தற்சமயம் ‘ஞானவாபீ’ என்றழைக்கப்படும் இடத்திற்கு அருகாமையிலேயே முன்னர் விசுவநாதர் ஆலயம் அமைந்திருந்ததாகக் கூறப்படுகிறது. தற்சமயம் ‘வாபூ’க்கும் ‘விச்வேச்வரர் ஆலய’ த்திற்கும் இடையே இடைவெளி இருக்கிறது. இடைக்காலத்தில் ஏற்பட்ட பல்வேறு சமுக பாதிப்புகளினால் இதன் இடமாற்றம் ஏற்பட்டது. இப்பொழுது ‘ஞானவாபீ’ இரும்பு வலைக் கம்பிகளால் முடிவைக்கப்பட்ட ஒரு பாதுகாப்பான இடம். இந்தப் புனித நீரின் மேன்மையை இப்புராணம் மேலும் சில செய்யுட்களில் விவரித்துக் கூறுகிறது.
இந்த ‘வாபீ’க்கு அருகே சுக்ரேச்வரம், பிரம்மேச்வரம், ஓங்காரேச்வரம், க்ருத்திவாஸேச்வரம், ரத்னேச்வரம், விருத்தகாலேச்வரம், மத்யமேச்வரம் முதலிய புனிதத் தலங்கள் உள்ளன. கண்டாகர்ணம் என்னும் நீர்ச்தேக்கத்தின் அருகில் உள்ள வ்யாஸேச்வரம், மற்றும் கபர்தீச்வரம் முதலியவை குறிப்பிடத் தக்கவை.
சிவபுராணங்களில் மிகவும் விரிவாகக் கூறப்பட்டுள்ள தக்கனின் வேள்வியை சிவனார் அழித்த வரலாறு இப்புராணம் சுருக்கமாகக் கூறுகிறது. (அத்தியாயம் 7, செய்யுள் 8-56) ததீசி முனிவரின் அறிவுரையின்படி தக்கன் வாரானஸியை அடைந்து லிங்கத்தை அமைத்து வழிபட்டு தன் பாவம் நீங்கியதாக இப்புராணம் மேலும் கூறுகிறது. இன்னமும் சில செய்யுட்களில் இத்தலத்தை வருணித்துள்ளது. பின்னர் ஶ்ரீவியாஸ முனிவர் அன்னை விசாலாக்ஷியை போற்றிப்பாடிய செய்யுட்களை இங்கே பார்ப்போம்.
“பரபிரம்மத்தின் வடிவான நன்மை பயக்கும் விசாலாக்ஷிக்கு வணக்கம் (‘விசாலாக்ஷி’ என்ற சொல்லுக்கு அகன்று விரித்த கண்களை உடையவள் என்று பொருளாகும்) பிரம்மன் முதலான தேவர்களனைவருக்கும் நீயே அன்னையாகும். நீயே இச்சை, க்ரியை, ஞானம் என்னும் சக்திகளாவாய் நீயே (ஒளிவு மறைவற்று) நேர்மையானவன் (அதாவது கள்ளம் கபடமில்லாத எண்ணம் கொண்டவன்). குண்டலினி சக்தியானவள். (அல்லது குண்டலமணிந்தவள்) நுண்ணியமானவள். யோகசித்தியை அளிப்பவள். நீயே ஸ்வாஹா, ஸ்வதா ஆவாய், மேலும் மஹாவித்யை, மேதஸ், லக்ஷ்மி, ஸரஸ்வதி, ஸதி, தாக்ஷாயணி, வித்யை, சிவா, அபர்ணை, ஏகபர்ணை, ஏகபாடலை, உமை, ஹைமவதீ, கல்யாணி முதலான பெயர்களனைத்தும் உன்னையே குறிக்கும். கணங்களுக்கு அன்னையானவள் மஹாதேவி, நந்தினி, ஜாதவேதஸி, ஸாவித்ரி, வரதா, புண்யா, பாவனி, ரெளத்ரி, துர்க்கா, பத்ரா, பிரமாதினி, காலராத்ரி, மஹாமாயா, ரேவதி, கெளதமி, கெளசிகி, ஆர்யா, மஹாமாயா, சண்டீ, காத்யாயனி, ஸதி, விருஷத்வஜா, சூலதரா, பரமா, பிரம்மசாரிணீ, மஹேந்திரன் உபேந்திரன் இவர்களின் அன்னை, பார்வதி, ஸிம்ஹவாஹனா என்ற பெயர்களும் உன்னைக்குறிக்கும் (அத்தியாயம் 8, செய்யுள் 15-26).
வாராணஸியில் அன்னை விசாலாக்ஷியும், கங்கையும், விசுவேச்வரரும், சிவனாரிடம் பக்தியும் இந்நான்கும் மிக அரிதில் கிடைக்கப் பெறுவன (8-24). இவ்விதமாக சிவனாரின் மேன்மையை விளக்கும் இப்புராணத்தில் மற்றும் உள்ள சிறந்த அம்டங்களை மீண்டும் பின்னர் காண்போம்.
சிவம்.
No comments:
Post a Comment